பணமதிப்புநீக்கம் -கடிதங்கள்

modi

அன்பு ஜெ,

உங்கள் பதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு உருவான எதிர்வினைகளை ஒற்றை தரப்பாக மிகவும் எளிமைப்படுத்தி விட்டதாக தோன்றுகிறது. ஆம், எந்த கட்சியையும் போலவும் பிஜேபிக்கும் அரசியல் எதிரிகள் இருப்பார்கள். பிஜேபி எதைச் செய்தாலும் அதற்கு ஒரு குறுகிய எதிர்மறை நோக்கம் கற்பித்து திட்டங்களை திரித்து காழ்ப்பும் வசைகளும் கூடிய கோஷங்களை வைக்கும் தரப்பு இருக்கும்தான். அந்த குரலுக்கு அதன் பரபரப்பு கருதி ஊடகங்களில் பெரும் கவனமும் கிட்டும் அதனாலேயே அது முக்கிய ஒற்றை தரப்பு என்ற பிம்பத்தை உருவாக்கிக்கொள்ளும், பின் அதைக்கொண்டு அரசியல் செய்ய முனையும். ஏன் ஆட்சியில் இல்லாத பொழுது பிஜேபியும் கூட இதையே செய்திருக்கும், இது அரசியல் செயல்பாட்டின் ஒரு பகுதி என்று நாம் ஏற்க பழகிவிட்டோம். இந்த தளத்தில் அரசு என்ற கோணத்தை விட கட்சி, கருத்தியல் என்ற கோணமே பிரதானமாகிறது.

ஆனால் நிதர்சனத்தில் இது கூட்டத்தில் எம்பிக் குதித்து ஒலிக்கும் ஒரு தரப்பு மட்டுமே. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்த எல்லோரும் ஊழல்வாதிகளோ, கருப்பு பண முதலைகளோ, மோதி காழ்ப்பாளர்களோ அல்ல. சொல்லபோனால் இதை விமர்சிக்கும் பலரும் ஆரம்பத்தில் இது குறித்து நேர்மறை நம்பிக்கை வெளிப்படுத்தியவர்களே (நான் உட்பட ). அச்சமயம் இது மிகவும் தைரியமான ஒரு முன்னெடுப்பாகவே தோன்றியது.அதைவிட இவ்வளவு பெரிய ஒரு அடிப்படை மாற்றத்தை அரசு முன்னெடுக்குமெனில் அது திறமையான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையும் பரவலாக இருந்தது.இதன் ஆரம்ப கட்ட இன்னல்களை சராசரி இந்திய மனம் ஊழல் கறுப்புப்பணம் என்ற நோய்மையை போக்க அளிக்கப்படும் கசப்பு மருந்தாகவே பார்த்தது.

நடைமுறையில் ஏற்பட்ட தாமதம், குளறுபடிகள், இந்த குறைகளை அரசு போதிய தீவிரத் தோடு அணுகி சரி செய்ய முயலாமை என்று பல்வேறு வகைகளில் இதன் பாதிப்பும் வலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்தாலும் பொதுமக்களை மிகவும் பாதித்தது தாங்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்று சில ஆயிரங்கள் கூட பெற முடியாத நிலையில் சேகர் ரெட்டி போன்றோர் கோடிக்கணக்கான ரூபாய்களை மிக எளிதாக மாற்ற முடிந்தது என்பதே. எந்த தார்மீகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கோரப்படடதோ அந்த அடிப்படையையே இவ்வகை நிகழ்வுகள் கேலிக்குரியதாக்கிவிட்டன.

அரசின் நோக்கங்களை உத்தமமானதாக இருக்கலாம் ஆனால் உத்தேசங்களை கொண்டோ, நல்லெண்ண அடிப்படைகளையோ கொண்டோ அல்ல நாம் ஒரு அரசின் செயல்பாட்டை எடைபோடுவதும் விமர்சிப்பதும்.மோடியின் நல்லெண்ணத்தை ஏற்கும் நாம் அத்தோடு இதை ஆரம்பத்தில் ஆதரித்த பெரும்பாலான பொதுமக்களின் நல்லெண்ணத்தையும் ஏற்க வேண்டும்.

