அயினிப்புளிக்கறி -கடிதங்கள்

ayani

அயினிப்புளிக்கறி [சிறுகதை]

வணக்கம்.

எடுத்த எடுப்பில் உங்களின் “அயினிப் புளிக்கறி” தான் படித்தேன். அயினி என்றொரு மரம் இருப்பதுவே இதில்தான் தெரிந்தது.மரத்தின் மீதான பாசம் என்பதில் “எங்க அம்மா” என்று தான் வளர்த்த மரத்தை மனம் நெகிழ அரவணைத்துக் கொள்ளும் பாரதிராஜா படக் காட்சியும், வண்ணதாசனின் “ஒரு மரமும் சில மரங்கொத்திகளும்” விகடன் கதையும். தாய் இதழில் நான் எழுதிய “நேசத்திற்கு மரணமில்லை” என்ற கதையும் உடனடியாக  ஞாபகத்திற்கு வந்தன. நம் வீட்டில் நாம் வளர்க்கும் மரம் அல்லது அடிக்கடி நாம் பார்த்துப் பார்த்து வியக்க நேர்ந்த மரம்….அந்த மரங்களைப் பார்த்தபோது இவனுக்கு இவன் மூதாதையர்களைப் பார்ப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டது..என்று எங்களூர் வத்தலக்குண்டில் நான் பார்த்துப்பார்த்து மனம் கசிந்த மரங்களை எண்ணி ஒரு வரி சேர்த்ததும் நினைவுக்கு வந்து நெகிழ்த்தின.

இக்கதையில் ஆசானின் வார்த்தைகள் நிற்காமல் போனது வேதனையை அளித்தது எனக்கு. அந்த மரம் அவரது ஆரோக்கியம். அவரது ஆயுசு…..அது நின்ற காலம் அவரது சரித்திரம்.. ஆனால் அதை உணர யாரும் தயாரில்லை. பணத்தை மையமாகக் கொண்ட உலகில் ஆசாபாசங்களுக்கு, விழுமியங்களுக்கு இடமில்லை. அந்த அயினிப் புளிக்கறி எப்படியிருக்கும் என்று சுவைத்துப் பார்க்க ஆசை மிகுந்தது எனக்கு. அதுதான் கடைசியில் ஆசானுக்கே சரியாக அமையவில்லையே…அந்த வார்த்தையில்தான் எத்தனை சோகம்…விரக்தி…விலகல்…வீட்டுப் பெரியோர்களின் உணர்வுகளை மதிக்கத் தவறிய இன்றைய சமுதாயமும் என் நினைவை இக்கதை மூலம் அழுத்தியது. இக்கதையில் இன்னொரு விசேஷம் மலையாளம் தெரிந்த, அந்தச் சூழல் பழகிய அவர்கள் பேசும் தமிழ்…உபயோகித்த விதவிதமான வார்த்தைகள்….நாகர்கோயில் பகுதி மக்களின் வழக்கியல் என்று கொள்ளலாமா..?

கேறி..வாருங்க…

கெணேசன்

எனக்க பேரு

அப்பம் இங்க…

ஏட்டி…உனக்க…

வெட்டுதீரு…நிக்குதீரு…

இப்படி நிறைய..

படிக்கப் படு ஸ்வாரஸ்யம்…

அப்படியே ஆசான் இருக்கும் பகுதியில்….பக்கத்து வீட்டு ஆளாய் நின்று இதையெல்லாம் காது கொடுத்தக் கேட்பது போல் ஒரு கவனம்…கருத்து…தீபாவளி இந்தக் கதையின் நினைவில்…

அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்…உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்

நன்றி

உஷாதீபன்

***

அன்புள்ள உஷாதீபன்

நலம்தானே? இக்கதைக்கு முதலில் வெளிவந்த கடிதம் உங்களுடையது. நன்றி

கதையின் உணர்வுகள் என்ன என்று ஆசிரியன் சரியாகச் சொல்லிவிடமுடியாது. என் வரையில் இது ஒரு காதல்கதை. ஆனால் வெறும் கனவின் கதை என பல வாசகர்களுக்குத் தோன்றுகிறது. அதுவும் சரிதான்

ஜெ

***

அன்புள்ள ஜெ சார்,

இந்த கதையில் அயனிப்புளிக்கறி என்பது ஆசான் வாழ்க்கையின் பால் கொண்டுள்ள ருசி தான் அல்லவா. அவர் அனைத்தையும் உதறி விட்டு தனிமைக்கு தயாராகிவிட்டதாக நினைக்கிறார். ஒரு மரத்திற்காக அவர் உறவுகளை உதறவில்லை, அது அவர் அடைந்த கடைசி தோல்வியாக இருக்கலாம், அந்த உத்வேகத்தில் வனபிரஸ்த்ததிற்கு இறங்கிவிட்டார், ஆனால் லௌகீகம் அவரை இன்னமும் கைவிடவில்லை. இவருடன் நினைவுக்கு வருபவர், ஈராறு கொண்டெழும் புரவி கதையில் வரும் சாஸ்தான் குட்டிப் பிள்ளை. அதோடு “லௌகீகம் என்பது எளிதென்று நினைத்தீர்களா” என்ற சுபத்திரையின் வரியும் நினைவுக்கு வருகிறது.

ஆசானின் தோல்வி ஒரு வகை என்றால், ஆச்சியின் தோல்வி இன்னொரு வகை. இளமையில் செல்வந்தராக இருந்தவர், உறவுகளில் நெருங்கியவற்றை பறிகொடுத்துவிட்டு மகளுடன் எளிமையாக வாழ்கிறார். அவரும் ஆசானை மனதளவில் நினைத்தபடி இருந்திருக்கலாம். ஆசான் வரும் வழியில் அவர் நின்றிருந்தது ஊழா அல்லது உள்ளுணர்வா? ஆசான் தனியாக வாழ்ந்து பார்க்கிறார், ஆனால் இயலவில்லை. புளிக்கறி செஞ்சு பாத்தேன், சரியா வரல்ல என்று அவர் சொல்வது அது தானோ. நாற்பது வருடமாக அவர் காத்திருந்த ருசி அது, அது கிடைக்காமல் அவருக்கு துறவு இல்லை.

அயனிக்காய் இனிக்க வேண்டுமெனில் காலத்தால் கனிய வேண்டும், அல்லது அதற்கு மற்ற உயிர்களுடன் (தேங்காய், எண்ணெய், இஞ்சி) சரியான உறவு அமைய வேண்டும். மேலோட்டத்தில் மிக எளிமையாக தோன்றும் இந்த கதை, யோசிக்க யோசிக்க விரிந்தபடியே உள்ளது. தன் எளிமையினாலேயே தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறது.

அன்புடன்

கிருஷ்ணன் ரவிக்குமார்.

***

அன்புள்ள கிருஷ்ணன் ரவிக்குமார்,

அரிய சுவை என ஒரு சொல் நாவில் ஓடிக்கொண்டிருந்தது. நண்பர் கே.பி.வினோத் ஒர் உறவினரின் கதையைச் சொன்னார். அதுதான் அந்த கதையின் இறுதித்தருணம். வருகிறாயா என அழைக்கவும் வருகிறேன் என சொல்லவும் ஓரு தருணம் அமையவேண்டும். அந்த காலப்புள்ளிக்குப்பின்னால் மிக நீண்ட ஒரு வாழ்வும் கனிதலும் உள்ளது

ஜெ

***

முந்தைய கட்டுரைகே ஜே அசோக்குமார் படைப்புகள்
அடுத்த கட்டுரைமையநிலப்பயணம் கடிதம்