அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி திருவண்ணாமலைக்கு பவா சாரை பார்க்கச் சென்ற எனக்கு, அவர் தங்களிடம் போனில்பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். நான்தான், அதிக சந்தோசத்தில் தங்களிடம் சரிவர பே முடியவில்லை. தங்கள் நண்பர் அலெக்ஸ் மரணம் தந்த சோகத்தில் இருந்தீர்கள், நான் தங்களிடம் பேசும் சந்தோசத்தில், நண்பரின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபம் சொன்னேனா என்று கூ ட தெரியவில்லை. அப்படி கேட்காமல் விட்டிருந்தால் மன்னிக்கவும். அதற்கு அப்புறம் அலெக்ஸ் மற்றும் உங்களுக்கான நட்பு, அவர் பற்றிய தங்களது குறிப்புகளை படித்து அவரின் சிறப்புகளை அறிந்துகொண்டேன்.
நான் பவா சாரை பார்க்கச்சென்றது இரண்டு குறிக்கோள்களுடன். ஒன்று அவரையும் அவர் குடும்பத்தாரையும் பார்ப்பது. இன்னொன்று தங்களின் அறம் தொகுப்பை பதிப்பகத்தாரிடமே எனக்கும், நான் பரிசளிப்பதற்காக நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாங்குவது. பதினைந்து பிரதிகள் வாங்கினேன், ஐந்து புத்தகங்கள், இதுவரை சேருவோரை சேர்ந்துவிட்டது. மீதம்இருக்கும் ஒன்பது புத்தகங்களை, அமெரிக்காவின் வெவ்வேறு நகரங்களில் இருக்கும் நண்பர்களை பார்க்கும் சமயம் கொடுக்கவுள்ளேன்.
புத்தகம் கொடுத்தாலும், அதை படிப்பார்களா என்ற அச்சம் ஒரு புறம். அறம்’ கதைகள் அவர்களை படிக்கவைத்துவிடும் என்ற நம்பிக்கை ஒரு புறம். ஆங்கில நாவல்களை மட்டும் விரும்பி படிக்கும், எங்கள் வீட்டு இரு குழந்தைகள், என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்பதில் மிக ஆர்வமாக இருந்தேன். எனது சகலையின் மகள், புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிட்டு, சோற்றுக்கணக்கையும், யானை டாக்டரையும், வணங்கான் கதையையும் மூன்று மணி நேரம் சிலாகித்துப் பேசினாள். எனது அண்ணன் மகன், இரண்டாம் வருடம் பொறியியல் படிப்பவன், இரண்டு தினங்களுக்கு முன்னர் போனில் பேசிய சமயம், தீபாவளி விடுமுறையாதலால் முக்கால்வாசி படித்துவிட்டதாகவும், இரவில் முடித்துவிடுவேன் என்றும் சொன்னான். தங்களின் வீர்யமான எழுத்தே, வாசிப்பார்களா என்ற எனது அச்சத்தை வென்றது என்பதற்கு இந்த இரு குழுந்தைகளின் அதிவேகவாசிப்பே சான்றுகள்.
வம்சி பதிப்பகத்தில் ‘அறம்’ அல்லாமல், தங்களின் ‘வெண்கடலும்’ வாங்கினேன். தங்களின் வலைதளத்தில், இந்த தொகுப்புகளில் உள்ள கதைகள் யாவற்றையும் ஒன்றுக்கு மூன்றுமுறை படித்திருக்கிறேன். அப்படிப் படிக்கும்பொழுது ‘வெண்கடல்’ தொகுப்பில் உள்ள கதைகளைப் பற்றி பேஸ்புக்கிலும், சொல்புதிது நண்பர்களுக்கும் எழுதிய எனது குறிப்புகள், தங்களின் பார்வைக்கு.
‘நிலம்’ கதையில், இந்தமுறையாவது குழந்தை வயிற்றில் நிற்காதா என்று ஏங்கும் பெண்ணை வலிக்க வலிக்க பெண்ணின் வேதனையை சித்தரித்திருப்பார்.
