இனிய ஜெமோவிற்கு,
வணக்கங்கள். நலமா?
பிரயாணங்களின் ஏற்படும் ஒரு க்ஷண அனுபவமானது அம்முழு பயணத்தையும் பசுமைப்படுத்துவதாக அமைகிற இவ்வரிகள்…
“அந்திச்சூரியன் உருகி உருகி பொன்னென்றாகி அமிழ்ந்துகொண்டிருந்தது. நாளெல்லாம் கண்ட பொன்னிறத்தின் விண்தோற்றம். மண்ணைப் பொன்னாக்குகிறது ஒளி. பொன் என்பது ஒரு பொருள் அல்ல. வெறும் செல்வம் அல்ல. அது வாங்கும் பொருட்கள் எவையும் அதற்கு நிகர் அல்ல.தோன்றிய நாள்முதல் மானுடன் அதன் மேல் கொண்ட பித்து அது நாணயம் என்பதனால் அல்ல.பொன் பருப்பொருளில் விரிந்த தழல். உலோகங்களில் அது மலர். பொழுதுகளில் அது காலையும் அந்தியும். ஆகவேதான் அனைத்தையும் பொன்னாக்கலாகுமா என்று சித்தர்கள் ரசம்கூட்டினர். அனைத்தும் பொன்னாகிக்கொண்டிருக்கின்றன என்று அவர்கள் சூழக் காணவும் செய்தனர். ஆகவேதான் அவன் பொன்னார்மேனியன். பொன்னென்றாகி அவன் உருக்காட்டி அணைகின்றன அந்தியில் அனைத்துமே.” மையநிலப்பயணம் 9
இச்சுகானுபாவம் அனுபவிப்பவனுக்கு மட்டும் அல்ல, வாசிப்பவனுக்கும் உரிதாகுகின்றன. அன்றொரு நாளில் மார்சிலிங் கான்க்ரீட் கட்டிடமலைகளின் நடுவில் இப்படியொரு அஸ்தமனக்காட்சி, ஒட்டுமொத்த சூழலே பொன்னிறமாக மாறிய வண்ணம், ஐயோ என்ன இப்படியொரு வண்ணம் இன்னிக்கு என்று நினைக்கும்பொழுது உங்களின் முந்தய வரிகள்! எழுதும்வரைக்கும் வரிகள் எழுத்தாளனுக்குச் சொந்தம், எழுதியபின் அவை வாசகனின் சிந்தனை உலக நுழைவாயில்..!
தங்களின் வாசிக்க வேண்டிய நாவல்களின் இரண்டாம் பட்டியலை கொண்டு செல்லும் பிரயாணத்தில் இரண்டு கதைகள், காவேரியின் ஆத்துக்குப் போகனும் மற்றும் டி.செல்வராஜின் தேநீரை நின்று தம்முடன் பருகி விட்டுச் செல்லலாம் என்று வரையப்பட்ட மடல்.
தங்களின் தளம் நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ வேறொரு பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கிறது. தமிழில் நாவல் எழுத்து, எழுத்தாளர்களைப் பற்றிக் கூகிள் இணயைத் தேடலில் ஈடுபடும் பொழுது பெரும்பாலும் அது தங்களின் தளம்,கேசவமணி ப்ளாக், சிலிக்கான் வேலி ஆர்வி மற்றும் சில வாசல்களை Tag செய்கிறது. என்னைப் போல மூக்கை நீளமாகப் பெற்றவர்கள் ஒரு படி மேலேச்சென்று ஜெமோ இப்படைப்பை பற்றியோ அல்லது எழுத்தாளரின் மற்ற படைப்பை பற்றியே என்னசொல்லிருக்கிறார் என்று துழாவுகின்றோம் அவ்வகையில் தங்கள் கவனத்தில் விட்டு சென்ற ஒன்று காவேரியின் ஆத்துக்குப் போனும் மற்றும் RedTea /தேநீரின் ஆதார சுருதியான சுரண்டலின் சுரண்டல் பற்றிய ஓர் பதிவு.
காயத்ரி என்னும் கதா மாந்தரின் பிள்ளையார் பிடிக்கும் குழந்தை பருவத்தில் ஆரம்பித்து அரவிந்த் என்னும் தன் மகனின் அம்மா, உடையை மாத்திட்டு டிபன் சாப்பிட வர்றியான்னு கேட்டும் பொழுது, உடைகள மாத்தி கொள்ளனுமா இல்ல களைந்து எடுத்துட்டுச் சரிரத்தை விட்டே கெளம்பிடுனுமான்னு முடியர இக்கதை சிலாகிக்கப் பட வேண்டிய ஒன்று.
