ஏழு : துளியிருள் – 7
பிரலம்பன் அபிமன்யூவுடன் சேர்ந்துகொள்ள இருவரும் கூடத்திலிருந்து வெளியே சென்றனர். வளைந்த கூரைகொண்ட அகன்று நீண்ட இடைநாழியின் இருபுறமும் வீரர்கள் சுவரோடு சேர்ந்து அணிவகுத்து நின்றனர். அப்பால் கால்வாயில் நீர் அணைவதுபோல மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் வந்தன. அபிமன்யூ முன்னால் சென்று அவர்களின் முகப்பில் நின்றுகொண்டான். அவர்கள் அவன் வருகையின் நோக்கத்தை உணர்ந்தவர்கள் என உயிர்ப்பசைவு கொண்டனர்.
வாழ்த்தொலியும் மங்கல இசையும் மெல்ல வலுத்து ஓங்கிக்கொண்டிருந்தன. அரண்மனையும் கூடங்களும் அவ்வோசையை ஏற்று கார்வை கொண்டன. அது பெருகி அணுகுந்தோறும் அபிமன்யூ உடல் மெய்ப்புகொண்டு கால்கள் நடுங்க நிற்க இயலாதவனானான். “இத்தருணத்தில் ஆடிப்பாவையென ஒன்று நூறாகப்பெருகி இப்பகுதியெங்கும் நிறைந்துவிடவேண்டும் என்று தோன்றுகிறது, பிரலம்பரே” என்றான். அந்நடுக்கை வெல்லவே பேசுகிறோம் என உணர்ந்தான்.
“நான் பிறிதொன்று எண்ணினேன், என் முழுதுளமும் என்ற சொல் என்னுள் எழுந்து அலையடிக்கிறது. இளவரசே, அவருக்கு அளிப்பதற்கு சில நம்மிடம் உள்ளதென்பதே எவ்வளவு பெரும்பேறு! கொள்க என அவர் காலடியில் படைப்பதற்கு நம் மூதாதையர் நமக்கு அளித்தது இந்தப் புன்தலை, நாம் அவருக்கெனத் திரட்டிய இவ்வுள்ளம்” என்றான் பிரலம்பன். அச்சொற்களால் அவ்வெழுச்சியை குறைத்துக்கொண்டார்கள் என அபிமன்யூ உணர்ந்தான். அதை அவ்வாறு குறைத்தாலொழிய அத்தருணத்தில் பொருத்தவியலாது. அந்த மதயானையின்மேல் பாகன் அமர்ந்தாகவேண்டும்.
இடைநாழியின் மறுமுனையில் கருடக்கொடியேந்திய தலைக்காவலன் பொன்மின்னிய தலையணியும் ஒளிரும் வெள்ளிக்கவசம் அணிந்த மார்பும் தோள்வளைகளும் கால்செறிகளும் பித்தளைப் பாதக்குறடும் அணிந்து நீட்டிவைத்த நடையுடன் தோன்றினான். அபிமன்யூ இரு கைகளையும் தூக்கி உடலே நாவென உயிர்கொள்ள “எந்தை எழுக! யாதவர் குலச்செம்மல் வாழ்க! புவியாளும் மாமன்னர் வாழ்க!” என்று வாழ்த்துரை கூவினான். “வெல்க கருடக்கொடி! ஓங்குக படையாழி! நிலைகொள்க இமையாப் பீலி!”
அங்கு கூடிநின்ற வீரர்களும் ஏவலரும் அமைச்சரும் அவனுடன் இணைந்துகொள்ள வாழ்த்தொலிகளால் இடைநாழியின் நீண்ட வளைமுகடு ஒலியழுத்தம் கொண்டு விம்மியது. செம்பட்டாடை அணிந்த மங்கல இசைச்சூதர் பதினெண்மர் மூன்று நிரைகளாக தொடர்ந்து வந்தனர். துவாரகைக்கே உரிய ஆமையோட்டு முழவும், வேய்குழலும், வெண்சங்கும், மகர யாழும், வெண்கல மணியும் என ஐந்திசை எழுந்து அலைகொண்டது. “இன்றும் எங்கும் இவ்வண்ணமே அமைக எந்தையின் கொடி! எழுக கடல்! எழுக வான்! எழுக நிலம்! எழுக எந்தை பெரும்புகழ்!”
