அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,
நலமா? இங்கு எல்லோரும் நலம். கடைசியாக அரசியல்சரிநிலைகள் கட்டுரை பற்றி எழுதிய கடிததிற்கு பின் இப்பொழுதுதான் எழுதுகிறேன். உங்களுடைய அயனிப்புளிக்கறி சிறுகதை படித்தேன். மனதிற்குள் எண்ணங்கள் விரிய ஆரம்பித்து விட்டது. சில கட்டுரைகள் அல்லது கதைகள் படிக்கும் போது உள்ளுக்குள் இருக்கும் ஆன்மாவின் குரல் அசிரீரியாக என் மனச்செவியில் விழும்.
இக்கதை ஏற்படுத்திய உள்ளுணர்வு எனக்கு சில காலத்திற்கு முன் ஏற்பட்டது. இக்கதையை படித்து முடிக்கும் போது அத்தருணம் என் நினைவுக்கு வந்தது. ஆம் அது வேறு ஒன்றுமில்லை. தோப்பில் முகமது மீரான் அவர்களின் “ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்” கதை படித் அனுபவம் தான். இக்கதைகளின் கதாப்பாத்திரங்கள் எனக்குள் இப்பொழுதும் உண்டு. அடிப்படையில் எனக்குள் பாலப்பன் வைத்தியர் குடி கொண்டுள்ளார். இவ்வாறான இயற்கையின் மீது கட்டுக்கடங்கா காதல் கொண்ட பல மனிதர்கள் உண்டு. என் பெற்றோரின் அடுத்ததாக என் நெருங்கிய உறவாக நான் அவர்களை எண்ணியதுண்டு. வண்ணதாசன் அவர்களின் இயற்கையை வர்ணிக்கும் கவிதைகள் பல எனக்குள் ஏற்படுத்திய எண்ணங்களை விவரிக்க முடியாது.
என் சிறுவயது அனுபவம் ஒன்று உண்டு. நான் பள்ளி சென்ற காலத்தில் என் கை கால்கள் அதிக நேரம் விளையாடியது நீரிடனும் மணலுடனும் மரங்களுடனும் தான். மண்டைக்காடு அருகே என் அம்மாவின் விளை உண்டு. சுனாமிக்கு பிறகு அதை விற்று விட்டார்கள். நானும் என் தாய்மாமாவும் விடுமுறை தினத்தில் அப்பொழுது சென்று வருவோம். அது என் வாழ்க்கையில் மிக சந்தோஷமான அனுபவம். பம்பு செட்டில் குளிப்பதேன்றால் மேலும் ஒரு சந்தோஷம். என் பாட்டி வீட்டிலும் மரங்கள் உண்டு. ஒருமுறை விளையாட்டுத்தனமாக வீட்டிலிருந்த சிறிய மாமரம் ஒன்றில் நான் ஆணியை அடித்து விட்டேன். அதற்காக கோபத்தில் என் மாமா என்னை அடித்து பிய்த்து விட்டார். அம்மாச்சியிடம் சரணடைந்து தப்பித்து கொண்டேன். அப்பொழுது ஒரு வார்த்தை என் மாமா சொன்னார். உன் கையில் ஆணி அடிப்பதை போல தான் அதற்கும் வலிக்கும் என்று. அத்தினம் இரவு நான் அம்மரத்தின் அடியில் நின்று கட்டி பிடித்து அழுதேன். வருடங்கள் பதினைந்து தாண்டி விட்டது. இப்பொழுதும் அம்மரத்தில் நான் ஆணி அறைந்த தழும்பு உள்ளது. நான் அங்கு செல்லும் போதெல்லாம் அதை என் கைகளால் வருடுவேன். அப்போது என் பின் முதுகின் அடியில் ஒரு சிலிர்ப்பு தோன்றி உடல் முழுக்க பரவும். எனக்கும் அதற்குமான உணர்ச்சி பரிமாறல் அது. அவ்வீட்டில் இருக்கும் செம்பருத்தி, தென்னை, பலா, பாக்கு, கொய்யா, நல்லமிளகு, மஞ்சள், காளான் எல்லாம் எனக்குள் உறைந்த உறவுகள். இரவாகிவிட்டால் நிலா வெளிச்சத்தில் தென்னைகளுக்கு இடையே செல்லும் மரப்பட்டியை காண அண்ணார்ந்து பார்த்து பல மணிநேரம் நின்றிருக்கிறேன். பந்தை விட தென்னையின் கொச்சங்காய் வைத்து விளையாடுவது தான் எனக்கு பிடிக்கும். இப்பொழுது நான் அந்த வீட்ற்கு சென்றால் என்னுடன் யார் இருப்பார்களோ இல்லையோ அம்மரங்களுடான அன்பு பரிமாற்றம் எப்பொழுதும் இம்மியும் குறையாமல் உண்டு.