இங்கு ஊழலை ஒரு காரணமாக நாம் சுட்டுவது இந்த நடவடிக்கை எப்படி தோல்வியுற்றது என்பதற்கான விளக்கமாக இருக்க முடியுமே தவிர ஒரு பொறுப்புத்துறப்பாக இருக்க முடியாது. ஒரு திட்டத்தை முன்னெடுப்பதற்காய் முன்னால் அதன் சாதாக பாதகங்களை, எதிர்கொள்ள வேண்டியிருக்கும் தடைகளை சீர்தூக்கி தேவையான மாற்று நடவடிக்கைகளை யோசித்து செய்வது என்பது எந்த ஒரு சிறிய நிர்வாகிக்கு கூட அடிப்படை. ஒரு மாபெரும் நாட்டை ஆளும் அரசுக்கு, ஆயிரக்கணக்கான துறை சார் வல்லுநர்களை, அமைப்பை, தன கீழ் வைத்திருக்கும் அரசு செய்ய தவறும்போது அதை விமர்சிப்பது தான் முறை என்று தோண்றுகிறது.

இவ்வகை வகை காழ்ப்பற்ற விமர்சனங்களையோ கூட ஆளும் தரப்பு எவ்வாறு எதிர்கொண்டது ?. பிஜேபியின் தமிழக முகங்களாக இருப்போர் இவ்வித விமர்சனங்களை எவ்விதம் எதிர்கொண்டனர் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவர்களின் அதீத தற்காப்பு மனநிலை அரசு கொண்டிருக்கும் அதீத பாதுகாப்பின்மையையே சுட்டியது. அந்த பதட்டமே எல்லா தரப்புகளையும் மோடி எதிர்ப்பு என்ற ஜாடிக்குள் இட்டு மோடியை விமர்சிபவர் ஏண்டி இண்டியன் என்று கட்டம் கட்டுகிறது

உலகத்தரம் வாய்ந்த ஹார்வர்ட் பிஸ்னஸ் ரிவ்யூ உட்பட பல சர்வதேச பத்திரிக்கைகளில் இந்த பணமதிப்பிழப்பு குறித்து துறைசார் வல்லுனர்களின் கருத்துக்களும் விமர்சங்களும் வந்துள்ளன.இதையெல்லாவற்றயும் கூட கூட்டிப் பெருக்கி மோதிய கசப்பு எனும் குப்பைக்கூடையில் கொட்டுவது ஒரு நல்லலெண்ணம் கொண்ட அரசுக்கு அழகல்ல இது மேலும் மேலும் மக்களை அரசின் மீதான அவம்பிக்கை நோக்கி மட்டுமே இட்டுச் செல்லும்

இந்த விமர்சனங்களை இன்னொரு காரணத்திற்காகவும் முக்கியமாகின்றன. இவ்விமர்சனங்களின் உண்மையான நோக்கம் அரசை முடக்குவதோ அல்லது அரசின் பிற திட்ட்ங்களும் வீழ வேண்டும் என்று நினைப்பதோ அல்ல, இனியாவது அரசு போதிய கவனமும் முன் தயாரிப்பும் இன்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று திட்டங்களை கொண்டு வந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தினாலும் பயத்தினாலும் தான். இதன் பிறகு வந்த ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளில் கூட இவவகை விமர்சனங்களை கணக்கில் கொண்டிருந்தால் அந்த நடவடிக்கை செயல்படுத்திய விதம் பலமடங்கு சிறப்பாகவும் பொது மக்களுக்கு நேரும் இன்னல்களை பெருமளவு குறைப்பதாகவும் இருந்திருக்கும்.

