மையநிலப் பயணம் – 7

ஓர் ஊரிலிருந்து விட்டுச்செல்வதென்பது தனிமையும் துயரும் தரும் அனுபவம். ஆனால் இத்தகைய பயணங்களில் அப்படி அல்ல. இது இன்னொரு ஊருக்கு, இன்னொரு வரலாற்றுக்கு. ஆகவே ஒரே ஊரில் ஒரே வரலாற்றுச்சூழலில் திளைத்துக்கொண்டிருப்பதான உணர்வே எழுகிறது. பயணநாட்கள் முழுக்க ஒரே கனவில் நீடித்திருப்பதுதான் முதன்மையான பரவசம்.

உண்மையில் கிளம்பி சிலநாட்களுக்குப்பின்னர்தான் அந்த மனநிலை வரும். ஊர் மறந்துபோய்விடும். இருக்குமிடம் நிலைகொள்வதுமில்லை. காற்றில் பறந்துகொண்டிருக்கும் இறகு போல உணர்வோம். அதற்கு இன்றியமையாதது ஊருடனுள்ள தொடர்புகளை முடிந்தவரை குறைத்துக்கொண்டு பயணம் செய்தல். தொழிலையும் குடும்பத்தையும் முடிந்ந்தவரை துண்டித்துக்கொள்ளல். சபரிமலைக்கு மாலைபோடும்போது பிரம்மசரியம் கடைப்பிடிப்பதுபோன்றதுதான் இது. அந்த இடைவேளை மிகமிக உயிர்த்துடிப்பான மறுதொடக்கமாகவும் அமைவதைக் காணலாம்

ஜபல்பூரிலிருந்து குவாலியர் செல்லும் வழியில் திகம்கர் என்னும் ஊரில் இரவு தங்கினோம். திகம்கர் மாவட்டத்தின் தலைநகர் இது. உண்மையில் இதுவும் ஒரு முக்கியமான வரலாற்றுநகர். தெஹ்ரி என்னும் பெயரிலிருந்து இந்தப்பெயர் வந்தது என்கிறார்கள். உள்ளூரின் சிவந்த கற்களால் கட்டப்பட்ட, பூச்சில்லாத சுவர்கள் கொண்ட கோட்டையும் கட்டிடங்களும் வந்துகொண்டே இருந்தன.

பெரும்பாலான கட்டிடங்கள் பாழடைந்தவை. ஆனால் அவற்றில் மக்கள் குடியிருந்தனர். கணிசமானவர்கள் முஸ்லீம்கள் என காணமுடிந்தது. இடிபாடுகளை இல்லமாகக் கொண்டவர்களின் உளநிலை என்னவாக இருக்கும்? இந்த வரலாற்றுத்தலங்களில் நாம் அடையும் உள எழுச்சி அவர்களிடமிருக்குமா? குமரிமாவட்டத்தில் திப்றமலை, திற்பரப்பு  போன்ற கோயில்நகரங்களில் வாழ்பவர்கள் முடிந்தவரை ஊரிலிருந்து தப்பிச்செல்லவே விழைகிறார்கள் என்பதை என் உறவினர்களிடமிருந்து கவனித்திருக்கிறேன்

சுவாரசியமான ஓரு விஷயம் உண்டு. பழங்காலத்தில் வரலாறு ஓங்கி நின்றிருந்தபோது கோட்டைகளுக்குள் செல்வந்தர்களும் அதிகாரமுள்ளவர்களும் வாழ்ந்திருப்பார்கள். கோட்டைக்கு வெளியே ஏழைகள், புறனடையர் வாழ்வர். காலம் செல்கையில் கோட்டைக்குள் இடிபாடுகளும் பழையகட்டிடங்களும் இடுங்கிய தெருக்களும் எஞ்சும். கோட்டைக்கு வெளியே புதியநாகரீகம் எழும். கடைகள், விடுதிகள், பெரிய சாலைகள்

திகம்கரில் நாங்கள் தங்கிய விடுதி அவ்வாறு கோட்டைக்கு வெளியேதான் இருந்தது. விடுதிக்கு முன்னால் பெரிய கோட்டை. அது செங்கற்களால் கட்டப்பட்டது என்று தோன்றும். காலையில் எழுந்து நானும் வினோதும் டீ குடிக்கச் சென்றோம். ஒரு மசூதி அப்பால் ஓர் ஆலயம். அனைத்தும் சிவந்தகற்களால் ஆனவை. டீக்கடையில் முஸ்லீம்கள் டீ குடித்துக்கொண்டிருந்தனர். தொழுகை முடிந்து வந்தவர்கள். நீளமேலாடை தலையில் தொப்பி. ஒருவர் பாரதிய ஜனதா என்று சொன்னபோதுதான் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது

