நான் கேரளத்தில் இக்கா என அழைத்தவர்களில் புகழ்பெற்றவர்கள் இருவர். புனத்தில் குஞ்ஞப்துல்லா முதன்மையானவர். இன்னொருவர் வி.எம்.சி.ஹனீஃபா. புனத்திலை நான் அறிமுகம் செய்துகொண்டது 1986ல். அப்போது அவர் வடகரையில் மருத்துவராக இருந்தார். காசர்கோடு அருகே நடந்த ஒரு இலக்கியக்கூட்டத்தில் அவர் சிறப்புப் பேச்சாளர். அது மகாகவி குட்டமத்து என்னும் வடகேரள மரபுக்கவிஞரின் நினைவுநாள் விழா. கேரளத்தில் அன்றெல்லாம் இறந்துபோன, அல்லது எழுபது கடந்த எல்லா செய்யுளெழுத்தாளர்களும் மகாகவிகள்தான்
புனத்தில் பேசினார். “மகாகவி குட்டமத்தை நான் நன்றாகவே அறிவேன். அவர் ஒரு நல்ல மனிதர்” சற்று இடைவெளிக்குப்பின் “அதனாலேயே நல்ல கவிஞர் அல்ல”. அப்போதே அந்த வெண்ணிறமான, குள்ளமான, குண்டான, பர்மிய முகச் சாயல்கொண்ட, சிரிக்கும் விழிகள் கொண்ட மனிதரை நான் அணுக்கமாக உணர்ந்தேன். அவரை வடகரையில் நானும் என் அலுவலக நண்பர் அப்துல் ரசாக்கும் [ரசாக் குற்றிக்ககம் என்றபேரில் எழுதினார். காலமாகிவிட்டார்] சென்று சந்தித்தோம்.ரசாக் தலைச்சேரியைச் சேர்ந்தவர்
அதன்பின் கடிதங்கள் எழுதிக்கொண்டோம். அவர் அன்றே ஒரு கலகக் காரர். அதேசமயம் அனைவராலும் விரும்பவும்பட்டார். ஏனென்றால் அவர் எவரையும் வன்மம் கொண்டு கேலிசெய்வதில்லை. சிறுவனுக்குரிய வேடிக்கை எப்போதும் அவரிடமிருந்தது. கேரளத்தின் புகழ்பெற்ற இஸ்லாமியப் பிரபுகுடும்பம் ஒன்றில் பிறந்தவர். ஆம், மீசான்கற்கள் அவருடைய தோராயமான குடும்பகதைதான். அவருடைய அன்னை பர்மியப்பிறப்பு கொண்டவர். அலிகட் பல்கலையில் மருத்துவம் பயின்ற இக்கா எழுதிய அலிகட் கதைகள் முக்கியமானவை
இக்கா சில ஆண்டுகள் வளைகுடாவில் பணியாற்றி திரும்பி வந்தார். [யானைகளை துதிக்கை வழியாகச் சிகிழ்ச்சை செய்து குணப்படுத்துவதை ஊரிலேயே கற்றிருந்தமையால் அராபியர்களுக்குத் தேவையான சிகிழ்ச்சைகளைச் செய்ய முடிந்தது- இக்கா]. நான் எழுத்தாளன் ஆகிவிட்டிருந்தேன். “டேய் நீ எழுத்தாளனா?” என்று வியந்தார். பின்னர் “சரி, நாயர் என்றால் புலிவால் பிடித்தாகவேண்டுமே” என்றார். நான் மலையாளத்தில் எழுத ஆரம்பித்தேன். சம்ஸ்கிருதம் கலவாத மலையாளம் என் பாணி. அது எம்.கோவிந்தன் மரபு. இக்கா “ஜெயமோகனின் கட்டுரைகள் சிறப்பானவை. அவற்றை மலையாளத்தில் மொழியாக்கம் செய்தாகவேண்டும்” என்று எழுதினார்
இக்காவிடம் எனக்கு எப்போதுமே அணுக்கமான உறவிருந்தது. அவர் என்ன செய்கிறார், எப்படிப் பேசுகிறார் என்பதை எவராலும் புரிந்துகொள்ளமுடியாது. சம்பந்தமில்லாத ஒருவராக முந்தைய கணத்தை அப்படியே உரித்து வீசிவிட்டு எழுந்துவிடவேண்டும் என்ற ஆசை அவரிடமிருந்தது. ஆகவே அவர் ஒரே சமயம் அறிவுஜீவியாகவும் கோமாளியாகவும் தன்னைப் புனைந்துகொண்டார். பாரதிய ஜனதாக்கட்சி வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவியிருக்கிறார். சபரி மலைக்கு மாலைபோட்டு கழற்றியிருக்கிறார் மூகாம்பிகை அம்மனிடம் ஒரு நல்ல தோழியிடம் என பழகியிருக்கிறார்.ஆனால் அடிப்படையில் அவர் சூஃபியிசத்தில் நம்பிக்கை கொண்ட கலைஞர்.
