வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 49

ஏழு : துளியிருள் – 3

fire-iconஅரண்மனைக்குள் அபிமன்யூவும் பிரலம்பனும் நுழைந்தபோதே ஸ்ரீதமர் அவர்களைக் காத்து நின்றிருந்ததுபோல இரு கைகளையும் நீட்டி விரைந்து வந்து அபிமன்யூவின் வலக்கையை பற்றிக்கொண்டார். அவன் முகமன் உரைத்து தலைவணங்குவதற்குள் “உங்களிடம் பேச வேண்டியுள்ளது, வருக!” என்றார். கைபற்றியவாறே அழைத்துச் சென்று அமைச்சு அறைக்குள் நுழைந்தார்.

அங்கே சுதமரும் தமரும் அமர்ந்திருந்தனர். அபிமன்யூ அவர்களுக்கு பொதுவாக தலைவணக்கம் புரிந்தான். அவர்கள் இருவரையும் அமரும்படி கைகாட்டிவிட்டு ஸ்ரீதமர் கதவை மூடினார். அவருடைய பதற்றம் அபிமன்யூவுக்கு வியப்பூட்டியது. “என்ன நிகழ்ந்தது, அமைச்சரே?” என்றான். “என்ன நிகழும் என்று எதிர்பார்த்தோமோ அதுதான். இளவரசர்கள் முனிந்திருக்கிறார்கள்” என்றார் ஸ்ரீதமர். “அது முன்னரே நிகழ்ந்ததுதானே?” என்றான் அபிமன்யூ.

“ஆம், அனைவரும் சினம்கொண்டிருப்பது இங்கு அரண்மனையிலும் அங்காடியிலும் உள்ள பேச்சுதான். ஆயினும் இன்றுவரை அது தெளிவாக எங்கும் வெளிப்பட்டதில்லை. துவாரகையின் அரசப் பெருவிழாக்கள் அனைத்திலுமே எண்பது இளவரசர்களும் ஒன்றாகவே தோற்றமளித்திருக்கிறார்கள். அரசர் இங்கிலாதபோது தங்கள் பூசல்களை வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது என்று அவர்கள் எண்ணியிருக்கலாம். பூசலிட்டு முதலில் விலகுபவர் மீண்டுவரும் தந்தைக்கு உகந்தவர் அல்லாதாகிவிடக்கூடும் என்று அஞ்சியும் இருக்கலாம். நெடுநாட்களாக கூர்கொண்டு வந்தது இப்போது முனையை அடைந்துவிட்டது. இன்னும் இரண்டு நாழிகைப்பொழுதில் அரசர் துவாரகையின் குடிப்பேரவையில் அமரவேண்டும். அந்த அவையில் தாங்கள் அமர இயலாதென்று சொல்கிறார்கள்.”

“யார்?” என்று அபிமன்யூ கேட்டான். “இளவரசே, பிரத்யும்னரும் அவரது படையினரும் இன்னும் இங்கு வந்து சேரவில்லை. துவாரகைக்கு வடமேற்கே சிந்துவின் கரையிலிருக்கும் தசபுஜங்கம் என்னும் கோட்டையில் இப்போது பிரத்யும்னர் இருக்கிறார். அரசரிடமிருந்து முறையான அழைப்பு வந்தபின் நகர்புகுவதாக அவருடைய தூதர் இங்கு வந்து சொன்னார். அச்சொல்லுக்கு என்ன பொருளென்று உடனே யாதவ இளவரசர்கள் புரிந்துகொண்டார்கள். இந்த அவையில் பிரத்யும்னரை பட்டத்து இளவரசராக இளைய யாதவர் அறிவிக்கக்கூடுமென்று முன்னரே அவர்களுக்கு ஐயமிருந்தது. இப்போது இன்னும் அந்த ஐயம் வலுப்பட்டிருக்கிறது” என்றார் சுதமர்.

“அநிருத்தரை அவ்வாறு அவர் அறிவிப்பார் என இங்குள்ள அமைச்சர் நடுவே ஒரு பேச்சு பரவியது. அது எவ்வாறென்று தெரியவில்லை. உண்மையில் அதற்கு எந்த அடிப்படையும் இல்லை. அவர் உள்ளத்தில் என்ன நிகழ்கிறதென்பது எங்களுக்கே தெரியவில்லையென்றால் பிறர் அதை உய்த்துணரவும் இயலாது” என்றார் தமர். “தான் அரசவையில் நுழைவதென்றால் இந்த அவையிலேயே பட்டத்து இளவரசர் என்று அறிவிக்கப்பட வேண்டுமென்று பானு தந்தையிடம் தூதனுப்பி அறிவித்துவிட்டார்.”

“அவரிடமேவா?” என்று அபிமன்யூ கேட்டான். ஸ்ரீதமர் “ஆம், அவரிடம்தான். அமைச்சர் சந்திரசூடர் அரசரை சந்திக்கச் செல்லும்போது இச்செய்தியுடன் செல்கிறார் என்று எங்களால் உய்த்துணர முடியவில்லை. அவர் அதை அறிவிக்கும்போது நான் அருகிலிருந்தேன். அரசர் முகத்தில் எந்த அசைவும் தெரியவில்லை. இளவரசர்கள் என்னிடம் அறிவிக்கச் சொன்ன செய்தி இது என்று சொல்லி தலைவணங்கி சந்திரசூடர் பின்னகர்ந்தபோது என்னை நோக்கி இயல்பாக புன்னகை செய்து அவை ஒருங்கிக்கொண்டிருக்கிறதல்லவா என்றார். ஆம் என்று நான் சொன்னேன். மேலும் ஒரு சொல்லும் அவர் எடுக்கவில்லை. நானும் கேட்கவில்லை” என்றார்.

