நடைமீறுதல்

sura

திரு ஜெயமோகன் அவர்களுக்கு.

வணக்கம். நான் வ.அதியமான். உங்களுக்கு கடிதமெழுதி நீணாளாகிவிட்டது. வெண்முரசிற்கு இடையே இடையூராய் இருந்துவிடக்கூடாதென்பதன் பொருட்டே. பார்த்திருக்கையிலேயே விழிமுன்னமே ஒரு தாஜ்மஹால் முளைத்தெழுந்து வருவதுபோல் இதோ எங்களிடை இன்று வெண்முரசு. தர்க்க உலகைத் தாண்டிய மாயலோகம்.

2014 ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து நாளிதுவரை வெண்முரசின்றி நகர்ந்ததில்லை ஓர்நாளும். சில ஆண்டுகளாய் மிகுந்த மன அழுத்தத்தின் விளைவாய் வாசிப்பென்பதே கூடுவதில்லை. ஆயினும் மனச்சோர்வென்னும் வன்திரையைக் கிழித்து உள்நுழைவது வெண்முரசொன்றே. அஃதொன்றே ஆறுதல் இப்போதைக்கு.

புதிதாய் எழுத வருபவர்களின் சிக்கல்களில் ஒன்றே நான் கேட்க வந்தது. எனக்கேற்படும் சிக்கல்களே பிறருக்கும் எழுகிறதென்பதை இப்போது எழுதவந்தோர் உங்களுக்கு எழுதும் கடிதங்களிலிருந்து அறிய வந்ததால் இதனைக் கேட்கிறேன்.

உங்களின் புனைவுலகிற்குள் நுழையும் ஒருவன் முதலில் புதைந்துபோவது உங்களின் மொழிநடையில்தான். பிறகு அவனின் நுண்ணர்வின் தீவிரம் சார்ந்து உங்கள் மொழியின் அருகில்வரை வரத்துணிகிறான். அதனை உங்களின் நிழல்மொழி என்பேன். உங்களின் மொழியாளுமையால் ஆட்கொளளப்பட்ட யாவரின் விரல்களிலும் உங்களின் மொழியே குடியேறுகிறது என்பதை உங்களின் அததனை வாசகர் கடிதங்களும் கூறுகின்றன.

சராசரியான ஒருவன் உங்களின் கலையுலகில் நுழைந்து உங்களின் நிழல்மொழிவரை எட்டுவதென்பதே ஒரு சாதனை தான் என்பேன். மற்ற சராசரியான ஒருவருடன் ஒப்பிட்டால் உங்களின் நிழல்மொழி கொண்டோர் பன்மடங்கு உயரத்தில் இருப்பவரே. இதுவே இம்மொழிக்கு நீங்களாற்றும் கொடைகளில் ஒன்றுதான்.

உங்களின் புனைவுலகத்திற்குள் வந்தபிறகு ஒருவன் ஈட்டும் சிந்தனைத்திறனும் மொழியாளுமையும் நுண்ணுணர்வும். ரசனையின் கூர்மையும் நிச்சயம் ஈடிலாதவைதான்.

ஆயினும் இவையாவும் வாசகனாய் நின்றுவிட்டோர்க்கு. ஆனால் உங்களின் வாசகர்களில் குறிப்பாய் இளைஞர்களில் முப்பது சதவீதம் பேருக்கு மேல் படைப்பாளியாய் மலரவே பேரார்வம் கொண்டு முயல்கின்றனர். அவ்விதமாய் முயல்வோர்க்கு முதல் தடையாய் இருப்பதே உங்களின் மொழியாளுமைதான். அதன் வசீகரத்திற்கும் ஆக்கரமிப்பிற்கும் ஆட்பட்ட ஒருவன் எளிதில் மீளமுடிவதில்லை.

மிக ஆர்வமாய் எழுதி முடித்துவிட்டு மீண்டும் பொருமையாய் வாசித்தால் அதில் நீங்கள்தான் நிரம்பியிருக்கிறீர்கள். படைப்பு நுட்பத்திலும் கற்பனை விரிவிலும் உங்களுடன் வரமுடியவில்லை ஆயினும் உங்களின் மொழிச்சாயலை தவிர்க்க முடியவில்லை. அதாவது எங்களின் விரல்களில் ஊறிவழிவது உங்களின் நிழல்மொழிதான்.

