ஏழு : துளியிருள் – 15
அஸ்தினபுரியின் எல்லையை அவர்கள் அணுகுவதை முகப்பில் நின்றிருந்த தலைமைக் குகன் கொம்பூதி அறிவித்தான். யௌதேயன் எழுந்து சென்று வெளியே நோக்கினான். அஸ்தினபுரியின் எல்லை என அமைந்த காவல்மாடத்தின் மரமுகடு சோலைத்தழைப்புக்குமேல் எழுந்து தெரிந்தது. அங்கிருந்தவர்கள் அவர்களை பார்த்துவிட்டார்கள் என்பதை மெல்ல எழுந்தடங்கிய கொம்போசையிலிருந்து உணரமுடிந்தது. பலராமர் சலிப்புடன் எழுந்து கைகளை விரித்து சோம்பல்முறித்தபின் “அணுகிவிட்டோம்” என்றார்.
அப்பால் அஸ்தினபுரிக்குரிய நீர்ப்பரப்பில் ஏராளமான காவல்படகுகள் பாய்விரித்து சுற்றிவருவதை யௌதேயன் கண்டான். “நாம் நுழைகையிலேயே நம்மை வளைத்துக்கொள்வார்கள். ஒருவேளை சிறைபிடித்து அஸ்தினபுரிக்கு அழைத்துச் செல்லவும் கூடும்” என்றார் பலராமர். “இல்லை மாதுலரே, அரசமுறைமைகளை அவர்கள் ஒருபோதும் மீறமாட்டார்கள். முறைமைகளின்மேல் முழு நம்பிக்கை கொண்ட இருவரே இன்று பாரதவர்ஷத்தில் உள்ளனர். எந்தைக்குப்பின் அஸ்தினபுரியின் அரசர் துரியோதனர்” என்று யௌதேயன் சொன்னான். பலராமர் அவனை நோக்க புன்னகையுடன் “நெறிகளில் முழுமையாக நிற்பவர்கள் நிகர்செய்ய ஒரு பிறழ்வை மறுதட்டில் கொண்டிருப்பார்கள்” என்றான் யௌதேயன்.
“உன் தந்தையின் பிறழ்வு என்ன?” என்றார் பலராமர். யௌதேயன் புன்னகைத்தான். “சொல்!” என்றார். “இன்று அது விதைக்குள் மரம். தருணங்களின் அழுத்தமே அதை வெளிநிகழ்வு கொள்ளச்செய்யும்” என்று யௌதேயன் சொன்னான். ஒருகணம் திகைத்த பின்னர், “உண்மையில் தந்தையர் மைந்தர்முன் ஆடையின்றி நிற்கின்றனர்” என்று பலராமர் சிரித்தார். யௌதேயன் “மைந்தரும் தந்தைமுன் அவ்வாறே நிற்கின்றனர், மாதுலரே” என்றான். “என் மைந்தர்களை நான் மதுராவுக்கு கொண்டுவந்ததே இல்லை. அவர்கள் முதுதந்தை சூரசேனருடன் மதுவனத்தில் வாழ்கிறார்கள். கன்றோட்டும் ஆயர்களாகவே அவர்கள் வளரவேண்டும் என எண்ணினேன்” என்று பலராமர் சொன்னார். “அவர்கள் என்னைப் பார்ப்பதே அரிது” என்றார்.
யௌதேயன் “சென்று பாருங்கள், உங்களைப்போலவே இலையும் கிளையுமாக எழுந்து வந்திருப்பார்கள்” என்றான். பலராமர் விழிகனிய “ஆம், அவ்வாறே இருப்பார்கள். அதை என்னால் உணரமுடிகிறது” என்றார். “நிஷதனும் உல்முகனும் எங்களுக்குக்கூட வெறும் பெயர்களாகவே இருக்கிறார்கள்” என்றான் யௌதேயன். “அவர்கள் வளைதடி அன்றி எந்தப் படைக்கலமும் பயிலவேண்டியதில்லை, கன்றுதேர்தலன்றி சூழ்கை எதுவும் கற்கவேண்டியதில்லை என இளமையிலேயே முடிவு செய்தேன். மெய்யான மகிழ்வு என்றால் என்ன என்று நான் அறிந்ததை அவர்களுக்கு அளிக்கவேண்டும் என விழைந்தேன்” என்றார் பலராமர். யௌதேயன் புன்னகை புரிந்தான்.
அவர்கள் படகு அணுகியதுமே அஸ்தினபுரியின் காவல்படகுகள் அனைத்திலும் கொம்புகள் முழங்கத் தொடங்கின. விரைவுப்படகுகள் பாய்விரித்து நாரைநிரைகள்போல ஒன்றோடொன்று தொடுத்துக்கொண்டு அவர்களை நோக்கி வந்தன. அஸ்தினபுரியின் எல்லையை அவர்களின் படகு கடந்ததும் அவை அதை முழுமையாக வளைத்துக்கொண்டன.