அபிமன்யூ “பிறர் எண்ணுவதென்ன?” என்றான். தமர் “எண்மரின் மைந்தரும் இப்போது மூன்று குழுக்களாக பிரிந்திருக்கிறார்கள். ருக்மிணிதேவியின் மைந்தர் பிரத்யும்னரை பத்ரையின் மைந்தர்களும் லக்ஷ்மணையின் மைந்தர்களும் மித்ரவிந்தையின் மைந்தர்களும் ஆதரிக்கிறார்கள். ஆனால் பானுவை நக்னஜித்தியின் மைந்தர் ஆதரிக்கிறார்” என்றார். அபிமன்யூ புன்னகைத்து “ஏன், அவர் தன்னை ஷத்ரியர் அல்லாதாக்கிக்கொள்கிறாரா?” என்றான். கசப்புடன் புன்னகைத்து தமர் “பிரத்யும்னரின் அவையில் அவர்கள் உரிய முறையில் மதிக்கப்படவில்லையாம். மித்ரவிந்தையின் குலத்தைவிட தன் குலம் மேலானதென்றும் தனக்குரிய அமர்கை அவ்வாறே அமையவேண்டுமென்றும் கூறி கிளம்பியிருக்கிறார். அதையறிந்து பானுவே நேரில் சென்று அழைத்தபோது இங்கு வந்துவிட்டார்” என்றார்.

“பானு முடிசூட்டிக்கொண்டால் அந்த அவையில் முதன்மை ஷத்ரிய இளவரசராக அவர் இருப்பார் என்று எண்ணுகிறார்” என்றார் ஸ்ரீதமர். “மூன்றாவது குழு எது?” என்று அபிமன்யூ கேட்டான். “சாம்பரை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஜாம்பவ குலத்தின் கட்டற்ற தன்மை முழுதமைந்தவர். களம் நின்றால் வெல்லற்கரியவர். ஆனால் கடும்சினத்தால் எப்போதும் நிலை மறப்பவர். தொடக்கத்திலிருந்தே இரு இளவரசரையும் அவர் ஏற்கவில்லை. இருவருமே துவாரகையின் மன்னராக முடிசூட்டத் தகுதியற்றவர்கள் என்று அவர் எண்ணுகிறார். அதை அனைத்து அவைகளிலும் வெளிப்படுத்தத் தயங்குவதுமில்லை. அதற்கேற்ப அரசர் பெரும்பாலான போர்களில் அவரையே உடனழைத்துச் சென்றிருக்கிறார்.”

“இந்த அரசு ஷத்ரிய குடி மேன்மையால் உருவாக்கப்பட்டதல்ல, யாதவர்களுக்கு வழிவழியாக வந்ததும் அல்ல என்று சாம்பர் சொன்னார்” என்றார் சுதமர். “இது தோள்வல்லமையும் உளத்திறனும் கொண்ட ஒரு வீரரால் ஈட்டப்பட்டது, அவருடைய திறன்கொண்ட மைந்தரால் நிலைநிறுத்தப்படவேண்டியது, இளைய யாதவரின் களத்திறனும் சூழ்திறனும் தன்னிடம் மட்டுமே உள்ளது என்றார். பிறர் முடிசூடினால் ஒரு தலைமுறையைக்கூட துவாரகை கடக்காது என்று அவையில் சொன்னார். காளிந்தியின் மைந்தர்கள் அவருடன் இருக்கிறார்கள்.”

“இளையவர்கள் கூடவா?” என்றான் அபிமன்யூ. “இளையவர்களின் உலகம் வேறு. அவர்கள் இந்நகரைவிட்டு விலகிச்சென்று எங்காவது வேட்டையாடவும் களியாடவுமே விரும்புகிறார்கள். ஆனால் இங்குள்ள குலமரபுப்படி ஒவ்வொருவரும் தங்கள் மூத்தவருக்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்கள்” என்றார் சுதமர். “மானுடர் அனைவரும் எதற்கேனும் கட்டுப்பட்டவர்களே” என்றார் ஸ்ரீதமர். “தாங்கள் எதற்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதை அவர்கள் உணரும் அகவை ஆகவில்லை. அகவை நிறைந்தாலும் அறிவார்கள் என்று அவர்களின் உளத்திறன் காட்டவுமில்லை. அறத்திற்கோ நூலுக்கோ ஆட்படாதவர்கள் எளிதில் குலமுறைகளுக்கு கட்டுப்படுகிறார்கள்.”

அபிமன்யூ கைகளை மார்பில் கட்டிக்கொண்டு தலைகுனிந்து சற்றுநேரம் அமர்ந்திருந்தான். பின்னர் “இதில் நான் செய்வதற்கென்ன உள்ளது, அமைச்சரே?” என்றான். “நீங்கள் இளவரசர்களிடம் பேசவேண்டும். இன்று இந்த அவை முறைப்படி கூட்டப்படவில்லையென்றால் யாதவப் பேரரசு உடைந்து சரிவதற்கான தொடக்க நிகழ்வாக இது அமையும். நீங்கள் அறிந்திருப்பீர்கள், ஐங்குலத்து யாதவரும் முன்னரே இளைய யாதவர்மேல் உளவிலக்கு கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தலைவர்கள் இந்நகர் விட்டுச்சென்று ஓராண்டாகிறது. அவர்கள் அனைவருமே இன்று மதுராவில் பலராமரின் அவையில் அமர்ந்திருக்கிறார்கள்” என்றார் ஸ்ரீதமர்.