எங்கும் சாக்கடை. இந்தியநகரங்களின் முக்கியமான பிரச்சினையே சாக்கடைதான். நெருக்கமான குடியிருப்புகளில் சாக்கடையை என்னசெய்வதென்றே தெரியாமல் தெருவிலேயே ஓடவிட்டிருப்பார்கள். அதை எப்படி வடியச்செய்வது என எவருமே இதுவரை எண்ணிப்பார்த்ததில்லை. சாதாரணமான சிமிண்ட் குழாய்களில் உடலெங்கும் துளைகள் இட்டு புதைத்து அவற்றை இணைத்து பெரிய குழாய்களுடன் இணைத்து நகருக்கு வெளியே கொண்டுசென்று தூய்மைப்படுத்தி சோலைகளை உருவாக்கமுடியும் என நிபுணர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அதில் கமிஷன் கிடைக்காதது வரை எவரும் நடைமுறைப்படுத்தப்போவதில்லை.

அருகிலேயே ஓர்ச்சா என்னும் புராதனமான நகரம் உள்ளது. அது 1501ல் புண்டேல வம்சத்து அரசர் ருத்ரப்பிரதாப் சிங்கால் உருவாக்கப்பட்டது. அது புண்டேல்கண்ட் என அழைக்கப்பட்ட இப்பகுதியின் தலைநகர். 1780 ல் தலைநகரம் ஓர்ச்சாவிலிருந்து திகம்கருக்கு மாற்றப்பட்டது. அதன்பின்னரே இன்றிருக்கும் கோட்டை கட்டப்பட்டது. திகம்கருக்குள் ருத்ரப்பிரதாப் சிங்கால் கட்டப்பட்ட பெரிய அரண்மனை உள்ளது என்று தெரிந்தது. அதைப் பார்க்கும் திட்டம் எங்களிடமிருக்கவில்லை.

காலையிலேயே கிளம்பி மட்கேரா சூரியர்கோயிலைப் பாக்கச் சென்றோம். வழிதேடி சிற்றூர்களுக்குள் புகுந்துபுறப்பட்டு அங்கே சென்றுசேரும்போது காலைவெயில் நன்றாகவே சுடத்தொடங்கியிருந்தது. செந்நிறக் கற்களால் ஆன அடித்தளம் மீது தனியாக அமைந்த நாகரபாணி சோளக்கொண்டை பாணி கோபுரம் கொண்ட கோயில். சுவர்களில் நுட்பமான, மழுங்கிய சிற்பங்கள். கிட்டத்தட்ட கைவிடப்பட்ட கோயில். சுற்றுச்சுவர்களில் எட்டு திசைமூர்த்திகளின் புடைப்புச்சிற்பங்கள். முகப்புவளைவில் சூரியனின் சாரதியாகிய அருணனின் சிலை. கார்த்திகேயன், துர்க்கை சிலைகளும் புடைப்பாக இருந்தன

இங்கிருந்த சிலைகள் பல அருகிலும் கருவறைக்குள்ளும் உடைந்ததோற்றத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிக அரிய, அடையாளம் காணப்படாத சிலைகள் பல உள்ளன. கோபுரத்திலுள்ள சிம்மமுகத் தேவன், அக்‌ஷமணிமாலை ஏந்திய தெய்வம் போன்றவை எவை என்பதைப்பற்றி ஆய்வாளர்களிடையே விவாதம் நீடிக்கிறது.

உள்ளே கருவறையில் இருக்கும் சூரியன் சிலை உடைந்திருந்தது. ஒரு கிராமத்துப் பெண்மணி குடத்தில் நீருடன் வந்து தெய்வங்கள் அனைத்தின்மேலும் நீரூற்றி கழுவி மலர் வைத்து வணங்கிச் சென்றாள். மிக ஏழையென ஆடைகள் சொல்லின. எந்தப்பூசனைமுறைகளும் அவள் அறிந்திருக்கவில்லை. நீரூற்றி மலர்வைத்து விழுந்து வணங்கி எழுந்து சென்றாள். ஒரு காவல்தெய்வத்தின் முன்னால் மட்டும் மும்முறை கைகளைத் தட்டினாள்.

