சூரியதிசைப்பயணம்

images (6)

கிழக்குநோக்கிய இரு பயணங்களின் நேர்விவரிப்பு இது. பயணக்கட்டுரைகள் என்றல்ல அன்றாடப்பயணக்குறிப்புகள் என்றுதான் சொல்லமுடியும். பயணம் முடிந்து திரும்பிவந்து நினைவுகளைத் தொகுத்துக்கொள்வது பயணக்கட்டுரைகளின் இயல்பு. இவை அன்றன்று கண்ணுக்கும் கருத்துக்கும் பட்டவற்றின் பதிவு. முக்கியமானவை விடுபட்டிருக்கலாம். அல்லாதவை பதிவாகியிருக்கலாம். ஆனால் ஒரு பயணத்தின் அன்றாட ஒழுக்கில் எவையெல்லாம் நிகழ்கின்றன, உள்ளம் எவற்றுக்கெல்லாம் எதிர்வினை ஆற்றுகிறது என்பது இக்குறிப்புகளில் இருக்கும்.

வ்டகிழக்கு நோக்கி என்னும் பயணம் 2011 மே மாதம் எங்களால் மேற்கொள்ளப்பட்டது.கல்கத்தா சென்று அங்கிருந்து சிலிகுரி வழியாக சிக்கிம், பூட்டான் சென்று மீண்டோம். அப்பயணத்தில் சிக்கிம் எல்லையில் சீனாவுக்கு அருகே உள்ள மலர்வெளியையும் பனிப்படுகையையும் சென்று நோக்கினோம். பழைமையையே புதுமையின் அடையாளமாகக் கொண்டுள்ள பூட்டான் இன்றும் கனவென உள்ளத்தில் எழுகிறது. மலையின் மணிமுடி போன்று நின்றிருந்த புலிக்குகைமடாலயம். குளிர்ந்த மலைகள் சூழ்ந்த அந்நாட்டின் பெரும்பகுதியில் நிறைந்திருந்த அமைதி. மடாலயங்களின் மணியோசையின் ஓங்காரம்.

சூரியதிசைப் பயணம் 2015 மார்ச் மாதம் நாங்கள் மேற்கொண்டது. இம்முறை கல்கத்தாவில் தொடங்கி ஏழுசகோதரிகள் எனப்படும் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக சுற்றிவந்தோம். ஒரு நிலத்தைப்பற்றி நேரில் சென்றாலொழிய மெய்யாகவே புரிந்துகொள்ளமுடியாது என்பது என் எண்ணம். அது மீண்டும் மீண்டும் பயணங்களில் உறுதிப்படுகிறது. இந்தியா இன்றும் ஆங்கிலத்தாலேயே இணைக்கப்படுகிறது. ஆங்கிலச் செய்தியூடகங்கள் உருவாக்கும் சித்திரமே நமக்கு வடகிழக்கு குறித்து உள்ளது. அது அரசியல் காரணங்களால் திரிபடைந்தது. பலவகை முற்போக்குப் பிற்போக்கு உள்நோக்கங்களுடன் சமைக்கப்படுவது.

வடகிழக்கு குறித்து நாங்கள் கொண்டிருந்த பெரும்பாலான உளப்பதிவுகள் செய்தித்தாள்களால் உருவாக்கப்பட்டவை. அவற்றை எழுதியவர்களில் வடகிழக்குக்கு நேரில் சென்றவர்கள் எவருமில்லை. வடகிழக்கு ‘இந்திய ஆதிக்கத்தில்’ உள்ள ஒரு நிலப்பகுதி என்பது இங்குள்ள இடதுசாரிகளின் நிலைபாடு. மறுபக்கம் அது ‘கிறிஸ்தவ மதமாற்றச் சக்திகளின் பிடியில் உள்ள நிலம்’ என்பது வலதுசாரிகளின் நிலைபாடு. இரண்டுமே பொய்கள்.

வடகிழக்கின் பிரச்சினை அங்குள்ள தொன்மையான பழங்குடிப் பண்பாடுகளுக்கிடையேயான பூசல். அதைப்பயன்படுத்திக்கொண்டு குடியேறி ஆக்ரமித்திருக்கும் வங்கதேசத்தவருக்கும் அவர்களுக்கும் இடையேயான மோதல். நாங்கள் நாகாலாந்து சென்றபோது வங்கதேசக் குடியேறிகளுக்கு எதிராக இந்திய அரசு தங்களுக்கு உதவவேண்டும் என்ற கோரிக்கையையே அங்கே பல இடங்களில் கேட்டோம். நிலம் மீது முற்றுரிமை கொள்ளாத பழங்குடிகளின் நிலங்களை குடியேறிகள் அபகரிப்பதே மையப்பிரச்சினை. நாங்கள் அங்கிருந்து வந்த சிலநாட்களில் நாங்கள் அங்கிருந்தபோது ஊகித்திருந்தபடியே நேரடிமோதல் வெடித்தது. திமாப்பூர் கலவரம்.