“நாட்கள் தாண்டத்தாண்ட நம்பிக்கை சோளக்கதிர் கனப்பதுபோல வளரும். பின்பு ஒருநாள்வாடிய செம்பருத்தி முற்றமெல்லாம் உதிர்ந்துகிடக்கும்”. அதை படித்து முடித்த மறுநாள் காலையில், இதுதான் ஞாபகம் வந்தது.பிள்ளை இல்லாட்டாலும், வெட்டுக் குத்தில் சொத்து சேர்த்து சாதிப்பதாய் நினைக்கும் கணவன், அவர்களுக்குள் இருக்கும் பாசம், காதல். அந்த இம்சைகளிலிருந்து தப்பிக்கும் முன், இன்னொரு இரவு வந்துவிட்டது. ‘கைதிகள்’ படித்தேன். என்ன பொழப்புடா சாமி என்ற அங்கலாய்ப்பில் வேலை பார்க்கும் காவலாளிகள் (கைதிகள் ?). சப்பாத்திக்குள் புளிய இலைகளை வைத்துச் சாப்பிடும் இரவுவாழ்க்கை, அவர்கள் பிடுங்கிப்போட்ட முயலின் குடலை உண்ணும் பாம்பு, உயிருடன் அந்த அப்பாவியை.. படபடப்புடன் நானும் அந்தகுருவியும். “நல்ல கதை படித்தேனய்யா” சாமி ஜெயமோகன் என்று நிம்மதியுடன் தூங்கப்போனேன். விடியலில் முழிப்பு வந்ததும் ஞாபகம் வந்தது அந்தக் குருவியும், தண்ணீர் கொடுத்த காவலாளியைப் பார்த்து நன்றிப் புன்னகை சிந்திய அவனது வீங்கியமுகமும்.
மூன்றாம்நாள் இரவு படுப்பதற்குமுன் தீபம் படித்தேன். தீபம் ஏந்திய அவனது மாமன் மகளும், தொடாமல் காதலித்து மயங்கும் அவனும். நால்லதொரு குறும்படம் பார்த்த நிறைவு.
வெண்கடல்:
நெஞ்சுச்சளிதரும் வேதனை மட்டும் அறிந்த செல்லன் இனம் நான். காளியின் அடிவயிற்றிலிருந்து சுண்ணாம்பு கரைசலை ஊற்றி அட்டைகளை பிரித்தெடுக்கும்பொழுதே அதன் வைத்தியம் புரிந்தது. ஆனால் அட்டைகள் குழந்தைகள் ஆன குறியீடு தெரிந்தவுடன், நெஞ்சுச்சளி வலியையும் மீறிய வெண்கடல் கொடுத்த வலியில் அடுத்த கதைக்குள் செல்வதற்கு திண்டாட்டமாக இருந்தது.
குருதி: இரண்டு தலைகளை வெட்டி தனது வாரிசுகளுக்காக நிலத்தை பாதுகாத்தாலும், தனிக் குடிசையில் வாழ நேரிடும் வாழ்க்கையின் நிதர்சனம். அதை ஏற்றுக்கொள்ளும் சேத்துக்காட்டாரின் பக்குவம். சுடலையுடன் நானும் அவரது ரட்சகன் ஆனேன்.
அன்புடன்,
வ சௌந்தரராஜன்
ஆஸ்டின்
***
அன்புள்ள சௌந்தர ராஜன் அவர்களுக்கு
தங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி. அந்த மனநிலைக்கு அப்பேச்சு இதமாகவே இருந்தது
பொதுவாக சிறுவர்களுக்கு நூல்களை கட்டாயப்படுத்தி அளிக்கலாம். வாசிக்க வைக்கலாம். அவர்கள் எப்பக்கம் திறந்துகொள்வார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் முதிர்ந்தவர்கள் ஓரளவு ஆர்வம் காட்டவில்லை என்றால் அவர்களை விட்டுவிடுவதே நல்லது. அவர்களால் எந்தக்கலைக்குள்ளும் நுழைய முடியாது. அவர்கள் செய்யக்கூடும் பணிகள் வேறு.
ஜெ
***