“அமைச்சர்களில் மூத்தவரும் இக்குடியின் பிதாமகருமாகிய அக்ரூரரே விட்டுச்சென்று மூன்றாண்டுகளாகின்றன. இந்நகரின் தெருக்களினூடாக கைபிணைத்து இழுத்துவரப்பட்ட கிருதவர்மன் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறான். இங்கிருப்பவர்கள் தயங்கியபடி காத்திருப்பவர்கள் மட்டுமே. அவர்களின் தொழில் இங்கிருக்கிறது. இல்லத்து மகளிரும் மைந்தரும் இளைய யாதவரை ஆதரிக்கிறார்கள். அத்துடன் இன்னமும் ஐங்குலத் தலைவர்களிலிருந்து தன் குலத்தலைவருக்கென பொது அழைப்பு எதுவும் எழவும் இல்லை. அதுவே அவர்களின் உடைவுக்கணத்தை நீட்சிகொள்ளச் செய்கிறது.”

“இளைய யாதவர் இன்று துவாரகையின் பேரவையில் அனைத்து குடித்தலைவர்களும் வரவேண்டுமென்று ஓர் அரசறிவிப்பை வெளியிட வேண்டுமென்றார். நான் அவரிடம் இந்நகருக்குள் இன்று ஐங்குலக் குடித்தலைவர் எவருமில்லை என்பதை அவர் அறிந்திருக்கிறாரல்லவா என்று கேட்டேன். ஆம் அறிந்திருக்கிறேன், ஆயினும் அவ்வறிவிப்பு எழட்டும் என்றார். அவர்கள் வருவார்களென்றால் அவ்வாறு வரும்போதே இயல்பாக அவர்களுக்கு ஒரு தலைவன் அமைவான். அவனை அக்குழுவின் தலைவனாக ஏற்போம் என்றார்” என்று ஸ்ரீதமர் தொடர்ந்தார். “அவர் என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் என்ன நிகழ்கிறது என்று காண விரும்புகிறார் என்று மட்டும் தெரிகிறது. நாம் விரும்புவது நிகழப்போவதில்லை என்று உள்ளுணர்வு சொல்கிறது. நிகழவிருப்பதை அவர் அறிந்திருக்கிறார் என்று ஆழம் உறுதி கொள்கிறது.”

சுதமர் “நாம் முடிந்தவரை முயலவேண்டும். அது நம் கடன். உரு அகன்று சென்ற பின்னரும் நின்றிருக்கும் நிழலென்று என்னை நான் உணர்வதுண்டு. அவர் ஆற்றவிரும்பாதவை, ஆற்றத்தவிர்த்தவை, ஆற்றுவதற்கொண்ணாத சிறியவை ஆகியவற்றை ஆற்றும்பொருட்டு உடலுருக்கொண்ட அவர்தான் நான். இது அதற்குரிய தருணம். இன்று கூடும் அவையில் இளைய யாதவரின் மைந்தர்கள் அனைவரும் இருந்தாக வேண்டும்” என்றார்.

அபிமன்யூ “அதை நாம் எப்படி இயற்ற முடியும்? எந்தச் சொல்லுறுதியையும் நாம் எவருக்கும் அளிக்க இயலாது” என்றான். “சூழலை புரியவைப்போம். மூன்று முதன்மை இளவரசர்களிடம் நீங்கள் பேசுங்கள். சாம்பர் இந்நகரின் அரியணையை அடைவது இப்போது இயலாது. பொறுத்திருப்பதே அவருக்குரிய வழி. ஒருவேளை இந்நாட்டைப் பிரித்து மைந்தர்களுக்கு அளிக்க இளைய யாதவர் எண்ணலாம். அப்போது சாம்பர் தனக்குரிய நிலத்தை பெற முடியும். இன்று ஷத்ரியரோ யாதவரோ அவரை சற்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார் ஸ்ரீதமர்.

“பிற இருவரும் அரசரால் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்படுவதற்கான இணையான வாய்ப்புள்ளவர்கள். ஒருவேளை இத்தருணத்தில் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைக்கொண்டு அம்முடிவை அவர் எடுக்கக்கூடும். தங்கள் மிகை விழைவாலோ சிறுமையாலோ இதை அவர்கள் தவறவிட வேண்டியதில்லை. இந்த அவை அவர்கள் இன்றி நிகழக்கூடாது. சிறுமைகளை தங்கள் நிமிர்வால் கடந்து செல்பவர்கள் என்று அவர்கள் தங்கள் தந்தையிடம் வெளிப்படட்டும்” என்றார் தமர்.

“பிரத்யும்னரும் பானுவும் இணைந்து அவை புகுந்து அவர் முன் அமரவேண்டும். எது அவரது விழைவோ அதை தலைக்கொள்வதாக இருவரும் அறிவிக்க வேண்டும். எம்முடிவை அவர் எடுத்தாலும் அதை அவர்கள் அவையில் ஏற்க வேண்டும். முற்றிலும் அவருக்கு ஆட்படுபவர் என்று எவர் தன்னை நிறுத்துகிறாரோ அவரே இறுதியில் வெல்வார்” என்று சுதமர் சொன்னார். “ராகவராமனின் கதை ஷத்ரியர் அனைவருக்கும் முன்மாதிரியாக இங்குள்ளது. தன் இளையோன் ஆள அவர் நிலமளித்துச் சென்றார். அவன் மூத்தவனின் காலணிகளை அரியணை வைத்து வாள்கொண்டு அருகே நின்றான். அதனாலேயே நின்னிலும் நல்லனென்று அவன் குடிகளால் ராமனிடமே புகழ்பாடப்பட்டான்.”

