எட்டு : குருதிவிதை – 10
சகுனி கிழக்குக் கோட்டையை அடைந்தபோது அங்கே பல்லக்கு நிற்பதை கண்டார். புரவியை இழுத்து விரைவழிந்து பல்லக்கை நோக்கியபடி சென்றார். அது விதுரரின் பல்லக்கு என்று அணுகிய பின்னர்தான் தெரிந்தது. குதிரையை நிறுத்திவிட்டு இறங்கி அணுகிவந்த ஏவலனிடம் கடிவாளத்தை அளித்தார். “அமைச்சரா?” என்றார். “ஆம், மேலே காவல்மாடத்தில் நின்றிருக்கிறார்” என்றான் ஏவலன்.
சகுனி குறுகிய படிகளில் ஏறி கோட்டைக்கு மேலே சென்றார். சுவரோடு ஒட்டியபடி நின்றிருந்த வீரர்கள் தலைவணங்கினர். அவர் காவல்மாடத்தை அணுகியபோது அங்கே ஆடை பறக்க நின்றிருந்த விதுரரை கண்டார். அருகே சென்று நின்றார். அவர் வருவதை விதுரர் முன்னரே உணர்ந்திருந்தார். திரும்பாமலேயே “துயில்கொள்ள முடியவில்லை…” என்றார். “இந்த இடம்தான் கனவில் வருகிறது. இங்கேயே வந்து சற்றுநேரம் நின்றால் துயில்கொள்ளமுடியும் எனத் தோன்றியது.”
சகுனி “எனக்கு மேற்குவாயில் கனவில் வருகிறது. அங்கு செல்ல அஞ்சி இங்கு வந்தேன்” என்றார். மெல்ல சிரித்தபடி “ஒருவேளை தெற்குவாயிலில் மருகன் இருக்கக்கூடும்” என்றார். விதுரர் நகைத்து “வடக்குவாயிலில் மூத்தவர்” என்றபின் “அரண்மனையில் இன்று நன்கு துயில்பவர் கணிகராக மட்டும்தான் இருக்கமுடியும்” என்றார். சகுனி ஒன்றும் சொல்லவில்லை.
விதுரர் பேச்சை மாற்ற விரும்பி “துவாரகையிலிருந்து என் மைந்தனின் செய்தி வந்தது. இளைய யாதவர் நேராக உபப்பிலாவ்யத்திற்கு செல்கிறார். அவர் மைந்தன் சாம்பன் துவாரகையின் நகர்ப்பொறுப்பை எடுக்கிறான்” என்றார். சகுனி தலையசைத்தார். “அது அவனுக்கொரு நல்வாய்ப்பு. ஆனால் அதை அவனால் பயன்படுத்திக்கொள்ள முடியாது. அவனுடன் காளிந்தியின் மைந்தன் சுருதன் இருக்கிறான். அவன் நன்னெஞ்சு கொண்டவன் அல்ல.” சகுனி அதற்கும் தலையசைத்தார்.
“நான் சற்றுமுன்புவரை சுருதையை எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார். “அவள் என்னிடம் எதிலும் ஈடுபடாமல் செயலாற்றும்படி சொன்னாள். இந்நகரோ குடியோ என்னால் தாங்கப்படவில்லை, இதன் ஒரு பகுதியே நான் என்றாள். அதுவே மெய். ஆனால் மெய்யை ஏற்றொழுகுவது மிகக் கடினம். அவளைப்போன்ற பெண்களால் மட்டுமே அது இயலும்” என்றார். சகுனி “ஆம், விழைவற்றவர்கள்” என்றார். “அல்ல, விழைவை ஆணவமாக பெருக்கிக்கொள்ளாதவர்கள்” என்றார்.
“அவளை எண்ணும்போதெல்லாம் என் அன்னையின் நினைப்பும் வரும்” என்று விதுரர் தொடர்ந்தார். “அன்னையும் அவளும் இரண்டாகப் பகுக்கப்பட்ட ஒன்று என சற்றுமுன் எண்ணினேன். ஏனென்று தெரியவில்லை. என் அன்னை சிவையைப் பற்றி அறிந்திருப்பீர்கள்.” சகுனி “ஆம், என் தங்கைவடிவாக” என்றார். விதுரர் சற்று கலைந்து பின்பு “ஆம்” என்றார். “அன்னையை என்னால் அறியமுடியவில்லை என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளாகின்றன. சுருதையும் நெடுநாட்களுக்குமுன் மறைந்துவிட்டாள். இருவரும் கணமொழியாமல் என்னுடன் இருந்துகொண்டிருக்கிறார்கள்” என்றார்.
