நிலம் மீது படகுகள் -ஜெனிஸ் பரியத்

janes

2017 விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வருகைதரும் மேகாலய எழுத்தாளர் ஜெனிஸ் பரியத் எழுதிய கதை இது. நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் நிலம்மீது படகுகள் என்னும் தொகுதியில் இருந்து. விஷ்ணுபுரம் நண்பர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது இத்தொகுதி

ஜெ

ஜெனிஸ் பரியத் விக்கிப்பக்கம்
எதிரொலித்த சொற்கள் ஜெனிஸ் பரியத்
 நிலம் மீது படகுகள்

நாம் எத்தனை முறை அந்த நதிக்கு சென்றோமோ அந்த எண்ணிக்கையை வைத்து நாம் இணைந்திருந்த நாட்களின் எண்ணிக்கையை என்னால் அளந்துவிட முடியும். பதினான்கு நாட்களில் பத்து முறை. பொது கணக்குகளின்படி, அது அதிகக் காலம் இல்லை. ஆனால் ஒரு தும்பி இருபத்தி நான்கு மணி நேரங்களுக்கு மட்டுமே உயிர் வாழக்கூடும் என நீ என்னிடம் கூறினாய். நாமும் அப்படி தும்பிகளாக இருந்திருக்கும்பட்சத்தில் பத்து ஆயுட்காலங்கள் இணைந்து வாழ்ந்திருப்போம்.

மழைப் பருவத்தில் தண்ணீர் அகன்று பரவ கடல் போல் அற்புதமாக காட்சி அளிக்கும் நதி, இப்போது அந்த அகலத்தில் பாதி கூட இல்லை என அக்குளிர்காலம் நாம் நதிக்கு சென்றபோது நீ சொன்னாய். அதற்குப் பதிலாக, நம் பாதச்சுவடுகளை எழுதித் தீர்க்கவும், எதிர்புறம் ஒளி சாய இருளில் மூழ்கும் காசிரங்கா வனத்தை அமர்ந்து பார்க்கவும் மைல்கணக்காக நீளும் மணல் படுகை நமக்கு கிடைத்தது. முடிவற்றதாகவும் நமக்கு அந்தரங்கமானதாகவும் இரவுகள் தோற்றம் பெறுகிற வரையில் அந்தியின் நிழல்கள் பரவி நீட்டிக்கிற, சூரியன் தாழ்ந்த, பனிமூட்டமான நாட்கள் அவை. நீ ரகசியமாக சிகரெட்டுகள் புகைத்தாய். நீ சுருட்டி உருவாக்கிய சிகரெட்டுகள் மிகச் சிறிய தீப்பந்தம் போல் இருண்ட அடையாளமற்ற பிரபஞ்சத்தில் மின்னும் ஒளிப்பொட்டுகள் போல் எரிந்தன. ஒரு மந்திரவாதி என நீ அவற்றை வேகமாக உருவாக்கினாய்.

“வருடங்களின் பழக்கம்” என்றாய் நீ.

உனக்கு அப்போது பத்தொன்பது வயது; என்னைவிட மூன்று வயது அதிகம்.

பல மைல்களுக்கு அடர்த்தியான பச்சை விரிப்பென படர்ந்த, துல்லியமாக கத்திரிக்கப்பட்ட செடிகள் மண்டிய அசாமின் பல பரந்த தோட்டங்களில் ஒரு தேயிலைத் தோட்டமான சந்த்பாரிக்கு நானும் என் பெற்றோரும் விடுமுறைக்கு வந்ததாலேயே நாம் சந்திக்க நேர்ந்தது. முன்பு பொடசாலிக்கும் நாமேரிக்கும் குடும்பப் பயணங்களாக சென்ற சமயங்களில் அவற்றை கடந்தே சென்றிருக்கிறேன். அப்போது அவை ஊர்ப்புறத்தின் செழித்த பசுமைக்கு – ஆகாயத்தாமரை நிரம்பி மிதக்கும் குளங்கள், அசைந்தாடும் தடித்த மூங்கில் கூட்டங்கள் மற்றும் ஆரஞ்சும் மஞ்சளுமாக வெடித்துப் பூக்கும் குல்முஹர் மலர்கள்- அப்பால் தொலைவில் இருப்பதாகவே தோற்றம் அளித்தன. பூட்டிப் பாதுகாக்கப்படுகிற வாசல்களுக்கு பின்னால் அவை உள்ளே என்ன மாதிரி இருக்கும் என நான் எப்போதுமே யோசித்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். ஒரே பள்ளியில் இணைந்து பயின்ற, நண்பர்களான நம் அப்பாக்கள், பழைய நண்பர்கள் கூடுகையில் சந்தித்துக் கொண்டபோது உன் அப்பா ஜனவரி மாத விடுமுறைக்கு இங்கே வரச் சொல்லி எங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். எங்கள் வசிப்பிடம் ஷில்லாங்க் குளிரால் முடங்கி மந்தமும் சலிப்பும்கூடிய சாம்பல் நிறத்தில் மூடியிருக்க, எங்கள் பெற்றோருக்கு அவ்வழைப்பு ஈர்ப்புடையதாக இருந்தது.

“அவ்வளவு நாட்கள் அங்கே தங்குவது ஒன்றும் பிரச்சனை இல்லையா?” என் அம்மா சிறிது சந்தேகத்துடன் கேட்டார்.

என் அப்பா சிரித்தார். “அவர்கள் தங்கள் பங்களாவில் வேலையாட்களின் படையே வைத்திருக்கிறார்கள். நாம் ஒரு பிரச்சனையாக இருப்போம் என்று எனக்கு தோன்றவில்லை..”

என் பெற்றோர் விடுமுறையை எதிர்நோக்கியிருக்க, நானோ அங்கே செல்வதில் அதிகம் முனைப்பற்றிருந்தேன். என் பள்ளி தோழிகள் எல்லோரும் ஷில்லாங்கில் இருந்தார்கள். ஒருவர் வீட்டுக்கு ஒருவர் வருகை செய்வது, போலீஸ் பசாருக்கு சுற்றச் செல்வது, பெக்கிங்க் உணவுவிடுதியில் மோமோசும் ப்ளோரியில் க்ரீம் பன்களும் சாப்பிடுவது என குளிர்கால விடுமுறைக்காக எங்களிடம் திட்டங்கள் இருந்தன. உணவு, சந்தோஷங்களைவிடவும் பையன்களை சந்திப்பதற்கும், அவர்கள் எங்களை பார்ப்பதைப் பொருட்படுத்தாதது போல் அவர்களை கடந்து செல்வதற்கும், அவர்களால் நெருங்கப்பட்டு படகு சவாரிக்காக வார்ட் ஏரிக்கோ அல்லது காபி சாப்பிட உடுப்பி உணவகத்துக்கோ உடன்வர விருப்பமா என கேட்கப்படுவதற்கும் அது ஒரு வாய்ப்பாக இருந்தது. பெண்கள் கான்வெண்ட் பள்ளியின் மைதானங்களோடு மட்டும் நாங்கள் இப்போது அடைபடாததால், ஆராய்ந்து அறிவதற்காக ஒரு முழு உலகமும் காத்திருந்தது. குறிப்பாக ஒரு பையன், நான் விழித்திருக்கும் நேரங்களை எல்லாம் ஒளிரும் கனவுகளால் நிரப்பினான். அவனது பெயர் ஜேசன் என்பதை நான் சமீபத்தில்தான் கண்டுபிடித்தேன்; கண்கள் மேல் சரிகிற நீளமான பழுப்பு நிற முடியோடிருந்த அவன் மென்கம்பளியாலான கோடுபோட்ட கழுத்துக்குட்டையை துடிப்பாக அணிந்திருந்தான். ரகசிய புன்னகைகளாலும் பார்வைகளாலும் ஆன இந்த காதல் தொடர்பு, எப்படியென்றாலும், இனி காத்திருக்க வேண்டும்.

“உன் அண்ணன் இங்கிருந்திருந்தால், நீயும் கூட தங்கியிருக்கலாம், ஆனால் நாங்கள் உன்னை வீட்டில் தனியாக விடப்போவதில்லை” என்று என் அம்மா என்னிடம் கூறினார். எவ்வளவு பிணக்கமும் அவர் மனதை மாற்ற முடியாது. என் அண்ணன் பூனேவில் சட்டம் பயின்று கொண்டிருந்தான்; டெல்லி லேடி ஹார்டிங்கிலும் மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற எனக்கான திட்டங்களும் ஏற்கனவே சுலபமாகவும் தெளிவாகவும் வகுக்கப்பட்டுவிட்டன. எங்கள் தேர்வுகள் நோக்கி எங்கள் பெற்றோர் எங்களை மென்மையாக நகர்த்தினார்கள் : மதிப்பும், லாபமும்மிக்க தொழில்கள் அவை.

