உரிமைக்குரல்

araniyathurai

இந்தியாவின் சமகால அவலங்களில் ஒன்று, பொறுப்பின்மையையும் ஊழலையும் மெல்லமெல்ல இயல்பாக ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்பது. சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுமருத்துவமனையில் லஞ்சம் பெற்றுக்கொண்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகளைக் கண்டித்து ஊழியர்கள் நாகர்கோயிலில் ஒர் ஆர்ப்பாட்டம் நடத்தியதை கண்டேன். ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வராததை கண்டித்த கல்வியதிகாரியைக் கண்டித்து ஆசிரியர் அமைப்புக்கள் நடத்திய போராட்டத்தைப் பற்றி எழுதியிருந்தேன்.

இப்போது சிலைத்திருட்டுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளைக் தண்டிக்கக்கூடாது, பணிப்பாதுகாப்பு வேண்டும் என்று கோரி அறநிலையத்துறை அதிகாரிகள் போராட்டம். இனி வங்கிப்பணம் திருட்டுபோனால் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று வங்கி அதிகாரிகளும் கைதிகள் தப்பி ஓடினால் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று போலீஸ் அதிகாரிகளும் நியாயம் கேட்டு தெருவுக்கு வருவார்கள் என நினைக்கிறேன்

அடுத்தகட்டம் சிலை திருடுபவர்களே சங்கம் அமைத்துப்போராடுவதுதான். அனைத்திந்திய ஆலயத்திருடர்கள் கூட்டமைப்பு. அவர்களையும் இவர்கள் தங்கள் போராட்டத்துடன் சேர்த்துக்கொள்வார்கள்.

இந்தியாவின் சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக, நேரடியாகவே நீதிமன்றங்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் இது.இந்த மனநிலைக்கு அடிப்படையாகச் சில மகாவாக்கியங்கள் உள்ளன. “யார் சார் யோக்கியன்? அவனவன் கோடிகோடியா கொள்ளையடிக்கிறான்’ ‘மேலே உள்ளவன் சரியா இருந்தா நாங்க ஏன் சார் இப்டி இருக்கோம்?” ”எங்களுக்கு எவ்வளவோ வேலைச்சுமை இருக்கு சார்’ எல்லாவற்றையும் விட உச்சகட்டமாக ஒன்றுண்டு. “எங்க பேசிக்பே ரொம்ப கம்மி சார்”

பொதுவாக இத்தகைய ஜனநாயகப் போராட்டத்தின் முறைமை என்ன? நீதிகேட்டு ‘மக்கள்முன்’ வந்து நிற்பதுதான். மக்களுக்கு போராடுபவர்களின் தரப்பு தெரியவந்து அவர்களின் மீது அனுதாபம் ஏற்படும்போது அது ஒரு ஆற்றலாக ஆகிறது. அதைப் பயன்படுத்திக்கொண்டு அந்தமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழுத்தம்கொடுப்பது

திருடனை தண்டிக்கக்கூடாது என்ற போராட்டத்திற்கு மக்களாதரவு எழுமா என்ன? உண்மையில் கோயில்சிலைகளைத் திருடிவிற்பதும் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதும் மக்களிடையே, குறிப்பாக ஆலயவழிபாட்டாளர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கவேண்டும். அது இங்கே நிகழ்வதில்லை. மக்களும் ‘எவன்சார் யோக்கியன்?” மனநிலையில் அன்றாட அயோக்கியத்தனங்களில் புழங்குபவர்களே. அந்த மொண்னைத்தனத்தைப் பயன்படுத்திக்கொண்டுதான் இவர்கள் அடுத்த அடி வைக்கிறார்கள்.

நடைமுறையில் இந்தப்போராட்டம் மேலிடத்தில் இருப்பவர்களிடம் இவர்கள் விடுக்கும் மிரட்டலே. ‘நீயும் திருடன், நானும் திருடன். நான் வாய்திறந்தால் என்னாகும் தெரியுமல்லவா?” என்பதே இத்தகைய போராட்டங்களின் அடிப்படை. இது மிகப்பெரிய பயனை அளிக்கக்கூடியது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.

அறநிலையத்துறை என்பது அப்பட்டமான செயலின்மை, ஊழல் இரண்டும் மட்டுமே கொண்ட ஒன்று. பல ஆலயங்களுக்கு அதிகாரிகள் ஊழலின்பொருட்டு மட்டுமே வருகிறார்கள். உள்ளூர் அரசியல்வாதிகளான தர்மகர்த்தாக்களை அனுசரித்துப்போனால் ஆலய அதிகாரி என்பது பொன்அகழும் பணி.

பொறுப்பின்மை, ஊழல் ஆகியவற்றின்பொருட்டு எவரும் தண்டிக்கப்படுவதே இல்லை. எப்போதோ ஒருமுறை திருட்டு நடக்கையில், வெளிப்படையான சான்றுகள் இருக்கையில், மட்டுமே கைதுநடவடிக்கை போன்றவை நிகழ்கின்றன. அதுவும் இந்திய குற்றவியல்சட்டப்படி உடந்தையாக இருப்பது, காரணமாக இருப்பது போன்ற குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபிப்பது அனேகமாகச் சாத்தியமே இல்லை என்றே வழக்கறிஞர்களான நண்பர்களின் கூற்று. ஆகவே இதெல்லாம் ஒரு தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமே. அதையும் கூடதென தெருவிலிறங்கி மிரட்டுகிறார்கள்.

ஆலயங்களை எவர் கையில் ஒப்படைத்திருக்கிறோம் என்னும் தவிப்பு ஏற்படுகிறது. ஆலயங்களின் நிலம், கட்டிடங்கள் போன்றவை முழுமையாகவே பறிபோய்விட்டன. நகைகளும் சிலைகளும் எஞ்சியிருக்கின்றனவா என்ற ஐயம் எழுகிறது. இவை அரசர்களால் மட்டுமல்ல நம் முன்னோர்களில் மிக எளிய மக்களாலும் கூட தெய்வக்கொடை என ஆலயத்திற்கு அளிக்கப்பட்ட சொத்துக்கள். இத்தகைய செய்திகளை பக்தர்கள்கூட பொருட்படுத்தவில்லை என்னும்போது நாளடைவில் இவை அழிவதே ஊழ்போலும் என்றே தோன்றுகிறது

பெரும்பாலான பேராலயங்களைப் பார்க்கையில் அடித்தளம் உடைந்து மெல்லமெல்ல ஆழியில் மூழ்கும் பெருங்கலங்களைப் பார்க்கும் கையறுநிலையே உருவாகிறது. குறியீட்டுரீதியாக அது தமிழ்ப்பண்பாட்டின் சித்திரம் என்றும் தோன்றுகிறது

https://www.polimernews.com/சிலைத்-திருட்டு-வழக்கில்/

முந்தைய கட்டுரைதூயனின் ’இருமுனை’ -நாகப்பிரகாஷ்
அடுத்த கட்டுரைஒளிர்நிழல் -அகில்குமார்