மையநிலப் பயணம் – 10

IMG_5105

குவாலியரின் கோட்டை அமைந்துள்ள பெரிய பாறையைச் சுற்றி இருக்கும் சமணச்சிற்பங்களைப் பார்க்கலாம் என்று சென்றோம். சென்று சேர்வதற்குள் இருட்டிவிட்டது. அப்பகுதியே ஓய்ந்து கிடந்தது. இரண்டு பையன்கள் அமர்ந்திருந்தனர். அப்பால் காவலர் இருந்தார். பாறையில் பிரம்மாண்டமாகப் புடைத்து நின்ற தீர்த்தங்காரர் சிற்பங்களைக் கண்டோம். அரையிருளில் வானிலிருந்து வந்திறங்கி வான்நோக்கி நின்றிருப்பவர்கள் போல் தெரிந்தனர்.

அருகே சென்று பார்க்க காவலர் மறுத்துவிட்டார். இருட்டியபின் அனுமதி இல்லை என்றார். “:சென்றுதான் பார்க்கட்டுமே, என்ன இப்போது?” என்றார்கள் பையன்கள். காவலர் சட்டம் என்றால் சட்டம்தான் என்று சொல்லிவிட்டார். பின்னர் அவரே “மேலே ஒலி ஒளி காட்சி நடக்கிறது. சென்று பாருங்கள்” என்றார்.

மேலே சென்றோம். ஒலி ஒளிக் காட்சிக்கு சீட்டு எடுத்து செல்வதற்குள் தொடங்கிவிட்டது இந்தி நிகழ்ச்சி. ஆங்கில எட்டரைமணிக்கு என்றார்கள். அதுவரை காத்திருக்க மனமில்லை. ஒளியை விட ஒலியே அதிகம். மான்மந்திர் என்னும் மாபெரும் அரண்மனையை விதவிதமாக வண்ணவிளக்குகள் போட்டுக் காட்டினார்கள். குவாலியரின் வரலாற்றை ஒலிநாடகமாக நடித்தனர்.

ஒளிக்காட்சியை செல்பேசியில் மின்வெளிச்சம் போட்டு புகைப்படம் எடுக்கும் வட இந்திய உயர்குடி முட்டாள்கள்தான் சுற்றிலும். எவரும் எதையும் கவனித்தமாதிரியும் தெரியவில்லை. ஒரு கிழவாடியிடம் ஃப்ளாஷ் போடாதீர்கள் என்று சொன்னேன். முறைத்துப்பார்த்தார்.

மறுநாள் காலை எட்டுமணிக்கெல்லாம் மீண்டும் கோட்டையை அடைந்துவிட்டோம். காலையொளியில் தீர்த்தங்காரர்களைப் பார்ப்பது விழியையும் மனதையும் நிறைக்கும் அனுபவம். அணியற்ற மானுட உடல். மானுட உடலே ஓர் அணி என்பதுபோல ஆண்மையின் முழுமை கூடிய தோற்றம். வெளியை நோக்கி கனிந்த ஊழ்கநிலையில் நின்றிருந்தனர். இங்குள்ள அனைத்தையும் துறந்தவர்கள் கீழே நோக்க என்ன உள்ளது?

குவாலியரின் சமணச் சிற்பங்கள் அனைத்துமே டோமர் வம்சத்து அரசர்களால் உருவாக்கப்பட்டவை. சித்தாச்சலம் என அழைக்கப்படும் முதல் அடுக்குச் சமண கோயில்கள் மலைப்பாறையில் குடைந்த மாபெரும் தீர்த்தங்காரர் சிலைகள் கருவறை நிறைய நின்றிருப்பவை. இங்கே 21 தீர்த்தங்காரர் சிலைகள் உள்ளன. ஆதிநாதரின் சிலையே மிகபெரியது. 58 அடி உயரமானது இது.

அருகே கோபாசலம் என்னும் பாறையில் இருக்கும் சமணச்சிலைகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை. அவற்றில் பெரிய சிலை ஆதிநாதருக்குரியது. 57 அடி உயரமானது. பார்ஸ்வநாதர் சிலை 42 அடி உயரமானது. 1527ல் பாபரின் படையெடுப்புக் காலகட்டத்தில் இச்சிலைகள் பெரும்பாலானவற்றின் முகங்கள் உடைத்துச் சிதிலமாக்கப்பட்டன.

