மையநிலப் பயணம் – 1

a1

 

இவ்வாண்டு எழுதழல் எழுதுவதற்கு முந்தைய இடைவெளியில் ஒரு நீண்ட பயணம் செய்யலாமென்று கிருஷ்ணனிடம் சொன்னேன். எழுதி எழுதி கை ஓய்ந்த நாள் ஒன்றில் டீ குடிப்பதற்காக வீட்டிலிருந்து பார்வதிபுரம் சந்திப்புக்கு நடந்து சென்றபோது பதினைந்து நாட்களுக்கும் மேலாக ஒரே வீட்டில் தங்கி ஒரே வழியில் சென்று ஒரே டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. கிருஷ்ணனை அழைத்து எங்கே என்று தெரியாத ஊரில் எவருமே தெரியாத சூழலில் டீயா காப்பியா என்று தெரியாத ஒன்றை குடிக்கவேண்டும் என்று தோன்றுகிறது என்றேன். கிளம்பலாம் என்று அவர் சொன்னார்.

முதலில் மேகாலயா அருகே தவாங் சமவெளிக்குச் செல்வதாக திட்டம் இருந்தது. அங்கு செல்ல சில சிக்கல்கள் தடைகள் வந்தன. ஆகவே மத்தியப்ரதேசத்துக்குச் செல்லலாம் என்று அடுத்த திட்டம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிம்பேத்கா குகை ஓவியங்கள் சமீபகாலமாக உலகப்புகழ் பெற்று வருகின்றன. பிரான்ஸில் உள்ள புகழ்பெற்ற Lascaux  குகை ஓவியங்களுக்கு நிகரான தொன்மை கொண்டவை. பலவகையிலும் அதனுடன் ஒப்பிடத்தக்கவை. இஇவை இன்று யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ளது 

a2

ராஜமாணிக்கம் பிம்பேத்கா என்று தியானம் செய்ய ஆரம்பித்து சிலகாலம் ஆகிறது. முக்கியமான காரணம் பிம்பேத்காவை முதன்மையாக ஆய்வு செய்து அதன் புகழை உலகளவுக்குக்கொண்டு சென்றவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அதி தீவிர ஆதரவாளர்.

திட்டம் போட்டு அதை மேலும் ஒத்திப்போட்டு பல வகையிலும் அக்டோபர் 20-ம் தேதிதான் கிளம்ப முடிந்தது. என்னுடைய சினிமா வேலைகளும் வெளிநாட்டுப்பயணங்களும் உள்நாட்டுப்பயணங்களும்தான் தள்ளிப்போக முக்கியமான காரணம். ஒருவழியாக 20-ம் தேதி முதல் ஒன்பது நாட்கள் என தீர்மானமாகியது. நான் க்ரீன்பார்க்கில் தங்கியிருந்தேன். திரைவிவாதத்திற்காக. கே.பி.வினோத் முந்தைய நாள் இரவில் என் அறைக்கு வந்தார். விடியற்காலை 3.30 மணிக்கு காரில் கிளம்பி விமான நிலையம் வந்தோம். 

செல்வேந்திரன், சென்னை செந்தில், கிருஷ்ணன், சிவா, பெங்களூர் கிருஷ்ணன் ராஜமாணிக்கம், சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முந்தைய நாளே வந்து சென்னை செந்தில் இல்லத்தில் தங்கி அங்கிருந்தே காரில் கிளம்பி விமான நிலையம் வந்தனர். இரவு முழுக்க வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தேன். விமானம் 5.30 மணிக்கு கிளம்பியது. மும்பையில் 3 மணி நேர இடைவெளி. மதியம் பன்னிரண்டுமணிக்கு இந்தூரைச் சென்றடையும். பிறர் விமான நிலையத்தை சுற்றியலைய நான் வெண்முரசில் உத்தரை அபிமன்யூ முதலிரவை எழுதிக்கொண்டிருந்தேன்

3

அரைமணி நேரம் பிந்தி 12.30 மணிக்கு இந்தூர் வந்தடைந்தோம். மத்தியபிரதேசத்தின் முக்கியமான இருநகரங்களில் ஒன்று. போபால் அதன் தலைநகரமாயினும் வணிகத்தலைநகரம் இந்தூர் தான். பிரம்மாண்டமான அலுமினிய விமான நிலையம். 