“இங்கு நின்றால் எழுவதெல்லாம் பெண்டிரின் நினைவுகளே” என விதுரர் தொடர்ந்தார். “சத்யவதி அன்னை. சில தருணங்களில் மிக அண்மையில் என அவருடைய சிரிப்பை என்னால் காணமுடியும். அன்னையர் அம்பிகையும் அம்பாலிகையும். அவர்களெல்லாம் வெறும் நினைவுகளும் கதைகளுமாக மாறிவிட்டிருக்கின்றனர் இங்கே. ஆனால் அவர்கள் இங்கே கொண்டுவந்து நாட்டியவை கண்ணுக்குத் தெரியாமல் வேரும் கிளையும் விழுதுமாகச் செறிந்து படர்ந்து நிறைந்துள்ளன.”
விதுரர் தொடர்ந்து பேச விழைந்தார். பேச்சின் சொற்களுக்குள் ஒளிகிறார் என சகுனி எண்ணிக்கொண்டார். “அம்பை அன்னை. அவர் விழிகளைக்கூட நான் நினைவுகூர்கிறேன். ஆனால் அவர்களை நான் பார்த்ததே இல்லை. படித்துறையில் அழியா வஞ்சமென அவர்கள் குடிகொள்கிறார்கள்.” விதுரர் சிரித்து “இங்கே இப்படி அவர்களின் நினைவுகள் சூழ நின்றிருக்கையில் நான் மிக எளியவனாக, ஏதும் செய்ய இயலாதவனாக உணர்கிறேன். அந்நினைப்புபோல என்னை ஆறுதல்படுத்துவது ஏதுமில்லை. நான் தனியன், என்னால் அறியமுடியாத பெருக்குகளால் அள்ளிச்செல்லப்படுபவன். அச்சொற்களை முன்னேகிய அன்னையரிடம் நான் சொன்னால் போதுமானது. அவர்களுக்குப் புரியும். அவர்களும் அத்தகைய சொற்களையே வைத்திருப்பார்கள்” என்றார்.
பின்னர் இருவரும் சொல்லின்றி நின்றிருந்தனர். சூழ இரவு மெல்ல விண்மீன்களை மாற்றியமைத்துக்கொண்டிருந்தது. சிறகோசையுடன் ஒரு காகம் அவர்களைக் கடந்து சென்றது. “நகரில் காகங்கள் பெருகிவிட்டன. இரவில்கூட அவை சிறகோய்வதில்லை” என்றார் விதுரர். சகுனி அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் ஒரு நீளமைதி. மேற்குவாயிலுக்கு அப்பால் ஓநாயின் ஊளை. சகுனி அசைவதை உணர்ந்து திரும்பி நோக்கிய விதுரர் அவருடைய விழிகள் வானொளியில் மின்னுவதைக் கண்டபின் விழிவிலக்கிக்கொண்டார்.
“செல்வோம்… இங்கு நின்று விடியச்செய்வதனால் பொருளில்லை” என்றார் விதுரர். “நாம் சென்று தங்கள் அரண்மனையில் அமர்ந்து சற்று சூதாடலாம்.” சகுனி “நான் சூதாடுவதில்லை இப்போது” என்றார். விதுரர் “மெய்யாகவா?” என்றார். “ஆம்” என்றார் சகுனி. “எப்போதிலிருந்து?” சகுனி “சில நாட்களாக… இனி ஆடுவேன் என்றும் தோன்றவில்லை” என்றார். விதுரர் “மாறாக சில மாதங்களாக நான் ஒவ்வொரு நாளும் சூதாடுகிறேன். தனியாக அமர்ந்து. அல்லது யாரேனும் சூதனை அமரச்செய்து” என்றார்.