சாலையில் இருந்து கீழே இருக்கும் சமணச்சிலைகளைச் சென்று பார்க்கவேண்டாம், மலைமேல் இருந்து கற்கள் உதிர்கின்றன என்று காவலர் சொன்னார். சொந்த பொறுப்பில் இறங்கிச்சென்று சிலைகளைப் பார்த்தோம். அமர்ந்திருக்கும் நின்றிருக்கும் பேருருவங்கள். மண்ணில் மானுடன் விழைவன அனைத்தையும் துறந்தபின்னரே இப்பேருருவம் சாத்தியமாகும்போல

நீர்வழிந்து கறைபடிந்த சிலைகள். பாசிபிடித்த சிலைகள். பாறையே உருமாறி சிலையென ஆனவைபோல. ஒரு கனவிலென எழுந்தவை போல. சற்றே அசைந்தால் கலைந்து வெறும்பாறையாக எஞ்சிவிடும் என்பதுபோல.

குவாலியர் இந்தியாவின் மகத்தான கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதை பழங்காலத்தில் பழங்குடி அரசர் ஒன்றை அமைத்ததாக உள்ளூர் கதை சொல்கிறது. அவர் இங்கே  வேட்டைக்கு வந்து தாகத்துடன் அலைந்தபோது ஒரு முதியவர் இக்கோட்டையின் மேல் இன்றும் உள்ள சுனையூற்றைக் காட்டினாராம். அந்நீரைக் குடித்து உடலில் விட்டுக்கொண்டபோது அரசரின் தொழுநோய் அகன்றது. அவர் இங்கே ஒரு கோயிலையும் கோட்டையையும் கட்டினார். அந்த முதியவரின் பெயர் குவாலிபா. அவர் பெயரால் இக்கோட்டை குவாலியர் என பெயர் பெற்றது..

வரலாற்று ஆதாரங்களின்படி குவாலியர் கோட்டையில் ஹூணர்குல அரசர் மிகிரகுலர் கிபி ஆறாம்நூற்றாண்டு வாக்கில் ஒரு சூரியர் கோயிலை கட்டியிருக்கிறார். அது இன்றும் உள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டில் குர்ஜரப்பிரதிகார அரசர்களின் காலகட்டத்தில் டெலி கா மந்திர்  என்று அழைக்கப்படும் ஆலயம் இங்கே அமைக்கப்பட்டது.  கச்சப்பகட்ட ஆட்சியாளர்களும் பின்னர் சந்தேலா ஆட்சியாளர்களும் இக்கோட்டையை ஆண்டிருக்கிறார்கள்.

11 ஆம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட சுல்தான் இல்டுமிஷ் குவாலியரைக் கைப்பற்றினார். அதன்பின் 13 ஆம் நூற்றண்டு வரை குவாலியர் இஸ்லாமிய ஆட்சியின்கீழ் இருந்தது. 1375 ல் ராஜா வீர் சிங் குவாலியருக்கு அரசராக சுல்தான்களால் நியமிக்கப்பட்டார். அவர் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு முறையாகக் கப்பம் கட்டியமையால் ஆட்சி நிலையானதாக இருந்தது. அவரில் இருந்தே டோமர் வம்சம் ஆரம்பமாகிறது.

டோமர் வம்சத்தின் மிகச்சிறந்த அரசர் மான்சிங் டோமர். [1486-1516 ] அவர் சுல்தான்களிடமிருந்து சுதந்திரத்தை அறிவித்து ஆட்சி செய்தார். ஆகவே 1505ல் சிக்கந்தர் லோடியும் 1515ல் அவர் மகன் இப்ராகீம் லோடியும் குவாலியரைக் கைப்பற்ற முயன்றனர். அவர்களால் இக்கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை.

உண்மையில் குவாலியரின் பொற்காலம் என்பது டோமர் ஆட்சிக்காலம்தான். இன்றைய கோட்டைகள், ஆலயங்கள் பெரும்பாலும் டோமர் மன்னர்களால் கட்டப்பட்டவை. சமணச்சிற்பங்கள் குடையப்பட்டதும் அப்போதுதான்.

