சமணர் கழுவேற்றம் – சைவத்தின் மனநிலை

samanar

அன்புள்ள ஜெ

சமணர் கழுவேற்றம் பற்றி ஆய்வாளர் செங்குட்டுவன் அவர்கள் எழுதியசமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல் நூலை நேற்றுத்தான் வாசித்து முடித்தேன். அதைப்பற்றி இணையத்தில் தேடியபோது 2009 ல் நீங்கள் எழுதிய பழைய கட்டுரையைச் சென்றடைந்தேன். அதில் செங்குட்டுவன் அவர்களின் ஆய்வுமுடிவுகளை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கிறீர்கள்.

செங்குட்டுவன் அவர்கள் நீங்கள் கூறியதுபோலவே சமணநூல்களையும் வரலாற்றுப் பதிவுகளையும் ஆராய்ந்து சமண மடத்தின் தலைவரையும் விரிவாகப் பேட்டி எடுத்திருக்கிறார். நீங்கள் முன்னர் இத்தரப்பைக் கூறியபோது அதை சற்று அவநம்பிக்கையுடன் பார்த்தவன் நான். இப்போது இந்த நூல் எனக்கு மிக உறுதியான ஓர் ஆய்வுத்தரப்பாகத் தோன்றுகிறது. உங்கள் ஆய்வுநோக்குக்கும் சமநிலைகொண்ட வரலாற்றுப்பார்வைக்கும் நன்றி

எஸ்.சரவணக்குமார்

kazuvetram

அன்புள்ள சரவணக்குமார்,

சென்ற நூறாண்டுகளாகவே தமிழ் அறிவுப்புலத்தில் மிக அழுத்தமாக பலராலும் முன்வைக்கப்படும் ஒரு தரப்பு இந்தச் சமணர்கழுவேற்றம். முன்னர் அது சைவப்பற்றாளர்களின் சிறு வட்டத்திற்குள் மட்டுமே புழங்கியது.நூறாண்டுகளாகவே இது பொது அறிவுப்புலத்தில் பேசப்படுகிறது.

சென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கே ஒரு சைவ மறுமலர்ச்சி உருவானது. சைவநூல்கள் அச்சில் வந்தன. சைவ மூலநூல்களுக்கு நவீனஉரைகள் எழுதப்பட்டன. சைவ சித்தாந்தம் பற்றி நவீனமொழியில் பேருரைகள் ஆற்றும் அறிஞர்கள் உருவாகி வந்தனர். சைவப்பிரகாச சபைகள் தமிழகமெங்கும் உருவாயின.

பதினெட்டாம்நூற்றாண்டு ‘மதமறுமலர்ச்சி’கள் அனைத்துக்கும் ஒரு பொது அம்சம் உண்டு. அவை அனைத்துமே செமிட்டிக் மதங்களின் பாணியில் தொன்மையான மதங்களை உடைத்து வார்க்கும் நோக்கம் கொண்டவை. அந்தப் போக்கையே மதச்சீர்திருத்தம் என அவை குறிப்பிட்டன. சாதகமாகவும் பாதகமாகவும் விளைவுகளை உருவாக்கியது இந்த மனநிலை.

சாதகமான அம்சம் என்றால் மதத்தில் இருந்த தேக்கநிலையை இவை உடைத்தன. வெற்றுச்சடங்குகளை அகற்றின. சாதிய ஒடுக்குமுறை, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை எதிர்த்து மதங்களை நவீன ஜனநாயக யுகத்திற்கு உரியவையாக ஆக்கின. மதத்தை அதன் சம்பிரதாயமான அமைப்புகளுக்கு வெளியே நின்று ஆராய்வதற்கான அறிவுப்புலத்தை உருவாக்கின.

எதிர்மறை அம்சம் என்பது மதத்தை பண்பாட்டு அரசியல் நோக்கித் தள்ளியதுதான். உருவாகி வந்துகொண்டிருந்த ஜனநாயகத்தின் அடிப்படையில் மத அரசியல் நிலைகொள்ள்ள வழிவகுத்தது இது. இந்தியா இலங்கை தாய்லாந்து கம்போடியா என அனைத்து ஆசியநாடுகளிலும் இன்று அரசியலை மதமே தீர்மானிக்கிறது.

