எட்டு : குருதிவிதை – 9
சதானீகன் அன்றிரவு முழுமையாகவே துயில்நீத்தான். அவன் பிரத்யும்னனின் அறையிலிருந்து வரும்போதே இரவொலிகள் மாறுபட்டிருந்தன. மெல்லிய மழைத்தூறல் ஊரை மூடியிருந்தது. அவ்வப்போது மின்னல் வெட்டி வானம் சற்று உறுமியது. இலைகள் பளபளப்புடன் தெரிந்தணைந்தன. அவன் அந்த சிறிய மாளிகையின் மிகச் சிறிய சாளரத்தருகே நின்று மழையை நோக்கிக்கொண்டிருந்தான். மழை நின்று குளிர்காற்று சுழன்றது. பறவைகள் குரலெழுப்பின. மீண்டும் வானம் உறுமத்தொடங்கியது.
ஓர் எண்ணம் எழுந்தது, அர்ஜுனன் அவனை அழைக்காமலேயே இளைய யாதவரை பார்க்கச் சென்றுவிடக்கூடும் என்று. அடுத்த கணமே அதுவே நிகழுமென உள்ளம் உறுதிகொண்டது. விடியலுக்கு அப்போதும் பொழுதிருக்கிறது என்று தோன்றியது. ஆனாலும் ஏவலனை அழைத்து நீராட்டறை ஒருக்கச் சொன்னான். நீராட்டறைக்குள் இருக்கையில் கூரைமேல் மழையின் ஓசை கேட்டது. வெளியே மழை பெய்யும்போது வெந்நீருக்குள் அமர்ந்திருப்பதன் மெய்ப்பு எழுகை எப்போதும் அவன் விரும்புவது. அங்கேயே அமைந்திருக்கவேண்டுமென விழைந்தான். கருவறையில் குழவி என.
அந்த நாள் இனியது என்று ஏனோ தோன்றியது. இத்தகைய நாட்கள் இனி வரப்போவதில்லை என்ற சொல் உள்ளூர எழுந்துகொண்டே இருந்தது. அது ஏன் என எண்ணி அவ்வாறு எண்ணவேண்டியதேயில்லை என அமைந்தான். எழுந்து ஆடையணிந்து அணிபூண்டு வெளியே வந்தபோது மேலும் பொழுதிருப்பது தெரிந்தது. சிறிய உப்பரிகையில் நின்று இருளில் பொழியும் மெல்லிய மழையை பார்த்துக்கொண்டிருந்தான். அந்த மழையை வேறு எவர் பார்க்கிறார்கள்? கீழே காவலர்கள் கையில் வேலுடன் சுவருடன் சாய்ந்து நின்றிருந்தார்கள். அவர்கள் மழையை வெறித்துக்கொண்டிருந்தார்கள். என்ன எண்ணிக்கொண்டிருப்பார்கள்? மழை அவர்களின் பணியை கடுமையாக்குகிறது. பிறர் வெறுக்கும் கோடைகாலம்தான் அவர்களுக்கு இனியது.
புரவி மழையில் நனைந்து தலைகுனிந்து நின்றது. அப்பால் எங்கோ எவரோ பேசிக்கொண்டு புரவியில் செல்லும் ஓசை. மெல்லிய மின்னதிர்வில் தேர்க்கூரை பளபளத்து அணைந்தது. இடியோசை தலைக்குமேல் ஒரு பீடத்தை நகர்த்திவைத்ததுபோல் ஒலித்தது. எங்கோ ஒரு கலம் உருண்டது. அடுமனைப் பணிகள் தொடங்கிவிட்டன. இன்னும் சற்றுநேரத்தில் ஆலயப் பூசகர்கள் எழுவார்கள். அதன்பின் வணிகர்கள். அதன்பின் காவலர்களுக்கு மாறுசெல்பவர்கள் சாலைகளில் செல்வார்கள். எல்லா ஊர்களும் ஒன்றே. எல்லா விடியல்களும் ஒன்றே. அவை ஒன்றென்றே இருப்பதே இனியது. ஏனென்றால் அறிந்த முகத்தின் அன்பு அதிலுள்ளது.