மங்கலத் தாலமேந்திய அணிச்சேடியர் பதினெண்மர் மூன்று நிரைகளாக பொன்பட்டாடை மடிப்புகள் விரிந்து சுருங்கியமைய வண்ணப்பறவை வரிசையென வந்தனர். அவர்களுக்குப் பின்னால் இளைய யாதவர் கைகளைக் கூப்பியபடி காற்றில் வரும் மயிலிறகென மெல்ல வந்தார். அவருக்குமேல் துவாரகையின் முத்துச்சரவளைவு குலுங்கும் வெண்குடை எழுந்து கவிந்திருந்தது. மணிமுடியில் அமர்ந்த பீலி ஈதென்ன, இவர் யாவர் என விழிதிகைத்து நோக்கியது. மஞ்சள் பட்டாடையின் மடிப்புகள் விரிந்து மடிந்து அரிய நூலொன்றை எவரோ புரட்டிப் படிப்பதுபோல காட்டின.
வலப்பக்கம் சுதமர் நடந்துவந்தார். இடப்பக்கம் இளநீலப் பட்டாடையும் இளவரசியருக்குரிய கொடிமலர்வளைவு போன்ற மணிமுடியும் அணிந்து நடந்து மயூரி வந்தாள். இரு பக்கமும் விழியோட்டி நோக்கியும் திரும்பி பின்னால் வந்த அன்னையரைப் பார்த்தும் புன்னகையும் பதற்றமும் கிளர்ச்சியுமாக அவள் நடக்க அவள் ஆடையை அவ்வப்போது சீரமைத்தபடி முதுசெவிலி பின்னால் தொடர்ந்தாள். அரசருக்குப் பின்னால் வலப்பக்கம் துவாரகையின் படைத்தலைவர் பிரதீபர் உருவிய உடைவாள் ஏந்தி முழுக்கவச உடையணிந்து வந்தார்.
இரு நிரைகளாக எட்டு அரசியரும் வண்ணங்களின் அலைகள் என தொடர்ந்து வந்தனர். முதன்மை அமைச்சர் மனோகரரும் கருவூலத்தலைவர் சிபிரரும் அரண்மனைப்பேணுநராகிய பிரபவரும் வந்தனர். தொடர்ந்து ஒற்றர்படைத்தலைவர் கதனும் கோட்டைக்காவல்தலைவர் பத்ரசேனரும் வந்தனர். சிற்றமைச்சர்கள் அவர்களைத் தொடர்ந்து வந்தனர்.
இளைய யாதவர் இருபுறமும் எழுந்த வாழ்த்தொலிகள் நடுவே மலர்ந்த புன்னகையுடன் கடந்து சென்று துவாரகையின் பேரவைக்கூடத்தின் அணிவாயிலை அடைந்தார். ஸ்ரீதமரும் தமரும் அதன் இருபுறமும் நின்று தலைவணங்கி முகமன் உரைத்து அவரை உள்ளே அழைத்துச் சென்றனர். அவரைத் தொடர்ந்துசென்ற அணிநிரையை ஒவ்வொருவராக தோள்தொட்டுக் கடந்து அவர் அருகே சென்று தானும் உள்ளே நுழைந்து அவருக்குப் பின்னால் நின்றான் அபிமன்யூ. அவனைத் தொடர்ந்து பிரலம்பன் வந்தான்.
மீண்டும் ஒழிந்துகிடந்த பேரவையை நோக்கியபோது அதில் வெறுமை தெரியவில்லை. அங்கே மானுடரென எவர் அமரமுடியுமென்றே தோன்றியது. நாளை ஓர் அவையில் அங்கே மானுடர் அமர்ந்திருப்பார்களென்றால் உளம் சீற்றம் கொள்ளும் என எண்ணினான். அவர் முகத்தை ஓரவிழியால் நோக்கினான். ஒருகணமும் அது மாறுபடவில்லை. தெய்வத்தின் முன் அடியவன் என விழிமலர மாறா மென்னகையுடன் கைகூப்பி வணங்கி இளைய யாதவர் அரியணை மேடை நோக்கி சென்றார். அதே புன்னகையுடன் எட்டு அரசியரும் அவரைத் தொடர்ந்தனர்.
பேரவை நீள்வட்ட வடிவில் நீள்வட்டச் சாளரங்களுடன் வெண்குடைக்கூரைக்குக் கீழே விரிந்துகிடந்தது. அதன் மையத்தில் பித்தளைச் சங்கிலியில் ஆயிரம் நாவெழுந்த அகல்விளக்குச் செண்டு தொங்கியது. மின்னும் நீர்ப்பரப்புபோன்ற வெண்பளிங்குத் தரையில் விளக்கொளி விழுந்துகிடந்தது. கடற்காற்றில் திரைச்சீலைகள் அலைந்தாட வண்ணம் நெளிந்தது. அரசமேடையில் ஆயிரத்துஎட்டு செவ்வைரங்கள் பதிக்கப்பட்ட பிரபாவலையம்கொண்ட அரியணை செம்பட்டு விரிக்கப்பட்டு காத்திருந்தது. அருகே எட்டு அரசியருக்கும் அவர்களின் குடிக்குறி பொறிக்கப்பட்ட அரியணைகள் இருந்தன.