ஒன்பதாம் நூற்றாண்டில் கூர்ஜரப் பிரதிகார ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது இந்த ஆலயம்.  இப்பகுதியில் கூர்ஜர ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட பல படிக்கிணறுகளும் சிற்றாலயங்களும் உள்ளன. இக்கிராமத்திலேயே வித்யாதேவியின் சிறிய ஆலயம் ஒன்றும் உள்ளது. நாங்கள் சென்றபோது சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். கிராமத்துச் சிறுவர்களுக்கே உரிய வறுமையும் சுதந்திரமும் கூடியவர்கள்.

[தந்தையும் மகளும்]

புகைப்படம் எடுப்பதைக் கண்டதும் அவர்கள் கூடிக்கொண்டனர். அவர்களுடன் நின்று படங்கள் எடுத்துக்கொண்டோம். அவர்களில் ஒருவர் தமிழ் பேசினார். நெல்லூர் அருகே லாரி ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். இருபதாயிரம் ரூபாய் சம்பளம் மொத்தத்தையும் ஊருக்கே அனுப்பிவிடுவேன் என்றார். நவீன் என்று பெயர். தீபாவளி விடுமுறைக்கு வந்தவர்.

அவரிடம் பேசி இருநூறு ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கி அங்கிருந்த குழந்தைகளுக்குக் கொடுக்கச் சொன்னோம். ஓர் இளைஞர் சென்று வாங்கி வந்தார். கிட்டத்தட்ட கடையையே காலிசெய்து கொண்டுவந்துவிட்டார். ஒரு பிஸ்கட் பாக்கெட் ஐந்து ரூபாய்தான். ஆளுக்கு இரண்டு வீதம் கொடுத்தோம்

ஸ்வப்னா என்ற பெண்குழந்தையை நான் தூக்கி கொஞ்சினேன். பயங்கர நாணம். பிஸ்கட் அளிக்கப்பட்டதும் ஓடிச்சென்று ஒரு பாக்கெட்டை அவள் அப்பாவுக்குக் கொடுத்துவிட்டாள். செல்வேந்திரன் “பொண்ணப்பெத்தவன் அனாதை இல்லை ஜெ. அங்க பாருங்க, அதுக்கு மட்டும்தான் அப்டி தோணுது. அவனுக்கு ஒரு கை சோறு எப்பவும் உண்டு” என்றார்.

அங்கிருந்து ஜராய் கா மத் என்னும் ஆலயத்திற்குச் சென்றோம். தொன்மத்தின்படி அது மகாபாரத்தின் ஜராசந்தனின் ஊர். அவன் அன்னையின் குலமாகிய ஜரையின் நினைவாக அப்பெயர் பெற்றது. உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள பருவாசாகர் என்னும் ஊரில் உள்ளது இது. உத்தரப்பிரதேசத்திற்குள் நுழைந்து அந்த ஆலயத்திற்குச் சென்றோம். பிரதிஹார மன்னர் மிர் போஜ் ஆட்சிக்காலத்தில் கிபி 860ல் கட்டப்பட்டது இந்த ஆலயம்.

கஜுராகோ பாணியிலான செந்நிறக் கல்லால் ஆன கோபுரமும் பஞ்சரதம் எனப்படும் ஐங்கோண அடித்தளமும் கொண்டது இந்த ஆலயம்.  ஆனால் கோபுரம் மொண்ணையானது. அடுக்குகளாக சிற்பங்களும் அணியமைப்புகளும் காணக்கிடைக்கவில்லை.

சுவர்களில் மென்கல்லில் செதுக்கப்பட்ட நுட்பமான சிற்பங்கள். அவற்றில் கணிசமானவை கஜுராகோ பாணியிலான கேளிச்சிற்பங்கள். ஊடிநிற்கும் பெண்ணை பின்னாலிருந்து அணைக்கும் காதலன், ஆடிநோக்கும் காதலியை பின்னின்று அணைத்து தானும் நோக்குபவன் என சில சிற்பங்களை பல ஆலயங்களில் மீளமீள நோக்கமுடிகிறது.

