ஏழு : துளியிருள் – 23
இந்திரகோட்டத்தின் மணியாகிய பிரபாகரம் முழங்கியதும் நிமித்திகன் மேடையேறி உரத்த குரலில் “அனைத்து வெற்றிகளும் சூழ்க! அஸ்தினபுரியை ஆளும் மாமன்னர் துரியோதனரின் ஆணையின்படி இங்கு இதோ போர்க்களியாட்டு தொடங்கவிருக்கிறது. இளையோர் மகிழ்க! தேவர்கள் நிறைவுகொள்க!” என்றான். அதுவரை இருந்த உறைந்த உளநிலை மீண்டு களிவெறி கொள்ளத்தொடங்கியது. மேலும் மேலுமென கூச்சலிட்டுத் துள்ளி ஆர்ப்பரித்து தங்கள் உவகையை அவர்கள் பெருக்கிக்கொண்டனர்.
தங்கள் வெறியை ஒருவரிலிருந்து ஒருவர் பெற்றுக்கொண்டு வானில் வீசினர். அவர்கள் உடலிலிருந்தும் குரல்களிலிருந்தும் எழுந்து காற்றில் நிறைந்த அவ்வெறி அவர்கள் இன்றியே தான் நிற்பதுபோல, தனியொரு பெருக்கென மாறியது. விழிதொட்டு கையள்ளி எடுத்துவிட முடியுமென்பதுபோல உருஎடுத்து பெருகி பேருருக் கொண்டது. பின்னர் அவர்கள் ஒவ்வொருவரையும் அது ஆழிப்பேரலையென அள்ளிச்சென்றது. கட்டற்ற காட்டுப்புரவியென எழுந்து அவர்களை வீசிப்பற்றி விளையாடியது. சுழிக்காற்றில் துகள்களென ஒவ்வொருவரும் அலைகொந்தளித்தனர்.
களிமுரசுகள் நடைமாற்றி எருதுநடைத் தாளம் கொண்டன. கொம்புகள் மும்முறை அதிர்ந்து அடங்கின. ஓசைகளே விழிமறைக்கமுடியுமென அனைவரும் உணர்ந்தார்கள். இந்திரவெளியின் வடக்கு எல்லையில் மூடப்பட்டிருந்த பெரிய கதவு இருபுறமும் இழுபட்டு வாய் திறந்தது. உள்ளிருந்து பளபளக்கும் கரிய பெரும்புரவியில் பட்டத்து இளவரசனாகிய லட்சுமணன் விரைந்த குளம்போசையுடன், புழுதிப்பாய் சுருண்டு பின்னால் எழ, பாய்ந்து முற்றமுகப்புக்கு வந்தான். அவனுடன் அவன் இளையோர் ஐவர் இருபுறமும் புரவிகளில் வந்தனர்.
“அஸ்தினபுரியின் இளவரசர் வாழ்க! கௌரவ குல முதல்வன் வாழ்க! பெருந்தோள் ஹஸ்திவடிவன் வாழ்க! நெடும்புயத்து திருதராஷ்டிரன் உருவன் வாழ்க!” என்று சூழ்ந்திருந்த குடிகள் வாழ்த்துரை கூவினர். விரைந்த சுழற்சியாக மும்முறை செண்டுவெளியை சுற்றி வந்த லட்சுமணன் தன் கதையை சுழற்றி மேலே எறிந்தான். அது வளைந்து கீழிறங்குகையில் விரைந்து பாய்ந்துசென்று அதை பற்றினான். அக்கணமே மீண்டும் சென்று மேலெறிந்து அது விழும்போது அங்கு சென்று கைநீட்டி எடுத்தான்.
சில கணங்களிலேயே கதை ஒரு பறவையென வானில் எழுந்து எழுந்து அவன் கைகளில் வந்தமர்ந்து விளையாடுவது போலாயிற்று. அவன் கைகளை அது முத்தமிட்டு முத்தமிட்டு எழுந்தது. அவன் இளையோர் கதைகளை வீசி எறிந்தனர். ஐந்து கதைகளையும் புரவியில் சுழன்று சென்று பற்றி மேலெறிந்தான். கதைகள் கழுகுகள் என அவன் கையை கொத்திக் கொத்தி சிறகுகொண்டு எழுந்தமைந்தன. பின்னர் மேலெழுந்த கதைக்குக் கீழே தன் தலையை கொண்டுசென்று வெறும் தலையால் அதன் இரும்புக்குவையை தட்டி அப்பால் தள்ளினான். பிற நான்கு கதைகளுக்கு தோள்களையும் தொடைகளையும் நெஞ்சையும் காட்டினான். அவை பாறையில் என அறைபட்டுத் தெறித்து விழுந்தன. கைகளை விரித்து புன்னகைத்தபடி அவன் சுழன்றுவந்தான்.
