ஏழு : துளியிருள் – 22
புலரியில் அஸ்தினபுரியின் கோட்டை முகப்பிலிருந்த பெரிய கண்டாமணியாகிய சுருதகர்ணம் முழங்கியது. அதை ஏற்று அரண்மனைக் கோட்டையில் காஞ்சனம் ஒலிக்கத் தொடங்கியபோது மக்கள் பேரொலியுடன் முற்றங்களுக்கு இறங்கினார்கள். முன்னரே அவர்கள் அணிகொண்டு திரண்டு காத்திருந்தனர். வண்ண உடைகள் புலரா இருளின் பந்தவெளிச்சத்தில் அலையடிக்க கிழக்குக் கோட்டையின் உள்முற்றத்தை அடைந்து தெற்காகத் திரும்பி அங்கே செம்மண்பரப்பென விரிந்திருந்த இந்திரமுற்றத்தை அடைந்தனர்.
அங்கே அதற்கு முன்னரே மக்கள் கூடியிருந்தனர். இரவெல்லாம் நகரத்தின் ஷத்ரிய இளைஞர்களின் போர்க்களியாட்டுகளும் சூத இளைஞர்களின் புரவித்திறனாடலும் நிகழ்ந்துகொண்டிருந்தன. ஆயர்களுக்கான கன்றோட்டுதல் மிக அருகே பிறிதொரு முற்றத்தில் நடந்தது. முதல்நாள் முதல் வாள்வீச்சில் சிந்திய முதற்குருதியின் மணம் எழுந்ததும் எழுந்த களிவெறி இரவு முழுதும் நீடித்தது.
முதிய போர்வீரரான சபூர்ணர் மட்டும் “வேண்டாம்! வேண்டாம்! விலகுக! அகல்க! குருதிமணம்! குருதிமணம் எழுகிறது. அனல் வீச்சம்… நம் குடியெரிப்பது அது” என்று கூவினார். அவரைச் சூழ்ந்திருந்த அவர் குடியின் இளையோர் அவர்மேல் கள் கலங்களை கவிழ்த்தனர். “குளிரச்செய்!” என்றான் ஒருவன். “இது அனலில் நெய் அல்லவா?” என்றான் இன்னொருவன். பேசுவதேதும் அவர்களை சிரிக்க வைத்தது. சொல்லெல்லாம் கூச்சலாகவே வெளிவந்தன.
சோர்ந்தவர்கள் சென்று ஃபாங்கமும் கள்ளும் அருந்தி வெறிமீண்டு திரும்பி வந்தனர். விழுந்து பனியில் நனைந்து துயின்றவர்கள் கனவுகளுக்குள் அந்த வெறியோசை ஒலிக்க அதற்குள் மீண்டும் மீண்டும் வாழ்ந்தனர். அந்த ஓசையால் எழுந்து அதற்குள் பிறந்து வந்தனர். குதிரைகளும் காளைகளும் யானைகளும்கூட அந்தக் களியாட்டில் உளம்கலந்துகொண்டன.
நெடுநேரம் களமிறங்காமல் கட்டப்பட்டிருந்த யானை உரத்த குரலில் பிளிறி கந்தை பிழுதுகொண்டு களம்புகுந்து அங்கு நின்றிருந்த புரவிகளைத் தட்டி அகற்றி இருவரை துதிக்கையால் சுழற்றி வீசிவிட்டு தன்னைத்தான் சுழன்றது. அதன் மத்தகம் மீது தொற்றி ஏறி ஆணையிட்டு அதை அடக்கிய வீரனை சூழ்ந்திருந்தவர்கள் அவன் குலத்தின் பெயர் சொல்லி வாழ்த்தினார்கள்.
முந்தையநாள் இளவரசி கிருஷ்ணையின் மணநிகழ்வு நகரெங்கும் ஒவ்வொரு இல்லத்திலும் கொண்டாடப்பட்டது. அத்தனை முச்சந்திகளிலும் சூதர்கள் பாடினர். விறலியர் ஆடினர். முற்றங்கள் அனைத்திலும் நாடகங்களும் நடனங்களும் நிகழ்ந்தன. அரண்மனையை ஒட்டிய அடுமனையின் பன்னிரு கொட்டகைகளில் நூறு பந்திகளிலாக உணவு பரிமாறப்பட்டது.
நகரின் அத்தனை சந்திகளிலும் வணிகர்களின் கொடையாக விலையில்லாது கள்ளும் ஊனுணவும் வழங்கப்பட்டமையால் உண்பதும் குடிப்பதுமாக இளைஞர்கள் மதம் கொண்டலைந்தனர். இளைய பெண்கள் அவர்களுடன் சேர்ந்து அனல்கொண்ட விழிகளும் வாய்மணத்தால் சிவந்த வாய்களும் களிப்பால் குழைந்த நாவுகளுமாக சிரித்தும் கூவியும் உடன் மயங்கினர். “இது ஒரு போர்க்களம்” என்று முதுவீரர் ஒருவர் சொன்னார். “ஆம், இரண்டும் ஒன்றே. கட்டின்மை” என்றார் அருகே நின்றிருந்த முதுசூதர்.
