ஐந்து : துலாநிலையின் ஆடல் – 4
அஸ்வத்தாமன் “ஆம், நான் சென்றபோது சல்யர் கிளம்பி பாதிவழி வரை வந்திருந்தார். அவரை சந்திக்க நான் என் தூதனை அனுப்பினேன். வரும் வழியில் கூர்மபங்கம் என்னும் ஊரில் தன் படையுடன் தங்கியிருந்தார். அஸ்தினபுரியின் அரசரின்பொருட்டு அவரைப் பார்க்க விழைவதாக நான் செய்தி அனுப்பினேன். அவர் தங்கியிருந்த பாடிவீட்டில் அச்சந்திப்பு நிகழ்ந்தது. அஸ்தினபுரியின் அரசரிடம் ஒருமுறை சொல்லாடிவிட்டு அபிமன்யூவின் திருமணத்திற்கு அவர் செல்வதே உகந்தது என்று நான் உரைத்தேன்” என்றான்.
“சல்யர் சினம்கொண்டிருந்தார். அஸ்தினபுரியின் அரசர் நின்று நிகழ்த்தவேண்டிய மணவிழா அது. அதை அவர் தவிர்த்தார் என்றால் குலத்தந்தையென அஸ்தினபுரியின் பேரரசர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு இழுக்கு என்று கூவினார்” என அஸ்வத்தாமன் தொடர்ந்தான். “அவர் இயல்பை நான் நன்கு அறிவேன். பெருமிதமும் தன்னலமும் இணையான அறியாமையும் கொண்டவர். முதுமையில் அவ்வியல்புகளும் முதிர்ந்துவிட்டிருக்கின்றன. உரக்க கத்தியபடி கைநீட்டி என்னை குற்றம் சாட்டினார். அந்தணர் அரசகோலம் பூண்டு நின்றிருக்கிறீர். மண்ணாசை உங்களுக்கு இவ்வளவு இருக்கையில் ஷத்ரியர் மண்ணுக்கென அறம் மறுப்பதில் என்ன விந்தையிருக்கிறது என்றார்.”
சொல்லைத் துறந்தவன், குடி அளிக்கும் பொறுப்பை துறந்தவன், எவ்வகையில் மதிப்புக்குரியவன்?. குலமரபால் அபிமன்யூ யுதிஷ்டிரனுக்கும் துரியோதனனுக்கும் நிகராகவே மைந்தன். நமது குடிகள் முடிசூடியதும் மண்ணாள்வதும் இன்றுதான். நாம் காடுகளில் அலைந்த தொல்காலத்திலேயே குடியின் மூத்த தந்தையே அத்தனை மைந்தருக்கும் முதல் தந்தை என்று துரியோதனனுக்குச் சொல்ல மூத்தவர் இல்லையா? வேதமென்பது மூத்தோர் சொல் கனிந்த சாறே என உரைக்க இங்கு அந்தணரில்லையா? எங்கு போயிற்று அஸ்தினபுரியின் மாண்பும் மரபும் என்று கூவினார்.
அவர் கூச்சலிடுவதற்கு நான் இடமளித்தேன். உகந்த முறையில் தன் சினத்தை தானே அடையாளம் கண்டுகொண்டதும் அவர் அதை பெருக்கத் தொடங்கினார். தன்னிடமுள்ள அத்தனை சொற்களாலும் அஸ்தினபுரியின் அரசரை வசைபாடினார். வீணன், இழிமகன், களத்தில் அவனை சந்தித்து கதையாலடித்து தலை பிளப்பேன் என்றார். களத்தில் அவன் கிடக்கையில் தலையை கால் நீட்டி உதைப்பேன் என்றார்.