அதை எதிர்பாராத அஸ்தினபுரியின் குடிகள் திகைத்து ஓசையழிந்தனர். பின்னர் வாழ்த்தொலிகள் வெடித்தெழுந்தன. பலராமர் தன் இருக்கையில் இருந்து எழுந்துநின்று பெரிய வெண்கைகளை விரித்து கூச்சலிட்டு ஆர்ப்பரித்து அவனை வாழ்த்தினார். அவன் சென்று பலராமரையும் துரியோதனனையும் வணங்கி ஒதுங்கி நின்றான். முரசு நடைமாற்றி முயல்துள்ளலென மாற உபகௌரவர்கள் கரிய நீர்ப்பெருக்கு அணை மீறி வருவதுபோல இந்திரவெளிக்குள் நுழைந்தனர். அனைவரும் கதைகளை ஏந்தி சுழற்றிக்கொண்டிருந்தனர். கிருபரின் மாணவர் சுந்தரர் கொம்பூதி ஆணையிட அவர்கள் இரு நிரைகளாக மாறி ஒருவரை ஒருவர் எதிர்கொண்டனர்.
ஐநூறு இணைகளாக மாறி அவர்கள் இந்திரவெளியெங்கும் பரவினர். ஒருவரோடொருவர் கதைகளைச் சுழற்றி போரிட்டனர். அவர்களின் போர்முறை எந்த ஒழுங்கும் அற்றதாக, வெறியாலும் விசையாலும் மட்டுமே நிகழ்வதாக இருந்தது. கதைகளின் ஓசை இடித்தொடரென ஒலித்தது. முதலில் கைவீசி கூச்சலிட்டு ஊக்கிய அஸ்தினபுரி மக்கள் மெல்ல திகைத்து அமைதியாகி செயலற்ற கைகளுடன் அதை நோக்கிநின்றனர். அடிபட்டு விழுந்தவர்களின் குருதி செந்நிற மண்ணில் வழிந்தது. எவரும் தோற்றேன் என விலகவில்லை. விழுந்து இறுதிக்கணம் வரை எழவே முயன்றனர். அவர்கள் நினைவழிந்தபோது ஏவலர் வந்து கால்களைப் பற்றி இழுத்து அகற்றி வெற்றியில் வெறிகொண்டு நின்றவர்களிடமிருந்து அவர்களை மீட்டனர்.
வென்றவர்கள் மீண்டும் இணைகளாயினர். அலறல்களும் உறுமல்களும் மூச்சொலிகளுமாக அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது பன்றிகளும் எருதுகளும் களிறுகளும் கொள்ளும் போர் என்றே தோன்றியது. வீழ்ந்தவர் விலக்கப்பட சற்று நேரத்தில் நால்வர் மட்டும் செண்டு வெளியில் எஞ்சினர். சதமனும் காராக்ரனும் சம்பிரதனும் குசனும் கதைகளை வீசியபடி தொடைகளில் ஓங்கி அறைந்து வெறிக்குரல் எழுப்பி ஒருவரை ஒருவர் தாக்க முயன்றனர். நடுவே சென்று விலக்க முயன்ற சுந்தரரை காராக்ரன் கதையால் அறைய அவர் விலகிக்கொண்டு அவன் செவிபொத்தி வெறும்கையால் அறைந்தார். அவன் தள்ளாடி விழ எட்டி நெஞ்சக்குழியில் மிதித்து வீழ்த்தினார். பின்னர் கைநீட்டி அவனைப் பற்றி எழுப்பி கீழே கிடந்த கதையை அவன் கையில் எடுத்துக் கொடுத்தார்.
சுந்தரர் ஆணையிட நால்வர் இருவர்களாக போரிடத் தொடங்கினர். ஒவ்வொருவரும் பிறிதொருவரை ஒத்திருந்ததனால் ஆடிப்பாவைகளின் போர் போலிருந்தது. ஒரு கணமும் ஒரு அணுவும் அவர்களிடையே வேறுபாடில்லை என்பதுபோல. முடிவின்றி அப்போர் தொடரும் என்பதுபோல. கதைகள் சுழன்று சுழன்று முட்டி அனல்சிதற விலகின. தசைகள் இழுபட்டு அதிர்ந்தன. ஒவ்வொருவரும் கணந்தோறும் பிறரைக் கொன்று குருதியிலாடினர். அது முடியாதென்று தோன்றிய கணத்தில் விழியறியாமல் சித்தம் அறிந்த ஒன்று நிகழ்ந்தது. ஒரு சிறிய அசைவினூடாக கதை மறுகதையைத் தவிர்த்து எதிரோன் தலையை அறைய சதமன் சம்பிரதனை வென்றான். அந்த வீழ்ச்சியில் நோக்கு விலகிய கணத்தில் காராக்ரன் குசனை வீழ்த்தினான்.