முற்றத்தின் கிழக்கே அமைந்திருந்த இந்திரனின் செந்நிறக் கல்லாலயத்தின் முகப்பில் எழுப்பப்பட்டிருந்த முரசுமேடையில் களிமுரசு குதிரைநடைத் தாளத்தில் ஒலிக்கத் தொடங்கியதும் அதன் மூன்று புறங்களிலும் முகங்களின் பெருக்காக எல்லை கட்டி இருந்த குடிகள் கைகளைத் தூக்கி பேரொலி எழுப்பினர். களிமுரசின் ஒலியை நகரின் காவல் மாடங்களிலிருந்த அனைத்து முரசுகளும் ஏற்று அதே நடையில் திருப்பி ஒலிக்கத் தொடங்கின. நகரம் முழுக்க உவகைக் குரல்கள் எழுந்தன.
இந்திரவெளி நோக்கி திறந்த பன்னிரண்டு சாலைமுகப்புகளிலிருந்தும் மேலும் மேலும் மக்கள் உள்ளே வந்துகொண்டிருந்தனர். சூழ்ந்திருந்த மாளிகைகளில் உப்பரிகைகளிலும் கூரைகளிலும் அவர்கள் செறிந்து தேனீக்கூடென்று ஆக்கினர். மரங்களில் இலை தெரியாதபடி முகங்கள் அடர்ந்தன. மேலும் வந்தவர்கள் முன்பு இருந்தவர்களை அழுத்தி செறியவைத்து தங்கள் இடத்தை கண்டுகொண்டனர்.
இந்திரனின் ஆலயத்தின் முகப்பில் கனகரும் விதுரரும் முன்னரே காத்திருந்தனர். முந்தையநாளே தொடங்கிய இந்திரனுக்குரிய பூசனைகள் இடைவிடாது நடந்துகொண்டிருந்தன. செயலமைச்சரும் மறைந்த லிகிதரின் மைந்தருமான மனோதரர் பணிகளுக்கு தலைமை கொண்டு ஆணைகளை பிறப்பித்தார். துரியோதனனும் தம்பியரும் முதலில் தேர்களில் வந்தனர். பலராமரும் யாதவக் குடித்தலைவர்களும் தொடர்ந்து வந்தனர். இளைய யாதவர் சாத்யகி தொடர தனித்தேரில் வந்து களம் அமர்ந்தார். அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் சகுனியும் ஜயத்ரதனும் ருக்மியும் தங்கள் அரசக்கொடிகளுடன் வந்தனர். பீஷ்மருடன் சல்யர் வந்தார். கிருபரும் துரோணரும் சேர்ந்து வந்தனர். திருதராஷ்டிரர் சஞ்சயன் தோள்பற்றி நடந்துவர யுயுத்ஸு அவருடன் வந்தான்.
மணநிகழ்வுக்கு வருகை தந்திருந்த அரசர்கள் அனைவருக்கும் கிழக்குத் திசையில் இந்திரன் ஆலயத்தின் இடப்பகுதியில் அமைந்த நீள்மேடையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. வலப்பக்கம் அஸ்தினபுரியின் குருதிவழி கொண்ட அரசகுடியினருக்கான மேடையில் இருக்கைவரிசை இருந்தது. ஒவ்வொருவராக வந்து இந்திரனை வணங்கி மலர்கொண்டு தங்கள் இருக்கைக்கு சிற்றமைச்சர்களால் அழைத்துச்செல்லப்பட்டனர். கூட்டத்திலிருந்து அவர்களுக்கான வாழ்த்துரைகள் எழுந்தன. அதை முதலில் அரசவீரர்களும் சிற்றமைச்சர்களும் கட்டுப்படுத்தினர். பின்னர் கூட்டம் தன் உள்ளத்தை தானே வெளிப்படுத்தலாயிற்று. பின்னர் அஸ்தினபுரியின் எண்ணமே அசைவென அங்கே விழிப்புலனாயிற்று.
களம் நுழைந்தபோது துரியோதனனுக்கும் பலராமருக்கும் வாழ்த்துக்கூறி கூட்டம் அலையடித்தது. கைகூப்பியபடி இளைய யாதவர் தனக்கென அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறியபோது நெடுநேரம் கூட்டம் வாழ்த்தி கொந்தளித்தது. அவர் கைவீசி அவர்களை அடங்க வைத்தபின் அமர்ந்தபோது மீண்டும் தொடங்கியது. அரியணையில் அமர்ந்து கைகூப்பி புன்னகைத்து இயல்படைந்தபோது மெல்ல அவிந்து எங்கிருந்தோ தொடங்கி மீண்டும் கொப்பளிப்பெழுந்தது. மீண்டும் மீண்டும் வாழ்த்தொலி எழ அவர் புன்னகைத்தார். அவருக்கும் கூட்டத்திற்குமான ஓர் தனியுரையாடலாக அது மாறியது. அங்கிருந்த ஒவ்வொருவரும் அவருடன் தனித்திருந்தனர்.
