இலக்கியத்திற்கு அனுபவங்கள் தேவையா?
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
இலக்கியத்திற்கு அனுபவங்கள் தேவையா? அனோஜன் பாலகிருஷ்ணன் அவர்களின் கேள்விக்கு தாங்கள் அளித்த பதில் மீண்டும் வாசிக்க பல புதிய சாளரங்களை திறப்பதாக உள்ளது. கலைஞர்களின் மூன்று தரம் மூன்று படி நிலைகள் போல் காண்கிறது. உண்பதும் புணர்தலும் மட்டுமே அடிப்படையில் உண்மை என்று காணும் மனநிலையின் கட்டம் அவற்றில் ஒழுக்க விதிமுறைகளை பற்றியே மையம் கொள்கிறது. ஒருமுறை என்னுடன் ரமணாசிரமம் வந்த நண்பர் அங்கு எளிமையும் உருக்கமுமாக அமர்ந்திருந்த வெள்ளக்கார இளைஞனை கண்டுவிட்டு “இவனுக்கெல்லாம் இவன் நாட்டில் என்ன குறை? ஏன் இங்க வந்து இப்படியெல்லாம் கஷ்டப்படணும்” என்று சொல்லிவிட்டு பிறகு மதியம் ஓட்டலில் உணவு அருந்திய போது “இப்ப சோறு சாப்பிடறோமே இது தான் நிஜம். பசியும் தாகமும் காமமும் மட்டுமே நிஜம்” என்று பலவும் சொன்னார்.
அப்போது அந்த மனநிலை என்ன என்று புரிந்து கொள்ள புரிந்து கொள்ள நான் முற்படவில்லை. உடல் என்னும் முதல் கட்டத்தின் ஒழுக்க விதிமுறைகள் அலசப்பட இரண்டாம் நிலை அவை மீறப்படும் நிலையில் அறம் என்று பேசி, நிச்சயம் எந்த ஒன்றும் கணக்கு தீர்க்கப்படும், உங்களுக்கு இழைக்கப்பட அநீதிக்கு அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் – நல்லது-கெட்டது ஊழ் என்று தீர்க்கும் அறமே சத்தியம் என்று காண்கிறது. முதல் கட்டம் கடந்து, இரண்டாம் கட்டமும் கடந்து, கணக்கு தீர்க்கப்படுவதன் – தண்டனை-பரிசளிப்பின் அர்த்தமின்மை உணரும் போது ஆன்மீக தளம் என்ற மூன்றாம் நிலை நோக்கி மனம் விரிகிறது. மிகவும் மூடர்களால் மட்டுமே பல வருடங்கள் கடந்தும் பழிதீர்க்கும் எண்ணத்தை சுமக்க முடியும் என்று எண்ணுகிறேன். உடலில் துவங்கி உடல் கடந்து நிற்கும் பேருண்மை நோக்கி செல்லும் கலைஞன் மட்டுமே சரியான திசையில் செல்வோன் என்றும் எண்ணுகிறேன். உண்மையில் எந்த கலையில் பயணித்தாலும் அது அங்கு தான் செல்லும் – அது அவ்வாறுதான் இயற்கையாகவே அமைந்துள்ளது என்றும் எண்ணுகிறேன் – அது கலையின் வழியே பயணித்து அதன் உச்சம் எட்டி அதை கடந்து அதற்கு அப்பாலும் செல்வது போலுள்ளது. வேறுவகை என்றால் அது கலைஞனின் கலை இழப்பு என்றும் எண்ணுகிறேன்.
அன்புடன்
விக்ரம்
கோவை
***