“செங்கோல் ஏந்துவதும் மணிமுடி சூடுவதும் அரியணை அமர்வதும் எளிது. அறத்தின் கோலேந்தி, புகழ் முடி சூடி, காலத்தில் அமர்வது மிகக் கடினம். பேரரசர்கள் அவ்வாறுதான் உருவாகிறார்கள். ஒரு சிற்றரசை படைவல்லமையால் ஆளலாம். ஆணை சென்றுசேர ஒரு மாதம் எடுக்கும் பெருநிலப்பரப்பை ஆள புகழ்வல்லமை மட்டுமே உதவும். ஆயிரம் குலங்களை இணைக்க அறம் ஒன்றாலேயே முடியும்” என்றார் ஸ்ரீதமர்.

“இதை இப்போதே அவர்களுக்குச் சொல்லி புரியவைப்பது கடினம். அதிலும் இளையோனாகிய நான்” என்றான் அபிமன்யூ. “இத்தருணத்தில் அப்படி அவர்கள் வெளிப்பட்டாக வேண்டும், மெய்யில் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல எனினும் கூட. அதுவே அரசருக்குரிய சூழ்திறன்” என்று தமர் சொன்னார். “பானுவிடம் சென்று சொல்க, முற்றிலும் தந்தையின் ஆணைக்குக் கட்டுப்பட்டவராக அவையில் வெளிப்படுவாரென்றால் பிரத்யும்னர் முடிசூட்டப்படுவார் என்றால்கூட இங்குள்ள அத்தனை யாதவ குடிகளுக்கும் பானுவே உளம் அமர்ந்த தலைவராக ஆவார். தந்தையால் ஒதுக்கப்பட்டவராக அல்ல, உரிய வாய்ப்பு மறுக்கப்பட்டவராக அவரை அவர்கள் பார்க்க வாய்ப்புள்ளது.”

“இத்தருணத்தில் இங்கு எஞ்சியிருக்கும் யாதவ குடியினரின் ஆதரவே அவரை நிலைநிறுத்தப்போகிறது. யாதவர்கள் நகர்விட்டுச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இளைய யாதவர் வந்து இங்கு ஏதோ மெய்கடந்த மாயம் ஒன்றை நிகழ்த்துவார் என்று நம்பிக் காத்திருப்பவர்களே எஞ்சியிருக்கிறார்கள். அவர் அமரும் அவையிலேயே மைந்தர் விலகி நின்றார்கள் என்றால் அவர்களும் நம்பிக்கையிழந்து இந்நகர்விட்டுச் செல்வார்கள். இங்கிருந்து செல்லும் ஒவ்வொரு யாதவனும் பானுவின் படையிலிருந்து விலகுகிறான். தன் ஆற்றலை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் அதைக்கொண்டு எதிர்காலத்தை வெல்வதற்காகவும் அவர் இன்று இந்த அவையில் நின்றாகவேண்டும். பிறிதொரு வழியே அவருக்கில்லை” என்று ஸ்ரீதமர் சொன்னார்.

“இதை நாங்கள் சொன்னால் சூழ்ச்சி என்றே தோன்றும். இளையவனாகிய நீங்கள் சொல்லலாம்” என்றார் சுதமர். ஸ்ரீதமர் “அதையே பிரத்யும்னருக்கும் சொல்க!” என்றார். “இங்கு பிரத்யும்னர் முடிசூட்டிக்கொண்டால்கூட அவரது குடிகளாக அமையப்போகிறவர்கள் யாதவர்களே. ஷத்ரிய அன்னைவழி கொண்டவர் என்பதனால் இங்குள்ள அத்தனை யாதவர்களும் அவர்மேல் ஐயங்கொண்டிருக்கிறார்கள். இளைய யாதவர் பாரதவர்ஷத்தில் உருவாகி வரும் ஷத்ரியப் பெருங்கூட்டின் உறுப்பாக இருக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டிருக்கிறது. அவர் வெல்வார் என்பதில் ஐயமில்லை. வென்றபின் இங்கு உருவாகி வரும் அதிகாரக்கூட்டு என்பது ஷத்ரிய மேலோங்குதல் கொண்டதல்ல. அவர்களும் பிரத்யும்னரை ஐயத்துடனேயே அணுகுவார்கள்.”

“இன்று பதினான்கு ஆண்டுகள் இருள் வாழ்வுக்குப்பின் மீண்டு வந்து இளைய யாதவர் அரியணை அமர்கையில் பிரத்யும்னர் முரண்பட்டு விலகி நிற்பார் என்றால் அந்த ஐயம் மிகவே செய்யும். இன்றிருக்கும் அரசாடற்சூழலில் இளைய யாதவர் தனித்து விடப்பட்டிருக்கிறார். அவருடன் படைத்துணை நின்றாகவேண்டிய நாடுகள் அவர் மணம்கொண்ட ஷத்ரிய அரசுகள் மட்டுமே. அவர்களின் ஆதரவை அவர் நாடி நிற்கையில் அதை முடியுரிமையை விலை பேச பயன்படுத்திக்கொண்டார்கள் என்ற சொல் எழலாகாது. அவ்வாறு எழுமென்றால் பிரத்யும்னரின் கொடிவழிகள் வரை அக்கசப்பு நீளும். இந்நிலத்தை ஒருபோதும் அவர் அசையாத கோல்கொண்டு ஆள முடியாது.”