ஜயத்ரதனும் கிருதவர்மனும் தங்கள் அரசமேடையில் அமர்ந்தபோதுகூட இளைய யாதவரை வாழ்த்திய குரல்களே தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தன. இருவரும் முகம் புன்னகையிழக்க அதை எதையும் உணராத இறுக்கமாக மாற்றிக்கொண்டு தங்கள் அரியணையில் நிமிர்ந்தமர்ந்தனர். பலராமர் தன் அருகே நின்றிருந்த அக்ரூரரிடம் இடைவெளியில்லாமல் கையசைத்து எதையோ பேசிக்கொண்டிருந்தார். துரியோதனன் துச்சாதனனிடமும் சுபாகுவிடமும் மாறி மாறி ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தான். அவன் கிளர்ச்சியடைந்திருப்பதை உடலசைவுகளே காட்டின.
தம்பியரால் வழிநடத்தப்பட்டு வந்த சாம்பன் அவனுக்கு மட்டுமென அமைக்கப்பட்டிருந்த பந்தலில் போடப்பட்ட மஞ்சள் பட்டு போர்த்திய இருக்கையில் அமர தம்பியர் சூழ்ந்து அமர்ந்தனர். முந்தையநாளின் மணநிகழ்வில் கட்டப்பட்ட மஞ்சள் காப்பு அவன் மணிக்கட்டில் இருந்தது. துயில்நீப்பின் களைப்பு விழிகளில் தெரிந்தது. அவன் அமர்ந்ததும் குடிகள் “மணம்கொண்ட இளவரசர் வாழ்க! யாதவ குலத்தோன்றல் வாழ்க!” என வாழ்த்தினர். பூசகர் இருவர் மேடையேறி அவனுக்கு எள்ளும் உப்பும் அனலில் இட்டு தலைசுழற்றி கண்ணேறு கழித்தனர். அவன் காலடியில் அவனுக்கும் மக்கள் திரளுக்கும் நடுவிலென ஒரு நீண்ட வேல் காப்பாக வைக்கப்பட்டது.
மேடை ஏறி அரசர் அருகே வந்து குனிந்து பேசி மீண்டும் இறங்கிச் சென்று கனகரிடமும் கைடபரிடமும் மனோதரரிடமும் துணையமைச்சர்களிடமும் ஆணைகளை இட்டுவிட்டு மீண்டும் மேடைக்கு வந்து உரையாடிக்கொண்டிருந்தார் விதுரர். கௌரவர் அதுவரை இருந்த பிற எதிலோ ஒன்றிலிருந்து விடுதலை கொண்டவர்கள்போல தோன்றினார்கள். அங்கு வந்து அமர்ந்திருக்கையில் அவர்கள் தங்கள் இளமை நோக்கி சென்றுகொண்டிருந்தார்கள். கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் மெல்ல சிரித்து பேசத்தொடங்கினர். ஜயத்ரதன் திரும்பி மாளவ அரசரிடம் சொல்லாடலானான்.
இந்திரனுக்குரிய இடிமுழக்கப் பெருமுரசு ஒலியலைகளை எழுப்பிக்கொண்டே இருந்தது. ஆலய முகப்பில் இருந்த பிரபாகரம் என்னும் கண்டாமணியின் ஓசை ஊடே மின்னல்கள்போல அதிர்ந்து சுழன்றது. சிற்றமைச்சர்களும் பணியாட்களும் ஆணைகளால் சொடுக்கப்பட்டு அங்குமிங்கும் தெறித்து அலைந்தனர். தலைமைக் காவலரும் மறைந்த அமைச்சர் விப்ரரின் மைந்தருமான கைடபர் அவர்களை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார்.
இந்திரனின் ஆலயத்தின் முன் அமைந்த வேள்விமுற்றத்தில் ஏழு நாட்களுக்கு முன் நடப்பட்ட இந்திரத்துவஜம் பசுந்தளிராக எழுந்திருந்தது. அதன் வலப்பக்கம் ஏழு மாந்தளிர்நிறக் குதிரைகள் கட்டப்பட்டிருந்தன. விழியுருட்டி தாடையில் வாய்நீர்க்குழாய் தொங்க அவை உடல்சிலிர்த்தன. அவற்றுக்கு இடப்பக்கம் ஏழு வெள்ளைக் காளைகள் மார்புக்கு அடியில் வெண்பளிங்கு அலைகள் என கழுத்துத் தசை தொங்கி அசைய எடை ஏறிய குளம்புகள் மண்ணில் பதிய நின்றிருந்தன.
தென்கிழக்கு மூலையில் இருந்து வேதமோதியபடி நிரையென வந்த நூற்றெட்டு வைதிகர்கள் பொற்குடங்களில் கொண்டுவந்த கங்கை நீரைக்கொண்டு இந்திரனை நீராட்டினர். இந்திரனுக்கும் உடன் அமைந்த தேவிக்கும் அவர்களருகே நின்றிருந்த வெண்புரவிக்கும் முகில்களிற்றுக்கும் மலரும் சுடரும் காட்டினர். மங்கல இசை எழுந்ததும் குடிகளின் குரல்பெருக்கு எழுந்து இந்திரனை வாழ்த்தியது. “விண்ணோன் வாழ்க! இடியன் வாழ்க! மின்னோன் வாழ்க! மழையன் வாழ்க! வளத்தான் வாழ்க! ஆற்றல்கொண்டவன் வெல்க!”