என்ன எண்ணிக்கொண்டிருக்கிறோம்? அவன் புன்னகைத்தான். மழை ஓய்ந்து துளிவிட்டது. காற்றில் துளிகள் பிசிறுகளாகச் சிதறி மறைந்தன. இலைகள் ஈரம் விடுபட்டு எழுந்து பறக்கத் தொடங்கின. வானில் ஒளி எழுகிறதா என்ற ஐயம் எழுந்தது. கீழே மண்ணில் தேங்கிய நீரில் எல்லாம் மெல்லிய ஒளி பளபளத்தது. இளநீலமான காற்று எங்கும் நிறைந்திருந்தது. அது விழிக்குள் இருந்து எழும் நிறமா? காற்றில் ஒளியசைவு எழுவதை உணர்ந்தான். அது தேங்கிய நீர்ப்பரப்பில் எழும் அலைகளால்தான் எனத் தெரிந்தது.
புலரி புலரி என அவன் உள்ளம் கூச்சலிட்டது. நிற்க முடியவில்லை. எங்காவது செல்லவேண்டும், எதையாவது செய்யவேண்டும் போலிருந்தது. மேலாடையை எடுக்க திரும்பி அறைக்குச் செல்லலாமா என எண்ணியபோது கோட்டைமுகப்பின் முரசு விடியலை அறிவித்து முழங்கியமைந்தது. ஆலயத்தின் சங்கும் மணியும் உடன் இணைந்து ஒலித்தன. கோயில்களின் மணியோசைகள் பெருகின. ஊர் விழித்துக்கொண்ட ஒலி எங்கிருந்தோ என கிளம்பி அணுகிவந்தது.
மானுடக் குரல்கள், பசுக்களின் கூவல்கள், கழுத்துமணிகள், நீர்சேந்தும் சகடங்களின் ஓசைகள். பெண்கள் வீட்டுமுற்றங்களை துடைப்பம் வீசி கூட்டிப்பெருக்கத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு நாளையும் முந்தைய நாளை விலக்கி அந்நாளின் மலர் ஒன்றைச் சூட்டி எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளிலும் புதியதாக ஒன்றை எதிர்பார்க்கும் மாயையில் இருந்து மானுடம் விடுபடுவதேயில்லை. ஒரு பெருநாடகம் கையசைவில் தொடங்கியதுபோல. பறவைகள் வானிலெழுந்து சுழன்று கூவின. அவன் நோக்கியிருக்கவே சேற்றுமுற்றத்தில் சிறிய குருவிகள் வந்தமர்ந்தன. அவை பந்த ஒளிக்குப் பழகியவையாக இருக்கக்கூடும். மைய மாளிகையிலிருந்து கொம்போசை எழுந்தது. அங்கே காவலர் பணிமாற்றம் கொள்ளும் ஆணைகள் ஒலித்தன.
அவன் உள்ளம் உவகைகொண்டு படபடக்கத் தொடங்கியது. உள்ளே சென்று நிர்மித்ரனை எழுப்பலாமா என எண்ணி அதை தவிர்த்தான். அவன் மரவுரி மஞ்சத்தை அணைத்துக்கொண்டு குப்புறத் துயின்றுகொண்டிருந்தான். கால்கள் சிறுவர்களுக்குரிய முறையில் சுருங்கியிருந்தன. வாயில் மேலுதடு வளைந்தெழுந்து அவனை மேலும் குழந்தை எனக் காட்டியது. சதானீகன் கீழே இறங்கிச்சென்று கூடத்தில் நின்றபோது காவலன் எழுந்து அருகே வந்தான். “தந்தை எழுந்துவிட்டாரா?” என்றான் சதானீகன். “அவர் நீராடி ஆடைமாற்றிவிட்டு கீழே சென்றார்” என்றான் காவலன். அவன் திடுக்கிட்டு “எப்போது?” என்றான். “சற்றுமுன்பு” என்றான்.