“அவரை இளைய யாதவர் தேர்ந்தெடுப்பார் என்றால் அது முற்றிலும் இளைய யாதவரின் விருப்பத்தால்தான் என்றும் அவர் ஆணைப்படி மட்டுமே அம்முடியை தான் சூடிக்கொண்டதாகவும் அவர் இம்மக்களிடம் தோற்றமளித்தாகவேண்டும். அதற்கு இன்று இந்த அவையில் அவர் வந்து நின்றாகவேண்டும். எவருக்கு மணிமுடியை அரசர் அளித்தாலும் அது முற்றிலும் உவப்பானதே என்றும், பானுவுக்கு அது அளிக்கப்படுமென்றால் அருகே தயக்கமில்லாது வாள்ஏந்தி நின்றிருக்கும் படைத்தலைவனாக இருக்கவும் பிரத்யும்னர் ஒருக்கமே என்றும் இக்குடிகளிடம் அவர் வெளிப்பட்டாக வேண்டும். இதை அவரிடம் சொல்க!” என்றார் ஸ்ரீதமர்.

அபிமன்யூ புன்னகையுடன் “நன்று. தெளிவாகவே எண்ணி சொல்சூழ்ந்திருக்கிறீர்கள். ஆனால் நெடுநாட்களாக இருந்துவரும் பூசல் இது. ஆகவே ஒவ்வொரு தரப்பும் தங்கள் எண்ணங்களை மீளமீளச் சொற்களாக்கி ஒருவரோடொருவர் பேசி பழுதற்றதாக செதுக்கி வைத்திருக்கும். முடிந்தவரை முயல்கிறேன்” என்றான். துயரும் சலிப்பும் கொண்ட புன்னகையுடன் “ஆம், நாம் செய்யக்கூடியது அதுவே. நாம் முயல்வோம்” என்றார் ஸ்ரீதமர்.

fire-iconதுவாரகையின் அரண்மனை உபகோட்டத்தில் அமைந்த ஜாம்பவிலாசம் என்னும் சாம்பனின் அறை நோக்கி செல்கையில் அபிமன்யூவிடம் பிரலம்பன் “அவர் உள்ளம் மாறுமென்று நீங்கள் எண்ணுகிறீர்களா?” என்றான். அபிமன்யூ “இல்லை” என்றான். “ஏன்?” என்று அவன் கேட்டான். “இவர்களின் இயல்புகள் அனைத்தும் முற்றாக வகுக்கப்பட்டு பாறையென உறுதியாகிவிட்டுள்ளன. ஆனால் அதைவிடவும் உறுதிகொண்ட ஒன்றுண்டு. அது அவருடைய ஊழ்” என்றான்.

பின்னர் தனக்கே என “வானளாவி விரியும் பேருரு ஒன்று உன் சொல்லுக்கு மறுஎடையென எதை வைப்பாய் என மாதுலரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது. குருதியின் இறுதித் துளியையும் வைத்தாகவேண்டும்” என்றான். பிரலம்பன் அவனுடன் மேலும் விரைந்து நடந்தபடி “எதுவரை அவர் செல்வார்?” என்றான். அபிமன்யூ “இறுதிவரை” என்றான். “மறு தட்டில் ஊழ் அமருமென்றால் இந்தத் தட்டிலும் ஊழே அமர்ந்தாகவேண்டும். பிரம்மம் மட்டுமே பிரம்மத்தை நிகர் செய்யும். பிறிதொன்றிலாமைகள் அவ்வாறே உருவாகின்றன” என்றான்.

அவர்களை அழைத்துச்சென்ற ஜாம்பவர் குலத்துக் காவலன் வாயிலருகே நின்று அங்கிருந்த காவலனிடம் அவர்களின் வருகையை அறிவித்தான். அவன் உள்ளே சென்று மீண்டும் ஓசையின்றி கைகாட்டி உள்ளே செல்லுமாறு பணித்தான். அவர்கள் உள்ளே சென்றதும் கதவு மெல்லிய ஓசையுடன் மூடிக்கொண்டது. அறைக்குள் சாம்பன் உயரமற்ற அகன்ற பீடத்தில் தன் பெரிய கால்களை விரித்து அருகிருந்த பிறிதொரு உயர்ந்த பீடத்தில் வலக்கையை வைத்து இடக்கையை பீடத்தின் சாய்வுமணைமேல் போட்டு சரிந்து அமர்ந்திருந்தான். அவன் உடல் பெரியது. அதனாலேயே எங்கும் சிறுகோணலுடனேயே அவனால் நிற்கவும் அமரவும் முடியும் என்று அபிமன்யூ எண்ணிக்கொண்டான்.

அவனருகே மூன்று பீடங்களில் அவன் உடன்பிறந்தாரான சுமித்ரனும் புருஜித்தும் சதாஜித்தும் அமர்ந்திருந்தனர். சகஸ்ரஜித்தும் காளிந்தியின் மைந்தர்களான சுருதனும் கவியும் விருஷனும் சாளரத்தருகே நின்றிருந்தார்கள். தொலைவிலிருந்து வந்த கடற்காற்றில் சாளரத்தின் திரைச்சீலைகள் புடைத்து உதறி அமைந்துகொண்டிருந்தன. விழிக்குத் தெரியாத எவரோ அங்கு ஆடை உலைய நடமாடுவதுபோல் தோன்றியது. அவர்கள் அனைவர் விழிகளிலும் அவர்கள் பேசிக்கொண்டிருந்த சொற்களின் நுனி அறுந்து நின்றிருந்தது.

