கருத்தியல், கருணை, பெண்மை

1

கருத்தியலில் இருந்து விடுதலை

ஜெ,

பின் தொடரும் நிழலின் குரல் குறித்த சுகதேவிற்கான கடிதத்தை வாசித்தேன். அருணாசலம் எண்ணிப் பார்க்கும் புரட்சி மட்டும் பெண்களாலானதாக இருந்தால் என்ற கருத்தை அவ்வப்போது எண்ணிக் கொள்வேன். பொதுவாக கோட்பாட்டாளர்களால் உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு  நீங்கள் ரசனை விமர்சனம் சார்ந்தவர், ஆழ் படிமங்களைப் பயன்படுத்தி பாஃஸிசத்தை விதைக்கிறீர்கள் என்பது. பின் தொடரும் நிழலின் குரலே இந்த நோக்கில்தான் வாசிக்கப்பட்டது என நினைக்கிறேன். நீங்கள் மரபை / பெண்ணை

புனிதப்படுத்தி [கலாச்சார கருத்தாக்க உற்பத்தி ] புரட்சியை மலினப்படுத்தி விட்டீர்கள் என்று. பெண்ணைப் புனிதப் படுத்துவதன் வழியாக அடிமைப்படுத்தும் கருதுகோள்களை [ஆணாதிக்கக் கருத்தாக்க உற்பத்தி] விதைக்கிறீர்கள் என பெண்ணியவாதிகள் உங்களை வாசிப்பதில்லை.

நவீன நிறுத்தற் கலையின் []installation] முன்னோடியான, விளாடிமீர் டட்லின் ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு ஒரு சிற்பத்திற்கு முன் வரைவை உருவாக்கினார். தோழர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் மூன்றாம் உலகத்திற்கான சின்னம். ட்ஸார்களின் நினைவுச் சின்னங்களை எல்லாம் தகர்த்து விட்டு புதிதாகக் கட்டி எழுப்பப்படும் ஒன்று அவற்றைப் போல மனிதர்களாலான சின்னமாக இருக்கக் கூடாது என்பதால் அரூபமாக வடிவமைக்கப்பட்டது. தோழர்களின் உத்வேகம் போல, வானை நோக்கிய முஷ்டி போல எனவும் சொல்லலாம், ஆனால் பின் வந்த பெண்ணியர்கள் அதற்கு வேறு ஒப்புமைகளும் தந்தனர். 1300 அடிகளில் உயர்ந்து நிற்கும் அது கம்யூனிஸ தலைமையகமாகவும் இருக்கும். உச்சியில் வானொலி நிலையம். உலகிற்கான அறிவிப்பு அங்கிருந்து நிகழும். தாவினால் வானில் ஏறி விடலாம்.

அது நிறைவேறவே இல்லை என்பது மட்டுமில்லாமல், டட்லின் உருவாக்கிய அதன் மாதிரியே கூட எஞ்சவில்லை, புகைப்படங்களில் தவிர. 1979 – ல் MOMA – வில் அதன் புகைப்படத்தைக் கொண்டு ஒன்றை கட்டி வைத்திருக்கின்றனர் வரலாற்று சின்னமாக.

அன்றைய கலைப் போக்கான உருவவாதத்தின் [formalism] அழகியலான அரூப [abstract] பாதிப்பில் அமைந்திருந்தது அந்த நினைவு சின்னம். அதற்கு பிறகும் முப்பது வருடங்களாக அலையடித்த கலைப் போக்குகளான குறைத்தல்வாதமும் [minimalism], கருத்தாக்கக் கலையும் [conceptual art] “தத்துவ – கோட்பாட்டு வாதங்களைப்” பேசிக் கொண்டிருந்தன. இவையெல்லாம் உச்சத்தில் இருந்த போது கலையுலகில் பெண் கலைஞர்கள்  கடுமையான புறக்கணிப்புக்குள்ளாயினர். அவர்கள் எண்பதுகளில் இவற்றுக்கெதிராக புதிய அழகியலை உருவாக்கிய போது, அது உடல் சார்ந்ததாகவும், மண் சார்ந்ததாகவும் [earthly] இருந்தது. இந்தப் போக்குகளே இன்றைய கலையை அதீதமாக தத்துவார்த்தப்படுத்துவதை விடுத்து அன்றாட வாழ்க்கையோடு இணைப்பதை நோக்கிக் கொண்டு வந்தது, ஆண் கலைஞர்கள் உட்பட அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகவும் ஆயிற்று. இன்றைய கலை மண்ணில் நின்று பேசுவதாகவும், அதீத தாவல்களற்று இருப்பதற்கும் இந்த இரண்டாம் மற்றும் மூன்றம் அலைப் பெண்ணிய கலைஞர்களின் பங்களிப்பே காரணம்.

unnamed

அவர்களில் இருவர் டட்லினின் இந்த சின்னத்தை மறு உருவாக்கம் செய்திருக்கின்றனர், லூயி பூர்ஷ்வாவும் [louise bourgeois], ட்றேஸி எமினும் [tracey emin]. இவர்களில் பூர்ஷ்வா நீங்கள் குறிப்பிட்ட கௌரியம்மா போன்ற ஒரு ஆளுமை. அவரின் சிற்பத்தில் சுழன்று சுழன்று செல்லும் படிகளின் உச்சத்தில் இருப்பது கீழ் நோக்கிய ஆடிகளே, அந்த ஆடிகளும் distortion mirrors என்பதால் அவ்வளவு உயரத்தில் ஏறி ஒருவர் அடைவது வெவ்வேறாக சிதைக்கப்பட்ட தன் சித்திரத்தையே. நீங்கள் அதை துல்லியமாக் சொல்லியிருக்கிறீர்கள், “அது பிறரைக் குற்றம்சாட்டவில்லை, நாம் அனைவரும் நம்மை நாமே நோக்கிக் களையவேண்டிய ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறது.” என்று.

