ஏழு : துளியிருள் – 12
சர்வதன் மதுராவின் பெருந்துறை மேடைக்கு அரைக்காதம் அப்பால் யமுனைக்குள் கிளை தாழ்த்தி, படர்ந்து நின்றிருந்த பேராலமரத்தின் அடியில் கிளை வளைவுகளால் உருவான கூரைக்குக் கீழே மென்மரம் குடைந்துருவாக்கப்பட்ட சிறிய படகில் அமர்ந்து இரு விழுதுகளை கைகளால் பற்றிக்கொண்டு காத்திருந்தான். வானில் விண்மீன்கள் ஒவ்வொன்றாக எழத் தொடங்கியிருந்தன. யமுனையிலிருந்து பாசிமணம் கொண்ட நீராவிக் காற்று எழுந்தது.
அவன் அமர்ந்திருந்த நீண்ட வாள் போன்ற படகு அலைகளில் எழுந்து அமைந்துகொண்டிருந்தது. சூழ்ந்திருந்த இருளுக்குள் வௌவால்களின் சிறகடிப்பும், மரத்தின் கிளைகளுக்கு மேலே பறவைகள் குழறியும் பூசலிட்டும் எழுந்தமர்ந்து சிறகடிக்கும் ஓசையும், கரை விளிம்புகளை யமுனையின் அலைகள் தொட்டு வளையும் நீரொலியும், காற்றில் எழுந்தமைந்த கிளைகள் நீர்பெருக்கை அளையும் சலசலப்பும், நடுப்பெருக்கில் பாய்விரித்து சென்ற பெரும்படகுகளின் கொம்புகள் பிளிறி அடங்கியமையின் கார்வையும், அவை அனைத்தையும் ஒருங்கிணைத்த சீவிடுகளின் ஒலிச்சரடும் சூழ்ந்திருந்தன.
மிகத் தொலைவில் அவன் புரவிக் குளம்படியை கேட்டான். பின்னர் இருளுக்குள் கூரிய ஓசையொன்று குறியுணர்த்தியது. அவன் மறு ஓசை எழுப்பியதும் புரவி அவனை நோக்கி அணுகி வந்தது. குளம்படிகள் நிலைக்க அதிலிருந்து இறங்கிய சாம்பன் “இளையோனே” என்றான். “இங்கிருக்கிறேன்” என்றான் சர்வதன். புரவியை அங்குள்ள வேரொன்றில் கட்டியபின் புடைத்து எழுந்து நின்ற வேர்களின்மேல் தாவி அருகணைந்த சாம்பன் படகை இருளில் கூர்ந்து நோக்கி “இதில் பாய்மரம் இல்லையா?” என்றான்.
“உண்டு. ஆனால் அதை மடித்து உள்ளே வைத்துக்கொள்ள முடியும். பீதர் நாட்டு விரைவுப்படகு இது. மூங்கிலால் ஆனது பாய்மரம்” என்றான் சர்வதன். “ஒரு குழாய்க்குள் பிறிதொரு குழாய் என உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மை கொண்டது” என்றபின் “வருக!” என்றான். விழுதுகளை பற்றிக்கொண்டு வேர்கள்மேல் கால்வைத்து தாவி அருகணைந்த சாம்பன் படகின்மேல் ஏறி அதன் ஊசலாட்டத்தில் சற்று தள்ளாடி அமர்ந்துகொண்டு “விற்களும் அம்புகளும் இங்குள்ளனவா?” என்றான். சர்வதன் “போதுமான அளவுக்கு உள்ளன” என்றான். “எப்படியும் இருநூறு பேரையாவது நம்மால் வீழ்த்திவிடமுடியும்.”
“இருநூறு வீரர்களையா? நாம் என்ன போர்க்களத்திற்கா செல்கிறோம்?” என்றான் சாம்பன். “பெண்கோளும் ஆகோளும் தொல்குடிப் போர்முறைகள்” என்றபடி சர்வதன் தன் காலடியிலிருந்து துடுப்புகளை எடுத்தான். அகன்ற பகுதியை கைப்பிடியின் துளையில் செருகி இறுக்கி இரு துடுப்புகளையும் நீரில் போட்டு பெருந்தோள்களும் தசைத்திரள்களும் இறுகி நெகிழ மும்முறை உந்தி யமுனையின் பெருக்கில் படகை கொண்டுசென்றான். ஒழுக்கில் படகு செல்லத்தொடங்கியதும் சீராக துடுப்பை இட்டபடி வந்தான்.