அபிமன்யூ தலைவணங்கி “தங்களை இங்கு சந்தித்ததில் பெருமகிழ்வு கொள்கிறேன், மூத்தவரே. உபப்பிலாவ்யத்தில் தங்களுடன் சொல்லாட முடியவில்லை. இத்தருணம் நிறைவுறுக!” என்றான். சாம்பன் மறுமொழியோ முகமனோ உரைக்காமல் தன் பெரிய கைகளைத் தூக்கி அபிமன்யூவிடம் அமர்க என்று காட்டினான். அபிமன்யூ மீண்டும் தலைவணங்கி பீடத்தில் அமர்ந்ததும் அவன் சொல்லெடுப்பதற்குள் கைகாட்டி அமர்த்தி “உன்னிடம் ஸ்ரீதமரும் சுதமரும் தமரும் என்ன சொல்லி அனுப்பினார்கள் என்பதை மட்டும் சுருக்கமாக சொல்” என்றான்.

“நான்…” என்று அபிமன்யூ சொல்லத்தொடங்க “அரசுசூழ்தலுக்குரிய வீண் சொற்களை இறைப்பதில் நம்பிக்கையற்றவன் நான். அவர்கள் சொன்னவற்றை மட்டுமே கேட்க விரும்புகிறேன்” என்றான். “அவர்கள் சொற்களை நான் வாங்கிக்கொண்ட முறையில் உரைக்கிறேன்” என்று அபிமன்யூ சொன்னான். “இதுதான் அச்சொற்கள். தாங்கள் இத்தருணத்தில் முடிகொள்ள முந்துவீர்கள் என்றால் யாதவர்களையும் ஷத்ரியரையும் உங்களுக்கு எதிராக ஒருங்கிணைத்து வெல்லமுடியாத ஆற்றலாக ஆக்கும் பெரும்பிழையை செய்வீர்கள். அதன் விலையென உங்கள் குடியினரின் முற்றழிவைப் பெறுவீர்கள்.”

ஜாம்பவர்களின் விழிகள் மாறுபட்டன. சற்று முன்னால் நகர்ந்து பீடத்தின்மேல் இரு கைகளையும் மடித்தூன்றி அவன் கண்களைக் கூர்ந்து நோக்கி “ஆம், அதற்கொரு வாய்ப்புள்ளது” என்றான் சாம்பன். “எந்தப் பசப்பும் இன்றி இவ்வுண்மையை எதிர்கொள்ளுங்கள். மாதுலரின் எட்டுத் துணைவியரில் காளிந்தியும் ஜாம்பவதியும் மட்டுமே எப்போதும் தனித்து விடப்பட்டிருந்தார்கள். அவர்களின் மைந்தர்களுக்கு பிறரால் நிகர்உரிமை அளிக்கப்பட்டதில்லை. அவர்கள் அரியணை ஏறுவார்கள் என்றால் நிஷாதர்களும் அசுரர்களுமன்றி எவரும் பாரதவர்ஷத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை” என்றான் அபிமன்யூ.

மேலும் உரத்த குரலில் “இங்கிருக்கும் யாதவர்களுக்கும் ஷத்ரியர்களுக்கும் நீங்கள் பொது எதிரியென்பதை மறக்க வேண்டியதில்லை” என்றான். சாம்பன் தணிந்து “நான் என்ன செய்வது?” என்று கேட்டான். “பொறுத்திருங்கள். இந்தக் களம் அவர்கள் இருவரும் ஆட வேண்டியது. அதில் நீங்கள் நுழையவேண்டியதில்லை. அவர்கள் இருவரும் தந்தை சொல்லுக்கு அடங்காமல் அவையில் முரண்கொள்ளவிருக்கிறார்கள். அவர்களிடும் பூசலை இந்நகர் நோக்கிக்கொண்டிருக்கிறது. அதன் பழியை அவர்களே கொள்ளட்டும்” என்று அபிமன்யூ சொன்னான்.

“இந்நகரை தன் உள்ளங்கையில் விதையென இங்கு கொண்டு வந்த பேருருவனின் சொல்லுக்கெதிராக அவர்கள் இருவரும் எழுந்தார்கள் என்பதை வரலாறு குறித்திடட்டும். தந்தை சொல் மீறியவர்கள் என்று அவர்களை குடிமூத்தார் கணக்கு வைக்கட்டும். மறுசொல்லின்றி தந்தையின் காலடியில் அமர்ந்திருந்தீர்கள் என்று உங்களை அவர்கள் நினைவுகூரட்டும். இத்தருணம் கடந்து சென்றதுமே அவர்கள் இருவருக்கும் மேலாக நீங்கள் எழுந்து நிற்க அதுவே உங்களுக்கு தகுதியளிக்கும்” என்றான் அபிமன்யூ.

முன்னகர்ந்து அவன் விழிகளை நோக்கி அபிமன்யூ தொடர்ந்தான். “எளிய அரசுசூழ்தல் அறிந்திருந்தால்கூட இந்த முடிவை நீங்கள் வந்தடைந்திருப்பீர்கள். ஏனெனில் அவர்கள் இருவரும் பூசலிடும்தோறும் ஒருவரின் ஆற்றலை இன்னொருவர் இல்லாமல் ஆக்குகின்றார்கள். இருவரும் தோற்பார்கள், அப்போது வெல்லும் தரப்பாக எழுந்து வருக! அதுவரை பொறுத்திருங்கள்.” சாம்பன் விழிகள் அங்குமிங்கும் அசைந்து அவன் உள்ளம் நீர்த்துளியென தத்தளிப்பதை காட்டின. அவன் விரல்கள் பீடத்தை வருடி தவித்தன.