டோமர் வம்சத்து அரசர்களை முகலாயர் தோற்கடித்து குவாலியர் கோட்டையை கைப்பற்றிக்கொண்டார்கள். பாபர் குவாலியர் கோட்டையை இந்தியக் கோட்டைகளின் நிரை என்னும் மணிமாலையின் பவளமணி என்று வர்ணித்தார். முகலாய அரசு பலவீனம் அடைந்தபோது குவாலியரை மராத்தியர் கைப்பற்றினார்கள். சிந்தியா வம்சத்தின் ஆட்சிக்குக் கீழே குவாலியர் வந்தது.

சிந்தியாக்கள் மகாராஷ்டிர மாநிலம் கனேர்கண்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள். பீஜப்பூர் சுல்தானிடம் குதிரைப்படையினராக இருந்தனர். பின்னர் மராத்தியப்படையில் சேர்ந்தனர். மராத்திய பேஷ்வாக்களின் முக்கியமான படையினராக மாறினர். 1731 ரானோஜி சிந்தியா உஜ்ஜையினியைக் கைப்பற்றி தலைமையாகக் கொண்டு சிந்தியா அரசை உருவாக்கினார். 1738ல் அவர் குவாலியரைக் கைப்பற்றினார். அன்றுமுதல் குவாலியரை சிந்தியா வம்சமே ஆட்சி செய்துவருகிறது.

இல்டுமிஷ் குவாலியரை ஏறத்தாழ ஓராண்டுக்காலம் முற்றுகையிட்டிருந்தார். இறுதியில் குவாலியரின் ராஜபுத்திர அரசர்கள் அனைவரும் வெளிவந்து போரிட்டு இறந்தனர். பெண்கள் உள்ளே எரிகுளம் அமைத்து அதில் பாய்ந்து மறைந்தனர். இச்சடங்கு ஜோகர் எனப்படுகிறது. இவ்வழக்கம் ராஜபுத்திரர்களிடையே நெடுங்காலம் இருந்த ஒன்று.

1857 ல் நடந்த சிப்பாய்புரட்சியில் ஜான்சியை பிரிட்டிஷார் கைப்பற்றியபோது ஜான்சியின் அரசி லட்சுமிபாய் தப்பி வந்து குவாலியரை அடைந்தார். குவாலியரின் அரசர் புரட்சியில் கலந்துகொள்ள மறுத்து பிரிட்டிஷாரின் தரப்பு சேர்ந்தார். குவாலியரை வென்ற லட்சுமிபாய் குவாலியர் நாடுப் படைகளை கொல்லாமல் விட்டார். ஆனால் அவர்கள் பிரிட்டிஷார் உதவியுடன் படைகொண்டுவந்து தாக்கி லட்சுமிபாயை வென்றார்கள்.

கோட்டையில் இருந்து தன் குழந்தையுடன் வெளிவந்த லட்சுமிபாய் மிகத்தீரமாகப் போரிட்டு களத்திலேயே இறந்தார். கோட்டையை குவாலியர் அரசர் மீண்டும் வசமாக்கிக்கொண்டார். இந்த ‘விசுவாசத்துக்காக’ குவாலியருக்கு ஆங்கிலேயர் ஏராளமான பரிசுகளை வழங்கினர். குவாலியர் செல்வவளம் மிக்க சமஸ்தானமாக ஆனது இந்த ‘விசுவாசம்’ வழியாகத்தான்.

இன்று குவாலியர் அரசகுலம் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. இந்த அரசகுலத்தின் ராஜமாதா விஜயராஜே சிந்தியா பாரதிய ஜனதாக் கட்சியில் நெடுங்காலம் தலைவராக இருந்தார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். சுதந்திரம் கிடைத்ததுமே காங்கிரஸில் சேர்ந்து அங்கிருந்து ஜனசங்கம் வழியாக பாரதிய ஜனதாவுக்கு வந்தார். ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியை எதிர்த்து போட்டியிட்டிருக்கிறார்

அவர் மகன் மாதவராவ் சிந்தியா காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். ரயில்வே உட்பட பல அமைச்சர் பதவிகளை வகித்தவர். அவருடைய மகன் ஜியோதிராதித்ய மாதவராவ் சிந்தியா காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர். மத்திய அமைச்சர். விஜயராஜே சிந்தியாவின் மகள் வசுந்தரா ராஜே சிந்தியா பாரதிய ஜனதாக் கட்சிக்காரர். ராஜஸ்தானை இரண்டாம் முறையாக முதல்வராக ஆட்சி செய்கிறார்.