“மையக்காற்றுக்கு போன பின்னர் பாய்களை மேலேற்றுகிறேன்” என்றான் சர்வதன். “இளையோனின் ஓலை சென்றிருக்குமல்லவா?” என்று சாம்பன் கேட்டான். “ஒவ்வொன்றையும் தவறாமல் முறையாகச் செய்யும் வழக்கம் கொண்டவர் அவர்” என்று சர்வதன் சொன்னான். பின்னர் தன் காலடியில் இருந்த பெரிய பாளைப்பொதியை எடுத்து அருகே வைத்துக்கொண்டான். “என்ன அது?” என்று சாம்பன் கேட்டான். “உணவு, வறுத்து சிறுதுண்டுகளாக்கிய ஊன். நாம் சென்று மீள்வது வரை உணவு தேவையல்லவா?” என்றான் சர்வதன்.
“ஒரு சிம்மம் இத்தனை ஊனை ஒரு வாரத்திற்கு ஒருமுறை உண்ணும்” என்றான் சாம்பன். “நான் யானை, ஊன் உண்கிறேன் அவ்வளவுதான் வேறுபாடு” என்றான் சர்வதன். இரு துடுப்புகளையும் ஒன்றுடன் ஒன்று தொடுத்து படகை நிலையழியாமல் ஒழுக்கில் விரைய விட்டுவிட்டு எழுந்து மூங்கில் கொடிமரத்தை எடுத்து படகின் நடுவிலிருந்த வளையத்தில் இறுக்கிப் பொருத்தினான். அதற்குள் சற்று சிறிய மூங்கிலை வைத்தான். அதற்குள் இன்னொரு மூங்கிலை வைத்தான். மூங்கிலுடன் மூங்கிலைத் தொடுத்து மூன்று ஆள் உயரத்திற்கு மேலேற்றியபின் அதன் முனையிலிருந்த கயிறுகளை படகின் இரு முனைகளிலும் இரு விலாக்களிலும் இழுத்துக் கட்டினான். அதன் உச்சியில் அஸ்தினபுரியின் கொடி ஏறி விரிந்து பறக்கத் தொடங்கியது.
“அமுதகலசக் கொடியா? என்றான் சாம்பன். “நாம் அணுகுகையில் ஓரிரு கலங்களாவது நம்மை பார்க்கக்கூடும்” என்றான் சர்வதன். பின்னர் பீதர் நாட்டு பட்டுப்பாய்களை ஒன்றன் மேல் ஒன்றாக ஏற்றினான். மூன்று பாய்களும் திடுக்கிட்டவைபோல் காற்றை வாங்கி உப்பி வளைந்து விசைகொண்டன. படகு தூண்டில் முனையால் கவ்வி காற்றில் இழுக்கப்பட்ட மீன்போல அலைகள்மேல் தாவி விரையத் தொடங்கியது. ஒவ்வொரு அலைவளைவையும் தொட்டு இலைகளில் இருந்து இலைக்கு தாவும் வெட்டுக்கிளிபோல நீர்பெருக்கில் அது விரைந்து சென்றது.
சாம்பன் பதற்றம் கொண்டிருந்தான். அவனால் அமரமுடியவில்லை. எழுந்து பாய்க்கயிற்றை பிடித்துக்கொண்டு நின்றான். இருளலைகளாகவும் அவ்வப்போது ஒளித்துளிகளாகவும் ஓடிக்கொண்டிருந்த கரையை நோக்கி “அங்குள்ள எவருக்கேனும் நம்மை தெரியுமா?” என்றான். “யமுனையில் இருளுக்குள் சென்றுகொண்டிருக்கிறோம், மூத்தவரே” என்றான் சர்வதன். “ஆம், தெரிய வழியில்லை” என்றான் சாம்பன். மீண்டும் வந்தமர்ந்தான். கைகளை நெரித்தபடி சில கணங்கள் இருந்தபின் மீண்டும் எழுந்து “எங்கு வந்துள்ளோம்?” என்றான். “இன்னமும் மதுராவின் எல்லையைக் கடக்கவில்லை” என்றான் சர்வதன்.
அவன் மீண்டும் வந்து அமர்ந்தான். “யௌதேயனின் ஓலை இன்னும் வரவில்லை அல்லவா?” என்றான். “அஸ்தினபுரியிலிருந்து மறுமொழி வரவேண்டும். அதற்கு இன்னும் பொழுதாகவில்லை” என்றான் சர்வதன். “ஆம், அவளிடமிருந்து மறுமொழி வரவேண்டும்” என்ற சாம்பன் “அவள் ஒருவேளை மறுத்தால் நாம் என்ன செய்வோம்?” என்றான். “மறுக்கமாட்டாள். மூத்தவரின் கணக்குகள் பிழையானதில்லை” என்றான் சர்வதன். “ஒருவேளை மறுக்கவும் கூடும் அல்லவா? பெண் உள்ளம்…” என்றான் சாம்பன். “மறுத்தால் நாம் திரும்பிவிடுவோம்” என்றான் சர்வதன்.
