ஆஸ்திரேலியாவில் மண்ணுக்கு அடியில் இருந்த ஒரு சுண்ணாம்புப்பாறைப் பிலத்திற்குள் சென்றதுதான் என் முதல் நிலத்தடி அனுபவம். ஆனால் மிகச்சிறப்பாக ஒளியமைவு செய்யப்பட்ட அந்தக்குகை ஒரு சுற்றுலாத்தலமாகவே தோன்றியது.
இளம்வயதில் அருமனை அருகே ஓடிய ஒரு சிற்றாற்றின் கரையில் இரு சுரங்க வாயில்கள் இருந்தன. திருவிதாங்கூர் அரசகாலகட்டத்தில் அமைக்கப்பட்டு அந்த கால்வாய் வெட்டப்பட்டபோது கைவிடப்பட்டவை. அவற்றுக்குள் இருளும் சேறும் செறிந்திருக்கும். வெளியே சிலர் எவர்சில்வர் டப்பாவால் ஒளியை பிரதிபலித்து உள்ளே காட்ட உள்ளே சென்று மீள்வதென்பது எங்கள் வீரச்செயல்களில் ஒன்றாக இருந்தது. உள்ளே அரைகிலோமீட்டரில் இடிந்துவிழுந்து மூடியிருக்கும்
ஆஸ்திரேலிய அனுபவங்களைச் சொன்னபோதுதான் வசந்தகுமார் ஆந்திராவின் பிலம் குகை பற்றிச் சொன்னார். ஒரு பயணம் திட்டமிட்டோம். தள்ளித்தள்ளிச் சென்றது. அவர் இல்லாமலேயே கிளம்பினோம். சட்டிஸ்கர் ஒரிசா என சுண்ணாம்புக்கல்பகுதிகளில் உள்ள பிலங்களைச் சென்று பார்த்தோம்
ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அனுபவம். இவற்றில் பிலம் குகை ஓரளவு வசதிசெய்யப்பட்டுள்ளது.சட்டிஸ்கர் குகைகள் முழுமையாக கைவிடப்பட்டவை. பல குகைகளில் இருளில் சேற்றில் தவழ்ந்தும் நெளிந்தும் உள்ளே சென்றோம். உள்ளே பார்க்க ஒன்றுமில்லை, உள்ளிருக்கும் உணர்வை அடைவதைத்தவிர
இந்தியாவின் மேலே சென்றுகொண்டிருந்த பயணங்களுக்கு மாறாக உள்ளே ஒருபயணம். அது நம் உள்ளே செல்லும் பயணமும் கூட. சிவனுக்கு குகேஸ்வரன் என்ற பெயர் உண்டு. மனக்குகைகளில் வாழ்பவன். ஓர் இடத்தில் குகையில் சிவலிங்கத்தை இருட்டுக்குள் இருட்டெனப் பார்த்தது நினைவுக்கும் அப்பால் பதிந்திருக்கிறது
என் பயணங்கள் அனைத்திலும் உடன்வருபவர் ராஜமாணிக்கம். நண்பர் என்பதற்கும் அப்பால் என் இளவல் என்றே நான் அவரை உணர்கிறேன். அவருக்கு இந்தநூல் சமர்ப்பணம்
ஜெ