குறிப்பாக கிறிஸ்தவ மதத்தின் செல்வாக்கு இந்த மதச்சீர்திருத்தவாதிகளில் மிக மிக அதிகம். அதற்குக் காரணம் ஆசியாவின் தொல்மதங்களை ‘மறுகண்டுபிடிப்பு’ செய்தவர்கள் ஐரோப்பியர், அமெரிக்கர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்களோ கிறிஸ்தவ உளக்கட்டுமானம் கொண்டவர்களோ ஆவர்.

ஐரோப்பிய மரபிலிருந்து எழுந்த ஆய்வாளர்களிடம் இரண்டு அடிப்படைச் சிறப்புகள் இருந்தன. ஒன்று நெடுங்காலமாக கிறித்தவ இறையியல் ஆய்வுகளின் ஒருபகுதியாக தொல்நூல்களை சேகரிக்கவும் மீட்கவும் ஒப்புநோக்கவும் பேணவும் அவர்கள் பயின்றுவந்தனர். அதன் விளைவாக அதற்கு ஒரு சிறந்த முறைமையை அவர்கள் காலப்போக்கில் உருவாக்கிக் கொண்டிருந்தனர். பாடபேதம் நோக்குதல், நூலைக் கால அடையாளப்படுத்துதல் போன்றவற்றில் அவர்கள் நிபுணர்கள்.

இன்னொன்று, காலனியாதிக்கத்தின் விளைவாக அவர்களால் உலகமெங்கும் பரவமுடிந்தது. ஆகவே உலகமெங்கிலும் இருந்து ஒரு மதத்தின் நூல்களை அவர்களால் திரட்டவும் ஒப்பிட்டுப் பயிலவும் முடிந்தது. அதற்கான இணைப்புமொழிகளாக ஆங்கிலம், பிரெஞ்சு முதலியவை அமைந்தன. பௌத்த மதத்தை ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, பர்மா, கம்போடியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிலிருந்து அவர்கள் தொகுத்தார்கள்.

இந்தச் சிறப்பியல்புகளால் இந்துமதத்தின் பிரிவுகளையும் அவர்களே முறையான ஆய்வுக்கு உட்படுத்தினர். அவற்றின் தொல்நூல்களைச் சேகரித்து பிரதிஆய்வுசெய்து தொகுத்து வெளியிட்டனர். அவ்வாறு அவர்களால் முன்னோடி முயற்சிகள் செய்யப்பட்டபின்னரே நம்மவர்களில் ஆங்கிலக்கல்வி அடைந்தவர்கள் அவர்களை அடியொற்றி மதங்களை நவீன நோக்குடன் அணுகத்தலைப்பட்டனர்.

Samanar_Kazhuvetram_9789386737243_KZK_-_W__28733_std

தொன்மையான நூல்கள் ,தத்துவங்கள் மற்றும் கலைகளைப் பற்றிய ஆய்வுகளும் மீட்புமுயற்சிகளும் அவ்வாறு இந்தியா உள்ளிட்ட கீழை நாடுகளில் விசைகொண்டன. நவீன மதச்சீர்திருத்த இயக்கங்கள் அதன் விளைவாக உருவானவை. ஆகவே அவை அனைத்திலுமே முன்னோடி ஆய்வாளர்களான ஐரோப்பியரின் அடிப்படை மனநிலை உள்ளடங்கியிருந்தது.

அந்த மனநிலையின் உள்ளடக்கத்தை தோராயமாக இப்படி வகுத்துக்கொள்வேன். ஒன்று ’தன்’ மதத்தின் அடையாளத்தை கறாராகத் தொகுத்து வகுத்துக்கொள்ளுதல். தங்கள் அடையாளத்தை வகுத்துக்கொள்ளும்போது பிறர் என்பதையும் வகுத்தாகவேண்டியிருக்கிறது. நட்பு – பகை என்னும் பிரிவினை உருவாகிவருகிறது.