“நம்மை அஸ்தினபுரியினர் பார்த்துவிட்டால்?” என்றான் சாம்பன். “மகள்கோடலுக்கு வந்தோம் என்போம்” என்றான் சர்வதன். “என்ன சொல்கிறாய்?” என்று சாம்பன் சீற்றத்துடன் திரும்பினான். “ஆம், மணத்தன்னேற்புக்கு நமக்கு அழைப்பு உள்ளதல்லவா? ஓரிரு நாட்கள் முன்னரே வந்தோம் என்போம்.” சாம்பன் “ஆம், அப்படி சொல்லலாம்” என்றபின் “எனக்கென்னவோ அவள் எளிதில் ஒப்புக்கொள்ளமாட்டாள் என்றே தோன்றிக்கொண்டிருக்கிறது” என்றான். “ஆம், ஒருவேளை ஒப்புக்கொள்ளாமலும் போகலாம்” என்றான் சர்வதன். சாம்பன் உச்சகட்ட சினத்துடன் “என்னை அவள் மறுத்தாள் என்றால் வெறுமனே திரும்பமாட்டேன். அவள் தலைகொண்டுதான் மீள்வேன்” என்றான். “ஆம், தலை பயனுள்ளது” என்றான் சர்வதன்.
“ஆம், அவளை வெல்லாமல் திரும்பமாட்டேன்” என்ற சாம்பன் சினத்துடன் கைகளை உரசி “இழிமகள். ஷத்ரியர்களுக்கே ஆணவம் மிகுதி” என்றான். “அவள் இன்னமும் உங்களை மறுக்கவில்லை, மூத்தவரே. அதற்கு அவளுக்கு நாம் ஒரு வாய்ப்பு கொடுப்போம்” என்றான் சர்வதன். “ஆம், அவளே முடிவெடுக்கட்டும்” என்றான் சாம்பன். பெருமூச்சுடன் “இவளை நான் அடைவது யாதவ மணிமுடியை வெல்வதேதான். ஆகவேதான் அஞ்சுகிறேன். நாம் செல்வதை அறிந்தால் என்னைப்பற்றிய பிழைச்செய்திகளை சொல்லிவிடுவார்கள் என் உடன்பிறந்தார்” என்றான்.
நிலைகொள்ளாமல் சுற்றி நடந்தான். படகு அலையில் எழுந்தமைய நிலைதடுமாறி பாய்வடத்தை பிடித்துக்கொண்டான். மீண்டும் அமர்ந்து நெடுமூச்சுவிட்டு “அவள் எவரிடமேனும் எண்ணம் கேட்கக்கூடுமோ? தோழியர், செவிலியர்?” என்றான். சர்வதன் “கேட்கலாம்” என்றான். “அங்கே நமக்கெனப் பேச எவருள்ளனர்? அவள் அன்னை காசியிலிருந்து வந்தவள்.” சர்வதன் “ஆம், என் அன்னையின் அக்கை” என்றான். சாம்பன் திகைத்து “ஆம், உன் அன்னை காசி இளவரசி பலந்தரை அல்லவா? உன் நேர் மூத்தஅன்னையின் மகள் அவள்” என்றான். “ஆம், மூத்த அன்னை எனக்கு மிக அணுக்கமானவர்” என்றான் சர்வதன்.
“நீ அவளை அறிவாயா?” என்றான் சாம்பன். “ஆம், நன்றாகவே அறிவேன். அஸ்தினபுரியின் அரண்மனையில் கிருஷ்ணையுடன் நான் விளையாடியிருக்கிறேன்.” சில கணங்கள் அவனை கூர்ந்து நோக்கியபின் “நீ என்ன நினைக்கிறாய்? அவளுக்கு நான் தகுதியானவன் அல்லவா?” என்றான் சாம்பன். “இல்லை” என்றான் சர்வதன். சாம்பன் ஒருகணம் அயர்ந்து பின்னர் “ஏன்?” என்றான். “நீங்கள் நுண்ணுணர்வற்றவர். ஆகவே உலகியலுக்கு அப்பால் நோக்கற்றவர். பிறப்பின் தாழ்வுணர்ச்சியால் துன்புறுபவர். ஆகவே அனைவரையும் ஐயுறுபவர். தகுதிக்கு மீறி விழைபவர், ஆகவே சூழ்ச்சிகளை நாடுபவர். ஆற்றல் அற்றவர் என்பதனால் நச்சுச்சொற்களை நாவில்கொண்டவர்.”