இந்திரன் முன் நூற்றெட்டு குடங்களில் கலந்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள்நீரில் செம்மலர்களின் மகரந்தப்பொடியையும் குங்கிலியத்தையும் பசுங்கற்பூரத்தையும் போட்டு வணங்கி அதை இந்திரவீரியமாக ஆக்கினார் வைதிகர். மங்கல இசை சூழ வைதிகர் அந்தப் பொற்குடங்களை கொண்டுசென்று இந்திரக்கொடியின் அருகே வைத்து சூழ்ந்து அமர்ந்துகொண்டனர். கைகளில் புல்லாழி கட்டப்பட்டது. அவர்கள் இணைந்து ஒற்றைப்பெருங்குரலில் வேதம் முழக்கினர்.
வலதுகையில் மின்னல்படை கொண்டவனை
செம்பழுப்புநிறப் புரவிகளை விரையச்செய்து
வினைகளை முடிப்பவனை
இந்திரனை போற்றுகிறோம்!
பொன்னிறத் தாடி அலைபாய
அவன் மேலெழுகிறான்
தன் படைக்கலங்களால் வெல்கிறான்
வழிபடுவோருக்கு செல்வங்களை அருள்கிறான்!
அவர்கள் வேதமோதி எழுந்து இந்திரவீரியத்தை மாவிலையால் தொட்டு அரசன்மீதும் விருந்தினர் மீதும் தெளித்தனர். களத்தில் அதை ஏழுமுறை சுழற்றி வீசி நனைத்தபோது கூடியிருந்தவர்கள் இந்திரவாழ்த்தை கூவினர்.
“குருதி! அவர்கள் குருதியை வீசுகிறார்கள். கொழுங்குருதி! மானுடக்குருதி. கைக்குழவிகளின் குருதி அது!” என முதியவரின் குரல் எழ அக்குரல் அமங்கலமென எழாதபடி அவரை வாய்பொத்தி தூக்கி அப்பால் கொண்டுசென்றனர். அவர் எழுப்பிய ஓலம் மங்கலவாழ்த்தோசையில் மூழ்கி ஒரு சிறுகுமிழி என வெடித்தழிந்தது. அவர் திமிற அவரை கீழே போட்டு கால்களால் பற்றிக்கொண்டனர்.
அரசர்கள் அனைவரும் அமர்ந்ததும் விதுரர் கீழிறங்கிச் சென்று அமைச்சர்களின் நிரையில் அமர்ந்திருந்த சௌனகரிடம் ஏதோ பேசிவிட்டு மீண்டும் மேடையேறி அரசரிடம் பேசிவிட்டு கீழிறங்கினார். நிமித்திகர்கள் அனைவரும் அவருடைய உடலசைவை நோக்கிக்கொண்டிருந்தனர். அவர் திரும்பி கைகாட்டியதும் முதல் நிமித்திகன் அறிவிப்பு மேடையை நோக்கி சென்றான். அவனுடைய குரல் கேட்கும் தொலைவில் அமைந்திருந்த பன்னிரண்டு அறிவிப்பு மேடைகளில் இருந்த மறுசொல்லாளர்கள் எழுந்து செவி கூர்ந்தனர். நிமித்திகன் மேடையிலேறி கொம்பை வாயில் வைத்ததும் இயல்பாகவே கூட்டமும் ஓசையடங்கலாயிற்று. மயிலோசையுடன் கொம்பு மும்முறை ஒலித்தடங்கியதும் அவன் குரல் கேட்பதற்காக பல்லாயிரம் செவிகள் கூர்ந்தன.
பயின்றுதீட்டிய மணிக்குரலில் “தொல்புகழ் கொண்ட அஸ்தினபுரியின் குடிகளுக்கு வணக்கம். நுண்வடிவில் இங்கு எழுந்தருளியிருக்கும் பிரஜாபதிகளுக்கு வணக்கம். பிரம்மன், அத்ரி, சந்திரன், புதன், புரூரவஸ், ஆயுஸ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்ஷத்ரன், ஹஸ்தி என்னும் அஸ்தினபுரியின் பேரரசரின் புகழ்கொண்ட நிரைக்கு வணக்கம்” என்றான்.
“அஜமீடனின் வழிவந்த ருக்ஷன், சம்வரணன், குரு, ஜஹ்னு, சுரதன், விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்ஷன், பீமன், பிரதீபன், சந்தனு, விசித்திரவீரியன், திருதராஷ்டிரன் என எழுந்த குருதிச்சரடுக்கு வணக்கம். அழியா மரபின் இக்கணமென அமைந்திருக்கும் துரியோதன மாமன்னருக்கு வணக்கம்” என அவன் தொடர்ந்தான். “இந்திரனின் களத்தில் ஆடல் காண வந்தமைந்த தேவர்களுக்கும் கந்தர்வர்களுக்கும் கின்னரர்களுக்கும் கிம்புருடர்களுக்கும் வணக்கம். ஆடலுக்கு அமைந்த வீரர்களுக்கும் அவர்களை வாழ்த்த அமர்ந்திருக்கும் அரசர்களுக்கும் வணக்கம்.”
