இலக்கியத்தை எடுத்துச்செல்லுதல்….

 

 

index

ஜெயமோகன்,

அறிவியலில் Peer Review என்ற முறை பதிவிற்குத் தகுதியான ஆய்வுக்கட்டுரைகள் எவை என்பதை நிர்ணயம் செய்வதற்குப் பயன்படுகிறது.அறிவியலாளர்களாக அங்கீகாரம் பெற்றவர்கள் சக அறிவியலார்களின் படைப்புகள்பதிப்பிற்கு தகுதியானவையா என்று மதிப்பிடும் முறையே இது.விருதுகளுக்கும் இம்முறை பயன்படலாம்.

எழுத்தாளர்களாகிய நீங்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி peer review முறையில்விருதுகளுக்குத் தகுதியான எழுத்தாளர்களையும், நூல்களையும்தேர்ந்தெடுப்பீர்கள் என்றால் பரிசுகளுக்கான பணத்தை வாசகர்கள் திரட்டித் தரலாம். எழுத்தாளர்களாகிய உங்களுக்குள் இருக்கும் விருப்பு, வெறுப்புகள்இதில் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்வதும், தேர்வு முறை தெளிவாகஇருப்பதும் அவசியம்.

இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு பிரபல எழுத்தாளர் தன் இணைய தளத்தில் தற்காலத்தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி மேலை உலகத்தில் தெரிவதில்லை, அதற்குக்காரணம் தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகள் அங்கே செல்வதில்லை என்று எழுதியபோது, நான் அவரிடம் தரமான, நவீன தமிழ் இலக்கியப் படைப்புக்கள் சிலவற்றைஅமெரிக்காவில் தமிழ்துறை உள்ள பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பி வைக்க நான்முயற்சி எடுக்கிறேன். ஆண்டிற்கு 20,000-25,000 ரூ இதற்காக நான் செலவழிக்கிறேன். இணையம் வழியாகவும் இதற்கு ஆதரவு தேடலாம் என்று சொன்னேன்.

எழுத்தாளரோ தன்னுடைய புத்தகம் அப்படி அனுப்பி வைக்கப்படுவதில் ஆர்வமாகஇருந்தாரே ஒழிய, மற்றவர்களைப் பற்றி அக்கறை காட்டவில்லை. Peer Reviewமுறையைப் பற்றி சொல்லி, இன்ன எழுத்தாளர்களை உட்படுத்தி, சுமார் 10பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப வேண்டிய முதல் பத்து நூல்களைத் தேர்ந்தெடுப்போம் என்ற போது “இன்னின்ன எழுத்தாளர்கள் அதில் ஈடுபட்டால் தான் அதில் ஈடுபட முடியாது” என்று சொல்லி விட்டார். இறுதியில் அவரது நூலையும்,அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பரிட்சார்த்த அளவில் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியதோடு இந்த முயற்சி பிசுபிசுத்து விட்டது.

எனவே, நியாயமான வகையில் வழங்கப்படுகிறது என்று வாசகர்களுக்கு நம்பிக்கைதரும் ஒரு அமைப்பையும், முறையையும் எழுத்தாளர்கள் ஏற்படுத்துவீர்கள் எனில் வாசகர்கள் அதற்கு ஆதரவு தருவது சுலபமாக இருக்கும். இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களும், சிரமங்களும் ஊகிக்கக் கடினமானவை அல்ல. எனினும் இதை சிந்தனைக்கு மட்டுமாவது உட்படுத்துவது முக்கியம் என்று நினைக்கிறேன். அதனால்தான் என் நேரத்தையும், உங்கள் நேரத்தையும் சற்றே விரயமாக்க துணிவுற்றேன்.

நன்றி.