இப்பொழுது மரங்களை மனிதர்கள் அனுசரிக்கும் விதம் தான் மனதை படுத்தி எடுக்கிறது. சில நேரங்களில் கண்ணீர் துளிகள். இக்கதைகளின் கதாபத்திரங்களை போல பல நேரங்களில் சூழ்நிலைக்கு கட்டுபட முடியாமல் அமைதியை இழந்து செய்வதறியாது எங்காவது சென்று அமர்வதுண்டு.
சில நேரங்களில் மட்டும் தான் கடிதம் எழுதுகிறேன். மற்ற நேரங்களில் நான் எனக்குள் செய்யும் உரையாடலுடன் நின்று விடுகிறேன். ஏனென்று தெரியவில்லை. இக்கடிதம் என் ஆன்மாவின் எழுத்து. என் உள்ளுணர்வை தூண்டியதற்கு நன்றி ஐயா.
எதிர்பாராத சம்பவம்:
தங்களுக்கு கடிதம் எழுதுவதை பற்றி யோசித்து விட்டு இரவு தூங்கி விட்டு காலையில் எழுந்து முகநூலை பார்க்கும் போது நாகர்கோயில் கலெக்ட்டர் அபீஸ் சிக்னலில் இருத்த பழமையான மரத்தை சாலை விரிவாக்க பணிக்காக என கூறி வெட்டி விட்டார்கள் என தகவல் பார்த்தேன். அதற்க்கு வேறு பல காரணங்கள் என தகவல் இட்டிருந்தார்கள். ஆக மொத்தத்தில் வலியும் வேதனயும் தான் மிச்சம்.
ஷியாம் பிரசாத்
***
அன்புள்ள ஜெ. வணக்கம்.
வாழ்க்கை நான்கு சட்டங்களுக்குள் வரைந்து வச்ச ஓவியம்போல இருக்கும் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள், ஆனால் தன்னுள் மறைந்து உள்ள புள்ளிகளுக்கு ஏற்ப வளைவும் நெளிவும் மாறி மாறி அமைய எழுந்துவரும் கோலம் போன்றது வாழ்க்கை.
ஒரே எண்ணிக்கைக்கொண்ட புள்ளிகளை உடைய இரண்டு கோலங்கள் ஒன்று மாதரியாகவே இருக்கவேண்டியதில்லை. கோலம்போடும் கைகளைப்பொறுத்து அது மாறிவிடும். மனிதபுள்ளிகளை வைத்து கோலம்போடும் காலத்தின் கைகள் கோலத்தின் வடிவத்தை அழகை மாற்றுகின்றது.
வாழ்க்கையை இரண்டுவகையாக பார்க்கலம். ஒன்று உணர்வு மயமாகப்பார்த்தல். மற்றது அறிவுமயமாகப்பார்த்தல். உணர்வுமயமாகப்பார்ப்பவருக்கு அறிவு அர்த்தமற்றதாக தெரியும் வாய்ப்பு உண்டு,. அறிவுமயமாகப்பார்ப்பவர்களுக்கு உணர்வுகள் புரிபடவேண்டும் என்ற கணக்கும் கிடையாது.
