இருநாய்கள் – கடிதங்கள்

Hero

இருநாய்கள்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு

 

வணக்கம் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இருநாய்கள் என்ற பதிவை படித்தேன்.திரும்பவும் என பழைய நினைவுகளை மீட்டு தந்தமைக்கு நன்றி. இதுவரை நான்கு நாய்கள் வரை வீட்டில் வளர்த்தியிருக்கிறோம். வீட்டின் முகப்பில் சாலை இருப்பதால் முதல் மூன்று நாய்களும் விளையாட்டு குணம் காரணமாகவே விபத்தில் அடிபட்டு இறந்தது.அப்பா தான் எடுத்து வருவார்.ஒவ்வொரு நாய்க்கும் மிஞ்சிபோனால் இரண்டு மாதம் ஆயுள் (அதுவே அதிகம்).பள்ளி முடிந்து வீடு திரும்பியதும்  முதலில் நாய் உயிருடன் இருக்கிறதா என்று தேடிய நாட்களே அதிகம்.அப்படி ஒருமுறை அந்த மூன்றாவது நாய் மட்டும் மற்ற நாய்களை காட்டிலும் படு சுறுசுறுப்பாக இருந்தது.அதுவே என் மனதிற்கு பிடித்த நாய் என்ற நிலைக்கு வந்தது.

 

 

நாய் என்ற நிலையை தாண்டி தம்பியாகவே மதித்த சூழலில் சாலை விபத்தில் இறந்து விட்டான்.பள்ளி முடிந்து வந்ததும் அழுக ஆரம்பித்தவன் இரவு அப்பா வரும்வரை அழுதுகொண்டே இருந்தேன்.”இனிமேல் இந்த மாதிரி நாயை தூக்கிட்டு வந்தா நானே கொன்னு போட்ருவேன்..” என்ற வசனமெல்லாம் பேசிய சில நாட்களில் விடியகாலை நடை முடிந்து அப்பா இன்னொரு நாயை தூக்கி கொண்டு வந்தார்.இந்தமுறை அறிவாளியாக மாறி பாசம் வைக்கவே கூடாது என்ற முடிவில் இருந்தேன்.பார்த்தேன்..பார்த்துக்கொண்டே இருந்தேன்…இரண்டு மூன்று மாத கெடுவை தாண்டி முதல் வருட பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியது.வீட்டில் எல்லாருக்கும் மகிழ்வை தந்த ஜீவன் அது.அப்பா வந்ததும் எஞ்சின் சூட்டையும் பொருட்படுத்தாமல் பெட்ரோல் டாங்க்(petrol tank) மீது முன்னங்கால்களை போட்டு  என்ன வாங்கிவந்தார் என்று தேடிக்கொண்டு இருக்கும்.என் தங்கையை நான் அடிக்க கை ஓங்கினாலே கடிக்க வந்துவிடும்.இரவில் ,காலையில் அப்பாவின் விளையாட்டு அதனுடன் தான். பெல்ட்டை காட்டி அடிப்பது போல பாவனை செய்வார் உடனே அது முன்னங்கால்களை நீட்டி உடலை பின்னுக்கு வளைத்து வாலை கூர்மையாக்கி தப்பிப்பது போல் குதித்து விளையாடும்.சாப்பாடு பிடிக்கவில்லை என்றால் மூக்கின் உதவியோடு அதன்மேல் பாரபட்சம் பார்க்காமல் மண் அள்ளிப்போடுவான்.(தட்டத்தை தேடி கண்டுபிடிக்க வேண்டும்)

 

பல முறை நான் அதன் உணர்வுகளை அறிந்திருக்கிறேன்.நம்மிடம் இருந்து கற்க நிறைய முற்படுவது போல ஒரு பிரமையும் இருந்தது.என்ன தான் வளர்த்த நாயாக இருந்தாலும் சில குணங்களை என்றும் மாற்ற முடியாது என நினைக்கிறேன் முக்கியமாக சாப்பாடு வைக்கும் போது ஒழுங்காக வைத்துவிட்டு தள்ளி நின்றுகொள்ள வேண்டும்.குழந்தைகளிடம் இழுத்து இழுத்து மிட்டாய்களை காண்பிப்பது போல் செய்து பார்த்தேன்.நல்ல கடி கிடைத்தது.இன்னொரு முறையும் முயன்று கடி வாங்கினேன் ..ஒருநாள் பக்கத்து வீட்டின் கோழியை கடித்து குதறியது.முட்டாள்கள் நிறைய இருப்பதால் விஷம் வைத்து விடுவார்களோ என்று பயந்து பாதுகாப்பு காரணமாக  பாட்டி ஊரில் கொண்டுபோய் விட்டுவிட்டோம்.அங்கேயும் அதே மாதிரி கடித்தது பிறகு கோழிகளை பார்த்து பார்த்து அவைகளுடன் பழகி இன்று பாட்டி வீட்டு கோழிகளுக்கு தலைமை பாதுகாப்பாளன்!