அபிமன்யூ அவையின் ஓரத்தில் நின்றான். அதுவரை இருந்த பதற்றங்களும் துயர்களும் முற்றிலும் பொருளிழந்திருந்தன. பிரலம்பன் “அவை இப்போது முழுமங்கலம் கொண்டுள்ளது என்றே தோன்றுகிறது, இளவரசே” என்றான். இவன் என்னை எதிரொலிக்கிறான் என அபிமன்யூ எண்ணிக்கொண்டான். மறுபக்க வாயிலினூடாக சந்திரசூடர் உள்ளே வந்து மூச்சிரைக்க கைகாட்டினார். இரு ஏவலர் பட்டுத்துணியாலான மஞ்சலில் முரளியை தூக்கி வந்தனர். அவனை அவையின் வலது எல்லையில் இருந்த தொட்டில்போன்ற மெத்தைப் பீடத்தில் அமரச்செய்தனர்.
அமைச்சர்களும் படைத்தலைவர்களும் இருபுறமும் நிற்க இளைய யாதவர் அவைமேடையில் கைகூப்பியபடி நின்றார். எட்டு துணைவியரும் இடப்பக்கம் நிரையாக நின்றனர். மங்கலநீர் தெளித்து வேதம் ஓதி அவைமேல் நடத்திச்சென்று அரியணையில் அமர்த்தி மணிமுடியும் செங்கோலும் தொட்டு அளிக்க வேண்டிய அந்தணர் எவரும் அவையில் இல்லை என்பதை அதன் பின்னரே அபிமன்யூ உணர்ந்தான்.
பிரலம்பன் “அந்தணர்குலத் தலைவர் கார்க்யாயனர் நோயுற்றிருக்கிறார். அவர் மைந்தர் சுருதர் யாதவகுலத் தலைவர்களின் ஆணையை மீற தன்னால் இயலாதென்று சொல்லிவிட்டார் என்றார்கள்” என்றான். குலமூத்தார் ஒருவரேனும் இருந்தால் அச்சடங்கைச் செய்யலாம் என்று ஸ்ரீதமரும் சுதமரும் எண்ணுவதை அவர்கள் கொண்ட அலைமோதலிலேயே பார்க்க முடிந்தது.
இளைய யாதவர் மயூரியிடம் “இனியவளே, வெளியே சென்று இவ்வரண்மனையின் முகமுற்றத்தை அடைக! அங்கு கொம்புகள் முழங்குவதற்குரிய குவைக்கூடம் உள்ளது. அதன்மேல் ஏறி நின்று உன் குழலை மீட்டு. அந்தியில் ஆநிரைகளைத் திரட்டும் மெட்டு எழட்டும்” என்றார். மயூரி “ஆம், தந்தையே” என உவகையுடன் கூறி தன் ஆடைநுனியைப் பற்றியபடி வெளியே ஓடினாள்.
“எவ்வண்ணம் நிகழவேண்டுமோ அவ்வண்ணம் நிகழ்ந்தது அவை” என்று அபிமன்யூ சொன்னான். “இளவரசி கொம்புமேடையில் ஏறிநின்று இசை மீட்டினாள். அங்கிருந்து எழும் ஒலி எட்டு மாடங்களில் அமைந்த ஒலிக்குவைகளால் அள்ளி வானில் விரிக்கப்படும். துவாரகையின்மேல் புல்லாங்குழலிசை எழுந்தது. அதைக் கேட்டு அந்நகரின் அத்தனை இல்லங்களும் திறந்தன. பெண்டிரும் குழந்தைகளும் நிரைநிரையாக தெருவிலிறங்கினர். அவர்களின் தந்தையரும் கணவரும் மைந்தரும் திகைத்து நோக்கி நின்றனர்.”
“கனவிலென நடந்து அரண்மனையை அடைந்தனர். அவைக்கூடத்தை நிரப்பினர். என் கண்ணெதிரே அவை விழிமலர்ந்து புன்னகை ஒளிரும் முகங்களால் நிறைந்ததை கண்டேன். அவர்களில் மூத்த அன்னையர் எழுவர் மேடையேறி அவரை கைபற்றி அழைத்துச்சென்று அவையமரச் செய்தனர். முடிதொட்டு எடுத்துச் சூட்டினர். செங்கோல் அளித்து அரிமலரிட்டு வாழ்த்தினர். வாழ்த்தொலிகள் எழுந்து அவை முழக்கமிட்டது. அரசர் அரியணை நிறைத்தார் என கொம்புகள் முழங்கின. துவாரகையின் ஆயிரம் பெருமுரசுகளும் அவைமங்கலத்தை வானுக்கும் மண்ணுக்கும் அறிவித்தன.”