வென்ற இருவரும் பிறனுடன் கதைபொருதினர். போர் தொடங்கியபோதே இருவரும் களைத்திருந்தனர். ஆகவே உள்ளத்தை எரியச்செய்து வெறி எழுப்பி தாக்கினர். மிகுதியாக வெறிகொண்ட காராக்ரனை சதமன் அடித்து வீழ்த்தினான். அவன் வீழ்ந்ததைக் கண்டபின்னர்தான் தான் வென்றதையே சதமன் உணர்ந்தான். கதையைத் தூக்கியபடி அவன் உரக்க பிளிறிக்கொண்டு களத்தை சுற்றி வந்தான். நோக்கி நின்றவர்களில் சிலரே வாழ்த்தொலி எழுப்பினர். அச்சம்கொண்டவர்களைப்போல அஸ்தினபுரியின் மக்கள் நோக்கி நின்றிருந்தனர்.
விழுந்து கிடந்த காராக்ரனை ஏவலர் மெல்ல உருட்டி பட்டுத்துணியிலிட்டு தூக்கிச் சென்றனர். சதமன் தன் பெரிய கதாயுதத்தை சுழற்றி தரையிலறைந்தபடி நின்று வெண்பற்களைக் காட்டி சிரித்தான். களிமுரசு நடைமாறி மான்துள்ளல் ஆகியது. உள்ளிருந்து கதையுடன் சர்வதன் வெளிவந்தான். தலைக்குமேல் கைகளைக் கூப்பியபடி அவன் களம் நுழைந்தபோது அஸ்தினபுரியின் குடிகள் ஆழ்ந்த அமைதியில் திகைத்து நோக்கியிருந்தனர். பின்னர் எங்கிருந்தோ எவரோ வாழ்த்தொலி எழுப்ப அங்கிருந்த ஒவ்வொரு பொருளையும் அதிரச்செய்தபடி வாழ்த்து எழுந்து மேலும் பெருகியது.
சர்வதன் சூழ்ந்திருந்த அனைவரையும் வணங்கிவிட்டு சதமனை போர்புரிய அழைத்தான். சதமன் தன் பெரிய கதையை நீட்டியபடி கால்களை அகற்றி நின்றான். அவனைப் பார்த்தபடி இயல்பான உடலுடன் சர்வதன் நின்றான். மெல்ல சுற்றிவந்து நிலைகொண்டு இமைநிலைக்க நோக்கி இடம் தெரிவுசெய்து அலறலுடன் மண்ணிலிருந்து எழுந்து காற்றில் தாவி கைகளின் முழு விசையையும் கூட்டி கதாயுதத்தால் ஓங்கி சர்வதனை அடித்தான் சதமன். மிக இயல்பாக வளைந்து அந்த வீச்சை தவிர்த்து அடிவிசையில் சற்று திரும்பிய சதமனின் பின்னால் சென்று அவன் கைகளையும் தோள்களையும் பிடித்து கதையுடன் தூக்கி தலைக்குமேல் சுழற்றி நிலத்தில் அறைந்தான் சர்வதன்.
அந்த ஓசை நிலம் வழியாக அதிர்வென அனைவரையும் அடைந்தது. மல்லாந்து விழுந்து எழ முயன்ற சதமனின் நெஞ்சில் கால்வைத்து தரையோடு அழுத்திக்கொண்டான் சர்வதன். தெறித்த கதாயுதம் அப்பால் உருண்டு சென்றது. ஆர்ப்பரித்த குடிகளை நோக்கி இரு கைகளையும் அசைத்தபடி குனிந்து சதமனை கைதூக்கி மேலெழுப்பி நெஞ்சுடன் தழுவிக்கொண்டு அவன் தோள்களை தட்டினான் சர்வதன். அவன் குனிந்து சர்வதனின் கால்களைத் தொட்டு வணங்கியபின் சூழ்ந்திருந்தவர்களை நோக்கி தலைவணங்கி அப்பால் நகர்ந்தான்.