அயினிப்புளிக்கறி சிறுகதை எந்த கதையையும் சொல்லவரவில்லை. வாழ்க்கை போகும் பாதையை நமக்கு காட்டுகின்றது. கதைக்காட்டும் வழியாக வாசகன் சென்றுக்கொண்டு இருக்கிறான் அதனால் கதைக்குள் வாசன் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான். கதைகாட்டும்வழியாக செல்வது கதைக்குள் அல்ல வாழ்க்கைக்குள் எனவே இது கதையாக எங்கும் தொடங்கவில்லை. கதையாக எங்கும் முடியவில்லை. வாழ்க்கை என்பதே தொடக்கமும் முடி’வும் இல்லாத ஒரு பார்வையின் நிறுத்திவைக்கப்படும் காட்சித் துண்டு. அந்தபார்வையின் காட்சித் துண்டு நமக்கு வைத்துப்போ’கும் ஒரு கலைப்படைப்புதான் வாழ்க்கை. அயினிப்புளிக்கறி கதையும் வாழ்க்கையின் சில பலக்காட்சித் துண்டை ஒரு சிறுகதையாக தன் கலைப்படைப்பை வாசகன் முன் வைக்கிறது. பார்வைப்படும் இடம் எல்லாம் மின்னும் வைரம்போல இந்த சிறுகதையும் வாழ்க்கையாய் மின்னுகின்றது.
ஆசிரியர் ஜெ இந்த கதையை எந்தவித இலக்கிய நுட்பங்களும் மின்னும் புனைவு சொற்களில் செய்யவில்லை. எளிமையாக கதையை சொல்லிச்செல்கின்றார். அந்த எளிமையே கதையின் உணர்வுகளை உள்வாங்கி எழுச்சிப்பெற்று எழுந்துவருகின்றது.
ஆசான் என்னும் பாலப்பன் வர்மாணி வைத்தியர். அவர் மகன் கணேசன் தனது தோட்டத்தில் நிற்கும் நூறு ஆண்டு பழமையான அயினிமரத்தை விற்க முயலும்போது கதைத்தொடங்குகின்றது. ஆசானுக்கு அயினி மரம் அன்னையாக தெரிகின்றாள். கணேசனுக்கு அயினி மரம் லட்சங்களாக தெரிகின்றது. கதை கால இடைவெளியையும், தலைமுறை இடைவெளியையும் வைத்து ஒரு யுத்தவெளியை நிகழ்த்திக்காட்டுகின்றது.
அயினிமரம் பலாமரம்போன்றது. பலாமரம்போன்று நிறைய காய்களை காய்க்கக்கூடியது. பலாமரம்போன்று உயரமாகவும் பெரிதாகவும் வளரக்கூடியது. இதனால் அயினிமரத்தை பலாமாரம்போன்று கதவுகள், உத்திரங்கள், அருகால் ஜன்னல்கள் செய்யப்படுத்துவார்கள். பலாப்பழம் பெரியதாக இருக்கும், அயினி பழம் பலம்பழம்போன்று ஆனால் சிறியதாக இருக்கும். பலப்பழம் பானை என்றால் அயினிப்பழம் கலையம் என்று கொள்ளலாம். பலப்பழத்தின் முட்கள் தோளோடு உட்டி கடினமாகக்க்காணப்படும். அயினிபழத்தின் முட்கள் மென்மையாக நீண்டு அடா்த்தியாக இருக்கும். பாலமரம், அயினிமரத்தில் தொட்டில்செய்வதும், இந்த மரங்கள் உள்ள வீட்டின் உத்திரத்தில் குழந்தைகளுக்கு யானை கட்டுவதும், அந்த மரங்கள்போல குழந்தை செல்வத்தையும் பால்வளத்தையும் பெருக்கும் என்பது நம்பிக்கை.
கதையில் வரும் அயினி மரம் நூறு ஆண்டு வயதும் வைரமும் உடையது. முப்பது அடி உயரத்திற்கு கிளையே இல்லாமல் இருப்பது. அந்த தோற்றமே அயினிமரத்தின் நேர்த்தியை தொழிலுக்கு ஆகும் அசாத்திய பயன்பாட்டை நமக்கு காட்டுகின்றது. பார்ப்பவர் எந்த விலைக்கொடுத்தும் வாங்கும் செல்வாக்கை உடையது.