அபிமன்யூவின் சொற்களை பிரத்யும்னன் விழிகளால் கேட்பவன்போல அமர்ந்திருந்தான். தசபுஜங்கத்தின் அரண்மனையின் சிற்றவைக் கூடத்தில் சிந்துவிலிருந்து வந்த காற்று சுழன்று சென்றுகொண்டிருந்தது. பீதர்நாட்டுப் பட்டுத் திரைச்சீலை எழுந்தமைந்தது. வெளியே உச்சிப்பொழுதில் காவல்மாறும் படையணிகளின் கொம்போசையும் ஆணைக்குரல்களும் கேட்டன.
அவனைச் சூழ்ந்து அவன் படைத்துணைவர்களான தாம்ரப்பிரதனும் தீப்திமானும் நின்றிருந்தனர். ஒற்றர்கள் அளித்த ஓலைகள் அவன் முன்னால் குறுபீடத்தில் போடப்பட்டிருந்தன. வந்த தருணம் முதல் அவன் அபிமன்யூவின் தோற்றத்தை விந்தையுடன் நோக்கிக்கொண்டிருந்தான். ஆசுர நிலத்திலும் உபப்பிலாவ்யத்திலும் அவன் கண்ட அபிமன்யூ முழுமையாகவே தன்னை உரித்து விலக்கி உள்ளிருந்து புதியவனாக எழுந்திருந்தான். கள்வெறிகொண்டவன்போல கண்கள் கலங்கியிருந்தன. முகம் பித்தர்களுக்கே உரிய கலையாப் புன்னகை கொண்டிருந்தது. சொற்கள் தெய்வமேறியவன் நாவிலிருந்து என ஒலித்தன.
நான்கு நாட்களாக அவன் துவாரகையிலிருந்து செய்தியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். ஸ்ரீதமரோ சுதமரோ தமரோ வருவார்கள் என எண்ணினான். செய்தி இல்லாதபோது அங்கே என்ன நிகழ்கிறதென்று அரண்மனையிலிருந்த ஒற்றர்களினூடாக அறிந்துகொண்டிருந்தான். அபிமன்யூ சாம்பனையும் பானுவையும் சந்தித்ததை அறிந்தான். அவை நிகழ்வுகளை பறவையோலைகள் தெரிவித்தன.
துவாரகையிலிருந்து அவன் தம்பியர் சாருதேஷ்ணனும், சுதேஷ்ணனும், சீசாருவும், சாரகுப்தனும், பரதசாருவும், சாருசந்திரனும், விசாருவும், சாருவும் கிளம்பி சிந்துவினூடாக வந்துகொண்டிருப்பதாக செய்தி வந்தது. அன்னை அவர்களுக்கு வாழ்த்தும் வழிச்சொல்லும் அளிக்கவில்லை. அவர்களைச் சந்திக்கவே அவள் ஒப்பவில்லை. அன்னைசொல் இன்றி கிளம்புவதை எண்ணி இளையவர்கள் சுசாருவும் சாருவும் துயர்கொண்டிருந்தனர் என்று சாருதேஷ்ணனின் செய்திகள் கூறின. அவர்கள் அணுகிவிட்டார்கள் என்ற செய்தி வந்த சற்றுநேரத்தில்தான் அபிமன்யூ வந்திருப்பதை ஏவலர் வந்து சொன்னார்கள்.
அபிமன்யூ வழியாக தந்தையின் சொற்கள் வருமென எண்ணினான். அவ்வெதிர்பார்ப்பு மறைந்தபோது சுதமரோ ஸ்ரீதமரோ ஏதேனும் சொல்லியிருக்கலாம் என சொல்நோக்கினான். அபிமன்யூ கனவிலென சொல்லிக்கொண்டே சென்றான். அவனைக் கையமர்த்தி “இளையோனே, இக்கதைகளை நாளை சூதர் பாடுகையில் கேட்டுக்கொள்கிறேன். உன்னிடமிருந்து நான் அறியவிரும்புவது ஒன்றை மட்டுமே” என்று பிரத்யும்னன் சொன்னான். “அந்த அவையில் நிகழ்ந்தது என்ன? அங்கே அந்த முழுதிருண்டோன் பட்டத்து இளவரசன் என அமர்த்தப்பட்டானா? அவனே இளவரசன் என முறைப்படி அறிவிக்கப்பட்டதா?”