முதுமையால் மூச்சிரைக்க மெல்ல தளரத்தொடங்கினார். எது அவர் சொன்னதோ அது அவர் நாவில் எழவேண்டியதல்ல என்று அதைச் சொன்ன மறுகணமே அவரே உணர்ந்தமையால் அவர் சினம் விரைவாக தணியத்தொடங்கியது. மெல்ல அந்தக் குற்ற உணர்வை தன்னிரக்கமாக மாற்றிக்கொண்டார். “என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது? மூத்தவர்களாகிய எங்கள் கண் முன்னால் குடியறங்கள் ஒவ்வொன்றாக அழிக்கப்படுகின்றன. அதைப் பார்த்து ஒன்றும் செய்யவியலாத கோழைபோல், வீணன்போல் அரண்மனைகளில் பதுங்கி வாழும் ஊழ் அமைந்துள்ளது எங்களுக்கு. வரும் கொடிவழிகளின் முன்னால் சிறுமைகொண்டு தலைகுனிந்து நிற்கிறோம். உடன்பிறந்தார் நிலத்தை ஒருவன் ஏய்த்துப் பிடுங்குகிறான். சூதாடி அரசு கொள்கிறான். குலமகளை அவை நடுவே ஆடை இழுத்து கலைக்கிறான். அவைமுன் உரைத்த சொல்லை மீறி முடிகொண்டிருக்கிறான். என்ன செய்யப்போகிறேன்?” என்றார்.
பின்னர் இயலாமையின் சினம் பெருகியது. உரத்த குரலில் “அஸ்தினபுரியின் கலிமகனிடம் பொருதி களத்தில் சாக வேண்டும் அல்லது அவன் குருதி சூடி நகர் மீள வேண்டும். எனக்கிருப்பது இவ்விரு வாய்ப்புகளே” என்றார். பின்னர் “ஆம், என்னால் அது முடியாது. எனது நாடு சிறியது, எனது தோள்கள் அவனளவுக்கு ஆற்றல் கொண்டவை அல்ல. ஆகவே அறத்தின் உருவாகிய நம் மூதாதையரை எண்ணி இக்களத்தில் என்னை பலியிடுவதன்றி எனக்கு தெரிவுகளில்லை” என்றார். அவ்வளவும் சொல்லிமுடித்து சொல் ஒழிந்து தான் பெருக்கிய துயரால் நிறைந்து கண்கள் கலங்கி பீடத்தில் அமர்ந்திருந்தார்.
புன்னகையுடன் “எப்போதுமே நாம் வெல்ல வேண்டிய தரப்பை சினம்கொள்ள வைத்து அவர்கள் சொல்லவேண்டிய அனைத்தையுமே பலமுறை சொல்ல வைத்து அவர்களின் உளம் ஒழிந்த பின்னர் நாம் முதற்சொல்லை எடுப்பது ஒரு நல்ல அரசியல் சொல்லாடல் என்பேன். இதை நீ கற்றுக்கொள்ளலாம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.
“தன்னிரக்கம் கொண்டு சொல்லிழந்து ஓய்ந்து அமர்ந்திருந்த அவரிடம் மெல்ல நான் பேசலானேன். அப்போது அவர் சொன்னதை மறுத்து ஒரு சொல்லும் சொல்லலாகாது. ஏனெனில் மீண்டும் சினம்கொண்டு பற்றியெழ அது வழியமைக்கும். எனவே நிகழ்ந்ததனைத்தையும் நானும் பழித்துப் பேசினேன். மண்விழைவால் ஒவ்வொருவரும் எவ்வாறெல்லாம் திரிபடைகிறார்கள் என்றேன். துரியோதனரின் பிழைகள் அனைத்தையும் நானும் விரித்து பட்டியலிட்டேன். அறமில்லாது கொண்ட மண்ணை தன் கொடிவழிகளுக்கு தேடிவைத்துச் செல்பவன் கருவூலத்தில் நஞ்சை நிறைத்துச் செல்பவன் என்ற நூல்வரியை சொன்னேன். என் சொற்கள் ஒவ்வொன்றையும் அவர் ஒப்புக்கொண்டார்.”
இறுதியாக ஒன்று கேட்டேன். “இங்கு நீங்கள் என்னிடம் சொன்னவற்றை துரியோதனரிடம் நேரில் சொல்லியிருக்கிறீர்களா?” என்று. “அதற்கு இன்னும் வாய்ப்பு அமையவில்லை, பதின்மூன்று ஆண்டுகளில் மணநிகழ்வுகளோ பிற முதன்மைச் சடங்குகளோ எங்கும் நிகழவில்லை” என்றார். “இது அத்தகைய சடங்கு. அபிமன்யூவின் மணச்சடங்கில் நீங்கள் துரியோதனரை சந்திக்க முடியும்” என்றேன். “ஆம், நானும் அவ்வாறு எதிர்பார்த்தேன். ஆனால் அந்த மூடன் தன் குடிமைந்தனின் திருமணத்தைப் புறக்கணித்து அமர்ந்திருக்கிறான்” என்று அவர் மீண்டும் குரலெழுப்பினார். “அதை நீங்கள் எண்ணினால் தவிர்க்கலாம். துரியோதனரைக் கண்டு பேசி அவரையும் உடன் அழைத்துக்கொண்டு அபிமன்யூவின் திருமணத்துக்குச் செல்லலாம்” என்றேன்.