புன்னகையுடன் கதாயுதத்தை எடுத்துக்கொண்டு லட்சுமணன் சர்வதனை நோக்கி வந்தான். என்ன நிகழவிருக்கிறதென உணர்ந்து பற்றிக்கொண்டு “போர்! போர்! போர்!” என்று ஆர்ப்பரித்தது அஸ்தினபுரியின் குடிப்பெருக்கு. பின்னர் மெல்ல அமைதி உருவாகியது. லட்சுமணனும் சர்வதனும் கதைகளை நீட்டியபடி மெல்ல சுழன்று வந்தனர். சீர் காலடிகளை எடுத்துவைத்து வான்பருந்துகள் என வட்டமிட்டு பின்னர் விழிகள் ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொள்ள உடல்கள் அசைவிழக்க நின்றனர். அரைமண்டிலத்தில் ஊன்றிய கால்களில் தசைகள் புடைத்தெழ தோள்தசைகள் அசைய லட்சுமணன் கதையை நீட்டியபடி மறுகையை விரித்து நின்றான். சர்வதனின் பெருந்தோள்களில் இறுகிய தசைகள் நீரலைகள்போல அசைந்தன.
முற்றிலும் சீர்நிலையிலிருந்த மரச்சிற்பம் போலிருந்த லட்சுமணன் வலக்கையில் நீட்டிய கதாயுதத்துடன் அசைவற்று நின்றான். இமைகளில்கூட உயிர் இல்லையென்பதுபோல். எண்ணங்கள் அக்கணத்தை விரித்து விரித்து காலமென்றாக்கின. அவ்வாறு அவர்களை நோக்கியபடி தாங்களும் காலப்பெருக்கை கடந்துகொண்டிருப்பதாக ஒவ்வொருவரும் உணர்ந்தனர். அது கலைந்ததை பின்னர் நிகழ்ந்தவற்றினூடாகவே அவர்கள் அறிந்தார்கள். அவர்கள் சித்தமறிந்தபோது இருவரும் கதைகளால் மோதி துள்ளி விலகி காற்றிலெழுந்து விழுந்து வீசிச்சுழன்றுகொண்டிருந்தனர்.
சர்வதன் தன் கதாயுதத்தால் ஓங்கி லட்சுமணனை அடிக்க தன் கதையைத் தூக்கி அதை தடுத்தான். இரும்புருளைகள் மோதிக்கொண்ட ஒலி ஒவ்வொருவரின் வயிற்றையும் அறைந்தது. பின்னர் அந்த ஓசை பெரிய கல் உருளைகள்போல் அவர்கள்மேல் விழுந்து தடுமாற வைத்தது. கூடியிருந்த பல்லாயிரம் பேரும் அக்கதை போரில் தாங்களும் ஈடுபட்டிருந்தனர். அனைவரும் பற்கள் இறுக, விரல்கள் சுருண்டு உள்ளங்கையில் நகங்கள் புதைய, விழிகளில் குருதியெரிய, நெஞ்சு மூச்சில் உலைய அதிர்ந்துகொண்டிருந்தனர்.
மீண்டும் மீண்டும் கதைகள் முட்டி அதிர்ந்து வளைந்து பின் சுழன்று வந்தறைந்தன. இரும்பு உருளைகள் மோதிக்கொண்டபோது எழுந்த பொறி மிகத் தொலைவிலேயே தெரிந்தது. ஒருமுறை சர்வதனின் அடி நிலத்தில் விழுந்தபோது கதை மண்ணில் புதைந்து சிறு சுனை போன்ற பள்ளத்தை எழுப்பி மேலெழுந்தது. எண்ணியிராக் கணம் ஒன்றில் லட்சுமணனிடம் அறைபட்டு சர்வதன் தெறித்து நிலத்தில் விழுந்தான். லட்சுமணன் மேலும் அடித்த ஏழு அடிகளை ஒழிந்து உருண்டு துள்ளி எழுந்து அவன் வலத்தோளில் சர்வதன் அறைந்தான். மூன்று அடிவைப்புகள் தள்ளாடி நிலைகொண்ட லட்சுமணன் அதே விசையில் திரும்பி சர்வதனின் முழங்காலை அடித்தான்.
மீண்டும் விலகி கதைகளை நீட்டி நின்றபோது இருவருமே மூச்சிரைத்தனர். சர்வதன் பற்களை இறுகக் கடித்து தன் உடலை இறுக்கி நின்றான். அவன் ஆற்றலைத் திரட்டியபோது அவன் உடலில் இருந்த கோணல் ஒன்று இயல்பாக எழுந்து வந்தது. இடக்கால் சற்றே திரும்பி தரையில் பதிய இடத்தோள் தாழ்ந்திருந்தது. ஆனால் முள்அசையாத துலா போலிருந்தது லட்சுமணனின் உடல். ஒருகணத்தில் வெடித்தெழுந்து அவர்கள் மீண்டும் அறைந்துகொண்டார்கள். ஏழுமுறை விசைகொண்டு சுழன்று எழுந்து அமைந்து சர்வதன் அறைந்த அறையை தன் கதாயுதத்தால் தடுத்து விலக்கி அவன் இடையை கதாயுதத்தால் அடித்தான் லட்சுமணன்.
