மையநிலப் பயணம் – 2

neme1

காண்ட்வா விடுதியில் தூங்கி எழுவதற்குள் பகல் அணுகிவிட்டது. முந்தைய நாளின் நீண்ட பயணத்தின் களைப்பு. குளித்துக்கிளம்பும்போது நல்ல வெயில் வழியிலேயே ஒரு உணவு விடுதியில் போகோ என்னும் அவல் உப்புமாவும் புளிப்பு கலந்த ஜாங்கிரியும் சாப்பிட்டோம். இங்கு காலை உணவு என்பது பெரும்பாலும் இதுதான். போகோ நனைத்த அவல் மீது ஒரு விதமான் ராமராஜன் பச்சை ஏற்றப்பட்டு காரசேவு போல ஒன்று மேலே தூவப்பட்டு தரப்படும்.  சம்மந்தமில்லாமல் தமிழ் சினிமாவில் வரும் பாட்டைப்போல அதில் அந்த உப்புக்காரத்திற்குள் இனிப்பும் கலந்திருக்கும். 

லட்டு கிடைக்கும் ஆனால் பிம்பேத்கா குகை காலகட்டத்திலிருந்தே வந்தது என்று தோன்றும் அளவுக்கு பழமையானது. ஜாங்கிரி சூடாக இருக்கும், ஆனால் புளிப்பு கலக்கப்பட்டிருப்பதனால் ஒருசர்பத்தை கெட்டியாக சாப்பிடும் உணர்வு ஏற்பட்டுக்கொண்டிருக்கும். இங்கு காலையில் வடாபாவ் அல்லது போகோ சாப்பிட்டுவிடுவார்கள். வடாபாவ் என்பது பன்னுக்குள் வைக்கப்பட்ட போண்டாவுக்குள் வைக்கப்பட்ட பச்சைமிளகாய்.  பன்னிரண்டு மணிக்கு ரொட்டி. இரவு மீண்டும் ரொட்டி .

neme2

 

சலிக்காமல் ரொட்டியே சாப்பிடுகிறார்கள் என்று வெளியே இருந்து வருபவர்களுக்குத் தோன்றும். தமிழகத்தில் நாம் சலிக்காமல் சோறும் இட்லியும் தின்று கொண்டே இருக்கிறோம். உலகம் முழுக்க மக்கள் ஒரே உணவை மீண்டும் மீண்டும் சாப்பிடுவதற்கே விரும்புகிறார்கள். ஒரே உணவு ஒரே பொழுதில் ஒரே இடத்தில் அருந்துவதே விலங்குகளுக்கு பிடித்தமானது என்பார்கள். மனிதன் தான் விலங்கல்ல என்று நினைத்துக்கொண்டிருக்கும் விலங்கு. 

பின்காலை ஒளி எழுந்துகொண்டிருந்த பொழுதில் நேமவார் சித்தேஸ்வரா ஆலயத்திற்குச் சென்றோம். 9 ஆம் நூற்றாண்டில் பார்மர் மன்னர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம் கஜுராகோ பாணி கட்டிடக்கலையின் சாதனைகளில் ஒன்று. சோளக்கதிர் போன்ற அடுக்குகள் கூம்பி வளைந்து சென்று கல்தாமரை கவிழ்ந்த உச்சியில் முடிகின்றன. நூற்றுக்கணக்கான சிறிய அலகுகளாகச் செய்யப்பட்டு மிகத்துல்லியமாக அடுக்கப்பட்டு இந்த அமைப்பு உருவாகிறது. கீழே நட்சத்திர வடிவுள்ள அடித்தளம். மேல் முனைவரை வளைகோடாக ஏறிச்செல்லும் கட்டமைப்பு. இதை பூமிஜர் கட்டிடக்கலை என்கிறார்கள்.

neme3

காலையின் ஒளியில் செந்நிறமான ஆலயம் பொன்னால் ஆனதுபோல மின்னிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு சிலையாக நின்று நோக்கிக்கொண்டு சுற்றி வந்தோம். அணுகும்போது மரத்தாலானவை என்றும் அப்பால் நிற்கும்போது வெண்கலத்தால் ஆனவை என்றும் விழிகளுக்கு மாயம்காட்டுபவை. காலபைரவர், சாமுண்டி, விஸ்வகர்மர் சிலைகள். 