அவர் என்னை ஐயத்துடன் பார்த்தார். “அப்படி நிகழ்வு எழுமென்றால் அனைத்தும் நன்றென முடியும். அந்த அவையில் குடிமூத்தார் ஒருவரென நீங்கள் ஆற்றவேண்டிய பணி முடித்து வந்தவராவீர்கள். அங்கிருக்கும் அனைவருக்கும் முதல் தாதை நீங்களே என்று வரலாறு கூறும்” என்றேன். “ஆனால் நிலப்பற்று தலையிலேறி துரியோதனன் கலியென வெறிகொண்டிருக்கிறான் என்றல்லவா கேள்விப்பட்டேன்?” என்றார் சல்யர். “ஆம், மெய். அவர் நிலத்தை விட்டுத்தரப்போவதில்லை. ஆனால் ஒருபோதும் குலக்கடமையை தவறவிட்டவரல்ல அஸ்தினபுரியின் அரசர். இப்பதின்மூன்று ஆண்டுகாலமும் பாண்டவர்களின் மைந்தர்களை தன் மைந்தருக்கு நிகரென பேணி வளர்த்திருக்கிறார். மைந்தர்மேல் அவர் கொண்ட பற்றை நீங்கள் ஐயப்படுகிறீர்களா?” என்றேன். “இல்லை, தெய்வங்கள் கூட அவ்வையத்தை கொள்ளமுடியாது. அம்மைந்தருக்கும் அவனே முதல் தந்தை” என்றார் சல்யர்.
“அப்படியென்றால் அபிமன்யூவின் திருமணத்தை அஸ்தினபுரியின் அரசர் புறக்கணிப்பது ஏன்? அதை மட்டும் நீங்கள் அவரிடம் கேட்கலாம். அவ்வினாவுக்கு அவர் மறுமொழி சொல்லவில்லையென்றால் ஆணையிட்டு உடனழைத்துக்கொண்டு உபப்பிலாவ்ய நகரத்திற்குச் செல்லலாம். நான் அஸ்தினபுரியின் அரசரின் தூதனாகவோ இந்திரப்பிரஸ்தத்தின் அரசர்களின் எதிரியாகவோ இங்கு வரவில்லை. அவ்விருவரையும் பயிற்றுவித்த ஆசிரியரின் மாணவனாக இங்கு வந்திருக்கிறேன். இதை நான் செய்யலாம். ஆனால் தந்தையின் இடம் எனக்கில்லை. இன்று பாண்டவர்களுக்கு பாண்டுவின் இடத்திலும் துரியோதனருக்கு திருதராஷ்டிரரின் இளையோன் என்னும் இடத்திலும் இருக்கிறீர்கள். இதை நீங்கள் ஆற்றுங்கள்” என்றேன்.
அவர் எண்ணி குழம்பத்தொடங்கினார். “முடிவெடுங்கள்… நாளை சந்திப்போம்” என்று வணங்கி திரும்பி என் அறைக்கு வந்தேன். ஒன்றை ஆற்றவேண்டுமா வேண்டாமா என்ற ஐயம் எழுந்தபின் மானுடர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் அதை ஆற்றத்தான் செய்வார்கள். முதற்கணத்திலேயே வேண்டாம் என்று முடிவெடுத்ததை மட்டுமே அவர்களால் தவிர்க்கமுடியும். ஊசலாட்டம் எப்போதும் ஆழ்விழைவிலேயே சென்று நிற்கும். விழைந்தபின் தவிர்ப்பவன் பல்லாயிரம் மானுடர்களில் ஒருவன். அது அறிவின் ஆற்றல் அல்ல, தவத்தின் ஆற்றல். சல்யர் எளிய மனிதர். ஆகவே மறுநாள் புலரியில் என்னுடன் வர ஒப்புக்கொள்வார் என்று எண்ணினேன். அவ்வாறே ஆயிற்று.