“உடன் உனக்கு அங்கே துணை இருக்கும்”. அம்மா சேர்த்துக் கொண்டார். “ஹசரிகாஸுக்கு ஒரு மகள் உண்டு உன் வயதில் … அல்லது சற்று கூடுதல் வயதில்”

எனவே நான் என் துணிகளை எல்லாம் அடுக்கிக் கட்டினேன். என் தோழிகளிடம் நான் திரும்பி வந்ததும் இங்கு நடந்த எல்லாவற்றையும் என்னிடம் சொல்ல வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டதோடு ஜேசனுக்கு காதலிக்க வேறு யாரும் கிடைத்துவிடக் கூடாது என ஒரு வலிமிக்க பிரார்த்தனையை மௌனமாக சொல்லிக் கொண்டேன்.

எட்டு மணி நேரத் தொலைவில் இருந்த சந்த்பாரிக்கு என் அப்பா எங்களது உறுதியான சாம்பல் நிற அம்பாசிடரை ஓட்டிச் சென்றார். பனை மரச் சரிவுகளையும் காற்றலையும் ஷெல்லாங் சாலைகளையும் நாங்கள் விரைந்து நீங்கியதும், ஜோராபாதின் பாதிவழியில் அந்த நெடுஞ்சாலை அகன்று தட்டையானது. அதன் இருபுறங்களிலும் நீண்டு பரவிய கோதுமை வயல்கள் கதிர்முற்றி சாய்ந்து வெயிலில் அறுவடையாகிக் கொண்டிருந்தன. “பங்களாதேச அகதிகளின் ஊர்கள்” என்று என் அப்பா குறிப்பிட்ட புழுதி படிந்த சிறுகிராமங்களையும் வெயிற்காலத்தில் மட்டுமே உயிர்ப்போடிருக்கிற நதிகளின் வெகு நீளமான மணல் பாதைகளையும் நாங்கள் கடந்து சென்றோம். நான் தூக்கத்தில் விழுவதும் எழுவதுமாயிருந்தேன், சிலபோது உரையாடலின் துண்டுகளை மட்டும் கேட்டபடி – நோய்ப்பட்டிருக்கும் தூரத்து உறவினர், பக்கத்து வீட்டினரின் பிறந்தக் குழந்தை , எதிர்வரவிருக்கும் என் அண்ணனின் பரீட்சைகள் பற்றி என்னவோ. கட்டிவந்த சான்ட்விட்ச்களை மதிய உணவாக சாப்பிட நாங்கள் பாதிவழியில் சாலையோரம் நின்றுக் கொண்டோம் . சமவெளிகள் இளவெப்பத்தோடிருக்க சூரியஒளி இதமாகவும் வரவேற்கும்படியும் இருந்தது. நாங்கள் மீண்டும் பயணத்தை தொடர்ந்தபோது என் அப்பா தனது நண்பன் ரஞ்சித் ஹசரிகா வசதிபடைத்த ஒரு பழமையான அசாமியக் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் ஷில்லாங்கில் அவருக்கு பல வெற்றிகரமான தொழில்கள் இருந்தன என்றும் அவை அனைத்தும் 80களில் சொந்த ஊர்க்காரர்கள் அந்நியர்களுக்கு எதிராகத் திரும்பிய பிரச்சனைகளின் போது முடங்கிவிட்டன என்றும் கூறினார். ஹசரிகாஸ் பிறகு பிஷ்வனாத் மாவட்டத்தில் தோட்டங்களை வாங்க, 90களின் தேயிலை வளர்ச்சியோடு அவை மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. ‘எனினும் அவர்களுடையது துன்பம் படிந்த குடும்பங்களில் ஒன்று’ அவர் குரலைத் தாழ்த்தி கூறினார். ‘முதலில் அவர்கள் சொந்த ஊரை விட்டு செல்ல வேண்டியிருந்தது. பின்னர் அவரது முதல் மனைவி மமுனி தற்கொலை செய்து கொண்டார்..’. எஞ்சினின் சத்தமான இழுவை உறுமல் அவரது மீதி வார்த்தைகளை மூழ்கடித்தது. அந்த வயதில் மரணம் குறித்த பயம், அது என்னுடையதோ அல்லது மற்றவருடையதோ, இன்னும் என்னை பற்றியிருக்கவில்லை. மாறாக நான் உன்னைப் பற்றி, நம் இருவருக்கும் ஒத்து வந்து நாம் நண்பர்கள் ஆவோமா என்பது பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை நாம் சகோதரிகள் போல் இருப்போம் என்று கூட நான் கனவு கண்டேன்.

நீண்ட நேரம் கழித்து சீருடையணிந்த ஒரு காவலாளி திறந்து பிடித்த கதவின் வழியே ஒரு சாலைப்பிரிவில் நாங்கள் திரும்பியபோதுதான் நான் கண் விழித்தேன்.வானில் ஆரஞ்சு பிளவுகளை மட்டும் மீந்தவிட்டபடி சூரியன் எங்கேயோ மறைந்துவிட்டிருந்த பின்மாலைப்பொழுது அது. அந்தியில் மென்சாம்பல் நிறமாக மினுங்கும் பட்டையுடைய உயர்ந்த பிர்ச் மரங்களின் சாலையில் நாங்கள் இருந்தோம். நீண்ட வண்டிப்பாதையின் முடிவில் இருந்தது பங்களா ; வெள்ளை நிறத்தில் காற்றோட்டம் மிக்கதாகவும் திறந்த வகையிலும் இருந்த அதன் வராந்தாவிற்குள்ளேயே ஷில்லாங்கில் உள்ள எங்கள் மொத்த வீடும் அடங்கக்கூடும்.

தள்ளுவண்டியில் கொண்டுவரப்பட்ட தேநீரை பருகியபடி உன் பெற்றோர் அங்கே இருந்தனர். விறைப்பான காக்கி நிற கால்சட்டையும் தூய வெள்ளை நிற சட்டையும் உடுத்தியிருந்த உன் அப்பா உயரமாகவும் வாட்டசாட்டமாகவும் இருந்தார். அவரது சருமம் முழுக்க செம்மை படிந்து தலைமுடியின் ஓரங்களில் வடிவாக நரையேறியிருந்தது. என் அப்பாவுடன் கை குலுக்கிய அவர் என் அம்மாவுக்கு மரியாதைமிக்க சிறு அணைப்பை அளித்தார். நவீனமாக தோள் அளவு கேசத்துடனும் குறையற்ற மேனியுடனும் இருந்த உன் அம்மா மிஷிங் பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்மணி. அவர் குர்தியும் அடர் பச்சை நிற பைஜாமாவும் அணிந்திருந்தார், கசங்கலான ஜெய்சைமுக்குப் பதிலாக என் அம்மா ஈர்ப்பூட்டும்படியாக வேறேதும் அணிந்திருக்கலாம் என நான் விரும்பினேன். எங்களது பயணச்சுமைகளை அமைதிமிக்க இரு சீருடை பணியாட்கள் கவனமாக எடுத்துக் கொண்டனர். குளித்து அசதி போக்க எங்கள் அறைகள் எங்களுக்கு காண்பிக்கப்பட்டன. பிரதான விருந்தினர் அறை என் பெற்றோருக்கு அளிக்கப்பட, பங்களாவுக்கு பின்னால் இந்திரபுஷ்பங்கள் தொங்கி அலங்கரிக்கும் திறந்த நடைபாதையின் முடிவில் இருந்த சிறு பகுதி எனக்கு கிடைத்தது. என் அறைக்காக உன் அம்மா வருத்தம் தெரிவித்தார் – “அது சின்னதாக இருக்கிறது. எனினும் நீ சௌகர்யமாக இருப்பாய் என நம்புகிறோம்” – ஆனால் நான் அதை விசாலமாகவும் அதன் மென்மையான சுவர்களையும் பெரிய மெத்து படுக்கையையும் அதிகம் குதூகலம் அளிப்பவையாகவுமே உணர்ந்தேன். பத்திரிக்கைகள் கிடத்தப்பட்ட ஒரு மேஜையும் நான் ஒளிந்து கொள்கிற அளவுக்கு பெரிதான ஒரு அலமாரியும் அங்கு இருந்தன. நான் என் காலணிகளை நழுவலாக கழற்றிவிட்டு என் பாதத்துக்கு கீழே தடிமனாகவும் பஞ்சுபொதியாகவும் கிடந்த தரைவிரிப்பில் நடந்துச் சென்றேன். நீ அங்கிருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. நீ விருந்தினர்களை வரவேற்க வராதது மிகவும் மரியாதையற்றது என நான் எண்ணினேன்.

மாறாக, நான் குளியலறையில் நுழைந்தபோது, நீ அங்கே இருந்தாய், முழுக்க ஆடையுடுத்தி சிகரெட் புகைத்தவாறு குளியல்தொட்டிக்குள். உன் தலைக்கு மேலிருந்த ஜன்னல் அகல திறந்திருந்தது.

