கடலூர் சீனு
எங்களுக்கும் ஓர் ஆறுண்டு
ஆற்றுக்கோர் ஊருண்டு
ஊருக்கோர் சனமுண்டு
வாழ்வைப்போல் ஒன்றுண்டு…
இளங்கோ கிருஷ்ணன்
சீ. முத்துசாமி குறுநாவல் ஒன்றினில் ஒரு பாட்டா வருகிறார். சயாம் ரயில்பாதை பணியில் வேலை பார்த்து, குற்றுயிராய்க் கிடந்தது பிழைத்து வந்தவர். இன்று இளையவர்களுக்கு அவர் சொல்லும் கதைகளில் ஒன்று, அவர் நேதாஜியை பார்த்தது.
நேதாஜி ரயிலில் போகும் போது பார்க்கிறார். கம்பீரமாக இருக்கிறார். லட்சியவாதத்தின், கனவின் முகம். இதை விவரிக்கும் பாட்டா, அந்த ரயில் பாதை பணியில் புழுக்கள் போலும் செத்து விழ, வரலாறும் புறக்கணித்த எளிய மனிதர்களில் ஒருவர். வரலாறும் புறக்கணித்த, மலேஷிய ரப்பர் தோட்ட பின்புல வாழ்வில் எளியவர்களின் பாடுகளை, இலக்கியப் புனைவு எனும் இணை வரலாற்றில் நிலைநிறுத்தும் பணியே சீ.மு அவர்களின் புனைவு நோக்கம் எனலாம்.
சீ.மு உருவாக்கிக் காட்டும் புனைவுலகில் நுழைய சரியான வாசல் என அவரது அம்மாவின் கொடிக்கயிரும் எனது காளிங்க நர்த்தனமும் என்ற பதினான்கு கதைகள் அடங்கிய சிறுகதை தொகுதியை கொள்ளலாம். இந்த வாழ்வு சார்ந்து அவர் கவனம் குவிக்கும் புள்ளிகள் அனைத்தயும் பிரதிநித்துவம் செய்யும் தொகுதி இது. முறையற்ற உறவுகளால், நோய்மையால், மனப்பிறழ்வால் கைவிடப்பட்ட மனிதர்கள், தனிமை கொண்டு மரணத்துக்காக காத்திருக்கும் முதியவர்கள், இந்த வாழ்க்கைப்பொறிக்குள் விடுபட வகையறியாமல் மாட்டிக்கொண்ட பெண்கள் என இவர்களைப் போன்றோரை மையம் கொண்ட கதைகள்.
தனிமை, முதுமை தூக்கமின்மை கிளர்த்தும் மன நெருக்கடிகள், இவற்றுடன் ஒரு அதிகாலை நடை செல்லும் முதியவரின் நினைவுகளாய் விரியும் வழித்துணை இத் தொகுதியின் அழகிய கதைகளில் ஒன்று. மிக்க ஆசுவாசம் அளிக்கும் ஒன்றாக வர்ணிக்கப்படும் அதிகாலை சித்திரத்தைத் தொடர்ந்து, அந்த அதிகாலை ஏன் அத்தனை ஆசுவாசம் அளிக்கிறது என்பதின் பின்னுள்ள துயரார்ந்த முதுமையின் தனிமையின் இரவு வாழ்வு விவரிக்கப்படுகிறது. முதியவரின் பால்யம் துவங்கி, முதுமையின் இந்த நாள் வரை நீளும் அவரது வாழ்வு நிகழ்வுகள் குறித்த அக சித்திரம் ஒரு இழையில், முதியவரின் பால்யம் துவங்கி இன்று வரை அவர் நின்றிருக்கும் நிலம் கொண்ட மாறுதல்களின் புற சித்திரம் ஒரு இழை என இரு இழைகளும் ஊடும் பாவுமாக பின்னி விரியும் கதையுலகில், தோட்ட தொழிலாளர் கட்டிட காவலாளி துவங்கி, கோவில் பூசாரிகள் வரை பல்வேறு மனிதர்கள் அவர்களின் தனித்த குணபேதத்துடன் உலவுகிறார்கள். நாய்களும் பறவைகளும் உலவும் உலகு. விழுந்து பிளந்து கிடக்கும் விளாம்பழங்கள், அறுக்கப்பட்டு பாளம் பாளமாக வெட்டி எடுக்கப்படும் பன்றிக் கறி என முழுமைக்கு அருகே செல்லும் உலகு. கதையென விரிந்து பெருகும் நினைவுப் பெருக்கு, இதே போன்றதொரு அதிகாலையில் நிகழ்ந்த நண்பனின் மரண நினைவில் வந்து அறுந்து நிற்கிறது. நினைவுகளை மீட்டியபடி நடக்கும் முதியவரை கடந்து போகிறான், இதே போன்ற வாழ்க்கை பாடுகள் கொண்ட, பேப்பர் போடும் இளைஞன் ரகு. யாரறிவார் அந்த ரகு ஒருக்கால் அவனது முதுமையில் இதே போல இங்கு நிற்க கூடும். நினைவுகள் மட்டுமே வழித்துணை என்றான முதுமையில் இந்தப் பயணம் எங்கு முடியும்? எதிர்பார்த்த மருந்தாகவோ, எதிர்பாரா விபத்தாகவோ நிகழும் மரணத்தில்தான்.