குவாலியர் இந்தியாவின் மகத்தான அவமானச்சின்னம். அதன் செல்வம் துரோகத்தால் உருவானது. இந்தியாவின் பிற அரசர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்களையும் கட்டிடங்களையும் பொதுப்பயன்பாட்டுக்காக அளித்தனர். உதாரணம் திருவிதாங்கூர் மகாராஜா. ஆனால் அவற்றை பலவகைகளில் சொந்தமாக்கி தொழில்துறை முதலீடாக ஆக்கிக்கொண்டது குவாலியர் குடும்பம்

மத்தியப்பிரதேசத்தைச் சுரண்டி ஏழ்மையின் உச்சத்தில் நிலைநிறுத்திய இந்த ராஜகுடும்பம் அச்செல்வ வளத்தால் அரசியலின் அனைத்து தரப்பையும் கைப்பற்றி ஆட்சி செய்கிறது. வரலாற்றின் போக்கை நன்றாகப் புரிந்துகொண்டவர்கள் இவர்கள். டெல்லியின் ஆடம்பர வாழ்க்கையின் முகங்கள். விருந்துகள் வழியாகவே அதிகாரத்தைக் கையாள்பவர்கள்.

ராஜா மான்சிங் குவாலியரின் மான்மந்திர் என்னும் அரண்மனையை அமைத்தார். குவாலியரின் முக்கியமான சுற்றுலாக் கவற்சி இந்த அரண்மனைதான். இது மாபெரும் ஒற்றைப்பாறைக் குன்றுக்குமேலே இரண்டு அடுக்குகளாக செந்நிறக் கற்களால் கட்டப்பட்டது. பாறையைக் குடைந்து அடியில் மேலும் மூன்று அடுக்குகள் அமைக்கப்பட்டன. அவை பாறைக்குள் இருப்பதனாலேயே பீரங்கிக் குண்டுகளால்கூட அணுகமுடியாதவை

ராஜா மான்சிங் தன் அரண்மனையின் கீழ் அறையில் ஒரு சிறிய குளத்தை அரசியர் நீராடுவதற்காக அமைத்திருந்தார். பின்னர் பாபரின் படையெடுப்பின்போது அதையே எரிகுளமாகவும் மாற்றி தீயில் குதித்து இறந்தார்கள். நீர் நெருப்பாகியது அசாதாரணமான ஒரு கதைமுடிச்சு.

மான்சிங் மாளிகையை சுற்றிப்பார்த்தோம். இருண்ட அறைகள். காற்றுசெல்வதற்காக ஒவ்வொரு அறைக்கும் பெரிய துளைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றினூடாகவே வெளியே இருப்பவர்களுக்கு ஆணையிடவும் முடியும். கூடங்கள், உப்பரிகைகள், உள் அங்கணங்கள், பெரிய கற்சுவர்கள்

முன்பு இங்கே பலவகையான ஓவியங்கள் இருந்திருக்கலாம். இன்று பெரும்பாலானவை அழிந்துவிட்டன. ஏனோ இங்கே ஒருவகையான அமைதியின்மையை உணர்ந்துகொண்டே இருந்தேன்.

குவாலியர் கோட்டையில் இரண்டு அரண்மனைகள் உள்ளன. குஜாரி மகால் என்பது சிறிய அரண்மனை. மான்சிங் டோமரால் கட்டப்பட்ட மான்மந்திர் பெரிய அரண்மனை. மிருகநயனி என்று அழைக்கப்பட்ட அரசிக்காக கட்டப்பட்டது குஜாரி மகால் என்னும் அரண்மனை எனப்படுகிறது

மான்சிங் டோமர் வேட்டைக்குச் சென்றபோது மிகத்தைரியமான ஒரு பெண்ணைக் கண்டு அவள்மேல் காதல்கொண்டார். அவரை மணக்க அவள் மூன்று நிபந்தனைகளைப் போட்டாள். அவள் ஊரிலிருந்து அன்றாடம் குடிநீர் வரவேண்டும். அவளுக்காக தனி அரண்மனை கட்டப்படவேண்டும். அவள் எப்போதும் அரசருடன் இருப்பாள். போரிலும்கூட. அரசர் அவ்வாறு கட்டிக்கொடுத்த மாளிகைதான் குஜாரி மகால். இன்று அது அருங்காட்சியகமாக உள்ளது.