தெற்கே அதிகம் இல்லாத சிலை இங்கே அடிக்கடிக் காணப்படும் சாமுண்டி. எலும்புருவம். பைகள் போன்ற முலை. எலும்புவரிகளான வயிறு. மண்டையோட்டு மாலை. காலடியில் பூதங்கள். சூலம், அக்‌ஷமாலை. சில இடங்களில் கையில் வெட்டப்பட்ட தலை. அதன் குருதியை பூதங்கள் எட்டிக்குடித்துக்கொண்டிருக்கும். பயங்கரவசீகரம் என்னும் சொல் மௌனியின் கைரேகை கொண்டது. அதற்கு மிகப்பொருத்தமான சிலை சாமுண்டி

neme4

நர்மதையின் படித்துறையில் பலர் குளித்துக்கொண்டிருந்தார்கள். நர்மதையை நோக்கியபடி நர்மதாதேவியின் சிறிய ஆலயம் அமைந்திருந்தது. ஆஞ்சநேயர் உட்பட ஏராளமான தெய்வங்களின் சிறிய கோயில்கள் நதிக்கரை எங்கும் பரவியிருந்தன. ஆலயச்சந்து ஒன்றில் நால்வர் அமர்ந்து சிலும்பியை மாறி மாறி அளித்து கஞ்சாவை இழுத்துக்கொண்டிருந்தனர்.

திரும்பும் வழியில் ஓர் ஆலயத்தைப்பார்த்தோம். அது ஒரு சமண ஆலயம். முதலில் தொல்லியல்துறையால் மீட்டுக் கட்டப்படுகிறது என எண்ணினோம். ஆனால் புதிதாகவே கட்டப்படுகிறது. பிரம்மாண்டமானது. பெரிய குவைமாடக் கோயிலின் இரு கைகளாக இருபத்துநாலு தீர்த்தங்காரர்களுக்கும் தனித்தனி சன்னிதிகள் இருந்தன.

neme6

பிம்பேத்கா குகையைச் சென்றடைந்த போது மதியம் 12 மணி. இந்தியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலம் நமது பாடப் புத்தகங்களில் கூட போதுமான அளவுக்கு எழுதப்படாத ஒன்று. சொல்லப்போனால் இந்திய வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை ஹரப்பா மொகஞ்சதாரோவோடு நிறுத்திக்கொள்வதே சம்பிரதாயமான வழக்கம். இந்திய சுதந்திரத்துக்குப்பின்னரே இந்தியாவின் வரலாற்று முந்தைய காலங்கள் மீது ஆய்வு வெளிச்சம் பட ஆரம்பித்தது. 

ஆனால் 1851 இந்தியாவை நிலஅளவை செய்த ஆங்கிலேயர் வரலாற்று முந்தைய பெரும்பாலான இடங்களை அடையாளம் கண்டு பட்டியலிட்டிருந்தார்கள். தொன்மையான பல கற்கருவிகளும் பானை ஓடுகளும் அப்போதே சேகரிக்கப்பட்டுவிட்டிருந்தன. முக்கியமான ஆய்வேடுகளில் ஒரிரு ஆய்வுக்கட்டுரைகள் வந்துள்ளன. ஆயினும் அவை முறையாக ஆய்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டு ஒரு பொது விவாதமாக ஆனது 1950களுக்குப்பிறகுதான் .இன்று வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைப்பற்றி இருக்கும் பொதுவான தெளிவு 20 ஆண்டுகளுக்கு முன்னர் கூட கிடையாது.

neme7

ஆனால் இன்னமும்கூட தமிழகத்தின் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைப்பற்றி இங்கே பண்பாடு சார்ந்து பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. அதை கீழடி குறித்து இங்குள்ள பண்பாட்டு அரசியலாளர்கள் உளறிக்குவித்ததில் இருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. அவை இங்கே கண்டுகொள்ளப்படாமைக்கு அவை ‘தமிழ்’ கலாச்சாரம் அல்ல ‘மானுட’க் கலாச்சாரம் சார்ந்தவை என்பதுகூட காரணமாக இருக்கலாம்.