சதானீகன் மழையில் ஊறிய முற்றத்தை நோக்கி ஒருகணம் தயங்கியபின் புரவியை நோக்கி சென்றான். மிக அருகில்தான் இருந்தது மைய மாளிகை. ஆனால் செல்லும் வழி சேறாக இருந்தது. புரவியில் ஏறிக்கொண்டு அதை செலுத்தி சிறிய சாலையில் ஏறி ஓரிரு அடிவைத்து மைய மாளிகை முற்றத்தை அடைந்தான். முன்பெப்போதோ மரப்பலகையிடப்பட்ட முற்றம். சேற்றில் பெரும்பாலும் புதைந்து குதிரைக்குளம்புக்கு மட்டுமே ஓசையென இருப்புணர்த்தியது. கூரையிடப்பட்ட சிறிய தூண்களின்மேல் மீன்நெய்ப்பந்தங்கள் எரிந்தன. ஈரநிலத்தில் செம்மலர்கள் என ஒளி சிந்திக்கிடந்தது.
அவன் இறங்கி புரவியை ஏவலனிடம் அளித்துவிட்டு படிகளை நோக்கி நடந்தான். எதிர்கொண்ட ஊர்த்தலைவரிடம் “தந்தை வந்துவிட்டாரா?” என்றான். “மேலே சென்றார்…” என்ற ஊர்த்தலைவர் விந்தையானதோர் உணர்வு தெரிந்த விழிகளுடன் “அவருக்கு முன்னரே அஸ்தினபுரியின் அரசர் அங்கே சென்றுவிட்டார்” என்றார். சதானீகன் நெஞ்சின் படபடப்பை மறைக்க சிரித்துக்கொண்டு “நன்று, நானும் மேலே செல்கிறேன்” என்றான். அவர் ஏவலனிடம் கைகாட்டினார்.
ஏவலனுடன் மேலேறிச் செல்கையில் சதானீகன் மேலும் செல்லவேண்டாம் என்னும் உணர்வை அடைந்தான். கால் தயங்கினாலும் படிகளில் ஏறினான். பழைய படிகள் அவன் காலடியை பெருக்கி ஒலித்தன. அவன் எதையும் எதிர்மறையாக எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த விசைமிக்க தருணம் முடியப்போகிறது என்னும் உணர்வை அடைந்தான். மிக விரைவாக, மிக எளிதாக, எண்ணி வியக்க ஏதுமற்றதாக, எப்போதும் எண்ணத்தில் நின்றிருப்பதாக அது நிகழும். ஏனென்றால் மிகப் பெரியவை அனைத்தும் அவ்வாறே நிகழ்கின்றன. தெய்வங்கள் பொறுமையற்றவை. வேறொரு விரைவான காலத்தில் வாழ்பவை.
மஞ்சத்தறை வாயிலில் நின்றிருந்த காவலன் அவனைப் பார்த்ததும் குழப்பமாக தலைவணங்கினான். சதானீகன் “இளைய பாண்டவர் உள்ளே இருக்கிறார் அல்லவா?” என்றான். “ஆம்” என்றான். “நான் உள்ளே செல்லவேண்டும்” என்றான். அவன் தயங்கி “தங்களை உள்ளே அனுப்பலாமா என்று தெரியவில்லை, இளவரசே” என்றான். “தந்தையுடன் வந்தேன்” என்றான் சதானீகன். “இளையவர் இன்னும் துயில்கொண்டிருக்கிறார். அஸ்தினபுரியின் அரசர் வந்ததும் என்னிடம் கேளாமலேயே உள்ளே சென்றார். நான் அவரை தடுக்கும் சொல் இல்லாமல் நின்றேன். ஆகவே தொடர்ந்து இளைய பாண்டவர் வந்ததும் என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை” என்றான் காவலன்.