அது ஒரு படைப்பாளியாய் எனக்கு பெரும் மனச்சோர்வை அளிக்கிறது. உங்கள் மீது கொஞ்சம் மெல்லிய கோபம் கூட வருகிறது. ஒரு வாசகர் குறிப்பிட்டதைப் போல ‘நீ ஒரு ஜெராக்ஸ்! நீ ஒரூ ஜெராக்ஸ்!’ என்று என் மனமே எனை பகடி செய்கிறது.

உண்மைதானே. உங்களைப்போல் எழுத நீங்கள் இருக்கும்பொழுது நாங்கள் ஏன் உங்களைப்போல் எழுத வேண்டும்? என் சிந்தனைகளை, என் கற்பனைகளை, என் நுட்பங்களை, என் தரிசனங்களை எனக்கே எனக்கான ஒரு மொழியில் அள்ளிவந்தால்தானே நானொரு படைப்பாளி?

எனக்கே எனக்கான ஒரு தனிமொழியில் என் கலையினைச் செய்வதைத்தானே நீங்களும் ஒரு படைப்பாளியாய் விரும்புவீர்கள்? இன்று எங்களின் ஆசிரியராய் உங்களின் மொழியாளுமையே ஒரு தடையென, பெரும் சவாலென எங்கள் முன் நிற்பதைப்போலத்தானே உங்கள் ஆசிரியரின் (சுந்தர ராமசாமி) மொழியாளுமையும் நேற்று உங்கள் முன் நின்றிருக்கும்? அதனை வென்று உங்களுக்கென்று ஒரு தனிமொழியினை எவ்விதம் திரட்டியெழுப்பினீர்கள்?

அவ்விதம் உங்களுக்கான தனிமொழி திரண்டபின் மொழிவசீகரம் மிக்க பிற பெரும் படைப்பாளிகளின் தாக்கங்களிலிருந்து எவ்விதம் பாதிப்பின்றி தள்ளி நின்று உங்களை தனித்துவமாய் நிறுவிக்கொண்டீர்கள்?

இன்று மொழியாளுமையில் நீங்கள் செய்யும் சாகசங்கள் அசாத்தியமானவை. ஒரே நேரத்தில் வெவ்வேறு மொழிநடையில் வெவ்வேறு புனைவுலகை எங்கள் விழிமுன் கொண்டுவந்து நிறுத்தி மாயம் காட்டுகின்றீர்கள். வெண்முரசின் உலகத்திற்கும் நடுவே நீங்கள் எழுதும் சிறுகதைகளின் உலகத்திற்கும் ஒருத்தொடர்பும் இல்லை. இவ்விரண்டையும் ளழுதிய விரல்கள் ஒன்றென்பதே நம்பமுடியாததாய் இருக்கிறது.

இது முப்பதாண்டுகளுக்கும் மேலாய் இக்கலையில் உங்களின் தவத்தின் விளைவான வரமென்று நாங்கள் கொள்கிறோம்.

உங்களின் உயரத்திற்கு இல்லையென்றாலும் ஒரு எளிய தொடக்க படைப்பாளியாய் எனக்கும் என்னைப்போன்றோர்க்கும் எங்களுக்கேயான ஒரு தனித்துவமான படைப்புமொழியை எவ்வாறு நாங்கள் திரட்டியெழுப்புவது? நீங்கள் மற்றும் உங்களைப்போன்ற பெரும் படைப்பாளிகளின் பாதிப்பிலிருந்து வெளியேறி, எங்களுக்கான தனித்துவத்தை எங்கனம் தக்கவைத்துக்கொள்வது?

உங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது விளக்கமும் ஆலோசனையும் அளித்தால் மகிழ்வேன்.