1

[பிம்பேத்கா குகை ஓவியம். இதில் மட்டுமே விலங்கு மனிதனை வேட்டையாடும் சித்திரம் உள்ளது. கரடி ]

பண்டைப்பெருமை பேசப்படாத எவ்வரலாற்றிலும் தமிழர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. ‘உலகத்திலேயே பழமையான’ என்றுதான் ஒரு தமிழ் தொல்லியல் தடையத்தைப்பற்றி பேச விரும்புவார்கள். இல்லை அது இந்தியாவெங்கும் உள்ளது என்றாலேயே உற்சாகம் அணைந்துவிடும். வரலாறோ மானுடப்பண்பாட்டுப் பரிணாமமோ அறியாத ஒரு மொண்ணையான உயர்வுணர்ச்சி, அத்தகைய உயர்வுணர்ச்சிகள் ஆழ்ந்த தாழ்வுணர்ச்சியின் விளைவுகள் 

தமிழகத்தின் வர்லாற்றுக்கு முந்தைய காலகட்டத்தின் சான்றுகள் உள்ள முக்கியமான இடங்கள் பெரும்பாலும் அவற்றை நேரில் சென்று பார்த்து பதிவு செய்திருக்கிறேன். கருக்கியூர், கீழ்வாலை போன்ற குகை ஓவியங்கள். இடக்கல் போன்ற பாறைக்குடைவு ஓவியங்கள். புதுக்கோட்டையிலும் செங்கல்பட்டிலும் கோவை அருகே கொடுமணலிலும் உள்ள பெருங்கற்காலச் சின்னங்கள் போன்றவை பொதுவான வரலாற்று ஆய்வாளர்களும் பயணிகளும் அறிந்திருக்கவேண்டியவை. இவை 20000 ஆண்டுகளிலிருந்து 10000 ஆண்டு வரைக்கும் தொன்மையானவை. இந்தியா முழுக்கவே இதே போன்ற ஏராளமான குகை ஓவியங்கள் உள்ளன.

 

neme8

சத்தீஸ்கர் மாவட்டத்திலும் ஒரிசாவிலும் உள்ள குகை ஓவியங்களை குகைகளின் வழியே நூலில் விவரித்திருந்தேன். இந்தியாவின் குகை ஓவியங்களில் மிகப்பெரியதும் மிகத்தொன்மையானதும் தொடர்ந்து  ஒரு லட்சம்  ஆண்டுகளுக்கு மேலாக புழக்கத்தில் இருந்ததும் பிம்பேத்கா குகைகள் எனலாம். இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குகைஓவியங்கள் தொல்லியல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளன. பலமாதங்கள் தங்கி இதற்கென தனியான பயணம் மேற்கொண்டாலொழிய முக்கியமானவற்றைக்கூட பார்க்கமுடியாது.

பொதுவாக குகை ஓவியங்கள் வரண்ட நிலங்களில் உள்ள , மேட்டுப்பகுதியின் குகைகளிலேயே காணப்படுகின்றன. வரண்டநிலத்தில் அடர்காடுகள் இருக்காது. ஆகவே உலோகங்கள் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் காட்டை அழிக்காமலேயே தங்க இயன்றது வரண்டநிலங்களில்தான். வரண்ட நிலங்களில் மேய்ச்சல்விலங்குகளையும் சிறிய பிராணிகளையும் வேட்டையாடுவது எளிது.மேடுகளில் யானைகள் போன்ற கொலைவிலங்குகள் அணுகுவதில்லை. சட்டிஸ்கர், மத்தியப்பிரதேசம் போன்றவை கற்கால மானுடர்களுக்குரிய இடங்களாக இருப்பது இதனால்தான். காலந்தோறும் மக்கள் மலையிறங்கி ‘நாகரீகம்’ அடைந்தபடியே உள்ளனர். இறங்காதவர்கள் பழங்குடிகள் எனப்படுகிறார்கள். இந்தியாவில் மத்தியப்பிரதேசத்திலேயே பழங்குடிகள் அதிகம்