அபிமன்யூ “அங்கு நிகழ்ந்தது அரசுசூழ்தல் அல்ல” என்றான். “அது முற்றிலும் பிறிதொன்று. மாதுலர் அரியணையில் கால்மடித்து அமர்ந்து முரளியை தன் மடியில் வைத்துக்கொண்டார். அவனுக்காக அவர் குழலிசைக்க அவை விழிமயங்கி அசைவற்று சித்திரம்போல் அமைந்திருந்தது. ஒரு சொல்லும் உரைக்கப்படாத அவை அது” என்றான்.
“இரவெல்லாம் அவை நீண்டது. நான் எப்போதோ துயில்கொண்டு எங்கோ இருந்தேன். மீண்டு எழுந்தபோது அவையில் அனைவரும் துயின்றுகொண்டிருந்தார்கள். அவர் மடியில் தலைசாய்த்து இளவரசி துயின்றாள். அவைமேடையிலேயே அரசியர் துயின்றனர். படைக்கலம் ஏந்தி நின்றிருந்த காவலரும் துயின்று நின்றனர். நடுவே அவர் இசைத்துக்கொண்டிருக்க அவன் கேட்டுக்கொண்டிருந்தான். அது கனவு என்று எனக்குத் தோன்றியது. கனவுகளுக்கு மட்டுமே உரிய ஒவ்வொன்றும் முழுமைகொள்ளும் புலன்கூர்மை. வெளியே நிலவெழுந்திருப்பதைக் கண்டேன். அன்று முழுநிலவுநாள் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.”
“அவனை அவர் பட்டத்து இளவரசனாக ஆக்கினார் என்றால் அதுவே துவாரகைக்கு முழு அழிவு” என்று பிரத்யும்னன் சொன்னான். “இந்நகரின் இளவரசன் யார் என்று நகர் அறியும். நான் சால்வனை வென்ற கதையை பாடாமல் அங்கே ஒரு குழவிகூட இரவுறங்குவதில்லை.” அபிமன்யூ “மூத்தவரே, சாம்பரைப்பற்றியும் அதற்கிணையான கதைகள் உள்ளன” என்றான். பிரத்யும்னன் “விளையாடுகிறாயா?” என்று சினத்துடன் எழுந்தான்.
“அந்த இரவுக்குப்பின் அனைத்துமே விளையாட்டு என உணர்ந்துவிட்டேன், மூத்தவரே. இன்று நான் உங்களை சந்தித்துப் பேசவந்ததுகூட உங்களை கவர்ந்து வழிப்படுத்தவேண்டும் என்பதற்காக அல்ல. அவருக்கு நீங்களோ நானோ தேவையில்லை” என்றான் அபிமன்யூ. “இசைவு கொண்டதே இசை. இசைவுகொண்ட அனைத்திலும் இசையே திகழ்கிறது. இசையற்ற எதையும் அவரிடம் நான் கண்டதில்லை. இங்கிருந்து எதுவும் சென்று அவரை நிறைக்கவேண்டியதில்லை.”
பிரத்யும்னன் பெருமூச்சுடன் பீடத்தில் சாய்ந்து அமர்ந்தான். தாம்ரப்பிரதன் “அப்படியென்றால் எதன்பொருட்டு இங்கே வந்தீர்கள்?” என்றான். “நேற்றுமுன்நாள் நான் இங்கு வந்திருந்தால் மன்றாடவும் சொல்லடுக்கவும் முயன்றிருப்பேன். இன்று அந்த நோக்கம் ஏதுமில்லை. அங்கு நிகழ்ந்தது என்ன என்று உரைப்பதற்காக மட்டுமே வந்தேன்” என்றான் அபிமன்யூ. “மூத்தவரே, என்ன நிகழுமென்று உரைக்கவும்தான்.”
“என்ன நிகழும்?” என்றான் பிரத்யும்னன் சலிப்புடன். அபிமன்யூவை அனுப்பிவிட்டு எழுந்து செல்ல விரும்பினான். சாருதேஷ்ணன் துவாரகையின் யாதவப்படையில் எத்தனை பிரிவுகள் உடனெழும் என்ற செய்தியுடன் வருவான். விருஷ்ணிகளும் அந்தகர்களும் பானுவை ஆதரிப்பார்கள். ஹேகயர்கள் முடிவெடுக்கவில்லை. அவனுடன் உறுதியாக நின்றிருப்பவர்கள் போஜர்களே. போஜர்களின் பன்னிரு படைப்பிரிவுகள் துவாரகையில் இருந்தன. அவர்கள் உடனே கிளம்பவேண்டியதில்லை. அவன் ஓர் அழைப்பு விடுக்கையில் அவர்கள் எழுவார்கள் என்றால் மட்டும் போதும். ஹேகயர்கள் வேண்டுவதென்ன என்று அவர்களிடம் பேச சாருதேஷ்ணனை அனுப்பவேண்டும்.