அவன் உடல் பதறியது. தாழ்ந்து தாழ்ந்து சென்ற குரலில் “நான் அரச காவலன் அல்ல. இந்த மாளிகையில் காவலே உண்மையில் கிடையாது. இங்கு அரசகுலத்தார் வந்ததும் இல்லை. இதற்கான தண்டனையை…” என்றவனை கைகாட்டி நிறுத்தி “அவர் நாங்கள் உள்ளே வருவதை விரும்பாமல் இல்லை. விரும்பவில்லை என்றால் நீ இங்கே நின்றிருக்கமாட்டாய்” என்றபின் அவன் தோளைத்தட்டி புன்னகைத்துவிட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றான்.
சிறிய மஞ்சத்தறையை மிகப் பெரும்பாலும் நிரப்பியபடி தாழ்வான மஞ்சம் இருந்தது. அதில் மரவுரிப் படுக்கையில் மரவுரியணையில் தலைவைத்து இளைய யாதவர் மல்லாந்து துயின்றுகொண்டிருந்தார். அவர் தலைமாட்டில் இருந்த சிறிய பீடத்தில் அஸ்தினபுரியின் அரசன் துரியோதனன் அமர்ந்திருந்தான். வேறு பீடங்கள் ஏதும் இல்லை என்பதனால் காலடியில் மஞ்சத்தின் விளிம்பிலேயே அர்ஜுனன் அமர்ந்திருந்தான். இருவர் விழிகளும் அவனை நோக்கின. அவன் தலைவணங்கியபின் விலகி சுவரில் சாய்ந்து நின்றான்.
அவன் அவரை நோக்கிக்கொண்டு நின்றான். இடக்கையை தூக்கி தலைக்குமேல் வைத்திருந்தார். வலக்கை தொடைமேல் படிந்திருந்தது. வலது தோளருகே படுக்கையிலேயே படையாழி இருந்தது. இடது தோளருகே இரவில் அறைக்கு நறுமணம்சேர்க்க வைக்கப்பட்டிருந்த செந்தாமரை மலர். வெண்ணிற ஆடையின் சீரான சுருக்கங்களும் மார்பில் அப்போது அணிவித்தவை எனப் படிந்திருந்த ஆரங்களும் அவர் துயிலில் அசைவதில்லை என எண்ணச் செய்தன.
இளைஞனுடையது போன்று சிறிய உறுதியான உடல். தோள்கள், கைகள், மார்பு, வயிறு என அவன் நோக்கிக்கொண்டிருந்தான். ஒவ்வொன்றும் முழுமை கொண்டிருந்தன. ஆனால் மானுடமல்லாத ஏதோ ஒன்றிருந்தது. அது ஒரு கரிய சலவைக்கல் சிலை என்று எண்ணச்செய்தது. நீள்வட்டமான முகம். புன்னகை விலகமுடியாதவை போன்ற சிறிய உதடுகள். கூரிய சிறுமூக்கு. கொழுங்கன்னங்கள். அவன் ஒரு திடுக்கிடலை அடைந்தான். அவருக்கு இளைய தந்தையின் அகவை. மைந்தருக்கு மைந்தர் மணம்புரிந்துகொண்டுவிட்டார். ஆனால் அங்கு படுத்திருந்த உடலில் இளமை மாறாமலிருந்தது. அவன் இன்னொரு அதிர்வோடு அவ்வுடலின் சிறப்பு என்ன என உணர்ந்தான். கழுத்திலோ கைகளிலோ புறங்கையிலோ எங்கும் நரம்புகளே தெரியவில்லை.
மிக அண்மையில் பெரிய கண்டாமணி ஒன்று அதிர்ந்தடங்கியது. அவருடைய விழியிமைகள் அதிர்ந்தன. கைகள் எழுந்து கூப்பிக்கொள்ள, உதடுகள் “ஓம்” என ஓசையிலாது குவிந்துரைத்தன. கைகளை ஊன்றாமல் இயல்பாக மடிந்து எழுந்து அமர்ந்து அர்ஜுனனை நோக்கி “எப்போது வந்தாய்? அழைத்திருக்கலாமே?” என்றார். துரியோதனன் அசைய அவனை நோக்கி “கௌரவரே, தாங்கள் எப்போது வந்தீர்கள்?” என்றார். “என்ன இது? மஞ்சத்தறை நிறைந்துள்ளது?” என்றபின் சதானீகனை நோக்கி புன்னகை புரிந்தார்.
