விஷ்ணுபுரம் வாசிப்பு

vish

 

அன்பின் ஜெ,
வணக்கம்!.
“நான் இன்னும் தயாராகலேன்னு தோணுது…” . சென்ற வருட விஷ்ணுபுர விழாவின் முதல்நாள் காலை தேனீர் இடைவேளையில் விஷ்ணுபுரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் “அப்டியா…” என்ற புன்சிரிப்போடு கூடிய உங்களின் மறுமொழிக்கு ‘அட அர்ப்ப பதரே’ என்றும் ஒரு அர்த்தம் உண்டு என்பதை அதன்பிறகான பல ‘அப்டியா’க்களின் வழியே கண்டுகொண்டேன்.
சில வாரங்களாக பருவமழை எங்கள் மாவட்டத்திற்கு மட்டும் தனி கரிசனம் காட்டியதால் பெரும்பாலான பகல்பொழுதுகள் அந்திம ஒளியிலேயே கடந்து சென்றது.
சில்வண்டுகளின் ரீங்காரத்திற்கும், தவளைகளின் தனி ஆவர்த்தனத்திற்கும்
அவ்வப்போது இடைவெளிவிட்டு விஷ்ணுபுரத்தோடு ஒன்றிப்போன இருவார இரவு பொழுதுகள்.
வெண்முரசு வாசிப்பனுபவம் தந்த பயிற்சியால் விஷ்ணுபுரத்தை கிரகித்து கொள்வதில் (கெளஸ்துப ஞானசபை தர்க்க நிகழ்வுகள் சில தவிர) அதிகம் சிரமம் ஏற்படவில்லை.
விஷ்ணுபுரத்தை வெண்முரசின் நாவல் வரிசைகளில் ஒன்றாகவே  பொருத்தி பார்ப்பது ஒரே சமயத்தில் உவகையாகவும் உவர்ப்பாகவும் உருமாறி நிற்கிறது.
பல்வேறு வாசிப்பனுபவங்களுக்காக வெண்முரசு விவாத தளத்தினை தொடர்வதுபோல் விஷ்ணுபுரத்திற்க்கான பிரத்யோக தளத்தில் விமர்சனங்களை படித்துக்கொண்டிருக்கிறேன்.
வீட்டின் அருகாமையில் இருக்கும் தாசில்பண்ணை ராஜசேகரன் அவர்களின் பள்ளிக்கு சென்று
 “விஷ்ணுபுரம் ஒரு பார்வை” புத்தகத்தை வாங்கிவந்து புத்தகத்தின் கலசமாய் நீங்கள் எழுதிய குறிப்பினை கரையான் அரிப்புகளுக்கிடையே  சில வார்த்தைகளை
நானாக சேர்த்துக்கொண்டு படித்து முடித்தேன்.
ஒரு புத்தகத்தின் முக்கிய பகுதி எது என்று கரையானுக்கு தெரியும் போலும்.
புத்தமங்களத்து விஷ்ணுபுர வாசகரை சந்திக்க நானும் பிரபுவும் திட்டமிட்டுள்ளோம்.
அனேகமாய் அடுத்தவாரம் பயணம் இருக்கும்.
விஷ்ணுபுரம் கருவாகி, உருவாகி, அச்சாகி,அடையாளமாகி கால்நூற்றாண்டு கடந்துவிட்டது.
பதிப்புகள் பல கண்டாலும், பதிப்பகங்களின் மத்தியில் “விஷ்ணுபுரம்” என்னும் ஆறெழுத்து, பொன் முட்டையிடும் மந்திரச்சொல்லாய் பேணப்பட்டாலும்,
கிண்டிலின்  தூண்டிலாய் விளம்பரப்படுத்தப்பட்டாலும், வயற்றாட்டியை
தேடியலையும் நிறைமாத பெண்ணின்
வலிரேகைகள் கண்முன் தோன்றி மறைந்தபடியே உள்ளன.
திரு.சி.மோகன் அவர்களுக்கு நன்றி!!!!!.
நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.
முந்தைய கட்டுரைபுல்வெளிதேசம் பற்றி…
அடுத்த கட்டுரைஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்- 2017