விக்டர் சுரேஷ்

அன்புள்ள விக்டர் சுரேஷ்,

நீங்கள் அணுகிய எழுத்தாளர் எவர் எனத் தெரியவில்லை. ஆனால் அந்த அணுகல் உங்களுடைய இலக்கிய அறிமுகமின்மையைத்தான் காட்டுகிறது. எந்த மொழியிலும் எழுத்தாளர் என்று ஒரு பொதுஅடையாளம் இல்லை. ஏனென்றால் அதற்கு ஒரு அடிப்படைத் தரப்படுத்தல் இல்லை அல்லவா? ஒரு கதை எழுதியவரும் எழுத்தாளரே. கிசுகிசு எழுதுபவரும் சினிமா விமர்சனம் எழுதுபவரும் எழுத்தாளரே. ஆக நீங்கள் எந்த அடிப்படையில் எந்த எழுத்தாளரை அணுகினீர்கள் என்பதே பிரச்சினை.

எந்த ஒரு மொழியிலும் எழுத்தாளனை அவன் எழுத்துக்கள், அவனுடைய இலக்கியச் செயல்பாடுகள் வழியாகவே தீர்மானிக்க வேண்டும். அதற்கு நம்முடைய சொந்த வாசிப்பே அளவுகோலாக இருக்க வேண்டும். அதன்படி எழுத்தாளர்களில் யார் இலக்கியவாதி, அவரது தரம் என்ன என்பதை உணர்ந்து அதில் இருந்துதான் நாம் எதையுமே ஆரம்பிக்க வேண்டும்.

உண்மையில் இந்தத் தரப்பிரிவினையைச் செய்யாத எந்த இலக்கியச் செயல்பாடுகளிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லாரும் எழுத்தாளரே என ஆரம்பிக்கப்படும் எல்லா முயற்சிகளும் சீக்கிரத்திலேயே எங்கும் முட்டிமோதி நுழையும் சாதாரண ஆசாமிகளுக்கானவையாக ஆகிவிடும். இலக்கியமன்றி ஆர்வமில்லாமல் இருக்கும் இலக்கியவாதிகளை அன்னியப்படுத்தியும்விடும். பெரும்பாலும் கல்வியமைப்புகள் சார்ந்து அறக்கட்டளைகள் சார்ந்து நிகழும் இலக்கிய முயற்சிகள் இப்படித்தான் முடிகின்றன.

நீங்கள் ஓர் எழுத்தாளரை அணுகியிருக்கிறீர்கள். அவரது தரம் பற்றி உங்கள் மதிப்பீடு என்னவாக இருந்தது என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். தன் கடந்த காலச் செயல்பாடுகளில் அவர் ஒரு கறாரான இலக்கிய மதிப்பீட்டை முன்வைத்திருக்கிறாரா, அந்த மதிப்பீடுகளின்படி தான் விரும்பும் எழுத்தாளர்களை முன்னிறுத்தி பேசியிருக்கிறாரா, இலக்கியம் என்ற பொது விழுமியத்துக்காக அவர் என்ன செய்தார் என்று நீங்கள் பார்த்தீர்களா என்றும் அறிய ஆசை.

ஆய்வுக்கட்டுரைகளில் உள்ள கூர்தெரிவுநோக்கு அணுகுமுறை இலக்கியத்துக்கு இருக்க முடியாது. ஆய்வுக்கட்டுரைகளுக்கு புறவயமான அளவுகோல்கள் உண்டு. அவை அனைவருக்கும் பொதுவானவை. அவை அறிவியலின் தர்க்கத்துக்குள் அமைகின்றன. அவற்றில் ‘பொய்ப்பித்தல் முறைமை’ செயல்பட முடியும். இலக்கியத்துக்கு அப்படி ஒரு பொதுவான புறவய அளவுகோல் உருவாக முடியாது. ஏனென்றால் இலக்கியம் மிகமிக அந்தரங்கமாக வாசிக்கப்பட்டு அனுபவமாக அறியப்படுகிறது.

ஆனால் இலக்கியத்துக்கு மெல்லமெல்ல ஒரு புறவய மதிப்பீடு உருவாகி வரும். அது அந்தப் படைப்பை அச்சமூகச்சூழலில் பலர் பலகோணங்களில் வாசித்து விவாதித்து காலப்போக்கில் உருவாக்கிக் கொள்வதாகும்.  ஒரு படைப்பு செவ்வியலாக்கம் என்று அங்கீகரிக்கப்படுவது இவ்வாறுதான். இன்று தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் யார் என்றால் எல்லா பட்டியலுமே புதுமைப்பித்தன், மௌனி, குபரா, லா.சரா, ஜானகிராமன், அழகிரிசாமி, சுந்தரராமசாமி, கி ராஜநாராயணன்.ப. சிங்காரம் என நீள்வதைக் காணலாம்.