ட்றேஸி எமினின் சிற்பத்தில் மேலே ஏறிச் செல்பவர்களுக்கு காத்திருப்பது ஒரு கூண்டு. அதன் தலைப்பு சுய சித்திரம். டட்லினின் சின்னம் தோழர்களோடு சேர்ந்து உருவாக்கப்போகும் மூன்றாம் “உலக” சிற்பம். எவ்வளவு பெரிய தலைகீழாக்கம்?

உண்மையில் இது வெறும் பெண்ணிய நோக்கு என்று சுருக்கப்படக் கூடிய விஷயம் அல்ல. மொத்த பின் நவீனத்துவமுமே பெண்ணியத் தன்மை கொண்டதுதானே. நவீனத்துவத்தின் ஆண் மையப் போக்கே மனிதனை உலகை திருத்தவும் வெல்லவுமான சாகசக்காரனாகவும் புரட்சியாளனாகவும் கற்பித்தது. அது கடலும் கிழவனும் சாண்டியகோவாகட்டும், மோபி டிக்கின் இஸ்மயீல் ஆகட்டும். மீண்டு வரும் போது எலும்புக் கூடுடன் மட்டுமே வர நேர்கிறது, எத்தனைப் பெரிய புரட்சியாக ஆனாலும் கூட.

தனிப்பட்ட முறையில் கலையில் என் பேசுபொருள் இவர்களிருவரிடமிருந்தும் முற்றிலும் வேறுபடுவது. எனினும் என் தந்தையர் செய்த தவறுகளுக்காக அன்னைகளும், மகள்களும் செய்யும் எதிர்வினையாக இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பிண்ணனியில் ‘மாமலர்’ எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு பெரும் மல்லன் “பூவைத்” தேடி செல்கிறான், திமிங்கிலத்தை அல்ல. மனைவிக்காக, சாகசத்திற்காக அல்ல. பீமனின் பயணம், புகாரினும், அருணாசலமும் செய்யும் பயணமும் கூட.  பீமனின் கண்டடைதல் கே.கே. எம் கண்டடைந்ததும் கூட. இந்த ஒரு வாசிப்பிற்காகவே கூட மாமலர் பூர்ஷ்வாவின், ட்றேஸியின் படைப்பை  விட மேலானது. வரலாற்றில், அது ஒரு மகனின் கண்டடைதலும் கூட என்பதால்.

2

மாமலரும், பின் தொடரும் நிழலின் குரலும் ஒன்றின் இரு வேறு பக்கங்கள். பெண்ணியவாதிகளின் படைப்புகளை விடவும் அவர்களின் சிக்கல்களை ஆழமாக பேசியவை. வேறு யாராலும் இல்லையெனினும் கூட, பெண்ணியவாதிகளால் கொண்டாடப்பட்டிருக்கப்பட வேண்டியவை. துரதிருஷ்டவசமாக, இங்கே படைப்பை அணுகுவதில் காழ்ப்புகளும், தனி மனித விமர்சனங்களும், கருத்தியல் / அரசியல் உள்ளடிகளுமே முதன்மையாக இருக்கிறது. தமிழில் எளிதில் எடுபடக் கூடியதும் அதுவே எனும் போது கடுமையான உழைப்பைக் கோரும் வாசிப்புகளை யாரும் விரும்புவதில்லை. ஆனால், இந்த குறுகிய அரசியல் வாசிப்புகள் அனைத்தும் தற்காலிகமானவையே. கலை வரலாற்றில் நிகழ்ந்து கொண்டே இருக்கும் ஒன்று உண்டு, அது முன்னோடிக் கலைஞர்கள் புரிந்து கொள்ளப்படுவது அவர்களின் அடுத்தடுத்த தலைமுறை கலைஞர்கள் உருவாகி வரும்போதுதான். ஒரிரு தலைமுறைகளில் அவர்களுக்கு உலகளாவிய கலை, தத்துவப் போக்குகள் அறிமுகமாகவும் ஆகியிருக்கும். அதோடு அவர்கள் முன்முடிவுகளை விடுத்து, சட்டையைக் கழற்றி விட்டு ஆற்றில் குதிக்கும் சிறுவர்களைப் போல குதிக்கிறவர்கள். அவர்கள்தான் படைப்பின் ஆழத்தை அடைகிறார்கள். ஆனால் இன்றும் கூட, இங்கிருக்கும் கோட்பாட்டாளர்களை விடவும், பெண்ணியவாதிகளை விடவும், பூர்ஷ்வாவும், ட்றேஸியும் பின் தொடரும் நிழலின் குரலையும், மாமலரையும் புரிந்து கொள்ளக் கூடும்.

ஏ.வி.மணிகண்டன்

ஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்
விலகும் திரையும் வற்றும் நதிகளும்- ஏ.வி.மணிகண்டன்
இசையின் கவிதை- ஏ.வி.மணிகண்டன்
கலைக்கோபாடுகள் எதற்கு? -ஏ.வி.மணிகண்டன்
புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன் [தொடர்ச்சி]
புகைப்படம் கலையா? -ஏ.வி.மணிகண்டன்
ஆடும் ஊஞ்சலும் அந்தரத்தில் நிற்கும் கணங்களும் – ஏ.வி.மணிகண்டன்
கிருஷ்ண தரிசனம்
அசோகமித்திரனின் ‘இன்று’
முந்தைய கட்டுரைகலை இலக்கியம் எதற்காக?
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 79