“இங்கு இளவரசி கிருஷ்ணையின் மணநிகழ்வை ஒட்டி பெருங்களியாடலொன்று ஒருங்கமைக்கப்பட்டுள்ளது. அரசகுடியினர் மட்டும் இதில் கலந்து கொள்வார்கள். நம் குடியின் வீரமும் இளமையும் இங்கு வெளிப்படுவதாக! இங்கு நாம் களியாடுகையில் அன்னை மடியிலமர்ந்து துள்ளும் சிறு குழவியென அஸ்தினபுரியை மகிழ்விக்கிறோம். மேலிருந்து அவள் கனிந்த விழிகளுடன் குனிந்து நம்மை பார்க்கிறாள். எழுகையில் அவள் முத்தங்களை பெறுகிறோம். விழுகையில் மீண்டும் அவள் மடிக்கே வருகிறோம். எழுவதும் விழுவதும் இனிமையென்றே ஆகுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான்.
அவன் குரல் மறுசொற்களினூடாக சூழ்ந்திருந்த அனைவரையும் சென்றடைந்தது. மீண்டும் கொம்பு முழங்கியபோது குடிப்பெருக்கு வாழ்த்தொலியாக வெடித்தெழுந்தது. பல்லாயிரம் பேர் தலையணிகளையும் மேலாடைகளையும் எடுத்து வீசி களியாட்டெழுந்து துள்ள வண்ணப் பறவைகூட்டம் எழுந்தாடுவதுபோல, வண்ண நீரலைகள் நெளிவதுபோலத் தெரிந்தது. குரல்கள் கூடி எழுந்த கார்வை உடலை நிறைத்து மூச்சென்று ஆனதுபோல் தோன்றியது.
அசிவ குலத்தவரான முதியவர் சபூர்ணர் பதினெட்டு போர்முனைகளை கண்டவர். நூற்றெட்டு விழுப்புண்களை பெற்றவர். ஆகவே அவரது குடியினரால் போர்கடந்தவர் என வணங்கப்படுபவர். அக்குடியின் மைந்தர்கள் முதற்படைக்கலம் எடுக்கும் அனைத்து விழவுகளிலும் தொட்டளிப்பவர் அவர். போரிலிறக்காத போர்வீரனின் உடலின் வெறுமையை அவர் அடைந்துகொண்டிருந்தார். முதுமையின் தனிமை அவரை குடிக்கச் செய்தது. பகலும் இரவும் கள்ளின்றி இருக்கமுடியாதவராக இருந்தார்.
பனிபெய்யும் இரவில் கள்ளுண்டு திசைமயங்கி அவர் கிழக்குநோக்கி சென்றார். பின்னர் வழிமயங்கியதை உணர்ந்து திரும்பி மீண்டும் குழம்பி ஒளியில்லாத ஒரு மூலையில் அமர்ந்து கோப்பையில் எஞ்சிய மதுவை குடித்தார். கள் அவரை அமைதிப்படுத்தி சென்ற களங்களை நினைவிலெழுப்பியது. அப்போது அவர் உடல்மேல் ஒரு துளி சொட்டியது. இலைப்பனித் துளி என எண்ணி அவர் அதை துடைத்தபோது பிசுபிசுப்பாக இருந்தது. பறவை எச்சமா என அண்ணாந்து நோக்கினார். அங்கே தலைக்குமேல் கைவிடுபடைகளின் பல்லாயிரம் அம்புமுனைகள் திசைநோக்கி கூர்கொண்டு நிற்பதை கண்டார்.
அவற்றின் உலோகமுனைகள் இரவின் வானொளியில் மின்கொண்டிருந்தன. நோக்கிய அவர் முகத்தின்மேல் பிறிதொரு துளி விழுந்தது. அவர் துடைத்தபடி கூர்ந்தபோது அத்தனை கூர்மைகளும் குருதிவழிய நீட்டி நின்றிருப்பதை கண்டார். அலறியபடி பாய்ந்தோடி நின்று நோக்கினார். புழுதியும் எண்ணையும் பனியில் கரைந்து வழிந்ததா என்ன? தொட்டு முகர்ந்தபோது குருதிமணம். அவர் நன்கறிந்தது. கனவுகளில் மீண்டும் மீண்டும் எழுவது.
கூவிப் பதறி அழுதபடி அவர் ஓடி இந்திரமுற்றத்தை அடைந்தார். “வேண்டாம்! நிறுத்துங்கள்! கொலைத்தெய்வங்கள்!” என்று கூவினார். “வந்துவிட்டார் கள்ளுடையார்!” என்று அவர் குடியின் இளையோன் ஒருவன் சிரித்தான். “கள்ளெழுக! கள்திகழ்க! கள்ளே வெல்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என ஒருவன் சொல்ல இன்னொருவன் சிரித்தான். “என் மைந்தரே, வேண்டாம்… இது கள் விழவல்ல. இது குருதியின் நாள்!” என அவர் கூவி அழுதார். அப்போது முதல் இளமறவனின் வீச்சில் முதல் குருதித்துளி மண்ணில் தெறித்தது.