“நான் அந்த இசையிரவில் கண்ட கனவுகளை வழியெல்லாம் தொகுத்துக்கொண்டு வந்தேன். இசை இனியதென்று சொல்கிறார்கள். அது மெய்யல்ல. பேரிசை பெருவெளியின் காட்சி போலவே எண்ணத்தை மலைக்கச்செய்து அச்சத்தை எஞ்ச வைப்பது. தனிமையின் துயரை நிறைப்பது. அனைத்தையும் பொருளற்றதாக்கி முழுமையின் வெறுமையை அளிப்பது. அன்றிரவு நான் தேன்புழு என இனிமையில் திளைத்தேன், அனலில் என வெந்துருகவும் செய்தேன்” என அபிமன்யூ சொன்னான்.
“மூத்தவரே, அப்போது நான் ஒன்றை தெளிவாக அறிந்தேன். துவாரகையும் அந்நகரை நிறைத்துள்ள எட்டுவகைச் செல்வங்களும் அவர் இங்கு திகழ்வதற்கான களங்கள் மட்டுமே. தெய்வம் ஒழிகையில் பீடமும் மறையும். நான் நோக்கிக்கொண்டிருந்தேன். என் கண்ணெதிரே கடலலைகள் எழுந்து வந்து துவாரகையை மூடின. துயிலும் குழந்தையை அன்னை நீலப்பட்டுப் போர்வையால் விழிக்காது போர்த்துவதுபோல. பின்னர் அலையிலாத கடல்வெளி. அதில் எழுந்த மெல்லிய சுழிப்பை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். புன்னகைக்கும் கன்னக்குழிபோல. இக்கணம்கூட நான் அதை காண்கிறேன்.”
“அவையில் அகிபீனா புகை இருந்திருக்கும்” என்றான் தீப்திமான். பொருளிலா விழிகளால் அவனை திரும்பிப்பார்த்த பின்னர் “அந்த ஊழ் மாறாது. அதை நாம் ஒன்றும் செய்யவும் இயலாது. நீங்கள் இப்போது எந்த முடிவை எடுத்தாலும் துவாரகை மறைவது உறுதி. நீங்கள் எடுக்கவேண்டிய முடிவு உங்கள் தந்தைக்காகவோ அந்நகருக்காகவோ அல்ல. மூத்தவரே, யாதவகுலத்தை காக்கவும் அல்ல. அதை எவரும் காக்க இயலாது. நீங்கள் காத்துக்கொள்ளவேண்டியது உங்கள் நற்பெயரை மட்டுமே” என்றான் அபிமன்யூ.
பிரத்யும்னன் எரிச்சலுடன் சொல்லெடுப்பதற்குள் அபிமன்யூ கைநீட்டி தடுத்து “நாளை நூல்களில் உங்கள் பெயர் எப்படி எஞ்சவேண்டும் என்று முடிவெடுங்கள். நம் கொடிவழிகள் எவ்வாறு உங்களை நினைவுகூரவேண்டும் என்று தலைப்படுங்கள். ஆழியின் விளிம்பின் அலைவு மட்டுமே என்றா? அவ்வாறெனில் முரண்படுங்கள். நான் சொல்லிச்செல்ல வந்தது இதை மட்டுமே” என்றான்.
பிரத்யும்னன் சினத்துடன் “நற்சொல்லுக்கு நன்றி சொல்கிறேன். ஒரே மாதத்தில் முதியவனாகிவிட்டாய். அறம்தெளிந்து நெறிகண்டிருக்கிறாய்” என்றான். அபிமன்யூ “ஒரு மாதத்தில் அல்ல, ஒரே இரவில், மூத்தவரே” என்றான். எழுந்துகொண்டு “நான் என்னை அந்த இசைக்கனவில் தெளிவாகக் கண்டேன். களம்பட்டு குருதிமூடி மல்லாந்து கிடக்கும் என் உடலை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். என் முகத்தில் முழுநிறைவு இருந்தது. இலக்கை வென்று உதிர்ந்த அம்பு என என்னை உணர்ந்தேன். நீங்கள் இப்பிறவியில் அடையக்கூடிய முழுமையும் அது மட்டுமே” என்றான்.
