ஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்குறித்து

 

untitled

ஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்- 2017

அன்பு ஜெ ,

 

 

ஆஸ்திரேலியாவில் இந்த ஓர்பாலின  திருமண சர்சசை நிகழும்  பின்னணியை தெரிந்து  கொள்வது இது குறித்த நம் பார்வைகளை மேலும் விரிவாக ஏதுவாய் இருக்கும் என்று  நினைக்கிறேன் .ஆஸ்திரேலியாவில் ஓரின சேர்க்கை குற்றம் அல்ல , ஒரு பாலினத்தவருக்கு  de facto couples என்று சொல்லக்கூடிய  சட்ட ரிதியாக திருமணம் செய்துகொள்ளாமல்  “யதார்த்தத்த்தில் சேர்ந்து வாழும் தம்பதியினர்” என்ற அந்தஸ்து 2008 யிலேயே அளிக்கப்பட்டுவிட்டது   , அதாவது திருமணம் சார்ந்த சட்ட ரீதியான பாதுகாப்பு ( சொத்துரிமை , விவாகரத்து , தத்தெடுத்தல் , மருத்துவ முடிவுகள் ) தவிர குடும்ப உதவித்ததொகைகள் , குழந்தைகளுக்கான உதவித்தொகைகள் , வருமான வரி சலுகைகள்  போன்ற அரசு சலுகைகள் இருபாலின “யதார்த்த ”  தம்பதியினருக்கு சமமானதாகவே இருக்கிறது.இப்பொழுது நடக்கும் விவாதம்  மேலே சுட்டியவையின்  இயல்பான நீட்சியாக  “திருமண நிகர் உரிமை” யை  கோருகிறது , அதாவது சட்ட ரீதியான அங்கீகாரமும் அதன் மூலம் சமூகத்தில் சமமாக கருதி நடத்தப்படும் வாய்ப்பும்.

 

 

மொத்த அஸ்திரேலிய மக்கள் தொகையான 2.3 கோடியில் தங்களை  ஓரின ஈடுபாடு உள்ளவர்களாக அடையாளப்படுத்திக்கொள்வோர் 4.5 % என்றாலும்  2016 ல் நடந்த அதிகாரப்பபூர்வ கணக்கெடுப்பில் தங்களை ஓரின தம்பதியினராக அறிவித்துக்கொண்டவர்கள் 47,000 பேர்களே இவ்விரண்டு  வகைமைக்கும்  இடையே உள்ள வித்தியாசம் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.தங்களை ஓரின ஈர்ப்பாளராக முன்வைக்கும் அனைவருமே தம்பதியினர் அல்ல . ஒருபால் தம்பதியினர் தங்களை ஒரு குழுவாகவோ அமைப்பாகவோ  அடையாளப்படுத்திக்கொள்ளும் பொழுது இவர்கள் அனைவரிடமும் சேர்த்து LGBTQI என்றே தங்களை  கூட்டாக அடையாளப்படுத்திக்கொள்கின்றனர் , இங்கு வருடா வருடம் நடக்கும் ஓரின சேர்க்கையாளர்களின் Mardi Gras ஊர்வலத்தில் இவர்கள் அனைவருமே கலந்து கொள்கின்றனர்.இதில் கணிசமானவர்களுக்கு இது ஆத்மார்த்தமான அன்பின் வெளிப்பாடாக இருப்பினும் பாலியல்  பிறழ்வுகளை  இவ்வகை வெளிப்பாடாக முன் வைக்கும் போக்கும் இதனுள்ளேயே அடங்கிவிடுகிறது .விதிக்கப்பட்டதும்  பிறழ்வும் எளிதில் பிரித்தறிய முடியாத கூட்டு அடையாளமாக ஆகிவிடும் பொழுது இது குறித்த நம் அவதானிப்புளும்  மிகவும் சிக்கலாகிவிடுகின்றது

 

 

இன்னொரு கோணத்தில் பாலின   இருமை  (Gender Binary ) என்பதே நிலையான  ஒன்றல்ல என்பதான குரல்  வலுப்பெற்று வருகிறது  உடற்கூறு சார்ந்த பாலினம்   , பால் அடையாளம் , பால் வெளிப்பாடு  போன்றவற்றை வெவ்வேறாக பார்க்கும் போக்கு அதிகரித்திருக்கிறது  . பால் அடையாளமும் பாலியல் தேர்வும் (sexual orientation ) ஒரு  நிலைத்த  சமன்பாட்டில் இருக்க வேண்டியதில்லை என்று வாதிடுகின்றனர்  ஒரு சாரார் .இன்னும் ஒரு படி மேலே போய் பலர் தங்களை பால் சார்பற்றவர்களாக அறிவித்துக்கொள்கின்றனர் ( Gender Neutral ) .அதாவது ஒரு சட்டையை அணிவது போல தங்கள் பால் அடையாளத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை .அவர்களை குறிக்க Mx , Ze , Hir  என்றெல்லாம்  சிறப்பு சுட்டுப்பெயர்கள்  உள்ளன. ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் கூட இந்த பெயர்கள்  இடம் பிடித்து விட்டன. ஆம், லேசாக தலை சுற்றும் தான் .