அஸ்தினபுரியின் மூத்த குடிப்பூசகரான காளிகர் தென்மேற்கு மூலையில் கொற்றவை ஆலயத்திலிருந்து எரிகலத்தில் கொண்டுவந்த அனலை துணைப்பூசகர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு தலைக்குமேல் மும்முறை சுழற்றி குடிகளுக்குக் காட்டியபின் இந்திரவெளியின் தென்மேற்கு மூலையில் அமைந்திருந்த படைகாளியின் சிற்றாலயம் நோக்கி சென்றார். குடிகள் கைகூப்பி அமைதிகொண்டு அதை நோக்கினர். பல்லாயிரம் பேர் முற்றமைதி கொள்கையில் எழும் மெல்லிய ரீங்காரம் அங்கு செவிகளாலும் விழிகளாலும் உணரக்கூடிய அலையாக நிறைந்திருந்தது.
ஆளுயரமே இருந்த படைகாளியின் ஆலயத்திற்குள் நடுகல் வடிவில் எழுந்தருளியிருந்த அன்னையின் முன்னால் அஸ்தினபுரியின் படைக்கல அறையிலிருந்து கொண்டுவரப்பட்ட தொன்மையான வாள்களும் கதைகளும் விற்களும் அம்புகளும் பரப்பப்பட்டிருந்தன. பட்டு விரிக்கப்பட்ட தாழ்ந்த பீடங்களில் இருந்தவை ஹஸ்தியும் பிரவீரனும் குருவும் பிரதீபனும் விசித்திரவீரியனும் கொண்டிருந்த படைக்கலங்கள் என குடிகள் அறிந்திருந்தனர். ஒன்பதன்னை விழாவின் இறுதிநாளில் வெற்றிகொள் கொற்றவையின் பூசனையின்போது அவை அரண்மனையை ஒட்டிய பூசனை மண்டபத்தில் குடிகளின் பார்வைக்கென வைக்கப்பட்டிருக்கும். இளமைந்தருடன் சென்று அவற்றைத் தொழுது பலிக்குருதியை ஒரு சொட்டு எடுத்து அவர்களின் நெற்றியில் இட்டு சொல்லுறுதி கொண்டு மீள்வதென்பது அஸ்தினபுரியின் வழக்கங்களில் ஒன்றாக இருந்தது.
ஆயிரமாண்டுகளாக அஸ்தினபுரியைக் காத்து கோட்டையென்றும் படைக்கலமென்றும் விழிகளில் ஒளியென்றும் நெஞ்சில் உறுதியென்றும் சொல்லில் அனலென்றும் உறையும் தெய்வங்கள் அவற்றில் அப்போது எழுந்தருளுகின்றன என்பது மூத்தார் சொல். தொலைவிலிருந்து எவரும் அப்படைக்கலங்களை நோக்க முடியவில்லையென்றாலும் அனைவரும் அதை மிக அருகிலெனக் கண்டனர். செம்பட்டில் பதிந்து அமைந்திருந்த அவை நின்றுபொருதிய களங்களை அவர்கள் கதைகளில் கண்டிருந்தனர். அவற்றை ஏந்தியவர்களை ஒவ்வொருநாளும் தொழுதே நாள்தொடங்கினர்.
ஆலயத்தின் முன்னால் இருந்த சிறிய எரிகலத்தில் காளிகர் அனலைக் கொட்டியதும் அதில் குவிக்கப்பட்டிருந்த குங்கிலியம் கலந்த நெய்கொண்ட விறகு பற்றிக்கொண்டு எழுந்து தழல் ஆடத்தொடங்கியது. பலிவிலங்கென நோற்று கொண்டுவந்து தறியில் கட்டப்பட்டிருந்த கரிய ஆடு அனற்புகை எழுந்து அதைத் தொட்டதும் இருமுறை சுற்றி வந்து ஒலியெழுப்பியது. பூசகர் கருவறைக்குள் சென்று அங்கு செம்மலர்களால் அணி செய்யப்பட்டிருந்த படைகாளியின் உருவிற்கு சுடராட்டு காட்டினார். முரசுகளும் முழவுகளும் மணிகளும் முழக்கமிட்டன. அரசர்கள் அனைவரும் தங்கள் பீடங்களில் எழுந்து கைகூப்பி நின்றிருந்தனர்.
துணைப்பூசகர் ஆட்டை இழுத்து வந்து பலிமேடைக்கு அருகே நிறுத்தி அதன் நெற்றியை மெல்ல தடவினார். பலிபீடத்திற்குக் குறுக்காக அது தன் கழுத்தை நீட்டியதும் பிறிதொரு பூசகர் பள்ளிவாளால் ஒரே வெட்டில் அதன் கழுத்தை துண்டித்தார். தலை உருண்டு மறுபக்கம் சென்று படைகாளியின் ஆலயமுகப்பில் விழுந்து வாய் திறந்து ஒரு சொல் உரைத்தது. நாக்கு வெளியே தொங்கி மடிந்து குருதியுடன் துடித்தது. வெட்டுண்ட உடலின் கால்கள் காற்றில் தாவ விழைந்தவைபோல் அசைந்து வலப்பக்கமாக சரிந்து விழுந்து அதிரத்தொடங்கின.