சென்னை விமான நிலையம் இதே போல மாபெரும் அலுமினியக்கட்டுமானமாக உத்தேசிக்கப்பட்டது என்கிறார்கள். விமான நிலையங்கள் அலுமினியக் கட்டுமானங்களாகவே எப்போதும் கட்டப்படுகின்றன. அவற்றை அவிழ்த்து விரிவாக்குவது மிக எளிது எத்தனை முறை அவிழ்த்து கட்டினாலும் எதுவும் வீணாவதில்லை. மேலும் விமானங்கள் வந்திறங்கி மேலே செல்லும் நில அதிர்வையும் ஒலி அதிர்வையும் அலுமினியக்கட்டுமானத்தின் நெகிழ்வான பொருத்துகள் ஏற்றுக்கொள்ளும். சென்னை விமான நிலையம் அலுமினியக்கட்டுமானமாகத் திட்டமிடப்பட்டு ஊழலால் பெரும்பகுதிப்பணம் உண்ணப்பட்டு அதே மாதிரியில் கான்கிரீட்டால் கட்டப்படுகிறது என்றும் ஆகவேதான் விமானங்களின் இருக்கலாம், இந்தியாவில் எதுவும் நிகழலாம்.

.4A

விமான நிலையத்திலேயே இரு டவேரா வண்டிகள் எங்களுக்காக காத்திருந்தன. சென்னை செந்திலின் நண்பரும் வருவாய்த்துறையின் உயரதிகாரியுமான ஒருவர் ஏற்பாடு செய்தது. தமிழகக் கணக்குக்கு கார் வாடகை குறைவுதான். ஓட்டுநர்கள் முறையாக எங்களை வரவேற்றனர். வண்டிகள் எங்களுக்காகக் காத்து நின்றிருந்த இடம் தவறானது என்று சொல்லி ஐநூறு ரூபாய் தண்டனை விதித்தார் நீளமாக செந்தூர நாமம் போட்டு பீடா மென்றுகொண்டிருந்த வசூல் ஊழியர்.

ஐநூறு ரூபாய் கொடுத்துவிடுகிறோம், ஆனால் ரசீது வேண்டுமென்று சொன்னபோது திடுக்கிட்டார்கள். அந்த மாதிரியெல்லாம் கேட்பவர்களை அவர்கள் பார்த்ததில்லை. ரசீது எங்கிருக்குமென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. ரசீது கண்டிப்பாகத் தேவையென்று சொன்னதனால் ஒருவழியாக தேடிக்கண்டுபிடித்து ரசீது போட்டு வருவதற்குள் அரைமணி நேரமாகிவிட்டது. மத்தியப்பிரதேசத்தின் இப்போதைய அரசின் பொதுவான நிர்வாகத்திறன் என்ன என்பதற்கான அறிமுகமாக அத்தருணம் அமைந்தது.

 

_MG_3933

 

நேராகவே ஓம்காரேஸ்வர் ஆலயத்திற்குச் சென்றோம். இந்தூரில் இருந்து ஓங்காரேஸ்வர் 77 கிமீதான். ஆனால் வழியில் சாப்பிட்டு சற்றே அரட்டை அடித்து மெல்லச் சென்று சேரும்போது மாலையாகிவிட்டிருந்தது. பலவகையிலும் காசியை நினைவுறுத்தும் ஒரு தலம். நர்மதை ஆறு அடுக்கடுக்காக அமைந்த சேற்றுப்படிவப் பாறைகளை அறுத்து அறுபதடி ஆழத்தில் நீலநிறப் பெருக்காக ஓடுகிறது. அங்கே ஆதிசங்கரர் தனது ஜோதிர்லிங்கப் பிரதிஷ்டையில் ஒன்றைச் செய்தார் என்பது தொன்மம். அதற்கும் முன்னரே இங்கே காளாமுகர்களின் சிவாலயங்கள் இருந்திருக்கலாம். அன்று அணுகமுடியாத காடாக இப்பகுதி இருந்திருக்கும். 

