மையநிலப் பயணம் – 5

33

நர்மதைக்கரையில் ஜபல்பூரிலிருந்து 15 கிமீக்கு அப்பால் உள்ள பேடாக்கட் என்னும் இடம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே முக்கியமான சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு நர்மதை ஓர் அருவியாக விழுந்து இருபுறமும் ஓங்கி எழுந்துள்ள சலவைக்கல் மலைகளை ஏறத்தாழ நூறு அடி ஆழம் வரை அரித்துச் செல்கிறது. தொடர்ச்சியான அருவிப் பொழிவாலும் ஆற்றுப்பெருக்காலும் உருவாக்கப்பட்ட சலவைக்கல் வடிவங்கள் இங்கே சுற்றுலாப்பயணிகளை இழுத்துவருகின்றன.

 

பகல் முழுக்க காரில் பயணம் செய்து பேடாகட்டுக்கு நாங்கள் மாலை 7 மணிக்கு வந்து சேர்ந்தோம்..பேடாகட்டிலேயே ஏராளமான விடுதிகள் உள்ளன. பெரிய விடுதிகள் அனைத்து வசதிகளும்கொண்டவை, செலவேறியவை. நாங்கள் தேடிக்கண்டடைந்த விடுதி ஒரு சிற்பத்தொழிற்சாலைக்கு மேலே இருந்தது. வாயில் குழந்தையை கவ்விப்பிடித்த காளிக்கும் கணவனை காலடியில் போட்டு மிதிக்கும் காளிக்கும் நடுவே உடலை ஒசித்துச் சென்று சலவைக்கல் படிகளில் ஏறி எங்கள் அறையை அடையவேண்டும்

 

அறை வசதியானதல்ல என்று சொல்ல முடியாது. வழக்கமாக நான் ஏழுமணி வாக்கில் விடுதி அறையை அடைந்ததுமே கணிப்பொறியை எடுத்து வெண்முரசு அத்தியாயங்களையும் பயணக்கட்டுரையையும் குறிப்புகளையும் எழுதத்தொடங்குவேன். 12 மணி வாக்கில் தான் பணிகள் முடிந்து படுப்பேன் .நண்பர்கள் கிளம்பி ஊரை ஒரு சுற்று சுற்றி வருவார்கள். எங்காவது கடையைக் கண்டுபிடித்து இரவுணவு சாப்பிட்டுவிட்டு அவர்கள் வந்து சேரும் போது நான் தீவிரமாக எழுத்தில் மூழ்கியிருப்பேன்.

jabal

இரவுணவு உண்ணும் பழக்கமில்லையென்பதனால் எனக்கு இது வ்சதியாக இருந்தது. ஆனால் இரவில் இந்நகரங்களை சுற்றிப்பார்க்கும் அனுபவத்தை தொடர்ந்து இழந்து வந்தேன். பேடாக்காட்டிலிருந்து மேலே வந்த கிருஷ்ணன் “சார், இங்கு அருகே தான் அருவியென்று சொன்னார்கள் சென்று பார்க்கலாம்” என்றார். மணி அப்போது 10 ஆகிவிட்டிருந்தது. அன்றைய அத்தியாயத்தை ஓரளவு முடித்திருந்தேன். ஆகவே உடனே கிளம்பினேன்.

 

எங்கள் விடுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் அருவி இருந்தது. அருவிமுகம் ஒரு பெரிய கடைவீதிபோல. ஆனால் அத்தனை கடைகளும் மூடியிருந்தன. ஏராளமான கடைகள் அரசாங்கத்தால் கட்டி முன்னர் வாடகைக்கு விடப்பட்டவை. அவற்றில் பாதிக்கு மேல் இடிந்து காலியாக இருந்தன.அவற்றின் முன்னால் சேலைகளை துணியாக கட்டி மறைத்து அங்கு வாழும் பிச்சைக்காரர்கள் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டிருந்தனர். சில பிச்சைக்காரர்கள் கைக்குழந்தைகளை தெருவிலேயே போட்டு தூங்கிக்கொண்டிருந்தனர். அந்தக் கடைகளை அப்படியே முப்பதாண்டுகளுக்கு முன்னர் கண்ட நினைவு

 

எங்கும் இளங்குளிரில் உற்சாகம் அசைந்த நட்பான தெருநாய்கள். அந்த சாலைகளில் வழிதேடி இருளுக்குள் செல்பேசி வெளிச்சத்தில் சுற்றிச் சுற்றி வந்தோம். ”அருவியின் ஓசை கேட்கவில்லையே” என்று செல்வேந்திரன் சொன்னார். அருவி நம் காலடியில் இருந்து ஆழத்திற்கு விழுமென்றால் அங்கே ஓசை தொலைவில் எழாது என்று நான் சொன்னேன். படிகளில் இறங்கி இடுங்கிய சந்துகளில் சுற்றிச் சுற்றி சென்றோம். ஒரு மூடப்பட்ட சந்தைக்குள் அலைவது போல் இருந்தது.

