பெருமதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு,
‘நிலை’ கொண்டிருக்கும் ‘பாரதத்தின் நதி’ தேடி நிலையில்லா மனிதர்களின் கூட்டமொன்று வருகிறது பிழை நிகர்செய்யப்பட்டுவிடுமென்ற பிழையான எண்ணத்துடன்.
கதைமாந்தர்களுக்குப் போடப்பட்டிருக்கும் பெயர்களிலிருந்துகூட பலவற்றை விரித்தெடுத்துக் கொண்டே செல்லமுடிகிறது. அவர் நீதிபதி. தன் பணியிலும் தனி வாழ்விலும் அறம் பிறழாது வாழ்ந்தாரா? இல்லை. கண்டிப்பாக இந்த வினை அவரை உருத்து வந்து ஊட்டவே செய்யும்.
காசிநாதனின் பிள்ளைகள் சங்கரன், ஆறுமுகம் மற்றும் மகள். சங்கரன் பற்றிய குறிப்புகள் குறைவே. இருப்பினும் அவற்றைக் கொண்டேகூட அவரைப் பற்றிய சித்திரத்தை வரைந்தெடுத்துக் கொள்ள முடியும். மரணம் வந்து விடுதலையளிக்காமல் படுக்கையிலேயே சிறைபட்டுக் கிடந்தவர். அவருடைய மரணம்தான் தங்களைப் பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கும் என்று குடும்பத்தார் எண்ணியிருந்தார்களெனில் அவருக்கும் குடும்பத்தினருக்குமான உறவு எப்படியிருந்திருக்கும்? தன்னளவில் சங்கரன் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருப்பார்? குடியினால் எப்பொழுதும் நிலையழிந்தவராக இருந்தாரா ஆறுமுகம்?
சங்கரனின் மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். அவர்களுக்கும் சங்கரனுக்குமான உறவு முரண்கள் பல கொண்டதாகவே இருந்திருக்கும். செல்வத்தில் திளைத்த வாழ்வும், மேலும் கிடைத்த இன்பங்களைத் தக்கவைத்துக் கொள்ள அவர்கள் செய்துகொண்ட அறம் மீறிய சமரசங்களும் நிறைந்ததாகவே இன்றளவும் அவர்களின் வாழ்வு சென்று கொண்டிருக்கிறதாக இருக்கிறது. ஆறுமுகம் அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்குக் கூட இதே நிலைதான்.
சங்கரனின் மகன் கதிர். “அது வாசல் ஜன்னல் ஒண்ணுமே இல்லாம ஆறுபக்கமும் மூடின வீடு மாதிரி சார். வெளியே இருந்து ஒண்ணுமே உள்ள போகாது”. இந்த ஒரு வாக்கியம் போதும். அனைத்தையும் விரித்தெடுத்துக் கொள்ள. ஆறு பொறிகளும் ஆறுபுலன்கள் வழி அடையும் ஆசைகள் அவனுக்கு இனி ஏது? அவனைப் பொறுத்தவரையில் மற்றவர் பார்வையில் அவன் அடையக்கூடிய ஆசைகள் எதுவும் இல்லை. அவனுக்கு விடுதலை கிடைத்துவிட்டதா அல்லது கிடைத்துவிடுமா தெரியவில்லை. இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பாற்பட்ட பேரின்ப நிலை தர்மத்தின் வழி மனிதர்களால் அடையக்கூடியதே. மற்ற கதாபாத்திரங்கள் வழியாக நாம் அறிந்துகொள்வது அதுவாகவே இருக்க முடியும்.
நன்றி.
அன்புடன்,
தா.விஜயரெங்கன்.
எவரின் அழுகை (ஆழமற்ற நதி – சிறு கதை)
கதை எழுதிய கதையாசிரியர் நினைத்த கதையும் படிப்பவர் மனதில் விளங்கும் கதையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை எனும்போது பல வாசகர்கள் மனதில் ஒரே கதை பலவாறு புரிந்துகொள்ளப்படுதல் சாத்தியமே. சிறந்த கதைகளில் நுணுக்கங்கள் இருக்கும். அதை கண்டு உணரும்போது அது வேறு திறப்புக்களைத் தரும். அப்போது ஒரே கதை அவருக்கே இன்னொரு பொருள் தரலாம்.