அனைத்து குறிகளும் மங்கலம் கொண்டன என்று அறிவிக்கும்பொருட்டு துணைப்பூசகர் தன் இடையிலிருந்த சங்கை எடுத்து மும்முறை ஒலித்தார். அதைக் கேட்டதும் களிமுரசு யானைநடையில் ஒலிக்கத் தொடங்கியது. நகரெங்கிலும் இருந்த முரசுகள் அவ்வொலியை மீண்டும் எழுப்பின. இல்லங்களில் முதுபெண்டிர் “அன்னையே, காத்தருள்க!” என்று கைகூப்பி வேண்டிக்கொண்டனர். அகத்தளங்களில் புழக்கடைகளில் எங்கும் எழுந்து கைகூப்பி நின்றிருந்த பெண்கள் புன்னகையுடன் வணங்கிவிட்டு மீண்டும் அமர்ந்தனர்.
அரண்மனைகளில் ஏழு இடங்களில் விறலியர் நடனமும் பாணினியர் கதைகளும் நடந்து கொண்டிருந்தன. அகத்தளத்தில் விறலியொருத்தி விஸ்வாமித்திரரின் கதையை பாடிக்கொண்டிருந்தாள். முரசொலி கேட்டதும் காந்தாரி இரு கைகளையும் கூப்பி “நலம் திகழ்க!” என வேண்டிக்கொண்டாள். அவளைச் சூழ்ந்து நின்றிருந்த ஒன்பது தங்கையரும் “அவ்வாறே ஆகுக!” என வேண்டிக்கொண்டனர். அவை நிறைத்து அமர்ந்திருந்த அவள் மருகியர் அதைத் தொடர்ந்து குலமூதாதையரையும் தெய்வங்களையும் வணங்கினர். அருகே பொற்பீடத்தில் கரிய கன்னங்களில் சாளர ஒளி மின்ன நெற்றியின் குறுமயிர்கள் கலைந்து காற்றிலாட கிருஷ்ணை தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். நீள்விழிகள் சற்றே இமைசரிய கனவிலென மயங்கியிருந்தன.
மீண்டும் நிகழ்ச்சி தொடங்கும்பொருட்டு காந்தாரி கையசைத்ததும் பெண்கள் கலைந்த குரலில் பேசத்தொடங்கிய முழக்கம் விறலி தண்ணுமையில் விரல் தொட்டு மீட்டியதும் அவிந்தது. அவள் மீண்டும் பாடத்தொடங்கினாள். கோட்டை முகப்பிலும் காவல்மாடங்களிலும் நின்றிருந்த காவலர்கள் இயல்பு நிலையடைந்து தங்கள் இடங்களில் அமர்ந்தனர். முரசொலிகளினூடாகவே அவர்கள் உள நிகழ்வுகளில் இந்திரவெளியில் நிகழ்வதை நோக்கிக்கொண்டிருந்தனர்.
பலிவிலங்கின் குருதியை ஏழு சிறு தொன்னைகளில் பிடித்துக்கொண்டு சென்று அன்னை முன் படைத்தார் பூசகர். அவற்றில் மூன்று தொன்னைகளில் இருந்த குருதியை அன்னைக்கு குருதியாட்டென ஊற்றினார். மூன்று தொன்னைகளில் இருந்த குருதியை அள்ளி மும்முறை படைக்கலங்களின் மீது தெளித்தார். நீட்டிய நாவுகளெனத் தெரிந்த வாள்களும் வஞ்சம் கொண்ட விழிகளெனத் தெரிந்த அம்புமுனைகளும் குருதி விழுந்ததும் மெல்ல சிலிர்த்துக்கொண்டவைபோல் தோன்றின. வாள் பரப்பில் தயங்கி வழிந்து நுனி நோக்கிச் சென்று உருண்டு சொட்டி நின்றது கொழுங்குருதி.
மேடைக்குச் சென்று ஒவ்வொரு அரசரிடமாக குருதிக்கலத்தை காட்டினார்கள். அவர்கள் அதைத் தொட்டு நெற்றியில் அணிந்துகொண்டனர். அனைத்து அரசரும் குருதி சூடியதும் பூசகன் மேடைமேல் ஏறி எஞ்சிய குருதியை கையால் அள்ளி மும்முறை அக்கூட்டத்தை நோக்கி வீசினான். குடியினர் கைகூப்பி “மூதாதையரே, பலிகொள்தெய்வங்களே, வீழ்ந்தவர்களே, வென்றவர்களே, அருள்க!” என்று கூவினர்.
வீசப்பட்ட குருதியை களத்தின் செம்மண்பரப்பில் நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறு வாய்கள் தோன்றி உறிஞ்சி அருந்துவதை அவர்கள் கண்டனர். “குருதியுண்ணும் தெய்வங்கள்!” என்று முதியவர் சபூர்ணர் அஞ்சியபடி சொன்னார். “ஆம், எழுந்துவிட்டனர் நம் குடிகாக்கும் கொலைத்தேவர்கள். குருதியன்றி எவற்றால் அவர்கள் நிறைவுற முடியும்?” என்றான் அருகே நின்றிருந்த ஒருவன். “குருதியே களிப்பேறிய மது” என்றான் ஒருவன். “குருதி மானுடனில் எரியும் அனலின் நீர்மை” என்றான் கள்மிதப்பில் கால்நிலைக்காத சூதன் ஒருவன்.