முதற்படகின் அமரத்தில் எழுந்த வீரன் “படகில் யார் என்று அறிவிக்கும்படி அஸ்தினபுரியின் நீர்க்காவலர் தலைவனின் ஆணை” என்றான். அமரமுனையில் எழுந்த படகின் காவலன் “மதுராவின் அரசர், யதுகுலத் தலைவர் பலராமர் எழுந்தருள்கிறார். அவர் அஸ்தினபுரியின் அரசர் துரியோதனரை காணும்பொருட்டு சென்றுகொண்டிருக்கிறார்” என்றான். “படகு அசையாமல் அங்கு நிற்கட்டும். ஆணை பெற்று அறிவிக்கிறோம்” என்றான் அவன். அவர்கள் வந்த விரைவுப்படகுகளுக்கு அப்பால் பெரும்படகுகள் இரண்டு வந்து நிலைகொண்டன.
முதற்படகிலிருந்து எழுந்த கொம்போசை ஒன்றிலிருந்து ஒன்றென படகுகள்தோறும் சென்று தொலைவிலிருந்த அஸ்தினபுரியின் துறைமேடையை அடைந்தது. அங்கிருந்து அது முரசோசைகள் வழியாக அஸ்தினபுரியின் அரண்மனையை அடைவதை உள்ளத்தால் கேட்க முடிந்தது. சற்றுநேரத்தில் தொலைவிலிருந்து கொம்போசையாக அஸ்தினபுரியின் ஆணை வந்தது. காவல்படகின் வீரன் “தங்களை அழைத்து வரும்படி ஆணை, அரசே” என்றான். படகிலிருந்த பலராமர் கையசைத்து “செல்வோம்” என்றார்.
கரையோரப்படகுகள் சூழ குஞ்சுகள் உடன் செல்லும் அன்னமென மதுராவின் அரசப் படகு அஸ்தினபுரி துறை நோக்கி சென்றது. தொலைவிலிருந்து அலைகள்மேல் விழுந்து எழுந்தேறி வந்த அஸ்தினபுரியின் படகொன்று அமுதகலக்கொடி படபடக்க அருகணைந்தது. அதன் அமர மேடையில் நின்றவனை யௌதேயன் சிறிய உளத்திடுக்கிடலுடன் பார்த்தான். பலராமர் கண்களுக்கு மேல் கைவைத்து உற்று நோக்கி “யாரந்த நெடியோன்? அங்கநாட்டான் வசுஷேணன் போலிருக்கிறான்” என்றபின் முகம் மலர்ந்து உரத்த குரலில் “கர்ணனின் மைந்தன்!” என்றார். “மூத்தவன் விருஷசேனன் என நினைக்கிறேன். சிறுவனாக முன்னெப்போதோ பார்த்திருக்கிறேன். இந்திரப்பிரஸ்தத்தில் நிகழ்ந்த விழாவிலா அல்லது அஸ்தினபுரியின் படைகளியாட்டுகளிலா என நினைவில்லை” என்றார்.
யௌதேயன் “ஆம், விருஷசேனர்தான். அவர் இருந்தார் என்றால் படகில் அவருடைய இளையோர் சித்ரசேனனும் சத்யசேனனும் இருப்பார்கள்” என்றான். “இருமுறை அவர்களை அஸ்தினபுரியின் விழவுகளில் கண்டிருக்கிறேன். பத்தாண்டுகளுக்கு முன்பு.” பலராமர் “ஆம், அவர்களையும் பார்த்திருக்கிறேன். அனைவருமே தந்தையைப்போல நெடியவர்கள். அதனாலேயே அத்தனை திரளிலும் தனித்துத் தெரிபவர்கள்” என்றார். “நெடியவர்கள் பெரும்பாலும் மெலிந்து கூன்கொண்டிருப்பார்கள். கர்ணனும் மைந்தரும் பெருந்தோளர்கள், சீருடலர்கள். கலிங்கச் சிற்பிகள் வடித்த கற்சிலைபோல கரியவர்கள்.”
உவகையுடன் அவர் படகின் விளிம்பில் கால்வைத்து வடத்தைப் பற்றியபடி விழப்போகிறவர்போல ஆடிக்கொண்டு எட்டிப்பார்த்தார். “இனியவர்கள்… நம் மைந்தர்களிலேயே இந்தப் பத்துபேரும்தான் அழகர்கள்” என்றார். திரும்பி “என் இளையோன் அழகன் என நான் எப்போதும் பெருமிதம் கொள்வதுண்டு. ஆனால் அது அவன் இனியோன் என்பதனால் எழும் அழகு. கல்வியால் அவ்வழகை அவன் பெருக்கிக்கொண்டான். மைந்தா, அங்கனின் அழகுதான் மானுடப் பேரழகு. அவன் ஒவ்வொரு அசைவும் அழகியவை. அவைகளில் அவனிடமிருந்து நான் விழிவிலக்குவதேயில்லை” என்றார்.