இந்தப்பட்டியலை முதலில் உருவாக்கியவர் க.நா.சு. அன்று இப்பட்டியலில் கல்கியும், அகிலனும், நா.பார்த்தசாரதியும், மு.வரதராசனும் விடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி பெரும் விவாதம் உருவாகியது.  க.நா.சு பாரபட்சமாகச் செயல்படுவதாகச் சொல்லப்பட்டது. அவர் சளைக்காமல் அதற்குப் பதில் சொன்னார். அவரது மரபைச்சேர்ந்த பிற விமர்சகர்கள் உருவாகி வந்தார்கள். இந்தத் தெரிவு ஒரு மரபாக அங்கீகரிக்கப்பட்டது.

இவ்வாறுதான் இலக்கிய மதிப்பீடுகள் அகவயமாக உருவாகி மெல்ல மெல்ல புறவயமாகின்றன. இந்நிலையில் இரு வழிகளே உள்ளன. ஒன்று, காலத்தை நம்பிக் காத்திருத்தல். காலத்தால் மதிப்பீடுகள் நிறுவப்பட்டபின் ஏற்றுக்கொள்ளுதல். இன்னொன்று சுயரசனையை, சுயசிந்தனையை நம்புதல். உங்கள் ரசனையை நம்பலாம். அல்லது முக்கியமான விமர்சகர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களைப் பரிசீலித்து ஏற்கலாம். இதுவே சாத்தியமானது

கறாரான இலக்கிய அளவுகோல்கள் கொண்ட வருடாந்தர ‘அமெரிக்கன் ரைட்டிங்’ படைப்புத் தொகுப்புகளில் கூட முரண்பட்ட மதிப்பீடுகளும் சாதாரணமான ஆக்கங்கள் உள்ளே நுழைவதும் நிகழ்கிறது. ஆகவே முழுமையான கறாரான மதிப்பீடு சாத்தியமல்ல. ஆனால் சூழலில் எப்போதும் ஒரு கறாரான இலக்கிய மதிப்பீடு இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் தமிழில் பொதுவாக வாசித்தாலே இலக்கிய அளவுகோலின் கூர்மையான செயல்பாட்டைக் காணமுடியும். ஒரு வருடம் வரும் நூல்களில் எது உண்மையான மதிப்பை பெறுகிறதென அறியவும் முடியும்

கூர்தெரிவு நோக்கு[பீர் ரிவ்யூ] என்று சொல்லும்போது அதற்கான அளவுகோல்கள் என்ன என்பதே முக்கியம், அதனடிப்படையில்தானே தேர்வைச் செய்யமுடியும்? அந்த அளவுகோலை பொதுவாகப் பகிர்ந்துகொள்பவர்கள் தான் அதைச் சேர்ந்து நிகழ்த்த முடியும் இல்லையா? அவ்வாறு அவர்கள் கறாராகச் செயல்பட்டால் அவர்களால் நிராகரிக்கப்படுபவர்கள் அவர்கள் மீது பிறர் பாரபட்சம் என்றும் காழ்ப்பு என்றும் சொல்லத்தான் செய்வார்கள். ஆகவே ‘பாரபட்சமற்ற’ இலக்கியத்தேர்வு என ஒன்று இல்லை.

உதாரணமாக நான் அந்த வகை செயபாட்டாளர்குழுவில் இருந்தால் பிரபலமான வணிக எழுத்துக்களைக் கறாராக நிராகரிப்பேன். அதைப் பாரபட்சம் என்று சொல்லவே பெரும்பாலான தமிழ் வாசகர்கள் முன்வருவார்கள். ஆனால் கடந்த இருபதாண்டுக்காலமாக தொடர்ச்சியாக நான் எழுதி வாதாடிவரும் ஒர் அழகியல் அளவுகோலின்படியே நான் என் தேர்வுகளைச் செய்வேன். ஒருபோதும் ’ஜனநாயக’ முறைப்படி செயல்படமாட்டேன். என் தேர்வு எப்போதும் புறவயமான வாதங்களை முன்வைத்தே நிகழும்.