இங்கே தொல்லியல்துறை பணிசெய்துகொண்டிருக்கிறது. என்னைக் கண்டதும் எழுந்து நின்று பவ்யமாக வணங்கியதிலிருந்து அவர்கள் என்னை தொல்லியல் துறையைச் சேர்ந்தவன் என நம்புவது தெரிந்தது. “இது தொல்லியல்துறையால் கட்டப்படுகிறது அல்லவா?” என ஆங்கிலத்தில் கேட்டேன். அது நான் தொல்லியல்துறை அல்ல என்னும் ஆறுதலையும் யாரோ முக்கியமானவர் என்னும் மதிப்பையும் அவர்களிடம் உருவாக்குவதைக் கண்டேன்

சுற்றுச்சுவர்களின் சிற்பங்களை நோக்கியபடி கொதிக்கும் கல்தரையில் கால்மாற்றி நடந்து சுற்றிச்சுற்றி வந்தோம். சிற்பங்களும் சித்திரவேலைகளுமாக அழகிய மலர்ச்செண்டுபோன்ற ஆலயம். எந்த மலரையும் எவரும் நோக்கி முடிப்பதில்லை. மலர்ச்செண்டுகள் மலர்களைக்கொண்டு அமைக்கப்பட்ட மலர்கள்.

உள்ளே இருந்த துர்க்கையின் ஆலயம் 12 ஆம் நூற்றாண்டில் சுல்தானிய படையெடுப்பின்போது உடைக்கப்பட்டது. தேவியின் வலதுகால் மட்டும்பீடத்தில் எஞ்சியிருக்கிறது. அந்த வலது காலையே தெய்வமாக வழிபடுகிறார்கள். அபாரமான ஒரு குறியீடாக அது தோன்றியது. இனி அந்த ஆலயத்தில் சிற்பத்தை வைக்கலாகாது, அந்தக் கால்வடிவிலேயே தான் அங்கே எழுந்தருளியிருக்கவேண்டும் என தேவி முடிவெடுத்தது போல எண்ணிக்கொண்டேன்

பின் மதியம் ஓர்ச்சாவுக்குச் சென்று சேர்ந்தோம். கொளுத்தும் வெயில். ஓர்ச்சா நகர் பேத்வா நதிக்கரையிலேயே அமைந்திருக்கிறது. நதிக்குக் குறுக்காகச் செல்லும் பாலத்தைக் கடந்துசென்று வண்டியை நிறுத்தினோம். மலக்கிடங்கு அப்பகுதி. அதன் நடுவிலேயே வண்டிகளை நிறுத்திவிட்டு இளம்பெண்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சிலர் சாப்பிட்டுக்கொண்டும் இருந்தனர். தாளமுடியாமல் திரும்பி வந்தோம்.

குளிக்கவேண்டும் என்பது திட்டம். பேத்வாவின் கரையில் கூட்டம் கூட்டமாகப் பெண்கள் நின்று மெல்லப் பாடிக்கொண்டு சுற்றிவந்து ஏதோ வழிபாடுகளைச் செய்துகொண்டிருந்தார்கள். முகங்களில் பழங்குடிக்களை தெரிந்தது. அவர்களுக்கு பேத்வா ஒரு வழிபாட்டுத்தெய்வம் எனத்தெரிந்தது

அரண்மனைமுகப்பிலேயே பெரிய படித்துறை இருந்தது. அங்கே இறங்கி நீராடினோம். இந்தியாவில் நீராடத்தக்க நதிகள் அருகி வருகின்றன. அத்தனை நதிகளும் சாக்கடைகள். தமிழகத்தில் இன்று எந்த நதியும் மலையில் அன்றி வேறெங்கும் நீராடத்தக்கதாக இல்லை சென்ற இந்தியப்பயணங்களில் கூட பல ஆறுகளில் நீராடினோம். பேத்வா ஓரளவு தூயநீர் கொண்டிருந்தது. அந்தப்படிக்கட்டில் பதினைந்தடி ஆழம் வரை நீர் இருந்தது. ஆனால் ஓடும்நீர் அல்ல. ஒருமணிநேரம் நீந்திக்குளித்தோம்

[ராஜா மகால் ஓர்ச்சா]

பேத்வாவின் ஓரமாகவே அரண்மனைகள் உள்ளன. புண்டேல் வம்ச அரசர்கள் ஒவ்வொரு அரசிக்கும் அரண்மனைகளை அமைத்துக்கொடுத்திருக்கிறார்கள். அனைத்துமே சுதையாலும் செந்நிறக் கற்களாலும் ஆனவை. கூம்புக்கூரைகொண்டவையே பெரும்பாலானவை. அப்பகுதியே அரண்மனைகள் செறிந்து சென்றகாலத்தில் விரிந்துகிடக்கிறது