தொல்குகை ஓவியங்கள் அனைத்திற்குமான பொது அம்சங்கள் சில உண்டு. அவை வெள்ளை மற்றும் காவி நிறங்களால் வரையப்பட்டவை. வேறு வண்ணங்களால் வரைந்திருக்கலாம், ஆனால் நீண்ட காலப்பொழுதில் இவ்விரு வண்ணங்களே எஞ்சுகின்றன. இவ்விரு வண்ணங்களும் பாறைகளிலிருந்து எடுக்கப்பட்டவையாகையினால் பாறைகளில் படிந்து ரசாயன மாற்றமாக மாறி எஞ்சுகின்றன. எனவே நெடுங்காலத்தை கடந்து வருகின்றன.

neme11

இரண்டாவதாக, குகை ஓவியங்களில் விலங்குகளின் உருவங்கள் மிக உயிரோட்டத்துடன் இருக்கும். அவற்றின் வடிவங்கள் அசைவுகள் அனைத்தும் ஓவியனின் திறனைக்காட்டும். ஆனால் மனித உருவங்கள் தீக்க்குச்சி தீக்குச்சியாக வரையப்பட்டிருக்கும். தமிழகத்திலும் சட்டீஸ்கரிலும் உள்ள குகை ஓவியங்களில் சக்கரங்களும் சூரியனும் செதுக்கப்பட்டுள்ளன. சூரியனே ஒருவகையான சக்கரமாக அன்று அவர்களுக்குத் தென்பட்டிருக்கிறது. 

பெரும்பாலான எந்த குகை ஓவியங்களிலும் தெய்வம் விண்ணுலகம் போன்ற கருதுகோள்கள் கிடையாது. ஆனால் மீண்டும் மீண்டும் சூரியன் இடம் பெறுகிறது. சூரியன் அவர்களின் தெய்வமாக இருந்திருக்கலாம் என்பது ஓர் ஊகம். மூதாதையரின் ஆவிகள் மானுடரில் ஆவேசித்து எழுவதே அன்றைய மதமாக இருந்தது என்பது சூலம் ஏந்தி ஆடும் பூசாரிகளின் படங்கள் பல குகைகளில் இருப்பதிலிருந்து ஊகிக்கக்கூடியதாக உள்ளது. இந்த ஊகங்களை இன்றைய பழங்குடிகளின் பண்பாடுகளில் இருந்து பின்னால் சென்று உறுதிசெய்துகொள்கிறார்கள்

 

karl sagan

ஜியோமிதிக்கலான வடிவங்கள் பல குகைஓவியங்களில் உள்ளன. இவை ஓவியம் ஜியோமிதியை நோக்கி நகர்ந்ததற்கான அடையாளங்கள். அல்லது ஜியோமிதியை மானுடமனம் முதலில் கண்டடைந்ததா என்பது முக்கியமான வினா.  வேட்டைப்பொருட்களை அமைப்பது, கலங்களை அமைப்பது, கிராமங்களை அமைப்பது, என அதுவே பண்பாட்டை கட்டி எழுப்பிய பொருட்களின் அடிப்படை. 

இயற்கையில் எங்குமுள்ள வடிவின்மைகளில் இருந்து தோராயமான வடிவங்களையும் அவற்றில் இருந்து ஒத்திசைவுள்ள வடிவங்களைக் கண்டடைந்தது மானுட மனத்தின் ஒரு பெரும் பாய்ச்சல். அதுவே மனிதன் விலங்கல்லாமல் ஆன தருணம். அது மிகத்தொன்மையான குகை ஓவியங்களில் நிகழ்ந்துள்ளது. 

