சுழற்பாதை -கடிதங்கள்-2

சாமர்செட் மாஃம்
சாமர்செட் மாஃம்

ஜெமோ,

சுழற் பாதை. இலக்கை அடைந்தபின் வளர்ந்து விட்டதாக நினைத்து திரும்பிப் பார்க்கையில் கிடைப்பது சலிப்பா இல்லை வியப்பா?

ஒருவரின் கைபற்றிக் கொண்டு நேர்கோட்டில் பயணித்தவர்களுக்கு சாதித்துவிட்டோம் என்ற திருப்தியிருந்தாலும், உள்ளூர மேலோங்கியிருப்பதென்னவோ  அப்பயணம் பற்றிய சலிப்புதான். இச்சலிப்பை போக்கவே அந்த இலக்கு வளர்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

ஆனால் இருள் மிகுந்த சுழல் பாதையில் பயணித்து தனக்கான வெளிச்சத்தை கண்டடைந்தவர்களுக்கு, கிடைத்த வளர்ச்சியைவிட அச்சுழற் பாதையின் பயணம் தான் வியப்பூட்டுவதாக உள்ளது. இலக்குகளை விட, இங்கே பயணம் தான் கொண்டாடப்படுகிறது. இப்பயணம் தனக்குத் தெரிந்த வெளிச்சத்திற்கு மற்றவர்களை இட்டுச் செல்வதில்லை. அவரவர்களுடைய வெளிச்சத்தை தேட உதவுகிறது. இந்த ஒப்பற்ற பயணம் தான் இலக்கியம் என்று உணர்கிறேன். இதைத்தான் நீங்கள் ‘ஆன்மீகம்’ என்று கூறுகிறீர்கள். எலியட் இதைத்தான் ‘கலை வளர்வதில்லை’ என பூடகமாகச் சொல்கிறாரோ என்று எண்ணுகிறேன்.

மற்றத் துறைகளின் பயணம் பெரும்பாலும் முதல்வகையைச் சார்ந்ததே. முற்றிலும் புறவயமானவை. ‘நான்’ என்பதிலிருந்து அவர்களால் விலகமுடிவதில்லை. விதிவிலக்குகள் Einstein மற்றும் Tendulkar போன்றவர்கள்.

நிறைய கோட்பாட்டு அறிஞர்கள் முயன்று இலக்கியத்தை பறவயப்படுத்த முயன்றாலும், அவ்வறையறுக்குள் இலக்கியம் அடங்கியதேயில்லை. சோமர்செட், டால்ஸ்டாயிலிருந்து ஜெயமோகனின் ஆக்கங்கள் வரை இதற்கு உதாரணம்.

“கலைஞர்களின் முதல் ஆக்கத்தில் அவர்களின் தேடல் தெரியும். இரண்டாம் ஆக்கத்தில் அத்தேடலின் கண்டடைதல் தெரியும். அதற்கு மேல் அவர்கள் வளர்வதற்கு ஒன்றுமில்லை” என சமீபத்தில் நீங்கள் ஆற்றிய உரை (குமரகுருபன் நினைவு விருது விழாவின் போது) நினைவுக்கு வருகிறது. கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளார்ந்து புரிந்து கொண்டதிலிருந்து விளையும் சொற்கள் இவை.

என்னைப் பொறுத்த வரையில் தங்களின் உச்சமாக எண்ணுவது ‘விஷ்ணுபுரத்தையும்’ ‘பின் தொடரும் நிழலின் குரலையும்’ தான். இப்பயணத்தின் முடிவு தந்த வெறுமை தான் உங்களை மேலும் பயணிக்க வைக்கிறது என்று எண்ணுகிறேன். கொந்தளிப்பும், கொண்டாட்டமும் நிறைந்த இப்பயணத்திற்கு முடிவான இலக்கு என்று எதுவுமில்லை. ஏனெனில், பாதை தோறும் இலக்குகள் தான். பயணங்கள் முடிவதில்லை.

அன்புடன்

முத்து

***

அன்புள்ள ஜெ

காமத்தின் பாதையை எழுதுவது இலக்கியத்தில் என்றும் உள்ள ஒன்றுதான். ஆனால் பார்வைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. அது மனிதனை பலவீனப்படுத்துவது, வென்றுசெல்லவேண்டியது என்றபார்வை முன்பு இருந்தது. இன்றைக்கு அது இயல்பானது, கொண்டாடப்படவேண்டியது என்ற பார்வை உள்ளது. இந்தப்பார்வை மாற்றத்தைத்தான் சாமர்செட் மாம் உருவாக்கினார். அதைத்தவிர்க்கவே முடியாது என்பது அதைக்கொண்டாடு என்று சொல்வதுதான்.

ஆனால் என்ன பிரச்சினை என்றால் மேலைநாடுகளில் கிறித்தவமதம் முன்வைத்த காம ஒறுப்புக்கு எதிரான இந்தவகையான கொண்டாட்டக்கோட்பாடுகள் வந்துகொண்டிருந்தாலும் காமத்தை கடக்கமுடிந்தவர்கள் கொள்ளும் ஆற்றலை ஒவ்வொரு தளத்திலும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆன்மிக விஷயங்களை விடுவோம். சாதாரணமான ஒரு தேர்வு எழுதி ஜெயிப்பதற்குக்கூட அந்த அளவுக்குக் காம ஒறுப்பு தேவையாக ஆகிறது.

ஜெயராமன்

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–3
அடுத்த கட்டுரைஆணவமும் பதிலும்