இப்படி எல்லா விமர்சனங்களை ஏதோ எதிரிகள் விடும் அம்பு என்பதாக உருவகித்திக்கொண்டு நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு கொண்டு நிற்கும் மனோபாவம் ஆதரவாளர்களிடம் வேண்டுமானால் ஒரு விக்டிம் பாவனை வளர்க்க உதவுமே ஒழிய நாட்டுக்கோ, அரசுக்கோ எந்த விதத்திலும் இது பயன் அளிக்காது என்பது சோகம். தேச ஒற்றுமை தேசபத்தி என்ற ஒவ்வொரு நாளும் தாரக மந்திரமாக உச்சரிக்கும் அரசு நிஜத்தில் செய்வதென்னவோ சமூகத்தின் பிளவுகளை விரிவாக்கும் either you are with us or you are with them என்னும் ஆபத்தான பிரிவினையையே

மிக எளிய நோக்கு – ஒரு சாதாரண குடிமகனின் எதிர்பார்ப்பு தம் அரசு நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும், பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதே. அவர்கள் பிழைகளை, சறுக்கல்களை கூட பெரிதாக பொருட்படுத்துவதில்லை ஆனால் இவ்வகையில் சுட்டி காட்டப்படும் பிழைகளை விமர்சனங்களை கொஞ்சமும் சீர்தூக்கி பார்க்காமல் அதை எதிரிகளின் சதியாக சித்தரிக்கும் மூர்க்கமான போக்கு அவர்களுக்கு அரசின் மீதான ஒவ்வாமையை அதிகரிப்பதிலேயே சென்று முடியும்

அன்புடன்

கார்த்திக் – சிட்னி

***

பிகு : எளிய தரவாக பணமதிப்பிழப்பு குறித்த இரண்டு பொருட்படுத்த தகுந்த கட்டுரைகளின் சுட்டியை இங்கு பகிர்ந்துள்ளேன்.

1.https://hbr.org/2017/11/one-year-after-india-killed-off-cash-heres-what-other-countries-should-learn-from-it

2.http://indianexpress.com/article/opinion/columns/demonetisation-pm-modi-notes-ban-one-year-of-demonetisation-4927169/

***

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

என்னுடைய மோதியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் விதமாக கடந்த 02/09/2017 அன்று இவ்வாறு எழுதியிருந்தீர்கள்….

பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்தது குறித்து நாம் வருத்தம் கொள்ளவேண்டும். அதற்கு மோதியோ பாரதிய ஜனதாவோ முதன்மைக் காரணம் அல்ல. நம் அமைப்பின் சீர்கேடுதான் முழுமுதற் காரணம். வங்கிகள், தணிக்கையாளர்கள், அரசதிகாரிகள், வரிஏய்ப்பாளர்கள் அனைவரும் ஒருதரப்பாகச் சேர்ந்துகொண்டு அதை முழுமையாகத் தோற்கடித்தனர். குறிப்பாக இரண்டு அயல்நாட்டு மூலதன வங்கிகளுக்கு இதைத் தோற்கடித்ததில் மிகப்பெரிய பங்குள்ளது என்கிறார்கள்.

இன்று அதை மெய்ப்பிக்கும் விதமாக ஒரு செய்தி “India Today” செய்தி ஊடகத்தில் வந்துள்ளது.கடந்த திங்கள்கிழமையன்றுடெல்லியில் நான்கு ஆடம்பர கார்களை சோதனை செய்தபோது 28 அட்டைப்பெட்டியில் ரூபாய் 36 கோடி மதிப்புள்ள மதிப்பிழக்கப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன.இவை கஸ்மீரிலிருந்து தீவிரவாதிகளிடமிருந்து அவர்களின் கையாட்களால் மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்த நோட்டுக்களை தரகுத்தொகை பெற்றுக்கொண்டு தில்லியில் (1000 ரூபாய் நோட்டு ஒன்றுக்கு ரூ 60/-ம் மற்றும் 500 ரூபாய் நோட்டு ஒன்றுக்கு ரூ 30/-மாக)மாற்றித் தருபவனும் பிடிபட்டுள்ளான்.இதை விசாரிக்கும் தேசிய புலனாய்வுத்துறை,வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இல்லாமல் இது நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறியிருக்கிறது.

இதே நேரத்தில் நான் நேற்று உங்களுக்கு எழுதியிருந்தபடி சில நல்ல விஷயங்களும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தொடர்ந்து நடந்து வருவதும் கண்கூடானது.இது பற்றிய செய்திகளின் சுட்டிகளை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளேன்.