இன்று ஆலயத்தைச் சூழ்ந்து ஒரு வழிபாட்டு நகரம் உருவாகி வந்திருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான வழிபாட்டு நகரங்களைப்போலவே நீர்பட்ட இடத்திலெல்லாம் புல் முளைப்பதைப்போல சற்றே இடவசதி இருக்குமிடத்தில் எல்லாம் கான்கிரீட்டாலும் தார்ப்பாய்களாலும் தகரப் பட்டைகளாலும் இன்னும் கையில் கிடைத்த அத்தனை பொருட்களாலும் கட்டப்பட்ட குடில்களும் வீடுகளும்.  இருவர் மட்டும் செல்லும் அளவுச் சிறிய சந்துகள் வந்து இணையும் தெருக்களின் வலை. நிறைந்து ஓடும் சாக்கடைகளும் , குப்பைக்கூடைகளும் கழிப்பறைகளும்  ஒன்றென்றேயானவை.எங்கும் மக்கள்,  குப்பைக்கூடையில் ஈக்கள் போல எதையுமறியாது உற்சாகமாக ரீங்கரித்து சுற்றி வரும் குழந்தைகள். அழுக்கும் ஒழுங்கின்மையும் கூடவே உயிர்த்துடிப்பும் கொண்ட சிறு இந்திய மாதிரி இப்பகுதி

_MG_3937

ஓம்காரேஸ்வருக்கு நான் இருமுறை வந்திருக்கிறேன். 1986 ல் ஒருமுறை. 1995 வாக்கில் இன்னொருமுறை. பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. ஓம்காரேஸ்வரருக்குச் செல்லும் சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு நடந்த மகாபுஷ்கரம்  என்னும் சடங்கின்போது செய்யப்பட்டது. புதிய காங்கிரீட் ஆலயங்கள் சில எழுந்துள்ளன. ஓம்காரேஸ்வரின் நர்மதை ஓம்காரேஸ்வருக்கு சற்று முன்னரே மிகப்பெரிய அணை ஒன்றால் தடுக்கப்பட்டு அணையின் கசிவு நீர்தான் ஓடிக்கொண்டிருக்கிறது இருந்தாலும் படகுகள் செல்லுமளவுக்கு மிக ஆழமானது 

நீர் நோக்கி இறங்கும் பாறைகளால் ஆன கரையை அப்படியே ஒன்றன் கீழ் ஒன்றென அமைந்த கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றி நதி வரை கொண்டு சென்றிருக்கிறார்கள். ஊடே செல்லும் படிக்கட்டுகளினூடாக இறங்கிச் சென்று நீரை அடையலாம். குளிர்ந்த நீரில் நீராடலாம். ஏராளமானவர்கள் நீர்க்கடன்களைச் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்குத்தேவையான பொருட்களை விற்பவர்கள் படியெங்கும் கூடைகளுடன் நின்றிருக்கிறார்கள். ஆனால் ஓம்காரேஸ்வரில் பிய்த்துப்பிடுங்கும் வழிகாட்டிகளும் ஏய்த்துப்பறிக்க மொய்க்கும் பண்டாக்களும் இல்லை. அதுதான் காசியில் இருந்து இந்நகரை வேறுபடுத்துகிறது.