ஒவ்வொரு நாவல்களின் வாசிப்பு முடிவில் மனம் அங்மோகியோ சந்திப்பின் சிற்றிலக்கியபேரிலக்கிய விவாதங்களின் தங்களின் சமநிலை, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் தரிசனம் என்னும் மூன்று முக்கியக் கூறுகள் உள்ளடக்கி எழுதப்பெற்றிருக்கிறதா என்றும் பார்க்கும்பொழுது ஆத்துக்குப் போகனும் உள்ளடக்கியது என்பதை என் உளமாறவே சொல்வேன்.
லஷ்மி கண்ணன் என்னும் இயற்பெயருடைய பெண் எழுத்தாளர் ஆரம்பத்திலிருந்து இறுதி வரையில் பெண்ணியத்தைத் தூக்கியும் பிடிக்காமல் ஆண்களை வெறுங்குற்றங்களினால் கொல்லாமல் எடுத்துச்செல்லும் இக்கதைசமநிலையால் எழுதப்பெற்றதே.
ரிட்ரீல் என்னும் மைசூரில் உள்ள பெரிய வீட்டில் அம்மா வழி தாத்தாவுடன் ஆரம்பிக்கும் கதை , அவரின் மறைவுக்குப் பின் அவரின் சொத்து மாமாவுக்குச் செல்வதில் ஆகட்டும், திருமணமான பின் டி.டி.எச்.(D.T.H) என்னும் சிறியஹவுசிங் போர்ட்டு வீட்டில் கணவர் சங்கருடன் வாழ்வதில் ஆகட்டும், தோழி ரமாவின் கணவர் துரையின் ஸ்வாரஸ்யமற்ற வாழ்வியல் முறையிலாகட்டும் பிற்காலத்தில் ரமாவுக்கும் தாமோதரனுக்கும் முறை தவறிய உறவுகளில் ஆகட்டும், ஆசையாக வளர்த்த மகன் அரவிந்த் மருத்துவக் கல்வி முடிக்கும் முன்பே கிரிஜாலை மனந்து அந்தச் சிறிய ஹவுசிங் போர்டில் குடித்தனம் செய்யும் காட்சிகளை ஓர் கவிதைப் போல எடுத்துச் செல்கிறார் என்றால் அது மிகையில்லை.
கதையின் காலக்கட்டம் 1980 களில் டில்லியில் நடக்கிறது. அன்றொரு நாளில் டில்லிகளின் ரம்யமானகாலைப் பொழுதையில் நகர்த்திக் கதையில் கருசிறுதும் களங்கம் மாறாமல் பெண்களின் ஆதர்சனமான இந்திராகாந்தியின் சிறப்பையும் அவரின் அகால மரணம் அதையொட்டிய வன்முறைவெடிப்பு அதன் மூலம் மாலைப்பத்திரிக்ககைளின் விலையேற்றம் பின்னர்ச் சிதம்பர வருகை எனக் கதை பிரயாணத்தை ரம்யமாக நகர்த்துகிறார், பதினெட்டாம்அட்சக்கோட்டில் காந்தி இறந்த தருவாயில் கதையின் மாந்தர் அழுவதாக இருந்த எழுத்தை விட இது ஒரு படி மேல் என்று எண்ணியது. கதையின் பிற்பகுதியில் மகன் அரவிந்திற்குக் கிரிஜாலை பெண்பார்க்கும் செல்லுமிடத்தில் பெண்ணின் பெற்றோர்களிடத்தில் நடக்கும் சம்பாஷனையில் இந்தியாவில் தோற்றமளிக்கும் இரண்டாங் கெட்டபுதுப் பணக்காரணின் அநாகரிக மேற்கத்திய கலாச்சாரக் கூத்தையும் விவரிக்கும் இடத்தில் இவர் ஏன் தமிழில் ஓர் நாவலுடன் நிறுத்தி விட்டார் என்பது இயல்பாகவே தோன்றும்
இதுவே நான் பார்க்கும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை.
