கடைசி முகம் -கடிதங்கள்

yakshi2

கடைசி முகம் – சிறுகதை

அன்புள்ள ஜெ

கடைசி முகம் சிறுகதை படித்ததும் என்னுள் எழுந்த எண்ணங்களை எழுதியிருக்கிறேன்..

பெண்களால் சூழப்பட்டிருக்கிறது இந்த வாழ்வு. தாயென்றும் தமக்கையென்றும் மனைவியென்றும் மகளென்றும் பேத்தியென்றும் பெருகி நிறைகிறார்கள். ஒருத்தி கொடுத்து நிறையாத அன்பை மற்றவர் வந்து நிறைக்கிறார்கள். எந்தக்குறையுமின்றி பெருமழையென பெண்மை நம்மைச் சுற்றிப் பொழிந்துகொண்டே இருக்கிறது. ஆனாலும் ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதே இல்லை. நல்லூழ் கொண்டவன் மட்டுமே பெண்மையை அறிகிறான். அதன் பேருருவை உணர்கிறான். அற்றவன் வெறும் ஆணாக எஞ்சுகிறான்.

யட்சிகளுக்கும் பகவதிகளுக்கும் மெல்லிய வித்தியாசமொன்று இருப்பதாக உணர்கிறேன். நீங்கள் சொல்வதைப்போல கருப்பசாமிகள் அருள்மிகு கருப்பசாமிகளாவதைப்போன்றது அது. மிகையுணர்வு வெளிப்படும் கண் கொண்டவள் யட்சியென்றால் அதை உள்ளடக்கிய மோன நிலைக் கண்கள் பகவதிக்கு. பெண்களின் உரத்த சிரிப்பொலி கேட்கும் வீடுகள் பேறு பெற்றவை. அங்கே வளரும் ஆண் குழந்தைகள் கடவுளின் ஆசி பெற்றவை. தனிப்பட்ட முறையில் நுண்ணுணர்வு கொண்ட ஒரு ஆணால் பெண்மையைக் கடந்து செல்லவே முடியாது, அது மரணத்தைக்கொடுப்பதாயினும் கூட. ஒரு ஆணைப் பொறுத்தவரையில் அவன் காணும் முதல் முகமும் கடைசி முகமும் பெண்மையே. விஷ்ணுவுக்கு யட்சி காட்டிய முகங்களில் கடைசி முகம் யாருடயதாயினும் அது உயிர் கொடுக்கத்தகுந்த முகமாகவே இருக்கக்கூடும்.

மாலையப்பன் சரவணன்

***

அன்புள்ள ஜெ

கடைசிமுகம் கதையை முன்னரே வாசித்திருக்கிறேன். இன்று மீண்டும் வாசித்தேன். இப்போதுதான் அது எழுப்பும் அலைக்கழிப்புதெரிகிறது. அந்த முகம் எது என கதை சொல்லவில்லை. சொல்ல முடியாது. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று. ஆனால் என்ன் என்று எண்ணும்போதுதான் இந்தக்கதை நம் உள்ளத்தில் விரிவுகொள்கிறது. அதைவிட ஒவ்வொன்றும் எத்தனை அருகருகே ஒன்றுடன் ஒன்ரு கலந்ததுபோல உள்ளது என்பது இன்னொரு பெரும் விந்தை

காசிநாதன்

***

முந்தைய கட்டுரைஆழமற்ற நதி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைநாராயண குரு எனும் இயக்கம் -1