படகு அணுகிவர விருஷசேனன் கையசைத்து இரு படகுகளையும் ஒன்றையொன்று அணுக வைத்தான். இரு படகுகளிலும் இருந்த படகோட்டிகள் ஒருவரை ஒருவர் நோக்கி கைவீசி செய்கை பரிமாறிக்கொண்டனர். அரசப்படகிலிருந்து படகோட்டிகள் நால்வரால் வீசப்பட்ட வடம் பறந்து வளைந்துசென்று அஸ்தினபுரியின் படகின் முகப்பில் பெரும்பாம்பு என விழுந்தது. அதை அங்கிருந்த படகோட்டி தறியில் சுற்றிக்கட்டியதும் இரு படகுகளும் மெல்ல அணுகி ஒன்றையொன்று நெற்றிமுட்டி முத்தமிட்டுக்கொண்டன.
பலராமர் கைகளை விரித்து உரக்க நகைத்துக் கூச்சலிட்டபடி வடத்தை நோக்கி ஓடினார். அந்த வடத்தைப் பற்றி அதன்மேல் சிலந்திபோல எளிதாகத் தொற்றி ஏறி படகுக்குள் வந்த விருஷசேனன் பலராமரை அணுகி கால்தொட்டு வணங்கி “அருள்புரிக, அரசே” என்றான். குனிந்தபோதே அவன் தோள் பலராமரின் நெஞ்சளவு இருந்தது. தோள்களின் கரிய தோல் எண்ணைப்பூச்சு பெற்ற கற்சிலைபோல பளபளத்தது. அவன் தோளைத் தொட்டு அணைத்து நெஞ்சோடு இறுக்கிக்கொண்ட பலராமர் “தந்தையைப்போலவே இருக்கிறாய்! பெருந்தோளன்! இத்தனை உயரமான பிறிதொரு இளைஞன் நம் அரசகுடிகள் எதிலும் இல்லை!” என்றார்.
கீழிருந்து சத்யசேனனும் சித்ரசேனனும் மேலேறி வந்தனர். அவர்களை நோக்கி கைவிரித்து நகைத்த பலராமர் “கங்கையில் அலைபெருகி வருவதுபோல அல்லவா வருகிறீர்கள்… கரிய பேரலைகள்… ஒளிகொண்டவை…” என்றார். அவர்கள் அவர் கால்தொட்டு வணங்க இரு கைகளாலும் இருவரையும் அணைத்துக்கொண்டு “இனியவர்கள்… வசுஷேணன் நல்லூழ் கொண்டவன். மூதாதையரால் உளம்கனிந்து கொடையளிக்கப் பெற்றவன்…” என்றார். திரும்பி “பேரழகர்கள்… வசுஷேணனின் இளமையழகு முழுக்க இவர்களிடமுள்ளது அல்லவா?” என்று யௌதேயனிடம் கேட்டார்.
யௌதேயன் அருகணைந்து “என்னை வாழ்த்துக, மூத்தவரே” என்று விருஷசேனனின் கால்களை குனிந்து தொடப்போனான் அவன் பதறி விலகி “பொறுங்கள் இளவரசே, இது முறைமை அல்ல. தாங்கள் ஷத்ரிய குடியினர்” என்றான். “நான் இளவரசே என்று அழைக்கவில்லை, மூத்தவரே என்றுதான் அழைத்தேன்” என்றான் யௌதேயன். திகைப்புடன் “ஏன்?” என்று விருஷசேனன் கேட்டான். “அதை தாங்கள் உணரும் தருணம் ஒன்று வருக!” என்றபின் யௌதேயன் குனிந்து அவன் கால்களைத் தொட்டு சென்னி சூடி “வாழ்த்துங்கள்” என்றான். குழப்பத்துடன் பலராமரை ஒருதரம் நோக்கிவிட்டு “புகழும் நிறைவும் கொள்க!” என்று அவன் வாழ்த்தினான்.
பலராமர் உரக்க நகைத்து “ஆம், உள்ளங்கள் அறியும் உண்மைகளை நாவு அறிவதில்லை” என்றார். பின்னர் “வருக!” என்று அவர்கள் தோளை அணைத்து உள்ளே அழைத்துச்சென்று அமரவைத்தார். விருஷசேனன் அமர இளையோர் இருபக்கமும் நின்றனர். “நான் அங்கே துறைக்காவலில் இருந்தேன். தாங்கள் வரும் செய்தி வந்தது. தங்களை நேரில் கண்டு அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்களிக்கப்பட்டது” என்றான் விருஷசேனன். “நீ வந்தது, சூரியமைந்தனாகிய வசுஷேணனே நேரில் வந்ததுபோல” என்றார் பலராமர். “நீங்கள் பதின்மர் அல்லவா?” என்று கேட்டார்.