‘ஓ’. நான் கூறினேன். ‘மன்னிக்கவும்’

நீ சிரித்தாய், ‘எதற்கு? நான் ஒன்றும் குளித்துக் கொண்டிருக்கவில்லையே’. அது உண்மை, குளியல்தொட்டி ஈரமற்றிருந்தது. நீ உன்னை எழுப்பி நிறுத்தி – ‘உடன்முறைப்படி இப்போதைக்கு இது உன் குளியலறை’- சிகரெட்டில் கடைசி இழுப்பு புகைத்து அதை ஜன்னல் வழியே தூர எறிந்தாய். உன் டீஷர்ட், ஜீன்ஸை முழுமையாகக்கூட எட்டவில்லை. நீ என்னைவிட உய்ரமாகவும் ஒல்லியாகவும் இருந்தாய். உனது ஆடைகள் கசங்கியும் தலைமுடி வாராமலும் இருந்தபோதும் நான் என்னையே அழகு குறைந்தவளாகவும் கலைந்திருப்பவளாகவும் உணர்ந்தேன். நான் அங்கேயே இல்லாததுப் போல் உனது நடை பொறுமையாகவும் அசிரத்தையாகவும் இருந்தது.

நீ கழுவற்கிண்ணத்தில் கைகளைக் கழுவி பின் வாய் கொப்பளித்தாய். “புகைபிடித்ததுப் பற்றி யாரிடம் சொல்லாதே. பாவம் ஷம்பு மலி மீண்டும் பிரச்சனையில் மாட்டிக் கொள்வான்”

”ஏன் அப்படி நடக்கும்?” என நான் கேட்டேன்.

“ஏனென்றால் அவன் எனக்கு உள்ளூர் சரக்கை கொண்டு வருகிறான்”. என் குழப்பத்தைக் கண்டு நீ கூடுதலாக சொன்னாய். “புகையிலை. சிகரெட்டுக்குள் இருக்கும் வஸ்து”

நீ அறையை விட்டு வெளியேறிய பிறகுதான் எனக்கு நினைப்பு வந்தது, குளியல் தொட்டியை பயன்படுத்தியதற்காக நீ என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை அல்லது என் பெயரைக் கூட நீ கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை அல்லது ஒரு ஹலோ கூட சொல்லவில்லை.

அடுத்த இரண்டு நாட்களுக்கு எங்கள் திசையிலிருந்து விலகியே இருந்த நீ சாப்பாட்டு நேரங்களின்போது மட்டும் உன் அறையிலிருந்து வெளியே வந்தாய். அப்போதும் கூட நீ தட்டு நிறைந்த உணவுகளில் இருந்து குறைவாக,தேர்ந்தெடுத்து மட்டும் சாப்பிட்டபடி அங்கே மௌனமாகவே அமர்ந்திருந்தாய் . இறுதியில் அடிக்கடி மணிக்கணக்காக காணாமல் போனாய். உன்னுடைய நடவடிக்கைகளால் உன் பெற்றோர் வெட்கித்தபோதும் உன்னை எப்படி கையாள்வது என்று அவர்களுக்கு தெரிந்தது போல் படவில்லை. காலைத் தேனீர் எங்களுக்கு தள்ளுவண்டிகளில் கொண்டு வரப்படுகிற, நாங்கள் காலை உணவில் இருக்கும்போது அரூபக் கரங்களால் படுக்கைகள் திருத்தப்பட்டு அறைகள் சுத்தம் செய்யப்படுகிற, தினமும் துவர்த்துகள் இருமுறை மாற்றப்படுகிற, அழுக்குத் துணிகள் சுத்தமாக மடிக்கப்பட்ட இஸ்திரிக் கட்டாக மாயமாக மாறித் திரும்புகிற, ஒற்றை மணியழுத்தத்தில் உணவுகளும் பழரசங்களும் உத்தரவிடப்படுகிற -நான் அதிகம் கேள்வியேபட்டிராத ஒரு வாழ்க்கை முறையோடு நான் சிரமப்பட்டு பொருந்துவதைக் காண நீ சுற்றிலும் இல்லாதது எனக்கு ஒரு விதத்தில் விடுதலையே அளித்தது.பகல் நேரத்தில் பங்களா அதன் ஆழம்கூடிய முடிவற்ற நடைபாதையோடும் எங்களுக்கு மேலே நீளமாக எழுகிற உயர்ந்த விதானத்தோடும் குகை போல் குளுமையாக இருக்கும். நான் வராந்தாவில் மாலைப்பொழுதுகளுக்காக காத்திருந்து, ஊர்புறத்து இருள் மரங்களின் மீது படர்ந்து மூடுவதை பார்த்தபடியும் சூரிய வெப்பமேறிய காற்று சில்லிட்டு உடையக்கூடியதாக மாறுவதை உணர்ந்தபடியும் இருந்தேன். பின்னர் நாங்கள் குளித்து உடை மாற்றி, எங்கள் அறைகளைவிட்டு வெளியேறி நெருப்பு மூட்டப்பட்ட வசிப்பறையில் கூடுவோம். அங்கு ஐஸ் பக்கெட் நிரப்பப்பட்டு, பக்க மேஜைகளில் வறுத்த முந்திரிகளின் கிண்ணங்கள் வைக்கப்பட்டிருக்கும். உன் அப்பா மதுக்கூடத்தைச் சுற்றி விஸ்கிகளை கலப்பதும், எனக்கும் சிறு கோப்பையளவு தரப்பட்ட வீட்டில் தயாரிக்கப்பட்ட வைன் போத்தல்களை திறப்பதுமாக பரபரப்பாக நடந்து கொண்டிருப்பார். நான் வழக்கமாக அடுக்கிலிருந்து புகைப்படத் தொகுப்புகளை எடுத்து பார்த்தவாறு மூலையில் தனியாக அமர்ந்திருந்தாலும், முற்றிலும் புதியதும் கவர்ச்சிமிக்கதுமான வாழ்க்கையாகவே அது இருந்தது.

உனது அப்பாவும் என் அப்பாவும் ஷில்லாங்க் பற்றி நிறைய உரையாடினார்கள் – அவர்கள் பள்ளியில் செய்த சாகசங்கள் மற்றும் வகுப்புத் தோழர்கள் பலருடைய இன்றைய நிலவரங்கள் . கெவின் சினிமாவின் நள்ளிரவு காட்சிகள் குறித்தும் தி பீட்டில்ஸ் மற்றும் தி மங்கீஸ்களுக்கு பார்ட்டிகளில் நடனமிட்டதுக் குறித்தும் அவர்கள் பேசினார்கள். பாதுகாப்பு மிக்கதாகவும், குறைந்த ஜனக்கூட்டத்துடனும், சாலைகள் காலியாகவும் சுத்தமாகவும் இருந்த 60கள் அல்லது அவர்கள் நினைவேக்கத்துடன் குறிப்பிட்ட “இனிமையான பழைய” நாட்களில் இருந்ததற்கு அந்த நகரம் முற்றிலும் அடையாளம் தெரியாதவிதமாக மாறிவிட்டது என இருவருமே ஒப்புக் கொண்டார்கள். கணிசமான சுற்றுகளில் விஸ்கிகள் உள்ளே போனதும் அந்த பிரச்சனை பற்றியும் மற்றும் அது எப்படி அவர்கள் அறிந்தும் பாதுகாத்தும் வந்த எல்லாவற்றையும் பறித்து மாற்றியது என்பது பற்றியும் பேசுவார்கள்.

“ஒரு மாலை” உன் அப்பா கூறினார். ‘மமுனி சந்தையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த காசி மனிதன் அவளை நடுச்சாலையில் நிறுத்தி அறைந்துவிட்டான்… அவள் வீட்டுக்கு வந்து என்னிடம் சொன்னது ஞாபகம் இருக்கிறது. நான் மிகவும் கோபமுற்றிருந்தேன், ஆனால் அவளோ தன்னை அவன் அன்னியை என்று அழைத்ததை எண்ணி ஆச்சர்யமுற்றவளாக மட்டும் தெரிந்தாள். அவள் சொல்லிக் கொண்டேயிருந்தாள். ‘நான் என் வாழ்நாள் முழுக்க இங்கேயே வசித்திருந்திருக்கிறேன்’. அவ்வளவுதான் அவள் சொன்னது… நான் என்னால் முயன்றமட்டும் அதை தள்ளி வைக்க முயற்சித்தபோதும் நாங்கள் வெளியேற வேண்டும் என்று எனக்கு தெரிந்தேயிருந்தது”

பின், விறகு நெரிபடும் ஒலியும் தொலைதூரத்தில் ஆந்தையின் ஊளையும் மட்டும் கலைக்கிற நீளமான மௌனம் தொடரும்.