 

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது  அப்பாவின் நினைவுகளை எனக்கு மீட்டித் தந்துகொண்டே இருக்கும் பல ஆதார சக்திகளில் முதன்மையானவன் இவனே.எப்போது போனாலும், பார்த்ததும் அவன் கால்கள் முதலில் என் நெஞ்சுக்கு வந்து அழுகை குரலில் கேவ ஆரம்பித்துவிடுவான்.அதன் நன்றியுணர்வு உண்மையிலே நம்மைக் காட்டிலும் அதிகம்.அதிகமாக இருப்பதால்தான் நாய்களாக பிறந்திருக்கிறது. இன்னொரு ஆச்சரியமான விசயம் என்னவென்றால் எடுத்து வந்த நாலு நாய்களும் மேல்புறம்  கருப்பு நிறமும் ,அடிப்புறம் முழுவதும் வெள்ளை நிறமும் வாலின் இறுதியில் வெண்மையும் கொண்டது.எல்லாவற்றையும் அதிகாலை நடைப்பயிற்சியின் போது எடுத்து வந்ததே..ஒன்று செத்த உடன் அடுத்த சில நாட்களில் மற்றது கிடைக்கும்..அதே நிறத்துடன்.! நான்கு நாய்களுக்கும் ஒரே பெயர் ஷேடோ(shadow) நிழல்..நிழல்..நிழலே தான்!

 

 

(பி.கு: ஒருமுறை அவனுக்கு தொற்றுநோய் வந்தது.இரண்டு நாட்களாக கிடைக்காமல் இறுதியில் பக்கத்தில் இருந்த தோட்டத்தில் இருந்தான் தூக்க போனதும் கடிக்க வந்தான்.நாய்கள் இப்படித்தான் நோய் என்று அதற்கு தெரிந்துவிட்டால் நம்மை பக்கத்தில் கூட அனுமதிக்காது.பின் சில கால்நடை க்ளினிகளுக்கு சென்று கேட்டதில் பிழைப்பதற்கு வாய்ப்பு குறைவு என்றார்கள்.கடைசியாக நானும் அப்பாவும் தூக்கிக்கொண்டு ஒரு இடத்திற்கு சென்றோம் . தங்கம் மெமோரியல் டிரஸ்ட் (திருப்பூர் தான் )கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறன்.உண்மையாகவே ராஜ மருத்துவம் பார்த்தார்கள்.மூன்று நாட்களுக்கு பெட்(bed) அட்மிட் .உயிருடன் மீட்டு கொடுத்து ஒரு ருபாய் கூட வாங்கவில்லை! உள்ளே இருக்கும் அத்தனை நாய்களும் விபத்தில் ஊனமானவை ,கை விடப்பட்டவை.இதை ஒரு சேவையாகவே நாய்களுக்கு இந்த டிரஸ்ட் செய்து வருகிறது.அறம் கதைகளில் வந்திருக்கவேண்டிய மனிதர்கள்!)

 

மிக்க அன்புடன்..

-ஷங்கர் சதா

 

 

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
‘இரு நாய்கள்’ கட்டுரை பிரமாதம். ஜெயகாந்தனின் ‘அக்ரஹாரத்தில் பூனை’ சிறுகதையை ஞாபகப்படுத்தியது.  “பூனை ‘என்னடே’ என்றது” படிக்கையில் அனிமேஷனில் பூனை பேசியது போல் இருந்தது.
சங்கர் துரைசாமி
அன்புள்ள ஜெ
நல்லநாய்களுக்கு இங்கே முறுக்கு உண்டா? என்று கேட்கும் ஹீரோவின் முகத்தை மீண்டும் படத்தில் பார்த்தேன். சிரிப்பு தாங்கவில்லை
நாம் நாய்களை குழந்தைகளாக ஆக்கிவிடுகிறோம் என நினைக்கிறேன். அல்லது குழந்தைகள் இனிமையான விலங்குகள்
ராஜாராம்

 

முந்தைய கட்டுரைஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்குறித்து
அடுத்த கட்டுரை”சார் பெரிய ரைட்டர்!”