எழுத்தறிவிக்கும் சடங்கு – எம்.ரிஷான் ஷெரீப்

எழுத்தறிவித்தல்1

பினராயி விஜயனின் எழுத்தறிவித்தல்

குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் சடங்கு ஒரு மதத்துக்கு மாத்திரம் உரியதல்ல. அதனைக் காரணமாக வைத்து பினராயி விஜயன் மீது எழுப்பப்படும் சர்ச்சைகள் அர்த்தமற்றவை என்றே தோன்றுகிறது. குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் சடங்கு இலங்கையில் இன்றுவரை அனைத்துத் தரப்பினரிடத்திலும் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

இலங்கையில் பெரும்பான்மையான இஸ்லாமியரிடத்தில் ஒரு வழக்கம் இருப்பதைக் கண்டிருக்கிறேன். குழந்தைக்கு நான்கு வயதும் நாற்பது நாட்களும் பூர்த்தியாகும் அன்று, வீட்டிலோ மார்க்கப்பள்ளிக் கூடத்திலோ வைத்து முதன்முதலாக குர்ஆனை, அறபு மொழியை ஓதக் கற்றுக் கொடுப்பார்கள்.

எழுத்தறிவித்தல்2

அவ்வாறே சிங்கள பௌத்தர்கள் தமது குழந்தைக்கு மூன்று வயது பூர்த்தியாகும் முன்பு, எழுத்தறிவிக்கும் சடங்கினை நடத்தி விடுகிறார்கள். நல்ல நாளும், நேரமும் பார்த்து, அந்த நேரத்தில்தான் அதைச் செய்கிறார்கள். முதலில் புத்தரை வணங்கி விட்டு, ஒரு மேசையில் விநாயகர், லக்‌ஷ்மி மற்றும் சரஸ்வதி தேவியின் உருவப் படங்களையும், அரிச்சுவடிகளையும் வைத்த பின்னர், சந்தனத் திரி பற்ற வைத்து, பூக்களையும், பழங்களையும், பலகாரங்களையும் படைத்து பூஜை செய்த பின்பே குழந்தைக்கு எழுத்தறிவிக்கத் தொடங்குகிறார்கள்.

குழந்தைக்கு எழுத்தறிவிக்கும் இச் சடங்கு வீட்டிலோ அல்லது பௌத்த விகாரையிலோதான் பொதுவாக நடைபெறும்.  வீட்டில் நடக்கும் சடங்கின்போது  வயது முதிர்ந்தவர் ஒருவரைக் கொண்டோ அல்லது வீட்டிற்கு வரவழைக்கப்படும் கல்விமான் ஒருவரைக் கொண்டோ எழுத்தறிவிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. பௌத்த விகாரையில் சடங்கினை நடத்தும்போது மூத்த பௌத்த பிக்கு ஒருவரைக் கொண்டு குழந்தைக்கு எழுத்தறிவித்துக் கொடுக்கப்படுகிறது.

எழுத்தறிவித்தல்3

பூஜைகள் முடிந்த பின்பு, முன்பே எழுதப்பட்ட எழுத்துக்களின் மீது குழந்தையின் பிஞ்சு விரலைப் பிடித்து வைத்து அந்த எழுத்துக்களை உச்சரிக்க சொல்லிக் கொடுத்த பின்னர் அந்த எழுத்துக்களின் மீதே குழந்தையின் விரலால் எழுத வைப்பார்கள். சம்பிரதாயத்துக்காக ஒரு சிறு சிலேட்டும் அங்கு வைக்கப்பட்டிருக்கும். அதன்பிறகு கல்வி சம்பந்தமான ஏதேனும் பரிசுப் பொருள் குழந்தைக்கு வழங்கப்படும். அத்தோடு சடங்கு முடிந்து விடும்.