சில நேரம் உனது அம்மாவும் என் அம்மாவும் அவர்களது உரையாடலில் கலந்துகொள்வார்கள் அல்லது தங்களது அந்தரங்கமான பேச்சையே தொடர்வார்கள். நீ கல்கத்தா லோரெட்டோ கல்லூரியில் உளவியல் படித்துக் கொண்டிருந்ததாகவும், பின் அங்கு ஏதோ ‘பிரச்சனை’ உருவாக, நீ சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் உன் அம்மா சொன்னது என் காதில் விழுந்தது.”அவளது வயதை ஒத்தவர்கள் யாராவது அருகே இருப்பது உதவலாம் என நாங்கள் எண்ணினோம்”. அவர் நான் கேட்டுக்கொண்டிருப்பதை அறியாமல் கூறினார். “ஆனால் அவள் தன் அப்பா மாதிரியே நடந்துக் கொள்ளக்கூடும்… கட்டுப்படாதவளாகவும் கடுமையானவளாகவும்”. மற்றபடி, அவர்கள் பெரும்பாலும் தோட்ட வேலை பற்றியும் சமையல் பற்றியுமே குறிப்புகள் பரிமாறிக் கொண்டிருப்பார்கள். அது செய்வதற்கு அதிகமில்லாத அல்லது சந்திப்பதற்கும் நிறைய மனிதர்களற்ற ஒரு அமைதியான வாழ்க்கை என்று கூறிய உன் அம்மா சில சமயங்களில் எவ்வளவு ஓவியம் வரைவதும் , சமைப்பதும், தையல் புரிவதும்கூட விடுவிக்கமுடியாத பதற்றத்தில் தான் விழுந்துவிடுவதாகவும் சொன்னார். அவர் தன் கிராமத்திற்கு அடிக்கடி சென்று வர முயற்சித்திருக்கிறார். ஆனால் நீ அருகில் இருக்கையில், அது சிரமமாக இருக்கிறது. என் அம்மா சொந்தமாக பேக்கரி நடத்துவது நல்லது என்றார் அவர்; அவரும் தானே சொந்தமாக ஏதாவது செய்யவேண்டும் என்றே விரும்புகிறார்.

உலவும் பேய் போல் உன் தடயங்கள் பங்களா முழுக்க இரைந்து கிடந்தன. நீ அருகில் எங்கேயும் இல்லாதபோதுக்கூட சிகரெட் புகையின் நீடித்த வாசனையை நான் எப்போதாவது உணர்வதுண்டு. ஒருமுறை வராந்தாவில் நாற்காலியின் அடியே ஒதுங்கிக் கிடந்த உன் செருப்புகளை நான் கண்டுபிடித்தேன். தவறுதலாக உனது டீ-ஷர்ட் சலவை செய்து இஸ்திரியிடப்பட்ட என் துணிகளின் கட்டோடு கலந்துவிட்டிருந்தது. சமயங்களில் நீ தூரத்திலிருந்து தீர்மானமில்லாமலும் அழுத்தத்துடனும் எங்களை நோக்கிக் கொண்டிருப்பதாக நான் ஒரு எண்ணம் கொள்வேன்.

ஒரு மதியம், எல்லோரும் ப்ளாண்டர்ஸ் கிளப்பிற்குச் சென்றோம். நீ கூடத்தான். ஆனால் காரில் நடுவில் அமர்ந்திருந்த என் அம்மாவுக்கு அடுத்து ஜன்னலோரம் உட்கார்ந்து, ஒரு வார்த்தை கூட பேசாமல் வெளியே வெறித்தபடி வந்தாய். நாம் அங்கு சென்றடைந்ததும் விளையாட்டு போட்டிகள் நடந்துக் கொண்டிருந்த டென்னிஸ் மைதானங்களுக்கு தலைப்பட்டோம். நீ அதன்பிறகு எங்களுடன் இல்லை என்பதை நான் கவனித்தேன். தன் சொந்த ஊரான ஷில்லாங்கில் இருந்து வருகை செய்திருக்கும் ‘பழைய நண்பர்கள்’ என்று உன் அப்பாவால் எனது பெற்றோர்கள் அனைவரிடமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். அம்மதிய வேளை அரட்டைக் குரலாலும், டென்னிஸ் பந்துகள் தொப்பென்று மோதும் ஒற்றையசை சப்தங்களாலும், ஊக்குவிப்பு இரைச்சல்களாலும் சிரிப்பாலும் நிரம்பியிருந்தது.

சற்று நேரத்தில், டென்னிஸ் மட்டையை பற்றியிருந்த அரைக்கால் சட்டையணிந்த சதைப்பிடிப்பான ஒரு பெண் எனக்கு அடுத்திருந்த பின்னல் நாற்காலியில் சரிந்து விழுந்தாள்.

“நான் ராதிகா” என்றாள் அவள். “நீ சந்த்பாரியில் தங்கியிருக்கிறாயா?”

நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆம் என்று சொன்னேன்,அங்குதான் தங்கியிருக்கிறேன்.

“அந்தத் துயர மங்கை எப்படி இருக்கிறாள்?”

அவள் குறிப்பிடுவது உன்னையா என நான் கேட்டேன்.

“வேறு யார்?” என்று அவள் சிரித்தாள். ‘டென்னிஸ்கூட விளையாட முடியாத அளவுக்கு அவள் ஆன்மா துயருற்றிருக்கிறது’

உனக்கு ஆதரவாக பேச வேண்டும் என எனக்கு தோன்றியது. ஆனால் எப்படி என்று தெரியவில்லை.

இருபத்திஐந்து போல் தோற்றமளித்த ராதிகாவிடம் என் பள்ளி சீனியர்களிடம் வீசுகிற அதிகார வாடை இருந்தது. குண்டு கன்னங்களுடைய அவளது உருண்டை முகத்தில் ஒட்டப்பட்டிருந்த கருப்பு கண்கள் கடந்த சில இரவுகளில் ஜன்னலுக்கு வெளியே நான் பார்த்த ஆந்தையை எனக்கு நினைவூட்டின.

“அவளிடம் ஜாக்கிரதையாக இரு” என்றாள் அவள்.

திரும்பவும் அவள் குறிப்பிடுவது உன்னையா என நான் கேட்டேன்.

அவள் தலையாட்டினான். “பலரும் சொல்கிறார்கள் அவள்…”

மைதானங்களிலிருந்து யாரோ அழைத்தார்கள்.”வருகிறேன்” என்று அவள் பதிலளித்தாள். “நான் உன்னை பின்னர் சந்திக்கிறேன்”

ஆனால் அது நடக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் நான் தனி நடை போக விலகிச் சென்றதால் அவளை மீண்டும் பார்க்க முடியவில்லை.

“நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள மாட்டேன்”. என் அம்மாவிடம் மெல்லக் கூறிவிட்டு என்னால் அங்கு கண்டுபிடிக்க முடிந்த ஒரேயொரு திறந்தவெளியான கோல்ப் மைதானத்தின் திசையில் விரைந்து நடந்தேன். மைதானங்களில் ஏன் யாருமே இல்லை என்பதை நான் உடனே கண்டுபிடித்துவிட்டேன் – வறட்டி தட்டப்பட்ட காய்ந்த மற்றும் ஈரமான மாட்டுச் சாணங்கள் அவ்விடத்தில் கொட்டிக் கிடந்தன – எனினும் நான் தூரத்து சிறு குன்றை அடைய அவற்றை மதித்தே நடந்தேன். அக்குன்று தன் அடிப்பகுதியைச் சுற்றி சுழன்றோடும் நதியை கொண்டிருந்தது. எனக்கு இடதுபுறம் வெகுதூரத்தில் மைதானத்தின் எல்லைக் கோடாக வைக்கோற்போர் குடிசைகளின் வரிசை மூடுபனியில் அமிழ்ந்து கலங்கலாக நின்றிருந்தது. கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்த சில சிறுவர்கள் ஒருவரையொருவர் துரத்திக்கொண்டு சிரித்தபடியும் கூச்சலிட்டபடியும் ஓடிக் கொண்டிருந்தனர். அதற்கும் அப்பால் ஒரு சிறுவன் மாடுகளை மேய்த்துக் கொண்டு செல்ல, கூடடையும் பறவைகளின் கீச்சொலியோடு அவற்றின் கனைப்பொலியும் சேர்ந்து காற்றை நிரப்பின. குளிர்காலத்தின் மாலை நேரங்களில் அசாம் தாழ்ந்த துயரமான மேகங்களும் தட்டையாகி மின்னும் தொடுவானமுமான ஒரு நயமான நீர் வண்ணத்திற்குள் கரைந்துவிடுகிறது . பனை மரங்கள் அடர்ந்த குன்றாக மேலெழும் ஷில்லாங்கின் வான் கோட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது அது.

நீ நீரை ஒட்டி நின்று மேற்பரப்பில் நடனமிட்டுக் கொண்டிருந்த ஒரு ஜோடித் தும்பிகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாய். பனிக்கால குளிரிலும் ஒரு மென்மையான அரைக்கை டீஷர்டை மட்டும் அணிந்திருந்த நீ கால்சட்டையை மடித்துவிட்டிருந்தாய். எச்சரிக்கைத் தீண்ட என்னை ஏறிட்டு நோக்கினாய்.

“மன்னிக்கவும்”. நான் சொன்னேன். “உன்னை அச்சுறுத்த நினைக்கவில்லை”

“நீ எப்போதுமே எல்லா உரையாடலையும் மன்னிப்போடுதான் துவக்குவாயா?”. என் முக பாவனையைக் கண்டு நீ சிரித்தாய். “இது போல் இவ்வளவு சுத்தமாக பராமரிக்கப்படுகிற கோல்ஃப் மைதானத்தை கடந்து வருகிற சிரமத்தை வழக்கமாக யாரும் மேற்கொள்ள மாட்டார்கள்.”