“மூத்தவர்கூட சஞ்சயன் உதவியுடன் சூதாடுகிறார். அவருடைய இசையவையில் பாணர் அமர்ந்து பல மாதங்களாகின்றன” என்றார் விதுரர். “மிகச் சில நாட்களிலேயே சிறப்பாக ஆடத் தொடங்கிவிட்டார். காலையில் விழித்ததுமே முதல் ஆணை களம்பரப்புவதற்காகத்தான்…” அவர்கள் படிகளில் இறங்கினர். விதுரர் இரவின் கரிய ஒளியில் கூர்மின்னி நின்றிருந்த கைவிடுபடைகளின் நிரையை பார்த்தார். அவர் நோக்கிய கணமே சகுனியும் அதை பார்த்தார். இருவரும் ஒரு சொல்லும் உரைக்காமல் படியிறங்கினர்.
இந்திரப்பிரஸ்தத்தின் படகுத்துறை தொலைவில் அணைவதை நோக்கியபடி குந்தி படகின் அகல்விளிம்பில் நின்றிருந்தாள், ஒரு கையால் பாய்க்கயிற்றை பிடித்துக்கொண்டு சற்றே கால் அகற்றி ஊன்றி படகின் அலைவுக்கேற்ப உடல் அசைய இளங்காற்றில் தலையை மூடிய வெண்ணிற ஆடை எழுந்து படபடக்க. பார்க்கவி அவளை அணுகி “பேரரசி” என்றாள். அவள் “ம்?” என திரும்ப “பாய்கள் இறக்கப்படுகின்றன என்று குகர்கள் சொல்கிறார்கள்” என்றாள்.
குந்தி அச்சொற்களை உள்வாங்கிக்கொள்ளவில்லை. “ம்” என்றாள். “பாய்வடம் தொய்வடையும்” என்றாள் பார்க்கவி. அவள் சொல் இல்லாத நோக்கால் விலக்கியபின் கைகளை எடுத்துக்கொண்டாள். பார்க்கவி தலைவணங்கி பின்னகர்ந்து குகர்களிடம் கைகாட்டிவிட்டு சிற்றறைக்குச் சென்றாள். அத்தனை பெட்டிகளையும் மூடி மீண்டுமொருமுறை உறுதிப்படுத்திவிட்டு படகின் முகப்புக்கு வந்து குந்திக்குப் பின்னால் அவள் விழிதிருப்பினால்மட்டும் நோக்கும் இடத்தில் நின்றாள்.
புலரிக்கு முந்தைய கருக்கிருளால் வானும் மண்ணும் மூடியிருந்தன. யமுனைநீர்ப்பரப்பு மீது கருமையின் ஒளி இருந்தது. கடந்துசென்ற விரைவுப்படகுகளின் கீறலில் நீரலைகள் எழுந்து ஒளியை அலைவுகொள்ளச் செய்தன. எடைமிக்க பெரும்படகுகள் கருவுற்ற விலங்கின் சோர்வுடன் மிகச் சீரான விரைவில் காற்றில் உப்பி எழுந்த பாய்களுடன் சென்றுகொண்டிருந்தன. ஒரு படகு பிளிறியது. ஒன்றின் மீதிருந்து வெளவால்கள் சிறகடித்தெழுந்து வானில் கலைந்தன.
அவள் இந்திரனின் சிலை நிழலுருவாக எழுந்த மரக்கூட்டங்களுக்குமேல் எழுந்து தெரிவதை கண்டாள். கீழிருந்து நெய்விளக்குகளின் ஒளி அதன் முகத்தின்மேல் படுவதுபோல பெரிய குழியாடிகள் அமைக்கப்பட்டிருந்தன. முதல் நோக்கில் செந்நிறமான முகில்தீற்றுபோல தெரிந்தது. பின்னர்தான் அது மாபெரும் முகம் என்று தோன்றியது. பகலொளியில் ஊழ்கநோக்கு கொண்டிருக்கும் சிலை கீழிருந்து வந்த ஒளியில் விரிந்த புன்னகை புரிவதுபோலத் தோன்றியது.
