இலக்கிய முன்னோடிகளின் தடங்கள்…
புதுமைப் பித்தனில் ஆரம்பித்து, நாகராஜனில் முடிந்த அந்த கோட்டு ஓவியத்தின் கீழே ஒரு மூலையில் ஜெயமோகனின் படம்.
என்னே அவையடக்கம்!!!!
சிவா சக்திவேல்
*
இலக்கிய முன்னோடிகள் நூல்வரிசை மீண்டும் ஒரே நூலாக வெளிவருவது அறிந்து மகிழ்ச்சி. அந்நூல்களை நான் என் கல்லூரிக்காலத்தில் வாசித்திருக்கிறேன். ஒரு படைப்பை எப்படி கருத்துக்களாக ஆக்கிக்கொள்வது, ஒரு படைப்பை எந்தெந்த கோட்பாடுகள் வழியாக பார்ப்பது என்று மட்டும்தான் எனக்கெல்லாம் கல்லூரியில் சொல்லித்தந்தார்கள். எனக்கென ஒரு வாழ்க்கையும் அதைச்சார்ந்த சொந்தமான பல நுட்பமான கவனிப்புகளும் உள்ளன. அதைக்கொண்டு நானே இலக்கியப்படைப்புகளை கண்டுபிடிக்கலாம், ஆராயலாம் என்று எனக்குக் காட்டியது அந்த நூல்வரிசைதான். அதன்பிறகுதான் நான் உண்மையில் வாசிக்கவே ஆரம்பித்தேன். என் அனுபவங்கள் இலக்கியத்தைப்புரிந்துகொள்ள உதவின. இலக்கியம் என் அனுபவத்தைப்புரிந்துகொள்ள உதவியது.
அதேசமயம் வரலாறு சார்ந்த பல கூர்ந்த அவதானிப்புகள் அதுவரைக்கும் எவரும் சொல்லாதவை. மௌனிக்கும் பிரிட்டிஷ் ரொமாண்டிக் கவிதைக்குமான உறவு, கு.ப.ராஜகோபாலனின் வங்காள- பிரம்மசமாஜ சார்புத்தன்மை போன்றவை கல்வித்துறையினரால் சொல்லப்பட்டிருக்கவேண்டும். இன்றும் நினைக்கையில் என்னை ஆளாக்கிய நூல் என்ற் அந்த 7 புத்தகங்களைத்தான் சொல்வேன். அதற்காக நன்றி தெரிவிக்கவேண்டும்
அருள்
அன்புள்ள ஜெ
இலக்கிய முன்னோடிகள் வரிசை மீண்டும் நூலாக வெளிவருவதறிந்து மகிழ்ச்சி. நான் நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த நூல் அது. இதேபோல எனி இண்டியன் வெளியீடாக கவிதைபற்றி வெளிவந்தநூலான உள்ளுணர்வின் தடத்தில் நூலும் வெளிவரவேண்டும். தமிழில் ரசனைசார்ந்த விமர்சனத்தின் முக்கியமான ஆவணங்கள் இவை
ஆர்.சந்திரசேகரன்