அன்புடன் ஆசிரியருக்கு,
மிக அழகான காதல். இளமையில் முரண்டி நிற்பதும் கசப்பை நிறைப்பதும் தான் கனிந்து கிளையில் இருந்து தானாக உதிரும் கனியாகிறதா?
ஆச்சியும் அப்படித்தான் நிற்கிறாள். சாலையை விட மேடான வேலி. ஆசானும் சட்டென உதிர்ந்து விடுகிறார். முதலில் அப்படி சட்டென விலகிச் செல்ல முடிவதும் அதை அவர் குடும்பம் இயல்பாக ஏற்பதும் ஒரு அமைதியின்மையை உருவாக்கின. ஆனால் அப்படி நடப்பது மட்டுமே இரு தரப்பிலும் காயங்களைக் குறைக்கிறது. திரும்பி அதை எண்ணி எதிர்த்துப் புண்ணாக்கி புண்பட்டு நிலையை இன்னும் சிக்கலாக்க அவர் விழையவில்லை. அதேநேரம் அது அவர் அன்னையின் இறப்பும் கூட. அவள் கொடுக்கும் இரண்டு அயினிக்காய்களை கொண்டு சென்று உண்பதைத் தவிர வேறெப்படி அவளை எண்ணிக் கொள்வது. இதைவிட எதிர்ப்பு வேறென்ன இருக்க முடியும்.
கணேசனுக்கும் குணமணிக்கும் அந்த அயனி எட்டு செண்ட் இடத்தை அடைக்கும் வீணான இருப்பு. நான்கு லட்சம் பணம். ஆனால் ஆசானுக்கு அது அம்மை. குருவிக்கும் காக்கைக்கும் கனிந்தூட்டும் அம்மை.
இக்கதையில் நிகழும் இயல்பான உதிர்வுகளே அழுத்தமானவையாக இருக்கின்றன. ஆசானின் கால்கள் இயல்பாக அவரை ஆச்சியிடம் உந்திக் கொண்டு செல்கின்றன. முப்பது உயரத்திற்கு அப்பால் முதற்கிளை விட்டிருக்கும் அயினிபோல ஆச்சி மேட்டில் நிற்கிறாள்.
ஆசான் உதிர்வது வலியிலிருந்து தப்ப. ஆச்சி உதிர்வது எதனால்? அவ்வளவு இயல்பாக நடந்துவிடக்கூடியதா அது? நடந்து தான் விடுகிறது. இவ்வரிகள் போல.
பழத்திலே இனிக்குததுதான் காயிலே புளிக்குது, இல்லேண்ணா கடுக்குது. புளிப்பும் கசப்பும் மூத்து கனிஞ்சா அது இனிப்பு…”
அன்புடன்
சுரேஷ் பிரதீப்
***
அன்புள்ள ஜெ
முதிய வயதில் தன் விருப்பங்களின் மேல் எந்த உரிமையும் இல்லாமல் தான் பெற்ற மகனுடன் கருத்து வேறுபாட்டினால் வீட்டை விட்டு வெளியே செல்லும் எளிய மனிதர், தானே விரும்பி தனிமையில் வாழத் தொடங்குகிறார் என்ற எளிய வழக்கமான கதை போல இருந்தாலும், அயனிப் புளிக்கறியின் சிறுகதையில் விவரிக்கப்படாத பிரிவின் துயரம், எழுதப்படாத சோகக் கவிதையாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது.
உளவியல் ரீதியான காரணங்கள் வாழ்க்கையின் போக்கை மாற்றும் என்பது ஆசானின் எளியகுடிப்பிறப்பு அதனால் உண்டாகிய தாழ்வு மனப்பான்மை, பெருவட்டரின் மகளை விருப்பத்தோடு காதலின் மேலிட்டால் மணந்து கொண்டாலும், காதலில் அடிபணியாத அகங்காரத்தால் பிரிய நேரிடுகிறது. குறைந்தகாலமே வாழ்ந்தாலும் காதல் என்ன எளிதில் மறக்கக் கூடிய உணர்வா? உயிர்போனாலும் எண்ணங்கள் அண்டவெளியில் இசையாகவும் எழுதப்படாத காவியத்தின் வரிகளாகவும் தொடரச் செய்யும் இனிய துயர் அல்லவா?
அயனிமரத்தை இனிய காதலின் நினைவாக ஒன்றும் ஆசான் நினைத்துக் கொண்டதாக நான் உருவகப்படுத்திக் கொள்ளவில்லை. தன்காதலை யாரிடமும் பகிராமல் மனதிற்குள்ளே கசப்பின் காய்களாக என்றும் கனியாமல், தனிமைக்குள் ஆழ்ந்து போவதைபற்றிய கனவுகளிலே இருந்துகொண்டு, ஒரு எளிய காரணம் கிடைத்ததும், தோட்டத்துக் குடிலில் குடியேறுகிறார். ஆசான் சமைத்த அயனிப் புளிக்கறியின் சுவை சொதப்புகிறது. மீண்டும் காதலை மீட்ட முடியுமா என்ன? ஒரு நொடிதானே அந்த மாய உணர்வு மனதில் தோன்றுவது ஆனால் காலம் முழுமையும் தொடரும் இனிய துயர் அல்லவா?
ஆசான் சந்தையில் இருந்து திரும்பி வரும்போது செம்புட்டு ஆச்சி இவருக்காக ஏங்கி காத்திருப்பதாக கனவு காண்கிறார். கற்பனையில் கண்டு பேசி குடிலுக்கு அழைத்து வருகிறார். அவர் அழைத்து வந்தது நினைவுகளின் முடிவையே. மரணம் இருளாக குளிராக குடிலுக்குள் காத்துக் கொண்டிருக்கிறது.
தீபம்தான் உங்கள் சிறுகதைகளிலேயே எனக்கு பிடித்தது என்று சொன்னபோது, நீங்கள், அது எளிய கதையாச்சே என்று சிரித்தீர்கள். தீபம் காதல் ஆன்மீக உணர்வாக மாறும் படைப்பு. பிரிவின் விஷம், மத்துறுத் தயிர் இரண்டும் பிரிவின் துயரினை விவரணைகளுடன் வெளிப்படுத்திய படைப்புகள். அயனிப்புளிக்கறி பிரிவின் துயரத்தை பற்றிய எந்த விவரணையும் இல்லாத, தோட்டத்தின் இருளே துயரமாக உருவகபடுத்தப்பட்டு, பிரிவின் கசப்பும் இனிமையும் சேர்ந்து அணையப்போகும் துயரம்.
அன்புடன்
தண்டபாணி
***