பார்க்கவி அந்தப் பெருமுகத்தையே நோக்கிக்கொண்டிருந்தாள். சிலை மெல்ல திரும்பிக்கொண்டிருந்தது. இன்னொரு படகின் கொம்பொலியால் விழிப்புகொண்டு திரும்பி நோக்கியபோது இந்திரப்பிரஸ்தத்தின் படகுத்துறைகளின் நெய்விளக்குகள் எரிந்த தூண்களின் நிரை தெரிந்தது. அந்த எரிதூண்கள் இந்திரப்பிரஸ்தத்தில் மட்டுமே உள்ளவை. புகழ்பெற்ற கலிங்கச் சிற்பி மகாருத்ரரால் அமைக்கப்பட்டவை. ஒவ்வொரு தூணிலும் புரிவட்டமாக பெரிய திரியிடப்பட்ட இருபத்துநான்கு அகல்விளக்குகள் செதுக்கப்பட்டிருந்தன. தூணின்மேல் இருந்த கல்லாலான குடத்தில் மீன்நெய் நிரப்பப்படும். அது நுண்துளைகள் வழியாக வந்து அத்தனை அகல்களிலும் சொட்டி திரியை ஊறச்செய்துகொண்டிருக்கும். மலர்க்கொத்து செறிந்த கிளைகள் போன்ற அந்தத் தூண்களை புஷ்பவல்லரி என்றனர்.
அவர்கள் வந்த படகு பாய்களை தாழ்த்திக்கொண்டு மெல்ல கரைநோக்கி சென்றது. அதற்காக உருவாக்கப்பட்டிருந்த இடைவெளியில் வந்துசேர்ந்த ஏவலர்களின் ஆணையோசைகளும் கூச்சல்களும் மெல்ல கேட்டன. புஷ்பவல்லரிகளில் சுடர்கள் மெல்லிய அசைவுடன் எரிந்துகொண்டிருந்தன. அவை நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்குச் சுற்றும் அமைக்கப்பட்டிருந்த கற்பலகைகளால் அவற்றின்மீது பெரும்புயலால் அன்றி நேர்க்காற்று படுவதில்லை. மிக அருகே ஆடைகள் பறந்துகொண்டிருக்கும்போதும் சுடர்கள் மிக மெல்ல நெளிந்தாடிக்கொண்டுதான் இருக்கும்.
பற்றி எரியும் கல் என பார்க்கவி எண்ணிக்கொண்டாள். தலையில் சூடி நிற்பது எரிநெய். படகுத்துறையிலிருந்து ஒரு பெரும்படகு பிளிறியபடி மெல்ல விலகியது. அதில் எழுந்த முதல் பாய் அதை பின்னால் தள்ளி பக்கவாட்டில் சரியச்செய்தது. பின்னர் தழலில் இருந்து தழல் பற்றிக்கொள்வதுபோல பாய்கள் அதில் எழுந்தன. மீண்டும் ஒரு பிளிறலுடன் அது விரைவுகொண்டு நீர்ப்பெருக்கை நோக்கி சென்றது. மீண்டும் ஒரு உறுமல் எழுந்தது. அவளுடைய படகை ஒட்டியிருந்த படகிலிருந்து இரு துலாக்கள் இருபக்கமாக பொதிகளைத் தூக்கி காற்றில் சுழற்றிக் கொண்டுசெல்லத் தொடங்கின.
அத்தனை படகுமேடைகளிலும் துலாக்கள் யானைகள் இழுத்த வடங்களாலும் சகடங்களாலும் சுழற்றப்பட பொதிகள் பறந்துசென்று அமைந்தன. படகுகள் அவற்றை கரைநோக்கி எறிவதாக விழிகளுக்குத் தோன்றியது. வண்டிநிரைகள் கிளம்பி துறைமுகப்பிலிருந்து இரு வளைந்த பாதைகளினூடாக நகரை வளைத்து பண்டசாலைகளுக்கு சென்றுகொண்டிருந்தன. அவற்றின் விளக்குகள் செவ்வெறும்பு நிரை எனத் தெரிந்தன. துறைமேடைகளுக்குமேல் வானில் என இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டைமுகப்பு. அதன்மேல் மின்கொடி பறந்தது. இருபுறமும் பந்தங்களின் ஒளியை ஆடிகளால் குவித்து ஏவி அதன்மேல் விழச்செய்திருந்தமையால் அது தழல் என படபடத்தது.