தெறித்து விழுந்து எழுந்து கையூன்ற முயன்ற சர்வதனின் தலைக்குமேல் கதாயுதத்தை ஓங்கி விசையுடன் கொண்டுவந்து மெல்லத் தட்டி நிறுத்தினான். பின்னர் கதாயுதத்தை வீசிவிட்டு குனிந்து அவனைத் தூக்கிச்சுழற்றி தன் தோள்மேல் ஏற்றிக்கொண்டான். சர்வதன் அவன் தலையைப்பற்றிக்கொண்டு நகைக்க அவன் பேருடலை தோளில் ஏற்றி லட்சுமணன் மெல்ல நடனமிட்டான். அஸ்தினபுரியின் குடிமக்கள் அதுவரை இருந்த பேரழுத்தம்மிக்க உலகிலிருந்து உலுக்கி உதிர்க்கப்பட்டவர்கள்போல் விழுந்து எழுந்து கலைந்து சிரிக்கத் தொடங்கினர். சிரிப்பும் கூச்சலுமாக களம் கொந்தளித்தது. செண்டுவெளியில் புரவிப்போர் தொடங்கப்போவதாக முரசுகள் அறிவித்தன.
முதலில் விரைவுகொண்ட புரவிகளில் யௌதேயனும் பிரதிவிந்தியனும் இணையாக களம்புகுந்தனர். அவர்களில் எவர் பிரதிவிந்தியன் என அஸ்தினபுரியின் மக்களுக்கு தெரியவில்லை. பின்னர் எவரோ தலையணியில் மின்கதிர் அணி சூடியவன் பிரதிவிந்தியன் என சுட்டிக்காட்ட அவனை நோக்கி கைவீசி ஆர்ப்பரித்தனர். புரவியில் விரைந்தபடியே அம்புகளைத் தொடுத்து தொலைவில் ஆடிய இலக்குகளை இருவரும் சிதறடித்தனர். அம்பு சென்று தைத்த புள்ளியிலேயே மீண்டும் மீண்டும் அம்புகளைச் செலுத்தி முந்தைய அம்பை உதிரச்செய்தனர்.
சுருதசேனன் அவர்களைத் தொடர்ந்து களம்புகுந்து அம்புகளை வானிலேயே ஒன்றுடன் ஒன்று கோக்கச்செய்தான். அந்தத் திறன் அஸ்தினபுரியின் இளையோர் பெரும்பாலானவர்களிடம் இருந்தது. இருந்தாலும் அவர்கள் கைவீசியும் வாழ்த்தொலி எழுப்பியும் அவர்களை ஊக்கினர். பிரதிவிந்தியன் என்ன செய்தாலும் மக்கள் ஆர்ப்பரித்து, உவகைகொண்டு, கூவிச் சிரித்து மகிழ்ந்தனர்.
அவர்கள் தலைவணங்கி பின்னகர்ந்ததும் கர்ணனின் மைந்தர்களான சுதமனும் விருஷகேதுவும் சத்ருஞ்சயனும் ஓர் அணியாக களம்புகுந்தனர். அவர்களைக் கண்டதும் அஸ்தினபுரியினர் “அங்கர் வாழ்க! கதிரோன் மைந்தர் வாழ்க!” என்று குரல் பெருக்கினர். அம்புகளை வானில் செலுத்தி அவற்றின் பின்னால் மேலும் மேலும் அம்புகளைத் தொடுத்து குடை ஒன்றை அமைத்தனர். அதை வானிலேயே சுழன்று அங்கிருந்த அனைவர் மேலும் பறக்கும்படி செய்தனர்.
மேடையில் இருந்த திருதராஷ்டிரர் அருகே குனிந்து அவர் செவிகளில் நிகழ்வதை சொல்லிக்கொண்டே இருந்தான் சஞ்சயன். அவர் அவன் சொற்களுக்காகத் திருப்பிய தலையுடன் விழிக்கோள்கள் உருள முகம் மலர்ந்திருக்க கேட்டுக்கொண்டிருந்தார். சிரிப்பும் ஆவலும் எழுச்சியுமாக அவர் முகம் மாறிக்கொண்டிருந்தது. அவர் பிறர் காணாத வேறொரு போரை வேறொரு திசையில் நோக்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.