ஐஸ்கிரீம், பெச்சி கோக்கு, சமோசா, பப்ஸ். சவர்மா என்று சுவைகள் காசுகளால் நிர்ணயி்க்கப்படும் தலைமுறையில் இயற்கையின் கனிகள் விலையற்றதாகிவிடுகின்றது. அதனால் ஒரு கனிமரம் என்பது வெறும் விறகு என்று மட்டும் நினைக்கப்படுகின்றது. இன்று இயற்கை செயற்கையால் பொருள் அற்றுப்போகின்றது. இயற்கை செயற்கை இணைந்து ஒன்றை ஒன்று வென்று செல்லும் கால இடுக்கில் அயினிமரம் கதையில் வந்து நிற்கின்றது. இடத்தை அடைத்துக்கொண்டு நிற்கும் இதனால் என்னப்பயன் என்று தலைமுறைகள் கேள்விக்கேட்கும் காலத்தில் நிற்கும் அயினிமரம் இது.
அயினிப்பழுத்தால் மனிதன் மட்டும் அல்ல குருவி மைனா கிளி புறா,அணில் என்று ஊரில் உள்ள அத்தனை உயிருக்கும் உணவாகப்பயன்படும். அதனால் அயினி என்பது மரம் அல்ல தாய் என்பது ஆசனின் உணர்வுநிலை. ஆசான் வைத்தியர் என்பதால் உயிரின் மதிப்பை அறிந்தவர். உயிரோடு உறவாடி உறவாடி உயிர்கள் அனைத்தும் அன்னையாகும் தருணத்தை உணர்ந்தவர். அவரைப்பொறுத்தவரை அயினி மரத்தைவெட்டுவது என்பது தாயை கொல்வதுபோன்றது. அதுவெறும் மரம் அல்ல அவருக்கு அது சுவையாகி நிற்கும் தாய்.
நடமுறை வாழ்க்கை என்பது என்ன? நூறு ஆண்டுகள் வளர்ந்த வயிரம்பாய்ந்த அயனிமரம் இன்று நான்கு லட்சத்திற்கு விலைபோ’கும். காசு உள்ளவர்கள் அதை மரமாக பயன்படுத்த விரும்புகின்றார்கள். காசு தேவை உள்ளவர்கள் அதை காசாக்கப்பார்க்கிறார்கள். ஆசான் நினைப்பதுபோல அதை விற்காமல் விட்டால் என்ன ஆகும்?. வைரம் மண்ணாகும். வெறும் மண்ணாகும். நான்கு லட்சம் மண்ணாகும். அதை காலாகாலத்தில் பயன்படுத்தினால் அயினி என்பது வைரம், வைரம் என்பது பணம், பணம் என்பது பொன். பொன் என்பது இன்ப வாழ்க்கை.. ஆசான் மகன் நாளைக்கு மண்ணாகும் அயினி வைரத்தை இன்றைக்கே பொன்னாக்கும் அறிவை பயன்படுத்துகின்றான். ஆசான் நேற்றுவரை அயினி தாயாக இருந்ததைப்பார்க்கின்றார். வாழ்க்கை இப்படித்தான் இருவரை எதிர் எதிராக நிறுத்தி உணர்வு முக்கியமா? அறிவு முக்கியமா? என்று பட்டிமன்றம் நடத்துகின்றது. இரண்டுமே முக்கியம்தான். இரண்டு வாதங்களும் சரிதான். ஆனால் இரண்டின்மீது காலம் எதனோடு சேர்கின்றதோ அதனுடைய தராசுதட்டு கனக்கிறது வெல்கிறது. மற்றது தோற்கிறது. வெல்வதும் தோற்பதும் காலத்தின் கூட்டால்தான். எனவே வாழ்க்கையை காலத்தோடு வைத்துதான் பார்க்கமுடியுமே அன்றி, காலம் இல்லாமல் பார்க்கமுடியாது. காலம் இல்லாமல் வாழ்க்கையைப்பார்பது வாழ்க்கையை அர்த்தமற்றதாக ஆக்குகின்றது. ஆசான் மகன் அயினிமரத்தை காலத்தோடு வைத்துப்பார்க்கின்றான். வீட்டில் இருந்து வெளிக்கிளம்பி குளத்திற்கு வரும் ஆசானை சந்திக்கும் குணமணி காலத்தின் தேவையை ஆசானுக்கு ஞாபகப்படுத்தி நடைமுறை உலகுக்குள் திரும்பவைக்கிறான். ஆசான் அயினிமரத்தை மட்டும் அல்ல வீட்டை மகனை மருமகளை விட்டு தனியனாக வாழ முடிவுசெய்கின்றார்.
