பார்க்காததுபோல…
யாரும்
பார்க்கவில்லையென்பதுபோல
நீ செய்துகொண்டிருபவற்றை எல்லாம்
நான் அறிகிறேன்
யாரும்
கேட்கும் மொழியில்
என்னால்
அதைச் சொல்ல முடியவில்லை
என்ற வருத்தம்தான்
விசாரணை
அவ்வளவு கிட்டத்தில் வந்த
உதடுகள் வீணாக்கிய
முத்தங்களைப்பற்றி
கடவுள் கேட்கும்போது
நான் என்ன சொல்வேன்?
நீதான் என்ன சொல்வாய்?
காதல் இல்லாதபோது
காதல் இல்லையேல்
உடலைப்போல் கடுமையான
வேறு மரம் இல்லை
உதடுகளால்
எத்தனை செதுக்கினாலும்
சிற்பமாவதில்லை
காத்திருப்பு
ஊட்டிக்குச் செல்லும் மலைப்பாதையில்
நின்றிருக்கும் அந்த மாபெரும் மரத்தை பார்த்திருப்பீர்கள்
எங்கே பார்க்கமுடியும்
அந்த நிற்றலில் இருக்கும்
அவ்வளவு தன்னம்பிக்கையை?
ஆகிவிட்டிருக்கும்
அந்த காத்திருப்பு தொடங்கி
பலநூறாண்டுகள்
அவ்வளவு அன்பான ஒருவர்
உடனே வந்துவிடுவார் என்ற
ஆவல் துடிக்கிறது
ஒவ்வொரு இலையிலும்
அந்த நினைப்பால் அல்லவா
அது மீண்டும் மீண்டும் தளிர்விடுகிறது
பூக்கிறது
வலிமை கொள்கிறது
இதோ வந்துவிடுகிறேன் என்றுசொல்லி
அதை வழியருகே நிறுத்திவிட்டுச்
சென்றவர் யார்?
கலம்
நள்ளிரவில் உம்மா
நீரூற்றிக் கழுவி வைத்த
பச்சை மண்கலத்தில்
காலையில்
ஒரு செடி முளைத்திருக்கிறது
கலமாக ஆவதற்கு முன்பிருந்த
மண்ணின் மென்மையில்
யாரும் காணாமல் அந்த
விதையும் இருந்திருக்குமோ?
முளைக்கவேண்டும் என்னும் விருப்பம்
ஒரு தொடுகை
உம்மாவிலிருந்து
அன்றிரவு
அதற்கு வந்திருக்கலாம்
உம்மாவுக்குள்
நானும் இருந்திருப்பேன்
தொன்மையான ஒரு காத்திருப்பாக
பூமியின் எந்த விருப்பம்
உம்மாவில்
எழுப்பியது என்னை?
*
ஸ்டிக்கர்
எண்ணியிராமல்
இரண்டு உயிர்கள்
ஒட்டிக்கொள்வதன்
எதிர்பாராமை உண்டு
எந்தக் காதலிலும்
கிழிந்து மட்டுமே
வேறுபட முடியும் என்பதன்
பரிதாபமும்.
வேண்டாம்!
அய்யோ வேண்டாம்
என்று தொட்டால்சிணுங்கி
இலைகளால் கைகூப்பி
மௌனமாக கெஞ்சியது
இப்பூமி முழுமைக்காகவும்தான்
என்று எண்ணினோமா
பிடுங்கி வீசும்போது?
வீரான் குட்டி மலையாளத்தின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். குற்றாலத்தில் 1995 ல் நடந்த முதல் தமிழ் – மலையாளக் கவிதைச் சந்திப்பினால் தூண்டப்பட்டு அதுவரை எழுதிவந்த இசைத்தன்மை கொண்ட ,உணர்ச்சிகரமான கவிதைமுறையிலிருந்து விலகி கூரிய படிமங்கள் கொண்ட கவிதைகளை எழுதத் தொடங்கினார். இவருடைய முதல்தொகுதி என்னுடைய முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. பதினொரு கவிதைத்தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. பி.குஞ்ஞிராமன்நாயர் விருது, செறுசேரி விருது உட்பட மலையாளத்தின் முக்கியமான அனைத்துக் கவிதைவிருதுகளையும் பெற்றுள்ளார். வடகரையில் கல்லூரி ஆசிரியராகப் பணிபுரிகிறார்