அவர் விழிகள் அந்த முகத்திற்கு மிகப் பெரியவை. இளமைந்தர் விழிகள்போல அவற்றில் கருவிழியே நிறைந்திருந்தது. நோக்குவதன் கூர்மையும் நோக்காமையின் கனவும் கொண்டிருந்தன அவை. அவர் புன்னகைத்தபோது சதானீகன் தன்னுள் உணர்வு ஏதோ கொப்பளிப்பதை அறிந்தான். கைகால்கள் நடுங்க விழுந்துவிடக்கூடாது என்பதையே தன் உறுதிப்பாடாக கொண்டு நின்றான். அவ்வுணர்வை அழுகையென்று மட்டுமே வெளிக்காட்டமுடியும். ஓசையற்ற விம்மலாக, வெறும் விழிநீராக.
துரியோதனன் “நான் அரசமுறைத் தூதாக வந்தேன்” என்றான். “என் கோரிக்கையை முதலில் தங்களிடம் வைக்கவேண்டுமென விழைந்தேன். அதன்பொருட்டே காலையில் தங்கள் மஞ்சத்தறைக்குள் புகுந்தேன். பொறுத்தருள்க!” அவர் “இங்கு எவருக்கும் தடையென ஏதுமில்லை, அரசே” என்றபின் அர்ஜுனனிடம் “நீ இங்கு வருவாய் என சொல்லவில்லையே?” என்றார். “நானும் அரசமுறையாக தங்களிடம் கோரிக்கையை முன்வைக்கவே வந்தேன்” என்றான் அர்ஜுனன்.
“முதலில் நான் பார்த்தது இளைய பாண்டவனை. அவனிடம் கோரிக்கையை கேட்பதே முறை” என்றார் இளைய யாதவர். துரியோதனன் “அதென்ன? நான் முன்னரே வந்து இங்கே காத்திருந்தேன்” என்று சொன்னான். “ஆம், ஆனால் காலடியில் அமர்ந்திருந்தமையால் அவனையே முதலில் கண்டேன். அது தன்னியல்பாக நிகழ்ந்திருக்கலாம். ஆனால் முறை அதுவே” என்றார் இளைய யாதவர். “சொல்க, பார்த்தா.! துரியோதனன் தவிப்புடன் “நான் முன்னரே வந்தேன். தங்களை அழைக்கத் தயங்கினேன்” என்றான்.
அர்ஜுனன் “இளைய யாதவரே, தங்கள் துணை பாண்டவர்களுக்குத் தேவை. நான் என் மூத்தவரின் முறையான அழைப்பை முன்வைக்கும்பொருட்டு வந்துள்ளேன்” என்றான். அவர் “அளித்தேன்” என்றபின் புன்னகையுடன் திரும்பி “கௌரவரே, தங்கள் கோரிக்கையை சொல்லலாம்” என்றார். துரியோதனன் முகம் மலர்ந்திருந்தது. “யாதவரே, அவர் தங்கள் படைத்துணையை கோரவில்லை. துணை என்றே சொன்னார். நான் படைத்துணை கோர வந்துள்ளேன்” என்றான். “அளித்தேன்” என்றார் இளைய யாதவர்.
துரியோதனன் சிரிப்பு முகமெங்கும் பரவ “முன்னரே யாதவக்குடிகளின் முற்றாதரவு எங்களுக்கே என அறிவிக்கப்பட்டது. ஆனால் அச்சொல்லை எங்களுக்கு அளித்த தங்கள் மூத்தவர் நேற்று கானேகிவிட்டார். தங்கள் தந்தைக்கு படைகள்மேல் மேலாணை இல்லை. தாங்கள் படைகளுக்கு ஆணையிட்டால் யாதவப் படைகள் அதை மீறுமா என ஐயுற்றேன். ஏனென்றால் இன்னமும்கூட எளிய படைவீரர்களில் பலருக்கு நீங்கள் இறைவடிவம். இப்போது யாதவப் படைகள் எங்களுக்கு துணைநிற்பதை நீங்களே ஒப்புக்கொண்டு சொல்லளித்துள்ளீர்கள்” என்றான்.
