மயக்கமென்ன?
அன்புள்ள ஜெ.
வணக்கம். நலந்தானே.
மரவள்ளி எங்களுக்கு உணவல்ல. முக்கிய பணப்பயிர்.அறுவடை சமயத்தில் ஓரிரு நாட்கள் வேய்த்து சாப்பிடுவோம்.அவ்வளவுதான்.
நன்கு வெந்த கிழங்குடன் எள்ளு தூள் சேர்த்து வெல்லப்பாகு ஊற்றி பிசைந்தால் கெட்டியான பேஸ்ட் கிடைக்கும். பார்க்க வண்டி மை போன்று கருப்பாக இருந்தாலும் அலாதியான சுவை, குமரி மக்கள் அறியாதது. அடுத்தமுறை நீங்கள் இங்கு வரும்போது ருசிக்கலாம்!
கிழங்கை நேரடியாக நெருப்பிலிட்டு கரிக்கட்டையை பிளந்து தின்ற காலம் மலையேறிவிட்டது. சுட்ட கிழங்கின் மணம் நாசியில் இருக்கிறது.
தன்னீர் பற்றாக்குறையால் எங்கள் பகுதியின் முக்கிய விவசாயம் குச்சிதான் ( மரவள்ளியை குச்சி கிழங்கு என்கிறோம்!). தற்போது சொட்டு நீர் பாசனம் கை கொடுக்கிறது.
நடவு செய்யும்போது சிறிதளவு நீர் இருந்தால் போதும். வேர் பிடித்துவிட்டால் வருடம் முழுதும் மானாவாரியாகவேகூட விளைந்துவிடும். ஓரளவு மகசூலும் கிடைக்கும். இவ்வருடம் 70 கிலோ மூட்டை ரூ.600 விலைபோகிறது. ஓரளவு நல்ல விலைதான். தமிழகத்தில் சேலம்,தர்மபுரி மாவட்டங்களில்தான் கிழங்கு மாவு,ஜவ்வரிசி ஆலைகள் (சேகோ பேக்டரி ) அதிகம்.
இத்துடன் மரவள்ளியின் தழைதான் எங்கள் கால்நடைகளின் ஆறு மாத தீனி. நெல் நடவு நிச்சயமில்லாத நிலையில் வைக்கோலுக்கு பதில் குச்சித்தழையையும் தீவனத்தட்டையும் நம்பியே எங்கள் கால்நடைகள் உள்ளன. எனது வளர்ப்பில் வெறும் குச்சி தழையை மட்டுமே தின்று10 ஆடுகள் எப்போதும் கொழு கொழுவென்றிருக்கிறது. பழகிவிட்டதால் இதிலுள்ள நச்சு ஒன்றும் செய்வதில்லை.
தங்கமணி
மூக்கனூர்ப்பட்டி
***
அன்புள்ள தங்கமணி
ஆடுகள் தாவரநஞ்சுக்குத் தாக்குப்பிடிக்கும். பசுக்களுக்கு பிரச்சினை. வெயிலில் சற்றே வாட்டி கொடுத்தால் பிரச்சினை இல்லை.
மரவள்ளியை தின்பண்டமாகவே மற்றவர்கள் உண்கிறார்கள். நாங்கள் மைய உணவாக
ஜெ
வணக்கம் ஜெ,
நீங்கள் மரச் சீனிக் கிழங்கைப் பற்றி எழுதிய போதெல்லாம் , அது எப்படியிருக்கும், இனிப்பாய் இருக்குமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சீனி என்ற சொல் என்னைக் குழப்பி இருக்கிறது. ஆனால் நீங்கள் அக் கிழங்கு படத்தைப் போட்டவுடந்தான், அட, இது மரவள்ளிக் கிழங்கு இல்லையா என்று என் சந்தேகம் தீர்ந்தது. மலேசியாவில் இதனை மரவள்ளிக் கிழங்கு என்றே அழைக்கிறோம்.
இங்கேயும் இக்கிழங்கு வறுமையின் குறியீடாகவே பார்க்கப்பட்டது. இரண்டாவது உலக யுத்த தொடக்க காலத்தில், அதாவது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் , ஜப்பானிய ராணுவம் சயாம் வழியாக மலாயாவுக்குள் நுழைகிறது. அவர்கள் சந்தடியில்லாமல் நுழைந்த சில நாட்களில் தரை மார்க்கமாயும், ஆகாய மார்க்கமாயும் திடீர் தாக்குதலை மேற்கொள்கிறார்கள். இந்த தடாலடியை எதிர்ப் பாராத பிரிட்டிசார் நிலைகுலைந்து சிதறி ஓடுகிறார்கள். ஜாப்பானிய கொடுங்கோலாட்சி நான்காண்டு காலம் மலாயா மக்களை வாட்டி யெடுக்கிறது. பிரிட்டிசார் ஆட்சி காலத்தில் ரப்பர்த் தோட்டத்து வேலை வருமானத்தை நம்பி வாழ்ந்த மக்கள் சோற்றுக்கு வழியற்று, விழி பிதுங்கு நிலை உண்டாகிறது ஜப்பானியர் நுழைவால்.