வாரணம் ஆயிரம் சூழ எனத் துவங்கும் பாசுரம் துவங்கி தனது மணநாள் குறித்த கனவு காணும் பெண்களின் சித்திரம் தமிழிலக்கிய வரலாறு நெடுகிலும் அறுபடாது தொடரும் சித்திரம். கருகல் கதையின் நாயகியும் தனது மணநாள் குறித்து கனவு காண்பவள்தான். அவளது தாயும் கனவு காண்பவள்தான் ஆனால் அவை ஒருபோதும் சகிக்க இயலா துர்கனவுகள். சாமிகளின் மந்திரித்த கயிருகளுக்கு கூட கட்டுப்படாத கனவுகள். பெண்ணின் கனவுகள் எல்லாம் அவளது மணநாளில் அவளது கம்பீர கணவனுக்கு இணையான, கம்பீரமான மணப்பந்தல், வீட்டிலேயே திருமணம். அவள் கனவு கண்ட நாள் வருகிறது. அவளுக்கு மணம் பேசுகிறார்கள். அந்த நாளில் அவளது கனவு கலைகிறது. அழகிய கனவிலிருந்து குரூர யதார்த்தத்தில் வந்து விழுகிறாள். வாழ்வு அவளை அந்த யதார்த்தத்தில் விட்டு வைக்குமா? அல்லது அவளது தாய் போல, கொடுங்கனவுகள் கொண்ட இரவுக்குள் தள்ளுமா?
தூண்டில் மீன்கள் கதையின் கதைசொல்லி பலவருடங்கள் கழித்து கோலம் மாறி நிற்கும் சுங்கைப் பட்டானி வந்து இறங்குகிறான், அவனது நினைவுகளாக விரியும் இக் கதையில் அவனது அப்பா, மீன் கறி மீது அவருக்கு உள்ள காதல், மீன் பிடித்து தரும் தோழன் ரகு, மழை நாள் ஒன்றினில் மீன் பிடிக்க சென்று நிகழும் ரகுவின் மரணம், இவற்றுக்கு இடையே அவர்களின் பதின் பருவத்தை சீண்டும் ஒரு பெண் வருகிறாள். இன்றும் அவள் இருக்கும் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மாறாமல் ஒன்றிலேயே தேங்கி நிற்கும் வாழ்வின் துயர் குறித்த தனித்துவமான கதை.
இந்த தொகுப்பின், சித்தரிப்பு வகைமை வழியே, ஆக அழகிய கதை வழித்துணை கதை என்றால், ஆக குரூரமான கதை கல்லறை சிறுகதை. குறிப்பாக இக்கதையில் நிகழும் இரண்டு தருணங்கள். அவன் இருளில் படியேறி வருகிறான். காலில் முற்றிலும் உடல் விதிர்க்கும் வண்ணம், வித்தியாசமான ஏதோ மிதிபடுகிறது. வெளிச்சம் வந்து பார்க்க, பிறந்து சில மணிநேரத்தில் செத்த [அல்லது கொல்லப்பட்ட ] குழந்தை ஒன்றின் பிணம். அடுத்து அவன் பூனை ஒன்றினை கொல்லும் சித்திரம். மெல்ல மெல்ல மனப்பிறழ்வின் இருளுக்குள் விழும் பெண் ஒருவளின் சூழல் மீதான, மனம் விதிர்க்கச்செய்யும் கதை.