_MG_3943

இருஆலயங்கள் இங்கு முக்கியமானவை. மலைக்குமேல் முழு அணைக்கட்டின் பரப்பையும் நோக்கும்படியாக பாறை விளிம்பில் கட்டப்பட்டுள்ள சித்தேஸ்வரர் ஆலயம் மிகத்தொன்மையானது. இன்று முகடு முற்றிலுமாக இடிந்து அடித்தளமும் தூண்களும் சுவர்கள் மட்டுமாக எஞ்சியுள்ளது. சதுர்முக ஆலயம். நான்கு திசைகளிலிருந்தும் உள்ளே நுழையும் பெருவாயில்கள் கொண்ட கருவறை நடுவே தாழ்ந்த சிவலிங்கம். நர்மதையிலிருந்து எடுக்கப்பட்ட உருளைக்கல்தான் அது. அங்கே முறையான பூசை ஏதுமில்லை. ஆனால் உள்ளூர்க்காரர்கள் வழிபடாமலும் இல்லை. தன்னைத்தானே நியமித்துக்கொண்ட பூசாரி இடிந்த கருவறைக்குள் இருந்தார். 

இத்தகைய கோயில்களில் சில அடையாளங்கள் உண்டு. ஆவுடை இருப்பதில்லை, லிங்கம் மட்டும் நின்றிருக்கும். ஆவுடையை பின்னாளில் வெள்ளியால் அமைத்திருப்பார்கள். அது இவ்வாலயம் காளாமுகர்கள், காபாலிகர்கள் போன்ற சைவத்துணைமதங்களால் உருவாக்கப்பட்டு பின்னர் மைய பக்தி இயக்கத்துக்குள் இழுக்கப்பட்டது என்பதற்கான சான்று. ஆதிசங்கரர் நிறுவிய கணிசமான ஜோதிர்லிங்கங்கள் முன்னரே காபாலிக, காளாமுக, மாவிரத மதங்களால் வழிபடப்பட்டவையாக இருக்கும். அவர்களை அவர் வாதில் வென்று அந்த ஆலயத்தைக்கைப்பற்றி ஸ்மார்த்த வழிபாட்டு முறைமைக்குள் கொண்டு வந்தார் என்பார்கள்.

_MG_3938

இவ்வாலயங்களில் பரிவாரதேவதைகளாகவும் சுவர்ச்சிலைகளாகவும் சாமுண்டி, வீரபத்ரர், காலபைரவர், பத்ரகாளி, பிட்சாடனர், கங்காளர் போன்ற தெய்வங்கள் இருக்கும். சித்தேஸ்வரர் ஆலயம் மிக அழகிய கட்டிடமாக இருந்திருக்க வேண்டும். அந்தப்பகுதியில் இருக்கையில் தனிமையையும் தொலைந்து போன உணர்வையும் அடைந்தோம். சிற்பங்கள் நுணுக்கமாகச் செறிந்த தூண்கள் சேற்றுப்படிவப்பாறையில் செதுக்கப்பட்டவை. ஒன்றோடொன்று முட்டி விளையாடும் யானைகளால் ஆன அடிக்கட்டுமானம். சிற்பங்கள் அனைத்துமே மழுங்கியும் உடைந்தும் போயிருந்தன.

ஓங்காரேஸ்வர் வேதங்களில் சொல்லப்படும் மாந்தாதா என்னும் அரச மரபினரால் ஆளப்படுகிறது என்பது தொன்மன். வரலாற்றின்படி பார்மர் மன்னர்களுக்குக் கப்பம்கட்டிவந்த ஃபில் பழங்குடித்தலைவர்களால் இப்பகுதி ஆளப்பட்டது. பின்னர் மாளவத்தின் ஆட்சிக்கும் குவாலியர் சிந்தியாக்களின் ஆட்சிக்கும் சென்றது. இறுதியாக இப்பகுதி தார்யோவ் கோசாய் என்னும் பிராமண புரோகிதரின் ஆட்சியின்கீழ் சென்றது. இறுதியாக பிரிட்டிஷாரால் இப்பகுதி கைப்பற்றப்பட்டது.

