மையநிலப் பயணம் – 11

chanderi-fort-2[சந்தேரி கோட்டை, இணையத்தில் இருந்து]

குவாலியர் விடுதியை காலையிலேயே ஒழித்து காரிலேறி வெயில் எழும்போதே சந்தேரிக்குக் கிளம்பிவிட்டிருந்தோம். எங்கள் பயணத்தில் கூடுமானவரை சமணத்தலங்களைத் தவறவிடுவதில்லை. முந்தைய அருகர்களின் பயணத்தில் மத்தியப்பிரதேசத்தை விரைந்து கடந்தோம். அப்போது விட்டுவிட்டுச் சென்ற ஊர் சந்தேரி

 

சந்தேரி வரலாற்றுச்சிறப்புமிக்க இடம். இங்குள்ள கோட்டை கிபி பத்தாம் நூற்றாண்டுமுதலே இருந்துள்ளது. மாளவத்தின் முக்கியமான நகரம். புண்டேல குலத்து அரசர்களும் சுல்தானியப் படைகளும் மாறி மாறி இந்நகரை ஆட்சி செய்தனர். பௌத்த சமண மதங்கள் செழித்த ஊர்.

சந்தேரியைச் சுற்றி ஏராளமான ஏரிகள் உள்ளன. பெரும்பாலானவற்றில் நீர் நிறைந்திருந்தது. செல்லும் வழியெங்கும் செங்கல்லால் ஆன புராதனமான காவல்கோட்டங்களும் மலைகளுக்குமேல் கோட்டைகளும் இருந்தன. மலைகளுக்குமேல் இருக்கும் கோட்டைகளில் உள்ளத்தை சோர்வும் கனவும் கொள்ளச்செய்யும் ஒரு தனிமை உள்ளது. தொலைவில் அவை மெல்லத்திரும்புகையில் கடந்தகாலமே பருவுருக்கொண்டு நிற்பதுபோலத் தோன்றுகிறது.

 

இத்தகைய வரலாற்றுநகரங்களை கடந்துசெல்வது எளிதல்ல. உண்மையில் இங்கே சிலநாட்கள் தங்கி அத்தனை வரலாற்று எச்சங்களையும் பார்க்கவேண்டும். அதன் ஆயிரமாண்டுக்கால வரலாற்றை வாசிக்க்கவேண்டும். அப்படி எங்காவது சென்று தங்கவேண்டுமென்ற கனவு இப்போது ஓங்கிவருகிறது.

ஆனால் இப்படிக் கடந்துபோகாமல் இந்தியாவை நாம் பார்க்கமுடியாது. பார்க்கப்பார்க்க பெருகும் மாபெரும் நிலம் இது. உலகநாகரீகத்தின் மடிகளில் ஒன்று. இத்தகைய பயணங்கள் பிறிதொரு அனுபவத்தை அளிக்கின்றன. ஒட்டுமொத்தமான ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் .ஒரு தொகைநோக்கு. துளிகளிலிருந்து விரியும் ஒரு ஒட்டுமொத்தப்புரிதல்.

 

இவ்வாறு செல்லும் பயணங்களில் நம் உள்ளத்தில் எஞ்சுவதென்ன என்று நம்மால் அப்போது சொல்லமுடியாது. எப்போதோ எழுதும்போது கனவில் என நிலங்கள் எழுந்துவருவதைக் காண்கையில்தான் பயணம் நமக்கு எதை அளிக்கிறதென்று உணர்கிறோம்

சந்தேரியில் உள்ள கந்தகிரி என்னும் சமணத்தலம் எங்கள் இலக்கு. காலை வெயில் எழும்போது அங்கே இருந்தோம். வழக்கம்போல டீ மட்டும்தான் குடித்திருந்தோம். கந்தகிரி ஒரு நவீன சமண மையம். அங்கே பள்ளிகளும் சமண மதக்கல்விநிறுவனமும் மடாலயமும் உள்ளது.