ஜெயமோகனின் ஆழமற்ற நதி என்ற கதை எளிய நடையில்தான் ஆரம்பிக்கிறது. ஓரிரு வரிகளில் கதை மாந்தர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். ஒருவரின் இறப்புக்கான சடங்குக்காக அந்த நதிக்கரைக்கு வந்திருக்கிறார்கள் . இறந்தவரின் தந்தை, சகோதரர், அவர் மனைவி, அவர் பிள்ளைகள், இறந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் என அனைவரும் வந்திறங்குகின்றனர். இறந்து போனவரின் இறப்பில் இருக்கும் மர்மம் சொல்லப்படுகிறது. படுக்கையில் நினைவுதவறி நீண்ட நாட்களாக இருப்பவரின் செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டு அதனால் மரணம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. அதன் காரணாமாக ஏதாவது பாவம் தம்மைச் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக இச்சடங்கு செய்ய வந்திருக்கிறார்கள். ஒருவர் மரணப்படுக்கையில் நீண்டகாலமாக இருக்கும்போது இப்படி செயற்கை சுவாசத்தை நிறுத்தி அவரை இறக்க விடுதல் என்பது அரிதான ஒன்றல்ல. நாம் அரசல் புரசலாக இதைப்போன்ற செய்திகளை அறிந்திருக்கிறோம். ஒருவகையில் இது இயற்கைக்கு விரோதமானது இல்லை என்றுகூட சொல்லலாம். அவர்கள் யாருக்கும் இந்த இறப்பில் மன வருத்தம் இல்லை. இப்படியானதற்கு அந்த இறந்துபோனவரே கூட வருந்தமாட்டார் என்றே நினைக்கிறேன். ஒரு சலிப்பான துயர் தரும் உபாதையிலிருந்து அவர் விடுபடுவதில் அவர் ஆன்மா ஒருவேளை இன்பமடைந்துகூட இருக்கும். அனைவரும் இந்தச் சடங்குமுடிந்த பிறகு சிறிதளவு இருந்த தம் சஞ்சலத்தையும் உதறிவிட்டு இயல்பாகிவிடுவார்கள். அவ்விடத்தில் ஓடும் ஆழமற்ற நதி எவ்வித உணர்வும் அக்கறையும் இல்லாமல் அவர்கள் செய்யும் சடங்கை உருவகப்படுத்துகிறது. உண்மையில் அந்த ஒட்டுமொத்த குடும்பமும் பிராயச்சித்தம் செய்ய வேண்டியது கதிருக்குத்தான். தம் கையால் செய்ய விரும்ப்பாத ஒரு செயலை, இந்தப் பாவத்தில் கொஞ்சமும் சம்பந்தமில்லாத அவனைக்கொண்டு செய்யவைத்திருக்கிறார்கள். அந்தக் குடும்பத்தினர் இச்சடங்கின் மூலம் யாரை ஏமாற்றுகிறார்கள்? இறந்த ஆத்மாவையா, அல்லது தெய்வத்தையா. அல்லது தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்களா?கதை முடிவில், எவ்வித உணர்வும் சென்றடைய முடியாத மூடிய சித்தத்தைக் கொண்டிருக்கும் கதிர் ஏன் அழுதான் என்பதற்கான காரணம் வாசகரின் யூகத்திற்கு விடப்படுகிறது. ஒருவேளை கதிர் தன் உணர்வுகளை வெளியில் காண்பிக்க முடியாவிட்டாலும் உள்ளுக்குள் அவன் மனம் உணர்வுகளைக் கொண்டிருக்கலாம். தன் கையால தன் தந்தையின் உயிர் போக வைக்கப்பட்டதின் மனத் துயரத்தில் அவனுக்கு அழுகை வெளிப்பட்டிருக்கலாம் என்று நாம் கருதுவதற்கு இடமிருக்கிறது.
