மையநிலப் பயணம் – 4

pach1

1857-ல் தான் ஜான்சிராணி லக்ஷ்மிபாயின் தலைமையில் இந்திய சிப்பாய்க்கலகம் நிகழும்போது குவாலியரிலிருந்து பிரிட்டிஷ் ராணுவம் கேப்டன் ஜேம்ஸ் ஃபோர்ஸித்  தலைமையில் சுபேதார் மேஜர் நாதுராம் பொவார் துணைவர ஜான்சி நோக்கிச் சென்றபோது வழியில் சிறிய மலைமேல் அமைந்த சமநிலம் ஒன்றைக் கண்டடைந்தனர். உண்மையில் அனல் கக்கும் கோடையில் அவர்கள் படைவீரர்கள் மயங்கி விழுந்து இறந்துகொண்டிருந்தபோது இங்கிருந்த பழங்குடி ஒருவரால் இந்த இடம் அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

பிரிட்டிஷ் படைகளுக்கு உகந்த தட்பவெப்ப நிலைகொண்டது இப்பகுதி என்று உடனடியாகக் கண்டடையப்பட்டது. இங்கே பிரிட்டிஷ் படைகள் ஏறத்தாழ எட்டு மாதம் தங்கியிருந்தனர். ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் கொல்லப்பட்டு சிப்பாய் புரட்சி அடக்கப்பட்டபின் நிரந்தரமாக இங்கொரு ராணுவமுகாம் அமைக்கப்பட்டது. இன்றும் இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய பயிற்சி மையமும் முகாமும் இந்த மலைமேல் அமைந்துள்ளது.

pach2

[குகை ஓவியங்கள் பச்மாரி]

பச்மாரி என்றால் உள்ளூர் மொழியில் ஐந்து குகைகள் என்று பொருள். இங்கே ஐந்து குடைவரைக் கோயில்கள் உள்ளன. இங்கு வாழ்ந்த கோண்டு பழங்குடிகள் அவர்களின் ஐந்து தெய்வங்கள் குடியிருக்கும் குகைகளாக இதைக் கருதியிருந்தார்கள். உண்மையில் அவர்கள் இங்கு வந்து தங்கள் ஊரை அமைக்கும் முன்னரே இப்பகுதி பௌத்தர்களின் உறைவிடமாக இருந்தது. கோண்டு பழங்குடித்தலைவர்கள் இதை ஆண்டுகொண்டிருக்கையில்தான் பிரிட்டிஷ் படைகள் மேலெழுந்து வந்தன. அவர்களுக்குக் கப்பம் கட்டும் சிற்றரசாக இருக்க அவர்களின் தலைவர் ஒப்புக்கொண்டார்.

ஐந்து குகைகளில் மூன்று பணிமுடியாதவை. இரண்டு முழுமையாகச் செதுக்கப்பட்ட பௌத்த ஆலயங்கள். மென்மையான கல்லில் அமைக்கப்பட்டவை. ஐந்து என்ற எண்ணிக்கை எதுவும் பாண்டவர்களுடன் இணைக்கப்படுவது போல பீமன் உட்பட ஐந்து பாண்டவர்கள் வந்து தங்கிச் சென்ற குகைகளாக இவை அடையாளம் காணப்பட்டன. இக்குகைகள் எதிலும் எந்த சிலை உருவங்களும் இல்லை. ஆர்வம் மிக்க சுற்றுலாப்பயணிகள் தொலைக்காட்சி பீமனை நினைவில் கொண்டு பரவசங்களை மெல்லிதாக அடைந்து பூரி சாப்பிடும் இடம் இது

 

pach3

[சலோ சாத்தான்குளம்! செல்வேந்திரன் அறைகூவல்]