 

அதனருகே படிகளில் ஏறிச்சென்றால் மென்பாறையாலான ஒற்றைக்கல் குன்று உள்ளது. அதில் புடைப்புச்சிலையாக 56 அடி உயரமுள்ள மாபெரும் ஆதிநாதரின் சிலை உள்ளது. மலையிலிருந்து நீர் வழிந்து கைகள் கருமை கொண்டு ஒரு பாறை என்று ஒருகணமும் தெய்வமென்று மறுகணமும் விழியுடன் விளையாடும் சிற்பம்

அந்தக்காலைவேளையில் நோன்பு நோற்று வந்த ஒர் இளைஞர் குழு ஈரமான காவியுடை அணிந்து தீர்த்தங்காரருக்கு பூசை செய்துகொண்டிருந்தது. அவர்கள் ஒரு தற்காலிகத் துறவு மேற்கொண்டவர்கள், நம் சபரிமலைப் பயணம் போல. அருகரின் கால்களை கழுவி நீரூற்றி வணங்கிச் சென்றனர்

 

அங்கிருந்து குறுகலான படிகளில் ஏறி மேலே இருந்த சமணச்சிலைகளைப் பார்த்தோம். அவை மலைப் புடைப்பெனச் செதுக்கப்பட்டவை. ஆனால் அப்பகுதியில் மலை சுண்ணாம்புப்பாறை. ஆகவே நன்றாகத் தீட்டப்பட்ட சிலைகள் பளிங்கு போலிருந்தன. பார்ஸ்வநாதர், ஆதிநாதர், வர்த்தமானர் சிலைகள்

இந்த ரிஷபநாதர் சிலை கிபி ஏழாம்நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட சந்தேல ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து இங்கே சிலைகள் செதுக்கப்பட்டபடியே உள்ளன.

 

கீழே வந்தபோது ஒரு நெல்லிமரம் காய்த்து நின்றிருந்தது. உண்மையில் நெல்லிக்காய்கூட கொஞ்சம் பசியை அடக்கும் ஆற்றல்கொண்டது எனத்தெரிந்தது

அன்று மாலைக்குள் இந்தூருக்குச் சென்று தங்கவேண்டும் என்பது திட்டம். இந்தூரிலிருந்து விலகிவந்த தூரம் அனைத்தையும் திரும்பச்சென்று முடித்தாகவேண்டும். முழுப்பகலும் காருக்குள். திரும்பும்பயணத்தையும் இடங்களைப் பார்த்துக்கொண்டே செல்வதுபோல அமைத்திருந்தால் திரும்புவதன் சோர்வை தவிர்க்கமுடியும்

 

வழியில் விதிஷாவுக்கு சென்றோம். முன்னரே விதிஷாவுக்கு நான் மூன்றுமுறை வந்திருக்கிறேன். முதல்இந்தியப் பயணத்திலும் சாஞ்சிக்கும் விதிஷாவுக்கும் வந்தோம். விதிஷா பௌத்த வரலாற்றில் மிகமுக்கியமான இடம். புத்தர் மறைந்த நூறாண்டுகளுக்குப்பின் மகாகாசியபரின் தலைமையில் இங்கே கூடிய பௌத்த சங்கத்தில்தான் பௌத்தம் மகாயானம் ஹீனயானம் என இரண்டாகப்பிரிந்தது

விதிஷாவைச் சுற்றி ஏராளமான பௌத்த தலங்கள் உள்ளன. இடிந்த நிலையில் பௌத்த ஸ்தூபிகள் பல உள்ளன. நாங்கள் சென்றமுறை வந்தபோது இங்குள்ள ஹோலியோடோரஸின்  தூணை தேடித்தேடிச் சலித்து திரும்பிச் சென்றோம். இம்முறை கூகிள் உதவியால் நேராக அங்கே சென்று இறங்கினோம்

 