 

 

தெலுங்கு பட க்ளைமாக்ஸ் போல இதில் ஒரு அரசியல் “டிவிஸ்டுலு” வும் சேர்ந்து கொண்டது. லிபரல் கட்சி பிரதமருக்கு இந்த மசோதாவை நிறைவேற்ற தன கட் சியிலேயே கூட போதிய ஆதரவு இல்லை ஆனாலும் இதை சட்டமாக்க வேண்டும் , அவர்களை நேரடியாக பகைத்துக்கொள்ளாமல் “மக்களின் குரலாக ” இதை ஒலிக்க வைக்க மக்களிடமே  இது நேரடி தபால் வாக்கெடுப்பாக நடத்தப்படுகிறது  .அதாவது வாக்கெடுப்பில் இது வெற்றி பெற்றால் இது பின் தனி நபர் மசோதாவாக மேலவையில் சமர்ப்பிக்கபப்டும் , கூடவே மத உரிமைகளை நம்பிக்கைகளை இடையூறு  செய்யாத வண்ணம் சில ஷரத்துக்களை சேர்த்துக்கொள்ளும் .பிரதமர் மால்கம் டர்ன்புல்ளுக்கு  இதன் மூலம்  எந்த தரப்பையும் நேரடியாக பகைத்துக்கொள்ள வேண்டியிராது

 

 

ஓரின திருமணம்  சட்டப்பூர்வமாக முதன் முதலில் அங்கிகரிக்கப்பட்டது   2001 ல் – ெதர்லாந்தில் .இதுவரை மொத்தம் 25 நாடுகளில் தற்சமயம் ஓரின திருமணம் சட்ட ரீதியாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது ,பெரும்பாலான  நாடுகளில் இந்த மாற்றம் கடந்த பத்தாண்டுகளிலேயே நிகழ்ந்திருக்கிறது. இதுவரை ஆசியாவில் எந்த நாடும் இன்னும் இதை நோக்கி நகரவில்லை அநேகமாக தாய்வானில்  இது முதலில் நிகழ வாய்ப்பிருக்கிறது ..எனவே இங்கு கேள்வி இது எப்பொது ஆஸ்திரேலியாவில் சட்ட பூர்வமாக்கப்படும் என்பது தானே ஒழிய ஆகுமா ஆகாத என்பதாக இருக்கவில்லை .

 

 

குடும்பம் என்ற வடிவமே வரலாறு தோறும் மாறிக்கொண்டு வந்திருக்கிறது . கூட்டுக்குடும்பம் என்ற முறை நெகிழ்ந்து சிறு குடும்பம் (Nuclear Family )  பின் ஒரு பெற்றோர் குடும்பம ( Single parent family ) சாதாரணமாகிவிட்டது  , இதில்   ஒர்பாலின  பெற்றோர் குடும்பங்களையும்  குடும்பம் என்ற அமைப்பின் இன்னுமொரு வெளிப்பாடாக நாம் வைத்து பார்க்கலாம் . . திருமணம் எனபதும் சட்ட ரீதியாகவும் சமூக  ரீதியாகவும் கடந்த 100 ஆண்டுகளில் மாறியபடியே தான் இருந்துள்ளது . மேற்கில் குடிமை நிகழ்வாக இருந்து வந்த திருமணம் ஒரு மதம் சார்ந்த நிகழ்வாக மாறியதே கூட 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான்.

 

 

ஐம்பது ஆண்டுகள்  முன்பு வரை அபாரிஜின்கள் வெள்ளையரை மணக்க தடை இருந்தது , தங்களுக்கு இடையே கூட மனம் முடிக்க அவர்களுடைய  காப்பாளர்களிடம் (protectors ) அனுமதி வாங்க வேண்டி இருந்தது  .  திருமணமான பெண்கள் அரசு வேலைக்கு  வேலைக்கு விண்ணப்பிக்க முடியாமல் இருந்தது  ( ஆண்களுக்கு வேலைஇல்லாமல் போய்விடுமாம் !) எனவே இந்த மாற்றம் என்பது ஒட்டு மொத்த சமூகத்தையும் பாதித்தாலும் இது ஒன்றும் முன் பின் நடந்திராத மாற்றம் அல்ல .

