அன்புள்ள ஆசிரியருக்கு,
நலம், நலம் அறிய ஆவல். என் முந்தைய கடிதத்தையும் தங்களின் சில வரி பதிலுடன், தளத்தில் கண்டேன்,, http://www.jeyamohan.in/103048#.WfMdVVtL_IU நன்றி. நாமளும் எழுத்தாளர் ஆயிட்டோம்ல என்று நினைத்துக்கொண்டேன், புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல். நிற்க.
மையநிலப்பயணத்தில் தங்களுடன் சேர்ந்து நானும் பயணிக்கிறேன், ராஜமாணிக்கமும், கிருஷ்ணனும் தங்களுடன் வருவது எனக்குள் இன்னும் பொறாமையை அதிகமாக்குகிறது, இரண்டு டவேராக்களா?? இதெல்லாம் கொஞ்சம் ஓவர். தயவு செய்து தங்கள் அடுத்த பயணத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் என் வயித்தெரிச்சல் கிருஷ்ணனை சும்மா விடாது. வட இந்திய நிலங்களை நான் பார்த்ததில்லை, அதாவது தங்கள் எழுத்துக்களை படித்து என் அகக்கண் திறந்தபின். மும்பைக்கும், கோவாவுக்கும் என் கல்லூரிக்காலத்தில் சென்றிருக்கிறேன், வழமையான ஒரு கல்லூரிப் பயணம், அப்போதுதான் கோவாவில் வைத்து முதன் முதலாக தண்ணியடிக்கக் கற்றுக்கொண்டேன் என்பதை தவிர எந்த முக்கியத்துவமும் இல்லாத பயணம் அது.
மாணவர்களுக்கான சிறப்புக்கட்டணத்தில் ரயிலில் பயணம், ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் வண்டி சென்று சேரும் நேரத்தையும், மீண்டும் கிளம்பும் நேரத்தையும் கர்மசிறத்தையாய் குறித்துவைத்துக்கொண்டது நினைவில் நிற்கிறது. ஏன் என்று தெரியாது, அது பின்னர் பயன்படவும் இல்லை. சிலவருடங்களுக்குமுன் துபாயிலிருந்து நேராக ஜெய்ப்பூர் சென்றேன், நான் கட்டிய ஒரு கட்டிடத்தின் தரையில் பதிப்பதற்கான மொத்த சலவைக்கற்களையும் மலிவு விலையில் வாங்குவதற்காக. அதற்கே நேரம் சரியாக இருந்தது,
தாஜ்மஹால் கட்டப்பட்ட வெள்ளை சலவைக்கல் முழுவதும் நான் சென்ற இடமான கிஷாங்கரின் அருகில் இருக்கும் மக்ரானா என்ற இடத்தில் இருந்து சென்றது என்பது மட்டுமே ஒரு சரித்திர தகவல் அந்த பயணத்தின் போது. மேலும் தாஜ்மஹாலை கட்டிய முக்கிய இந்திய கட்டிட மேஸ்த்ரியின் வலது கையையும், நாக்கையும் ஷாஜஹான் தாஜ்மஹால் கட்டிமுடித்தபின் வெட்டிவிட்டார் என்பதும் காதுகளில் விழுந்தது, சரியா, தவறா எனத்தெரியாது, ஏன் என்று கேட்ட போது, அப்படி செய்யாவிட்டால் பல நூறு தாஜ்மஹால்களை பிற ராஜாக்களுக்கு கட்ட அவன் உதவி விடக்கூடாது என்பதற்காகவே என்றனர். சரி இருக்கட்டும் என சொன்னேன் என்ன சொல்வது என்று தெரியாமல், மேஸ்திரியின் உதவியாளர்கள் யாரேனும் இருந்தால் அவர்களாலும் இதை செய்ய இயலுமே, அவர்கள் கைகளும் வெட்டப்பட்டதா என கேட்க நினைத்தேன், கேட்கவில்லை. நிற்க.