குவாலியரின் அருங்காட்சியகம் மிக அரிய சிற்பங்கள் நிறைந்தது. பெரும்பாலும் அனைத்துமே உடைபட்ட சிற்பங்கள். ஆனால் ஒருகட்டத்தில் நாம் உடைந்த சிற்பங்களில் முழுமையைக் கண்டடையப் பழகிவிட்டிருப்போம். ஒவ்வொரு சிற்பமும் நம்மூரில் நாம் கண்டுபழகியவை. ஆனால் சிறிய கலைவேறுபாடுகளுடன் அவை பிறிதாகத் தோன்றின

சங்கு சக்கரம், தாமரை, கமண்டலம் என வெவ்வேறு அடையாளங்களைக் கொண்டு தெய்வத்திருவுருவுகளைக் கண்டுபிடிப்பது ஒரு பரவசமூட்டும் பயிற்சி. இங்குள்ள சிற்பங்களில் ஏழன்னையர் சிலைகள், வெவ்வேறு வகையான துர்க்கைகள், சூரியன் சிலைகள் முக்கியமானவை.

ஒர் ஆர்வமூட்டும் தகவல் இங்கே சொல்லப்படுகிறது. இந்தியாவில் சுழியம் [ 0 ] பயன்படுத்தப்பட்ட முதல் சான்று இன்றைய பாகிஸ்தானில் மார்தான் அருகே உள்ள பக்‌ஷாலி என்னும் ஊரில் 1881ல் கண்டெடுக்கப்பட்டது. கிபி 224 -383 காலகட்டத்தைச் சேர்ந்தது. அது பூர்ஜ [பிர்ச்] மரப்பட்டையில் எழுதப்பட்ட ஏடு. இரண்டாவது சான்று உள்ளது குவாலியரில். குவாலியர் கோட்டைக்குமேல் செல்லும்வழியில் உள்ள ஒரு சிறிய ஆலயத்தில் அக்கல்வெட்டு உள்ளது.

குவாலியரின் கோட்டைக்குள் உள்ள ஆலயங்களில் இரண்டு ஆலயங்களே முக்கியமானவை. மாமியார் மருமகள் [சாஸ்- பாகு] என அழைக்கப்படும் இரண்டு ஆலயங்கள் மிகமிக நுட்பமான சிற்ப அழகுள்ளவை. உண்மையில் இவ்வாலயத்தின் பெயர் சகஸ்ரபாகு. ஆயிரம் கையுள்ளவனின் ஆலயம்.

கிபி  1092 ல் கச்சப்பகட்டா வம்சத்தின் மகிபால மன்னரால் கட்டப்பட்டது இவ்வாலயம் 32 மீட்டர் நீளமும் 22 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஆலயம் மூன்று வாயில்கள் உடையது.   பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் காப்டன் எச் கோலர் மற்றும் மேஜர் ஜெ.பி.நிட் [Captain H. Kolar ,  Major J.B. Kint ] ஆகியோர் இவ்வாலயத்தை இன்றிருக்கும் வடிவில் பழுதுபார்த்ததாக அங்கிருக்கும் கல்வெட்டில் செய்தி உள்ளது.

இவ்வாலயங்கள் கஜூராகோ பாணியில் இடைவெளியே இல்லாமல் சிற்பங்களாலும் அணிச்செதுக்குகளாலும் ஆனவை. பிரம்மாண்டமான முகமண்டபம். அதன்மேல் கவிந்த தாமரை வடிவக்கூரை. மலர்ச்செதுக்குகள் நிறைந்த தூண்கள். கஜூராகோ காந்தரிய மகாதேவர் ஆலயத்திற்குப் பின்னர் மத்தியப்பிரதேசத்தின் சிற்பக்கலைக்கு மிகச்சிறந்த உதாரணமாக அமைபவை இந்த ஆலயங்கள்தான்.