_MG_3919

தொல்லியல் துறைக்கட்டுப்பாட்டில் இருக்கிறது இந்த ஆலய எச்சம். எட்டாம் நூற்றாண்டில் பார்மர் மன்னர்களால் கட்டப்பட்டு 12-ம் நூற்றாண்டில் விரிவுபடுத்தப்பட்டது. அதே வடிவில் 13-ம் நூற்றாண்டுக்குப்பின்னர் கட்டப்பட்ட ஆலயம் கீழே உள்ளது இன்று அது மிக நெருக்கமான பக்தர் கூட்டத்தால் நிறைந்துள்ளது கட்டுப்பாடின்றி பெருகும் பக்தர்களை அணைகட்டும்பொருட்டு இரும்புக்கம்பிகள்தான் ஆலயம் முழுக்க நிறைந்திருக்கின்றன. தூண்களையோ சிற்பங்களையோ நின்று பார்க்க முடிவதில்லை. கருவறைக்குள் எவர் வேண்டுமானாலும் சென்று சிவலிங்கத்தை தொட்டு வழிபடலாம். சுற்றிலும் பண்டாக்கள் அமர்ந்து வழிபடுவதற்கு ஊக்கப்படுத்தினார்கள். நாம் அவர்களை பொருளாதார ரீதியாக ஊக்கப்படுத்த வேண்டியுள்ளது. 

இடப்பக்கம் மானுட உருவில் ஒரு சித்தர் சிலை இருந்தது. உண்மையிலேயே இறந்த சித்தர்கள் மீது சந்திரகாந்தக்கல் முதலியவற்றை பூசி சுதை சிற்பம் போல ஆக்கி மம்மிகளாகப்பேணும் வழக்கம் இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட சிலையோ என்ற ஐயம் எழுந்தது. ஆதாரம் ஏதும் இல்லை.

slide-1

எங்கும் குஜராத்திகள் மராட்டியர்கள். மையப்பெருக்காக மத்தியப்பிரதேசத்தின் பழங்குடி முகங்கள் .அவர்கள் பெரும்பாலும் மிகக்குள்ளமான சிறிய உடலமைப்பும் செங்கல் நிறமும் கொண்டவர்கள். அரிதாகக் கரிய நிறம். ஒரு வழிபாட்டு நகரத்திற்கே உரித்தான ஓசைகள். பிச்சைக்காரர்கள், வழிகாட்டிகள், இன்னமும் கூட போலராய்டு கேமராவில் படமெடுத்து அங்கேயே அச்சிட்டு அளிக்கும் புகைப்பட கலைஞர்கள். எங்கே பார்த்தாலும் ஏராளமானவர்கள் தற்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். 

இரவு ஏழுமணிக்கு அங்கிருந்து கிளம்பினோம். நாங்கள் பிம்பேத்கா குகையை அடுத்தபடியாக அடையவேண்டும். அது 200 கிமீதொலைவில் இருந்தது. அத்தனை நெடுந்தொலைவை ஒரே இரவில் கடக்க இயலாது ஆகவே கூடுமானவரைக்கும் சென்று வழியில் எங்கேனும் ஒரு நாள் தங்கி மறுநாள் காலையில் கிளம்பி எஞ்சிய தூரத்தைக்கடக்கலாம் என்று எண்ணினோம். வழியில் சாலையோர ‘தாபாவில்’ இரவுணவு உண்டபடி காரில் சென்று கொண்டே இருந்தோம். 

காண்ட்வா என்னும் ஊரை அடைந்து அறை போட்டபோது இரவு 12 மணி. அறை வாடகை மிக அதிகம் தலைக்கு ரூ.600 வரைக்கும் வந்தது. ஆனால் ஓரளவு நல்ல விடுதி இரா.முருகன் மின்னஞ்சல் செய்திருந்தார் அவருக்குக் காண்ட்வா நகரிலிருக்கிறோம் என்று செய்தி அனுப்பினேன். காண்ட்வா தாந்த்யா தோபேயின் வரலாற்றுக் கிளர்ச்சியுடன் சம்மந்த்ப்பட்ட ஊர், அங்கு ஒரு போர் நிகழ்ந்திருக்கிறது என்று அவர் பதில் மின்னஞ்சல் அனுப்பினார். தடுக்கி விழுந்தாலும் ஏதேனும் வரலாற்றுக்குள் தான் விழவேண்டியிருக்கிறதென்பது உற்சாகமளித்தது.

முந்தைய கட்டுரைஇரு வாசகர்கள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி ஐ.வி.சசி