“என்ன சொல்கிறாய்?” என்று கூவியபடி சாம்பன் எழுந்தான். “எவரிடம் பேசுகிறாய் என அறிவாயா?” சர்வதன் “நீங்கள்தான் எவரிடம் பேசுகிறோம் என அறியவில்லை” என்றான். சாம்பன் மூச்சிரைக்க மீண்டும் அமர்ந்து “இச்சொற்களை நான் மறக்கமாட்டேன். இதற்காக நீ கண்ணீர்விடுவாய்” என்றான். “நான் என் தந்தையைப்போன்றவன். செய்தவை எதற்கும் வருந்துபவன் அல்ல. செய்யத்தக்கவற்றை எதன்பொருட்டும் தவிர்ப்பவனும் அல்ல” என்றான் சர்வதன்.
படகின் துடுப்பை வலித்து அதை அலைமேல் எழுப்பி பெருகிச்சென்ற கங்கைக்குள் கொண்டுசென்றான். ஒரே வீச்சில் அதைத் திருப்பி ஒழுக்குக்கு எதிராக நிறுத்தினான். ஒற்றைக்கையால் பாய்வடங்களைப் பிடித்து திருப்பினான். அவன் தசைகளை நோக்கியபடி விழித்த கண்களுடன் சாம்பன் அமர்ந்திருந்தான். பின்னர் மெல்லிய குரலில் “அப்படியென்றால் ஏன் என்னை இப்போது அழைத்துச் செல்கிறாய்?” என்றான். “என் மூத்தவரின் ஆணை” என்றான் சர்வதன். “நான் அதை மீறி ஏதும் செய்வதில்லை.”
கயிற்றைக் கட்டியபின் துடுப்பை பிடித்துக்கொண்டு அமர்ந்து “அத்துடன் அரசகுடிப் பெண்கள் எப்போதும் அரசியலில் காய்கள். அவளை மாளவனோ கலிங்கனோ மணந்தாலும் வேறு ஒரு ஊழில்லை அவளுக்கு. இங்கு அவள் விழைந்த குடியில் மங்கலம் கொள்கிறாள். அவள் விழைந்த ஆணை எண்ணி வாழவும் உரிமை பெறுகிறாள்” என்றான். சாம்பன் கண்களைச் சுருக்கி “என்ன சொல்கிறாய்?” என்றான். “உள்ளம் பெருங்காற்றுகளால் படகென ஆளப்படுகிறது. பாய்கள் என கனவுகள். வளைந்தும் பிணைந்தும் வழிதேர்கின்றன.”
அது சாம்பனுக்கு புரியவில்லை. “நான் உன்னை நம்பவில்லை. நீயே என்னை தோற்கடிக்கக்கூடும்” என்றான். “அதை நான் முன்னரே உணர்ந்தேன். நீங்கள் எவரையும் நம்பமுடியாது” என்றான் சர்வதன். சாம்பன் “உன் எண்ணம் ஏதென்று என்னால் உணரக்கூடவில்லை. ஆனால் எவ்வகையிலேனும் இம்முயற்சி தோற்றால் அதற்கு நீயே முழுப் பொறுப்பு. உன்னை அழிக்காமல் விடமாட்டேன். வாழ்நாளெல்லாம் உன்னை பின்தொடர்வேன். நீ நஞ்சுகொண்ட நாகத்துடன் விளையாடுகிறாய் என எண்ணிக்கொள்” என்றான்.
“என் தந்தை நாக உலகம் சென்று நஞ்சுண்டவர். அந்நஞ்சு என்னிலும் குருதியென ஓடுகிறது” என்றான் சர்வதன். “ஆகவே நான் எந்த நாகத்தையும் அஞ்சவேண்டியதில்லை, மூத்தவரே.” சாம்பன் கசப்புடன் நோக்கை விலக்கிக்கொண்டான். பெரிய படகொன்று அலைகளில் ஆடியபடி சாளரங்கள் விழிகளென மின்ன கடந்துசென்றது. அதன் பாய்கள் வண்டுச்சிறகுகள் என புடைத்து விரிந்திருந்தன.
சாம்பன் துயில்கொண்டுவிட்டிருந்தான். நெடுநேரம் அவன் நிலைகொள்ளாமையின் உச்சம் வரை சென்று ஒரு கட்டத்தில் காலத்தின் எடைதாள முடியாமல் நரம்புகள் புடைக்க கைகளை பிசைந்துகொண்டிருந்தான். காலத்தை விரைவால் வெல்லமுடியும் என உள்ளம் கொள்ளும் வழக்கமான மாயையில் சிக்கி “என்ன செய்கிறாய்? இவ்வளவுதானா விரைவு?” என்றான். “இதற்கு மேலும் விரைவு கொள்ளலாம். ஆனால் முன்னர் சென்றால் நாம் அங்கே எங்காவது காத்திருக்க வேண்டியிருக்கும்” என்றான் சர்வதன். சாம்பன் “விரைந்து… மேலும் விரைந்து” என்றான்.
