அறிதலென்னும் பயிற்சி

Learning-Disable

கேரள தலித் அர்ச்சகர் நியமனம்

ஜெ,

முகில் கதிர் என்னும் பெரியாரியர் முகநூலில் எழுதிய எதிர்வினை இது

தனக்கே உரிய பாணியில் ஆரிய ஆதிக்க சிந்தனைகளையும் அடிமை தனத்தை விரும்பும் மூன்றாம்தர..பிற்போக்கு எழுத்தாளன்…ஆதிக்க சாதியின் ஆசனவாயாக இருக்கும்..ஜெயமோகன்…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற கோரிக்கை பிறப்பின் அடிப்படையில் இல்லாமல்..தகுதியின் உரிமையின் அடிப்படையில் தான் கோரப்படுகிறது..வேதகல்வி கற்ற நேர்த்தியான மனிதன் பிராமணரை தவிர வேறுயாரும் இருக்கமுடியாதா? இருக்ககூடாதா?இது புனிதத்தை பாழாக்கிவிடும் என்பதுதான்.. ஜெயமோகன் போன்ற பின்நவீனத்துவவாதிகளால்.. முன்வைக்கப்படுகிறது…

இப்படித்தான் உங்கள் கருத்துக்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. உங்கள் அறிதலுக்காக

ராஜீவ்

***

அன்புள்ள ராஜீவ்

உங்கள் குறிப்புடன் சிரிப்பு அடையாளம் உள்ளது. அதை நீக்கி விட்டேன். இது சிரிக்கக்கூடிய விஷயம் அல்ல. உண்மையிலேயே நம் சமூகத்தில் மொழியறிவில், அடிப்படைப்புரிந்துகொள்ளல் திறனில் மிகப்பெரிய சரிவு உள்ளது. சாதாரணமான டீக்கடை விவாதம் முதல் இணைய விவாதம் வரை பிரச்சினை கருத்துவேறுபாடுகளோ மிகையுணர்ச்சிகளோ அல்ல. வெறும் அறிவின்மை.

ஒரு சாதாரணமான பத்தியை படித்து அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என புரிந்துகொள்பவர்கள் பத்து சதவீதம்கூட கிடையாது. வேண்டுமென்றால் ஏதேனும் ஒரு பத்தியை எதிர்படும் பத்துபேரிடம் கொடுத்து அதில் சொல்லப்பட்டுள்ள கருத்து என்ன என வாசித்து சொல்லச்சொல்லுங்கள். பத்தில் ஒருவர்தான் அதன் உள்ளடக்கத்தைச் சொல்வார். மிச்சபேர் சம்பந்தமே இல்லாமல் எதையாவது சொல்வார்கள். நேர் தலைகீழாகப்புரிந்துகொள்பவர்கள் பாதிக்கும் மேலிருப்பார்கள்

நம் இணைய நாளிதழ்களின் கட்டுரைகளின் கீழே உள்ள எதிர்வினைகளைப் பாருங்கள். மேலே இருக்கும் கட்டுரையின் நிலைபாடு என்ன என்பதைக்கூட கணிசமானவர்கள் புரிந்துகொள்வதில்லை என்பதைக் காணலாம். அதத்தொடரும் விவாதமும் மேலே உள்ள கட்டுரையும் தொடர்பே இல்லாமல் இருக்கும்

இக்காரணத்தால்தான் நான் என் கட்டுரைகளுக்குப் பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை. ஏன் சொற்பொழிவுகளுக்குப்பின்னர் கேள்விநேரத்தை ஒப்புக்கொள்வதுமில்லை. கேள்விகள் சம்பந்தமே இல்லாமலிருக்கும், நாம் சொல்லாதவற்றை சொன்னதாக எண்ணி எழுப்பப் படும், ‘நான் சொன்னது வேறங்க’ என்றுதான் பதில் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். என்ன சிக்கல் என்றால் கொஞ்சம் புரிந்துகொண்டவர்களும் குழம்பிப்போய்விடுவார்கள்.

ஆனால் இவர்கள் அறிவுத்திறன் குறைவானவர்கள் அல்ல. பலசமயம் மிகமிகக்கூர்மையானவர்கள். தந்திரமும் நுண்மையான கணக்குகளும் கொண்டவர்கள். ஓர் எளிய பேரம்பேசலில் இவர்களின் முழுத்திறனும் வெளிப்படும். நம்மால் அந்தத்தளங்களில் இவர்களை எதிர்கொள்ளவே முடியாது. நேர் உரையாடல்களில் எதிரியின் உட்பொருளை கண்டறிந்து மடக்குவதில் நிபுணர்கள். சிக்கலிருப்பது அச்சிடப்பட்டவற்றை வாசித்து அர்த்தமாக ஆக்கிக்கொள்வதில் மட்டும்தான்.

சொற்பொருட்களை எடுத்துக்கொள்வதில், சொற்றொடர்களாகப் பொருள்கொள்வதில், சொற்றொடர்களை இணைத்து ஒரு விவாதத்தொடராக புரிந்துகொள்வதில் மிகப்பெரிய இடர்பாடுகள் நம்மிடம் உள்ளன. ஒரு சொற்றொடரை வாசித்ததும் அவர்களின் மூளை நின்றுவிடுகிறது. அடுத்த சொற்றொடருக்குச் செல்ல முடிவதில்லை. செல்லும்போது முந்தைய சொற்றொடர் சுத்தமாக மறந்துவிடுகிறது. கடைசிவரிக்கு வரும்போது அதுமட்டுமே எஞ்சுகிறது.