பிரத்யும்னன் “ஏன், நானும் களம்படுவதைக் கண்டாயா?” என்றான். மேலும் ஏளனத்துடன் “எந்தை என்னை கொல்வார் என்று சொல்லவருகிறாய் அல்லவா?” என்று கேட்டான். “இல்லை” என்று அபிமன்யூ சொன்னான். “நான் உங்கள் முடிவை மட்டும் அல்ல, யாதவப் பெருங்குலத்தின் முடிவையே கண்முன் கண்டேன். பசிவெறியில் நிலையழிந்த செந்நாய்க்கூட்டம்போல சீறியும் உறுமியும் யாதவர் ஒருவரோடொருவர் போர் புரிந்தனர். கைக்குச் சிக்கிய அனைத்தையும் எடுத்து ஒருவரை ஒருவர் அறைந்தனர். ஒருவர் குருதியை இன்னொருவர் குடித்து களிவெறிகொண்டனர். தந்தை மைந்தரையும் உடன்பிறந்தார் தன்குருதியினரையும் அறியவில்லை.”
“அங்கே மானுடர் கருவிகளென்றானார்கள். அவர்கள் ஏந்தியிருந்த உழலைத்தடிகள் உயிர்கொண்டு உளம்கொண்டு வஞ்சமும் வெறியும் மூத்து நின்று களமாடின. குருதிகுடித்து விடாய் அடங்காமல் கூத்தாடின. உழலைத்தடிகளின் யுகம் பிறந்துவிட்டதெனத் தோன்றியது” என அவன் தொடர்ந்தான். “அந்தப் போரில் நீங்கள் போஜர்களின் கழிகளால் அறைந்து வீழ்த்தப்பட்டீர்கள்.” பிரத்யும்னன் உளம் அதிர்ந்தான். அதை விழிகூர்ந்து உளம் தெளிந்து சொல்லியிருந்தால் அந்த திடுக்கிடல் இருந்திருக்காது என தோன்றியது. பித்துவிழிகளுடன் சொல்லப்பட்டதனாலேயே அது மானுடம் கடந்த கூற்றென ஒலித்தது.
அபிமன்யூ தொடர்ந்தான். “அறைந்தவன் எட்டு வயதான இளையவன். அவன் கையில் அந்த விசை எவ்வாறு எழுந்தது என அவன் அறிந்திருக்கவில்லை. அவன் விழிகள் குருதிவெறியால் விரிந்திருந்தன. வாய் எதையோ அரற்றிக்கொண்டிருந்தது. நீங்கள் விழுந்ததும் ஓடிவந்து உங்கள் மண்டையோட்டை அவன் அடிக்க ஆரம்பித்தான். குருதி சிதற அது உடைந்து வெண்மூளை வெளியே தெறித்தது. அவன் உங்கள் தலையை தன் காலால் உதைத்தான். வெறிகொண்டு நகைத்தபடி மாறி மாறி உதைத்துக்கொண்டிருந்தான். அவன் தோழர்கள் இணைந்துகொண்டனர். உங்கள் உடல் துண்டுகளாகச் சிதறியது.”
பிரத்யும்னன் தன் உடல் மரத்துப்போயிருப்பதை உணர்ந்தான். பின்னர் திரும்பி தாம்ரப்பிரதனையும் தீப்திமானையும் பார்த்தான். அவர்கள் விழிகளிலும் அச்சம் தெரிவதைக் கண்டான். விடுவித்துக்கொள்ளமுடியாத பிசினில் ஒட்டியிருப்பதுபோல அவன் உள்ளமும் உடலும் அத்தருணத்தில் சிக்கியிருந்தன. கதவு திறந்த ஓசையில் அவன் திடுக்கிட்டான். ஆனால் அது அவனை அறுபட்டெழச் செய்தது. அவன் விழிதூக்க ஏவலன் தலைவணங்கி மெல்லிய குரலில் “இளையோர் வந்துவிட்டனர்” என்றான்.
பிரத்யும்னன் “நன்று இளையோனே, நீ சென்று ஓய்வெடுக்கலாம். உன் கனவுகள் கலைந்து நீ நிலைமீண்ட பின்னர் நாம் மீண்டும் சந்திப்போம்” என்றான். அபிமன்யூ “இவை மிகத் தெளிவான கனவுகள், மூத்தவரே. என்ன வேடிக்கை என்றால் கனவுகள்தான் எப்போதுமே தெளிவானவை, நனவுகளைவிட” என்றான். “உங்கள் தலையை உதைத்த இளம்போஜனை நான் அருகிலெனக் கண்டேன். அவன் முகத்தை பல்லாயிரம்பேர் கொண்ட கூட்டத்தில்கூட விழிதொட்டு எடுத்துவிடுவேன். அவன் பெயர் பூர்ஜன். அவனை அப்பால் ஒருவன் அவ்வாறு அழைப்பதை கேட்டேன்.”