“ஆம் மூத்தவரே, சுதமன், விருஷகேது, சுஷேணன், சத்ருஞ்ஜயன், திவிபதன், பாணசேனன், பிரசேனன் என்று மேலும் எழுவர்” என்றான் விருஷசேனன். யௌதேயன் “அனைவருமே அங்கநாட்டரசரின் மாற்றுருக்கள் எனத் தோன்றுவார்கள்” என்றான். பலராமர் தொடையில் அடித்துச் சிரித்து “சூரியன் தன்னைச் சூடும் அனைத்தையும் தான் என ஆக்கும் குன்றாஒளி கொண்டவன்” என்றார். மீண்டும் உரக்க நகைத்து “இளைஞன் ஒருவனிடம் அண்ணாந்து பார்த்து பேசவேண்டுமென்றிருப்பதே என்னுள் திகைப்பை உருவாக்குகிறது. இதோ மூவர் மலைமுடிகளைப்போல சூழ்ந்து நிற்கிறார்கள்” என்றார். விருஷசேனன் தோளை அறைந்து “இவனை ஒருமுறையாவது களத்தில் தோள் பொருதி தோற்கடித்தாலொழிய என்னுள் வாழும் மல்லன் நிறைவு கொள்ளமுடியாது” என்றார்.
விருஷசேனன் சிரித்து “அதற்கென்ன அரசே, அஸ்தினபுரியிலேயே களிக்களம் காண்போம்” என்றான். “உன் தந்தையுடன் இருமுறை களம் கண்டிருக்கிறேன். மற்போரில் அவன் என்னை ஒவ்வொரு முறையும் எட்டாவது சுற்றில் சுழற்றி அடிப்பான். கதைப்போரில் நான்கு முறை நான் அவனை வென்றுள்ளேன்” என்று பலராமர் சொன்னார். “ஒவ்வொருவரையாக பத்து வசுஷேணர்களையும் வெல்வேன். சூரியன் என ஒவ்வொரு நாளும் அவன் நீர்ப்பாவைகளை அள்ளி அல்லவா நாம் நீத்தாருக்கு நீரளிக்கிறோம்?” விருஷசேனன் “இத்தருணத்தில் எந்தையர் மகிழ்கிறார்கள்” என்றான்.
யௌதேயன் “மூத்தவரே, அங்கு நகரில் என்ன நிகழ்கிறது?” என்றான். அக்கேள்வி அதுவரை இருந்த உளநிலையை தணியச்செய்ய பலராமர் சலிப்புடன் தன் பெரிய கைகளை உரசிக்கொண்டார். விருஷசேனன் “அங்கு என்ன நிகழுமென்று நீங்கள் எண்ணுகிறீர்களோ அதுதான். இளவரசி கவர்ந்து செல்லப்பட்டாள் என்ற செய்தியே அஸ்தினபுரியை நிலைகுலையச் செய்துவிட்டது. அஸ்தினபுரியின் ஐநூறாண்டுகால வரலாற்றில் இப்படி ஒன்று நிகழ்ந்ததில்லை. அதிலும் ஷத்ரிய குடியைச் சாராத யாதவர் ஒருவர் அதைச் செய்தது அங்கே எழுப்பிய சினத்தைச் சொல்ல கிருஷ்ண துவைபாயனரின் நாவுதான் வேண்டும்” என்றான்.
சித்ரசேனன் “இன்று காலை அரண்மனையிலிருந்து துறைமேடைக்கு புரவியில் வந்துகொண்டிருந்தேன். அத்தனை நாவுகளிலும் உச்சநிலை வசைச்சொற்கள் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தன” என்றான். பலராமர் “ஆம், அதை உணரமுடிகிறது” என்றார். “சகுனி என்ன சொல்கிறார்?” என்று யௌதேயன் கேட்டான். சத்யசேனன் “அவருடைய குருதி அனலாகியிருக்கிறது என்றார்கள். அது எதிர்பார்த்ததுதான். ஆனால் கணிகரும் அதே அளவு சினம் கொண்டிருக்கிறார். முதல்முறையாக அவர் தோற்கடிக்கப்பட்டதாக உணர்ந்தார்” என்றான்.