மெல்லிய அசைவெழ அபிமன்யூ திரும்பிப் பார்த்தபோது காளிந்தியின் மைந்தன் சுருதன் சாளரத்தருகிலிருந்து சற்றே முன்வந்து “மூத்தவரே, இது மிகச் சரியானதொரு கூற்றுபோல் தன்னைக் காட்டுகிறது. ஆனால் இதை நம்மிடம் வந்து சொல்பவன் நிஷாதனோ அரக்கனோ அசுரனோ அல்ல. இவன் ஷத்ரியனும் யாதவனும் கலந்த குருதி. இதனாலேயே இது ஐயத்திற்குரியது” என்றான். அபிமன்யூ “நன்று, காளிந்தி அத்தைக்கு மட்டுமே உடலெங்கும் ஐயமும் கசப்பும் ஓடும் இத்தகைய மைந்தன் பிறக்கமுடியும். அது தெய்வங்களின் ஆடல்” என்றான்.

சாம்பனிடம் “மூத்தவரே, இத்தனை எளிதாக என் சொற்களை தவிர்த்தீர்கள் என்றால் பிறகு இங்கு நான் சொல்ல ஒன்றுமில்லை. இச்சொற்கள் என் வழியாக வராமல் காற்றில் ஒலித்தன என்று கொள்ளுங்கள்” என்று அபிமன்யூ சொன்னான். சுருதன் “மூத்தவரே, இச்சூழலில் என்ன நிகழுமென்று நான் சொல்கிறேன். தந்தை இன்று மூன்று அசுரகுடிகளின் ஆதரவை நாடி நின்றிருக்கிறார். பாணரும் வஜ்ரநாபரும் சம்பரரும் அளிக்கும் படைத்துணையால் மட்டுமே இன்று அவர் அரசர் என்று நிலைகொள்கிறார்” என்றான்.

“நீங்கள் அறிவீர்கள், யாதவர்களின் படைநிரைகள் இந்நகரைவிட்டு ஒழிந்துகொண்டிருக்கின்றன. இன்று கூர்ஜரமோ சிந்துவோ மாளவமோ இந்நகர்மேல் படைகொண்டு வருமென்றால் இங்குள்ள யாதவர்களால் அரைநாழிகைப்பொழுதுகூட அப்படையெடுப்பை எதிர்கொள்ள முடியாது. அந்நாடுகள் அஞ்சியிருப்பது இது அசுரஅரசுகளின் பின்துணை கொண்ட நாடென்பதனால் மட்டும்தான். அதை அவர்களுக்கு மீண்டும் அழுந்தக் காட்டும்பொருட்டே நம் தந்தை சென்று அசுரக் கூட்டமைப்புடன் உறவாடி வந்திருக்கிறார்” என்றான் சுருதன்.

அவன் இடுங்கிய விழிகளில் எழுந்த நச்சை அபிமன்யூ நோக்கிக்கொண்டிருந்தான். காளிந்தியின் அதே முகம். அதே விழிகள். ஆனால் அவை முற்றிலும் பிறிதொன்றெனத் தெரிந்தன. அல்லது அது வெறும் மானுடநம்பிக்கை மட்டும்தானா? இன்கனியின் நச்சுவிதை என்று ஒரு சொல் நெஞ்சில் எழுந்தது. “மூத்தவரே, என்றேனும் நாம் நிஷாதர்களென எழுந்து நின்று நம் முடியுரிமையை கோரமுடியுமென்றால் அது இத்தருணத்தில் மட்டுமே. நாளை நம் தந்தை வென்று அரசுநிலைகொண்டு அவ்விரு மைந்தர்களில் ஒருவருக்கு முடிசூட்டிவிட்டாரென்றால் பின்னர் நாம் எதையும் கோரமுடியாது” என்றான் சுருதன்.

“இன்று கோருவோமென்றால் அசுரரும் நிஷாதரும் நமக்கு ஆதரவளிப்பார்கள். நமது கோரிக்கை மறுக்கப்படுமெனில் அவர்கள் சினம்கொள்வார்கள். அவர்கள் முனியக்கூடுமென்ற அச்சமும் நம் தந்தைக்கு எழும். இத்தருணத்தில் நாம் முடியுரிமை கோரவில்லையென்றால் அசுரர்களிடமும் நிஷாதர்களிடமும் நம் தந்தை சொல்வதற்கு ஒரு ஏது இருக்கும். நாம் கோரவில்லை, ஆகவே முடி அளிக்கப்படவில்லை என்று. ஆம் மூத்தவரே, முறைப்படி முடியுரிமையை நாம் கோருவதற்கு இன்று அமைந்துள்ளது போன்ற ஒரு தருணம் இனி ஒருபோதும் அமையப்போவதில்லை.”