வடகிழக்குப்பகுதியின் இன்றைய வளர்ச்சிக்கு மட்டுமல்ல, அது இந்தியப்பெருநிலத்துடன் ஆழ்ந்த உறவுகொண்டிருப்பதற்கும் டான்பாஸ்கோ போன்ற கிறித்தவ அமைப்புக்கள் பெரும்பங்காற்றுவதையும் அங்கே கண்டோம். நாங்கள் கண்டவை அப்படியே அவ்வப்போது பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவை வழக்கமாக வடகிழக்கு குறித்து சொல்லப்படும் கதைகளை மறுத்து மேலும் நுண்ணிய சித்திரங்களை அளிப்பவை என்பதை வாசகர்கள் உணரமுடியும்.

உதாரணமாக உனக்கோட்டி, திரிபுராவின் . மிகத்தொன்மையான சைவமையம் இது. ஆனால் இங்குள்ள சிவன் நாம் இந்தியாவெங்கும் காணும் சிவன் அல்ல. மலைப்பாறைகளை அப்படியே செதுக்கி சிவனின் முகமாக ஆக்கியிருக்கிறார்கள். மெய்யான அருவியே சிவன் தலையிலிருந்து பொங்கி வழிகிறது. யானைத்தலை கொண்ட பூதகணங்கள். பல்வேறு கற்சிற்பங்கள் அனைத்தும் இந்துச் சிற்பக்கலைக்கும் திரிபுராவின் தொன்மையான பழங்குடிப்பண்பாட்டுக்கும் இடையேயான உரையாடலின் விளைவுகள்.

இன்னொரு உதாரணம், அஸாமின் அகோம் மன்னர்களின் மொய்தாம் எனப்படும் சமாதிக்குன்றுகள். அவர்கள் தாய்லாந்துவழியாக வந்த சீன இனத்தவர். ஆனால் அன்றிருந்த இந்துப்பண்பாட்டையே அவர்கள் தங்களுடையதென ஏற்றனர், அதற்கு பெரும் கொடைகளையும் ஆற்றினர்.

பழங்குடிப்பண்பாடு மிக ஆழ்நிலங்களில்கூட தனித்ததாக இல்லை, அது இந்து,இந்தியப் பண்பாட்டுடன் ஆழமான உரையாடலில் ஈடுபட்டு தன்னை வளர்த்துக்கொண்டேதான் இருந்தது. அதன் கொடைகளைப்பெற்றே இந்துப் பண்பாடு தன்னை விரிவாக்கிக்கொண்டது என்பதே இந்தியா காட்டும் வரலாற்று உண்மை.

இப்படி எண்ணற்ற நுண்சித்திரங்களை இப்பயணம் அளிக்கும். பிரம்மபுத்திராவிலுள்ள சிறு தீவான மாஜுலியின் தனித்துவம் கொண்ட சத்ராஸ் எனப்படும் வைணவப் பண்பாடு, மணிப்பூரின் வைணவ மரபு, மிதக்கும் தீவுகள் கொண்ட மணிப்பூரின் லோக்தக் ஏரி என காட்சிகள் விரிந்தபடியே செல்லும். ஒவ்வொன்றும் வெவ்வேறுவகையான அறிதல்களை எனக்கு ஏற்படுத்தியவை.

இந்தியப் பண்பாட்டின் ஒருமையும் தொன்மையும் மிகக்கண்கூடானவை, ஒரு பையை தோளிலிட்டபடி கிளம்பிச்சென்றால், திறந்த மனம் கொண்டிருந்தால், எவரும் காணக்கூடியவை. அப்படி சிலரை கிளம்பிச்செல்லவைப்பதே இக்குறிப்புகளின் நோக்கமாக இருந்தது. இந்நூலின் நோக்கமும் அதுவே. இந்தியாவை பார்த்தறியுங்கள், அதன் அகம்தான் புறமாக வெளிப்படுகிறது.

இந்நூலை என் பயணத்தோழரான செந்தில்குமார் தேவன் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்

ஜெயமோகன்

கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் சூரியதிசைப்பயணம் நூலுக்கான முன்னுரை

முந்தைய கட்டுரைசிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–26