கடைசியாகத் தரிசனம். இக்கதையின் கரு பெண்களுக்குச் சொத்து மறுத்தலை பற்றியது. காலங்காலமாகப் பெற்றோரின் சொத்து பிள்ளைகளுக்கே என்னும் தாத்பரியத்தை, “1956 இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துறைசெக்ஷன் 16” பெண் வயிற்று பெண்ணுக்கும் வீட்டின் சொத்தில் பங்குண்டு என்று இருந்த போதிலும்; ஸ்திரி தானம் கொடுக்கப் பட்டதால் இனி குடும்பச் சொத்தில் சம உரிமையில்லை என்னும் கருவைக் கொண்டு செல்லும் கதை. காயத்ரியின் வழிநெடு கச்செல்லும் ஓர் பெரிய ரீட்ரிடில் ஆரம்பித்துச் சிறிய டி.டி.எச்சில் தவழ்ந்து அன்றொரு நாளில் மருமகளான கிரிஜாவின் வாயிலிருந்து இந்த டி.டி.எச் உங்களுக்குத் தானே அரவிந்த சொந்தம் என்னும் காதில் வீழும் சொற்களைக் காயத்ரி கேட்டும் பொழுது பெண்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வுகள் இந்நாட்டில் களையப்படும் வரை இக்கதையின் தரிசனம் உயிரோட்டம் உள்ளதாகவே என்னுள் எண்ணம்.
இதே காலக்கட்டத்தில் கிருத்திகாவின் புகை நடுவில் மற்றும் ராஜம் கிருஷ்ணனின் பாதையில் பதிந்த அடிகள் வாசிக்க நேர்ந்தது.முன்னவரின் நடையில் நீண்ட உரையாடல்களும் பின்னவரின் அபுனைவில் பள்ளி புத்தகத்தைபோன்ற புனைவும் தாக்கமில்லாத எழுத்து.
காவேரியின் இந்தக் கதைக்கு முன்னுரையும் பின்னுறையும் யாருமே எழுதவில்லை , இணையத்தில் எங்குத் தேடினும் விமர்சனக் கட்டுரைதென்பட வில்லை. ஆசிரியர் டில்லியில் வாழ்கிறார், அவரைப் பற்றிய செய்திகளும் வெகு குறைவு. உங்களை வாசிப்பவர்களில் யாரேனும் ஒருவர் அவரது நண்பராக இருக்கக் கூடும், அந்தவொருவர் மூலம் காவேரிக்கு எனது பணிவான வணக்கங்கள் சேரட்டும். தாங்கள் இக்கதையை வாசித்ததுண்டா ?
தேநீர் அல்லது ஆங்கிலத்தின் The Red Tea, இரண்டு கதைகளின் ஆதார சுருதியும் சுரண்டல் பற்றியதே.
வெள்ளையனின் இந்திய வரவில் இருந்த சுரண்டல், மலைவனங்களை அழித்துக் காபி, தேயிலை நட்டு நடக்கும் இயற்கை சுரண்டல், வர்க்க ரீதியான மனிதரிதியில் நடக்கும் மனித உழைப்பு சுரண்டல், அதிகார ஆணாதிக்கத்தைபபன்படுத்தி நடக்கும் கற்பு சுரண்டல் இது தான் இக் கதைகளின் சுருதி.
ஆங்கிலத்தில் வெளி வந்த The Red Tea முதற்பதிப்புக் காலம் 1969, அதனுடைய தமிழ் மொழிப் பெயர்ப்பு எரியும் பனிக்காடு 2007.
திரு டி.செல்வராஜின் தேநீர் முதற்பதிப்பு வந்த காலம் 1976, The Red Tea புத்தகத்திற்கும் தேநீருக்கும் இடைப்பட்டது 6-7 வருடம். இரண்டு புத்தகத்திற்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள், ஆசிரியர் எவ்விடத்திலும் புத்தகத்திற்கும் உண்டான பாதிப்பை பற்றி மூச்சு விடவில்லை! ஒரு வேளை ஒரே சிந்தனை இருவருக்குத் தோன்றுவது போல் ஒரே கரு இரு எழுத்தாளருக்கும் தோன்றியிருக்குமோ!? இருப்பினும் தலைப்பு ஒரு விதமாக அமைந்து இருப்பது தழுவலை மறைத்தவிதமாகவே இருப்பது என் மனதின் தோன்றிய நிதர்சனம். என் மனதில் தோன்றிய இவ்வெண்ணம் பொய்யாகக் கூட இருக்கலாம், அதில் சிறிதேனும் உண்மை இருப்பின் அது எழுத்துச் சுரண்டல் ஆகி விடாதா? தெரிந்தவர்கள் விளக்கினால் மனதில் தோன்றிய இச்சலனம் மறையும்.
கடிதத்தை நிறைவு செய்கிறேன்.
லங்கேஷ்