“ஆம், விருஷ்ணிகள் உள்ளிட்ட யாதவப் படைகளில் எவருக்கு கௌரவப் படையுடன் சேர விருப்பிருக்கிறதோ அவர்களுக்கு என் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதை அரசாணையாகவே அறிவிக்கிறேன். போதுமல்லவா?” என்றார் இளைய யாதவர். “நன்று” என்று துரியோதனன் சொன்னான். “அத்துடன் தாங்கள் யாதவருக்கு எதிராக படைக்கலம் கொள்ளலாகாதென்று தங்கள் அன்னையின் ஆணையெழுந்திருப்பதாகவும் நேற்று அறிந்தேன். தங்கள் தந்தையும் அக்ரூரரும் தனித்தனியாக அதை அறிவித்திருந்தார்கள்.”
“ஆம்” என்றார் இளைய யாதவர். “அன்னையின் ஆணைப்படி என் மூத்தவரோ மைந்தரோ எனக்கெதிராக களம்நிற்கமாட்டார்கள்.” துரியோதனன் “அறிந்தேன். ஆனால் அந்த ஆணை கிருதவர்மனையோ அக்ரூரரையோ அவருடைய மைந்தர்களையோ பிற யாதவப் பெருவீரர்களையோ கட்டுப்படுத்தாது. அவர்கள் உங்களுக்கெதிராகவே களம்நிற்பார்கள்” என்றான். அவன் சொல்லவருவதை புரிந்துகொண்டு “ஆம், கௌரவரே. அவர்கள் எனக்கெதிராக களம்நிற்கக்கூடும். ஆகவே நான் வரும் போரில் என் கையால் படைக்கலம் தொடமாட்டேன்” என்றார்.
“இதையும் சொல்லுறுதியாகவே கொள்கிறேன்” என்றான் துரியோதனன். “கொள்க, இதையும் நானே அரசமுறையாகவே அறிவிக்கிறேன்” என்றார் இளைய யாதவர். துரியோதனன் புன்னகையுடன் அர்ஜுனனை நோக்கிவிட்டு “இது போதும்… நான் வந்தது இதற்காகவே. நீங்கள் எவ்வகையிலும் பாண்டவர்களை விட்டு வரமாட்டீர்கள் என அறிவேன்” என்றான்.
இளைய யாதவர் நகைத்து “என் அன்னையின் ஆணை எனக்கும் பெரும்விடுதலையை அளித்தது, கௌரவரே. நான் போருக்கெழுந்தால் எதிர்நிற்கும் என் மூத்தவரையும் மைந்தரையும் என் குடியினரையும் கொல்லவேண்டியிருக்குமே என அஞ்சினேன். கொல்லவில்லை என்றால் கோழையென்று அறியப்படுவேன். கொடுத்த சொல்லுக்கு உறுதியற்றவனும் ஆவேன். இப்போது நிறைவுகொள்கிறேன், அன்னைசொல் மீற எவருக்கும் உரிமையில்லை. அதை ஷத்ரியரும் மறுக்கமாட்டார்கள். நாளை பாடவிருக்கும் சூதர்களும் மறக்க மாட்டார்கள்” என்றார்.
அர்ஜுனன் புன்னகையுடன் அமர்ந்திருப்பதை ஐயத்துடன் நோக்கியபின் துரியோதனன் விழிவிலக்கிக்கொண்டான். “போர் நிகழுமென்றால் நான் வெறுங்கையுடன் மட்டுமே களம்புக முடியும், பார்த்தா” என்றார் இளைய யாதவர். “தாங்கள் களம்புகவேண்டுமென்பதுகூட இல்லை. துவாரகையிலேயே இருப்பீர்கள் என்றால்கூட எனக்கு மாற்று எண்ணமில்லை. தங்கள் அடியவனாக நான் களமெழ முடிந்தால் அது போதும்.”