காலையில் அரச முறைப்படி அவரை நான் சந்திக்கையில் முடிவெடுத்துவிட்டார் என்றும் அதற்கு முன் துயில்களைந்துவிட்டிருந்தார் என்றும் முகம் காட்டியது. “நேற்றிரவு முழுக்க நீங்கள் சொன்னதை நான் எண்ணிப்பார்த்தேன். நாம் ஆற்றவேண்டிய ஒன்றை தவறவிட்டுச் செல்வது முறையல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. என் முயற்சி வெல்லாமல் போகலாம். ஆனால் முயன்றேன் என்று இருக்கட்டும். இதைச் செய்யாது நான் கடந்து சென்றேன் என்றால் ஒருவேளை பின்னர் என்னை நான் பழிக்கக்கூடும். உங்களுடன் வருகிறேன். மூத்த கௌரவனை சந்திக்கிறேன்” என்றார்.
“அரசமுறைப்படி இச்சந்திப்பு அமையவேண்டியதில்லை. நாட்டின் எல்லையில் அமைந்த குக்குடபுரிக்கு தாங்கள் செல்லுங்கள். அங்கு மூத்த கௌரவர் வருவார். முறைப்படி அங்கே அவரைச் சந்தித்து சொல்லாடி வெல்லுங்கள் என்று இங்கு அழைத்து வந்தேன்” என்றான் அஸ்வத்தாமன். “உண்மையில் இத்தனை எளிதாக அவரை இங்கே கொண்டுவந்துவிடமுடியும் என நான் எண்ணவில்லை. ஆனால் பிறகு ஒன்றை புரிந்துகொண்டேன். எவரும் எண்ணியிராத ஒன்றை செய்துவிடவேண்டும் என்னும் விழைவு மானுடரில் உண்டு. மூத்தாரிலும் இளையோரிலும் அது ஓங்கி இயல்கிறது. ஏனென்றால் பிறரால் வகுத்துக்கொள்ளப்படும் ஆளுமையே அவர்களுடையது. மீறி ஒன்றை செய்கையில் அவர்கள் தங்களைத் தாங்கள் கடந்துசெல்கிறார்கள்.”
சுருதகீர்த்தி “இது பெரிய வலை. இதற்குள் அவரை அமரச்செய்திருக்கிறீர்கள்” என்றான். “நான் தன்னந்தனியாகவே சென்று சல்யரை சந்தித்தேன். ஆகவே சல்யரை சந்தித்தது யாரென்று மத்ரநாடெங்கும் நிறைந்திருக்கும் ஒற்றர்களுக்கு தெரியாது” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “எங்கள் படைநகர்வு நிகழ்ந்து நான்கு நாட்களுக்குப் பின்னரே நாங்கள் குக்குடபுரி நோக்கி செல்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அச்செய்தியை அவர்கள் இளைய யாதவருக்கு தெரிவித்தார்கள். அப்போது மிகவும் பிந்திவிட்டிருந்தது.”
“இளைய யாதவன் செய்யக்கூடுவதென்ன என்று கணிகர் திட்டமிட்டார். தன் எல்லைப்புற துணையரசர்கள் எவரிடமேனும் ஒரு படையை ஒருக்கி அதை அழைத்துக்கொண்டு அவனோ சாத்யகியோ சல்யரை வந்து சந்திக்கக்கூடும். அது வரவேற்பாகவும் அழைத்துச்செல்லலாகவும் ஒரே சமயம் அமையும். அந்த வாய்ப்பை அளிக்க வேண்டியதில்லை என்றுதான் குக்குடபுரியைச்சுற்றி எனது காவல் அமைத்து படைநிலைகளை நிறுத்தச் சொன்னார் கணிகர்” என்றான் துரியோதனன். “கணிகர் மட்டுமே இளைய யாதவன் உள்ளம் செல்லும் தொலைவுக்கு தானும் செல்லும் ஆற்றல் கொண்டவர். ஆனால் இளையவர்களாகிய உங்கள் இருவரையும் இச்செயலுக்கு இளைய யாதவன் தூதனுப்புவான் என்று அவரும் எண்ணிப்பார்க்கவில்லை.”
