[கே.கே.முகம்மது இடிபாடுகளைப் பார்வையிடுகிறார், நன்றி ஃப்ரண்ட் லைன்]
படேஸ்வர் ஆலயத்தொகையினூடாக நடப்பது ஓர் சென்றகாலத்திற்கும் நிகழ்காலத்திற்கும்இடையேயான உறவின் ஒரு குறியீட்டின்மேல் உலவுவதுதான். இந்த ஆலயத்தொகை கிபி எட்டாம்நூற்றாண்டு வாக்கில் கட்டத்தொடங்கப்பட்டு நாநூறாண்டுக்காலம் தொடர்ந்து கட்டப்பட்டது.
பின்னர் 12 ஆம் நூற்றாண்டில் சுல்தானியப் படையெடுப்பால் நிறுத்தப்பட்டது. அவர்கள் மூலக்கருவறைகளை இடித்தமையால் பின்னர் வழிபாட்டில் இருக்கவில்லை. கூர்ஜரப்பிரதிகார அரசும் சிதறிஆப்பரவியது. பதினெட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் முழுமையாகவே சிதறி கற்பாளங்களாக ஆகியது.
கே.கே.முகம்மது அவர்களின் தலைமையில் நடந்த மறுசீரமைப்புப் பணிகள் எஸ்.கே.ராதோர், கே.எம்.சக்ஸேனா,கே.கே.சர்மா, ஓ.பி.எஸ்.எஸ்.நரவாரியா, ஹுகும்சந்த் ஆரியா ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டன. கற்கள் ஒவ்வொன்றாக அடையாளம் காணப்பட்டு அடுக்கப்பட்டு இன்றிருக்கும் வடிவில் படேஸ்வர் ஆலயம் மீட்டு எடுக்கப்பட்டது. பணிகள் இன்னமும் நடந்துகொண்டிருக்கின்றன. முடிவதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆகும்.
இந்து சமகால இந்தியப் பண்பாட்டின் ஒரு குறியீடு. நாம் உடைவுகளில் இருந்து மீண்டு எழுகிறோம். கல்கல்லாக நம் பண்பாட்டை மீட்டுக் கட்டுகிறோம். இந்தப் பண்பாடு இந்துக்களுக்கு உரியது அல்ல, கே.கே.முகம்மது அவர்களின் சொற்களில் சொல்லப்போனால் இந்தியர் அனைவருக்கும் உரியது.
இந்த ஆலயச் சீரமைப்பு குறித்து முகமது விரிவாகவே எழுதியிருக்கிறார். இங்கே ஆலயத்தை பார்வையிட 2000 த்தில் அவர்கள் வந்தபோது கொள்ளையர்களால் தாக்கப்படக்கூடும் என்று எச்சரித்து துரத்திவிடப்பட்டிருக்கிறார்கள்.
ஒருமுறை பணிகளை வேடிக்கை பார்க்கவந்த ஒருவர் சுருட்டு பிடித்துக்கொண்டிருப்பதைக் கண்டு முகம்மது அவரை புனிதமான ஆலயத்தில் புகைபிடிப்பதற்காகக் கண்டித்தார். அருகே நின்ற ஒருவர் சொன்னார், அவர்தான் புகழ்பெற்ற கொள்ளையனாகிய நிர்பய் சிங் குஜ்ஜார் என்று. பதறிப்போய் அவரிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்தார் முகமது.
படேஸ்வர் ஆலயச்சிற்பங்கள் பெரும்பாலானவை உடைந்தவை. ஆனாலும் ஆர்வமூட்டும் பலவற்றைக் காணமுடிந்தது. பூதனையிடம் முலையுண்ணும் கண்ணன். போரிலிருந்து திரும்பி வரும் கணவனை கைக்குழந்தையுடன் வரவேற்கும் மனைவி. ஒரு சூரியன் சிலையின் காலடிகள் மட்டும் எஞ்சியிருந்தன. அதுவே ஓரு நவீனச்சிற்பம் என்று தோன்றியது.