மௌரியப் பேரரசுக்குப்பின் உருவான சுங்கப்பேரரசு இன்றைய ஆப்கன் நாட்டில் உள்ள காந்தாரப்பகுதியை நேரடியாகவே ஆட்சி செலுத்தியது. அப்பகுதியை ஆண்ட கிரேக்க வம்சாவளியைச் சேந்த ஹோலியோடோரஸ் எனபவர் சுங்கவம்சத்தின் அரசத்தூதராக இருந்தார். அவர் இந்துவாக மதம் மாறி கிருஷ்ணபக்தராக ஆனார். அவர் இங்கிருந்த கிருஷ்ணன் ஆலயம் ஒன்றுக்கு கல்லால் ஆன கொடிமரம் ஒன்றை அமைத்துக்கொடுத்தார். அதன் உச்சியில் கருடச்சின்னம் உள்ளது.

கிமு 113ல் அமைக்கப்பட்ட இந்த கம்பம்தான் இந்தியாவில் வைணவம் பற்றிக் கிடைக்கும் மிகத்தொன்மையான தொல்லியல் சான்று எனப்படுகிறது. பிராமி லிபியில் இதிலுள்ள கல்வெட்டு சுங்க அரசுக்கும் அன்றைய காந்தார கிரேக்க ஆட்சியாளர்களுக்குமான உறவைச் சுட்டுகிறது. வட இந்தியாவின் வரலாற்றைக் கணிப்பதில் மிகமுக்கியமான இடம் வகிப்பது இந்தக் கல்வெட்டு

 

சாஞ்சியை பார்த்துவிட்டு நேராக இந்தூர். சாஞ்சிக்கு 2008 ல் வந்தவர்களில் நான் கிருஷ்ணன் சென்னை செந்தில் சிவா ஆகியோர் இம்முறையும் இருந்தோம். பாடப்புத்தகத்தில் படித்து மனப்பாடம் செய்த ஓர் இடத்தை நேரில் பார்க்கும் பரவசம் சாஞ்சி ஸ்தூபியைப் பார்க்கையில் எப்போதும் எழும். இந்தியாவின் தொன்மையான கட்டிடங்களில் ஒன்று. இந்தியச்சிற்பக்கலையின் ஆரம்பகாலத் தொகுப்பும்கூட.

ஆச்சரியமான ஒன்றை இம்முறை கவனித்தேன். சாஞ்சியின் சிற்பங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஏறத்தாழ அதே காலகட்டத்தைச் சேர்ந்தது மகாராஷ்டிராவின் கார்லே குகை. இங்கெல்லாம் சிற்பங்களில் கிரேக்கப் பாதிப்பு மிகவும் உள்ளது. சிற்பங்கள் யதார்த்தவாத அழகியல் கொண்டவை. தலைப்பாகைகள், உடையலங்காரங்கள் எல்லாமே புகைப்படத்தன்மையுடன் உள்ளன.

 

சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தெருக்காட்சிகள், போர்க்காட்சிகள், அரச ஊர்வலங்கள் எல்லாமே அன்றைய வாழ்க்கையின் நேர்பதிவுபோல் உள்ளன. விலங்குகளின் உடல்கள்கூட மிகயதார்த்தமாக, தசைகமடிப்புளும் எலும்புப் புடைப்புகளும் தெளிவாக தெரியும்படி அமைந்துள்ளன. உதாரணமாக எருமையின் புட்டத்தின் எலும்பமைப்பை சாஞ்சி சிற்பங்களில் பார்த்தேன்.

[எங்கள் ஓட்டுநர்கள்  விஷ்ணு, அஜய்]

 

ஆனால் மெல்லமெல்ல இந்த யதார்த்தவாத அம்சம் மறைவதை இந்தியச்சிற்பக்கலையில் காண்கிறோம். கஜூராகோ சிற்பங்களை வந்தடைகையில் அனைத்துமே அழகியல்மாற்றம் அடைந்துள்ளன. அலங்காரச்செதுக்குகள் பலமடங்கு ஆகிவிட்டிருக்கின்றன. அனைத்தும் குறியீட்டுத்தன்மை கொண்டுள்ளன. அனைத்து அசைவுகளும் நடனங்கள். யதார்த்தத்துக்குப் பதிலாக ஒருவகை இலட்சியத்தோற்றத்தை அமைப்பதாக நம் சிற்பங்கள் மாறின.