1) Why a Delhi gangster paid Rs 1 crore to buy Rs 36 crore of banned currency notes

2) One year of demonetisation: How much note ban has changed India

3) Gold, real estate, shell companies preferred modes for laundering money post demonetisation:ED probe

4) Rs 17000 crore deposited in, withdrawn from 58000 bank accounts after demonetisation

அ சேஷகிரி

***

அன்பின் ஜெ..

பொருளாதாரத் திட்டம் என்பது, நடைமுறை நிலைமையை ஆய்ந்து, வெற்றி பெறும் வாய்ப்புகளைக் கணித்து, எல்லா மக்களுக்குமான ஒன்றாக அணுக வேண்டிய ஒன்று. ஆனால், பணமிழப்புத்திட்டம் அப்படிக் கொண்டுவரப்பட்ட ஒன்றல்ல. ஒரு திடீர் அறிவிப்பாக. இத்திட்டம், கொண்டுவரப்பட்ட அன்று, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் அன்றே, இதை, பொருளாதார அறிஞர்கள் அருண்குமார் (கறுப்புப் பணம் பற்றி ஆய்வு செய்தவர்), அமர்த்தியா சென் போன்றவர்கள் விமரிசித்தார்கள். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கூட அரசும், ஊடகங்களும் அன்று தயாரில்லை. பாகிஸ்தானிகள், ஊழல் ஆதரவாளர்கள் என்னும் வசவுதான் கேட்டது.

கொஞ்சம் கூடத் தயாரிப்புகள் இல்லாமல், இது நடைமுறையில் எப்படி நிறைவேற்றப்படும் என்னுமறிதல் இல்லாமல், தினமொரு நடைமுறை மாற்றம் – ஒரு நாளுக்கு 2000 – இல்லையில்லை 2500, ஒரு நாள் – கையில் மை – ஒரு நாள் வங்கி மேலாளர் – பணம் எப்படி வந்தது எனக் கணக்கு கேட்பார் என – கிட்டத்தட்ட 70 க்கும் அதிகமான மாறுதல்கள் கொண்டு வரப்பட்டடன. நோட்டுக்கள் அவசர அவசரமாக அடிக்கப்பட்டு, இந்தியப் போர் விமானங்கள் மூலமாக நாடெங்கும் கொண்டு செல்லப்பட்டது. புதிதாக அடிக்கப்பட்ட நோட்டுகள் ஏடிஎம் மெஷின்கள் மூலம் பட்டுவாட செய்ய ஏதுவாக இல்லை.

இத்திட்டத்தினால், பொருளாதாரம் வீழுமென்று எந்தப் பொருளாதார அறிஞரும் சொல்லவில்லை. அவர்கள் சொல்லியதாகச் சொல்வது தவறு. வளர்ச்சி குறையும் என்றுதான் சொல்லியிருந்தார்கள். Shooting the tyres of a racing car என பொருளாதார அறிஞர் Jean Dreze சொல்லியிருந்தார். ஏனெனில், இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட அந்தக் காலத்தில் தான் உலகின் மிக வேகமாக வளரும் பெரும் பொருளாதாரம் என்னும் நிலையை இந்தியா அடைந்திருந்தது. பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டால், முதலில் பாதிக்கப்படுவது பொருளாதாரத் தட்டின் அடியில் இருக்கும் ஏழை மக்களே.

மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில், திட்டத்தின் நோக்கம் சரியெனினும், சரியான மேலாண்மை இல்லை என்றார் – monumental mismanagement – இதனால் 2% வரை பொருளாதார வளர்ச்சி குறையும் என்றார் – குறைந்திருக்கிறது. அதன் மதிப்பு 300000 லட்சம் கோடி. அவர் வெறும் அரசியல்வாதியல்ல. 1991 ல், நாடு பெரும் அந்நியச் செலாவணிச் சிக்கல்களில் மாட்டி, கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் இருந்து, இன்றைய வளர்ச்சிக்கும் வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர்.