பச்மாரி சாத்பூரா மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. மலைவாசஸ்தலமென்பது ஒரு பொதுவான நம்பிக்கை. இன்று பச்மாரியில் எங்கு நின்றாலும் வெயில் நன்றாகக்கொளுத்தும். அதாவது, ஏற்காடு போல குளிரூட்ட வசதி இல்லா அறைகளில் தூங்க முடியாது. இந்தியாவின் எல்லா மலைவாசஸ்தலங்களும் சென்ற ஐம்பதாண்டுகளில் எந்தக்கட்டுபாடும் இல்லாமல் கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டு கட்டிட குவியல்களாக மாறியிருக்கின்றன. சாக்கடை மணமும் குப்பைக்குவியல்களும் சிறுவணிகர்களும் வழிகாட்டிகளும் முட்டிமோதித் ததும்பும் இண்டு இடுக்குகளின் தொகுப்பு என நம் மலைவாச ஸ்தலங்களைச் சொல்லலாம்.

 

pach11

விழுந்து கிடக்கும் மரத்தடியில் வெண்காளான்கள் பூத்திருப்பது போல இடைவெளியே இல்லாமல் மலையை கட்டிடங்கள் நிரப்பியிருக்கின்றன. இந்தக் கட்டிடங்களைப்பார்க்கையில் மனிதர்கள் ஒருவகையான பாக்டீரியாக்களோ என்ற எண்ணம் வருகிறது. பாக்டீரியாக்கள் குடியிருக்கும் இடம் பொருக்கு படிவது போல இந்தக்கட்டிடங்கள் பூமி மேல் எழுகின்றன. வானிலிருந்து பூமியைப்பார்க்கும் தேவன் பூமி முழுக்க இந்த நோய் பாதிப்பும் அதன் புண் பொருக்குகளும் நிறைந்திருப்பதை இன்று காண்பான் என்று நினைக்கிறேன்.

தீபாவளியை ஒட்டி குஜராத்தில் பதினைந்து நாட்களுக்கு மேல் விடுமுறை ஆகவே பச்மாரியில் எங்கு பார்த்தாலும் அடர்த்தியான வண்ணத்தில் உதட்டுச்சாயம் பூசி பளிச்சிடும் வண்ணங்களில் சேலைகளும் சுடிதார்களும்  அணிந்த குட்டையான வெண்ணிறப்பெண்களும் அவர்களைக்கூட்டி வந்த ஒல்லியான பையன்களும் குட்டைக் கால்சட்டை அணிந்து பையனாக முயலும் சேட்டு மாமாக்களும் நீர்மிகுந்த சப்பாத்தி மாவுபோல வடிவு தளர்ந்து கண்கூசும் வண்ண ஆடைக்குள் இருந்து கண்ட கண்ட இடங்களில் பிதுங்கும் சிற்றுருவச் சேட்டானிகளும் நிறைந்திருந்தனர். வழக்கம் போல அவர்கள் அனைவரும் எதையாவது தின்றுகொண்டிருந்தனர்.

பொதுவாக நம்மூர் கணக்கில் மார்வாடிகளும் குஜராத்திகளையும் பார்த்து பார்த்து இவர்கள் அனைவரும் தொந்தி தொப்பையுடன் இருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். தென்னகச் சேட்டுக்கள் எல்லாருமே வணிகர்கள். கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து அதே வடிவில் உடலை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். வடஇந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் கொழுக்குமொழுக்கென்று இருப்பவர்கள் எங்கள் குழுவைச்சேர்ந்தவர்கள் மட்டுமே. குறிப்பாக ராஜமாணிக்கம், பெங்களூர் கிருஷ்ணன், வினோத், சிவா போன்றவர்கள் இளைத்தவனின் கண்ணுக்கு இனிய விருந்தாக அமையும் உடல் கொண்டவர்கள். தமிழகத்தின் உணவுநிலை குறித்த நன்மதிப்பை பச்மாரியில் நாங்கள் உருவாக்கினோம்.

pach

சுற்றுலா பயணிகளுக்கே உரியமுறையில் எதைப்பார்ப்பது என்ன செய்வதென்று தெரியாமல் எல்லாவற்றையும் பார்த்து எதையாவது செய்துகொண்டு இருப்பவர்கள். கண்டதை வாங்கித் தின்பவர்கள் என எங்கும் முகங்கள்.  பாவமாக இருந்தது அவர்களைப் பார்க்க. தொலைவில் தெரிந்த மலைகளை நோக்கி மின்னொளி வீசி செல்பேசியில் படம் எடுத்துக்கொண்டார்கள். கட்டைவிரலைக் காட்டி தற்படம் எடுத்து தானே பார்த்து தலையை நீவினார்கள். தேவையில்லாமல் “சோட்டு டோண்ட் கோ” என ஆங்கிலத்தில் கூவினார்கள்.