தங்களின் வெண்முரசு சீக்கிரம் முடிந்துவிடக்கூடாது என்ற பேராசையோடு

தீரா அன்புடன்

வ. அதியமான்

***

aso

அன்புள்ள அதியமான்,

இலக்கியத்தில் எப்போதுமுள்ள சவால்களில் இதுவும் ஒன்று. நாம் நம் மொழிநடையை பெரும்பாலும் நம் முன்னோடிகளிடமிருந்து, அதுவரை இருந்த மரபிலிருந்து,தான் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அதில் நம் தனிமுத்திரை நிகழாவிட்டால் நம் இலக்கிய இடம் அமைவதில்லை

மொழியை இருவகை அமைப்பாக எண்ணலாம். ஒன்று, புறவயமான கட்டுமானம். இரண்டு அதில் ஓடும் அகவயமான இசையும் உணர்வுநிலையும். புறவயமான கட்டுமானமே வெளித்தெரிவது. நாம் சூழலில் இருந்து கொள்வது அது. ஆகவே அதுதான் முன்னோடிகளிடமிருந்து கிடைக்கிறது

அகவயமான இசையும் உணர்வுநிலையும் நம்முடைய தனித்தன்மை சார்ந்தவை. நாம் உள்ளூர எத்தகையவர் என்பதை, எந்தெந்த உணர்வுநிலைகள் வழியாகச் செல்கிறோம் என்பதைப்பொறுத்தவை. நம் கைரேகைபோல. முதல் அமைப்புதான் பீடம். அதன் மேல் இரண்டாம் அமைப்பு அமையவேண்டும்

ஒரு சூழலின் படைப்புமொழி பல படைப்பாளிகளால் ஒருவரோடொருவர் முரண்கொண்டும் இசைந்தும் உருவாக்கப்படுகிறது. நாம் வாசகர்களாக இலக்கியத்திற்குள் நுழையும்போது அந்த ஒட்டுமொத்ததில்தான் வந்து சேர்கிறோம். அதில் நமக்குரிய படைப்பாளிகளை அடையாளம் கண்டுகொள்கிறோம். அவர்களை அணுகிவாசிக்கிறோம். அவர்களை ஒட்டி நம் மொழி உருவாக ஆரம்பிக்கிறது

அதிலிருந்து நமது மொழியை நாம் கண்டடையவேண்டியிருக்கிறது. அதுவே உண்மையில் இலக்கியத்தைக் கண்டடைதல் எனலாம். இலக்கியத்தில் நம்மைக் கண்டடைதல் அது. நான் எழுதவரும்போது சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சுஜாதா ஆகியோரின் மொழிநடையின் பாதிப்பு கொண்டிருந்தேன். என் முதல்தொகுதியான திசைகளின்நடுவே முன்னுரையிலேயே அதைச் சொல்லியிருந்தேன்

அதேசமயம் திட்டவட்டமாக அதைக் கடந்துசென்றுகொண்டும் இருந்தேன். அதற்கு என் மலையாள, ஆங்கில வாசிப்பு உதவியது. என் எழுத்து தல்ஸ்தோய் அணுகும்தோறும் மேலும்மேலும் நுண்ணிய சூழல்விவரிப்பை கண்டடைந்தது. , தஸ்தயேவ்ஸ்கியில் இருந்து உளப்பெருக்கை தன்னுரைகள் , உள ஆய்வுகள் மூலம் கண்டடைந்தேன். அது என்னை விலக்கியது. என் எழுத்தின் சிறப்பம்சங்களாக் இன்று இருப்பவை இவை

அதோடு எனக்கு தொடக்கம் முதலே தனித்தமிழ் ஆர்வம் உண்டு. தமிழ்ச்சொற்களை எப்போதும் தேடிவருபவன், மரபுவாசிப்பு கொண்டவன். ஆனால் செயற்கையாக அதை முயலக்கூடாதென்றும் நினைத்தேன். இயல்பாகவே அந்த மாற்றம் என்னில் உருவாகவிட்டேன். என் நடை மேலும் மேலும் தனித்தமிழ் நோக்கி வந்து வெண்முரசில் முழுமைகொண்டிருக்கிறது.