எப்போதோ படித்த கிரேக்க புராணக்கதையில், வானின் அதிபதி ஓரொனஸ், பூமியின் அதிபதி கயா எனும் பெண். இருவரும் கணவன் மனைவி. இருவருக்குள்ளும் ஏதோ பிணக்கு, கயா தனது க்ரோனோஸ் என்ற மகனைக்கொண்டு [இவன் இந்த இருவருக்கும் பிறந்தவன்] தனது கணவனின் ஜனன உறுப்பை கொய்து விடுகிறாள். இக்கதை அவ்வப்போது என் நினைவில் கிடந்தது உழலும், முதல் கனல் நாவலின் சிகண்டி கூட தாயின் கோபம் பொருட்டு தந்தையை கொல்லப் புறப்பட்டவன் தானே? அப்பா அம்மா இருவருக்கும் இடையே நிகழும் பிணக்கில், இருவருக்கும் பிறந்த மகன் யார் பக்கம் நிற்பான்? கதைகளில் இத்தகு தருணங்கள் வரும்போதெல்லாம் மனம் அந்த கிரேக்க புராணக் கதையில் சென்று முட்டும். இந்த தருணத்தில் நிலைபெறும் கதைதான், தொகுதியில் உள்ள வெளி சிறுகதை. கதைசொல்லி அம்மாவை இழந்தவன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தொடர் பிணக்கு. தற்கொலையோ, நோயோ, கொண்டு அம்மா இறந்து போகிறாள். தனிமையில் முதுமையில் இந்த மகனின் துணையில் வாழும் அப்பா. அந்த அப்பாவை மகன் எப்படி நடத்துகிறான்? வாசக ஊகத்துக்கு விடப்பட்ட கதை.
அம்மா வந்தாள் கதையில் ஊகத்துக்கே இடமின்றி நேரடியாகவே சொல்லப்படுகிறது. இதே சூழல்தான். தனது நண்பன் கணேசனை பார்க்க கதை சொல்லி கணேசனின் வீட்டுக்கு போகிறான். அங்கே கணேசன் இல்லை. மூன்று குழந்தைகளுடன் கணேசனின் மனைவி தனித்துக் கிடக்கிறாள். ரப்பர் காட்டு வேலை போய், அவளது கணவன் இப்போது பேக்டரி வேலையில் கிடந்தது அல்லாடுகிறான், அங்கே ஒருவள் பழக்கமாக, தனது மனைவியை கைவிடுகிறான். சொல்லி அழுகிறாள் அந்தப் பெண். அப்படியே கதைசொல்லியின் அம்மா கடந்து வந்த அதே நிலை. கதை சொல்லியின் அம்மாவுக்கு தனது கணவன் மேல் அப்படி ஒரு கோபம். ஆனால் மகனான இந்த கதை சொல்லி, அப்பாவை பார்க்க போகும் வழியில் தான் நண்பனின் வீட்டுக்கே வருகிறான், அம்மாவின் அதே துயர் கணேசனின் மனைவி வடிவில், அன்றைய தனது அதே நிலை, கிடந்தது உறங்கிக்கிகொண்டிருக்கும் கணேசனின் பிள்ளைகள் வடிவில்.
மலை உச்சி பங்களா சிறுகதையும், இரைகள் சிறுகதையும் அந்த ரப்பர் காட்டில், எப்படியாவது இந்த வாழ்வின், இந்த நாளைக் கடத்திவிட்டால் போதும் என வாழும், எளிய பெண்கள் மீது கவியும் அதிகாரத்தின் பாலியல் வன்முறை தருணத்தை பரிசீலிக்கிறது. மலை உச்சி பங்களா கதையின் அப்பா, முதலைகள் மிதக்கும் ஆற்றோரம் கைவிடப்பட்ட வீட்டிலிருந்து, இன்று பறவைகள் வளர்க்கும் அழகிய வீட்டுக்கு மாறும் வாழ்க்கைப்பாதை வழியில் எதை எதையோ மானம் மரியாதை மனைவியின் ஒழுக்கம் உள்ளிட்ட அத்தனையும் இழக்க வேண்டி வருகிறது. இரைகள் கதையின் லட்சுமிக்கு அனைத்து பாதைகளும் அடைக்கப்படுகிறது. வயலில் எலி பிடிப்போர். அந்த எலி புழங்கும் அத்தனை பாதைகளையும் அடைத்து விட்டு, பொறியில் சென்று முடியும் பாதையை மட்டுமே திறந்து வைப்பார்கள். அப்படி லட்சுமிக்கு திறந்து விடப்படும் ஒரே பாதை, ரப்பர் தோட்ட முதலாளியின் படுக்கையறை.