ஆசான் அயினியை அன்னையாகப்பார்ப்பதால் அதனை விற்கும் மகன் கணேசனை வெட்டிப்போடுவேன் என்கின்றார். அதே அயனியை விறகாகப்பார்க்கும் மகன் கணேசன் தன் மனைவியிடம் உன் மாமனார் இறக்கும்போது இதைவிட நல்ல புளியவிறகாக வைத்து எரிகின்றேன் என்கிறார். காலம்தான் அயினியை அன்னையாக வைத்திருந்தது. காலம்தான் அயினியை வைரமாக்கி விறகாகவும் ஆக்குகின்றது. அதே காலம் நாளை அயனியை எதற்கும் உதவாத மண்ணாகவும் ஆக்கிவிடும். இதை தலைமுறை இடைவெளி என்று கதை காட்டும்போது காலத்தின் முன் வாழ்க்கை செயலற்று நிற்பதை காணமுடிகின்றது. ஆசான் இதை எளிதில் உணர்ந்து தனது வாழ்க்கையை தோட்டவீட்டிற்கு மாற்றிக்கொள்கின்றார். அயினி விற்றதைப்பற்றியோ வெட்டப்படபோவதைப்பற்றியோ எந்த மன ஓட்டமும் இல்லாமல் காலத்தின் முன் பணிந்துவிடுகின்றார். கதையில் குணமணியின் வழியாக இருபெரும் தலைமுறைகளின் மாற்றத்தை மனநிலையை விளக்கி வாழ்க்கையின் அக்கணத்தின் தேவையை மதிப்புக்கூட்டசெய்கின்றது கதை.
முதல்மனைவியின் மண்டையை உடைக்கும் ஆசான் பிற்காலத்தில் அதே மனைவிவைத்த அயினிப்புளிக்கறி நினைவில் நீந்தித்செல்கின்றார். மனைவியின் ஒரு சொல்லுக்கு அடங்காமல் அவள் மண்டையை உடைத்தவர் இன்று அவரைப்பார்க்கும் பசு குரல்கொடுத்து அழைக்கும் தாய்மை உள்ளத்திற்குள் திரும்பி உள்ளார். குணமணி கொண்டுவரும் எறுமை அவரை முகர்ந்து பார்க்கும் கனிந்த இடத்திற்கு வந்து நிற்கின்றார். மனிதன் கனிய கனிய தனி உடல் அல்ல உயிர்க்கூட்டத்தின் தொகுதியின் துளி என்று தன்னை உணர்கின்றான். அதனால்தான் ஆசானால் அயினிமரத்தை மரமாக காசாக்கும்பொருளாக மட்டும் பார்க்கமுடியவில்லை.
அயினிமரம் விற்கப்படுமா வெட்டப்படுமா என்ற கேள்வியுடன் தொடங்கும் கதை அதை கோடிட்டுக்காட்டி அதன் வழியாக நகர்ந்து ஆசானின் முதல் மனைவி, இரண்டாம்மனைவி மற்றும் மூன்றாம்துணை என்று நகர்ந்து செல்லும்போது வாழ்க்கையின் சுவையையும் சுவையின்மையையும் காட்டி வாழ்க்கையின் அர்த்தவெளிகளை அர்த்தமற்றுப்போகும் நிலைகளையும் வரைந்து அதுவும் வாழ்க்கையின் காலத்தின் முன் அர்த்தம் என்று காட்டுகின்றது. சிறுகதையில் ஜெவின் இந்த சிறுகதை வழக்கமான சிறுகதை உத்தியை உடைத்துக்கொண்டு எதன்மீது தன்னை மையப்படுத்திக்கொள்ளாமல் கதை நகர்வதுதான் கதையின் சிறப்பு. கதை இந்த உத்தியால்தான் கதையாகமட்டும் இல்லாமல் வாழ்க்கையாகவும் நிலைகொள்கின்றது. கதையாக மட்டும் கதையைப்பார்ப்பவர்கள் சற்று ஏமாந்துப்போகவும்கூடும் இந்த கதையில்.