இந்து ,பௌத்த, சமண மதங்களின் இயல்பென்னவென்றால் தத்துவ அடிப்படையில் அவை பிளவுபட்டு விரிந்து வளரும்தன்மை கொண்டிருக்கும். ஆனால்  அவை அனைத்துமே வலுவான மையத்தரிசனத்தை கொண்டு அடிப்படையில் ஒன்றாகவும் இருக்கும். அவற்றுக்குள் தத்துவமோதலும் தரிசன ஒருமையும் இருந்துகொண்டிருக்கும்

ஆனால் ஐரோப்பிய ஆய்வாளர்களை ஒட்டி  ’தான்’ என்னும் வரையறையை திட்டவட்டமாக, இறுதியாக உருவாக்கிக் கொள்ளும்போது ’பிறனை’யும் அதேபோல வகுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. அந்த அறுதிவரையறையை மறுக்கும் மையத்தரிசனத்தை நிராகரிக்கவேண்டியிருக்கிறது. நாங்கள் நாங்கள் மட்டுமே பிற எவரும் அல்ல என்னும் தீவிரம் உருவாகி வருகிறது

பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் ஆசியாவெங்கும் உருவாகிவந்த மதமீட்பு இயக்கங்கள் அனைத்திலும் இந்த அம்சம் உண்டு. இது ஒரு பொது அவதானிப்புதான். ஆய்வாளர்களே இத்திசையில் மேலே செல்லமுடியும்

இலங்கையில் அநகாரிக தம்மபால உருவாக்கிய ’செயல்படும் பௌத்தம்’ ஓர் உதாரணம். அதன் ‘செயலூக்கம்கொண்ட’ தன்மை தான்  -பிறன் என்ற அடிப்படையில் அமைந்தது. ஆகவே வெறுப்பு அதன் உள்ளடக்கமாக இருந்தது. ஏதோ ஒருகட்டத்தில் அது அரசியல்கோட்பாடாக மாறியது. அரசியல்வாதிகளால் அதிகாரக்கருவியாக வளர்த்தெடுக்கப்பட்டது.

சைவத்தின் மீட்பிலும் ஐரோப்பிய அறிஞர்களின் பங்களிப்பே அடிப்படையானது. அவர்களிலிருந்து தொடங்கிய சைவ மறுமலர்ச்சி எதுசைவம், எது சைவம் அல்ல என்ற வரையறையையே தன் முதன்மைப்பணியாகக் கொண்டிருந்தது. மிகவிரைவில் எதிரிகளைக் கண்டடைந்தது.

அதன் எதிரிகள் ஒவ்வொரு நாளும் பெருகினர். முதலில் சமணர், பௌத்தர் இருவரையும் பழைய பன்னிரண்டாம்நூற்றாண்டு நூல்களில் இருந்து கண்டடைந்தனர். விரைவிலேயே வடவர், சம்ஸ்கிருதம், பிராமணர் என விரிந்து இறுதியில் இந்துமதமே சைவத்துக்கு எதிரி என வரையறைசெய்யப்படும் நிலைக்கு வந்துள்ளது இன்று

அதே சமயம் சைவசித்தாந்தம் என்னும் தத்துவதரிசனம்   உலகளாவிய தத்துவங்களுடன் , நவீனச் சிந்தனைகளுடன் உரையாடவைக்கப்பட்டு சற்றேனும் மேம்படுத்தப்பட்டிருக்கின்றதா, ஒரு வரியேனும் தத்துவவிவாதத் தளத்தில் அசலாக முன்னகர்ந்திருக்கிறதா என்றால் இல்லை. முழுமையான பின்னடைவை மட்டுமே நம்மால் இன்று காணமுடியும்

