அன்புள்ள ஆசானுக்கு,
நலம் தானே?
நானும் மஹேஸ்வரியும் தங்களது வாசகர்கள் என்பது குழந்தைகள் அறிந்ததே. அவ்வப்போது சில சிறுகதைகளையும், வெண்முரசின் பகுதிகளையும் கதைகளாகக் கூறுவதுண்டு. குறிப்பாக எட்டு வயது ஸ்ரீராமுக்கு சாகசக் கதைகளும், விலங்குகள் நடமாடும் கதைகள் மீதும் மேலதிக ஆர்வமுண்டு. தமிழ் எழுதவும் படிக்கவும் இங்குள்ள ஒரு தமிழ் பள்ளி மூலம் கற்றுக்கொள்ளத் துவங்கி இருக்கிறான். கதைகளை நாங்களே வாய் மொழியாகக் கூறுவதிலிருந்து அடுத்த படி நிலையாய் வாசித்தால் என்ன என்று தோன்றியது. எழுத்து மொழியின் சவால்கள் பழக சில நாட்களாயின. மகேஷ் பனி மனிதனிலிருந்து துவங்கினாள். நாங்கள் கதைகளாய் கூறும்போது விடுபடும் நுட்பங்களும் காட்சிகளும் படிக்கும் பொது அவனுள் விரிவதைக் காண முடிகிறது. பல இடங்களில் அவனுடைய கேள்விகளுக்காக நிறுத்த வேண்டியிருந்தாலும், பாட திட்டத்திற்கு வெளியேயான வாசிப்பை பள்ளிகள் ஊக்குவிப்பதால் அதிக சவால்களின்றி தொடர முடிகிறது. குறிப்பாக இங்கு ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் வாசிப்பதென்பது ஒரு இயக்கம் அளவிற்கு ஊக்குவிக்கப்படுகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளின் வகுப்பறைக்குச் சென்று வாசிப்பதும், விளையாட்டு அணிகளின் நட்சத்திரங்கள் பள்ளிகளுக்கு சென்று வாசிப்பதும், பிரபலங்கள் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாசிப்பதும் எப்போதும் காணக்கிடைப்பது.
சமீபத்தில் யானை டாக்டர் சிறுகதையை மகேஷ் அவனுக்காய் வாசித்தாள். இரண்டு பத்திகளுக்குள்ளாக கதைக்குள் சென்றிருந்தான். அனைத்தும் அவனுள் காட்சியாய் மாறுவதை எங்களால் உணர முடிந்தது. சிலவற்றைப் படமாய் வரைந்தான். இதை வழக்கமாய் பள்ளிக்காக எழுதும் புத்தக அறிக்கையாய் எழுதட்டுமா என்றான்.தங்களுக்கு வாசகர்கள் அனுப்பும் கடிதங்கள் பற்றி சொல்லி இருந்தோம். புருவம் சுருங்க யோசித்து நானும் கடிதம் எழுதலாமா என்றான். முகம் லேசாய் ஒளி மங்க ஆங்கிலத்தில் எழுதினால் பரவாயில்லையா என்று கேட்டான். ஓரிரு கடிதங்களை காட்டிய பிறகு எழுதத் துவங்கினான். இத்துடன் அவன் கடிதத்தையும் படங்களையும் இணைத்துள்ளேன். ஒருநாள் அவனாகவே வெண்முரசு நாவல்களைப் படிப்பதாகவும் உங்களுக்கு தமிழில் கடிதம் எழுதப்போவதாகவும் சொல்லியிருக்கிறான். இப்போது அவனது ஆதர்ச சாகச நாயகர்களின் வரிசையில் டாக்டர் கேயும் இணைந்திருக்கிறார்.
அன்புடன்,
பழனி ஜோதி
நியூ ஜெர்சி
அன்புள்ள பழனி
ஸ்ரீராம் எழுதிய விமர்சனக்குறிப்பை வாசித்தேன். அவனுக்கு என் அன்பு முத்தங்கள். சிறுவயதிலேயே சொந்தமாக ஒரு கருத்தை எழுதும்படிப் பயிற்றுவிக்கும் கல்விமுறையை எண்ணி மீண்டும் வியக்கிறேன். நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? ஊருக்கு வந்தபோது சந்திக்கமுடியாமல் போய்விட்டது. அருண்மொழிதான் சந்தித்தைப்பற்றி சொல்லிக்கொண்டே இருந்தாள்
ஜெ