எந்த விதத்திலும் விட்டுக்கொடுத்து வளைந்து போகாமல் ஒன்பது மாதமே தன்னுடன் வாழ்ந்து அறுத்து எரிந்துவிட்டுப்போன மனைவியின் அயனிப்புளிக்கறி சுவையாக இந்த அயினி மரம் ஆசானுடன் உள்ளது. கசப்பும் புளிப்பும் துவர்ப்பும் கூட ஒரு சுவைதான், அதுவும் ஒரு இனிய ’சுவையாக மாறும் என்பதை ஆசான் இன்று உணர்கின்றார். அயனிமரத்தின் புளிப்புசுவை கனிந்து இனிப்பு சுவையாக மாறுவதுபோல வாழ்க்கையின் நிலைபாடுகள் கசப்பில் இருந்து இனிப்பாக, புளிப்பில் இருந்த இனிப்பாக, துவர்ப்பில் இருந்து இனிப்பாக மாறும் வல்லமை உடையது. அதுவரை காலத்தோடு மனிதன் ஒத்துப்போவது இல்லை. அவன் எதையும் முறித்து அறுத்து எறிந்துவிடுகி்ன்றான். முறித்து அறுத்து எறிந்தபின்பு வாழ்க்கை கனிவது இல்லை, வெம்பி வதங்கி உலர்ந்துவிடுகின்றது.
பெண்ணுக்கு நாக்கு சாட்டையாகவும், ஆணுக்கு கை சாட்டையாகவும் இருக்கும் தருணத்தில் வாழ்க்கை முறிக்கப்பட்டுவிடுகின்றது. பெண்’ணின் நாக்கு தேனாகவும், ஆணின் கை கரும்பாகவும் மாறும் காலம்வரும்வரை ஆணும் பெண்ணும் காத்திருக்கவில்லை என்றால் வாழ்க்கை பழுப்பது இல்லை என்பதை அறியமுடிகின்றது. ஆசான் அந்த இடத்திற்கு எளிதாக சென்று தொடுகின்றார். தன் முதல்மனைவியின்மீது முழுக்குற்றத்தையும் அவர் ஏற்றவில்லை. தன்னின் குற்றம் என்னவென்றும் காட்டுகின்றார். எங்கோ அவர் முதல்மனைவியும் இவர்போல எல்லாம் இருந்தும் இல்லாமையோடுதான் இருப்பாள் என்பதை அறிகின்றார். வாழ்க்கையின் நுட்பமே அதுதான். எல்லாம் இருப்பதுபோல இருக்கும் ஆனால் எதுவும் இல்லை என்று காலம் காட்டும். முறிந்துப்போவது இல்லை வாழ்க்கை கனிவது. இன்று ஆசான் கனிந்து உள்ளார் ஆனால் அவர் மகன் கணேசன் கனியவில்லை. மருமகள் உங்க மகன்தானே அவர் என்று ஆசானை திரும்பிப்பார்க்க வைக்கிறார். அவனுக்கான காலம் வரும் என்பதுபோல ஆசான் வீட்டைவிட்டுவிலகி தோட்டத்திற்கு குடிப்பெயர்கின்றார். பிஞ்சுகள் மரதத்தில் இருக்க கனிகள் உதிர்வதுபோல அது நடக்கிறது.
வெட்டுவேன் குத்துவேன் என்று நிற்கும் தந்தையும் மகனும் ஒரு எல்லையில் இருவரும் மனம் மாறுகின்றார்கள். அவர் மனம்போல அவர் இருக்கட்டும் என்று மகனும், அவன் மனம்போல அவன் இருக்கட்டும் என்று தந்தையும் நினைக்கிறார்கள். அயினியை அவன் விற்றுக்கொள்ளட்டும் என்ற இடத்திற்கு ஆசான் வந்துவிடுகின்றார். இவரும் ஒரு புரிதலை வாழ்க்கையில் கொண்டுவிடுகின்றார்கள். அவர்களுக்குள் உள்ளே இருந்த அயினிப்புளி கனிந்து இனி்ப்பாகா மாறும் கனம் அது.