2

 

பின்னர் அருவியின் ஓசை கேட்கத்தொடங்கியது. ஒரு கடை முன்னால் இருவர் அமர்ந்து ஹுக்கா குடித்தபடி பேசிக்கொண்டிருந்தனர். மற்றபடி அங்கும் எவருமில்லை.. அருவியைப்பார்ப்பதற்காக இரும்பு கிராதி போட்ட மலைவிளிம்புகள் இருந்தன. இருளில் வெண்ணிறமாக பெருகி கீழே கொட்டிக்கொண்டிருந்த அருவி நயாகராவின் குஞ்சுகளில் ஒன்று என்று சொல்லலாம் – வெண்ணிற நாரைக்குஞ்சு. அதுவே ஒரு வெண் தழலாக வெளிச்சத்தை எழுப்பி அப்பகுதியை கண்ணுக்குக்காட்டியது.

 

நிழல் வடிவங்களாக இருபுறமும் மலைகள். அருவியிலிருந்து எழுந்து எங்கள் மேல் அறைந்த நீர்ப்பிசிர்கள். எண்ணத்தை ஒருங்கிணைக்கும் நீரின் ஓங்காரம். ஒருவகை அச்சமும் உளஎழுச்சியும் பல்வேறு பேய்நினைவுகளும் எழுந்த இரவு. வெவ்வேறு  பாறை உச்சிகளில் ஏறி நின்று அருவியை பார்த்துவிட்டு பதினொரு மணிக்கு திரும்பி அறைக்கு வந்தோம்.

 

மறுநாள் காலையிலேயே எழுந்து சூரிய உதயத்தை அருவியின் அருகே வைத்து பார்ப்பதென்பது முடிவு செய்யப்பட்டது. ஆனால் 12 மணிக்கு படுத்து 6 மணிக்கு எழுவதென்பது அத்தனை எளிதல்ல. என் வழக்கம் அது என்பதால் நான் எழுந்து வெண்முரசு தட்டச்சு செய்யத்தொடங்கிவிடுவேன்.

3

 

விடுதியறையை உச்சிப்பொழுதுக்கு மேல் விட்டுச்செல்லலாம் என்றும் காலையில் குளித்தல் முதலியவற்றை செய்ய வேண்டாம் என்றும் முடிவெடுத்தோம். ஆகவே 7.30 மணிக்கு நர்மதைக்கரைக்கு செல்ல முடிந்தது. வழியோரக்கரையில் டீ குடித்ததுடன் சரி

 

நர்மதையின் படகுத்துறை மேலும் மூன்று கி.மீ தள்ளி இருந்தது. அங்கிருந்து ஆற்றுக்குள் சென்று இருபுறமும் எழுந்த சலவைக்கல் மலைகளைப்பார்ப்பதற்கு படகு வசதி உண்டு. படகுகள் பலவண்ணங்களில் அழகாக அணி செய்யப்பட்டவை. வெயிலுக்கு முன்னரே சென்றால் மட்டுமே மேற்கூரையில்லாமல் கூட்டிச்செல்கிறார்கள். எங்கள் படகு மிக மெல்ல எதிர்நீரோட்டத்தில் சென்றது. இருபுறமும் சலவைக்கல் மலைகள் மெல்லத் திரும்பின

 

சலவைக்கல் எனும்போது வழக்கமாக நன்கு வெட்டப்பட்டு நன்கு மெருகூட்டப்பட்ட பரப்பே அகக்கண்ணிலெழும். இப்பாறைகள் மிஞ்சிப்போன சப்பாத்தி மாவு போல, தரையில் படிந்த ஈரத்துணி போல, வெண்ணை போல தோன்றின. வடிவின்மை நமது விழிகளுக்கும் உள்ளத்திற்கும் அளிக்கும் திகைப்பு ஒர் அரிய அனுபவம் .உடனடியாக நமது உள்ளம் அவற்றை வடிவமாக மாற்றிக் கொள்ள முயல்கிறது. வடிவம் வடிவம் என்று தவித்து தெரிந்த அனைத்து வடிவங்களையும் நினைவிலிருந்து எழுப்பி அவ்வடிவின்மையில் பொருத்திப்பார்க்கிறது. நம் உள்ளத்தில் இத்தனை வடிவின்மைகள் குவிந்து கிடக்கின்றனவா என்ற தன்னறிதலே இவற்றைப்பார்ப்பதின் அனுபவம்.