நான் என் காலணியில் ஒட்டிய சாணித் துண்டுகளை ஒரு கல்லில் தேய்த்து அகற்றினேன். காய்ந்த புல் படுகையின் ஒரு இடத்தில் நீ அமர்ந்துகொண்டாய். நான் காலை தேய்த்து முடித்தப் பிறகு, தெளிவற்று அங்கே இருப்பதா அல்லது விலகுவதாக என்கிற தீர்மானமில்லாமல் அசௌகர்யமாக நின்றிருந்தேன். ஒருவேளை நீ தனித்திருக்க விரும்பியிருக்கலாம்.

“உனக்கு தெரியுமா?” என்றாய் நீ. “சில சமயங்களில் தும்பிகள் ஒரு நாள் மட்டுமே உயிர் வாழும் என்பது?”. நீ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தும்பிகள் நுனி உருண்ட நாணல்களின் புதர் மேல் இப்போது வட்டமிட்டு மிதந்தன.

“அது துயரமானது”

“ஏன்?”

நான் திக்கடித்துவிட்டேன். நீ எனக்கு நடுக்கம் ஏற்படுத்தினாய். பையன்களைச் சுற்றி, ஜேசனைச் சுற்றி இருப்பதைவிடவும் நீ அதிகம் நடுக்கம் ஏற்படுத்தினாய்.

“அது ஏன் துயரமானது?” நீ திரும்பக் கேட்டாய்.

“ஏ..ஏனென்றால் அது அவ்வளவு சிறியக் காலம்.. உயிரோடு இருக்க”

 “ஆனால் அது தும்பிக்குத் தெரியாது”

அது ஒருவேளை நல்ல விஷயமாக இருக்கலாம் என்றேன் நான். நீ என்னை கூர்மையாகவும் தேடுவது போலவும் பார்த்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது.

நீ சிகரெட்டை அணைத்தாய். “வா”

ஆகாயத் தாமரை பூத்து நெருக்கும் சதுப்புக் குளத்தில் நதி சட்டென்று இணைகிற வரையிலும் நாம் அதை ஒட்டி நடந்தோம்; கோல்ஃப் மைதானத்தை பின்னால் தொலைவில் விட்டுவிட்டு நாம் விலகி வந்திருந்தோம்.

“நீ ஏன் டென்னில் விளையாடவில்லை?” நீ திடீரெனக் கேட்டாய்.

நானும் துயருற்ற ஆன்மாவையேக் கொண்டிருக்கிறேன் என்று நகைச்சுவையாக சொல்ல நினைத்தேன். ஆனால் மாறாக எனக்கு விளையாடத் தெரியாது என்பதை ஒப்புக் கொண்டேன்; என் அண்ணன் தான் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன் என நான் குறிப்பிட்டேன். அவன் கால்பந்து வீரனாக வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தான்.

“அவன் என்ன செய்கிறான்?”

நான் சொன்னேன்.

“அப்புறம் நீ? பள்ளி முடித்த பிறகு என்ன செய்யப் போகிறாய்?”. நீ நிறுத்திவிட்டு, எனக்கு நேருக்கு நேராக நின்றுக் கொண்டாய். உன் மூச்சில் சிகரெட்டையும் கிராம்புப போல் வாசமான வேறேதோ ஒன்றையும் என்னால் நுகர முடிந்தது.

மீண்டும் நான் கூறினேன்.

“அதுதான் உனது பெரிய கனவா? ஒரு செவிலியாக ஆவது?”. நீ ஒரு கல்லை எடுத்து அதை நீரோடு தரைத்து விட முயற்சித்தாய். ஆனால் அது மாறாக லாவண்டர் அரும்பை மோதியது.

அதுவே பரவாயில்லை என பட்டதால் அது பற்றி நான் எப்போதும் உண்மையாக யோசித்ததில்லை என்றேன் நான்.

“சரி”. ஏதோ விலைமதிப்பற்ற பொருள் போல் அவ்வார்த்தையை வாய்க்குள் மெல்ல சுழற்றினாய்.

உன்னுடைய இந்த அரிய சகஜத்தன்மையால் தூண்டப்பட்டு நான் கேட்டேன். “நீ என்ன செய்ய விரும்புகிறாய்?”

நீ உன் கைகளை உரசித் தட்டிவிட்டு எழுந்து நின்றாய். “நான் நதிகளை பின் தொடர விரும்புகிறேன்.”

அன்றிரவு நீ என்னை உலுக்கி எழுப்பினாய்.

“என்னோடு வா”. நீ கிசுகிசுத்தாய்.

“எங்கே?”. கேள்விக்கு பதிலாக நீ என் கையைப் பற்றி என்னை வெளியே இட்டுச் சென்றாய். உயரம்கூடிய கூர்மையான மரங்களின் நிழல்களில் புல்வெளியே மூழ்கியிருந்தது. மலர் பகுதிகள் எல்லாம் மையிருளில் கரைந்து காணாமலாகியிருந்தன. சில்லென்று குளிரடிக்க நான் இரவு உடையில் நடுங்கிக் கொண்டிருந்தேன்; ஸ்வெட்டரை எடுக்கக் கூட நீ எனக்கு நேரம் அளிக்கவில்லை. நீ முன்பு அணிந்திருந்த அதே ஆடைகளையே உடுத்தியிருந்தாய். ஆனால் செருப்புகள் மட்டும் அளவு கொஞ்சம் பெரிதாக இருக்க உன் பாதத்தில் அறைந்தபடி இருந்தன. மூங்கில் புதர்களிலிருந்த கதவிடப்பட்ட இடைவெளி வழியே நாம் பின்பகுதியை அடுத்த தோட்டத்தின் வலது மூலைக்கு தலைப்பட்டோம். பாதை அங்கே அகன்ற புதர்மண்டிய விமான தளம் நோக்கி திறந்தது. பல வருடங்களுக்கு முன்னால் சீனர்கள் 62ல் தாக்குதல் நடத்தியபோது உணவுகளையும் ஆயுதங்களையும் தரையிறக்க அது பயன்படுத்தப்பட்து என உன் அப்பா விளக்கியிருக்கிறார். இப்போது அது மாலை நடைகளுக்கு ஏற்ற இடமாகவும் விடியற்காலையின் இமயமலைக் காட்சிக்கு பிரசித்தி பெற்றதாகவும் அங்கே தீங்கற்று கிடந்தது. இரவில் வெளிறிய நிலவொளியில் புற்கள் வெள்ளி நிறத்தில் அலையடிக்கும் விதத்திற்கு அந்த நிலம் மினுங்கும் நீர்ப்பரப்பாக இருந்திருக்கலாம். ஊர்ப்புறத்தின் மௌனத்தை கிரிக்கெட் பூச்சிகளின் சீரான குரல் மட்டும் துளைத்துக் கொண்டிருந்தது. காட்டுச்செடிகளின் ராஜ்ஜியத்திற்குள் நாம் கண்டுபிடிக்கப்படாதவர்களாக நிலத்தில் படுத்துக் கொண்டோம்.

நீ என்னை வானத்தை பார்க்க சொன்னாய். நட்சத்திரங்கள் எண்ணற்றவையாக இருந்தன.

“என்னிடம் நட்சத்திரக் கூட்டங்கள் பற்றி கேட்காதே”.. நீ கூறினாய். “எனக்கு அது ஓரியன் சங்கிலி என்பது மட்டும்தான் தெரியும்”

நான் என் கழுத்தில் ஓரியன் சங்கிலி கொண்டிருப்பதாக சொன்னேன்.

நீ உன் முட்டியை அழுத்தி எழுந்துக் கொண்டாய்; நாங்கள் அங்கு வந்து சேர்ந்ததிலிருந்து உன் முகத்தில் நான் பார்த்தேயிராத ஒரு உணர்ச்சி முதல் முறையாக தோன்றியது – ஆர்வம்.

“எனக்கு காண்பி”

என் முகத்தை உன் பக்கமிருந்து திருப்பி இடது காது மடலின் கீழிருந்த ஒரு மச்சத்தை சுட்டிக் காட்டினேன். “இது ஒன்று”

அடுத்தது கீழே, நடுத் தொண்டைக்கு அருகில்.

“இது இரண்டு”

எனது இரவு உடையின் பொத்தான்களை கழற்றினேன். கடைசி மச்சம் கழுத்து பிளவுக்கு வெகுக் கீழே இருந்தது. “இது மூன்று”

நீ அவை அனைத்தின் மீதும் ஒரு கோடு இழுத்தாய். நீ சிரித்துக் கொண்டிருந்தாய்.