ஆலயவளாகத்திற்குள் நிறைய நெல்லிமரங்கள் நின்றன. அவற்றில் இருமரங்கள் காய்த்துக் குலுங்கின. எனக்கு மிகப்பிடித்தமான சுவை புளிப்பு. ஆகவே பிடித்தமான காய் நெல்லிக்காய். எனக்காக கே.பி.வினோத் மேலேறி நெல்லிக்காய்களை பறித்துத் தந்தார். அன்றுமுழுக்க நெல்லிக்காய்களை தின்றுகொண்டிருந்தேன். மறுநாளும் தின்பதற்கு நெல்லிக்காய்கள் இருந்தன.
இந்தச்செம்மண் நிறம் இப்பகுதியின் மண்ணின் நிறம். வண்டல் மண் பல்லாயிரமாண்டுகளாக அழுந்தி உருவான பாறை இது. இதுவே இக்கோயில்களின் அழகு எனத் தோன்றியது. பூமியிலிருந்து தானாகவே புடைத்து எழுந்தவைபோலத் தோன்றின. சிதல்புற்றுக்களைப்போல என்று நினைத்ததுமே அப்படித் தோன்ற ஆரம்பித்தது இவ்வளாகம்.
பூமிஜ என்னும் ஆலயவடிவம் இப்பகுதியில் உண்டு. அடித்தளம் என தனியாக இல்லாமல் நேராகவே மண்ணிலிருந்து எழுவது. அறுகோண, ஐங்கோண வடிவில் கீழ்ப்பகுதியைக் கொண்டிருப்பது. மண்ணில்முளைத்தது என்று பொருள். இவ்வாலயங்கள் பூமிஜக் கலை என நினைத்துக்கொண்டேன்.
படேஸ்வர் ஆலயத்திலிருந்து மொரேனாவில் உள்ள சௌசாத் யோகினி ஆலயத்தை நோக்கி கிளம்பினோம். செல்வதற்கு முன்னால் சம்பல் பள்ளத்தாக்கை பார்த்துவிடுவொம் என்று முடிவு செய்து அதை நோக்கிச் சென்றோம். சம்பல் பள்ளத்தாக்கு என்னும் சொல் உருவாக்கிய கற்பனைகள் திரைப்படக் காட்சிகளாக விரிந்தன. ஏனென்றால் அவை எல்லாமே சினிமாக்களினூடாக அறியப்பட்டிருக்கின்றன.
அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது ஷோலே. அதன்பின் மதர் இந்தியா. ஆனால் மேரா காவ்ன் மேரா தேஷ், கங்கா கி சௌகந்த், பான்சிங் தோமர், பாண்டிட் குயின் போன்ற பல படங்கள் உள்ளன. நமக்கு மதுரை என்னும் வன்முறை களம் போல, தெலுங்குக்கு ராயலசீமா போல இந்திப்படங்களுக்கு சம்பல். புழுதியும் புகையும் ரத்தமும் கலந்த மண்.
சென்ற சில ஆண்டுகளில் சம்பல் பள்ளத்தாக்கு பெருமளவு மாறிவிட்டிருக்கிறது. கற்களை உடைத்து விற்கும் முதலாளிகள் ஈட்டும் செல்வத்தின் பெரும்பகுதி விவசாய முதலீடாக திரும்பி வருகிறது ஆகவே மண் அள்ளும் எந்திரங்களலும் எந்திரக்கலப்பைகளாலும் சம்பல் பகுதியின் மணல் மேடுகள் இடித்து நிரப்பப்பட்டு வயல்களாக்கப்படுகின்றன.
இன்னும் பத்தாண்டுகளில் புகழ்பெற்ற சம்பல் பள்ளத்தாக்கின் ஓடை வலை நில அமைப்பு முற்றிலும் இல்லாமலாகிவிடக்கூடும். வயல்களுக்கு நடுவே ஆங்காங்கே சம்பலின் புகழ்பெற்ற நிலப்பரப்பு வந்து வந்து மறைந்துகொண்டிருந்தது. எங்கும் சொட்டுநீர் பாசன வயல்கள். நீர் இறைக்கும் இயந்திரங்கள். அறுவடைசெய்யப்பட்டு குவிக்கப்பட்ட வைக்கோல்குவைகள்.