கேளிக்கையை அனுபவிப்பதற்கு ஒரு மனப்பயிற்சி வேண்டும். உண்மையில் பண்பாட்டு நடவடிக்கை ஒன்றே கேளிக்கையாக மாறுகிறது. அது முறைப்படுத்தப்படுகிறது, எளிதாக்கப்படுகிறது. பண்பாட்டுடன் அன்றாடத் தொடர்பும் அதன் விளைவான பயிற்சியும் இல்லாதவர்களால் கேளிக்கைகளை அனுபவிக்க முடியாது. வருடத்துக்கு ஒருமுறை விடுமுறை எடுத்துக்கொண்டு இம்மாதிரி இடங்களுக்கு வரும் பண்பாட்டு பயிற்சியே இல்லாத மக்கள் எந்தக்கேளிக்கையுமே அடையமுடியாமல் தத்தளிக்கிறார்கள்.

அவர்களுக்குத் தெரிந்த கேளிக்கை என்பது தின்பது மட்டும்தான் ஆகவே கீறிய மாங்காய், துண்டு துண்டாக நறுக்கிய தேங்காய், புளிப்புகலந்த சுண்டல், வெங்காயம் துருவிப்போட்ட பக்கோடா என்று எதையாவது தின்று மகிழ்கிறார்கள். ஊரில் எதைப்பேசிக்கொண்டிருக்கிறார்களோ அதையே வந்த இடங்களிலும் பேசுகிறார்கள். ஊரில் இருக்கையில் அபூர்வமாக அமையும் உற்சாகமான தருணங்களை இங்கு வந்து நடிக்கிறார்கள். அது பெரும்பாலும் தங்களுக்குள் உள்ள ஒருவரை எதன்பொருட்டாவது தொடர்ந்து கேலி செய்து கொண்டே இருப்பதும் சிரிப்பதும்தான்

 

pacj3

இந்த மனநிலை அந்த குழுவுக்குள்ளேயே அவர்கள் சுருங்கிவிடவே வாய்ப்பளிக்கும் இந்த விடுமுறை முடிந்து திரும்பி செல்கையில் அவர்கள் எதையுமே பார்த்திருக்க மாட்டார்கள். தங்களூரில் ஒரு அறையில் அமர்ந்து எதைக்கொண்டாடியிருப்பார்களோ அதுதான் இங்கும் நிகழ்ந்திருக்கும். இந்தக் கொண்டாட்டம் ஓரளவுக்கு பயணத்துக்கு தேவை. அவ்வப்போது பயணத்தின் சலிப்பை அது போக்கலாம் ஆனால் முழுப்பயணமும் அவ்வாறு அமைவதென்பது மொத்தப்பயணத்தையும் விழிகளில் இருந்து மறைத்துவிடும் .

ஏனெனில் பயணத்தில் மூன்றுவகையான மனநிலைகள் அமைகின்றன ஒன்று, இத்தகைய கேலிக்கொண்டாட்டம். இன்னொன்று, தனிமையின் ஆழ்ந்த அவதானிப்பு நிலை. .மூன்றாவது, புதியன காண்பது, கண்டவற்றை ஏதோ வகையில் சொற்களாக மாற்றி உள்ளே அடுக்கிக்கொள்ளும் முயற்சி.