பின்னர் அமர்ந்துகொண்டு கண்களை மூடினான். சற்றுநேரத்திலேயே தலை ஆடி பலகையில் முட்டியது. அங்கேயே படுத்து துயில்கொள்ளத் தொடங்கினான். அவனையே நோக்கியபடி துடுப்பை வலித்து பாய்களை ஒதுக்கி படகை முன் செலுத்திக்கொண்டிருந்தான் சர்வதன். எளிய மானுடர். ஊழ்ப்பெருக்கிலும் இதேபோல பொறுமையின்மை கொள்கிறார்கள். அவர்கள் ஆற்றும் அனைத்துமே ஊழுடன் இணைந்து ஒழுக முடியாத சிறுமையை வெல்ல அவர்கள் கொள்ளும் முந்துதல் மட்டுமே. அவன் புன்னகைத்துக்கொண்டு விண்மீன்களை நோக்கினான். அவற்றின் சிமிட்டல்களும் மின்னல்களும் வடிவற்ற பெருக்கும் மெல்ல அவனை ஆட்கொண்டன.
குளிர்காற்றும் கங்கையின் நீர்ப்பெருக்கின் அலைப்பளபளப்பும் தனிமையை மேலும் அழுத்தம் கொண்டதாக ஆக்கின. ஏன் இங்கிருக்கிறேன் என அவன் தன்னை கேட்டுக்கொண்டான். பிறந்த நாள் முதல் தனக்கென்று ஏதும் விருப்போ வழியோ கொண்டதில்லை. யௌதேயனின் காவலன், அணுக்கன். உபபாண்டவர்களின் தோள்வலர் இருவரில் இரண்டாமவன். அதற்கப்பால் ஏதுமில்லை. அதுவே பழகிவிட்டது. அதற்கப்பால் செல்வது எப்போதேனும் தனிமையில் அமையும் உள்ளம் மட்டுமே. ஆனால் அது தனிமை என்னும் அரிதான உளநிலையாக மட்டுமே தன்னை அடைகிறது. அப்பால் என்றல்ல, ஆழம் என்றல்ல.
தான் மெய்யாகவே விழைவதென்ன என அவன் கேட்டுக்கொண்டான். இப்புவியில் இன்பமென்றும் நிறைவென்றும் அவன் அகம் கண்டது என்ன? அது தந்தையுடன் இருப்பது மட்டுமே என எப்போதும் போலவே உடனே உள்ளம் சென்றடைந்தது. தந்தை என்னும் எண்ணமன்றி இனியது ஏதுமில்லை. அவருடன் இருக்கையில் உள்ளம் பிறிதிலாத உவகையில் திளைக்கிறது. நீராடுவதுபோல. விழுதுகளில் தொற்றிப் பறப்பதுபோல. உண்பதுபோல. அவையனைத்தும் இணைந்ததுபோல. அத்தனையும் சேர்ந்த பத்து மடங்குபோல. ஆனால் அவன் தந்தையுடன் இருந்த நாட்கள் மிகக் குறைவு. அவர் அவனுக்கும் சுதசோமனுக்கும் தனியாக எந்த நோக்கையும் தொடுகையையும் அளிப்பதுமில்லை. மைந்தர்கள் ஒன்பதுபேரையும் ஒரே தருணம் அள்ளி அணைத்து தன் உடல்மேல் ஏற்றிக்கொள்வார்.
அவர் மைந்தர்களுடன் யமுனையில் நீராடிவிட்டு செல்லும்போது எதிரே மூதன்னை குந்தி ஒருமுறை வந்தார். திகைத்தவர்போல நின்று அருகே நின்ற மரத்தில் சாய்ந்துகொண்டார். “மூதன்னையே, அஞ்சிவிட்டீர்களா? இது யானை! பெரிய யானை” என்று சுருதகீர்த்தி கூவினான். “நான் யானையை வென்றேன்” என்று அபிமன்யூ கூச்சலிட்டபடி கைகளைத் தூக்கி வீசி எம்பிக் குதித்தான். “என்ன நோக்குகிறீர்கள், அன்னையே?” என்றார் தந்தை. “உன் தந்தை இப்படித்தான் மைந்தர்கள் உடலெங்கும் காய்த்துத் தொங்க கனிநிறை பலா என வருவார்” என்று மூதன்னை சொன்னார்.