இளைய யாதவர் நகைத்து “நன்று… நான் களம்புக விழைகிறேன். உங்களை கைவிட்டேன் என்று ஆகவேண்டாம்” என்றார். “படைக்கலமேந்தாமல் போர்க்களம் புகும் உரிமை கொண்டவர்கள் இருவர். பறையும் கொம்பும் முழக்கும் சூதர், தேரோட்டிகள். நான் உனக்கு தேரோட்டுகிறேன்.” அர்ஜுனன் முகம் மலர்ந்து “என் புரவிகள் உங்கள் ஆணைப்படியே அடிவைக்கும்” என்றான்.
இளைய யாதவர் துரியோதனனிடம் “தேரோட்டியை தாக்க நெறியொப்புதல் இல்லை, கௌரவரே. எனவே என்னை கொன்ற பழியிலிருந்து தப்ப யாதவருக்கும் வழியமைகிறது. கிருதவர்மனிடம் சொல்லுங்கள்” என்றார். துரியோதனன் “ஆம், அது நன்று. என்னையும் உளக்குழப்பத்திலிருந்து விடுவிக்கிறது இது. நீங்கள் படைக்கலம் ஏந்தாதிருக்கையில் நானோ அங்கனோ உங்களைத் தாக்குவது தகுமா என்றே உள்ளூர எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான்.
அங்கே நிகழ்வதென்ன என்று சதானீகன் வியந்தான். விளையாட்டு ஒன்றில் களம் பகிர்ந்துகொள்பவர்கள்போல அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவர் இருவரையும் வைத்து விளையாடிக்கொண்டிருந்தார். அவன் எண்ணியதை கேட்டதுபோல் அவர் அவனிடம் “அனைத்தும் இனிதே முடிந்தது அல்லவா? அவரவர் விழைந்ததுபோலவே” என்றார். அவன் தலையசைத்தான். “நன்று, நான் நீராடி ஒருங்கி வருகிறேன். இன்று நாம் ஒரு நல்லுணவில் ஒருங்கமர்வோம்” என்றார் இளைய யாதவர்.
படகுகள் யமுனையின் அலைவெளிமேல் எழுந்ததும் சதானீகன் நீள்மூச்சுடன் திரும்பி அருகே நின்றிருந்த நிர்மித்ரனிடம் “இன்னும் ஒருநாளில் இந்திரப்பிரஸ்தத்திற்கு மீள்வோம், இளையோனே” என்றான். “அங்கிருந்து கிளம்பும்போது ஒரு பெரிய விடுதலை என உணர்ந்தேன். இப்போது அங்கு திரும்புவது நெஞ்சை இனிக்க வைக்கிறது.” நிர்மித்ரன் “இப்போது அங்கே நாம் பேசிக்கொள்ள நிறைய செய்திகள் உள்ளன. நான் சென்றதுமே ஏதேனும் சூதனை வரவழைத்து இவற்றை எல்லாம் பாடலாகப் பாடும்படி கோரவிருக்கிறேன்” என்றான்.
“ஏன்? நீ என்ன வீரச்செயல் புரிந்தாய்?” என்றான் சதானீகன். “நான் புரிந்தவை வீரச்செயல்களா என்பதை அவர்கள் முடிவெடுப்பார்கள். இளவரசர்கள் ஆற்றுவதனைத்தும் வீரச்செயல்களே” என்றான் நிர்மித்ரன். “ஆனால் எண்ணிப்பார்க்கையில் நான் இழந்தது மிகுதி என எண்ணுகிறேன். சற்றே துயில்நீத்து நான் இளைய யாதவருடன் தந்தை பேசிய இடத்துக்கு வந்திருக்கலாம்.” சதானீகன் சிரித்தான். “ஆனால் வராததுகூட நன்றே. நான் கதைகளை ச்சொல்லி என்னை நிறைத்துக்கொள்ளலாம். அதற்கு மெய்நிகழ்வின் தடை இல்லை” என்றான் நிர்மித்ரன்.