 

நம் சிற்பங்களில் அன்றாடவாழ்க்கைச் சித்தரிப்புகள் குறைவு. கஜூராகோவில் ஓரளவு உள்ளது. ஆனால் அதுகூட காவியக்காட்சிபோலவே அமைந்துள்ளது. அனைவரும் நடனநிலையிலேயே உள்ளனர். போர்களின் சித்தரிப்புகள் கூட போர்நடனங்கள் போல உள்ளன.

IMG_5121

மெல்லமெல்ல இந்தியச் சிற்பக்கலை தன் தனியடையாளத்தை கண்டடைந்தது என நினைக்கிறேன். இந்திய காவியகலையிலிருந்து தன் அழகியலை அது பெற்றுக்கொண்டது. இந்திய தாந்திரிகமதங்களும் அதற்கு அடித்தளமாக அமைந்தன.

 

சாஞ்சியிலிருந்து நேராக இந்தூர். வழியில் மேலும் சில இடங்களைப் பார்க்கவேண்டும் என ராஜமாணிக்கம் அடம்பிடிக்க கிருஷ்ணன் நேரமில்லை என கறாராகச் சொல்லிவிட்டார். “எப்பண்ணா இந்தியாவை பாக்கிறது?” என ராஜமாணிக்கம் ஏங்கினார்.

sanci

[சாஞ்சியில் 2008 இந்தியப்பயணத்தில்]

 

ஓட்டுநர் திறமையானவர். மிகச்சிறந்த கட்டுப்பாடு. எனக்குக் கழுத்துப்பிரச்சினை உண்டு என்பதனால் அடிக்கடி பிரேக்கை மிதிப்பவர்களின் வண்டியில் ஏறுவதில்லை. மிகமோசமான சாலைகளில்கூட சுமுகமாக வண்டியைச் செலுத்திய ஓட்டுநரை இறங்கியதும் தழுவி நன்றி தெரிவித்தேன்

 

இரவு ஒன்பது மணிக்கு இந்தூர் வந்தோம். எங்களுக்கு கார் ஏற்பாடுசெய்து தந்த வருமானவரித்துறை அதிகாரி எங்களுக்கு ஒரு விருந்து அளித்தார். நான் வழக்கம்போல காய்கறியும் பழங்களும் உண்டேன். அன்றைய குறிப்பை எழுதிவிட்டுத் தூங்கியபோது மணி பன்னிரண்டு. மறுநாள் காலை ஏழுமணிக்குச் சென்னை விமானத்தைப் பிடிக்கவேண்டும். விமானத்தில் ஏறியதுமே தூங்கவேண்டியதுதான் என நினைத்துக்கொண்டு படுத்தேன்

ஒருபயண முடிவில் அத்தனை பிம்பங்களும் கூடிக்கலந்து நீர்ப்பரப்பின் பாவைகள் போல அலையடிக்கும் அரைமயக்க நிலை ஒன்று உண்டு. அது ஒரு தியானம். அது பயணத்தை நம் ஆழம் திகைப்புடன் எதிர்கொள்ளும் விதம். ஒருவழியாக அது சுதாரித்து எல்லாவற்றையும் நீவி அடுக்கிக் கொள்கிறது. உடனே அடுத்த பயணத்தைத் திட்டமிடவேண்டியதுதான்

 

[நிறைவு]

 

இந்தியப்பயணம் சாஞ்சி, விதிஷா

 

காமிரா புகைப்படங்கள் கே.பி.வினோத்

மற்றும் சென்னை செந்தில் எடுத்த செல்பேசிப் படங்கள்

முந்தைய கட்டுரைஉலகமனிதன் -கடலூர் சீனு
அடுத்த கட்டுரைஒரு கவிதை