மறுதினம் நீ முழுக்க உற்சாகத்துடன் இருந்தாய். என்னோடு மட்டும் இல்லை. அதுவரை நீ அதிகம் புறக்கணித்த என் பெற்றோரிடமும் கூட. என் அம்மாவும் உன் அம்மாவும் புறக்கடையின் பெரிய காய்கறித் தோட்டத்தைச் சுற்றிச் செல்கிற நடையின்போது நீ அவர்களோடு துணையாக இணைந்து கொண்டாய்; என் தந்தை வரலாற்று பேராசிரியர் என்பதால் அவருக்கு உன் தாத்தா எழுதிய பழைய நாட்குறிப்புகளின் சேகரிப்பை காண்பிக்க முன்வந்தாய். புல்வெளியில் தோட்டக்குடையின் கீழிருந்த நாம் உணவருந்தும் மேஜையில், மதியச்சாப்பாட்டின்போது நீ ஒரு குறைவில்லாத குட்டி உபசரிப்பாளராக நடந்துக்கொண்டாய். மிகவும் புதிதான அம்மீனை சமையல்காரர் எங்கிருந்து வாங்கி வந்தார் என்பது பற்றி; எப்படி அருகாமை நகரமான பிஸ்வந்த சைராலி வெறுமனே கடைகளின் சிறு தொகுப்பாக மட்டும் இருக்கிறது என்பதுப் பற்றி நீ பேசினாய் – ‘கண்ணிமைத்தால் போதும் தவறவிட்டுவிடுவீர்கள்’; என் அம்மாவிடம் பேக்கரி குறித்து வினவியதோடு எங்களுக்காக கொஞ்சம் லெமன் டார்ட்ஸ் செய்துத் தர முடியுமா என்றும் கேட்டாய். உனது பெற்றொர்களை நான் கவனித்தேன். அவர்கள் மகிழ்ந்திருந்தார்கள்.

“இன்று நீங்கள் என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள்?”. உன் அப்பா கேட்டார்.

நீ என்னை பார்த்து சிரித்தாய். “நாங்கள் நடை போகலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.”

அது ஒரு நல்ல யோசனை என எல்லோரும் கூறினார்கள்… அஹாம் அரசர்களுடைய நாட்கள் முதலான பல வரலாற்று நினைவிடங்களால் நிரம்பியிருக்கிறது அம்மலைத்தோட்டம். நாங்கள் விஷ்ணு கோயிலையோ அல்லது பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்தது என சொல்லப்படுகிற தண்ணீர் தொட்டியையோ பார்க்க செல்லலாம் என உன் அப்பா கூடுதலாக சொன்னார். எல்லோரும் வழக்கமான மதியத் தூக்கத்திற்கு திரும்ப – என் பெற்றோரும்கூட பழக்கமற்ற இந்த அனுபவத்தில் இணைந்துவிட்டார்கள்- நான் பொறுமையற்றும் உற்சாகத்துடனும் காத்திருந்தேன். நீ தூக்கக்கலக்கத்தோடு அறையைவிட்டு வெளியேறியபோது குளிர்ந்த கடல்பச்சை நிறத் தரையின் மீது ஆடியபடி நான் வராந்தாவிலிருந்த மர ஊஞ்சலில் அமர்ந்திருந்தேன். ஏதோ சிறுகுழந்தைத்தனமான செயலில் ஈடுபட்டிருக்கும்போது நீ என்னை கண்டுபிடித்துவிட்டதுப் போல் உணர்ந்து நான் வேகமாக குதித்து இறங்கினேன்.

சிறிது நேரத்தில் நாம் புறப்பட்டோம். ஆனால் அதற்குள் உன் ஆர்வம் வடிந்துவிட்டிருந்தது. ஒடுங்கிக் கொள்கிற தனிமையான உன் பழைய சுயத்திற்கு திரும்பிவிட்டாய். நாம் நடந்து செல்லும்போது உரையாடலில் ஈடுபடுவதற்குப் பதிலாக நீ சிகரெட்டுகளை சுருட்டலானாய். அழுக்கேறிய சாலையின் இருபுறங்களிலும் தாழக் கிடக்கும் தேயிலைப் புதர்கள். நடுநடுவே பாதுகாப்பு நிழலுக்காக வளர்க்கப்பட்ட உயரமான வெள்ளி நிற ஓக் மரங்கள்.

நாம் எங்கே செல்கிறோம் என நான் கேட்டேன்.

“அருகாமையில்”.

நாம் நெடுந்தூரம் செல்லவில்லை; உண்மையில் நாம் சந்த்பாரியின் எல்லையைக் கூடத் தாண்டவில்லை. அனைத்துப்புறங்களிலும் செம்மண் நிலத்தாலும் பிர்ச் மர வரிசைகளாலும் உயர்த்தி எழுப்பப்பட்டிருந்த பெரிய குளமான புகுரிக்கு நீ என்னை அழைத்துச் சென்றாய். வயது முதிர்ந்து சொரசொரப்பான ஆலமரமொன்று மூலையில் நின்றிருந்தது. நாம் அதன் கீழே கடிக்கும் செவ்வெறும்புகளையும் தடித்த கருப்பு வண்டுகளை தட்டிவிட்டவாறு அமர்ந்தோம். நீ ஒரு சிகரெட்டைக் கொளுத்தி அதை உன் விரல்களுக்கிடையே புகைய விட்டாய். அடர்ந்த வியர்வைக் கோடுகளாக உன் தலைமுடி கழுத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது. நீ தனித்திருக்க விரும்புகிறாயோ என்று தெரியாமல் நான் திரும்பவும் குழம்பினேன்.

“நீ இயல்பாக இருக்கிறாயா?”

நீண்டகாலமாக யாருமே உன்னிடம் அக்கேள்வியைக் கேட்காதது போல் நீ என்னை பார்த்தாய்.

“எனக்குத் தெரிந்த ஒரு பெண்”. நீ சொன்னாய். ”தற்கொலை செய்துகொள்ள முயன்றாள்

“ஓ”. அவள் என்ன ஆனாள் என்று கேட்பது சரியா என எனக்குத் தெரியவில்லை. ”நிறைவேற்றப்படாத திட்டங்களின் நீண்ட வரிசையில் அதுவும் ஒன்று. வாழ்க்கையின் முடிவு”

மாலையில் நிச்சலனத்தில், உன் வார்த்தைகள் நீர் மீது படர்ந்து சென்று தடயமற்று மூழ்கின. முதலும் முடிவும் என ஒரேடியாக தூக்கில் தொங்குவது அல்லது அபாயகரமான வீழ்ச்சி அல்லது மூளையை துளைக்கும் புல்லட் போன்ற தீர்மானமான விடைபெறலை அவள் விரும்பாதது பற்றி நீ என்னிடம் கூறினாய். மினுங்கும் மெழுவர்த்தி போல் அணைந்து உடனே திரும்ப வேண்டும் என்கிற விவரிக்கமுடியாத தூண்டுதல் மட்டுமே அவளிடம் இருந்தது. அவள் விரும்பியது, உதாரணமாக, பேருந்துகள் எதிர்வரும் பாதையில் போய் விழுவது அல்லது செங்குத்தான படிக்கட்டுகளில் சரிவது அல்லது உட்கொள்ள முடிந்த அளவு எண்ணிக்கையிலான தூக்க மாத்திரைகளை சீராக சாப்பிடுவது. கனவற்ற ஆழமான உறக்கத்திற்குள் மூழ்கும் அளவுக்கு இருந்தால் போதுமானது. அங்கே அவள் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டியதில்லை. பார்வையை பறிக்கும் வெள்ளை நிறம் கொண்ட கழுவி சுத்தமாக்கப்பட்ட ஆபாசம்மிக்க அச்சிறிய அறையில் அவள் வயிறு அழுத்தப்பட்டு வலிய கண்கள் திறக்க வேண்டியதில்லை.

“அது அப்படித்தான் இருந்தது, என்று நீ முடித்தாய், அவள் மாதக்கணக்காக போராடிய அந்த இருமை”

“இப்போது அவள் எப்படி இருக்கிறாள்?”

“இன்னும் தைரியத்தை சேகரித்துக் கொண்டிருக்கிறாள்”

“வாழ்வதற்கா அல்லது இறப்பதற்கா?”

“இரண்டுக்குமே”

நீ சிகரெட்டை அணைத்துவிட்டு எழுந்து நின்று கை நீட்டி “நாம் நீச்சலுக்கு செல்லலாம்.” பிறகு நீ என்னை சரிவில் அழுத்தமாகவும் மூர்க்கமாகவும் பிடித்து இழுத்து வேக வேகமாக ஓடினாய். தழைக்கூளம் பொங்கி எழும் ஏரியின் விளிம்பையும் இலைகள் இரைந்து கிடக்க ஆழமும் இருட்டும்கூடிய நீரையும் என்னால் பார்க்க முடிந்தது.

“நிறுத்து”. நான் கத்தினேன். “நிறுத்து”

உனது காலணிகள் புல்லையும் கல்லையும் நசுக்க நீ என்னை கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு முன்னேறியபடி இருந்தாய்.

“என்னை போகவிடு”. நான் கத்தியபடி என்னை இழுத்து விலக்கினேன். “எனக்கு நீச்சல் தெரியாது. நீ என்னை உள்ளே தள்ளினால், நான் மூழ்கிவிடுவேன்.”

தண்ணீர் நம் பாதங்களைச் சுற்றி மோதியது. என் செருப்புகளின் ஒரங்களில் புகுந்தது. நான் அதை அப்போது உணரவில்லை. ஆனால் எனது விழிகள் கண்ணீரில் ஈரமாகியிருந்தன. பெரும்பாலும் அச்சத்தில் மற்றும் கோபமும்கூட. நாம் மௌனமாக பங்களாவுக்கு திரும்பி நடந்தோம்.