அவர்களுடைய படகு மேடையை முட்டி அசைந்து மெல்ல ஆடி நின்றது. தறிகளில் வடங்கள் சுற்றிக்கொண்டன. பாலம் நீண்டு வந்து படகின்மேல் படிந்தது. பார்க்கவி குந்தியின் அருகே சென்று “பாலம் அணைகிறது, பேரரசி” என்றாள். அவள் கையில் இருந்த வெண்பட்டு மேலாடையை வாங்கி உடலை போர்த்திக்கொண்டு குந்தி பாலத்தருகே சென்றாள். பார்க்கவி கையில் சாமரத்துடன் பாலத்தில் ஏறி நகரில் முதலில் இறங்க அவள் தொடர்ந்து சென்று இறங்கினாள்.
துறைமேடைக் காவலன் இரு ஏவலருடன் நின்றான். சொல்லின்றி தலைவணங்கினான். அவள் அவனை நோக்கி தலையசைத்தபின் செல்வோம் என பார்க்கவிக்கு கைகாட்டினாள். சுங்கநாயகத்தின் மாளிகை முகப்பில் அவள் செல்லவேண்டிய தேர் காத்து நின்றிருந்தது. அதனருகே தனிப்புரவியில் அணுக்கக் காவலன் நின்றிருந்தான். பார்க்கவி கைகாட்ட அவன் தன் கையிலிருந்த சிறிய கொம்பை முழக்கினான். தேரோட்டி தேரில் ஏறிக்கொண்டான். அவர்கள் சிறிய படிகளில் ஏறி மாளிகை முகப்பை அடைந்தனர். காவலன் தலைவணங்கி கைகாட்ட குந்தி தேரிலேறி அமர்ந்தாள். பார்க்கவி அவளருகே நின்றாள்.
அணுக்கவீரன் அவர்களை ஒருமுறை நோக்கிவிட்டு கையை காட்டினான். தேர் விசைகொண்டு உலுக்கி முன்னகரத் தொடங்கியது. குந்தி இறுக்கமான உடலுடன் எதையோ எதிர்பார்ப்பவள்போல் அமர்ந்திருந்தாள். குளிர்காற்று முகத்தில் படத்தொடங்கியதும் அவள் மெல்ல எளிதானாள். பெருமூச்சுடன் இருக்கையில் சாய்ந்துகொண்டாள். “இன்னும் ஒரு நாழிகையில் பிரம்மமுகூர்த்தம், பேரரசி” என்றாள் பார்க்கவி. குந்தி வெறுமனே தலையசைத்தாள். பார்க்கவி அத்தருணத்தை மேலும் எளிதாக்கும்பொருட்டு எதையேனும் பேச எண்ணினாள். ஆயினும் எதைப் பேசினாலும் அரசியலிலேயே சென்றடையும் என எண்ணி சொல் தவிர்த்தாள்.
ஆனால் குந்தியால் அதை கடக்கமுடியவில்லை. “இளையவர்கள் அனைவரும் வந்துவிட்டார்கள் அல்லவா?” என்றாள். “ஆம், பேரரசி. அபிமன்யூவைத் தவிர எண்மரும் நகரில்தான் இருக்கிறார்கள்.” குந்தி “அவன் எப்போது வருகிறான்?” என்றாள். “அவர் இங்கு வரமுடியாது என்றார்கள்” என்றாள் பார்க்கவி. “ஆம், நெறிப்படி இது அயல்நாடுதான் அவனுக்கு. உபப்பிலாவ்யத்திற்கு செல்லலாமே?” பார்க்கவி அதற்கு மறுமொழி சொல்லவில்லை. “மைந்தருடன் சில நாட்கள் அனைத்தையும் மறந்து இங்கே திளைக்கவேண்டும்” என்றாள் குந்தி.
ஒருகணம் கழித்து “அனைத்தும் அவர்களுக்காகத்தான்” என்றாள். மேலும் ஒருகணம் கழித்து “நிலம்வென்று கொடியும் முடியுமாக வாழ்வதே ஷத்ரிய வாழ்க்கை. அன்றி அது வாழ்வே அல்ல, அதைவிட இறப்பே பெருமை” என்றாள். அவள் உள்ளத்திலோடியதென்ன என்று எண்ணிய பார்க்கவி அகம் திடுக்கிட்டாள். அது ஒரு சிறிய உடலசைவென வெளிப்பட அவளை திரும்பிநோக்கிய குந்தி பொருளில்லா விழிகளை திருப்பி நகரை நோக்கியபடி “நன்கு பேணப்படுகிறது. அதில் எக்குறையும் வைக்கவில்லை சுயோதனன்” என்றாள்.