தொகுதியை வாசித்து முடிக்கையில் இளங்கோ கிருஷ்ணனின் வரிகள் நினைவில் எழுந்தது. இந்தத் தொகுதியில் மனிதர்களுக்கு வாழ்க்கை விழிதுலங்கும் இருளிலிருந்து விழிகளற்ற இருளுக்கு நகர்வதாக இருக்கிறது. பால்யத் துயரிலிருந்து, முதுமைத் துயருக்கு நகர்வதாக இருக்கிறது. இந்த மனிதர்கள் வாழவில்லை. வாழ்க்கை போன்ற ஒன்று அவர்களுக்கு லபிக்கிறது. காலத்தின் முன் என சுந்தரராமசாமியின் நோக்கில், இதுவும் ஒன்று என்ற ரீதியில் எதையும் சொல்லி கடந்து செல்லும் வகையில் அசோகமித்திரன் அளிக்கும் ஊமை வலி எனும் உணர்விலும், சீ.மு வே சொல்வது போல, சா கந்தசாமியின் கதையிலிருந்து கதையை வெளியேற்றிய வடிவிலும் உருவாகிவரும் கதையுலகம் இந்த தொகுதியுடையது.
//“இன்றைய எனது படைப்புலகம் என்பது, புனைவுக்குள் ஆங்காங்கே கலையின் தெறிப்புகளைக் கொண்டு வரும் சிறு முயற்சிகளே. இச்சிறு முயற்சியிலும், கவனச் சிதறல் தவிர்க்க இயலாமல் போய், சில வேளைகளில், படைப்பின் முழுமைக்குத் தேவையான பிற உறுப்புகள் முடமாகும் விபத்தும் நேர்ந்து விடுகிறது,” //
என்று தனது புனைவுத்திறன் சார்ந்து, மண்புழுக்கள் நாவலின் முன்னுரையில் சீ. முத்துசாமி தனது அவதானிப்பை முன்வைக்கிறார். எனில் அவரது புனைவுத்திறனின் எல்லைகள் குறித்து அவரை நோக்கி கணிசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் என யூகிக்க முடிகிறது. தி.ஜானகிராமன் இறுதிநாள் குறித்து ஒரு கதை கேள்விப்பட்டு இருக்கிறேன். திஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிகிச்சை தினம் ஒன்றனில் அவரை சுற்றி யாரும் இல்லை. உயிர் வதை. தொடர்புறுத்த, குரல் கொண்டு அழைக்க இயலவில்லை, அவரை கடந்து செல்லும் செவிலி ஒருவரை அவர் சைகை செய்து அழைக்கிறார். சைகை என்ன குறைபாட்டுடன் வெளிப்பட்டதோ தெரியவில்லை செவிலி கடும் கோபத்துடன் அவ்விடம் விட்டு நீங்குகிறார். திஜா உயிர் பிரிந்த பின்பே அந்த செவிலி அறிகிறார், அந்த சைகை உயிர் வேதனை மீட்க எழுப்பிய சைகை என. இந்த செவிலியின் நிலையில்தான் இத்தகு விமர்சனங்கள் நிற்கிறது. இத்தகு இடர்கள் கடந்து சீ.மு கதைகளில் இலங்கும் வாழ்வின் உணமையின் தீவிரம் வாசகனை தீண்டும் வல்லமை கொண்டது.