 

 

இந்த பின்னணியிலேயே ஒரு பால் திருமணத்திற்கான இந்த வாக்கெடுப்பு முன்வைக்கப்பட்டது , தபால் மூலம் அனைவருக்கும் ஒரே ஒரு கேள்வியை கொண்ட வாக்கு சீட்டு அனுப்பப்பட்டு அவரவர்  முடிவை தெரிவிக்க ஒன்றரை  மாத அவகாசமும் அளித்தனர். இந்த அணுகுமுறையால் இது பெரும் பொது விவாதமாக வடிவெடுத்தது . இரண்டு தரப்பும் தொலைகாடசிகளில் விவாதிப்பதும் , பலதுறைகளை  சார்ந்த   ஆளுமைகள் தங்களின் தனிப்பட்ட  தேர்வை வெளிப்படையாக முன்வைப்பதும் ,இது போன்ற விஷயங்களில் மௌனம் காக்கும்   பெரும் கார்ப்பரேட்  நிறுவனங்கள் கூட தங்கள் சார்பை வெளிப்படையாகவே  அறிவித்தன . இதன் முடிவு எந்த திசையில் இருக்கும் என்று எல்லோரும் ஓரளவு யூகித்த்திருந்தாலும் இது போன்ற பொது விவாதம் பலரது குரல்களை கேட்கும்படி  செய்தது . இது குறித்து தெளிவான நிலைப்பாடு அற்ற பலரும்  கூட இந்த ஒரு மாத கால அவகாசத்தில் ஒரு தெளிவான  புரிதலையும் நிலைப்பாடடையும்  நோக்கி செல்வதை கண்கூடாக கண்டேன் . வேறெந்த வாக்கெடுப்புக்கு இல்லாத அளவு மக்கள் இதில் ஆர்வமாக பங்கேற்றனர் .

 

 

ஓரின திருமணத்திற்கு ஆதரவளிக்க மறுக்கும் தரப்பு முன் வைக்கும் காரணி களில்  முக்கியமானது – இது பிறழ்வு  இயற்கையானது அல்ல , இது மத சுதந்திரங்களுக்கு  தடையாக இருக்கும்  , இது குழந்தைகளை பாதிக்கும் என்பதானவை.

 

 

நீங்கள் குறிப்பிட்டது போல் ஓரினசேர்க்கை ஒரு சிறு பகுதியினருக்கு இயல்பானதே , இதை அறிவியலும் ஏற்றுக்கொண்ட ஒன்றே , இதில் ஒருவர் கொள்ளும் மாற்று கருத்த்தை  அவரின் சொந்த நம்பிக்கைக்கு என்று மட்டுமே கொள்ள முடியும் ,மேலும் ஓரின திருமணங்களினால் மத  சுதந்திரங்களுக்கு பாதிப்பு வராத வாறு  காக்க அரசு தனியே குழுவொன்று அமைத்துள்ளது . எந்த மத அமைப்பும் , மத குருவும் ஓரின மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று மறுக்கும் உரிமையும்  வழிபாட்டு  தளங்களை திருமண விழாக்களுக்கு மறுக்கும் உரிமையும் காக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது .

 

 

ஆனால் இறுதியாக எழுப்பபப்பட்ட ஆட்சேபனை – இதன் மூலம்  குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் சவால்களுக்கும்  குழப்பங்களுக்கும்  ஒரு எளிய பதில் இல்லை என்பதே உண்மை . ஓரின பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் தேர்வால் எவ்விதம் பாதிக்கப்படுகிறார்கள்?, இரு பால் பெற்றோர் என்பது ஒரு குழந்தையின் உரிமையா ? பெற்றோரின் பால் தேர்வு குழந்தைகளின் பால் அடையாளத்தை எவ்விதம் பாதிக்கும் ? இது குறித்து குழந்தைகளுக்கு பள்ளிகளில் என்ன கற்று தரப்பு போகிறோம் ? , போன்ற   கேள்விகளுக்கு இன்னும் தெளிவாக விடைகள் இல்லை . இது குறித்த சில பே ட்டிகளும் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன ஆனால் மிக விரிவான ஆய்வுகள் ஏதும் நிகழ்ந்ததில்லை.

 

 

 

மேற்சொன்ன பின்னணியில் இந்த விஷயம் குறித்து நான் ஒட்டு   மொத்தமாக இவ்வாறு பார்க்கிறேன் .