சம்பல் தேவி அல்லது சம்பாதேவி என்று அழைக்கப்படும் ஆலயம் சம்பல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஒருகாலத்தில் சம்பலைக்கடந்து உத்திரப்பிரதேசத்திற்கு செல்லும் அனைத்து லாரிகளும் இந்த ஆலயத்தின் முன்னால் நிண்று தேவிக்கு படையலிட்டு பூசை செய்து வந்தனர். அதன் பின் பெரும் கூட்டமாக உள்ளே செல்வார்கள் என்றார்கள்.
மாட்டு வண்டிகளாக உத்தரப்பிரதேசத்திற்கும் குஜராத்துக்கும் சென்ற காலத்திலேயே இவ்வாலயம் புகழ் பெற்றிருந்தது. இன்றும் லாரிகள் அங்கே நின்று வழிபட்டுச் செல்கின்றன தேவிக்கு இங்கே பால்கோவா நைவேத்தியமாக செய்யப்படுகிறது. தொலைவிலிருந்து பார்த்தபோது நவீன ரொட்டி என்று தோன்றியது அருகே சென்றபிறகுதான் அது பால்கோவா என்று கண்டுபிடிக்க முடிந்தது பால்கோவா சுவையாக இருந்தது. ஆனால் எனக்குப்பொதுவாகவே பாலில் செய்யப்பட்ட இனிப்புகள் அவ்வளவாக உவப்ப்தில்லை.
காரில் சென்று ஒரு மசூதி அருகே அதை நிறுத்திவிட்டு நடந்து சம்பல் பள்ளத்தாக்க்குக்குள் இறங்கிச் சென்றோம். கால் புதையும் மென்மையான புழுதி. உடைமுள் போன்ற பாலைவனச்செடி வளர்ந்து நின்ற வரண்ட காடு. நெருஞ்சி போன்ற பலவகையான சிறிய முட்செடிகள். அவை அனைத்தும் காய்ந்து நின்றிருந்தன. எங்கு கால்வைத்தாலும் உலர்ந்த முள்.
இத்தனைக்கும் சில நாட்களுக்கு முன்பு தான் மழை பெய்திருந்தது. பல இடங்களில் மழையின் ஈரம் புழுதிமண்ணில் பொருக்காகவே எஞ்சியிருந்தது. கால் படும்போது அது உடைந்து பொருபொருவென்று அமுங்கியது. நூறு அடி செல்வதற்குள்ளாகவே வழி தடுமாறவைக்கும் நிலப்பகுதி. செந்தவிட்டு நிறம். குன்றுகள் என்றால் கூம்புவடிவமானவை அல்ல. இடிந்து சரிந்த ஆலயங்கள் போலவோ குட்டிச்சுவர்கள் போலவோ தோற்றமளிப்பவை. விதவிதமாக நீர் அரித்த தடங்கள் கொண்டவை.
மணற்குன்று ஒன்றின் மேல் நின்று அப்பகுதியை சுற்றிப்பார்த்தோம் சாதாரணமாகப்பார்க்கையில் அந்த ஊடுவழிப்பின்னல் ஒரு கவர்ச்சியான தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் அதன் நீண்ட வரலாற்றை, அதிலிருக்கும் குருதி மணத்தை அறிந்தபின் இங்கிருப்பது ஒரு பதற்றத்தை அளிக்கும் அனுபவம்.
உண்மையில் சம்பல் எந்தத் திரைப்படத்திலும் இதுவரை சரியாகக்காட்டப்படவில்லை. பழைய திரைத்தொழில்நுட்பங்களைக் கொண்டு அதைக்காட்டவும் முடியாது. இன்று பறக்கும் காமிராக்களும் மிக உயர்ந்த தூக்கிகளும் வந்த பிறகு மிக எளிதாக இப்பகுதியை திரைக்குள் கொண்டு வர முடியும் .