இன்னொரு ஆலயம் டெலி கா மந்திர். இது ஒரு எண்ணைவணிகரால் கட்டப்பட்டது என இங்கே குறிக்கப்பட்டிருந்தது. இத்தனை பெரிய ஆலயத்தை ஒர் எண்ணைவியாபாரி கட்டியிருந்தால் இந்தியாவிலேயே இது ஒரு சாதனைதான். வாணியச்செட்டியார்கள் வருடம்தோறும் அங்கே ஒரு புனிதபயணம் செய்யலாம். சிற்பங்கள் மிகுதியாக இல்லாத பெரிய ஆலயம். வண்டிக்கூரை போன்ற விமான அமைப்பு இதன் சிறப்பு

குவாலியர் கோட்டைக்குள் ஒரு குருத்வாரா உள்ளது. தாஜ்மகால் பாணி சலவைக்கல் குமிழிக்கோபுரங்கள் கொண்டது. நாங்கள் செல்லும்போது பின்மதியம். அங்கே ஒரு திருமணம் நடந்துகொண்டிருந்தது. மணமகன் அரசனைப்போல உடையணிந்திருந்தான். மணமகள் அரசி போல. ஏதோ வரலாற்றுக் காலகட்டத்திற்குச் சென்றுவிட்டதுபோலத் தோன்றியது.

உள்ளே செல்ல தலையை மறைக்கவேண்டும். அதற்கு கைக்குட்டை அங்கேயே கிடைக்கும். குருத்வாராக்களில் பஜனைதான் வழிபாடு. அதில் கலந்துகொண்டோம். முடிந்தபின் சாப்பிட்டுவிட்டுப்போகும்படிச் சொன்னார்கள். உணவறைக்குச் சென்றோம். தட்டுகளை எடுத்துவந்து அமர்ந்தால் பரிமாறுபவர் கைநீட்டச் சொன்னார். ஒரு கையை நீட்டிய நண்பர்களிடம் இரண்டு கையையும் நீட்டச்சொன்னார். அதில் சப்பாத்திகளைப் போட்டார்.

கடலை சப்ஜி. சோறு. சப்பாத்தி சுக்கா அல்ல, நெய்ஊற்றப்பட்டது. ஆனால் ஒரு பஞ்சாபிய கிராமியச்சுவை. சில நண்பர்கள் கைநீட்டச் சொன்னதை அவமதிப்பாக எடுத்துக்கொண்டு புலம்பினர்.

பயணங்களில் நாம் கடக்கவேண்டிய எல்லை என்பது இது. ஓர் ஊரின் மொழியும் நடத்தையும் இன்னொரு ஊர்க்காரர்களுக்கு மரியாதையாக, முறைமையாகத் தெரிவதில்லை. அங்கிருந்த அனைவருக்குமே கையில்தான் சப்பாத்தி அளிக்கப்பட்டது என்பதைக் கவனித்திருக்கலாம். அவர்கள் பஞ்சாபுக்கு சென்றிருந்தால் ஓட்டல்களில்கூட அப்படித்தான் சொல்வார்கள் என்று அறிந்திருப்பார்கள்.

சமீபகாலம் வரை பஞ்சாபின் கிராமிய ஓட்டல்களில் இலையோ தட்டோ கிடையாது. கையில்தான் சப்பாத்தியை தருவார்கள். அதன்மேல் சப்ஜியை ஊற்றிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். கையை அதேசப்பாத்தியில் துடைத்து கடைசித்துண்டையும் சிதறாமல் வாயில்போடுவார்கள் சர்தார்ஜிகள்.

என் நண்பர் ஒருவர் மதுரைக்காரர். அவர் மணந்தது சட்டிஸ்கர் பெண்ணை. அங்கிருந்து இவர் வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு தலைவாழை இலையில் விருந்து வைத்தனர். அவர்கள் மனம்புண்பட்டனர், ஒரு தட்டுகூட இல்லாமல் இலையில் பரிமாறிவிட்டார்கள் என.

சர்தார்ஜிகளின் பேச்சே பாதி அதட்டல். பெரும்பாலானவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பேசாமலிருப்பார்கள். மொழிப்பிரச்சினை என்றால் ஆழ்ந்த அமைதிதான். அவர்களை ஆணவக்காரர்கள் என நாம் நினைக்கக்கூடும். ஆப்ரிக்காவில் நமக்கு உணவை பரிமாறியபின் அதில் சிறுபகுதியை பரிமாறியவர் எடுத்துச் சாப்பிட்டதைக் கண்டேன். அது அங்கே ஒரு மரியாதையாம். உலகம் என்பது நம் இல்லத்திற்கு வெளியே இருப்பது, நாம் அறியாதது. அதை அறிவதே பயணம் என்பது.

 

முந்தைய கட்டுரைமையநிலப்பயணம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51