நான் இவர்கள் புரிந்துகொள்வதில் உள்ள வடிவ ஒழுங்கை கவனித்திருக்கிறேன். எந்தக்கட்டுரையையும் ஓரிரு உதிரிச்சொற்றொடர்களாகவே இவர்களால் எடுத்துக்கொள்ளமுடியும். பலசமயம் முதலிரு சொற்றொடர்கள். அல்லது கடைசிச்சொற்றோடர். அபூர்வமாக ஏதேனும் ஒரு சொற்றொடரை அவர்களே கட்டுரையின் மையம் என நினைத்துக்கொள்கிறார்கள். அந்த வரியையே அக்கட்டுரையாக எண்ணி பதில் சொல்கிறார்கள்

நான் இதை தொடர்ந்து எதிர்கொள்கிறேன். கணிசமான கட்டுரைகளில் நான் என் மறுதரப்பை சுருக்கிச் சொல்லி அதை மறுக்க ஆரம்பிப்பேன். என் முதல்பத்தியில் உள்ள நான் மறுக்கும் தரப்பையே என் தரப்பாக எண்ணி வசைபாடவும் எதிர்க்கவும் ஆரம்பிப்பார்கள். முன்பெல்லாம் அவர்கள் கட்டுரையை வாசிக்கவில்லை என நினைத்திருந்தேன். பின்னர் கவனித்தேன், அவர்கள் வாசிக்கிறார்கள். ஆனால் தொடர்புபடுத்தி புரிந்துகொள்ள, புரிந்தவற்றை தொகுத்துக்கொள்ள முடியாமல்தான் அப்படி நினைவில் தங்கிய ஒற்றை வரியை எடுத்துக்கொண்டு பேசுகிறார்கள் என.

இந்தச்சிக்கல் நம் கல்விமுறையிலிருந்து எழுவது. இதைக் கல்லூரிகளில் கண்டிருக்கிறேன். ஓர் உரை முடிந்து கேள்விகள் கேட்கலாம் என்றால் மயான அமைதி நிலவும். பேராசிரியர்கள் ஊக்கி, கட்டாயப்படுத்தி கேள்விகேட்கவைத்தால் இரண்டுவகை கேள்விகளே எழும். ஒன்று, வழக்கமான கேள்விகள். இரண்டு, பேச்சில் இருந்து ஒரு வரியை அல்லது ஒரு சொல்லைப்பற்றிய கேள்விகள். அப்பேச்சை ஒருவர்கூட ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள்

மொழிவடிவில் இருக்கும் ஒரு கருத்தை அதன் வாசகன்தான் அறிதலாக ஆக்கிக்கொள்ளவேண்டும். அது பயிற்சியினால் வருவது. தொடர்ந்து வாசிப்பதன் வழியாக, அதை தன்னுள் தொகுத்துக்கொள்வதனூடாக, பிறரிடம் பேசுவதனூடாக. அதற்கு அடுத்தபடிதான் அதன் மறுகருத்தையும் தெரிந்துகொண்டு விவாதவடிவமாக ஆக்கிக்கொள்வது. இப்பயிற்சியை அமெரிக்கக் கல்விநிலையங்கள் அளிப்பதைக் கண்டிருக்கிறேன். அங்கே ஒரு நூலை தானாகவே வாசிப்பதும், அதை பிறருக்கு தொகுத்துச் சொல்வதும் ஆரம்பநிலையிலிருந்தே கல்வியின் மையப்பயிற்சியாக அளிக்கப்படுகின்றன

இங்கே எந்தக்குழந்தையும் தானாகவே எதையும் படிக்க்கும்படி தூண்டப்படுவதில்லை. அதற்கு கல்வி புகட்டப்படுகிறது. வரிவரியாக விளக்கி புரியச்செய்யப்பட்டு மனப்பாடம் செய்ய ஆணையிடப்படுகிறது குழந்தை. ஆகவே புரிந்துகொள்வதற்கான பயிற்சியை அடையாமலேயே பட்டமேற்படிப்பு வரை வந்துவிடுகிறது. அதன்பின் தான் படித்தவன் என்னும் அடையாளத்தை அது கொண்டுவிடுகிறது. அவ்வடையாளத்தை அதுவே அழித்துக்கொண்டுவிட்டால் ஒழிய மேற்கொண்டு புரிந்துகொள்வதற்கான பயிற்சியை அடைய முடியாது

அதற்குத்தடையாக இருப்பது அரசியல்நிலைபாடுகள்,விருப்புவெறுப்புகள். சுவரில் ஒருஅடையாளத்தை காக்காய் என்று பார்த்தால் காக்காயே தெரிவதுபோல அதன்பின் அனைத்தும் அந்த நிலைபாடுகள், விருப்புவெறுப்புகளாகவே தெரியத் தொடங்கும். ஒருவரியை தெரிவுசெய்து அதை புரிதலாக கொள்ளும் அந்த அனிச்சைச் செயலை அந்த விருப்புவெறுப்புகள் கட்டுப்படுத்தும். அவ்வளவுதான், புரிதலுக்கான வழி நிரந்தரமாகவே மூடப்பட்டுவிடுகிறது

இந்த குறிப்பை எழுதிய முகில் கதிர் என்பவரிடம் அவரால் மொழிவடிவப் பதிவை புரிந்துகொள்ளும் ஆற்றலை அடைய முடியவில்லை என்பதை எவரேனும் சொல்லிப்புரியவைக்க முடியுமா? அவர் ஒரு மின்னதிர்ச்சி பட்டதுபோல் தன் இயலாமையை உணரமுடிந்தால் தப்புவார். இல்லையேல் இதேதான் இறுதிவரை. இங்கே தொண்ணூறு சதவீதம் பேரும் வாழும் இருள்

ஜெ

முந்தைய கட்டுரைஆழமற்ற நதி – கடிதங்கள்
அடுத்த கட்டுரைமத்தியப்பிரதேசப் பயணம்