கேள்வி பதில் – 47

Enid Blyton புத்தகங்களுக்கும் Mills and Boon நாவல்களுக்கும் இடையிலான புத்தகங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும். தான் படிக்கும் புத்தகங்களைத் தானே தெரிவு செய்து படிக்கும் என் மகள் அதன் அடுத்தக் கட்டத்தை அவளே அடைவாளா, நான் அறிமுகப்படுத்த வேண்டுமா? நான் அறிமுகப்படுத்துவது என்னைத் திணிப்பது போலாகாதா?

— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

மேலேசொன்ன முதிராப் பருவப் படைப்புகள் அடிப்படையில் இலக்கிய ஆக்கத்தின் இரு முக்கியக் கருக்களை கையாள்கின்றன அல்லவா? எனிட் ப்ளைட்டன் எல்லைகளை மீறி புதிய தளங்களுக்குச் செல்ல விழையும் துடிப்பையே மீண்டும் மீண்டும் படைப்பாக ஆக்குகிறார். மில்ஸ் ஆன் பூன் ஆக்கங்கள் உறவுகளைப்பற்றி பேசுபவை.

பொதுவாக மிகச் சிறந்த நுண்ணுணர்வை இயல்பாகவே கொண்டுள்ளவர்கள் அல்லாமல் பிறர் இளமையில் தானாகவே இலக்கியம் பக்கம் வருவது இல்லை. கண்டிப்பாக அறிமுகம் செய்யவேண்டும். அறிமுகம் இருவகையில் தேவை. ஒன்று அந்நூல்களைப் பற்றி அடிக்கடி விவாதித்து அவை எப்படி விளிம்பை மட்டுமே தொடுகின்றன என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

ஒருகட்டத்தில் எளிமையான நடையில் எழுதப்பட்ட முக்கியமான ஆக்கங்களை நேரடியாகவே அறிமுகம் செய்யவேண்டும். என் கணிப்பில் 12வயதில் இலக்கியம் அறிமுகமாகலாம். படிப்பதில் சிக்கல் இருந்தால் இன்னொரு வகை ஆக்கத்தை. எதில் சுவை கைகூடுகிறதோ அதுவரை. என் தெரிவு டால்ஸ்டாய், மாக்ஸிம் கார்க்கி, ஏனஸ்ட் ஹெமிங்வே. அவை ஈர்க்கவில்லை என்றால் அலக்ஸாண்டர் டூமா போன்றவர்களின் சாகச நாவல்கள். அல்லது மார்க் ட்வைன் போன்ற நகைச்சுவை நூல்கள். தமிழில் என்றால் பத்து வயதில் கல்கி. பதினைந்துவயதில் சாண்டில்யன், ஜெகசிற்பியன். நேரடியாகவே இந்நாவல்களை அறிமுகம் செய்யலாம். இது அனுபவத்தில் கண்டது. புரிந்துகொள்ளுதலில் உள்ள சவாலே குழந்தைகளை இழுக்கும். ஆழக் கொண்டுசெல்லும்.

பிறந்த கணம் முதல் உலகம் தன்னை ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் திணிக்கிறது. நீங்கள் உலகின் முனையாக குழந்தைமுன் நிற்கிறீர்கள். நீங்கள்தானே மொழியை, பழக்கவழக்கங்களை, ருசியைத் திணித்தீர்கள்? இதைமட்டும் ஏன் திணிக்கக் கூடாது? எத்தனை திணித்தாலும் குழந்தை உங்களை அப்படியே பிரதிபலிக்காது. திணிக்கப்படுவனவற்றைச் செரித்து தன்னுடையவையாக ஆக்க, தேவையற்றவற்றை வெளியேதள்ள அதற்குள் மகத்தான சக்தி ஒன்று உள்ளது. ஓயாது மீறிச்செல்லும் அந்த சக்தியே மனித நாகரிகத்தை, மனித ஞானத்தை இந்த இடம்வரை கொண்டுவந்து சேர்த்தது.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 45, 46
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 48