அன்றிரவு நீ வார்த்தையற்ற மன்னிப்பை தெரிவித்தாய்.

நீ உள்ளே நடந்து வந்து நேராக குளியலறைக்கு சென்றபோது நான் படுக்கையில் இருந்தேன். கொட்டுகிற நீரின் சத்தத்தை என்னால் கேட்க முடிந்தது. நீ புகைக்க வந்தாய் என்றே நான் எண்ணியிருந்தேன். இன்னமும் உன் மீது கோபமாகவே இருந்ததால் நான் கேட்கவில்லை. பிறகு நீ என்னை அழைத்தாய்.

“எதற்கு?”

“தயவுசெய்து”

குளியல் தொட்டி ஏறத்தாழ நிறைந்திருக்க, ஜன்னலையும் கதவையும் மூடிமறைக்கும்படி ஆவி பலமாக எழுந்துக் கொண்டிருந்தது. நீ எனக்கு பின்னால் நின்று என் இரவு ஆடையை கழற்றத் தொடங்கினாய். நான் எதிர்க்க ஆரம்பித்தேன். ஆனால் கண்ணாடியில் கண்நேரம் நம் உருவம் தெரிய அதில் நான் வேறு யாராகவோ இருந்தேன். விறைத்த பார்வையாலும், துணியின் உள்ளே வேகமாக சென்ற உனது குளிர்ந்த கரங்களாலும் ஏந்தப்பட்டிருந்தேன். துணி தரையில் விழுந்ததும் நீ என்னைத் தொட்டிக்குள் இறங்கச் சொன்னாய்.

நான் இறங்கினேன். நீர் கடுமையானதாக இருந்தது. சட்டென நீ உனது டீ ஷர்ட் மற்றும் ஜீன்ஸை விட்டு வெளியேறியிருந்தாய். நாம் இரட்டைப் பிறவிப் போல் கச்சிதமாக பொருந்திக் கொண்டோம். பிறகு நீ என் முதுகிலும், என் தோள்களிலும், என் தலைமுடியிலும் சோப்பிட்டாய்.

நானும் உனக்கு அதையே செய்தேன்.

உனது அம்மா என்று நான் எண்ணியிருந்தவரைப் போல் நீ கொஞ்சம்கூட தோற்றமளிக்கவில்லை என்பதை நீராவியை மீறி கவனித்தேன். வாழ்வு அசாதாரணமான அளவு குறுகி வெட்டப்பட்ட, வேறெங்கிருந்தோ நீ வந்திருப்பதுப் போல். பத்தொன்பது வயதே ஆகியிருக்கிறபோது நீ ஒரு புராதான துயரத்தால் நிரம்பியிருப்பதுப் போல். உனது தோள்களின் மென்மையான சரிவை, கூழாங்கல் போன்ற வழுவழுப்பு மிக்க உன் முதுகு பரப்பை, சிறிய செம்புள்ளிகள் படர்ந்த உன் சருமத்தை, அதிரும் கோடாக வளைகிற மெலிந்து நீண்ட உன் கழுத்தை, வெளிறிய வெண்மைமிக்க உன் விரல்களை நான் கவனித்தேன். நீ திரும்பி என்னை எதிர்கொண்டபோது உன் கண்கள் மூடியிருந்தன. காலி செய்யப்பட்ட ஏரிகள் போல் வெறுமையாக நீர்த்துளிகள் உன் கன்னங்களில் மினுமினுப்பாக தங்கியிருந்தன. நீர் குளிர்கிறவரை நாம் நிச்சலனமாக அங்கே படுத்திருந்தோம்.

மறுநாள், உலகம் புதிதாக துடைத்து கழுவப்பட்டிருந்தது.

ஒரு பக்கப் புரட்டல், கோப்பையிலிருந்து ஒரு பருகல், ஒரு கால் இன்னொருக் காலின் மேல் குறுக்காக இருப்பது. சிலநேரங்களில் உனது கை என் கை மீது ஊர்ந்தது. உனது தோள் என் முழங்கையை உரசியது அல்லது உன் மூச்சுக் காற்று என் கழுத்தில் படும்படி நீ எனக்கு பின்னால் நெருக்கமாக நின்றுக் கொண்டிருந்தாய். ஒவ்வொரு குறிப்புணர்வும் முக்கியமானது என்றும் நம் வாழ்க்கையில் மறக்கமுடியாதபடி எதையோ அது இணைத்தது என்றும் நான் எண்ணினேன்.

நீ என்னை புகரிக்கு மீண்டும் அழைத்துச் செல்லவில்லை.; மாறாக சந்த்பாரியின் எல்லையாக ஓடிய நதியை நோக்கி நாம் நடந்துச் சென்றோம். அது தனிமையான தூசி படிந்த சாலையின் முடிவில் ரயில்வே தண்டவாளங்களுக்கு பின்னால் இருந்தது. வெறுமையான பெரும் வானை பிரதிபலித்தபடி நம் முன் முடிவற்று ஊறிக்கொண்டிருந்த நீர்வரை நாம் நிதானமாக இறங்கினோம். நதிக்கரை முழுக்க சிறிய லாந்தர் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, மீனவர்கள் அதன் பொன்னொளியில் அமர்ந்து தங்கள் வலைகளை சிக்கெடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் படகுகள் நிலத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்தன. நேர்த்தியாக வெட்டப்பட்ட காகிதத் துண்டுகள் போன்ற நீளமான அகலமற்ற நாளங்கள்.

“மழைப் பருவத்தில்” நீ சொன்னாய். “நதி கடல் போல் அகலமாக இருக்கும்”

நான் அங்கிருந்து விடைபெறுகிறவரை ஒவ்வொரு மதியமும் நாம் அங்கு நடந்துச் சென்றோம்; மணிக்கணக்காக நதிக்கரையில் அமர்ந்து மணலில் கிறுக்கியபடியிருந்தோம். உன் அம்மாவுக்கு டைரிகளில் எழுதுகிற பழக்கம் இருந்ததாகவும் வருடாவருடம் அவர் அவற்றை எழுதி நிரப்பியதாகவும் அவர் இறந்தப் பிறகு நீ அவற்றை தேடியதாகவும் என்னிடம் கூறினாய். இவ்வுலகத்திலேயே மிக முக்கியமான பொருளாக அவை மாறியபோதும் உன்னால் அவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை அவர் இங்கே ஒரு நாள் நடந்துவந்து அவற்றை நதியில் போட்டு மூழ்கச் செய்திருக்கலாம் என நீ எண்ணினாய். சிலநேரம் தொலைந்த குழந்தைகள் போல் நாம் கரையைச் சுற்றி தவழ்ந்து சுற்றினோம். உயரமான கடின பாறைகளைப் பற்றி ஏறினோம். வானத்தையும் நம் முகங்களையும் பிரதிபலிக்கும்படி அவற்றுக்கு நடுவே உருவாகியிருந்த துல்லியமான கண்ணாடித் தேக்கங்களில் கால்களை நனைத்தோம். ஒருமுறை வழக்கத்தைத் தாண்டி வெகு தூரம் சென்று குன்றின் மேலிருந்த ஒரு கோயிலை எதிர்கொண்டோம். அது மாலை பூஜைக்கு தயாராகிக் கொண்டிருந்தது. வழிபாட்டாளர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் அருகாமை கிராமங்களை சேர்ந்த பெண்கள். பருத்திப் புடவையால் முக்காடிட்ட பவித்திரமும் தீவிரமும் கூடிய முகங்களோடிருந்தார்கள். மந்திரங்களை கேட்டபடியும் தீபாராதனையை பார்த்தபடியும் சிறிது நேரம் நாம் அங்கிருந்தோம். விசித்திரமான கோடுகளும், சதுரங்களும், சுழற்சிகளும் வரையப்பட்டிருந்த ஒரு பெரும் பாறைத் துண்டு அருகே நின்றிருந்தது. எங்களைக் கடந்துச் செல்ல நேரிட்ட கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி “இது கடவுள் பகடை ஆடுகிற இடம்” என்று எங்களிடம் கூறினாள். இன்னொருமுறை, மங்கி வெளிறிய எலும்புகள் போல் தோற்றமளித்த கற்களின் வரிசையை நாங்கள் கண்டுபிடித்தோம். அவற்றின் மீது மென்மையாக கால்வைத்து நடந்தோம்; கற்கால மிருகங்களின் இடுகாடாக அது இருந்திருக்கலாம். மீனவர்கள் உட்கார்ந்திருந்ததற்கு பக்கத்தில் இருந்த சிறிய மலையில் நாங்கள் ஏறினோம்.

அங்கிருந்து பழைய நதியொன்றின் காய்ந்த மணல் தொடரை எங்களால் பார்க்க முடிந்தது.

“நீ உணரவில்லையா” நீ கேட்டாய். “நீ வேறெங்கோ இருப்பது போல்?”