முறையாகப்பார்த்தால் மூன்றாவது செயல்பாடுதான் பெரும்பாலும் நிகழவேண்டும். மலைகளையோ குகைகளையோ பார்க்கையில் அதன் நுட்பங்களைப் பற்றி பேசிக்கொள்ள வேண்டும். ஒருவர் பார்த்ததை பிறிதொருவர் பார்த்திருக்கமாட்டார். ஒருவருக்கெழும் ஐயம் பிறிதொருவருக்கு எழுந்திருக்காது. அந்தப்பேச்சினூடாக அவற்றை அகவயப்படுத்திக்கொள்கிறோம். பின்னர் ஊருக்குச் சென்று நினைத்துப்பார்க்கையில் அவ்வாறு பேசிக்கொண்டதுடன் இணைத்துத்தான் காட்சிகள் நம் நினைவில் நிற்கும். எத்தனை அற்புதமான இடமாக இருந்தாலும் அதைப்பார்த்துவிட்டு அதைப்பற்றி சற்றும் பேசாமல் சிந்திக்காமல் அங்கிருந்து கடந்துவந்தால் அதைப்பற்றி மிகத் தெளிவற்ற சில சித்திரங்களே உள்ளத்தில் எஞ்சுகின்றன. அது பயணத்தை வீணடிப்பதே தான். தியான மனநிலை அரிதாகவே அமையும் ஆனால் அதை எளிய கேலி கிண்டல்களால் சிதைக்காமல் இருக்கவேண்டும்.

 

pacj2

   (அண்ணா தள்ளி விடாதாங்ணா ?வீர ராஜ மாணிக்கம்)

பச்மாரியில் நாங்களும் சுற்றுலாப்பயணிகளாக வாழ்ந்தேயாகவேண்டிய நிலை. ராஜமாணிக்கமும் செல்வேந்திரனும் புரவியில் ஏறி கை தூக்கி அறைகூவினர். சோடா ஊற்றிய நிம்புபானி குடித்தார்கள். நான் முதல்நாள் அதைக்குடித்தேன். அதில் சேர்க்கப்பட்ட கல்லுப்பு மலையில் வெட்டி எடுக்கப்பட்டது. சற்றே கந்தகம் இருக்கும். அது என்னை பீரங்கியாக ஆக்கியமையால் தவிர்த்துவிட்டேன்.

பச்மாரியின் ஐந்து குகைகளையும் மிக விரைவிலேயே பார்த்துவிட்டோம். பூனா பகுதியில் மலைநிலமெங்கும் சிதறிக்கிடக்கும் நூற்றுக்கணக்கான குடைவரைகளை நினைவுகூர்ந்தேன். கிமு ஒன்றாம் நூற்றாண்டில் அமைந்த கார்லே, ஃபாஜா, ஃபானா. பௌத்த மடாலயங்களை கண்டது அரிய அனுபவம். இங்குள்ள குகைகள் கி.பி.5-ம் நூற்றாண்டு வாக்கில் அல்லது அதற்கு முன்பு செதுக்கப்பட்டவை .அன்று இங்கு கோண்டு பழங்குடிகள் மிக அரிதாகவே இருந்திருப்பார்கள். இதன் உயரம் காரணமாக இங்கு பௌத்தர்கள் வந்து தங்கியிருக்கலாம்.

பச்மாரிக்கு நாங்கள் வந்த காரணம் இங்கிருக்கும் குகை ஓவியங்கள் தான். ஆய்வாளராகிய மீனாட்சி துபே இந்தியாவின் முக்கியமான குடைவரை ஓவியங்கள் இங்குதான் உள்ளன என்றும் பிம்பேத்காவை விடவும் அளவில் சிறியவை என்றாலும் பண்பாட்டு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் எழுதியிருக்கிறார்.ஆனால் இங்கு வந்த பின்னர் தான் பச்மாரி மலைப்பகுதிக்குள் தான் அது இருக்கிறதென்றும் முறையான வழிகாட்டி இல்லாமல் அங்கு செல்ல இயலாதென்றும் அதற்கு முன் அனுமதி பெறவேண்டும் என்றும் தெரிந்தது.