“நேற்று இச்செய்தியை ஒற்றர்கள் அறிவிக்கும்போது சகுனியின் அறைக்குள் கணிகர் இருந்தார். செய்தியைக் கேட்டதும் சகுனி சினம் கொண்டெழுந்து வாளை எடுத்ததாகவும் கணிகர் பெருமூச்சுடன் கைகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து முறுக்கியபடி அமர்ந்திருந்ததாகவும் ஏவலன் சொன்னான். அதை அரசரிடம் அவன் சொல்லும்போது நான் உடன் இருந்தேன். கணிகர் சினம் கொண்டு எவரும் பார்த்ததேயில்லை” என்றான் விருஷசேனன். பலராமர் “நான் இப்புவியில் அஞ்சுவது அவரை மட்டுமே” என்றார்.
யௌதேயன் “பிறிதெவரைப்பற்றியும் கேட்க வேண்டியதில்லை. பிதாமகர் பீஷ்மரும் துரோணரும் என்ன எண்ணுவார்களென்பதை எழுத்து எண்ணி என்னால் சொல்லிவிடமுடியும்” என்றான். “ஆகவேதான் உங்கள் வரவு நகரை கொந்தளிக்க வைக்குமென்று நான் எதிர்பார்க்கிறேன். ஒருவேளை அஸ்தினபுரியின் படை திரண்டு துறைமுகப்புக்கே வரக்கூடும். உங்களை சிறையிடக்கூட ஆணை எழக்கூடும். இங்கு வரும் வழியில் காவலர்கள் அனைவருமே சினங்கொண்டு எரிந்துகொண்டிருப்பதைத்தான் கண்டேன். நானே வந்து தங்களை அழைத்துச் செல்லவேண்டும் என்று விதுரர் எனக்கு ஆணையிட்டது ஏன் என்று புரிந்தது.”
பலராமர் “சாம்பன் செய்தது பிழைதான்… நாங்கள் அறியாதது அது” என்றான். “ஆம், அது இளையோர் விளையாட்டு. கணிகரை அறிந்த எவரும் இரு இளையோரை அதற்கு அனுப்பமாட்டார்கள்.” யௌதேயன் புன்னகைத்து “ஆனால் அவர்கள் வென்றுவிட்டார்கள், மூத்தவரே” என்றான். விருஷசேனன் அவனை நோக்கி திரும்பி “நீங்கள் இன்னமும் செய்தியை அறியவில்லையா?” என்றான். யௌதேயன் திகைப்புடன் நோக்கினான். “அவர்களை சிறைப்பிடித்துவிட்டோம். சாம்பர் அஸ்தினபுரியின் சிறையில் இருக்கிறார்.”
யௌதேயன் “அவர்கள் அஸ்தினபுரியின் எல்லையை கடந்துவிட்டனர்” என்றான். “ஆம், ஆகவே அஸ்தினபுரியினர் அவர்களைத் தொடரமுடியாதென்பது பெண்கோள்முறைமை. ஆனால் பிறநாட்டு அரசகுடியினர் அவர்களை தொடரலாம், வெல்லமுடிந்தால் அப்பெண்ணை கொள்ளலாம். அவர்களின் மணம்நிகழும் வரை அதற்கு ஒப்புதல் உண்டு” என்றான் விருஷசேனன். “கங்கைக்கரை மாளிகையில் நீர்விளையாட்டில் இருந்தபோது எங்களுக்கு கணிகரின் ஆணை வந்தது. நாங்கள் விரைவுப்படகில் தொடர்ந்து சென்று அவர்களை சூழ்ந்துகொண்டோம்.”
யௌதேயன் பெருமூச்சுடன் “ஆம், சர்வதனால் உங்களை எதிர்கொள்ள முடியாது” என்றான். “உங்களை அனுப்பியதில்தான் கணிகரின் நுண்திறன் உள்ளது.” சித்ரசேனன் “மூத்தவர் நெடுந்தொலைவுக்கு அம்புசெலுத்துவதில் பெருந்திறன்கொண்டவர். தந்தையிடமிருந்து அதை கற்றுக்கொண்டார். அதில் இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவரும் அபிமன்யூவும் மட்டுமே அவருக்கு நிகர்நிற்க முடியும். தமோதிருஷ்டம் என்னும் கலையைத் தேர்ந்த அவரால் முற்றிருளிலும் பூச்சிகளின் சிறகைக்கூட நோக்கமுடியும். அவர்களைத் தொடர்வது எங்களால் மட்டுமே முடிவது” என்றான்.