“இந்நகரின் வருவாயில் ஒரு பகுதியை நகருக்கே அளித்துவிடுகிறான். ஆனாலும் பாழடைந்து கிடக்கிறது. ஏனென்றால் இதன் உட்பொருள் இன்று அழிந்துவிட்டது. இந்திரன் மண்ணில் இறங்கும் இடமல்ல இது.” கோட்டைமுகப்பு அணுகி வந்தது. கல் பதிக்கப்பட்ட அகன்ற சாலையில் வழுக்கிச்செல்வதுபோல தேர் உருண்டோடியது. குளம்புத்தாளம் கூர்மையாகவும் சீராகவும் ஒலித்தது. இருபுறமும் இருந்த மாளிகைகளின் முன்னால் அமுதகலக் கொடி பறந்துகொண்டிருந்தது. குந்தி அவற்றை ஒவ்வொன்றாக நோக்கியபின் நீள்மூச்சுவிட்டாள். “மைந்தருடன் ஆடுவதா? அயல்கொடி பறக்கும் இந்நகரிலா? நான் சதசிருங்கத்தின் காட்டிலேயே மைந்தருடன் ஆடியவள் அல்ல.”
அவள் எண்ணங்கள் அங்கு செல்வதை உணரமுடிந்தது. “சதசிருங்கத்தில்தான் இருப்பார். இன்றிருந்தால் மைந்தர் நாடுதுறந்து அங்கே சென்றுவிடவேண்டுமென்றே சொல்வார். தேடிவந்த மணிமுடியை சூடியமராதவர்” என்றாள். பார்க்கவி விழிதிருப்பி நகரை நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் உடல் விழிகொண்டு குந்தியை நோக்கிக்கொண்டிருந்தது. “வஞ்சங்கள் பொருளற்றவை. ஆனால் மறுக்கப்பட்டோரின் வஞ்சங்களினூடாகவே அவர்களுக்கான உரிமைகள் ஈட்டப்படுகின்றன.”
சிறிய உடுக்கோசை ஒன்று அப்பால் எழக்கண்டு பார்க்கவி திரும்பி நோக்கினாள். குந்தி “என்ன?” என்றாள். பார்க்கவி ஒன்றும் சொல்லவில்லை. குந்தி கைகாட்ட பார்க்கவி தேரை நிறுத்துவதற்கான மணியை அடித்தாள். தேர் சகடத்தில் அச்சாணி தேயும் ஒலியுடன் நின்றது. குதிரைகள் மூச்சு சீறி கால்களை தட்டிக்கொண்டன. தேர்மணிகள் குலுங்கின. அவர்களுக்கு முன்னால் இந்திரப்பிரஸ்தத்தின் பெரிய கோட்டை இருள் என எழுந்து நின்றிருந்தது. அதன் காவல்மாடங்களில் மட்டும் மீன்நெய் விளக்குகள் எரிந்தன. வானில் நின்றிருக்கும் விமானநிரை எனத் தோன்றின அவை.
கோட்டைக்கும் அகழிக்கும் இடையே இருந்த சிறிய பாதையினூடாக ஒரு பந்தம் வந்துகொண்டிருந்தது. அதன் பின்னால் உடுக்கோசை எழுப்பிவரும் பூசகரை பின்னர் காணமுடிந்தது. அவர்களை நோக்கி வந்துகொண்டே இருந்த பந்தத்தின் ஒளி விரிவடைய அதில் பூசகர் தன் சடைக்கற்றைகள் தோளில் விரிந்து கிடக்க துள்ளியாடியபடி வருவது தெரிந்தது. அவருக்குப் பின்னால் பள்ளிவாள் ஏந்தியபடி துணைப்பூசகன் வந்தான். தொடர்ந்து மாயை கனவிலென நடந்து வந்தாள். அவளுக்குப் பின்னால் கூனுடலுடன் அவள் முதிய சேடி கர்த்தமை கையில் கூடையுடன் வந்தாள்.