ஆனால் எனக்கு அந்த அழுகை கதிருடையது இல்லை என்று தோன்றுகிறது. அதற்கான வாய்ப்பு கொஞ்சமும் இல்லை. அந்த அழுகை அங்கே துயரத்திலிருப்பவரிடமிருந்து வந்திருக்க வேண்டும். அங்கிருக்கும் நபர்களில் யாருக்கு அவ்வளவு துயரம் இருக்க முடியும்? இறந்தவரின் பெண் மட்டுமே இறந்தவருக்காக துயரப்படுபவளாக காட்டப்பட்டாள். ஆனாலும் அவளிடமிருந்து அந்த அழுகை வரவில்லை. பின்னர் யாருடைய அழுகை கதிரிடமிருந்து எதிரொலிக்கிறது?
அச்சடங்கு உண்மையில்ல் சக்தி மிகுந்தது மற்றும் இறந்தவரின் ஆன்மாவை பிராயச்சித்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக வரவைக்கக்கூடியது என்று நாம் வைத்துக்கொள்வோம், அப்போது இறந்தவர் தன் ஆன்ம ரூபத்தில் வந்திருப்பார். இதுவரை தான் முற்றிலும் புறக்கணித்து வந்த தன் மகன் கதிரை பார்த்திருப்பார். அவனின் நிலையை தானும் கடந்த ஏழு மாதங்கள் அனுபவித்து அறிந்திருக்கிறார். உண்மையில் அக்குடும்பத்தினரால் பெரிதும் வஞ்சிக்கப்பட்டவன் கதிர். அனைவரையும் விட அதிகம் தவறிழைத்தவர் அவர்தான். தாம் செய்த அந்தப் பாவத்திற்கான அந்த ஆன்மாவின் துயரமே அழுகையாக கதிர் மூலம் வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் அந்த அழுகையைக் கண்டு அனைவரும் அஞ்சி விலகி ஓடுக்கின்றனர். நான் இப்படித்தன் அந்த அழுகையை அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.
ஜெயமோகனின் ஆழமற்ற நதி என்ற கதை எளிய நடையில்தான் ஆரம்பிக்கிறது. ஓரிரு வரிகளில் கதை மாந்தர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.
ஆனால் எனக்கு அந்த அழுகை கதிருடையது இல்லை என்று தோன்றுகிறது. அதற்கான வாய்ப்பு கொஞ்சமும் இல்லை. அந்த அழுகை அங்கே துயரத்திலிருப்பவரிடமிருந்து வந்திருக்க வேண்டும். அங்கிருக்கும் நபர்களில் யாருக்கு அவ்வளவு துயரம் இருக்க முடியும்? இறந்தவரின் பெண் மட்டுமே இறந்தவருக்காக துயரப்படுபவளாக காட்டப்பட்டாள். ஆனாலும் அவளிடமிருந்து அந்த அழுகை வரவில்லை. பின்னர் யாருடைய அழுகை கதிரிடமிருந்து எதிரொலிக்கிறது?
அச்சடங்கு உண்மையில்ல் சக்தி மிகுந்தது மற்றும் இறந்தவரின் ஆன்மாவை பிராயச்சித்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக வரவைக்கக்கூடியது என்று நாம் வைத்துக்கொள்வோம், அப்போது இறந்தவர் தன் ஆன்ம ரூபத்தில் வந்திருப்பார். இதுவரை தான் முற்றிலும் புறக்கணித்து வந்த தன் மகன் கதிரை பார்த்திருப்பார். அவனின் நிலையை தானும் கடந்த ஏழு மாதங்கள் அனுபவித்து அறிந்திருக்கிறார். உண்மையில் அக்குடும்பத்தினரால் பெரிதும் வஞ்சிக்கப்பட்டவன் கதிர். அனைவரையும் விட அதிகம் தவறிழைத்தவர் அவர்தான். தாம் செய்த அந்தப் பாவத்திற்கான அந்த ஆன்மாவின் துயரமே அழுகையாக கதிர் மூலம் வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் அந்த அழுகையைக் கண்டு அனைவரும் அஞ்சி விலகி ஓடுக்கின்றனர். நான் இப்படித்தன் அந்த அழுகையை அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.
தண்டபாணி துரைவேல்