அன்புள்ள ஆசானுக்கு,
நலம் தானே ? .
இந்த ஆண்டின் கடைசி புனைவாக ” பின் தொடரும் நிழலின் குரல்” நூலை வாசித்து முடித்தேன் . போன வருடம் காந்தியம் பற்றி உங்கள் கட்டுரைகளை படித்து காந்தி குறித்தும் காந்தியவாதம் குறித்தும் தெரிந்து கொண்டேன்.இந்த வருடம் கம்யூனிசத்தின் கட்டுமானத்தை இந்த நூல் வழியாக தெரிந்து கொள்ள முடிந்தது.
என்னால் அதை சீராக வாசிக்க முடியவில்லை. பல இடங்களில் அதை நிறுத்தி நிறுத்தி படித்து ஒரு வழியாக முடித்தேன். பல அத்யாயங்கள் ஆழமான விவாதங்கள் கொண்டது . அருணாசலம் ,கதிர் ,ராமசாமி இவர்கள் இடையில் நடக்கும் விவாதம் எல்லாம் நான் இரண்டு முறை படித்தால் தான் ஓர் அளவு எனக்கு பொருள் கொள்ளமுடியும் வகையில் மிக ஆழமான விவாதங்கள்.
இதில் வரும் விவாதங்கள் குறித்து பலர் எழுதி இருக்க கூடும். எனக்கு இந்த புத்தகம் அளித்த ஒரு பார்வையை முன் வைக்கிறேன். இதில் தவறுகள் இருப்பின் மனிக்கவும்.
கட்சியால் துரத்தப்பட்டு, தேரோகி என்று பட்டம் சூட்டப்பட்டு ஒரு சங்களி தொடராக புகாரின் ,வீரபத்ரபிள்ளை, அருணாசலம் இருக்கிறார்கள் . இதில் வீரபத்ரபிள்ளை மட்டும் தான் நிலைக்கொள்ளாமல் இறக்கிறார், புகாரினுக்கும் சரி அருணாசலத்திற்கும் சரி பெண் என்ற துணையால் காக்கபடுக்கிறார்கள்.
புகாரின் இறந்த பின் அன்னாவால் அவர் நிறைவுருகிறார் ,அருணாசலம் நாகம்மையால் மீட்கப்படுகிறான்.ஏன் பெண் தான் ஆண்களுக்கு மீட்பராக என்றும் அமைய வேண்டுமா என்ன?. ஆம் இது தான் உண்மை அவளால் மட்டும் தான் அமைய முடியும்.தன் தாய்மையால், அவள் இந்த உலகை காக்கிறாள் , தன் பாலமுதால் இந்த உலக தாகத்தை தீர்க்கிறாள்,தன் கருப்பையால் இந்த உலகை படைக்கிறாள். அந்த தாய்மையால் மட்டுமே நம் பாவத்தை எல்லாம் மன்னிக்க முடியும்.இந்த உலக உயிர்களை அவள் தான் தன் கருனை என்னும் கொடையால் காக்கிறாள். அன்பு ,பாசம்,கருனை இதை எங்கும் அவள் வெளிக்காட்ட தயங்குவதில்லை ஆனால் ஆண்களால் அது முடியாது.
உலக வரலாற்றில் சர்வாதிகாரிகள்,கொடுங்கோள் ஆட்சியாளர்கள் அனைவரும் ஆண்கள் தான் , பெண்களால் அது முடியாது இது அவர்கள் பலவினமானவர்கள் என்று சொல்லக்கூடும் ஆனால் அவர்கள் இந்த உலகத்தில் அன்பை மட்டுமே செலுத்துபவர்களாக இருக்கிறார்கள் “தூய அன்பை” மட்டுமே.
அவளின் உலகத்தில் அன்பு மட்டுமே நிரம்பி இருக்கிறது. அன்பின் வடிவாகவே அவள் எங்கும் கூற படுகிறாள். அது புகாரினுக்கு அன்னாவாக ,அருணாசலத்திற்கு நாகம்மையாக , ரஸ்கோல்நிகாப்க்கு சோனியாவாக அவர்களின் அன்பு தான் அவர்களை மீட்ட கருவி. அந்த பெண்மையை அந்த தாய்மையை எங்கு நாம் நிராகரிக்கரோமோ அங்கு தான் சர்வ நாசமும் நிகழ்கிறது. சோவியத் யூனியனில் நடந்தது இது தான்.