அதே தருணத்தில்தான் சயாம் பர்மா மரண ரயில் அமைக்க மலாயா மக்கள் கொத்தடிமைகளாக இழுத்துச் செல்லப் படுகிறார்கள். அப்போது மக்கள் எதிர்நோக்கிய வறுமைக்கு இந்த மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி பசிக் கொடுமையை ஓரளவுக்குத் தீர்க்கிறது. இந்தியாவில் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தாதுப் பஞ்சம் உண்டான போது நீங்கள் குறிப்பிடும் மரச் சீனிக் கிழங்கு பெரும் பசியைத் தீர்த்தது போல ஜப்பானியர் ஆட்சியிலும் மலாயா மக்களுக்குக் கைகொடுத்திருக்கிறது. எனவே வறுமையையான கால்க் கட்டத்திலெல்லாம் ஆசிய மக்கள் மரவள்ளிக் கிழங்கை உற்பத்தி செய்திருக்கிறார்கள்.
மரவள்ளித் தண்டை நட்ட இரண்டரை முதல் மூன்று மாதத்தில் கிழங்கை அறுவடை செய்யலாம் என்பதாலும். எந்த வகை மண்ணில் நட்டாலும் இது முளைத்துச் செழித்துவிடும் என்பதாலும் இக்கிழங்கு பெரும் பசிக்கு உணவாக ஆனது. இங்கே சீன்ர்களைப் பற்றி ஒரு பழமொழி சொல்வார்கள். சீனர்கள் மரவள்ளிக் கிழங்கு போல, போட்ட இடத்தில் முளைத்து செழித்து விடுவார்கள், என்பதே அது.
மரவள்ளிக்கிழங்கை சமைத்துண்ணும் பல வகைமயைக் குறிப்பிடுகிறீர்கள். மலாயா மக்கள் , ஜப்பானியர் ஆட்சியில் இக்கிழங்கு நெருப்பில் அல்லது சாம்பலில் சுட்டுத் தின்றும் வாழ்ந்திருக்கிறார்கள். உப்போ சீனியோ இருந்தால் அதில் தொட்டு சாப்பிட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் கருப்புச் சீனி என்று நாங்கள் அழைக்கும் பதப்படுத்தி வெள்ளைத் துகல் சீனி ஆக்கப்படாத ஈரநிலையில் இருக்கும் சீனிவகை அது. கிட்டதட்ட வெல்லம் போன்ற தோற்றம் கொண்டது. அல்லது அதனை அவித்து சீனி தேங்காய்த் துருவல் கலந்து சாப்பிடுவாரகள்.
இன்னொரு வகை நெத்திலி , கடுகு தாலிப்பு, காய்ந்த மிளாகாயை, அவித்த மரவள்ளிக்கிழங்கில் கலந்து பிரட்டியும் உண்பார்கள். நறுக்கி பொறித்தும் உண்பார்கள். இப்போதுள்ள குழந்தைகளுக்கு மரவள்ளைக் கிழங்கைத் தெரியாது. இப்படிச் சில வகை சமையல்தான் நான் உண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் குறிப்ப்டும் எண்ணற்ற வகை சமையல் இங்கே இல்லை.
மலேசியாவில் , சா.ஆ. அன்பானந்தன் என்ற எழுத்தாளர், ஜப்பானியர் ஆட்சி காலத்தில் நடந்த கொடுமையை முன்வைத்து, ‘மரவள்ளிக் கிழங்கு ‘ என்ற குறு நாவலையும் எழுதியிருக்கிறார்.
கோ.புண்ணியவான்.
***
அன்புள்ள புண்ணியவான்,
இலங்கையிலும் மரவள்ளி ஒரு முக்கியமான உணவாக அமைந்து ஏழைகளைக் காப்பாற்றியிருக்கிறது என்பார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் உலர்ந்த மரவள்ளி குறித்து பேசுவார்கள்.
மரவள்ளியை வைத்தே ஒரு பெருநாவலை எழுதலாம்போலும்
ஜெ