இங்குள்ள ஆலயங்கள், அரண்மனைகளைப் பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். சதுர்புஜ் கோயில் தொன்மையானது. பிற்கால ஆலயம் லட்சுமி கோயில். மாதிரிக்கு ஓர் அரண்மனையை மட்டும் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று திட்டமிட்டோம். மையமாக பல குமிழ்கோபுரங்களுடன் எழுந்து நின்றிருந்த ராஜமகாலைப் பார்ப்பதற்காகச் சென்றோம்

IMG_5056

முகலாயபாணி கட்டிடம் இது. புண்டேல்கண்ட் அரசர்கள் அக்பர் காலகட்டத்திலேயே முகலாயர்களுடன் சமரசம் செய்துகொண்டனர். அதன்பின் அப்படியே பிரிட்டிஷ் ஆட்சிக்கு வந்தனர். சுதந்திரம் கிடைக்கும்வரை புண்டேல்கண்ட் சமஸ்தானமாக நீடித்தனர். ஆகவே அரண்மனைகள் பெரும்பாலும் சிதைவுறாமல் நீடிக்கின்றன.

அரண்மனைகள்  சிவந்த கற்களால் கட்டப்பட்டவை. பலசமயம் மரத்தாலானவை என விழிமயக்கு கொள்ளச் செய்கின்றன. உத்தரங்கள், சட்டகங்கள், எரவாணங்கள் அனைத்துமே மரத்தாலேயே அமைந்தவை என நண்பர்கள் எண்ணினர். தொட்டுப்பார்த்தால்தான் கல்லெனக் காட்டியது.


IMG-20171024-WA0024 (1)[முறையே வலமிருந்து  சிவா,  வழக்கறிஞர் சென்னை செந்தில், வழக்கறிஞர் சக்தி கிருஷ்ணன், செல்வேந்திரன்,கே பி வினோத்,ராஜமாணிக்கம்,நான் கிருஷ்ணன்,பெங்களூர் கிருஷ்ணன், வழகறிஞர் ஈஸ்வர மூர்த்தி ]

இடைநாழிகளாகவும் உள்கூடங்களாகவும் அங்கணங்களாகவும் உப்பரிகைகளாகவும் சென்றுகொண்டே இருந்தது அரண்மனை . இடுங்கலான படிகளில் ஏறி மேலே சென்று உப்பரிகைகளில் அமர்ந்து நோக்கினால் பெரும்பாலும் அரைக்காடாகக் கிடக்கும் மிகப்பெரிய அரண்மனை வளாகம். சூழ்ந்து அடர்காடு. நீலப்பெருக்காக பேத்வா ஆறு.

ஆனால் அங்குள்ள உப்பரிகைகளில் நிற்பது ஆபத்தானது. கல்லாலான பலகைகள் வலுவிழந்தவை. கைப்பிடிச்சுவர்கள் உயரமற்றவை. நம் நிலைபெயராமையை நாம் நம்பலாம். ஆனால் திடீரென்று நாம் துணுக்குற்று நிலையிழக்கக் கூடும். என் நண்பர் ஒருவர் இதேபோல உப்பரிகையில் நிற்கையில் காலில் ஒரு ஒயர் இடற பாம்பு என கால் பதறி விழுந்து எலும்பு முறித்து ஒன்பது மாதம் படுக்கையில் இருந்தார். அந்தியானால் நம்மை முகத்தில் அறைந்து துரத்தும் சிறு குருவிகள் மலையுச்சிகளிலும் கட்டிட முகடுகளிலும் உண்டு. வௌவால்கள் எதிர்பாராமல் வந்து தாக்குவதுமுண்டு.

IMG_5060 (1)

நா ங்கள் திரும்பும்போது ஒரு பெரிய சிம்மக்குரங்கு அருகே பாய்ந்தது. சிவா பதறி அலறிவிட்டார். ஆள் அளவே இருந்தது. வாலைச்சொடுக்கியபடி யாரா நீ மானுடா என கடந்து சென்றது. அவர் உப்பரிகையில் நின்றுகொண்டிருந்தபோது குதிக்காமலிருந்தமைக்கு நன்றி சொல்லவேண்டும். ஓர்ச்சா மாளிகையில் அமர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். முடிந்தவரை சம்பிரதாயமாக

அந்தி சாயத் தொடங்கியிருந்தது. ஒரு வரலாற்றுநகரில் அந்தி துயர்மிக்கது. இரக்கமற்றது அந்த செந்நிறச் சூரியன்

https://www.youtube.com/watch?v=c6ZOY1aOjWg

***

முந்தைய கட்டுரைமையநிலப்பயணம் கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48