என் இலக்கிய தெரிவுகள் இருபதுக்கும்மேற்பட்ட நூல்களாக வெளிவந்துள்ளன. அவையெல்லாமே இன்று கிடைக்கின்றன. இலக்கியத்தின் தரத்தை நான் எவ்வாறு தீர்மானிக்கிறேன் என்று விளக்கியிருக்கிறேன். அந்த படைப்பாளிகளைப் பலவகையிலும் முன்வைத்து வருகிறேன். என்னுடன் இணைந்து செயல்படுபவர்கள் என்னுடைய அந்த அளவீடுகளை புரிந்துகொள்பவர்களாக, பகிர்பவர்களாக இருப்பார்கள். அவர்களைத்தவிர பிறரை நான் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை.

என் இலக்கியத்தேர்வில் எல்லாவகையான கருத்தியல்களும் அழகியல் வகைமாதிரிகளுக்கும் இடமளித்திருக்கிறேன். ஆனால் எல்லா ஆசிரியர்களுக்கும் இடமளிப்பதில்லை. இலக்கிய உலகின் பன்முகத்தன்மைக்கு நான் என்றுமே மதிப்பளிக்கிறேன். ஆனால் இலக்கியம் என்ற விழுமியம் சாராம்சமானது என்றும் சொல்வேன் . என் கருத்துக்களை நீங்கள் வாசித்துப்பார்க்கலாம்.

உங்கள் கடிதம் வழியாக என்ன தெரிகிறதென்றால் உங்களுக்கு இலக்கிய மதிப்பீடுகள், சொந்த ரசனை என ஏதும் இல்லை என்றுதான். தமிழிலக்கியம் பற்றிய அறிமுகமோ இலக்கிய்வாதிகளைப்பற்றிய புரிதலோ இல்லை. பரவலாக காதில் விழும் பெயர்களையே இலக்கியவாதிகள் என்கிறீர்கள். நீங்கள் அணுகிய எழுத்தாளரைப் பற்றி நீங்கள் சொல்வதே அதற்குச் சான்று. அவரைத் தேர்வுசெய்தது நீங்கள்தானே? மன்னிக்கவும்.

இந்நிலையில் நீங்கள் இம்மாதிரி செயல்பாடுகளில் ஈடுபடுவதனால் எதிர்விளைவுகளே உருவாகும். உங்கள் சராசரி ரசனையை நீங்கள் கல்வியமைப்புகளுக்குள் கொண்டுசென்று நிறுவி விடுவீர்கள் தமிழ்மீது குறைவான மதிப்பு அங்கே உருவாக வழிவகுப்பீர்கள். நல்ல எழுத்துக்களுக்கு அவையே தடையும் ஆகும். மீண்டும் மீண்டும் இங்கே நிகழ்வது இதுதான்.

ஆக, இன்றைய தேவை இலக்கியத்தை ’வளர்க்கும்’ அமைப்புகள் அல்ல. தரமான ரசனைதான். அதற்கான இலக்கிய மதிப்பீடுகள்தான். அந்த மதிப்பீடுகளை உருவாக்கும் அமைப்புகள்தான். அம்மதிப்பீடு இல்லாத நிலையில் அமைப்புகள் சுமைகளே. அப்படி எத்தனையோ அமைப்புகள் இங்கே உள்ளன.

இன்றுவரை தமிழில் இருந்து ஆங்கிலத்துக்குச் சென்ற நூல்களை வைத்தே இதை புரிந்துகொள்ள முடியும். தமிழின் தரமான ஆக்கங்கள் ஆங்கிலத்தில் செலவது அனேகமாக இல்லை. வாசிக்கும்படியான மொழியாக்கங்கள் வழியாக ஆங்கில வாசகர்களை சென்றடைந்தவை மிகச்சாதாரணமான சமூகச் சித்திரங்கள். காரணம் நான் சொல்லும் இதே விஷயம்தான் , இலக்கிய மதிப்பீடுகளோ ரசனையோ இல்லாத இலக்கிய அமைப்புகள், அமைப்புசார்ந்த மனிதர்கள். அவர்களுக்குப் புரியக்கூடிய படைப்புகளையே அவர்கள் தமிழிலக்கியமாக உலகுக்குக் கொண்டுசெல்கிறார்கள்.