இந்த மணல் மேடுகளின் நடுவே வளைந்து வளைந்து செல்லும் வழிவலைப் பின்னலூடாக புழுதி பறக்க புரவிகள் கனைத்துக்கொண்டு செல்ல, விரைவுவண்டிகளில் சரமாரியாகச் சுட்டுக்கொண்டு காவலர்கள் பின் தொடர்ந்துவரும் ஒரு உக்கிரமான சண்டைக்காட்சியை நான் என் கற்பனையில் கண்டேன்.
காரிலேறிக்கொண்டு சம்பல் ஆற்றைச் சென்று பார்த்தோம். உயரமான நெடுஞ்சாலையின் பாலத்திற்கு மிக ஆழத்தில் நீலநிறப்பெருக்காகச் சென்றுகொண்டிருந்தது. ஜூன் ஜூலை மழைக்காலத்தில் பெருகி கரைதொட்டுச்செல்லும் என்று தெரிகிறது. இறங்கி அங்கே செல்ல எண்ணினாலும் வழி ஏதும் இல்லை. இப்பகுதியை இன்னும் சில ஆண்டுகளுக்குள் விளைநிலமாக ஆக்கப்போவது இந்த ஆறு
ஜபல்பூரில் உள்ளதைப்போலவே சௌசாத் யோகினியின் ஆலயமொன்று மோரினாவில் உள்ளது. இது ஏகதர்சோ மகாதேவ கோயில் என்று அழைக்கப்படுகிறது சௌசாத் யோகினி ஆலயத்தின் அதே வட்ட வடிவில் அமைந்திருப்பதால் இதற்கு அப்பெயர். இன்று இங்கு 64 துர்க்கைகள் கிடையாது.ஓரிரு கருவறைகளில் சிவலிங்கங்கள் உள்ளன. பெரும்பாலான கருவறைகள் ஒழிந்து கிடக்கின்றன.
ஆனால் அகழ்வாய்வுகள் இப்பகுதியில் பல துர்க்கைச் சிலைகளை கண்டடைந்துள்ளன. துர்க்கைசிலைகள் இருந்திருக்கலாம். உடைந்து சரிந்தபின் இது மறுகட்டமைப்பு செய்யப்பட்டிருக்கலாம். இது பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாயினும் பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் மறுபடியும் கட்டப்பட்டது என கல்வெட்டுகள் சொல்கின்றன
இது துல்லியமான சக்கரவடிவில் அமைந்த ஆலயம். மையக் கருவறையில் சிவலிங்கம்தான். கோயிலநடுவே உள்ள கருவறைக்கு இப்போது கோபுரம் இல்லை. ஆகவே ஒரு பெரிய சக்கரமாக மட்டுமே இது எஞ்சுகிறது. டெல்லி பாராளுமன்றம் இந்த ஆலயத்தின் அமைப்பில் கட்டப்பட்டது என்று சொல்லப்ப்டுகிறது , ஆனால் அதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்கிறார்கள். டெல்லி பாராளுமன்றம் பிரிட்டிஷ் கட்டிடமரபுப்படி கட்டப்பட்டது.
குவாலியரில் இருந்து நாற்பது கிமீ தொலைவில் பாதோலி என்னும் பெரிய ஊரின் அருகே மிதொலி என்னும் சிறு கிராமத்தில் உள்ளது சௌசாத் யோகினி ஆலயம். பத்தாம்நூற்றாண்டில் கச்சியப்பகட்டா என்னும் தேவபால குலத்து மன்னரால் கட்டப்பட்டது. அக்காலத்தில் சூரியனின் திசைமாற்றத்தின் அடிப்படையில் வானியல் மற்றும் சோதிடக்கணக்குகளை போடும்பொருட்டு இது அமைக்கப்பட்டது என்கிறார்கள். ஆனால் இன்று அதற்கு ஆதாரம் ஏதுமில்லை
நூறு அடி உயரமுள்ள குன்றின் உச்சியில் இது அமைந்துள்ளது. நூறு படிகளை ஏறி இதன் மேல் செல்ல வேண்டும். 170 அடி ஆரமுள்ள வட்டவடிவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது 64 கருவறைகள் அதன் முன்னால் வளைந்து செல்லும் மண்டபம் ஒவ்வொரு கருவறை முன்னால் நின்று வழிபடுவதற்குரியது.