நாவலில் ஒரு வரி “தலஸ்தேயின் தேவதைகள் பெண்களாகின்றனர் ,தஸ்தவேவ்ஸ்கியின் பெண்கள் தேவதைகளாகின்றனர்” மிக சரியான உவமை . தேவதைகள் எங்கும் அன்பை தான் பரப்பி சொல்ல கூடியவர்கள்.ஆண்கள் இடமும் எங்கு தாய்மை குணம் மேல் ஓங்கி வருகிறதோ அவர்களும் அன்பின் வடிவாக அமைவார்கள். காந்தியும் ஏசுவும் அந்த தாய்மை குணம் கொண்டவர்களே. அவர்களால் இந்த உலகத்திடம் அன்பை மட்டுமே தர முடிந்தது .
நாவலை முடிக்கும் போது “அசோகவனம்” என்ற அடுத்த நாவலை தொடங்கிவிட்டதாக கூறி இருந்தீர்கள். அசோகவனம் என்ற சொல் சீதையை தான் நினைக்க வைக்கிறது. அசோகவனத்தில் அவள் அடைந்த துன்பம் ,வேதனை ,மேற்கொண்ட அக்கினிபரிச்சை எல்லாம் அன்னாவுடன் தான் என்னை ஒப்புமை படுத்த வைக்கிறது. அன்னாவும் நாடு கடத்தப்பட்டு ,சைபீரிய சிறைகளில் வாழ்ந்து தன் கணவனின் இறுதி தேர்வையும் வெல்கிறாள், என்ன அன்னா ஐம்பது வருடம் இத்துன்பத்தை அனுபவிக்கிறாள் சீதையை விட அதிகமாக.
அன்பும் , அறமும் தான் இந்த உலகத்தை வெல்லும் கருவி அதை தாய்மையும்,பெண்மையும் தான் நிகழ்த்தி கொண்டு இருக்கிறது இதுவே இந்நூலில் நான் கண்டடைந்தது .
பா.சுகதேவ் ,
மேட்டூர்.
அன்புள்ள சுகதேவ்,
அது வெறும் கோட்பாடு அல்ல. சிந்தித்து அளிக்கப்பட்ட உலகுய்யும் வழிமுறையும் அல்ல. நடைமுறையில் இருந்து பெறப்பட்ட ஒன்று. அன்னா லாரினா புகாரினினா 1988ல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்ஸிய லெனினிய ஆய்வுமையத்தில் ஆற்றிய உரை குறித்த உணர்ச்சிகரமான ஒரு கட்டுரையை ஓ.வி.விஜயன் மலையாளத்தில் எழுதியிருந்தார். அதையொட்டி பல கட்டுரைகளை அன்று வாசித்தேன். அது அளித்த உணர்வெழுச்சியிலிருந்தே அந்த நாவலுக்கான மையம் என்னுள் திரண்டது என்று சொல்லலாம்.
பத்தாண்டுகளுக்குப்பின் அதை நாவலாக எழுதும்போது மேலும் மேலும் பலருடைய வாழ்க்கைகள் என்மேல் வந்து மோதின. இடதுசாரி இயக்கங்களின் நாயகர்கள் பலர் சென்றடைந்த தனிமை. அதை வெல்ல அவர்கள் ஏற்றுக்கொண்ட அடையாளங்கள். குறிப்பாக நாயகியாக நான் வழிபட்ட கே.ஆர்.கௌரியம்மா.இடதுசாரி இயக்கத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த இம்முன்னோடிகள் அனைவர்மீதும் எண்ணிப்பார்க்கமுடியாத அவதூறுகள் இறைக்கப்பட்டுள்ளனஅவற்றினூடாக, பெரும்பாலும் உண்மைநிகழ்வுகளினூடாக, நான் சென்றடைந்ததே அந்நாவல்.
அந்நாவலில் எழுதப்பட்ட பல மீண்டும் தொடர்ந்த காலங்களில் நிகழ்ந்தன. உதாரணம் டபிள்யூ.ஆர்.வரதராஜனின் தற்கொலை. நாவலில் “தோழர், நீங்கள் அவதூறுக்குத்தானே பயப்படுகிறீர்கள்?” என்று ராமசுந்தரத்திடம் வீரபத்ரபிள்ளை கேட்கிறார். அந்த வரியை நானே உணர்ச்சிகரமாக உணர்ந்துகொண்ட தருணம் அது.
பலராலும் சொல்லப்படுவதுபோல அது கம்யூனிசத்திற்கு எதிரான நாவல் அல்ல. நவீன உலகுக்கு கம்யூனிசத்தின் பங்களிப்பு , வருங்காலத்தில் அதன் இலட்சியவாதத்திற்கு இருக்கும் இடம் ஆகியவற்றைப்பற்றி மிக ஆணித்தரமாகவே அந்நாவல் பேசுகிறது – ஒருவேளை இங்கே எந்த மார்க்சியரும் அந்த அளவு கூர்மையாக அவற்றை முன்வைத்ததில்லை. அது முன்வைப்பது கருத்தியல், அது எதுவாக இருப்பினும், மனிதனின் வாழ்க்கைநோக்கை எப்படிச் சிறுத்துப்போகச் செய்கிறது ,எப்படி வெறுப்பை மட்டுமே உற்பத்திசெய்கிறது என்பதைப்பற்றி மட்டுமே.