எழுதத் தொடங்கிய காலம் முதலே தமிழ்ச்சொற்களை தேடிப்பயன்படுத்தினேன். தேவையென்றால் நானே உருவாக்கிக் கொண்டேன். இன்று சூழலில் உள்ள ஏராளமான சொற்கள் நான் உருவாக்கியவை. அல்லது கண்டடைந்தவை. அது என் தனித்தன்மையாக ஆகியது. நவீனத்தமிழிலக்கியச் சூழலில் தனித்தமிழில் எழுதுபவன் நான் மட்டுமே

கூடவே என் தனித்தன்மையை கண்டடைய தொடர்ச்சியாக முயன்றேன். அதற்கான பயிற்சிகளாக எழுதப்பட்ட பல கதைகளை நான் பிரசுரித்ததில்லை. என்னிடமிருந்து சுஜாதா மிக எளிதில் வெளியேறினார். ஏனென்றால் சுஜாதாவின் மொழிநடை மேலோட்டமானது. கடைசியாக சுந்தர ராமசாமி.

sujatha

என்னென்ன செய்யலாம் என என் அனுபவம் சார்ந்து சொல்கிறேன்

அ. நாம் பின்பற்றும் முன்னோடிப்படைப்பாளிகளின் முத்திரை கொண்ட சொற்கள், சொற்றொடர்களை தேடிநோக்கி கவனமாகத் தவிர்த்துவிடுவது. அவர்கள் எழுதும்போது அது அவர்களின் நடை. நாம் அதை எழுதினால் அது தேய்வழக்கு.

ஆ. ஆரம்பகட்டத்தில் நம் முன்னோடிகள் எழுதும் கதைக்களம், அவர்களின் கதைவடிவம் ஆகியவற்றைத் தவிர்த்துவிடுவது. படுகை, போதி போன்ற கதைகளைச் சுந்தர ராமசாமி எழுதமுடியாது அல்லவா?

இ. நம் எழுத்தை நாமே பலமுறை வாசித்து அதில் நம்முடைய முத்திரைகொண்ட, நாமே விரும்பும் பகுதிகளை அடையாளம் காண்பது. அடையாளம் கண்டால்மட்டும் போதும், எழுத முயலவேண்டாம். அதுவே இயல்பாக வரும்

ஈ. எது நமக்கு இடர்தருகிறதோ அதையே முட்டிப்பார்ப்பது. தொடக்கத்தில் எனக்கு உரையாடல் அமைவது கடினம். ஆகவே முழுக்க உரையாடலாகவே மாடன்மோட்சம் போன்ற கதைகளை எழுதினேன். அது நமக்கே உரிய நடையை நோக்கிக் கொண்டுசெல்லும்

உ. தொடக்கநிலையில் மொழி பழகி முயற்சியின்றி வெளிப்படுவதற்காக நிறைய எழுதவேண்டும்.  தனி நடை கொண்ட நல்ல எழுத்தாளர்கள் அனைவரும் எழுதிக்குவித்தவர்கள்தான். குறைவாக எழுதினால் முக்கிமுக்கி ஓரிரு பக்கங்கள் எழுதமுடியும். அது தெளிவாகவே முக்கலை வெளிக்காட்டும். ஒழுக்கு இருக்காது.

*

முன்னோடிகளில் வலுவானவர்களே ஆழ்ந்த பாதிப்பை உருவாக்குகிறார்கள். அவர்களைத் தவிர்த்துவிடலாமே என சொல்வதுண்டு. அப்படித்தவிர்ப்பவர்கள் சூழலில் உள்ள பொதுவான நடைக்குள் சென்றே அமைவார்கள். இன்றிருப்பவை இரண்டு நடைகள். வாரஇதழ்நடை, முகநூல் நடை. அதிலேயே எழுதுபவர்களுக்கு இலக்கியத்தில் பெரிய இடம் ஏதும் இல்லை.

இன்றுவரை எழுதப்பட்டதன் உச்சத்தில் ஏறிநின்று மேலெழுவதே கலைஞனின் இலக்காக இருக்கமுடியும்

ஜெ

***

சுஜாதா அறிமுகம்

 

முந்தைய கட்டுரைவெண்கடல் கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53