அவனிடம் மட்டும் என அவர் பேசியவை குறைவு. அவனை மட்டுமாக தொட்டது அதைவிட அரிது. ஆனால் அவன் அறிந்திருந்தான், அவரிடமிருந்து அவனுக்கு மட்டும் என வரும் ஒன்றை. நோக்கை, சொல்லை, தொடுகையை. அதை அரியதோர் முத்து என அவன் தன்னுள் ஆழத்துச் செப்பு ஒன்றில் கரந்து வைத்திருந்தான். அவை மிகக் குறைவென்பதனாலேயே மேலும் அரியவை ஆயின. ஒருபோதும் அவன் அவற்றைப்பற்றி எவரிடமும் பேசப்போவதில்லை. இறுதிவரை.
கானேகி நிறைவுகொண்டு அவர் திரும்பி வந்த செய்தியை அறிந்த நாள்முதல் அவன் பதற்றமும் கிளர்ச்சியும் கொண்டிருந்தான். அவரை சந்திக்கும் கணத்தை பலநூறுமுறை உள்ளத்தில் நிகழ்த்திக்கொண்டான். அவரை சந்திக்கக் கிளம்பிய அன்று அவன் உள எழுச்சி தாளாமல் மிகையெடை கொண்ட பாறாங்கற்களைத் தூக்கி அப்பால் வீசினான். அடிசெறிந்த மரம் ஒன்றை அறைந்து அறைந்து உலுக்கினான். பின்னர் களைத்து அடுமனைக்குச் சென்று உடலே வெடிக்குமளவுக்கு உண்டான். உணவு அவனை மிதப்புக்குள்ளாக்கியது. இனிய நிறைவுடன் அடுமனையை ஒட்டிய கொட்டகையில் படுத்துக்கொண்டு கண்மூடி புன்னகையுடன் துயிலில் ஆழ்ந்தான்.
நினைவுகொண்டு அவன் ஊனுணவை எடுத்து மெல்ல உண்ணத் தொடங்கினான். உணவு அவனை முழுமையாக ஆட்கொண்டது. புறாவின் சிறகடிப்பைக் கேட்டதும் அவன் எழுந்தான். ஆனால் அதற்குள் சாம்பன் எழுந்துவிட்டான். “புறா வந்தது… நான் அதை பார்த்தேன்” என்றான். “எங்கே புறா? நீ அதை பிடித்தாய். என்னிடமிருந்து மறைக்கிறாய்.” சர்வதன் “மூத்தவரே, நான் புறாவை இன்னும் கண்களால் பார்க்கவில்லை” என்றான்.
திகைப்புடன் சூழ நோக்கியபடி “ஆம், கனவு. ஆனால் கனவில் நான் அதை பார்த்தேன்” என்றான் சாம்பன். “நீ அதை என்னிடமிருந்து மறைத்ததை கண்டேன்.” புறா மேலிருந்து இறங்கி வந்து பாய்க்கயிற்றில் அமர்ந்து சிறகுகள் காற்றில் பிரிந்து பிசிறி பறக்க முன்னும் பின்னும் ஆடி வால்விசிறியால் நிலைகொண்டது. சாம்பன் அதை பிடிக்கச்செல்ல எழுந்து மேலே சென்று அமர்ந்தது. “அது என் மூத்தவர் அனுப்பிய புறா. என்னிடம் மட்டுமே வரும்” என்றான் சர்வதன்.
“அப்படியென்றால் உங்களுக்கு மதுராவில் ஒற்றர்கள் உள்ளனர் அல்லவா?” என்றான் சாம்பன். சர்வதன் புறாவைப் பிடித்து அதன் காலில் இருந்து தோல்சுருளை எடுத்து விரித்து படித்தான். “நற்செய்தி மூத்தவரே, கௌரவ இளவரசி உங்கள் மணத்தூதை ஏற்றுக்கொண்டிருக்கிறாள். நாம் கோரியதற்கேற்ப நாளை புலரியில் கங்கைக்கரையோரத்து அணிக்காட்டில் உள்ள கானுறை காளி அன்னையின் ஆலயத்திற்கு செவிலியுடன் வருவாள்…” என்றான்.