_MG_4117

ஒவ்வொரு புடைப்புக்கும் முகங்கள் எழுந்து வந்தன. பறவைகள் யானைத்தலைகள், ஃபியட் கார்கள், எருதுப் புட்டம், குதிரைப் பிடரிகள்… பல இடங்களில் 20 அடிக்கு மேல் ஆழம் கொண்டது துல்லியமான தெளிந்த நீர். துடுப்பு போடும் ஓசை மட்டும் எழ மெல்ல ஒழுகிச்செல்லும் படகில் பாறைகளைப்பார்த்தபடி அமர்ந்திருப்பது ஒருவகையான தியான அனுபவமாக இருந்தது. நம் உள்ளத்தை பருவடிவமாக நாமே நோக்கிச்செல்வதுபோல.

 

திரும்பி வரும் வழியில் பாறை இடுக்கொன்றில் கூடு கட்டி அமர்ந்திருந்த சிறுகுருவிகளை பார்த்தோம். ஒவ்வொன்றும் கட்டைவிரல் அளவே இருந்தன. படகு கடந்து வந்துவிட்டது. புகைப்படம் எடுப்பதற்காக திரும்பிச்செல்வதற்குள் அம்புகள் போல எழுந்து பறந்துவிட்டன.  “தங்குவதற்கு இதைவிடச் சிறந்த இடத்தை அடைய முடியாது” என்று வினோத் பரவசம் அடைந்தார்.

_MG_4123

இப்பகுதியின் முக்கியமான சுற்றுலாக்கவற்சி என்பது சலவைக்கல்லில் செய்யப்பட்ட சிலைகள் விற்கும் கடைகள். ஆனால் ஒரு சிலைகூட கலையழகோ ஒத்திசைவோ கொண்டது அல்ல. நம்மூர் கொத்தனார்கள் படைத்து முச்சந்திகள் தோறும் நின்றிருக்கும் தலைவர்களின் சிமிண்ட் சிலைகள் போலக் கண்களைத் துன்புறுத்துபவை இவை.

சலவைக்கல் மலைகளிலிருந்து திரும்பி வருவதற்கு இரண்டு மணிநேரமாயிற்று. வெயில் எழுந்துவிட்டிருந்தது மேலே வந்து அறையை ஒழித்து கிளம்பிச்சென்றோம். செல்லும் வழியில் தமோ என்னும் இடத்தில் அமைந்த சித்தேஸ்வரர் ஆலயத்தை பார்ப்பது மட்டுமே அன்றைய பொழுதின் சுற்றுலாத்திட்டம்.

_MG_4126

தமோ சித்தேஸ்வரர் ஆலயம் சாலையோரத்திலேயே அமைந்திருந்தது. இப்பகுதிகள் வலுவாக இருந்த ஆதிசைவ மரபு சார்ந்தது. உக்கிரமான சாமுண்டி காலபைரவர் சிலைகள். நாகரபாணியிலமைந்த சிவப்புக்கல் கோபுரம். இக்கோபுரத்தின் அணிச்செதுக்கை கொன்றைமலர் வளையங்கள் என்கிறார்கள். அதை அறிந்தபின் நோக்கினால் கொன்றைமலர்க்கொத்து போலவே தோன்றும்.

இந்த சிவன்கோயில் உள்ளூரில் நொஹ்லீஸ்வரர் ஆலயம் என அழைக்கப்படுகிறடு. இந்த சிற்றூரே இதன்பெயரால் நொஹ்டா எனப்படுகிறது. காலச்சூரி வம்சத்தின் அவனிவர்மனின் அரசியால் கிபி பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இது. அரசி கீழைச்சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்தவர் . ஆகவே சாளுக்கியக் கட்டிடக்கலையின் அம்சம் இந்த ஆலயத்தில் உள்ளது.

இவ்வாறு பயணங்களில் ஒரு குறிப்பிட்ட வகை கோயில்கலையை திரும்பத்திரும்ப பார்ப்பதென்பது திரைவிழாக்களில் படங்களைப் பார்ப்பதுபோல. வேறெங்கும் நாம் ஒரேநாளில் ஐந்து சினிமாக்களைப் பார்க்கமாட்டோம். சற்றும் சலிப்பு உருவாவதில்லை, பார்த்தவை நினைவில் வலுவாக நீடிக்கவும் செய்கின்றன, காரணம் இந்த மனநிலை அளிக்கும் அகக்கூர்மை

 

 

 

 

 

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 45
அடுத்த கட்டுரைகுழந்தை இலக்கியம் -நிறைவு