சத்யசேனன் “எங்களிடம் தொலையம்பு செலுத்தும் பெருவில் இருந்தது. ஆனால் அன்று மூத்தவர் ஒரு அருந்திறனை காட்டினார். எங்கள் விரைவுப்படகின் கொடிக்கம்பத்தை நாங்கள் இருவரும் வடம்பற்றி இழுக்கும்படி சொன்னார். அது வளைந்ததும் அதை வில்லாக்கி முதல் வடத்தை நாணாக்கி எரியுருளை ஏற்றப்பட்ட பேரம்பு ஒன்றை விண்ணில் எழுப்பினார். அது பறந்து விழிமறைந்து வளைந்து இறங்கி சர்வதரின் விரைவுப்படகின் பாய்மீது விழுந்தது. அதன் எரியரக்கு பாயை கொளுத்தியது. பட்டு மிக விரைவிலேயே பொசுங்கும் என்பதனால் சிலகணங்களிலேயே அவர்களின் படகு விரைவழிந்தது.”
“ஆயினும் சர்வதர் தன் தோள்வல்லமையால் துடுப்பிட்டு படகை செலுத்தினார். நாங்கள் அம்புகளால் படகைச் சூழ்ந்து நிறுத்தினோம். சாம்பரின் இடத்தோளையும் அம்பு எய்து செயலிழக்கச் செய்தோம். சர்வதரிடம் இளவரசியை கையளிக்கும்படி கோரினோம். அவர் மறுத்தார். ஆகவே முறைப்படி அவரை மற்போருக்கு அழைத்தோம். படகிலேயே அவருடன் மூத்தவர் தோள்கோத்தார். ஒன்றரை நாழிகையில் மூத்தவர் அவரை தூக்கி அடித்து வீழ்த்தினார். அவர் தன்னை கொல்லும்படி கோரினார். ஆனால் மூத்தவர் அவரை குப்புறவீழ்த்தி கைகளைப் பிணைத்துக் கட்டினார்” என்றான்.
யௌதேயன் மீண்டும் பெருமூச்சுவிட்டான். விருஷசேனன் “இருவரையும் சிறைப்படுத்தி காலையிருளிலேயே எவருமறியாமல் அழைத்துச்சென்று அஸ்தினபுரியின் அரசர் முன் நிறுத்தினோம். அவர்களைக் கண்டதுமே அரியணையிலிருந்து கடுஞ்சினத்துடன் பிளிறலோசை எழுப்பியபடி கைகளை ஓங்கி அறையவந்தார் அரசர். சகுனி மருகனே நில் என ஆணையிட்டதனால் அமைந்தார். மூச்சிரைக்க என்ன செய்வதென்று அறியாமல் ததும்பினார். அருகே நின்ற வீரனின் வேலைப்பிடுங்கி வளைத்து வீசினார். பின்னர் அவர்களை சிறையிலடைத்துவிட்டு மதுராவுக்கு செய்தி அனுப்ப அவர் ஆணையிட்டார்” என்றான்.
சித்ரசேனன் “அச்செய்தியைக் கேட்டுத்தான் நீங்கள் வருகிறீர்கள் என எண்ணினோம்” என்றான். துடுப்புகள் நீரளாவும் ஒலி மட்டும் கேட்கும் அமைதி நிலவியது. பலராமர் அமைதியிழந்து எழுந்து நின்றார். மீண்டும் அமர்ந்தபின் “சாம்பன் அடைக்கப்பட்ட சிறை எது?” என்றார். “அரசகுடியினருக்குரிய சிறைதான்” என்றான் விருஷசேனன். பலராமர் சற்று அமைதியடைந்து “ஆம், துரியோதனனின் சினத்தை புரிந்துகொள்ள முடிகிறது. இது பெண்கவரப்பட்ட தந்தையின் சினம் மட்டும் அல்ல. வெல்லமுடியாத அஸ்தினபுரி யாதவர்முன் தோற்றதாகவே ஷத்ரியர் எண்ணுவார்கள். ஷத்ரிய அவைகளில் இனி அவன் நுழைகையில் மெல்லிய இளிவரல்நகை எழுந்து சூழும்” என்றார்.
யௌதேயன் “இளவரசி என்ன சொன்னாள்?” என்றான். “இளவரசியை அவைக்குக் கொண்டுவந்தபோது அனைவரும் திகைப்புடன் அவளை நோக்கினார்கள். தயக்கமற்ற கண்களுடன் அவள் வந்து அவைநடுவே நின்றாள். நீங்கள் கவர்ந்துசெல்லப்பட்டீர்களா இளவரசி என விதுரர் கேட்டார். அவள் இல்லை என்றாள். துச்சாதனர் உரக்க என்ன சொல்கிறாய் என்று கூவினார். அவள் அவர் விழிகளை நோக்கி நான் விரும்பாமல் என்னை எவரும் கவரமுடியாது என்று அறியமாட்டீர்களா தந்தையே என்றாள். அவர் வாயடைத்து நின்றுவிட்டார். அவள் அவைநோக்கி சாம்பரை உளஏற்பு கொண்டுவிட்டதாவும் பிறிதொருவரை இப்பிறவியில் ஏற்கவியலாதென்றும் சொன்னாள்” என்றான் விருஷசேனன்.