நீ எதை குறிப்பிடுகிறாய் என்பது எனக்குத் தெரிந்தது; அசாமின் செழிப்பான நிலப்பரப்பின் மத்தியில் திடீரென அது மலையும் குன்றுமான வெற்றுப் பாலைவனமாக இருந்தது. உலர்ந்த நதியின் அருகே நாம் சென்றதும் நீ உன் செருப்பை கழற்றி வீசிவிட்டு அதனுள் நடந்தாய்; நான் தொடர்ந்தேன். நம் கால்களுக்கடியே திரவமாக வடிவம் மாறிக்கொண்டிருந்த மண் வெதுவெது என்றும் வழுவழுப்பாகவும் இருந்தது. நாம் நின்றுக்கொண்டிருந்த இடத்தில் முன்பு ஒரு நதி சுழித்து வேகமாக ஓடிக்கொண்டிருந்தது என்பதை கற்பனை செய்வதே சிரமமாக இருந்தது. உள்ளங்கைகளில் கச்சிதமாக பொருந்துகிற மென்மையான கற்களையும் விசித்திரம் மிக்க திருகலான மரத் துண்டங்களையும் நாங்கள் அங்கே கண்டெடுத்தோம். சில மரத்துண்டுகள் படகுப் போல் எங்களை கிடத்தி ஆட்டுகிற அளவுக்கு பெரிதாக இருந்தன.

வெளிச்சம் நீண்ட நேரம் தொடர்வது போல் தெரிகிற சில மாலைப்பொழுதுகளில் நாம் ஒரு படகை வாடகைக்கு எடுப்போம். மீனவர் ஒருவர் எங்களை பிரம்மபுத்திராவில் அழைத்துச் செல்வார். பெரும்பாலும் நீ அவரை நீரோட்டத்திற்கு எதிராகவே போகச் சொல்லி பிறகு அப்படியே சறுக்க அனுமதித்து நீரழுத்தம் அதிகமாகி நம்மை வெளியேத் தள்ளுவதற்குள் தடுத்து நிறுத்தச் சொல்வாய். நாம் நடுவிலுள்ள மரப்பலகையில் அமர்ந்திருப்போம். அது மீன் வாசமடித்தது. உடன், நனைந்த மரக்கட்டையின் ஈர வாசமும். குகைகளில் வளரும் காடு போல் என நான் எண்ணினேன். மென்மையாக நீர் மோதிப் படிய நாம் உலகைக் கடந்து மிதந்தபோது நீ அதீத மகிழ்ச்சியோடிருந்தாய். சில மாலைகளில் அந்தி நம்மைச் சுற்றிச் சரிய லாந்தர்களாலும் மீனவரின் பாடலாலும் மட்டுமே நாம் வழிநடத்தப்பட்டோம்.

ஒவ்வொரு இரவும் நம்மைச் சுற்றி தண்ணீர் ஆழமாகவும் வெதுவெதுப்பாகவும் இருக்க குளியல் தொட்டியில் நாம் ஒருவரையொருவர் வளைத்துச் சுருண்டு கொண்டோம். நதியோர நாணல்களைப் போல். சிலபோது என் கழுத்தின்கீழே நீ நட்சத்திரத்தை வரைந்தாய். சிலபோது உன் அம்மாவைப் பற்றி பேசினாய்.

“அவர் ஏன் அப்படி செய்தார்?”

நீ தோள்களைக் குலுக்க அவற்றின் மேலாக நீர்த்துளிகள் தெறித்தன .வெப்பமான நீராவி உன் சருமத்தை சற்று நடுங்கச் செய்துகொண்டிருந்தது. “ஏன் என்று என்னால் விவரிக்க முடியாதபோதும் அது எனக்கு புரிகிறது”

சிலநேரங்களில் நீ முயற்சித்தாய்; எழுந்து உட்கார்ந்து சிகரெட் புகைத்தபடி காய்ச்சல் கண்டதுப்போல் பேசினாய். “உனக்கு அப்படி தோன்றவில்லையா? உலகில் உன் இடம் பற்றிய தடுமாற்றம். உனக்குத் தெரியுமா? நீருக்கடியே என் தலையை அழுத்தும்போது எனக்கு எதுவுமே கேட்பதில்லை. நான் இன்னும் அதிகம் தெளிவாக பார்க்கிறேன்…”. என் வயிற்றையும் தொடைகளையும் உரசியபடி நீ தொட்டிக்குள் மூழ்கியிருந்தாய்.

நாங்கள் விடைபெற்ற காலையில், உன்னை எங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“நான் மன்னிப்பு கேட்கிறேன்” உன் அப்பா கூறினார். “அவளது அம்மாவுக்குப் பிறகு.. உனக்கு தெரியுமில்லையா, அது நடந்த பிறகு, இவள் இப்படித்தான் இருக்கிறாள். சற்று கடுமையானவளாக”

என் பெற்றோர்கள் கருணையாளர்கள் போல, தாங்கள் புரிந்துக்கொள்வதாகவும் அவர் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் தங்களுக்கு அற்புதமான நேரம் வாய்த்ததாகவும் கூறினார்கள். பதிலுக்கு உன் பெற்றோர்களை ஷில்லாங்கிற்கு அழைத்தார்கள். அவர்கள் வருவதாக உறுதியளித்தபோதும் நீயும் உன் குடும்பமும் வருகை தரவே இல்லை.

வீடு திரும்பும் வழி முழுக்க ஜன்னலுக்கு வெளியே கடந்தகாலம் என மின்னி மறைந்து கொண்டிருந்த நிலக் காட்சிகளை பார்த்தபடி மௌனமாகவே அமர்ந்திருந்தேன். தாழ்கூரை வீடுகள், கோதுமை வயல்வெளிகள், பாலங்களின் முடிவற்ற தொடர் என அனைத்தும் நம்பமுடியாதவை போல் தூரத்து திரை மேல் உருமாறிக்கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன். சீக்கிரமே நாங்கள் மலையேற இஞ்சின் முனங்கியது. பள்ளத்தாக்குள் ஆழமாகின. குளிரோடு சூரிய வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருக்கும் பரபனியின் சுழன்றோடும் நீர்ப்பரப்புகளைக் கடந்து நாங்கள் சென்றோம். அது வறண்டு போய் மொத்த உலகமும் காலியான ஏரி என கிடப்பது போல் நான் மிகப் பெரும் வெறுமையை உணர்ந்தேன்.

நாங்கள் விட்டுச் சென்றது போலவே நாங்கள் உள்நுழைந்தபோதும் ஷில்லாங் குளிர்ந்தும் உற்சாகமற்றும் இருந்தது. நாங்கள் வெளியே சென்றிருந்தோம் என்பதை நம்பவே எனக்கு சிரமம் ஏற்பட்டது. எதுவும் மாறவில்லை. உடன் எல்லாமே மாறியும் இருந்தது. வாக்குறுதி அளித்தது போலவே எனது நெருங்கிய தோழிகளில் ஒருத்தியான சாரா அன்று மாலை நான் தவறவிட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் எனக்கு சொல்ல என்னை அழைத்திருந்தாள். அவளுக்கு ஒரு இரட்டைச் சகோதரர்களின் மேல் மையல் தோன்றியிருக்கிறது. ஆனால் ஒருவரிலிருந்து மற்றவரை அடையாளம் பிரித்து சொல்லத் தெரியவில்லை. வார்ட் ஏரியின் பின்னாலுள்ள குடை நிழலில் யாரோ முத்தமிடப்பட்டிருக்கிறார்கள். அவள் விஷமமாக சிரித்தாள், ஜேசன் என் வருகையை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறான்.

“அப்புறம் நீ?” அவள் மூச்சுவிடாமல் கேட்டாள். “உன் விடுமுறை எப்படி சென்றது?”

நான் உன்னை, உன் கைகளை, உன் முகத்தை நினைத்துக் கொண்டேன். நம் ரகசிய வாழ்க்கையை மடித்து சேகரித்தேன்.

நான் ஒரு ஏரிக்கு சென்று மூழ்கினேன்.

“விசேஷமாக ஒன்றுமில்லை”

இப்போது உன்னைப் பற்றி யோசிக்கையில், ஈர மணலும் நீளமான புற்களும் உண்டாக்கிய உணர்ச்சிதான் எனக்கு ஞாபகம் வந்தது. அப்புறம் சிகரெட்டுகளின் கிராம்புகளின் மற்றும் நீருக்கருகே வாழும் உயிர்களின் வாசனை. உன் புராதானத் துயரின் விரும்பத்தகாத வாசனை. உன்னை நதிகள் எல்லாம் இணையும் இடத்திற்கு, கடலுக்கு இட்டுச் செல்லும் யாரோ ஒருவருக்காக, முதல்முறை பார்த்தது போலவே, நீ காத்திருப்பதாக நான் கற்பனை செய்து கொள்கிறேன்.

(தமிழில் : மித்ரன்)

 

முந்தைய கட்டுரைகாடும் குறிஞ்சியும்
அடுத்த கட்டுரைகே.ஜே.அசோக்குமாரின் கதையுலகம்-பாவண்ணன்