இன்றைய சைவ அறிஞர்கள் இருவகை. ஒன்று மேடைப்பேச்சாளர்கள். பெரும்பாலும் மேலோட்டமானவர்கள். கதைகள் சொல்வார்கள், எளிய அடிப்படைகளை விளக்குவார்கள். இன்னொருவகையின நூல் ஆய்வாளர்கள். வெறுமே நூல் ஒப்பீடுகள்,பிழைதிருத்தங்கள்மட்டுமே செய்யக்கூடியவர்கள். இந்நூற்றாண்டில் அசலான சைவதத்துவச் சிந்தனையாளர் என ஒருவர் இல்லை. ஒரு மாபெரும் சிந்தனை மரபுக்கு இது எவ்வளவுபெரிய வீழ்ச்சி

இந்த வெறுமையிலேயே சமணர்கழுவேற்றம் பற்றிய கருத்துக்கள் வளர்ச்சிபெறுகின்றன. சமணர்களை சைவர்கள் கழுவேற்றினர் என்ற செய்தியால் உண்மையில் கூசித் துடிக்கவேண்டியவர்கள் சைவர்கள். அவர்களின் மதத்தின் அடிப்படையே அது அசைக்கிறது. ஆனால் அவர்கள்தான் அதை கொண்டாடி மேடைமேடையாகப் பேசிப் பரப்பினார்கள்.

அதன்பின்னர் சைவர்களுக்கும் நாத்திகர்களுக்கும் இடையே சம்ஸ்கிருத எதிர்ப்பு, பிராமணவெறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இருந்த தற்காலிக குலாவல் இல்லாமலானதும் சமணர்கழுவேற்றத்தை நாத்திகர்கள் சைவமதத்தின் குரூரம், பொதுவாகவே இந்துமதத்தின் இரக்கமற்றதன்மை ஆகியவற்றுக்கு ஆதாரமாகச் சொல்லத் தொடங்கினர்

எந்த ஆதாரமும் இல்லாத இந்த ஒற்றைச் செய்தியைக்கொண்டு இந்துமதம் பௌத்த, சமண மதத்தை கொலைகளின் வழியாகவே அழித்தது என்று எத்தனை நூறு பக்கங்கள் எழுதப்பட்டுள்ளது, எத்தனை அறிஞர்களால் மேற்கோளாக்கப்பட்டுள்ளது என்று பார்த்தால் நெஞ்சடைக்கும்.  மத்தியஆசியாவிலும் ஐரோப்பாவிலும் நடந்த மாபெரும் மதப்போர்களை விட கொடூரமான போர்களை இங்கே கற்பனையால் உருவாக்கினர் இங்குள்ள நாத்திகர் மற்றும் முற்போக்கினர்.

அப்போதுகூட இங்குள்ள சைவர்களில் பெரும்பாலானவர்கள் ’கழுவேற்றினோம்ல!” என மகிழ்ந்துகொண்டுதான் இருந்தனர். அதற்கு ஆதாரமே இல்லை என்று நான் எழுதியபோது சண்டைக்கு வந்தவர்கள் பெரும்பாலும் சைவர்கள், இந்துக்கள். ஆதாரம் இல்லை என ஆணித்தரமாகச் சொன்னவர்கள் சமணர்கள்.

இந்தநூலே அடிப்படையில் திராவிட இயக்கம் சார்ந்த நோக்குள்ள ஒருவரால் எழுதப்பட்டது. இதை சைவர்கள் அல்லவா எழுதியிருக்கவேண்டும்? இந்நூல் நூறாண்டுகளுக்கு முன்னரே வந்திருக்கவேண்டும் அல்லவா? எத்தனை ஆதாரத்துடன் எழுதினாலும் காழ்ப்பரசியல் செய்பவர்கள் ஓயமாட்டார்கள். ஆனால் உண்மையான தேடல்கொண்டவர்களுக்கு அவசியமானதல்லவா இந்த ஆய்வு?

திரு கோ.செங்குட்டுவன் வணக்கத்திற்குரியவர்.

ஜெ

 http://discoverybookpalace.com/products.php?product=சமணர்-கழுவேற்றம்%3A-ஒரு-வரலாற்றுத்-தேடல் கோ செங்குட்டுவன்

சமணர் கழுவேற்றம் பி ஏ கிருஷ்ணன்
முந்தைய கட்டுரைசமணர் கழுவேற்றம் ஒரு கட்டுரை
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 78