ஒவ்வொரு கருவறைக்கும் மேல் 64 சிறு கோபுரங்களும் நடுவே உயர்ந்த கோபுரமும் இருந்தன என அகழ்வுகள் தெரிவிக்கின்றன. அவை பிற்காலத்தில் இடிந்திருக்கலாம். இது குன்றின்மேல் அமைந்திருந்தமையால்தான் பதினெட்டாம்நூற்றாண்டின் பூகம்பங்களைக் கடந்துவந்தது என்று சொல்கிறார்கள்.
நாங்கள் செல்லும் போது நேரு யுவகேந்திராவைச்சேர்ந்த இளைஞர்கள் சிலர் தூய்மைப்பணிகளை மேற்கொண்டுவிட்டு அமர்ந்திருந்தார்கள் அவர்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இந்த ஆலயத்தின் தூய்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வது அவர்களின் வேலை என்று தெரிந்தது.
பொதுவாகவே மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்த தொல்லியல் இடங்கள் அனைத்துமே தூய்மையாகவும் முறையாகவும் பேணப்படுகின்றன என்பதை குறிப்பிட்டாக வேண்டும் இவற்றில் சுற்றுலாப்பயணிக்ள் வருவது மிக மிகக்குறைவு என்பது ஒரு காரணம் .இங்குள்ள அடித்தள ஊழியர்கள் பெரும்பாலும் தங்கள் பணியை நேர்மையாகச் செய்பவர்களாகவும் அரசுப்பணி என்பதனால் பெருமையும் பொறுப்பும் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது இன்னொரு காரணம்.
பிறிதொரு முக்கியமான காரணம் மத்தியபிரதேசம் எங்கும் குடிப்பழக்கம் மிகக்குறைவு என்பது .தமிழகத்தை அங்கிங்கெனாதபடி நிறைத்திருக்கும் குடிப்பழக்கம் இங்கில்லை. குடிப்பவர்கள் இருப்பார்கள், ஆனால் அவர்களது சதவீதம் மிககுறைவென்று தோன்றுகிறது ஏனெனில் மதுக்கடைகளோ பிறவகையான விற்பனை நிலையங்களோ எங்கும் எங்கள் கண்களில் படவே இல்லை. பகலில் குடித்துவிட்டு நிற்கும் எவரையும் இப்பயணத்தில் எங்கும் நாங்கள் பார்க்கவில்லை.
அதேபோல இங்கே அசைவ உணவும் மிகக்குறைவு. கோழிக்கடைகளோ பிறவகையான இறைச்சி விற்கும் கடைகளோ சிறுநகரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே கண்ணில் பட்டன. இதனாலேயே கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு இங்குள்ள இளைஞர்கள், சிறுவர்கள் அனைவரிடமும் உள்ளது. புரதச்சத்துக் குறைபாடு மத்தியப்பிரதேசத்தின் முக்கியமான பிரச்சினை என அவ்வரசு உணர்ந்து சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறது
சம்பல் ஒரு காலத்தில் மிக வளம் மிக்க நிலமாகக்கூட இருந்திருக்கலாம். இல்லையேல் இத்தனை செல்வாக்கு மிக்க அரசுகள் அமைந்து கலைகளைக் காத்திருக்க வாய்ப்பில்லை. காலப்போக்கில் இங்கே போர்களும் கொள்ளைகளும் மிகுந்து மக்களை அழித்தன, அடிமைப்படுத்தின. இன்றுகூட மக்கள் அந்த அழிவிலிருந்து வெளிவரவில்லை.