//தமிழில் நாவல் எழுதும் கலை மிகவும் தீவிரம் அடைந்திருக்கிறது. ஒரு கதாநாயகன்/கதாநாயகியின் வாழ்வுக் கதையை முதன்மைப் படுத்தி அதன் சுவாரஸ்யங்களை வாசகனுக்குத் தரும் முறை இப்போது வெகுஜன இலக்கியத்தின் ஒரு அம்சமாக ஒதுக்கப்பட்டுவிட்டது.
தீவிர நாவல்கள் ஒரு புதிய வாசகருக்காக எழுதப்படுகின்றன. அவர் அறிவார்ந்த வாசகர். நொறுங்கு தீனி போலச் சத்தில்லாத வெறுங் கதைகள் அவருக்குப் பிடிப்பதில்லை. வெகுஜன இலக்கியத்தில் தனக்குக் கிடைக்கும் இந்த நொறுங்கு தீனி வகைகளில் சலிப்படைந்து தன் அறிவைப் பிழியும் படைப்புக்காக அவர் தீவிர இலக்கியத்தை நாடி வந்தவர். தன் நேரத்தை முதலீடு செய்யும் எந்தக் காரியத்திலும் தன் அறிவையும் சிந்தனைப் போக்கையும் செறிவு படுத்தும் விஷயங்களை அவர் நாடி நிற்கிறார்.
சீ.மு.வின் “மண்புழுக்கள்” நாவலை இந்த வகை தீவிர இலக்கியத்தில் தாராளமாகச் சேர்க்கலாம்.//
மண்புழுக்கள் நாவலுக்கான மதிப்புரையில் ரெ கார்த்திகேசு இவ்வாறு எழுதுகிறார். இதுபோலவே இன்னும் பல குறிப்புகள் வழியே அங்கு மலேஷிய தமிழ் இலக்கிய சூழலில் சீ.மு வை அணுக,உள்வாங்கி செரிக்க நிகழ்ந்த உரையாடல்கள் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. இங்கே க நா சு காலத்தில், எந்த வெகுஜன வாசிப்புக்கு எதிராக நின்று எது தீவிர வாசிப்பு, எது தீவிர இலக்கியத்தின் தன்மை என அவர் பேசினாரோ,அதே நிலை. எனில் நவீன இலக்கியம் கைக்கொண்ட தனித்துவமான தருணங்கள், உணர்ச்சிகளின் செறிவு, குறிப்புணர்த்துதல், மொழி நுட்பம் இவற்றை முதன் முதலாக கைக்கொண்ட வகையில் சீ.முத்துசாமி மலேஷிய நவீன தமிழ் இலக்கிய வரலாற்றின் முன்னோடி என்றாகிறார்.
உரையாடல் ஒன்றின் தொடர்ச்சியாக பூமியில் எரிகல் மோதி உருவான ஏரிகள் குறித்த ஆவணப்படங்களை தேடிப்பார்த்துக் கொண்டிருந்தேன். அது குறித்து நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நண்பர் அத்தகு ஏரி ஒன்று குறித்து, அதில் நிகழும் பன்மை உயிர்ப்பெருக்கம் குறித்து அங்கே நிகழும் ஆய்வுகள் குறித்து பேசினார். அந்த எரிகல் ஏரி பல்லாண்டுகாலம் உயிரின் எந்த சுவடும் இன்றி இருந்திருக்கிறது. உயிர் தரிக்கும் வண்ணம் சிறு அழுக்கும் இல்லாத ஏரி அது. தூய்மையில் புல்லிய சிறு மாசு உயிர் பிறக்க வகை செய்கிறது. இன்று அந்த ஏரியின் நீர் வாழ்வனவற்றின் வகைமைகள் ஆச்சர்யம் அளிக்கும் பாரதூரம் கொண்டது. புலியின் வகைமை ஒன்று, மானின் வகைமை ஒன்று, எலியின் வகைமை ஒன்று, யானையின் வகைமை ஒன்று. இத்தனை பன்மையும் முளைத்துப் பெருகி நிற்க காரணம், தன்னைத் தான் பெருக்கிக்கொண்ட ஒரே ஒரு ஆதி உயிர்.
மலேஷிய இலக்கியத்தில், இலக்கியப் பிரக்ஞை எனும் முதல் உயிர் சீ.முத்துசாமி அவர்களுக்கு வணக்கங்கள்.
***