மீண்டும் அமைதி நீள பலராமர் “துரியோதனன் எவ்வாறு இருந்தான்?” என்றார். “அரசர் பெருந்துயருடன் ஏன் இதை செய்தாய் கிருஷ்ணை, உன் கைபற்றும் தகுதி கொண்டவன் அவன் என எப்படி எண்ணினாய் என்று கேட்டார். இளவரசி அவர் விழிகளை நோக்கி அவர் என் உள்ளம்கொண்டவரின் உருக்கொண்டவர் என்றாள். அரசர் திடுக்கிட்டு அவளை நோக்கியபின் தலைகவிழ்ந்து உடல் எடைமிகுந்து அரியணையில் அமர்ந்தார். விதுரர் இளவரசியை மீண்டும் கன்னியர்மாளிகைக்கு அனுப்ப ஆணையிட்டார்” என்றான் விருஷசேனன்.
“ஆனால் இளவரசி அவை நீங்கியதும் அரசர் மீண்டும் சினவெறிகொண்டு இரு கைகளாலும் தொடையை ஓங்கியறைந்தபடி எழுந்து கூச்சலிட்டார். யாதவகுலத்தையே கருவறுப்பேன், மதுராவை எரியூட்டுவேன், சாம்பனை கழுவேற்றுவேன் என்று கூவினார். விதுரர் சொன்ன நற்சொற்கள் அவர் செவிகளை எட்டவில்லை. சகுனி எழுந்து ஏதோ சொல்லெடுக்க அவரை நோக்கிச் சீறியபடி கையோங்கி சென்றார். மதம்கொண்ட வேழம்போல எதிர்நின்ற அனைத்தையும் முட்டிமோதி தள்ளினார். அவையினர் அஞ்சி நடுங்கி அமர்ந்திருந்தனர்.”
“விதுரர் விழிகாட்ட கனகர் அவை நீங்கி பேரரசரை அவைக்கு அழைத்துவந்தார். அவர் அவைநுழைந்து என்ன நடக்கிறது இங்கே, அரியணை அமர்ந்தவன் நிலையழியலாமா மூடா என்று கூவினார். உடற்தசைகள் சினத்தால் ததும்ப தந்தையை நோக்கி நின்றபின் அரசர் திரும்பி மறுபக்கம் வழியாக வெளியேறினார். பேரரசரை அரியணை அமர்த்தி அவைநிறைவு செய்தனர். அரசர் சினம் தலைக்கேற பித்தனைப்போல் இருப்பதாக கனகர் சொன்னார். விதுரர் என்னிடம் நீங்கள் இருவரும் அஸ்தினபுரி நோக்கி வருவதாகச் சொல்லி உங்களை காத்து அழைத்துவரவேண்டும் என்று ஆணையிட்டபோது அவர் முகத்தில் கவலையை கண்டேன்.”
அச்சொற்களைக் கேட்டபடி யௌதேயன் இரு கைகளையும் மார்புடன் கட்டியபடி கண்மூடி அமர்ந்திருந்தான். விழிதிறந்து “முற்றாகத் தோற்கடிக்கப்பட்டேன், மூத்தவரே. எந்தையரை வெல்ல உங்கள் தந்தையால் இயலும். எனவே எங்களை வெல்ல உங்களால் மட்டுமே இயலும் என்று உணர்ந்த கணிகர் இளைய யாதவரைக்கூட ஒருநாள் வெல்லக்கூடும்” என்றான். பின்னர் “இனி என்ன நிகழும்? நாங்கள் செய்யவேண்டியது என்ன? தாங்கள் கூறுவதை செய்கிறோம்” என்றான். பலராமர் “ஆம், இனி நீ கூறுவதையே நாங்கள் கடைப்பிடிக்கவேண்டும்” என்றார்.
விருஷசேனன் “இனி ஆகக்கூடுவது விண்ணப்பித்தல் மட்டுமே” என்றான். “இன்றைய சூழலில் யாதவர் எவ்வகையிலும் அஸ்தினபுரியிடம் பூசலிட இயலாது. அஸ்தினபுரிக்கு யாதவர் தேவை, ஆனால் தவிர்க்கமுடியாதவர்கள் அல்ல. பூசலிட்டுப் பிரிந்து நின்றிருக்கும் யாதவர்கள் இன்று பெருவல்லமையும் அல்ல. அவர்கள்பொருட்டு அரசர் ஷத்ரியர்களின் பகையை ஈட்டிக்கொள்ள மாட்டார்.” பலராமர் “ஆம், உண்மையில் அஸ்தினபுரிக்கும் யாதவருக்குமான கூட்டு முறிந்துவிட்டது” என்றபின் திரும்பி யௌதேயனிடம் கசப்புடன் சிரித்தபடி “அவ்வகையில் உன் பணி நிறைவுற்றுவிட்டது, மைந்தா” என்றார்.