பலராமர் ஒவ்வொரு போர்ச்செயலுக்கும் தன் உடலால் எதிர்வினை ஆற்றிக்கொண்டிருந்தார். கைவீசி எழுந்து கூச்சலிட்டார். இரு கைகளையும் ஓங்கி முட்டினார். நெஞ்சிலும் தொடைகளிலும் அறைந்துகொண்டார். சிரித்தும் வெறிகூவியும் கொந்தளித்தார். சிலமுறை மேடையிலிருந்து பாய்ந்து இறங்க முயன்றார். அவர் அருகே அமர்ந்திருந்த கிருதவர்மனும் பிறரும் அதையே ஒரு விளையாட்டு என கொண்டனர்.
சாம்பன் இருபுறமும் தம்பியர் அமர்ந்திருக்க மடிமேல் கைகளைக் கோத்தபடி போரை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உள்ளம் வேறு எங்கோ இருந்தது. சலிப்புற்றவனாக அவ்வப்போது அசைந்து தம்பியரிடம் ஏதோ உசாவினான். முகவாயை தடவினான். பணியாட்களை அழைத்து வாய்மணமோ நறுநீரோ கொண்டுவரச் சொன்னான். அவனை ஜயத்ரதன் ஏளனம் செய்ய அஸ்வத்தாமன் திரும்பிநோக்கி புன்னகை செய்தான்.
துரியோதனன் அங்கு நிகழ்வன எதையும் அறியாதவன்போல சிலைத்து அமர்ந்திருந்தான். அவன் கைகள் இரு கைப்பிடிகளிலும் அமைந்திருக்க உடல் நிலைகொண்டிருந்தது. அவனருகே நின்றிருந்த துச்சாதனனும் சுபாகுவும் குனிந்து ஓரிரு சொற்கள் உரையாடினர். நடுவே இளையோன் சுஜாதன் மேடையேறி வந்து பின்னால் நின்று ஒரு சொல் உசாவி திரும்பிச்சென்றான். விழிநிலைக்க சொல்லுறைந்த உதடுகள் செதுக்கப்பட்டவை எனத் தெரிய கருவறைத்தெய்வம் என அவன் தோன்றினான்.
முரசுகள் நடைமாற உள்ளிருந்து பாணசேனனும் பிரசேனனும் புரவிகளில் களம்நுழைந்தனர். அவர்களின் அம்புகள் எழுந்துசென்று வானில் சுழன்ற அம்புக்குடையைத் தாக்கி சிதறடித்தன. ஆனால் அம்புகளில் ஒன்றுகூட உதிராமல் வானிலேயே நிறுத்தின. ஒன்றோடொன்று தைத்த அம்புகள் கீழிருந்து வந்த அம்புகளால் திடுக்கிட்டு திடுக்கிட்டு எழுந்து காற்றில் நடனமிட்டன. அம்புகளினாலான ஒரு திரை வானில் நின்று அறியாக் காற்று ஒன்றுக்கு நெளிந்தது.
மேலும் எழுந்த முரசொலியில் சத்யசேனனும் சுஷேணனும் சித்ரசேனனும் தொடர விருஷசேனன் களத்தில் தோன்றினான். மக்கள் எழுந்து கைவீசி “கர்ணர்! கர்ணர்! கர்ணர்!” என்று கூச்சலிட்டார்கள். அவர்களின் அம்புகள் மேலே சுழன்ற அம்புத்திரையை சிதறடித்து தனித்தனி அம்புகளாக்கின. விருஷசேனன் மேலே நோக்காமல் கீழே விழுந்த நிழல்களைக்கொண்டே அம்புகளைக் கணித்து அம்பெய்தான். நூறு அம்புகள் சேர்ந்து எழும் சதாஸ்திர முறைப்படி அவன் அம்புகளைச் செலுத்த அவை உலுக்கப்பட்ட கிளையிலிருந்து சிட்டுகளென மேலெழுந்தன. ஒவ்வொரு அம்பையாக தன் அம்புகளால் அடித்து கீழிறக்கினான். அவை ஆணைகொண்ட உயிர்கள் என இறங்கி இந்திரனின் ஆலயத்தின் முன்னாலிருந்த முற்றத்தில் குவிந்தன.
ஒவ்வொரு அரசரும் அந்தப் போட்டியில் உளத்தால் பங்குகொண்டனர். விருஷசேனனின் அம்புகள் எழும்போது ஜயத்ரதனும் ருக்மியும் திகைப்பும் வியப்பும் கொள்ள அஸ்வத்தாமன் மட்டும் ஆர்வமில்லாமல் இளம்புன்னகையுடன் நோக்கி அமர்ந்திருந்தான். துரோணர் கிருபரிடம் நிலைக்காமல் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கிருதவர்மன் திரும்பி அக்ரூரரிடம் ஏதோ ஐயம் கேட்டான்.