“இவளை நான் பார்த்தே பதினான்காண்டுகள் ஆகின்றன” என்றாள் குந்தி. மாயையை இந்திரப்பிரஸ்தத்திலேயே எவரும் பார்த்ததில்லை. நகரின் தென்மேற்கு மூலையில் அமைந்த சிறிய சோலைக்குள் தன் குடிலில் முற்றிலும் தனித்து அவள் வாழ்ந்தாள். செவியும் வாயும் அற்ற சேடியான கர்த்தமை மட்டுமே அவளுடன் இருந்தாள். நள்ளிரவில் கொற்றவை பூசனைக்காக மட்டும் அவர்கள் அங்கிருந்து கிளம்பி முதற்பொழுதுக்குள் திரும்பிவருவார்கள் என்று பார்க்கவி கேட்டிருந்தாள்.
பந்தமேந்திய ஏவலனும் உடுக்கோசையுடன் பூசகரும் அவர்களுக்கு சற்றுமுன்னால் வளைந்து கோட்டைக்குள் சென்றனர். கோட்டைக்காவலர் அனைவரும் அவளை நேர்நோக்காமல் சுவர்நோக்கி திரும்பிக்கொண்டனர். கோட்டை முகப்பின் பந்த வெளிச்சத்தில் செந்நிறமாகத் தோன்றி மறுபக்கமிருந்த இருளில் மாயை அமிழ்ந்தாள். அவள் தோளில் இருந்து இறங்கி தொடைவரை நீண்டிருந்த குழல் ஐந்து புரிகளாக பகுக்கப்பட்டு திரிகளாகத் தெரிந்தது.
“அவள் குழல் ஈரமாக உள்ளது” என்றாள் குந்தி. “ஆம்” என்றாள் பார்க்கவி. ஒவ்வொரு நாளும் கொற்றவை ஆலயத்தில் பலிவிலங்கின் குருதியால் தன் குழலை நனைத்து ஐந்து புரிகளாக அவள் பகுத்துக்கொள்கிறாள் என பார்க்கவி கேட்டிருந்தாள். அவை பெண்டிரின் கற்பனை என்றே எண்ணியிருந்தாள். குந்தி மீண்டும் நீள்மூச்சுவிட்டு கண்களை மூடிக்கொண்டாள். “பேரரசி” என்றாள் பார்க்கவி. குந்தியின் நெற்றிநரம்புகள் புடைத்திருந்தன. “பேரரசி!” பார்க்கவி அவளை மெல்ல தொட்டாள். தேர் செல்லட்டும் என குந்தி கைகாட்டினாள்.
பார்க்கவி மணியோசை எழுப்ப தேரோட்டி குதிரைகளை சவுக்கால் தொட்டான். அவை கிளம்பி ஓசையுடன் அகழிப்பாலத்தைக் கடந்து கோட்டை முகப்பை அடைந்தன. காவலர் அவள் வருகையை முன்னரே அறிந்துவிட்டிருந்தனர். முகமனோ வாழ்த்தோ இன்றி தலைவணங்கினர். குந்தி துயில்கொண்டவள்போலிருந்தாள். ஆனால் அழுந்திய உதடுகளின் மெல்லிய அசைவு அவள் துயிலவில்லை என்று காட்டியது.
நகருக்குள் நுழைந்தபோது குளிர்ந்த நீருள் மூழ்குவதுபோல பார்க்கவிக்கு மூச்சடைத்தது. தரையில் சொட்டிய குருதியிலிருந்து எழுந்த மணத்தை அவள் உணர்ந்தாள். அது உளமயக்கா என எண்ணினாள். இல்லை, அது பசுங்குருதி மணமேதான். அதை நோக்கியமையால்தான் உணரமுடிகிறது. அவள் தூணை இறுகப் பற்றிக்கொண்டு நகரை வெறித்துநோக்கி நின்றாள். அன்று கருநிலவு. மானுடப்பலியே கொடுக்கப்பட்டிருக்கலாம் என எண்ணிக்கொண்டாள்.
[எழுதழல் நிறைவு]