https://www.youtube.com/watch?v=mSRRd02mMJc

பாராளுமன்றத்தில் மன்மோகன் சிங்கின் பேச்சு.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் – இதை – despotic action என வர்ணித்தார். முதன் முறையாக, அரசு தன் குடிகளைப் பார்த்துச் சொன்னது – நீ நேர்மையானவன் என்பதை, உன் பணத்தைக் கொண்டு வந்து வங்கியில் கட்டிவிட்டு நிரூபி என. பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வந்து வரிசையில் நின்று நிரூபித்தார்கள். ஆனால், கறுப்புப் பணம் வைத்திருக்கும் ஒருவரும் வந்து நிற்கவில்லை. அவர்களுக்கு அந்தத் தேவையும் இல்லை.

உண்மையிலேயே இத்திட்டத்தை, ஒரு சாதாரண நடைமுறை அறிவு கொண்டு யோசித்திருந்தால் கூட – இதன் பாதகங்கள் புரிந்திருக்கும். – பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் 100 சதம் பணம் மூலம் தான் பரிமாற்றங்கள் செய்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும், கல்வியறிவில்லாதவர்கள். 86% நோட்டுக்களை ஓரிரவில் ஒழிப்பது என்பது, அந்தப் பொருளாதாரப் பரிமாற்றங்களை நிறுத்தி விடும். பல இடங்களில், மக்கள் வங்கிகளுக்கு பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் – அவர்களுக்கு வங்கி சலான்களைப் பூர்த்தி செய்யத் தெரியாது – இந்த கீழ் நிலைப் பொருளாதாரப் பரிமாற்றங்கள் நிற்பது சொல்லொண்ணாத் துயரங்களை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்வது கடினமான காரியமும் இல்லை.

பணமிழப்பு நடவடிக்கை எடுக்கபட்ட அன்று, பேசிக் கொண்டிருக்கையில், பெரும்பாலான எதிர்வினைகள் உற்சாகமானதாகவே இருந்தன. ஊழல் அரசு அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் மாட்டிக் கொள்வார்கள் என்பதே எங்கும் பேச்சாக இருந்தது. அதைத் தாண்டி எவருக்குமே, அந்தப் பிரச்சினையின் உண்மையான சொரூபமும், அதற்கான தீர்வுகளும் தெரியாது என்பதே உண்மை.

அங்கேதான், இத்துறை அறிஞர்களின் பங்களிப்பு தேவைப்ப்படுகிறது. பொருளாதார அறிஞர் அருண் குமார், கறுப்புப் பணத்தில் 4% தான் பணமாக இருக்கிறது என்றார் – பல்வேறு ஆய்வுகளும் இதை 4-6% மேல் மதிப்பிடவில்லை. எனில், 94% க்கும் அதிகமான கறுப்புப் பணம் தங்கமாகவும், நிலங்களாகவும், வீடுகளாகவும், ஹவாலா மூலமாக வெளிநாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அரசு மற்றும் பொருளாதார ஆய்வுகள் சொல்கின்றன. மோதியின், பணமிழப்பு நடவடிக்கையின் நேர்மறை விளைவு – இந்த ஆய்வுகள் உண்மையென நிரூபித்ததுதான். இருந்த 4-6 சதக் கறுப்புப் பணமும் வெள்ளையாக்கப் பட்டு வந்ததுதான்.

இது பற்றிய விவாதங்களில், மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜன், பணமிழப்பு நடவடிக்கைக்கு சில மாதங்கள் முன்பாக ஒரு பேட்டியில், இது பற்றிய ஒரு கேள்விக்கு, பதிலளித்திருந்தார். அதில், இது ஒரு தீர்வாகப் பலர் வைத்திருந்தாலும், நடமுறையில், இது வெற்றி பெறும் சாத்தியங்கள் குறைவு, ஏனேனில், கறுப்புப் பணம் பதுக்கத் தெரிந்தவர்கள், புத்திசாலிகள் – தம் பணத்தை, சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, பலரிடம் கொடுத்து மாற்றி விடுவார்கள் எனச் சொல்லியிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=YaHhCYT2LXs

உண்மையில் அதுதான் நடந்தது. சில மாதங்களுக்கு முன்பு, தன் புத்தகம் வெளியிட இந்தியா வந்த ராஜன், மிகத் தெளிவாக, பணமிழப்பு நடவடிக்கைகளின் நன்மையை விடத் தீமைகள் அதிகம். எனவே அது உசிதமல்ல என அன்றைய அரசுக்குத் தெரிவித்ததாக பேட்டிகளில் சொல்லியிருந்தார்.