சபூர்ணர் “குருதியை எழுப்பலாகாது. குருதி மானுடனைச் சுழற்றி கொண்டுசெல்லும் நதி. அறியா உச்சியில் இருந்து இறங்கி அறியா விரிவுக்குச் சென்றுகொண்டிருக்கும் பெருக்கு அது” என்றார். “விலகு… டேய், இந்தக் கிழவனை தூக்கி அப்பால் வீசு!” என்றான் ஒருவன். “அவரை புரவிக்காலடிகளில் வீசுகிறேன். அவருக்குள் இருந்து குருதி வெளிவரத் துடிக்கிறது” என்றான் இன்னொருவன். “முதலில் ஒரு கலம் குருதியை இவருக்கு ஊட்டிவிடவேண்டும். அப்போது இவருக்குள் இருந்து விடாய்கொண்ட தெய்வம் எழுந்து வெறிக்கூச்சலிடும்” என்றான் இன்னொருவன்.
அவர்கள் இருவர் அவரை கால்களையும் கைகளையும் பற்றி தூக்கினர். அவர் “விடுங்கள்… மூடர்களே” என்று கூவினார். “மூடர்களே, அறிவிலிகளே, கள்வெறியர்களே!” என ஓலமிட்டார். கள் மூக்கில் வழிய அவரை தூக்கிச் சென்றார்கள். ஒரு பெருங்களிற்றின் கால்களுக்கு அடியிலூடாக இழுத்துச்சென்றனர். கூட்டத்திற்கு அப்பால் காலடிகள் படிந்த புழுதி பரவிய முற்றத்தை நோக்கி அவரை வீசினர். அவர் உருண்டு எழுந்து “வெறும் குருதிக்குமிழிகள் நீங்கள்… குருதியாக வழிந்தோடும்பொருட்டு பிறந்தவர்கள்… குருதி புழுத்து எழுந்த நெளிவுகள்…” என்றார்.
“போடா” என ஒருவன் கையை ஓங்க அவர் மண்னை அளைந்தபடி “என் மக்களே, என் குழந்தைகளே, செல்வங்களே” என்று அழுதார். அருகே நடந்தவர்கள் அவர் கள்மூத்து நிலையழிந்திருப்பதாக எண்ணி நகைத்தனர். ஒருவன் மேலுமொரு மொந்தையை நீட்டி “கள்ளின் துயர் கள்ளால் அழியும், பெரியவரே” என்றான்.
செம்மலர் சூடி காத்திருந்த படைக்கலங்களை ஒவ்வொன்றாகத் தொட்டு வணங்கியபின் குலப்பூசகர் இரு கைகளையும் விரித்து கண்களை மூடி அசைவற்று நின்றார். அவரை நோக்கியபடி அரசவையின் குடிகளும் காத்திருந்தனர். முற்றிலும் அசைவிழந்த அவர் உடலில் வலக்காலின் கட்டைவிரல் மட்டும் தனி உயிரென துடிக்கத்தொடங்கியது. பின்னர் அந்நடுக்கம் அவர் கால்களில் ஏறி உடலில் பரவியது. எண்ணியிராக்கணத்தில் கைகள் சுழன்று மேலேற தரையிலிருந்து அருகே நின்ற பூசகனின் தோளளவுக்குத் துள்ளி மேலெழுந்து பெரும்குரலுடன் பேரோசையுடன் அமறியபடி இரு கால்கட்டைவிரல்களில் ஊன்றி நின்றார்.
விரிந்த குழற்கற்றைகள் சுழன்று பறக்க, தலையை உருட்டியபடி தொண்டை நரம்புகள் புடைக்க, சினம் கொண்ட எருதென குரலெழுப்பி “அன்னை எழுந்தருளியுள்ளேன்! மைந்தர் களிப்புறுக! அவர்களின் தோள்களில் காற்று திகழ்க! அவர்களின் அம்புகளில் அனலும் வாள்களில் மின்னலும் எழுக! அவர்களின் குருதி தன் வெம்மையை இழக்காமலிருக்கட்டும்! என் மைந்தர்களே, குருதி என்றும் புதியதாக இருக்கட்டும்! என் மைந்தர்களே, குருதி ஒருபோதும் எதையும் மறக்காமலிருக்கட்டும்! என் மைந்தர்களே கேளுங்கள், குருதி உங்கள் சொற்களை ஏந்திச் செல்லட்டும்! என் மைந்தர்களே கேளுங்கள், குருதியே காலமெனப்படுகிறது. காலமாகி வருபவள் நான்! ஆம்! ஆம்! ஆம்!” என்றார்.
உதைத்து தள்ளப்பட்டவர்போல மல்லாந்து தரையில் விழுந்து இரு கால்களும் இழுத்துக்கொள்ள, கைகள் இழுபட்டு அதிர துடித்து வாயோரம் நுரை வழிய அதிர்ந்து மெல்ல அடங்கினார். துணைப்பூசகர் அவரைத் தூக்கி மஞ்சள் பொடியை அவர் முகத்தில் வீசி நீர்தெளித்து எழுப்பினர். எழுந்து அமர்ந்து தலைகுனிந்து மூச்சுவிட்டார். தோள்கள் தொய்ந்திருந்தன. கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது. குழல்கற்றைகள் அவர் முகத்தை மறைத்தாடின. அவர் நலமாக இருக்கிறார் என்பதை கையசைவில் பூசகன் அறிவிக்க மீண்டும் களிமுரசுகள் ஒலிக்கத் தொடங்கின.