இந்தச் சடங்கிற்கு முன்போ, பின்போ குழந்தை எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென எவருமே வற்புறுத்துவதோ, பலவந்தப்படுத்துவதோ, கண்டிப்பதோ இல்லை. பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்வரை வீட்டிலிருக்கும் பத்திரிகைகளையோ, புத்தகங்களையோ பார்த்து குழந்தை தானாகவே எழுத, வாசிக்கத் தொடங்கினால் அதைத் தடுப்பதுமில்லை.

இங்கு குறிப்பிடத்தக்க முக்கியமான விடயம் இந்தச் சடங்கின்போது புத்தரின் முதன்மைச் சீடர்கள் பத்துப் பேரில் ஒருவரான சாரிபுத்திரரின் உருவப்படத்தை முன்னிலைப்படுத்தி குழந்தைக்கு எழுத்தறிவித்துக் கொடுத்தலாகும். எழுத்தறிவிக்கும் சடங்கில் வைக்கப்படும், எவருமே நேரில் கண்டிராத துறவி சாரிபுத்திரரின் இந்த உருவப்படத்தை வரைந்திருப்பவர் பௌத்த மத நூல்களை எழுதி வரும் திரு.கயான் சானுக விதானபதிரண. புத்தரின் பிரதான சீடர்கள் எண்பது பேரைக் குறித்து, தனித் தனி புத்தகங்களாக எழுதி வரும் பல்கலைக்கழகப் பேராசிரியரான இவர் வரைந்திருக்கும் ‘புத்தரின் சீடர்கள்’ குறித்த ஓவியங்கள் விஷேடமானவை.

1u9KU6j

பாலி மொழியிலிருக்கும் பௌத்தர்களின் புனித நூலான திரிபிடகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களை சரளமான மொழிநடையில் சிங்கள மொழியில் நூலாக எழுதி வரும் இவர், தொகுப்பிற்குத் தேவைப்படும் ஓவியங்களை தானே வரைந்து சேர்க்கிறார். பொதுவாக பௌத்த ஆலயங்களில் வைக்கப்பட்டிருக்கும் சீடர்களின் சிலைகள் அனைத்தும் ஒரே உருவத்தையும், சாயலையும்  கொண்டிருக்கும். அதற்கு மாற்றமாக, இவரது தொகுப்புக்களில் ஒவ்வொரு சீடர்களும் கொண்டிருந்த குணவியல்புக்கேற்ற உருவச் சாயல் கொண்ட ஓவியங்கள் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது ரசனைக்குரியது.

Gayan Chanuka Vidanapathirana

உண்மையில் சிறந்த ஆன்மிகத் தலைவர் எவருமே மக்களை துர் நடத்தைக்கு போதித்ததில்லை. எழுத்தறிவிக்கும் சடங்குகள் போன்றவை தொடர்ந்தும் பின்பற்றப்படாது போய்விடுமானால், மூதாதையர்கள், ஆன்மிகத் தலைவர்கள் குறித்த இவ்வாறான பாரம்பரிய விடயங்களும், நிகழ்வுகளும் புதிய தலைமுறையைச் சென்று சேராத துர்பாக்கியமான நிலைமை உருவாகி விடும்.

கி.மு. 568 இல் வட இந்தியாவில் ராஜகிரகம் எனும் பிரதேசத்தில் பிறந்து, புத்தரால் ‘ஆன்மிக மகன்’ என அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட ஒரு சீடர், இலங்கையில் பௌத்த மதத்தினரிடையே இன்று பிறக்கும் குழந்தைக்குக் கூட அறிமுகமாவது மிகக் கண்ணியமான முறையில் இவ்வாறுதான். இந்தச் சடங்குகள் வழக்கொழிந்து போனால், நவீன தலைமுறைக்கு தம் மூதாதையரும், அவர்களது மரபும் கடத்தப்படுவதில் தடையேற்பட்டு விடுமெனத் தோன்றுகிறது.

எம்.ரிஷான் ஷெரீப்

[email protected]

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 35
அடுத்த கட்டுரைநாகர்கோயிலும் சுச்சா பாரதமும்