தப்பித்த எழுத்தாளன் -ஒரு கடிதம்

vikram

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

தங்கள் வாசிப்பிற்கு நான் வந்து ஓராண்டு ஆகப்போகிறது. தங்களிடம் குறைபட்டுக்கொள்ள எனக்கும் கொஞ்சூண்டு விஷயங்கள் உண்டு என்று கூறவே இதை எழுதுகிறேன். முகநூலில் துவங்கி ஒரு பெரும் எழுத்தாளன், கவிஞன் என மலர்ந்தது எழும் என் கனவை நீங்கள் கலைத்துவிட்டீர்கள். “யாரடி நீ ஓ பெண்ணே நீ அழகி” என்று ஒரு அழகிய பெண்ணின் படத்துடன் கவிதை என்று போட்டு, ஏகப்பட்ட ID-க்கள் உருவாக்கி (பாதி பெண்கள் பெயரில்) “அற்புதம்” “அருமை” “கவிஞருக்கு ரசிகைகள் அதிகமோ?” என்றெல்லாம் கமெண்டுகள் போட்டு, ஏகப்பட்ட லைக்குள் இட்டு, ஒரு மாபெரும் ரசிகர் படை எனக்கு உண்டென நானே நம்பி மற்றவரையும் நம்பச் செய்து, இடையே “கர்ர் …..தூ” என்று கமெண்ட் போட்டு என் எதிரிகளையும் நானே புனைந்து ஒரு வித்தக அல்லது விந்தை கவிஞர் என உருவாகி இருப்பேன்.

உண்மையில் சென்னையில் ஒரு பதிப்பகத்தை அணுகி விசாரித்து கவிதை புத்தகம் போட முப்பதாயிரம் ரூபாய் என்று பேசி 500 காப்பிகள் என்று அறிந்து கொண்டு யாரும் வாங்கப்போவதில்லை என்றாலும் நானே என் நண்பர்கள் தெரிந்தவர் என அனைவர் தலையிலும் கட்டி விலை என்ற பேரில் நஷ்டஈடும் பெற்று எங்கோ சென்று விடலாம் என்ற கனவு தங்கள் வலையில் விழுந்து கலைந்தது. ஜெமோ வலைத்தளம் என்பது ஒரு கொடிய முகம் பார்க்கும் கண்ணாடி ஆகிவிட்டது. உறுமி பாய்ந்து வந்த புலி ஒன்று இந்த கண்ணாடி முன் தன் உறுமல் “மியாவ்” என ஆகிவிட்டதையும் தான் பூனை என்றும்……….ஒரு வகையில் இது ஒரு சோக சம்பவம்…..வேங்கை ஒன்று வெறும் கையுடன் திரும்புவது. என்றாலும் இன்று ஒரு உவகையுடன் ஒரு நன்றி உணர்வுடன் இருக்கிறேன். கடக்கக் கடக்க கடல் என்பது போல அறியும் தோறும் அறியாமையின் பரப்பு பெரிது எனக் காண்கிறது. போலி எழுத்தாளன் ஆவதை விட நிஜம் வாசகன் ஆவதன் உவகையும் மனநிறைவும் மகத்தானது என்று உணர்கிறேன். “முதல்ல ஒழுங்கா படிடா….உண்மையின் பால் நிலை நிற்க முயற்சி செய்தவாறு இரு” என்னும் உட்குரலை விழிப்பித்த உங்களுக்கு என் நன்றி. “விட்ரா சுனா பானா அஞ்சு வருஷம் படி …அப்புறம் பார்க்கலாம் என்று அமைகின்றேன்.” (குறிப்பு: “சுனா பானா” – சு.ப. விக்ரம் – சுப்பிரமணியன் பட்டாபிராமன் விக்ரம் என்கிற நான்)

அன்புடன்
விக்ரம்

கோவை

***

அன்புள்ள விக்ரம்

வாசிப்பு நம் எல்லையைச் சுட்டிக்காட்டுவது போலவே கொஞ்சம் கொஞ்சமாக நம் சாத்தியங்களையும் சுட்டிக்காட்டும். சற்று முன்னகர்ககையில் உங்கள் மொழி மாறியிருப்பதை, சிந்தனை முறை மாறியிருப்பதை உணர்வீர்கள். எனக்கு வரும் வாசகர்கடிதங்களில் முதல் சில கடிதங்கள் பயிலா மொழிநடையில் இருக்கும். விரைவிலேயே கூர்மையும் தெளிவும் கொண்டுவிடும். அதன் பின் என் நடை நேரடியாகவே அவ்ற்றில் இருக்கும். மெல்ல அது விலகி அவர்கள் தெரியத்தொடங்குவார்கள். அதுதான் மெய்யான பரிணாமம்

ஜெ

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 43
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 44