எனவே, இந்த முடிவு, ரிசர்வ் வங்கியின் ஆளுநரின் முடிவல்ல என்பது தெளிவாகிறது. ரகுராம் ராஜன், சாதாரண மனிதரல்ல. பெரும் பொருளாதார அறிஞர். மிக இளம் வயதிலேயே உலக வங்கியின் பொருளாதார ஆலோசகராகப் பணிபுரிந்தவர். 2005ல், அன்றைய அமெரிக்கத் தலைமைகளை எதிர்த்து, அமெரிக்கப் பொருளாதாரத் திட்டங்களை விமரிசித்தார். அது வீழுமென்று கணித்தார். 2008 ல் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ந்தது. அது போன்ற ஒரு மேதையைக் கையில் வைத்துக் கொண்டு, அவர் சொல்வதைக் கேட்காமல், அவரை மூன்றாந்தர அரசியல் வாதியை விட்டு வசைபாடி வெளியேற்றி விட்டு, ஒரு தஞ்சாவூர் பொம்மையைக் கொண்டு இத்திட்டம் கொண்டுவரப் பட்டது

வேளாண்மைக்கு அடுத்தபடியாக, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கட்டுமானத் துறை வீழ்ந்திருக்கிறது. சிறு, குறுந்தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார வளர்ச்சி சதவீதம் குறைந்திருக்கிறது. இதைத் தொடர்ந்த, ஜி,எஸ்.டி இன்னுமொரு அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட திட்டம் – இவையிரண்டுமே, பொருளாதாரத்தின் மீது விடுக்கப்பட்ட பெரும் தாக்குதல் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியா போன்ற பெரும் பொருளாதாரங்களில், எந்தத் திட்டமும், கொள்கையும், ஒன்றுக்குப் பலமுறை அலசப் பட்டே கொண்டு வரவேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என எடுக்கப்படும் எந்த முடிவும் மிகப் பலம் கொண்டு எதிர்க்கப்பட வேண்டும். அது எமர்ஜென்ஸியானாலும் சரி; பணமிழப்பானாலும் சரி; பொருளாதாரச் சீர்திருத்தங்களானாலும் சரி.

ஒரு எதிர்க்கட்சியாக, காங்கிரஸின் பொருளாதார அறிஞர்களான மன்மோகன் சிங்கும், சிதம்பரமும், மிகத் தெளிவாக, இத்திட்டத்தின் பாதகங்களை ஊடகங்களின் முன் வைத்தார்கள். இது மக்களாட்சி – இங்கே எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் மிக வலிமையாக இருக்க வேண்டியது மிக அவசியம். அக்குரல்களின் மீது value judgment வைக்கப்படுவது, மக்களாட்சியின் அடிப்படையை அழிக்க முற்படும் முயற்சியாகும். 2G ஊழலும், நிலக்கரி ஊழலும், நீரா ராடியா டேப்களும் அப்படி வெளிவந்தவைதான் – அவை தான் இன்றைய ஆட்சி மாற்றத்தின் முக்கிய காரணங்கள் கூட. எதிர்க்கட்சியாக இருந்தவரை, இனித்த இந்தப் போக்கு, இன்று ஆளுங்கட்சிக்குக் கசப்பது வேடிக்கை.

https://www.youtube.com/watch?v=asPVCqlIrIM

மன்மோகன் சிங்கின் உரை.

https://www.youtube.com/watch?v=Upy-qaWkVl8

ப.சிதம்பரத்தின் நேர்முகம்.

காதுள்ளவர்கள் கேட்கட்டும்.

பாலா

***

[எதிர்வினைகளை இங்கே முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். ஜெ ]

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 59
அடுத்த கட்டுரைஅயினிப்புளிக்கறி- கடிதங்கள்