உலக அளவில் ஏன் தமிழ் இலக்கியம் சென்று சேர வேண்டும்? முதலில் இங்கே அவற்றை வாசிக்கட்  தரமான வாசகர்கள் உருவாகி வரட்டுமே.   ரசனையின் அளவுகோல்கள் உருவாகட்டுமே. இங்கு இன்று தரமான வாசகர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. நம் எழுத்துக்களை நாம் வாசிக்காமல் உலகம் வாசிக்க ஆசைப்படுவதே பிழையானது.

என்னைப்பொறுத்தவரை என் ஆக்கங்கள் மொழியாக்கம் செய்யப்படுவதில் எந்த கவர்ச்சியும் எனக்கில்லை. அவற்றை எந்தப் பல்கலைக்கும் கொண்டுசெல்வதில் எனக்கு ஈடுபாடு இல்லை. அதற்காக  நான் எதையும் செய்யப்போவதில்லை. என் ஆக்கங்கள் முதலில் அச்சாவது மட்டுமே என் அக்கறை. மறுபிரசுரம்கூட என் வேலை அல்ல. அவை வாசகர்களுக்குத் தேவை என்றால் வாசிக்கப்படட்டும்.

கடந்த இருபதாண்டுக்காலத்தில் என் சொந்தப் படைப்புகளை முன்னிறுத்த நான் எதையும் செய்ததில்லை. நான் மதிக்கும் மூத்த படைப்பாளிகளைத் தமிழ்வாசகன் முன்பாக வைக்கவே என் செயல்பாடுகளை ஒருங்கிணைத்திருக்கிறேன். இப்போது என் நண்பர்கள் மூலம் செய்வதும் அதுவே. இது இலக்கியம் என்ற விழுமியம் மேல் நான் கொண்டிருக்கும் மதிப்பின் விளைவு

மேலும் நான் வாசித்த வரை தமிழ்நூல்களைத் தமிழறியாத ஒரு வாசகன் வாசித்தால் சுவாரசியமாக இருக்கும் மொழியாக்கங்கள் மிக குறைவு. ஓரளவு வாசிப்புத்தன்மையுடன் உள்ள மொழியாக்கங்கள் எளிமையான ஆவணப்படுத்தல்கள் மட்டும்தான். அவை நல்ல வாசகர்களைக் கவராது. தரமான மொழியாக்கங்கள் இல்லாத நிலையில் தமிழ்நூல்களை அவ்வாறு மேலை ஊடகங்களின் கண்முன் வைப்பதில் அர்த்தமே இல்லை.

உங்கள் முயற்சிகளில் எனக்கு பங்கு பெற விருப்பம் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். உங்கள் ஆர்வத்தையும் முயற்சியையும் நான் பாராட்டுகிறேன். தமிழிலக்கியத்தின் ஆர்வலன் என்ற வகையில் நன்றி கூறுகிறேன். இன்றைய சூழலில் இலக்கியம் மீது இத்தனை அர்ப்பணிப்புள்ள ஒருவர் அபூர்வம்தான்.

நான் சொல்லும் கருத்துக்களைத் தனிப்பட்ட விமர்சனமாக இல்லாமல் பொதுவான வகையில் யோசிக்கும்படி கோருகிறேன். இந்த கோரிக்கை இவ்வகையில் இலக்கியத்துக்கு ‘ஏதேனும்’ செய்ய விரும்பும் அனைவருக்கும்தான். தரமான இலக்கியத்த்தைச் சொந்த ரசனையின் அடிப்படையில் கண்டடைந்து அதற்காக ஏதேனும் செய்ய முயலுங்கள். ஒட்டுமொத்தமாகச் செய்ய முனைவதென்பது இலக்கியம் என்ற செயல்பாட்டுக்கே எதிரானது.

ஜெ

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Dec 14, 2010

உலகத்தமிழ்வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்!

இயல் விருது சில விவாதங்கள்

‘இயல்’ விருதின் மரணம்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 33
அடுத்த கட்டுரைதினமலர் 38, அனைவருக்குமான ஆட்சி