இப்பகுதியினூடாக சென்றுகொண்டிருக்கையில் தேங்கிய வாழ்க்கையையே காணமுடிகிறது. ஏதேனும் மாற்றம் வந்துள்ளது என்றால் அது தொழில்நுட்பம் வழியாகவே. மற்றபடி சமூகசீர்திருத்தமோ அரசியல் மாற்றங்களோ நிகழவில்லை. செல்பேசி வந்திருக்கிறது. தொலைக்காட்சி உள்ளது. மக்கள் அதனூடாக வெளியுலகை அறிந்துகொண்டிருக்கிறார்கள்
சம்பலின் நிலம் இன்றும் வளம்மிக்கது. இங்கே சட்ட ஒழுங்கை உறுதியாக நிலைநாட்டி, உள்ளூர் குற்றக்குழுக்களை முற்றொழித்து, நிலச்சீர்த்திருத்தத்தையும் ஓரளவு செய்தால் வளர்ச்சி உருவாகக்கூடும். வளர்ச்சி ஏன் என்று சிலர் கேட்கலாம். சத்துக்குறைவால் மெலிந்து தேமல்படிந்து அழுக்குடலுடன் நின்றிருக்கும் குழந்தைகளைப் பார்த்தபின் என்னால் அப்படி எண்ணமுடியவில்லை.
சௌசாத் யோகினி கோயிலிலிருந்து திரும்பும் வழியில் ஒர் ஏரியைப் பார்த்தோம். வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி அதன் கரையில் சென்று அமர்ந்திருந்தோம். செந்நிற எரிவட்டமாக சூரியன் மெல்ல அணைந்துகொண்டிருந்தது. இப்பயணத்தின் முதல் ஆழ்ந்த அமைதியை அங்கிருந்து அறிந்தேன்.
இத்தகைய பயணங்கள் நம்மை கடந்த காலத்திலிருந்து கடந்த காலத்திற்கு தள்ளிச் செல்கின்றன. நிகழ்காலத்திற்கு மீண்டு வருவது எளிதல்ல இங்கு வரும்போது கடந்தகாலத்தை முற்றுதறி இங்கு பொருத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது கனவாக மாறி எங்கோ நிறைகிறது இத்தகைய மோன நிலைகளில் சென்றவையும் நின்றவையும் ஒன்று சேர்ந்து காலம் உருகி ஒற்றைச் சுழிப்பாக மாறிவிடுகிறது ஒரு பயணத்தில் அடையக்கூடிய உச்சநிலையென்பது இதுவே.
அந்திச்சூரியன் உருகி உருகி பொன்னென்றாகி அமிழ்ந்துகொண்டிருந்தது.நாளெல்லாம் கண்ட பொன்னிறத்தின் விண்தோற்றம். மண்ணைப் பொன்னாக்குகிறது ஒளி. பொன் என்பது ஒரு பொருள் அல்ல. வெறும் செல்வம் அல்ல. அது வாங்கும் பொருட்கள் எவையும் அதற்கு நிகர் அல்ல.தோன்றிய நாள்முதல் மானுடன் அதன் மேல் கொண்ட பித்து அது நாணயம் என்பதனால் அல்ல.
பொன் பருப்பொருளில் விரிந்த தழல். உலோகங்களில் அது மலர். பொழுதுகளில் அது காலையும் அந்தியும். ஆகவேதான் அனைத்தையும் பொன்னாக்கலாகுமா என்று சித்தர்கள் ரசம்கூட்டினர். அனைத்தும் பொன்னாகிக்கொண்டிருக்கின்றன என்று அவர்கள் சூழக் காணவும் செய்தனர். ஆகவேதான் அவன் பொன்னார்மேனியன். பொன்னென்றாகி அவன் உருக்காட்டி அணைகின்றன அந்தியில் அனைத்துமே.