“நாங்கள் இன்னும் எதையும் ஆற்றவில்லை” என்றான் சுருதகீர்த்தி. “நான் இன்னும் சல்யரை சந்திக்கவில்லை” என்று துரியோதனன் சொன்னான். “அந்தி சாய்ந்ததுமே மது அருந்தத் தொடங்குவதை அவர் வழக்கமாக்கியிருக்கிறார். இப்போது துயின்றுவிட்டிருப்பார். நாளை காலை அவரை சந்திக்கப்போகிறேன். அப்போது நீங்கள் இருவரும் உடனிருக்கலாம். நான் அவரிடம் கூறுவனவற்றையும் அவர் என்னிடம் கூறுபவற்றையும் சொல்மாறாது இளைய யாதவனுக்கு உரையுங்கள்.”
“உங்கள் தந்தையரோ இளைய யாதவனோ அவரை சந்திப்பதிலும் தங்கள் தரப்புக்கு இழுப்பதிலும் எனக்கு மாற்று எண்ணமில்லை. அதற்குமுன் அவர் என் தரப்பை கேட்கவேண்டும். தன் முடிவை தானே எடுக்கவேண்டுமென்றே விழைகிறேன். அவர் என்னிடம் சேர்ந்துகொள்வார் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை. ஏனெனில் அவரது உள்ளக்கிடக்கையை நான் நன்கு அறிவேன். இதில் சூழ்ச்சி ஏதுமில்லை என்பது அனைவரும் அறியவேண்டியது என்று எண்ணுகிறேன்” என்றபடி துரியோதனன் எழுந்தான்.
சுருதகீர்த்தி இமையா விழிகளுடன் துரியோதனனை நோக்கிக்கொண்டிருந்தான். துரியோதனன் புன்னகைத்து “சல்யர் களத்தில் பெருவீரர். அதைவிட அவரது பங்களிப்பு எனக்கு இன்றியமையாதது. நெடுந்தொலைவு வில் தொடுப்பதில் பால்ஹிகக் குடிகள் தனித்திறன் கொண்டவர்கள். சல்யரும் என் தரப்புக்கு வருவாரென்றால் சௌவீர பால்ஹிக மத்ர நாடுகள் அனைத்தும் என் தரப்புக்கு வருகின்றன. மறுதரப்பில் அத்தகையோர் எவரும் இருக்கமாட்டார்கள். போர் என்று ஒன்று எழுமென்றால் முதலில் சென்று விழுபவை பால்ஹிகநாட்டு வீரர்களின் அம்புகளாகவே இருக்கும்” என்றான்.
சுருதகீர்த்தி “எங்கள் மூத்த தந்தை போரைக் குறித்து ஒரு சொல்லும் எடுக்கலாகாதென்று திரும்பத் திரும்ப ஆணையிடுகிறார். அவர் விழைவது போரல்ல. உடன்பிறந்தாரிடையே பூசல் முற்றிலும் தீர்க்கப்படவேண்டுமென்பது மட்டுமே” என்றான். “போர் தொடங்கிவிட்டது, மைந்தா. நான் போரை எதிர்நோக்குகிறேன். ஆகவே துணிவு கொள்கிறேன். அவர் போரை எதிர்நோக்குகிறார் ஆகவே அஞ்சுகிறார். இது மட்டுமே எங்களுக்குள் வேறுபாடு” என்ற துரியோதனன் “நன்று! இன்று சென்று ஓய்வெடுங்கள். உன் மூத்தான் உணவுண்டு நிறைந்தால் பின் உள்ளத்தில் சொல் எஞ்சாது துயிலக்கூடியவன். இப்போதே அரைத்துயிலில்தான் இருப்பான்” என்றான். சுருதகீர்த்தி புன்னகைத்து தலைவணங்கினான்.
ஏவலன் வந்து வணங்க துரியோதனன் அவனுடன் நடந்து உள்ளறைக்குச் சென்றான். சுருதகீர்த்தி அஸ்வத்தாமனை நோக்கி தலைகுனிந்து விடைபெறுகையில் அவன் “சிறுவயதில் உன் தந்தை இருந்ததைப்போலவே இருக்கிறாய்” என்றான். “ஆம், எங்கள் இருவரைப்பற்றியும் அப்படி கூறுவார்கள்” என்றான் சுருதகீர்த்தி. “இல்லை, அபிமன்யூவிடத்தில் இளைய யாதவரும் இருக்கிறார். தூய அர்ஜுனன் நீயே” என்று சொன்ன அஸ்வத்தாமன் அவன் தோளில் கைவைத்து பற்றி “வருக!” என்று வெளியே நடந்தான்.