ஆனால் ஒரே சமயம் நூறு அம்புகளைச் செலுத்தி நூறும் இலக்கடைய அத்தனை அம்புகளையும் சரியாக அவன் நிலத்தில் இறக்கியபோது அனைவரும் திகைப்புடன், திறந்த வாயுடன் நோக்கினர். துரோணர் கிருபரை நோக்கி ஏதோ சொல்ல வாயெடுத்தபின் அப்படியே உறைந்தார். முதல்முறையாக துரியோதனன் முகத்தில் புன்னகை எழுந்தது. அவன் மெல்ல அசைந்து துச்சாதனனிடம் உவகைச்சொல் ஒன்றை உரைத்தான்.
அத்தனை அம்புகளும் கீழிறங்கி குவிந்ததும் விருஷசேனன் வில்தாழ்த்தி வணங்கினான். “கதிர் மைந்தர்! காலையின் தலைவர்! நாளவன் புதல்வர்! அங்கர்! அருங்கொடை முதல்வர்!” என கர்ணனை வாழ்த்திய குரல்கள் எழுந்தன. விருஷசேனன் கூடியிருந்த குடிகளை வணங்கியபடி சுற்றிவந்தான். எங்கிருந்தோ “இந்திரன் மைந்தர் அர்ஜுனர் வாழ்க! வெற்றிகொள் பார்த்தர் வாழ்க!” என பெருங்குரல் ஒன்று எழுந்தது. கூட்டத்தின் ஒலிப்பெருக்கினூடாக அது மெல்லியதென்றாலும் தனித்தொலித்தது. சிலர் அத்திசை நோக்கி திரும்பினர். பின்னர் பலர் “பார்த்தர் வெல்க! வில்விஜயர் வெல்க! அர்ஜுனர் வெல்க! பாரதர் வெல்க!” என்று குரலெழுப்பத் தொடங்கினர்.
மெல்ல அங்கிருந்த குரல்கள் உருமாறத் தொடங்கின. “அர்ஜுனர் வெல்க! இளைய பாண்டவர் வெல்க! கிரீடி வெல்க!” என குரல்கள் ஓங்கின. “ஜிஷ்ணு வாழ்க! சவ்யசாசி வாழ்க! விபத்சு வாழ்க! தனஞ்சயன் வாழ்க!”
தொலைவிலிருந்த காவல்மாடங்களில் செவிகூர்ந்து நின்றிருந்த காவலர்கள் அதை கேட்டனர். முதலில் திகைத்தாலும் அறியாமல் அவர்களும் அர்ஜுனன் பெயரை கூவத்தொடங்கினர். மெல்ல நகரமே அப்பெயரை முழங்கலாயிற்று. போர்முரசென ஒலித்த நகரின் ஓசை குடிகள் இணைந்துகொண்டதும் மன்றாட்டென ஆகியது. கைவிடப்பட்ட குழவியின் அழுகை என வானை தொட்டது.
கர்ணனின் மைந்தர் திகைப்புடன் விருஷசேனனை பார்த்தனர். அவன் முகமலர்வு அழியாமல் அதே விரைவில் களத்தை புரவியில் சுற்றிக்கொண்டே தன் வில்லால் வானில் அம்புகளை தொடுத்தான். அங்கே அர்ஜுனனின் மின்கதிர் படைக்கலத்தின் வடிவம் எழுந்தது. “மின்கதிர் மைந்தன் வாழ்க! அர்ஜுனன் வாழ்க” என கூட்டம் ஆர்ப்பரித்தது.
விருஷசேனன் அந்த மின்கதிர்ப் படையை தன் ஏழு அம்புகளால் சூழ்ந்து மெல்ல கீழிறங்கச் செய்தான். கூட்டம் மெல்ல அமைதியடைந்து அவன் செய்யப்போவதென்ன என்று நோக்கியது. மின்கதிர் படைக்கலம் மெல்ல இறங்கி களத்தில் படிய அதனருகே சென்று புரவியிலிருந்து இறங்கி குனிந்து தொட்டு வணங்கியபின் கூட்டத்தினரை நோக்கி வணங்கினான். அவன் தம்பியரும் அதை வணங்கினர். கூட்டத்தினர் மீண்டும் உவகைகொண்டு பெருங்குரலெழுப்பினர்.