அவனை அங்கிருந்து அகற்றவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பிரத்யும்னனிடம் இருந்தது. “ஒருவர்கூட எஞ்சாமல் துவாரகையின் யாதவக்குடிகள் இறந்து குருதிநிணக் குவியலாகக் கிடந்தனர். மைந்தர், தந்தையர், முதியவர். அவர்களுக்குமேல் கழுகுகள் சுழன்றுகொண்டிருந்தன. அந்நிழல்கள் பிணங்களின்மேல் சுற்றிவந்தன. தொலைவில் கடலோசை சங்குக்குள் முழக்கமெனக் கேட்டது. அது வலுத்து வந்தது” என்றான் அபிமன்யூ.
“நீ கிளம்பலாம்” என்றான் பிரத்யும்னன். “ஆம், நான் மீண்டும் துவாரகைக்கு செல்லவில்லை. இந்திரப்பிரஸ்தத்திற்கே செல்கிறேன். இனி நான் இங்கு வரப்போவதில்லை” என்றான் அபிமன்யூ. தலைவணங்கி வெளியே சென்றான். அவன் செல்வதை பார்த்துக்கொண்டு பிரத்யும்னன் அமர்ந்திருந்தான். தீப்திமான் “பித்தனென்றே ஆகிவிட்டார்” என்றான். “ஆம்” என்றான் பிரத்யும்னன். “அவரால் மானுடரை அப்படி ஆக்க முடியும். அவர் அருகிருப்பவர்கள் அவருக்கு அடிமைகளே. அவரிடமிருந்து விலகி ஓடுபவர்கள் மட்டுமே தான் என்று உணர்ந்து தனிவழி காணமுடியும்…”
“நானும் துவாரகைக்கு மீளப்போவதில்லை” என்று பிரத்யும்னன் சொன்னான். “மதுராவுக்குச் செல்கிறேன். மூத்த தந்தையிடம் சேர்ந்துகொள்கிறேன். யாதவர்கள் அங்கிருக்கிறார்கள். என்னை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்கள் அவர்களே.” தனக்குள் என “தேவை என்றால் துவாரகைமேல் படைகொண்டு வருகிறேன். அதற்கு பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் உதவுவார்கள் என்றால் அவ்வாறு நிகழட்டும்” என்றான்.
“ஆனால் அது நிகழலாகாது” என்று அவன் மேலும் தாழ்ந்த குரலில் சொன்னான். “அவரை நான் எதிர்த்து களம் நிற்கக்கூடாது. அப்பழி என் கொடிவழியினருக்கு வரக்கூடாது.” தீப்திமான் “அது நிகழப்போவதில்லை. பெரும்போர் எழும், ஐயமில்லை. அதன்பின் முற்றாக தோற்கடிக்கப்பட்ட துவாரகை உங்களிடம் வந்துசேரும்” என்றான். பிரத்யும்னன் அவனை வெறுமனே நோக்கிவிட்டு விழிவிலக்கிக்கொண்டான். தலை மார்பில் சரிய அசைவிலாது அமர்ந்திருந்தான்.
பின்னர் பெருமூச்சுடன் விழித்து கைகளை கட்டிக்கொண்டு தொலைவில் தெரிந்த சிந்துவின் நீலப்பெருக்கை நோக்கிக்கொண்டிருந்தான். மீண்டும் விழித்துக்கொண்டு “அவன் என்ன பெயர் சொன்னான்?” என்றான். அவர்கள் இருவரும் வெறுமனே நோக்கினர். அவன் கேட்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது. “பூர்ஜன், அல்லவா?” என்றான் பிரத்யும்னன். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை.
“நல்ல பெயர்… ஆனால் அவன் இன்னும் பிறக்கவில்லை” என்று அவன் சொன்னான். தீப்திமான் “போஜன் என்றார்” என்றான். “போஜர்கள் எவரும் மைந்தர்களுக்கு பூர்ஜன் என்று பெயரிடவேண்டாம் என ஆணையிடுவோம்” என்றபின் உரக்க சிரித்தான். நகையற்ற வெற்றோசை என அது ஒலித்தது. “அறிவின்மை… வெறும் பித்து” என்றபின் அவன் எழுந்துகொண்டான்.