“உன் தந்தை எனக்கு ஆறாப் புண் என துயர் அளிப்பவர். அதை நான் மறுக்கவில்லை. விந்தை என்னவென்றால் நாம் தந்தையரிடம் கொள்ளும் வஞ்சத்தையும் கசப்பையும் மைந்தரிடம் கொள்வதில்லை என்பதே” என்றான் அஸ்வத்தாமன். “ஒருவேளை நான் உன் தந்தையை ஆழத்திலெங்கோ விரும்பிக்கொண்டிருக்கக்கூடும். அவரை இத்தனை ஆண்டுகள் நாளும் எண்ணிக்கொண்டிருப்பது அதனாலாகக்கூட இருக்கலாம். அந்த விருப்பத்தை உன்னிடம் என் உள்ளம் கொள்கிறதுபோலும்.” சுருதகீர்த்தி புன்னகைத்தான். “நான் உங்களிடம் எதையும் கவராத அர்ஜுனன், மூத்தவரே” என்றான். ஒருகணம் திகைத்தபின் அஸ்வத்தாமன் உரக்க நகைத்தான்.
பின்னர் “நாம் இந்த அரசுசூழ்தலையும் போரையும் பற்றி மேலும் பேச வேண்டியதில்லை. இந்தச் சூழ்ச்சிக்கு நான் உடன்பட்டதே போர் இதனால் தவிர்க்கப்படுமென்றால் நன்று என்பதனால்தான். சல்யரின் படை உடனிருப்பதை எண்ணி உன் தந்தையர் மேலும் பூசலுக்கு எழமாட்டார்கள் என்று எண்ணினேன்” என்றான். நீள்மூச்சுடன் தன்னில் ஆழ்ந்து சிலகணங்கள் கழித்து “போரை அஞ்சுவதைப்பற்றி சற்று முன் அஸ்தினபுரியின் அரசர் சொன்னார். இளையோனே, பிற எவரையும்விட போரைப்பற்றி எண்ணி எண்ணி நான் அஞ்சுகிறேன்” என்றான்.
“பல ஆண்டுகளாகவே ஒவ்வொரு இரவில் விழித்துக்கொள்கையிலும் மிக அருகில் போரை உணர்கிறேன். துயிலாது விழித்திருந்த பின்னிரவுகளே மிகுதி. இவ்வனைத்தும் எங்கு சென்றுகொண்டிருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. நெடுங்காலத்துக்கு முன்னரே எங்கோ நுண் வடிவில் இப்போர் தொடங்கிவிட்டதென்றும் இனி அது பருவடிவில் நிகழ்வதே எஞ்சியுள்ளதென்றும் என் உள்ளம் சொல்கிறது. நதி வழிப்படும் புணை தன் திசைச்செலவு குறித்து எண்ணி உழல்வதற்கேதுமில்லை” என்றான் அஸ்வத்தாமன். “ஆனால் மானுடரால் அப்படி காலத்திற்கு தன்னை ஒப்புக்கொடுக்க இயல்வதில்லை. இவையனைத்தையும் தாங்களே அமைத்துக்கொள்ளலாம் என்று அவர்களுக்குள் இருக்கும் ஆணவமும் அறிவும் சொல்லிக்கொண்டே இருக்கிறது. புணையென்றாவது முனிவருக்கே இயல்வது.”