ஒரு காலத்தில் தன் துணையாக இருந்த செம்புமூட்டு ஆச்சி எப்படி ஆசானுடன் வாழ்ந்தாள் ஏன் ஆசானைவிட்டுப்போனாள் என்று கதை சொல்லவில்லை. ஆனால் கதையில் ஆசானும் செம்புமூட்டு ஆச்சியும் சந்திக்கும் புள்ளியில் ஆச்சி “கணேசன் எப்புடி இருக்கான். என்று கேட்பதும். ஆசான் “மவ எப்புடி இருக்கா“ என்று கேட்பதும் அவர்களுக்குள் உள்ள தாய் தந்தை உணர்வை சொட்டவைக்கின்றது. அவர்களுக்குள் இருந்தது ஒரு கள்ள உறவுதான். அவர்கள் உறவை அர்த்தமும் ஞாயமும் படுத்த முடியாது. ஆனால் புளித்த உறவில் ஊறிவரும் கனிந்த சாறு என்பது அந்த தாய்மையும், தந்தைமையும்தான் அது கனிந்து நிற்கின்றது. அந்த கனிதல் முன் அந்த உறவின் புளிப்பு கசப்பு துவர்ப்பு எல்லாம் அர்த்தம் அற்றுப்போகின்றது. அவர்கள் அந்த புள்ளியில் மீண்டும் இணைந்து வாழ தொடங்குகின்றார்கள்.
ஆசான் வாழ்க்கையில் வரும் இந்த மூன்று மனைவிமார்களும் மூன்றுவிதமான சுவையை ஆசானுக்குள் ஏற்படுத்தி உள்ளார்கள். முதல்மனைவி அயினிப்புளிக்கறியாக, இரண்டாம் மனைவி பாண்டிநாட்டுசுவையாக, மூன்றாம்மனைவி திருட்டுத்தம்பு அடித்தசுவையாக, எல்லாசுவையும் அந்த அந்த காலத்தின் சுவைகள் அதற்குஅப்பால் அதற்கு என்று எந்த அர்த்தமும் இல்லை. சுவைகடந்தபோன நாக்குப்போல் வாழ்க்கை மட்டும் ஆசானோடு இருக்கிறது.
அயினிமரம் காலத்தின் ஒரு சாட்சியாக புளிப்புசுவையில் இருந்து இனிப்புசுவைக்கு மாறி வைரமாகும் ஒரு வாழ்க்கையை காட்டுகின்றது. வைரமும் மண்ணாகும் என்னும் அறிதலை புகட்டுகின்றது. காலத்தின் முன் அயனிமரம் பொருள் அற்றதாகவும் மாறும், விற்கவும் வெட்டவும் படும் ஆனால் அது ஒரு தாயாக வாழ்ந்த நிறைவோடு செல்லும். நினைவுகள்தான் வாழ்க்கை.
மனிதவாழ்க்கையும் காலத்தின் ஒரு புள்ளியில் புளிப்பாய் கசப்பாய் துவர்ப்பாய் இருந்து ஒரு தாய்மையின் நிறைவோடு அர்த்தப்படுத்திக்கொள்ளும். அதற்குமேல் வாழ்க்யைில் எதையும் தேடிப்பெறமுடியாது. அதை எந்த வரையறைக்குள்ளும் கட்டம் கட்டமுடியாது. அது விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் ஒரு சுவையாக காலக்கணத்தில் மாறிக்கொண்டே இருக்கும். சரியா இருக்கா சரியா இல்லையா என்று தீர்ப்பு சொல்முடியாது.
செம்புமூட்டு ஆச்சியிடம் ஆசான் அயினிப்புளிக்கறி வைத்ததை சொல்கின்றார். அயினிப்புளிக்கறி சரியாக வரவில்லை என்பதோடு கதை முடிவடைகின்றது. வாழ்க்கையில் சரியா வராததும் ஒரு சரிதான். வாழ்க்கையில் அதுவும் ஒரு சுவைதான். வாழ்க்கையில் சுவைகள் வந்துப்போகின்றன எந்த ஒழுங்கும் ஒழுங்கின்மை’யும் வாழ்க்கையில் நிலைத்து நிற்பதில்லை.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.
***