சாம்பன் திறந்த வாயுடன் சில கணங்கள் நின்றபின் “அது நம்பக்கூடிய ஓலையா?” என்றான். “மூத்தவர் அனுப்பியிருக்கிறார்” என்றான் சர்வதன். “அவர்கள் நமக்கு பொறி வைக்கவில்லை அல்லவா?” என்றான் சாம்பன். “இல்லை, மூத்தவர் தெளிவாக அனைத்தையும் எண்ணிச்சூழ்பவர். அவருக்கு அங்கே அகத்தளத்திலேயே உளவுச்செவிலியர் உண்டு. அவர்களே இளவரசியிடம் செய்தியை கொண்டுசென்றிருப்பார்கள்.”
சாம்பன் சில கணங்கள் எண்ணத்திலாழ்ந்தபின் கால் தளர்ந்தவன்போல படகின் இருக்கையில் அமர்ந்தான். அவன் ஆடை எழுந்து பறக்க எரிச்சலுடன் அதை எடுத்து சுற்றிக்கொண்டான். “அச்செய்தி அவளிடமிருந்தே வந்ததா?” என மீண்டும் கேட்டான். “ஆம், அவளே அனுப்பியதைத்தான் மூத்தவர் ஏற்பார்” என்றான் சர்வதன். “ஒருவேளை அவளே நம்மை ஏமாற்றி பொறி வைத்திருந்தால்?” சர்வதன் ஒன்றும் சொல்லவில்லை. சாம்பன் “அவள் துரியோதனரின் மகள். அவர் கலிமைந்தன் என்கிறார்கள்” என்றான். சர்வதன் அதற்கும் மறுமொழி எதையும் சொல்லவில்லை.
விரல்களைப் பின்னி நெரித்தபடி அமர்ந்திருந்தபின் எழுந்து “எதுவானாலும் அவளை நாம் வெல்வோம்” என்றான் சாம்பன். பெருமூச்சுவிட்டபடி “ஆனால் என் உள்ளம் அமைதியிழந்திருக்கிறது. நான் வெல்வது கடினம் என எண்ணியிருந்தேன்” என்றான். அவனை நோக்கியபடி தண்டுவலித்துக்கொண்டிருந்த சர்வதன் புன்னகை புரிந்தான். “ஏன் சிரிக்கிறாய்?” என்று சாம்பன் கேட்டான். சர்வதன் அதே புன்னகையுடன் நோக்கை விலக்க “ஏன் சிரிக்கிறாய்? இப்போதே சொல்…” என்றான். “யோகி என்றும் ஞானி என்றும் இறைவடிவன் என்றும் மண்ணில் எவருமில்லை” என்றான்.
“இதை ஏன் என்னிடம் சொல்கிறாய்?” என்றான் சாம்பன். “அவ்வாறு எண்ணி நிறைவுகொள்ள பிரம்மவடிவமான ஊழ் விடுவதில்லை” என்றான் சர்வதன். சாம்பன் “என்ன சொல்கிறாய், மூடா?” என்றான். சர்வதன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. “நான் இப்போது விழைவதெல்லாம் உன் புன்தலையை என் கைகளால் முட்டையை உடைப்பதுபோல உடைத்து வீசவேண்டும் என்றுதான்” என்றான் சாம்பன். சர்வதன் சிரித்தான். “சிரிக்காதே, என் வாளை உருவி உன் சங்கில் பாய்ச்சிவிடுவேன்.” சர்வதன் அதற்கும் சிரித்தான்.
அவனிடமிருந்து நோக்கை விலக்கிக்கொண்டு சாம்பன் அமர்ந்தான். அவன் தலைமயிர் கரிய அனல்கொழுந்துகள்போல பறந்தது. துடுப்பு நீரில் விழும் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. சர்வதன் “விடிவெள்ளி தெரிகிறது, மூத்தவரே” என்றான். சாம்பன் திரும்பிப் பார்க்கவில்லை. சர்வதன் “இன்னும் ஒரு நாழிகைக்குள் நாம் அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழைவோம்” என்றான். அதற்கு சாம்பனின் உடலில் ஒரு மெல்லிய அசைவு தெரிந்தது.
“கானுறை காளியன்னையின் ஆலயம் அஸ்தினபுரியின் தென்மேற்கு எல்லையில் உள்ளது. அங்கு கங்கையின் ஓட்டம் விசைமிக்கது. மரங்கள் இறங்கி கங்கைக்குள் தாழ்ந்திருப்பதனால் பெரிய படகுகள் அணுகமுடியாது. ஆகவேதான் நாம் சிறுபடகுடன் வந்துள்ளோம்” என்றான் சர்வதன். “நமக்கிருப்பது ஒரு நாழிகைப்பொழுது. அதற்குள் கரையிறங்கி இளவரசியுடன் படகிலேறி திரும்பவேண்டும். திரும்பும்போது காற்றும் ஒழுக்கும் நமக்கு உகந்தவை. ஆகவே உச்சவிசையில் விரையலாம்.”