கூகுளில் பச்மாரி குகைகளைதேடி வைத்துக்கொண்டு தென்படுபவர்கள் அனைவரிடமும் கேட்டோம். எவருக்கும் அந்த குகை இருக்கும் இடமே தெரியவில்லை. சுற்றுலா வழிகாட்டிகள் கூட அப்படி ஒரு குகையே அங்கு கிடையாதென்பதை ஆணித்தரமாக எங்களுக்குத் தெரிவித்தனர். படாமகாதேவ் மந்திர் என்னும் பேரில் சிவன் கோயிலொன்று அங்கிருப்பதாக சொன்னதை நம்பி சென்றோம். அங்கே குகைகள் உள்ளன என்றது கூகிள். பறந்துபோனால் அருகிலிருக்கும் குகை ஓவியங்களை பார்க்கமுடியும் என்பது உண்மை.

இயற்கையாக அமைந்த மூன்று குகைகளுக்குள் சிறிய சிவலிங்கங்க்ளை பிரதிஷ்டை செய்து ஆலய்ங்களாக்கியிருக்கிறார்கள். சென்ற ஐம்பது அல்லது நூறாண்டுக்ளுக்குள் நிறுவப்பட்டிருக்கலாம். குகை மேலிருந்து நீர் கசிந்து ஈரமாகி சில்லென்றிருந்தது. பெரிய குகைக்குள் செல்லும் வழிக்கும் வரும் வழிக்கும் நடுவே சிறிய ஒரு குளம் .அதன் இருண்ட கரிய நீரில் மேலிருந்து சொட்டும் நீரால் கரிய அலைகள் இளகிக் கொண்டிருந்தன. விளக்கொளியில் சிவலிங்கத்தின் அருகே அர்ச்சர்கர் அமர்ந்து சென்று வருவோரிடம் ஓரிரு ரூபாய்களைப்பெற்றுக்கொண்டு பூசை செய்து கொண்டிருந்தார்.

பச்மாரியில் நாங்கள் வந்து திரும்புவது கிருஷ்ணனின் வழக்கமான பயணக்கணக்குகளில் நேர்ந்த பிழை .பச்மாரி கண்ட்வாவில் இருந்து 50கி.மீக்குள் தான் ஆகவே ஒருமணிநேரத்தில் சென்றுவிடலாம் என்பது திட்டம். அது மேட்டுப்பாளையத்திலிருந்து 50கி.மீ தொலைவில் இருக்கும் ஊட்டிக்கு ஒருமணி நேரத்தில் சென்று வருவதைப்பற்றிய கணக்குபோலத்தான். ஆகவே பொழுது மிக நீண்டது. பச்மாரியில் இரவெல்லாம் வாடகை அறைக்காக தேடி இங்கு வந்து குவிந்திருந்த குஜராத்திகளைக் கடந்து கெஞ்சி மன்றாடி மூன்று அறைகளைப்பெற்று தங்க வேண்டியிருந்தது.

பச்மாரி ஒரு மலைவாசஸ்தலத்துடைய அனைத்து இலக்கணங்களையும் கொண்டிருந்தது. குளிரைத்தவிர .அத்தனை கட்டிடங்கள் இருக்கையில் அங்கு டிசம்பர் ஜனவரியில் மட்டுமே குளிர் இருக்க வாய்ப்பு. ஒருவேளை சமநிலத்தில் அதைவிட அதிகமாக குளிர் இருக்கக்கூடும் அப்போது. பச்மாரியிலிருந்து பன்னிரண்டு மணிக்கு ‘மலையிறங்கி’ ஜபல்பூர் நோக்கிச் சென்றோம். வழியிலேயே ஓர் உணவகத்தில் மதிய உணவு. நான் தயிரை சோறுடன் பிசைந்து கரண்டியால் அள்ளி சாப்பிட்டு எழுந்தேன். இந்தப்பயணத்திற்குப் பின்னரும் எனக்கு எடைகுறையவில்லை என்றால் வேறுவழியே இல்லை

 

முந்தைய கட்டுரைகடைசிமுகம் -கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 45