தங்கள் மையநிலப்பயண விவரணைகள் சிலிர்க்க வைக்கின்றது, ஒன்றரைலட்சம் ஆண்டுகளுக்கு முன்பான பிம்பேத்கா ஓவியங்கள், அம்மாடியோவ். அதுவும் குதிரை மீதேறி மனிதன் செல்லும் சில ஓவியங்கள் பெருவியப்பைத் தருகின்றன. குதிரைகளை மனித நாகரீகம் ஆரம்பித்த அல்லது ஆரம்பித்த காலம் என நான் நினைத்துக்கொண்டிருக்கும் ராமாயண அல்லது மகாபாரதக்காலமான பத்தாயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் முதன் முதலில் வாகனமாகவோ அல்லது போருக்காகவோ பயன்படுத்த ஆரம்பித்ருதிப்பான் என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். மேலும் குதிரைகள் அராபியாவிலிருந்து வந்திருக்கும் என்றும் நினைத்துக்கொண்டதுண்டு, அராபியக்குதிரை என்ற சொல்லாட்சியை கொண்டு. யானையை பழக்கி அதன் மீதேறி வேட்டையாடுவது போன்ற தொல்ஓவியங்களும் சிறப்பானவை.
அனைத்து ஓவியங்களும் ஒரு அவுட்லைன் போல் மிக எளிதில் சிறப்பான கருவிகள் ஏதுமின்றி வரையப்பட்டிருப்பது மேலும் வியப்பு. ஜியாமென்ட்ரி பாக்ஸ்லாம் வெச்சிருந்திருப்பாய்ங்களோ? என்று நினைக்கத்தோன்றியது. குதிரையின் ஒரு பெரிய ஓவியமும், கொம்புள்ள யானைகளும், புள்ளி மான்களும், எக்ஸ்ரே மான்களும் புல்லரிக்க வைக்கின்றன. தளத்தில் இருக்கும் படத்திலிருந்து கரடியை என்னால் அடையாளம் காண முடியவில்லை. எந்தவித உத்தியும் இல்லாமல் ஒரே அடையாளமான ‘x’ என்பதை வைத்துக்கொண்டு மனிதனையும், குதிரையையும் எத்தனை எளிதில் வரைந்திருக்கிறார்கள். மேலும் மேலும் வியப்பு விரிகிறது.
மேலும் முழக்கோல் நட்சத்திரம் துருவ நட்சத்திரம் போன்ற புகழ்பெற்ற நட்சத்திரக்கூட்டங்கள் பாறைகளை ஏறத்தாழ சரியாகவே குடைந்து வைக்கப்பட்டுள்ளன என்ற செய்தியும் மலைக்க வைக்கிறது. இது மனித நாகரீகம் பற்றி நாம் வாசித்து, அறிந்து வைத்துள்ள அனைத்து தகவல்களையும் கேள்வி கேட்பதாய் இருக்கிறது. கண்டிப்பாய் என் ஓய்வுக்காலத்தில் பயணம் செய்ய வேண்டிய ஒரு இடம் என்று குறித்து வைத்துக்கொண்டிருக்கிறேன்.
நம் இந்தியாவின் தொன்மை மேலும் மனதுக்குள் விரிகிறது, தங்களுடன் நானும் பயணிப்பது போலவே உணர்கிறேன், மேலும் விபவரங்களை அறிந்து கொள்ள காத்திருக்கிறேன். மறக்கவேண்டாம், தங்கள் அடுத்த பயணத்தில் நானும் ஒருவனாக வேண்டும்.
அன்புடன்
மணிகண்டன், துபாய்.
அன்புள்ள மணிகண்டன்
அடுத்த பயணத்தில் பார்ப்போம்
ஜெ
வணக்கம் ஐயா..
தங்கள் மைய நில பயண பயணக்கட்டுரையில், உஜ்ஜைன் குறித்த விஷயங்களை எதிர்நோக்கி இருக்கிறேன்.
கடந்த மாத என் உஜ்ஜைன் பயணத்தின் போது, மனதோடு இணைந்தது விக்கிரமாதித்தனுக்கு அருளிய காளியும்[Harsiddi madha temple], காளிதாசனுக்கு அருளிய காளியும்[Ghat kali].
மகா காலேஸ்வரை தாண்டி, ஷணப்பொழுதில் காளிதாசனுக்கு அருளிய காளி தேவியின் மீது ஈர்ப்பு வருகிறது.
கோரக்க பரம்பரையில் வரும் பர்த்தாரி குகை, உங்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும் என்று நம்புகிறேன்.
அன்புடன்
நாஞ்சில் சுரேஷ்
அன்புள்ள சுரேஷ்
நான் இருமுறை உஜ்ஜயினிக்குச் சென்றுள்ளேன். இப்பயணத்தில் உஜ்ஜயினி இடம்பெறவில்லை
ஜெ