சாம்பன் “இதில் மூவர் செல்லமுடியும் அல்லவா?” என்றான். “ஆம், விரைவாகவும் செல்லமுடியும்” என்றான் சர்வதன். “விடிவதற்குள் நாம் அஸ்தினபுரியின் எல்லைக்கு அப்பால் இளவரசியுடன் சென்றுவிட்டிருக்கவேண்டும். காலையொளியில் அஸ்தினபுரியின் காவல்படகுகளுக்கு முன்னால் சென்று நிற்பதென்பது உயிர்க்கொடை மட்டுமே.” சாம்பன் “ஆம், எண்ணிநோக்கினால் எத்தனை பெரிய செயலுக்கு எதையும் எண்ணாமல் வந்திருக்கிறோம் என்று மலைப்பே எழுகிறது” என்றான். “திரும்பிவிடுவோமா? இன்னும் பொழுதிருக்கிறது முடிவெடுக்க” என்றான் சர்வதன்.
சீற்றத்துடன் எழுந்த சாம்பன் “விளையாடுகிறாயா? நான் இலக்குகொண்ட எதையும் எய்தாமல் விட்டதில்லை. அதன்பொருட்டு இறப்பதும் எனக்கு உவப்பே” என்றான். “அதைத்தான் கேட்டேன்” என்றான் சர்வதன். சாம்பன் “நான் அவளை வெல்வேன். அன்றி மீளமாட்டேன்” என தலையசைத்தபடி சொன்னான். “அவளை நான் வெல்லும்நாள் ஜாம்பவர் குடிக்கே திருவிழா. அவள் வயிற்றில் என் குடியின் கொடிவழிகள் எழவேண்டும்…” அவன் முகத்தைத் தூக்கியபோது வெண்பற்களும் வெண்ணிற விழிகளும் இருளில் தெரிந்ததன. “அது ராகவராமனுக்கு நான் சொல்லும் மறுமொழி.”
“ஏன்?” என்றான் சர்வதன். “என் மூதாதை அவருக்கு அடிமை என்றிருந்தார். அக்குடிக்கு அடிமைசெய்வதே வாழ்வின் முழுமை என்றும் வீடுபேறு என்றும் நம்பினார். அப்படி நம்பச்செய்தன அவர்களின் நூல்கள்” என்றான் சாம்பன். “ஷத்ரியக் குடியில் பெண்கொண்டு நான் நிறைசெய்வது எந்தையர் தலைமுறைகள்தோறும் கொடுத்த கடனை.” சர்வதன் அவனை இமைக்காமல் நோக்கியபின் மீண்டும் புன்னகை புரிந்தான். “ஏன்?” என்றான் சாம்பன். “உன் புன்னகையில் உள்ள நஞ்சு என்னை எரியச் செய்கிறது” என்றான். சர்வதன் “மண்ணில் முளைக்காமல் காத்திருக்கும் விதைகளே மிகுதி என்று ஒரு கூற்று உண்டு” என்றான்.
சாம்பன் அதை பொருட்படுத்தாமல் “உன்னிடம் ஒன்று கேட்பேன், இளையோனே” என்றான். “மானுடர் உள்ளறிவதில் நீ கூர்மைகொண்டவன் என நான் அறிவேன். சொல்க, அவள் என்னை விரும்புவாளா?” என்று கேட்டான். சர்வதன் “விரும்புவாள், அவள் மைந்தரின் தந்தையல்லவா நீங்கள்?” என்றான். “அல்ல, நான் கேட்டது அதுவல்ல. அவள் என்மேல் காதல் கொள்வாளா?” சர்வதன் புன்னகை புரிந்தான். “சிரிக்காதே, மூடா! சொல்” என்றான் சாம்பன். “மூத்தவரே, பெண்கள் ஆண்களை பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை” என்றான் சர்வதன். சாம்பன் சீற்றத்துடன் “உளறாதே” என்றான். சர்வதன் புன்னகையுடன் தண்டுகளை சுழலச் செய்தான்.
சாம்பன் பெருமூச்சுடன் “ஆம், நீ சொல்வது மெய்” என்றான். பின்னர் சற்றுநேரம் தன்னுள் ஆழ்ந்திருந்தபின் கலைந்து சிரித்து “அது எவ்வளவு பெரிய விடுதலை அல்லவா? நாம் கவலைப்படவேண்டியதே இல்லை” என்றான். “ஆம்” என்றான் சர்வதன். “கனிதரு மரம் என்ன எண்ணுகிறதென்று எவர் கருதுகிறார்கள்?” சாம்பன் “ஆம்” என்றபின் உரக்க சிரித்தான்.