“மூத்தவர் அனைவரும் இந்திரப்பிரஸ்தத்திற்கே மீண்டுவிட்டனர்” என்று சதானீகன் சொன்னான். “அபிமன்யூ மட்டும் துவாரகையிலேயே தங்கியிருக்கிறான். அவன் உபப்பிலாவ்யத்திற்கு மீள விழையவில்லை.” நிர்மித்ரன் ஏன் என்று கேட்காமல் அலைகளை நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் “போர் நிகழுமா, மூத்தவரே?” என்றான். “பெரும்பாலும் நிகழும்” என்றான் சதானீகன். “நாம் அதைக் கடந்து வாழ்வோமா?” என்றான் நிர்மித்ரன். அவனை திரும்பி நோக்காமல் “பெரும்பாலும் வாய்ப்பில்லை, இளையோனே” என்றான் சதானீகன்.
சற்றுநேரம் கழித்து திரும்பி நோக்கியபோது நிர்மித்ரன் நீரை நோக்கிக்கொண்டிருப்பதை சதானீகன் கண்டான். “அஞ்சுகிறாயா?” என்றான். அவன் திரும்பி நோக்கவில்லை. அவன் தோளில் கைவைத்து “இங்கே பார், அஞ்சுகிறாயா?” என்றான். அவன் கண்கள் கலங்கியிருந்தன. சிரிப்பை வரவழைத்தபோது முகம் கோணலாகியது. “இல்லை என்றால் அது பொய்” என்றான். சதானீகன் நகைத்து “முன்னரே அறிந்திருந்தால் அச்சத்தை கடக்கமுடியும்” என்றான்.
“ஆக, இதற்காகத்தான் நம் தந்தையர் முழுமூச்சாக முனைகிறார்கள் அல்லவா?” என்றான் நிர்மித்ரன். “அன்றுகாலை புலி வாயில் மடியவிருக்கும் மான் விரைந்தோடுகிறது, அந்தக் கணத்தை நோக்கி” என்றான் சதானீகன். “கவனரின் சப்ததளமண்டலியின் வரி” என்றான் நிர்மித்ரன். “எல்லாவற்றுக்கும் ஒரு வரி முன்னரே இருக்கிறது.” சதானீகன் “ஆம், நூல்களுக்கு வேறென்ன வேலை?” என்றான். “மூத்தவரே, நம் தந்தையருக்கு உள்ளுணர்வு இருக்குமா?” என்றான் நிர்மித்ரன். “நமக்கே இருக்கிறது, அவருக்கு இருக்காதா என்ன? இளைய தந்தை சகதேவர் ஒவ்வொன்றையும் முற்றுண்மையென்றே அறிந்திருப்பார்.”
நிர்மித்ரன் “விந்தைதான்” என்றான். “எவரும் எதுவும் செய்யமுடியாது. நேராக அதை நோக்கிச் செல்வதைத் தவிர. மீறவும் விலகவும் முயல்வதுகூட அதை நோக்கிச் செல்லும் பயணத்தின் அசைவுகளே” என்றான் சதானீகன். நெடுநேரம் அலைகளை நோக்கிநின்றபின் நிர்மித்ரன் “ஒருகணத்தில் திரும்பி பொருளற்ற கேலிக்கூத்தாக மாறிவிட்டன அனைத்தும்” என்றான். “இன்னும் சற்றுநேரம் இங்கே நில். மெல்ல மெல்ல பொருளேற்றம் செய்துகொண்டு உணர்வெழுச்சிகளும் சொற்பெருக்கும் கொள்வாய். மானுடன் சிக்கியிருக்கும் மாயைக்கு எல்லையே இல்லை. அது பிரம்மத்தின் தோற்றம் என்கின்றனர் முந்தையோர்” என்றான் சதானீகன்.