 

 

1.ஓரின ஈர்ப்பு என்பது இயல்பில் வருவது , ஆனால் அவ்விதம் இருப்போர் சதவிகிதம் மிகவும் குறைவே , அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்காமல் அவர்களின்  அடிப்படை உரிமைகளை எந்த சிறுபான்மை குழுவையும் போல அரசு காக்க முன்வர வேண்டும்

 

 

2.பாலியல் நோக்கில்  விதிக்கப்பட்டதிற்கும் , ேஒருவரின் விருப்ப தேர்வுக்கும்  இடையே ஆன வேறுபாட்டை குறித்த தெளிவு நமக்கு அவசியமாகிறது , ஒரு சமூகம் பாலியல் பிறழ்வை அவ்வாறானதாக மற்றவற்றிலிருந்து பிரித்து அடையாளத்தப்படுத்தும் சுதந்திரம் இருக்க வேண்டும் .

 

 

  1. குழந்தைகளுக்கு பள்ளிகளில் இது குறித்து கற்று தரும் போதும்  Exceptions are not norms  என்ற புரிதலை முன்வைத்தே கற்பிக்கப்படவேண்டும்.ஒரு விஷயம் சட்டாப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவதற்கும்   அது பெரும்பான்மை நிலையில் வைத்து நோக்கப்படுவதும் முற்றிலும் வேறானவை .ஆர்வகோளாறான முற்போக்குவாதிகள் சிலர் இதை பாலியல் கல்விக்கு நிகராக கற்பிக்க வேண்டும் என்பது இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ளாமையின் விளைவே.

 

 

4.ஓரின தம்பதியினரால் தத்து எடுக்கப்படும் , வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு அரசு  கவனம் செலுத்தி அவர்களின்  சிறப்பு தேவைகளை உணர்ந்து அவற்றை அளிக்க முன்வர வேண்டும் உதாரணமாக  ஆஸ்திரேலயாவில் ஒருபால் பெற்றோர் குடும்பங்களில் கிட்டத்தட்ட்ட 7000 குழந்தைகள் வளருகின்றனர் ஆனால் இவர்களில் 80 % மேலானோர் வாழ்வது பெண்பால் பெற்றோரிடம் . ஆண்பால் பெற்றோரிடம் வளரும் குழந்தைகள் மிகவும் குறைவே ,இந்த சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் வளர்சசி குறித்த கூடுதல் கவனம் தேவை

 

 

5.இது போன்ற அடிப்படை சமூக மாற்றங்கள் நிகழ் அதற்குரிய சட்ட  வரைவு அவசியம் , ஆனால் அது சமூக மாற்றமாக பரிணமிக்க காலம் எடுக்கவே செய்யும் .அதே போல இதற்கு தயாராக இல்லாத ஒரு சமூகத்தில் ஒவ்வகை மாற்றங்களை அவசரகதியில் திணிப்பதும் இது குறித்த கசப்பை மேலும் அதிகமாக்குவதிலேயே முடியும் .

 

 

சட்டம் என்பது ஒரு குறியீட்டு அங்கீகாரம் தான் சமூக அங்கீகாரமே இச்சட்டத்தின் உச்சகட்ட குறிக்கோள் , அது ஓரின தம்பதியினர் சேர்ந்து இயல்பாக வாழுந்தோறும் இந்த ஏற்பு இயல்பாக  ஏற்படும் என்றே நினைக்கிறேன்.

 

 

திருமணத்தில் இது ஒரு வகையே , இரு பால் மணம்  போலவே இதிலும் அன்பே  பிரதானமாகிறது , திருமணத்திற்கான  அவா என்பதே அந்த உறவை உறுதிப்படுத்தும்  விழைவுதான்.இது திருமணம்  என்ற உறவின் விளக்கத்தை விரிவாக்குவதன் மூலம் குடும்ப அமைப்பை இன்னும் வலுவாக்கவே செய்யும் என்று நினைக்கிறேன் ..

 

 

இந்த படத்தில்  இருப்பது ஆர்த்தரும்  ஜானும் ஐம்பது வருடமாக சேர்த்து வாழ்ந்து வரும்   ஒருபால் தம்பதியினர் .

 

 

மேலே  குறிப்பிட்டது  போல் ஆசியாவில்  எந்த நாடுமே இதுவரை ஒருபால் மணத்தை சட்ட பூர்வமாக்கவில்லை , இந்தியாவில் இது குறித்த விரிவான விவாதங்கள் எழ இன்னும் ஒரு பத்தாண்டுகள் ஆகலாம் , அதுவும் நம் நீதி மன்றங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் ஒன்றாகவே இருக்கும் என்று யூகிக்கிறேன் .

 

 

அன்புடன்

கார்த்திக்

சிட்னி

 

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 73
அடுத்த கட்டுரைஇருநாய்கள் – கடிதங்கள்