சாம்பன் அபிமன்யூவை திரும்பி நோக்கி “ஆம், அவன் சொல்வதே சரியானதென்று தோன்றுகிறது. என் உடன்பிறந்தாரில் நுண்புலன் திகைந்தவன் அவனே. எனது தூதர்களை வஜ்ரநாபரிடம் சம்பரரிடமும் பாணரிடமும் அனுப்பியிருக்கிறேன். இங்கு நான் முடிசூடினால் இந்நகரை ஆயிரம் ஆண்டு எதிரிகளிடமிருந்து காக்கும் பெரும்படையை எனக்கு அவர்கள் அளிக்க முடியும். இந்நகரிலிருந்து யாதவக்குடிகள் ஒழிந்து சென்றால் அவ்விடத்தை அசுரக்குடிகளைக்கொண்டு நிரப்பவும் என்னால் இயலும்” என்றான்.

இரு கைகளையும் விரித்து “தந்தை விரும்பாவிடிலும் இந்நகரைக் கைப்பற்றி ஆளும் இடத்தில் இன்று இருந்துகொண்டிருக்கிறேன். எதன்பொருட்டு நான் என் முடியுரிமையை விடவேண்டும்?” என்றான். சுருதன் உரத்த குரலில் “இப்போது தெரிகிறதல்லவா, இவன் ஏன் இங்கு வந்திருக்கிறான் என்று? இத்தருணத்தில் நாம் நமது கோரிக்கையை முன்வைக்கக்கூடாது என்பதற்காக மட்டுமே. ஏனெனில் அதை மறுக்கும் நிலையில் தந்தை இல்லை. இன்று நம் மீதுதான் அவர் அமர்ந்திருக்கிறார். ஆகவே நீங்கள் முடியுரிமை கோரக்கூடாதென்று வலியுறுத்தும்பொருட்டு இவனை அனுப்பியிருக்கிறார்கள் அவருடைய யாதவத் தோழர்கள்” என்றான்.

சாம்பன் “இதற்குமேல் நான் ஒன்றும் செய்வதற்கில்லை, இளையோனே. உன்னையே எந்தையிடமும் அவரது துணைவரிடமும் தூதாக அனுப்புகிறேன். இன்றே நான் அவையில் பட்டத்து இளவரசனாக அரசருக்கு வலம் அமர்ந்தாக வேண்டும். அவையில் என்னை முடிக்குரியவனாக அவர் அறிவித்தாக வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்படுமென்ற ஒரு சொல் அவர் நாவிலிருந்து என் இளையோன் செவிப்பட எழுந்த பின்னரே நான் அவை புகுவேன். பிறிதொன்றும் சொல்வதற்கில்லை” என்றான்.

அபிமன்யூ எழுந்து தலைவணங்கி “இதை மாதுலரிடமும் அமைச்சரிடமும் உரைக்கிறேன்” என்றான். “என் சொற்களை மீண்டும் எண்ணி நோக்குங்கள். அவை அனைத்தும் இனிதென நிறைவுற வேண்டுமென விழையும் ஒருவனால் சொல்லப்பட்டவை மட்டுமே எனக் கொள்ளுங்கள்” என்றான். பிரலம்பனிடம் “செல்வோம்” என்று சொல்லி வாயில் நோக்கி திரும்பினான். சுருதன் நகைப்புடன் “சொல்கையில் இதையும் சேர்த்து சொல். இந்நகர் இப்போதே எங்களால்தான் ஆளப்படுகிறது, அந்தத் தோள்தளர்ந்த யாதவ முதியவரால் அல்ல. நாங்கள் கோருவது முறைப்படி முடியுரிமையை மட்டுமே” என்றான்.

அபிமன்யூ திரும்பிப்பார்த்து புன்னகைத்து “ஆணவம்போல தன்னைத்தானே இழிவுபடுத்திக்கொள்ளும் பிறிதொன்றில்லை, மூத்தவர்களே. இந்நகரை என்ன, பாரதவர்ஷத்தையே இன்று ஆண்டுகொண்டிருப்பவர் அவர் மட்டுமே. சுட்டு விரலசைவால் இந்நகரைத் தூக்கி இடம் மாற்றி வைக்கும் ஆற்றல் கொண்டவர். ஐயமிருக்கிறதா உங்கள் எவருக்கேனும்? இன்று அவர் ஒரு சொல்லுரைப்பார் என்றால் என் வலக்கை வில்லால் இந்நகரை வென்று அவர் காலடியில் வைக்கும் திறன்கொண்ட அடியவன் நான். ஓர் அம்பெடுத்து மறுஅம்பெடுக்கும் தருணம் வரை என் முன் களம் நிற்கும் ஆற்றல் கொண்டவர் எவரேனும் இங்குள்ளீர்களா?” என்றான்.

அவர்கள் திகைத்து நிற்க சாம்பன் எழுந்தான். அபிமன்யூ “சொல்லுங்கள், எவர் இருக்கிறீர்கள் இங்கே? சாம்பரே, உங்கள் தலைகொய்து கொண்டுசெல்கிறேன். உங்கள் தம்பியரோ படைப்பெருக்கோ என்னை தடுக்குமா? ஆம் என்று சொல்லுங்கள், அக்கணமே அம்பெடுக்கிறேன்” என்றான். சாம்பனின் கைகள் தளர்ந்து கிடக்க உதடுகள் மட்டும் அசைந்தன. அபிமன்யூ ஏளனத்துடன் புன்னகைத்து “உங்கள் கைவிரல்களிடம் அக்கேள்வியை கேளுங்கள். அவை அஞ்சி நடுங்குவதைக் காண்பீர்கள்” என்றபின் கதவைத் திறந்து வெளியே சென்றான்.

முந்தைய கட்டுரைமையநிலப் பயணம் – 8
அடுத்த கட்டுரைஅயினிப்புளிக்கறி -கடிதங்கள்