அரசமேடையிலிருந்து எழுந்த இளைய யாதவர் படிகளில் இறங்கி களத்தை அடைந்து கைகளை விரித்தபடி அணுகி விருஷசேனனை தழுவிக்கொண்டார். வாழ்த்தொலிகளை மீறியபடி முரசு முழங்கியது. விருஷசேனன் குனிந்து அவர் கால்களைத் தொட்டு தலையணிந்தான். அவன் இளையோரும் அவரை வணங்கினர். அவர் அவர்கள் அனைவரையும் கைவிரித்து தழுவிக்கொண்டு விருஷசேனனின் தலையை முத்தமிட்டார்.
லட்சுமணனும் பிரதிவிந்தியனும் யௌதேயனும் சுருதசேனனும் சர்வதனும் சென்று இளைய யாதவரை வணங்கினர். அவர் நகைத்துக்கொண்டு சர்வதனின் தோளை அறைந்தார். அவன் மல்லர்களுக்குரிய பயிற்சியால் சற்று உடல் ஒழிய அவனை அப்படியே தூக்கி தலைமேல் சுழற்றி முன்பு நின்றிருந்த வண்ணமே நிற்கச்செய்தார். அரசர்களும் குடிகளும் சிரித்து கைவீசி கூச்சலிட்டனர்.
மையொழுக்கு என வந்த இளையோர் ஆயிரவரும் இளைய யாதவரை சூழ்ந்துகொண்டனர். “இங்கே பாருங்கள்… நான் எகிறி அடித்தபோது…” என்றும் “நான் கதையை ஒற்றைக்கையால் சுழற்றி…” என்றும் அவரை தொட்டுத் தொட்டு அழைத்து தங்கள் திறன்களை கூவினர். அவர் சிரிப்புடன் ஒவ்வொருவரையும் நோக்கியும் கைநீட்டி தோளையும் தலையையும் தொட்டும் பேசினார். சிலரை இழுத்து அணைத்துக்கொண்டார்.
மைந்தர்களை அணைத்து மாறி மாறி தோள்களிலும் நெற்றியிலும் குழலிலும் முத்தமிட்டார். அவரை வாழ்த்தி கூச்சலிட்டுக்கொண்டிருந்த அஸ்தினபுரியின் மக்கள் மெல்ல குரலிழந்து அமைதிகொண்டனர். அறியாத் துயர் ஒன்று வந்து சூழ்ந்துகொண்டதுபோல. குளிர்க்காற்றால் உடல் நடுக்குற்றதுபோல.
பூசகர் கொம்பூதி எழுந்தார். இந்திரனின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த ஏழு செம்புரவிகளும் ஏழு வெண்காளைகளும் முறைப்படி கட்டவிழ்க்கப்பட்டன. மஞ்சள்நீர் தெளிக்கப்பட்டு அவை கூட்டத்திற்குள் துரத்தப்பட்டன. உளநெகிழ்வுடன் நின்றிருந்த கூட்டம் ஒரே கணத்தில் களிவெறி கொண்டது. அவற்றை வாலைப்பிடித்து முறுக்கியும் பின்பக்கம் அறைந்தும் துரத்தினர். காளைகளால் தூக்கி வீசப்பட்டவர்கள் காற்றிலெழுந்து அமைந்தனர். புரவிகள் கனைத்தபடி சாலைகளில் வால்சுழற்றி ஓடின.
அவை நகரிலிறங்கியதும் காவல்மாடங்களிலிருந்த அத்தனை முரசுகளும் “எழுக! எழுக! எழுக!” என ஓசையிடத் தொடங்கின. இல்லங்களுக்குள் இருந்து பெண்கள் கூவி ஆர்த்தபடி தெருக்களுக்கு இறங்கிவந்தனர். அவர்களை எதிர்நோக்கி இருந்த இளையோர் பாய்ந்துசென்று பற்றிக்கொண்டனர். அவர்களை பிடித்துத் தள்ளிவிட்டு ஓடியவர்களை இளைஞர்கள் துரத்திப்பிடித்தனர். நகரம் இந்திரபுரியென்றாகியது.
இளைய யாதவர் மைந்தர்களை தோளணைத்து “செல்க, இந்திரன் நகரில் எழுந்துவிட்டான்” என்றார். லட்சுமணன் நாணத்துடன் “அல்ல, நாங்கள்…” என்று சொல்ல அவன் இளையவனாகிய பிருகதன் “நாங்கள் கிளம்பிவிட்டோம்” என்று கூவினான். ஆயிரம் இளையோரும் கைவீசி கூச்சலிட்டு நடனமாடியபடி நகருக்குள் நுழைந்தனர். விருஷசேனன் பிரதிவிந்தியனை கைபற்றி இழுத்து “வருக!” என இட்டுச்சென்றான். இந்திரனுக்கு நீராட்டு தொடங்குவதை அறிவிக்க கொம்பூதி எழுந்தார் பூசகர்.