முன்னொருநாளில் இக்காவை நான் அழைத்தேன், பெருநாள் வாழ்த்துக்கள் சொல்ல. “டேய், நான் பெருநாள் கொண்டாடவில்லை” என்றார். “ஏன்?” என்றேன். “நான் மோகன்சந்த் கரம்சந்த் காந்தியின் சுயசரிதையை வாசித்தேன்” எனக்கு படபடப்பாக இருந்தது. இக்கா செய்யக்கூடாத சாகசம் அது. “பிறகு?” இக்கா சொன்னார் “ஆகவே நானும் ஒரு சுயசரிதை எழுதினேன்”
“இக்கா!” என நான் பதறினேன். “உடனடியாக அதை கிழித்து எறிந்து, வேண்டாம். அதை தீயிலிட்டு…” இக்கா சோகமாக “ஆனால் அதை நான் பதிப்பகத்திற்குக் கொடுத்துவிட்டேனே”. “நான் பேசுகிறேன். உடனே அதை எந்நிலையிலானாலும் நிறுத்திவிடலாம்” இக்கா மேலும் சோகமாக “அது அச்சாகி வெளியாகிவிட்டது. என் மனைவி என்னை வீட்டிலிருந்து துரத்திவிட்டாள்’ என்றார்
இக்காவின் சத்தியசோதனைகள் விரிவாகப் பதிவுசெய்யப்பட்ட அந்த நூல் கேரளத்தில் பிரபலமானது. கலைஞனுக்கு வாரத்திற்கு இரண்டு சோதனைகள் வந்தால் அவன் என்னதான் செய்யமுடியும்? இக்கா உருவாக்கும் சுயசரிதைகளும் அவருடைய புனைவே. அவரைப்போலவே கூர்மையானவை.
விஷ்ணுபுரம் விருது நிறுவப்பட்டபோது முதல் அழைப்பு இக்காவுக்கே என முடிவெடுத்தேன். ”எனக்கு விருதுதாடா பட்டீ ” என்றார். இக்காவுக்கும் ஒரு விருது பணமுடிப்பாக அளிப்பதாக ஒத்துக்கொண்டபின் கிளம்பி வழியெல்லாம் குடித்தபடியே வந்தார். வந்ததுமே உற்சாகமானார் .”டேய், மணி ரத்னம் எல்லாம் வரமாட்டார் என்று என் வீட்டில் இருக்கும் பேயிங் கெஸ்ட் சொன்னாள். நிஜமாகவே வந்திருக்கிறாரா?” என வியந்தார் “நிஜமாகவே மணிரத்னம் மாதிரி இருக்கிறார்” என்றார். அவரிடமே “நீங்கள் உண்மையான மணிரத்னமா?’ என கேட்டுத்தெரிந்துகொண்டார். நண்பர்கள் அனைவருக்கும் அக்கணமே நெருக்கமானவராக ஆனார். எவருமே குடிப்பதில்லை என உணர்ந்து ‘நீங்கள் எல்லாம் கம்யூனிஸ்டா?” என்றார்
இக்காவின் அற்புதமான நகைச்சுவை வெடிகள் பல உண்டு. நாங்கள் நண்பர்கள் பகிர்ந்துகொள்ளக்கூடியவை. மணிரத்னம் கண்களில் நீர்வழியச் சிரித்த ஒரு வேடிக்கை நினைவுக்கு வந்ததுமே இக்கா இப்போது சொற்கத்தில் இருக்கக்கூடும், அதை ஏன் சொல்லவேண்டும் என்றும் தோன்றுகிறது.சொற்கத்தில் பெண்ணியம் இருக்க வாய்ப்பில்லை, ஆகவே அங்கே அவற்றைச் சொல்லிச் சிரிக்கலாம்.
இக்காவின் கடைசி தொலைக்காட்சிப் பேட்டி பிரபலம். அதில் அவர் இஸ்லாமை கடுமையாக விமர்சனம் செய்தார். மதம் மாறப்போவதாக அறிவித்தார். ‘இந்துவாகவா?” என்ற வினாவுக்கு “இந்துவாக எவன் மாறுவான்? நான் நாயராக மதம்மாறுகிறேன்” என்றார்.
இக்கா ஒரு காலகட்டத்தின் குரல். அவநம்பிக்கையின் காலம் அது இலட்சியவாதங்களை நோக்கி “ஒந்நு போடோ” என்று சொன்ன தலைமுறை. மீசான் கற்கள் [ஸ்மாரகசிலகள்] மருந்து ஆகியவை அவருடைய முக்கியமான நூல்கள். அவருடைய மொழிநடை மிக அபூர்வமானது. காஃப்காத்தனமான கறாரான நடை அது. சொற்சிக்கனம் கொண்டது. அணிகள் அற்றது. ஆனால் விளையாட்டுத்தனமும் கூரிய அங்கதமும் இழைவது. அவருடைய சிறுகதைகளில் இருபது கதைகளையேனும் மிகச்சிறந்த ஆக்கங்கள் என்று சொல்லமுடியும். தன் காலகட்டத்திற்கு முன்னால் தன்னை கிழித்து பரப்பும் படைப்பாளிகள் அபூர்வமாகவே பிறக்கிறார்கள். அதை வன்மங்கள் இல்லாமல், தம்பட்டங்களோ பிலாக்காணங்களோ இல்லாமல் மாறாச்சிரிப்புடன் முன்வைக்க அரிய கலைஞர்களால் மட்டுமே முடியும்.
இக்கா ஒவ்வொரு முறையும் என்னைக் காண்கையில் கட்டிப்பிடித்து முத்தமிடுவார். நான் திரும்ப முத்தமிட்டதில்லை. என் வழக்கம் அதுவல்ல. இப்போது மானசீகமாக அத்தனை முத்தங்களுக்கும் ஒரு பதில்முத்தம்.
புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.
புனத்தில் பேட்டி
தோன்றாத்துணை
ஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்