“உன் தந்தையிடம் சென்று சொல், நான் அஞ்சுகிறேன் என. அவரை அல்ல. பிற எவரையும் அல்ல. நான் என்னை அஞ்சுகிறேன். என் கையில் உள்ள அம்புகளை. என் உளத்தமைந்த பிரம்மனின் வாளியை.” சுருதகீர்த்தி அவன் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாதவனாக வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றான். இரு கைகளாலும் அவன் தோளைப்பிடித்து அவன் முகத்தை நோக்கி முகம் அணுகி அஸ்வத்தாமன் தாழ்ந்த குரலில் சொன்னான். “இளமைந்தரைப் பார்க்கையில் எல்லாம் நெஞ்சு பதைக்கிறது. நாங்கள் வாழ்ந்துவிட்டோம். செல்வதெனில்கூட இப்புவியில் பெரிதாக எதுவும் எஞ்சவில்லை. ஆனால் அஸ்தினபுரியின் நூற்றுவரோ இந்திரப்பிரஸ்தத்தின் ஐவரோ போர் தொடுப்பது ஒருவரோடொருவர் அல்ல. இளந்தளிர்களென எழுந்துவந்திருக்கும் இக்குடியின் இளையோரிடம். ஆம், தளிர்பொசுக்கும் காட்டெரி இன்று மூள்வது.”
“இதை இருவருமே உணர்ந்ததாகத் தெரியவில்லை. நிமித்திகர்கள் நூறுமுறை கணித்து சொல்லியிருக்கிறார்கள், குலாந்தகர்கள் இரு தரப்பிலும் பிறந்து வளர்ந்துகொண்டிருக்கிறார்கள் என. பீமசேனரைப்பற்றி, அபிமன்யூவைப்பற்றி சொல்லப்பட்ட ஆரூடங்கள் ஒவ்வொன்றும் அச்சுறுத்துபவை. என்னுடைய பிறவிநூலையும் கணித்து சொல்லச்சொன்னேன். நான் ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத பெரும்பழிச்செயல்களை செய்வேன் என்கிறார்கள் நிமித்திகர்கள். என் கைகளால் இளமைந்தரைக் கொல்வேன் என்கிறார்கள்.”
அவனுடைய விழிகள் அலைபாய்ந்தன. பித்தன்போல. “ஒவ்வொரு முறையும் விற்பயிற்சிக்குமுன் என் கைகளைத் தூக்கிப் பார்த்துக்கொள்கிறேன். இன்றெல்லாம் பயிற்சிக்களத்தில் செலுத்தும் ஒவ்வொரு அம்பும் உளநடுக்குடன்தான் சென்று பயிற்சியிலக்கை தைக்கிறது. மெய்யான இலக்குகள் எங்கோ பிறந்து வளர்ந்துகொண்டிருக்கின்றன. என் ஒவ்வொரு அம்பும் ஒன்றின் மேல் ஒன்று தொடுத்து சரடென்றாகி அவ்விலக்குகளை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. சில தருணங்களில் பயிற்சி இலக்குகளில் முகங்கள் தெரிகின்றன. அறிந்த முகங்கள். என் கைகளால் நான் தூக்கி கருமணத்தை முகர்ந்த மைந்தர்களின் முகங்கள்.”
“இளையோனே, நான் யாரென்று நான் நன்கு அறிவேன். தந்தையரின் உள்ளத்தில் முனைகொள்ளும் உணர்வுகளே மைந்தர்களாக பிறக்கின்றன. அர்ஜுனனின் உள்ளத்தில் நிறைந்த இனிய கனி ஒன்றின் துளி நீ. எந்தையின் உள்ளத்தில் இறுகிய கசப்பின் கூர் நான். என் கைகள் பழிக்கறை கொள்ளாது மண்மறைய வேண்டுமென்பது மட்டுமே என் குலதெய்வத்திடம் நான் இன்று வேண்டிக்கொள்வது. ஆம், இப்புவியில் தெய்வங்களிடம் வேண்டி பெற்றுக்கொள்வதற்கு எனக்கு வேறு ஏதுமில்லை.” சொல்மறந்த உள எழுச்சி மட்டுமே அப்படி ஒரு சொற்பெருக்கை எழுப்பவியலும் என சுருதகீர்த்தி எண்ணிக்கொண்டான்.