எப்படி நிகழ்ந்தது அது? எரிக் வேன் டேனிகன் போன்றவர்கள் அது வெளிக்கோள்மானுடரால் அளிக்கப்பட்ட கொடை என்கிறார்கள். ஆகவே உடைந்தபானைச் சிந்தனையாளர்கள் என அன்போடு அழைக்கப்படுகிறார்கள். கார்ல் சகன் மெய்யான அறிவியல் ஊகங்கள் உடைந்தலைகளில் இருந்தே உருவாகும் என்று அவருடைய புரோக்காஸ் பிரெய்ன் என்னும் நூலில் மிஸ்ட்ரி மோங்கர்ஸ் நைட் வாக்கர்ஸ் என்னும் அத்தியாயத்தில் சொல்கிறார்

 

neme10

அதேநூலில் வேற்றுகிரகங்களில் உயிர்அறிவு உள்ளதா என கண்டடைவதற்கான முதன்மைச் சான்றாக கார்ல் சகன் சுட்டிக்காட்டுவதும் ஜியோமிதி வடிவங்கள் உள்ளனவா என்று தேடுவதைத்தான். இயற்கையில் கண்ணுக்குத்தெரியும் ஓர் உலகில் இருந்து தன் மேதமை அறியும் ஓர் உலகை மானுட உள்ளம் உருவாக்கிக்கொள்வது ஜியோமிதியினூடாகவே. காண்டாக்ட் நாவலில் கார்ல் சகன் ‘பை’ என்னும் சூத்திரமே இயற்கையில் படைத்தவனின் கையொப்பம் என்கிறார். ஜியோமிதி வடிவங்களில் முதன்மையானதான வட்டத்தின் கணிதவடிவம் அது.

விழுப்புரம் அருகே உள்ள கீழ்வாலை ஓவியத்தில் கழுகு போன்ற பறவை தலைகொண்ட ஒருவனிடம் ஒருவனை இருவர் பிடித்து அழைத்துவரும் ஓவியம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குலத்தலைவன் குலக்குழு அடையாளம் கொண்ட தலையணிகளை அணிந்திருப்பதை காட்டுகிறது. இதிலிருந்தே பிற்காலத்திய கருடன், பிள்ளையார் ஆறுதலைமுருகன் போன்ற கடவுள் உருவகங்கள் எழுந்திருக்கலாம் என்பது ஓர் ஊகம். அனைத்து குகை ஓவியங்களிலும் தலையணிகள் சூடிய பூசகர்கள் முக்கியமாக இடம்பெறுகிறார்கள்.

je9

குகை ஓவியங்களில் வேட்டை பெருமிடத்தை பெற்றுள்ளது. விலங்குகளைச் சூழ்ந்துகொண்டு தாக்குவதும் வேல் ஏந்தி வேட்டையையே நடனமாக ஆடுவதும் பரவலாகக்காணப்படுகிறது. ஒருவரோடொருவர் கைகளைக் கோர்த்துக்கொண்டு நடனமாடும் வடிவங்களும் ஏராளமாகவே உள்ளன. இன்றுவரை நடனங்களில் வேட்டை அசைவுகள் உள்ளன. மிகமிக நளினகலையான பரதநாட்டியத்திலேயே கூட. மகிஷனை வதம்செய்தாயே என நடனக்கலைஞர் ஆடும்போது குகை ஓவியங்களின் பூசாரி தோன்றி மறைகிறார். 

பொதுவாகவே வேட்டையாடப்படும் விலங்குகளைப்பற்றிய மிக விரிவான சித்தரிப்புகள்தான் குகை ஓவியங்களில் உள்ளன். அரிதாகவே கொலைவிலங்குகள். இது உலகெங்கும் பொதுவானது. இதை ஏன் என்று பல கோணங்களில் ஆராய்ந்திருக்கிறார்கள். கொல்லப்பட்ட விலங்குகள் அக்கால மனிதர்களின் கனவுகளில் திரும்ப திரும்ப எழுவதனால் அவை கொல்லப்பட்டபின் பிறிதொரு உலகில் உண்மையில் வாழ்கின்றன என்று அவர்கள் நம்பியிருக்கலாம். அந்நம்பிக்கையை அவர்கள் ஓவியத்தில் வரைந்திருக்கலாம். அதாவது இக்குகை ஓவியங்கள் எதார்த்தத்தை அல்ல, கனவை பதிவு செய்பவை கனவிலிருந்துதான் கலையின் தொடக்கம்.

 

 

முந்தைய கட்டுரைஅனுபவமும் படைப்பும் -கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 43