அந்நாவல் வெளியானபோது இடதுசாரி அரசியலைவிட வெறியுடன் பேசப்பட்டுக்கொண்டிருந்தது, நியாயப்படுத்தப்பட்டது ஈழப்போராட்டம் சார்ந்து நிகழ்ந்த வன்முறை. இன்று நோக்கும்போது அதற்கும் போல்ஷவிக் வன்முறைக்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதைக் காணலாம். ஜெயகாந்தன் அதை அழுத்தமாக, சோவியத் ருஷ்யாவுடன் ஒப்பிட்டே. ஒரு பேருரையை பத்மநாபா புலிகளால் கொல்லப்பட்டதை ஒட்டி நிகழ்ந்த அஞ்சலிக்கூட்டதில் பேசியிருக்கிறார். அதன் ஒலிவடிவம் கிடைக்கிறது.
கருத்தியல் பீடிப்புக்கு ஆளானவர்கள் ஒரு பேரெதிரியை எப்போதும் கற்பனை செய்துகொள்வார்கள். உலகம் அழிவைநோக்கிச் செல்ல அதுவே காரணம் என அனைத்து தர்க்கங்களைக்கொண்டும் வாதிடுவார்கள். தங்களுக்கு ஒவ்வாத அனைவரையும் [ பெரும்பாலும் அவர்களைச்சூழ்ந்திருக்கும் மிகச்சிறிய ஒருகுழு தவிர மானுடர் அனைவருமே அவர்களுக்கு ஒவ்வாதவர்களாகவே இருப்பார்கள்] அந்த பேரெதிரியின் தரப்பு என முத்திரை குத்தி வசைபாடுவார்கள். வாய்ப்பிருந்தால் கொன்று குவிப்பார்கள்.
அவர்கள் தங்கள் அன்றாட வெறுப்புமிழ்தலை நியாயப்படுத்தவே அந்த பேரெதிரியைக் கற்பனைசெய்கிறார்கள். அது ஏகாதிபத்தியமாக இருக்கலாம், ஃபாசிசமாக இருக்கலாம், இஸ்லாமியத் தீவிரவாதமாக இருக்கலாம், இந்து அடிப்படைவாதமாக இருக்கலாம். அந்த எதிரியிடமிருந்து ‘மக்களை’ காக்கும்பொருட்டே தாங்கள் வெறுப்பைக் கக்குவதாக சொல்வார்கள். ஆனால் அவர்களால் அவர்களுடன் அதேமொழியில் நின்று பேசும் சிலரை தவிர பிற அனைவரையும் வெறுக்காமலிருக்கமுடியாது. அந்தச்சிலரும் அதிகபட்சம் ஓரிரு ஆண்டுகளே அவர்களால் அவ்வாறு விரும்பப்படுவார்கள்.
இந்தக்கோணத்தில் இங்கே கூச்சலிட்டுக்கொண்டிருப்பவர்களைக் கவனியுங்கள். பின் தொடரும் நிழலின் குரல் என்றும் வாழும் மானுடத்தீமை ஒன்றை நோக்கிப்பேசுகிறது என்பது புரியும். அது முன்வைப்பது வரலாறெங்கும் இருந்துவரும் ஒரு இருட்டைப் பற்றி. அது பிறரைக் குற்றம்சாட்டவில்லை, நாம் அனைவரும் நம்மைநாமே நோக்கிக் களையவேண்டிய ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறது. அருணாச்சலம் ஒரு சடங்கினூடாகச் செய்வது அதைத்தான்.
கம்யூனிசம் மட்டுமல்ல எந்த கருத்தியலும், மதமும் மனிதனில் ஆழமான சிதைவையே உருவாக்குகிறது. வெறுப்பின் மொழியிலன்றி மானுடனை பார்க்கமுடியாதவர்களாக ஆக்குகிறது. கருத்தியல்களிலிருந்து விடுதலைபெறாது ஆன்மிகம் எவருக்கும் சாத்தியமில்லை. பின் தொடரும் நிழலின் குரல் அந்தக் கண்டடைவை நோக்கிச் செல்லும் ஆக்கம் என நான் நினைக்கிறேன்.
ஜெ
========================================================
வன்முறையின் கருத்தியல் பற்றி ஜெயகாந்தன்
https://www.youtube.com/watch?v=LUZIY-OkgmA&feature=share
========================================================