யௌதேயன் “மூத்தவரே, உங்களை நான் அணுகியறியேன். ஆனால் உங்கள் தந்தை எவரென்று அறிவேன். அவரிடம் நான் கோருவதை உங்களிடமும் கோரமுடியும் என்று உணர்கிறேன். உங்கள் உள்ளத்துள் நீங்களும் அவ்வாறு உணர்ந்தால் எனக்கு உதவுங்கள். இது என் திட்டம். இது பிழையாகி மூத்தவரும் இளையோனும் சிறைப்பட்டதற்கு நானே பொறுப்பு. அவர்கள் மீளவும் இவையனைத்தும் எளிதென முடியவும் என்ன வழி உள்ளது?” என்றான். விருஷசேனன் சிலகணங்கள் அவனை கூர்ந்து நோக்கினான். விழிநோக்கியிருக்கவே அவன் உருவம் கர்ணனாக மாறுவதை உணர்ந்து யௌதேயன் அகம் திகைத்தான்
பெருமூச்சுடன் கையை காற்றில் வீசி எதையோ கலைத்தபின் விருஷசேனன் “நீ கோருவதை நான் மறுக்கமுடியாது, இளையோனே” என்றான். “ஏனென்றால் எந்தை அதை செய்யமாட்டார்” என்றபின் எழுந்து கொண்டான். பெரிய கருந்தோள்கள் தசைபுடைத்து நிற்க கைகளைக் கட்டிக்கொண்டு நீரலைகளை நோக்கி திரும்பி நின்றான். பின்னர் “பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு சூதில் வென்று நம் தந்தையர் சென்று நின்றபோது வென்றவற்றை முழுக்க திருப்பி அளித்த பேரரசரை நினைவுறுகிறாய் அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் யௌதேயன். “மீளமீள சூதர் பாடும் கதை அது.”
விருஷசேனன் “எந்தை அறிந்த அரசர் துரியோதனரை நானும் அறிவேன். அவருள் வாழ்பவர் பேரரசர் திருதராஷ்டிரர்தான்” என்றான். “களிற்றின் உடல்கொண்ட முழு வலிமையையும் அதன் மதமூறும் சிறுதுளை ஈடுசெய்கிறது என்று ஒரு சொல் உண்டு. அவர்களுக்கு அது குருதிப்பற்று” என்று விருஷசேனன் சொன்னான். பின்னர் “இதற்குமேல் நான் சொல்லலாகாது, இளையோனே” என்றான். யௌதேயன் முகம் மலர்ந்து “இதுபோதும் மூத்தவரே…” என்றான். பலராமர் “என்ன சொல்கிறான்?” என்றார். “எந்நிலையிலும் தன்குருதியினன் ஆகிய சர்வதனை அரசர் தண்டிக்கப்போவதில்லை. தன் மகள் கிருஷ்ணையின் விருப்பை மீறி எதையும் செய்யவும் அவரால் இயலாது” என்றான் யௌதேயன்.
“ஆனால் அவள்…” என்று பலராமர் சொல்லி தயங்க “அவள் அவையிலேயே சொல்லிவிட்டாள். அதை அவரால் மீறமுடியாது. அவர் தன் மகளை சாம்பருக்கு கையளித்தே ஆகவேண்டும்” என்று யௌதேயன் சொன்னான். சித்ரசேனன் “தந்தை உன்னை சந்திக்க விரும்புவார், இளையோனே” என்றான். சத்யசேனன் “இந்திரப்பிரஸ்தத்தின் இளையோர் என அவர் நாவில் அடிக்கடி சொல்லெழுவதை நான் கேட்டுள்ளேன். உங்கள் ஒன்பதின்மர் மேலும் அவர் கொண்டுள்ள அன்பு எங்கள் அனைவருக்கும் பொறாமையை உருவாக்குவது” என்றான்.
“எங்களில் அவருக்கு மிக உகந்த மைந்தன் யார்?” என்றான் யௌதேயன். “அதை நீயே அறிவாய்” என விருஷசேனன் சிரித்தான். “அபிமன்யூ… வேறு யார்?” என்றான் யௌதேயன். விருஷசேனன் உரக்க சிரித்து “அனைவரையும் தந்தையென்றாக்கும் நடிப்பு ஒன்று அவனிடமுள்ளது. அவனை நேரில் கண்டால் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைக்கவேண்டும்” என்றான். அவர்கள் சேர்ந்து சிரிக்க அதில் கலந்துகொள்ளாமல் பலராமர் “நான் அவனை எப்படி முகம்கொண்டு சந்திப்பேன்? எண்ண எண்ண பெருகி வருகிறது அந்த தயக்கம்” என்றார்.