“உண்மையில் எனக்கென இலக்கு ஏதுமில்லை. நான் என் நாட்டை ஆள்வது என் தந்தையின் எண்ணம். முடிசூடி அரியணை அமர்வதென்பது அவருக்கு நானளிக்கும் ஒரு பலிச்சடங்கு மட்டுமே. அந்த அரியணையில் ஒருநாளும் நான் நிறைந்து அமர்ந்ததில்லை. வில்லையும் கங்கணத்தையும் உதறிவிட்டு மரவுரி சூடி என்றாவது காட்டுக்குச் சென்றேன் என்றால் யாரென்று அறியாத முனிவனாக ஏதேனும் மரத்தடியில் அமர்வேன் என்றால் என் வழியை கண்டவன் ஆவேன். ஆனால் இப்பிறவியில் என் தந்தை அதற்கு ஆணையளிக்க மாட்டார், அதையும் அறிந்திருக்கிறேன். அது என் ஊழ் என்றால் அவ்வாறே அமைக என்றுரைத்து என் அகத்தவிப்பை புறக்கணிக்கத்தொடங்கி நெடுநாட்களாகின்றன” என்றான் அஸ்வத்தாமன்.
“சென்ற பதின்மூன்றாண்டுகளாக நான் தெய்வங்களிடம் வேண்டிக்கொள்வது ஒன்றே. ஒரு நல்லிறப்பு. என்னைச் சூழ்ந்து குடிகள் விழிநீர் சிந்த குலத்தோர் நீரளித்து வணங்க எரியேறுதல். கங்கையில் எனக்கான நீர்க்கடன்களை நான் தூக்கி வளர்த்த மைந்தர்கள் அளிக்க மூச்சுலகில் அமைந்து மூதாதையென குனிந்து புவியைப் பார்க்க ஒரு வாய்ப்பு. பிறிதொன்றுமில்லை. பிறந்ததும் வாழ்ந்ததும் எந்நிறைவையும் அளிக்கவில்லை. இறப்பு அந்நிறைவை அளிக்குமென்றால் அது ஒன்றே மீட்பு. அருளவேண்டும் தெய்வங்கள்.”
விழிகள் நீர் கொண்டு மின்ன அவன் கைகளை இறுகப்பற்றி உலுக்கியபடி அஸ்வத்தாமன் சொன்னான் “சென்று சொல் உன் தந்தையிடம்! நான் சொன்னேன் என்று சொல். அவர் கைகளைப்பற்றி மன்றாடினேன் என்று. ஏன், அவர் காலடி பணிந்து கேட்டேன் என்றே சொல். அவர் எனது ஆடிப்பாவை. ஆகவே உன் தந்தையென நின்று சொல்லவும் எனக்கு உரிமையிருக்கிறது. இப்போரைத் தவிர்ப்பதே உன் கடன் என ஆகட்டும். மைந்தா, இந்தப் போர் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். நிலமில்லாது கான்புகுந்து முனிவராக பாண்டவர்கள் வாழ்ந்து மறைவது என்றாலும்கூட இப்போர் தவிர்க்கப்படுவது நன்று. மைந்தர் வாளேந்தி பொருள்பெற்று வாழும் எளிய ஷத்ரியர்களென்றாவார்களென்றாலும் போர் தவிர்த்தல் நன்று.”
பின்னர் நீள்மூச்சுடன் தளர்ந்து “எனக்குத் தெரிந்த வழி ஒன்றே. அஸ்தினபுரியின் அரசர் நிலமன்றி பிறிதொன்று அறியாதவர். கொண்டது விடாத முதலை. அவரிடம் பேசிப் பயனில்லை. அவரை வெல்லமுடியாதவராக ஆக்கி பாண்டவர்களை தயங்கிப் பின்னடையச் செய்வது ஒன்றே ஆகும்வழி. ஆகவே வில்லுடன் அவருடன் நிற்கிறேன். அவருக்காக அனைத்தையும் ஆற்றுகிறேன்” என்றபின் முகம் திருப்பி விடைச்சொல்லெதுவும் உரைக்காது நடந்து அகன்றான்.
சுருதகீர்த்தி அவன் செல்வதை நோக்கியபடி நின்றான். பின்புறம் மட்டுமேயான உடலிலேயே உள்ளத்தின் கொந்தளிப்பு தெரிவதை வியப்புடன் நோக்கினான். ஒவ்வொரு காலடியும் அக்கொந்தளிப்பை காட்டியது. உடன் சென்ற நிழல் அக்கொந்தளிப்பை கொண்டிருந்தது. இடைநாழிக்கப்பால் அஸ்வத்தாமன் உடல் மறைந்தது. அவன் காலடியோசை குறைந்து அமையும் தாளமென ஓய்ந்தது.